துரும்புக்கு ஒரு துரும்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,693 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.

எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.

“அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் தேடுறது? தள்ளுவண்டியை இழுத்திட்டுப் போயி, ரயில்வே ஸ்டேஷனிலே கிடக்கிற ஒரு பார்சலை எடுத்துக்கிட்டு வா” என ஏவுவார் இன்னொரு கடைமுதாளி.

ஒவ்வொரு கடைக்காரருக்கும் எடுபிடி வேலை செய்து வெளியே அலைவதற்கு ரங்கன் தேவைப்பட்டான். அவ்வப் போது “காப்பிக்கு, இட்டிலி பலகாரத்துக்கு” என்று சில்லறை ஏதாவது கொடுப்பார்கள்,

நிறையச் சாமான்கள் வாங்க வருகிறவர்கள் பெட்டி அல்லது கூடையை சுமந்துவருவதற்கு அவன் துணையை நாடுவார்கள், “என்னடா வேணும்?” என்று கேட்பார்கள், அவன் புடதியைச் சொறிவான். மலைத்தொடரின் உச்சிப் பகுதிபோல் தெத்துக் குத்தலாகத் தென்படுகிற பல்வரிசையைக் காட்டுவான். “பாத்துக் குடுங்க முதலாளி” என்பான். கறாராகக் கூலி பேசத் தெரியாது அவனுக்கு.

“சரிசரி. தூக்கிக்கிட்டு வா” என்று மிடுக்காகச் சொல்லி, பெருமிதமாக முன்னேநடப்பார் சாமான் வாங்கியவர்.

உரிய இடம் சேர்ந்து, சுமையை இறக்கியதும் ரங்கனுக்கு நாலனாவோ, எட்டனாவோ பார்த்துக் கொடுப்பார்” அவனால் முதலாளி” என அழைக்கப்பட்டவர்.

அவன் முழங்கையை சொறிவான். நகராமல் நிற்பான்,

“என்னடா? ஏன் நிக்கிறே?” என்று எரிந்து விழுவார் மற்றவர்.

“என்ன முதலாளி, வயித்திலே அடிக்கீங்க? எவ்வளவு பளு! எத்தனை தூரம் சுமந்து வந்தேன்? கூலியை குறைச்சுத் தாறீங்களே? பார்த்துக் குடுங்க முதலாளி” என்று கெஞ்சலாகக் குறைகூறுவான் ரங்கன்.

“சீ போடா சவமே! நான் தந்திருப்பதே அதிகம். உனக் கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது. போ போ. இன்னொரு சமயம் பார்த்துக்-கிடலாம்” என்று விரட்டுவார் அவர்.

இப்படித் தான் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும். சிலர் “அயோக்கியா! பேராசை பிடித்த நாயே!” என்றெல்லாம் சொல்லெறிவார்கள், ரங்கனின் போக்கினால் சூடு ஏறப்பெற்று.

ரங்கன் அப்பாவி. அடிபடாதபோதும் வலிய நாயைக்கண்டு தன் வாலைப் பின்கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு நெளிந்து குழைந்து அஞ்சி மிரண்டு பார்த்துக்கொண்டே மெது மெதுவாக நகரும் எளிய நாய் மாதிரி, அவன் கெஞ்சல் பார்வையை “முதலாளி” பக்கம் பதித்தபடி மெதுவாக நகர்வான். எதுவும் பெயராது என்று புரிந்தவுடன் வேகமாகப் போவான்.

என்றாலும், அடுத்த முறையும் அவர்கள் “எலே ரங்கா வாறியாடா? ஒரு சுமைகொண்டு போகணும்” என்று கூப்பிடத்தான் செய்வார்கள். அவனும் “சரி முதலாளி” என்று போகத் தான் செய்வான். அவன் கெஞ்சுவதும், அவர்கள் சீற்றம் கொள்வதும் வழக்கம்போல் நடைபெறத்தான் செய்யும்.

அவன் தோற்றமே அவன் ஏமாற்றப்படத் தகுந்தவன் – எளிதில் ஏமாறுவதற்குச் சித்தமாக இருப்பவன் – என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனசில் எழுப்பக்கூடியதாக இருந்தது. சில கடைக்காரர்கள் அப்பிராணிப் பய” என்று இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள்:

அதற்காக யாரும் அவனிடம் அனுதாபம் காட்டுவதில்லை. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள் பலர். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்,

சின்னப்பிள்ளைகள் கூட அவனைப் பரிகசிப்பது வழக்கம், “ஏ ரங்கா – குரங்கா” என்று கூப்பிடுவார்கள். “கோணக் கழுத்துக் குரங்கா கூனல்முதுகுக் குரங்கா” என்றெல்லாம் கத்துவார்கள்.

சிலர் பின்னாலிருந்து சிறுசிறு கற்களை அவன்மீது விட்டெறிவார்கள். அவன் கோபமாகத் திரும்பிப் பார்ப்பான், “டேய் டப்ஸாக் கண்ணுக் குரங்கா ஒடிவந்து பிடிடா பார்ப்போம்” என்று கத்துவார்கள்.

“சிறுக்கி புள்ளெகளா! தேவ்டியா புள்ளெகளா! நீங்க வாந்திபேதியிலே போக!” என்று ஏசிக்கொண்டு அவனும் ஒரு கல்லை எடுத்து வீசி எறிவான்.

அது எவர்மீதும் படாது. அவர்கள் கைகொட்டிக் கெக்கலிப்பார்கள். “டோடோய்! சுமை தூக்குற கழுதை! பாரவண்டிக் கழுதை! கோவேறு கழுதை!” என்று கோரஸ் பாடுவார்கள்.

ரங்கனுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிவரும். ஆனாலும், அவனால் எதுவும் செய்ய இயலாது. பொட்டைக் கோபத் தோடு, வாயில் வந்தபடி ஏசுவான். அவ்வளவுதான் அவனால் செய்யக் கூடும்.

விறகுக்கடை ஒன்றில் அவன் ஏவல்புரிவது உண்டு. வாடிக்கைக்காரர்கள் அரை எடை விறகு அல்லது “ஒரு எடை விறகு” வாங்குகிறபோது, கை வண்டியில் கட்டைகளை அடுக்கி தள்ளிக்கொண்டுபோய் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டும். கடைக்காரர், தூரத்துக்குத் தக்கபடி, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று கணக்குப்பண்ணி விறகுக் கிரயத்தோடு வாங்கிக் கொள்வார். வண்டியில் விறகை அடுக்கி, தள்ளிச்சென்று உரிய வீட்டில் இறக்கிப்போடும் ரங்கனுக்கு எட்டணா – அதிகம் போனால், ஒரு ரூபாய் கொடுப்பார்.

இதற்கும் ரங்கன் இணங்கிப் பணிபுரியத்தான் செய்தான். உரிமையோடு கேட்டு வாங்கக் கூடிய துணிச்சல் அவனிடம் கிடையாது.

வாடிக்கைக்காரர் சிலர், இரக்கப்பட்டு, அவனுக்கு நாலணா, எட்டணா கொடுப்பது உண்டு. இந்தா டீ வாங்கிக் குடி போ!” என்று தாராளம் காட்டுவார்கள். இதனால் ரங்கன் இதரர்களிடம் காசு எதிர்ப்பார்ப்பான். சிலரிடம் வாய் திறந்து கேட்கவும் செய்வான்.

அவர்கள் முறைப்பார்கள். வள்ளெனப் பாய்வார்கள். அது தான் கடையிலேயே குடுத்தாச்சே, அவர்தான் உனக்குப் பணம் தருவாரே! நாங்க ஏன் தனியாக் காசு தரணும்? பேராசைதான் உனக்கு” என்பார்கள்.

“எத்தினி கஷ்டப்பட்டு வண்டியைத் தள்ளிக்கிட்டு வாறேன்! வெயிலு என்னமாக் கொளுத்துது! ஒரு எட்டனா குடுத்தா என்னவாம்? நாம படுற கஷ்டம் கடைக்காரருக்கு எங்கே தெரியுது? விறகுவிலையை அவருகூட்டிக்கிட்டே போறாரு. நம்ம கூலியை மட்டும் அதிகப்படுத்த மாட்டேங்கிறாரு ரெண்டு வருசத்துக்குமுந்தி என்ன தந்தாரோ, அதையே தான் இன்னிக்கும் தாறாரு…..”

இவ்விதம் ரங்கனின் மனம் முண முணக்கும். அதை ஒலி பரப்ப அவனுடைய நாக்கு புரளாது.

“இது முதலாளி காதிலே விழுந்தா, உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணான்கிற கதை ஆகிப்போகும்” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வான்.

அடிமையாக உழைத்த அவன் அடிமைத்தனத்தோடேயே நடந்து கொண்டான். தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய – எதிர்க்கக் கூடிய – தெம்பும் திராணியும் அவனிடம் இல்லாதவை என்றே மனசில்படும் அவனைப் பார்க்கிறவர்களுக்கு.

பலவிதமான அவமானங்களுக்கும். பழிப்பு பரிகாசங் களுக்கும் ஆளாகிவந்த அந்த “அப்பிராணிப் பயல்” கூட அவமதிக்கவும் அதட்டவும் எரிந்து விழவும் ஏசவும் ஒரு ஜீவன் இருந்தது. வாழ்க்கை விசித்திரங்களில் இதுவும் ஒன்றுதான்.

வெயிலில் சூடு அதிகரித்துக்கொண்டிருந்த நேரம்.

“ஒரு எடை விறகை அடுக்கி, தள்ளுவண்டியை சிரமத்தோடு உருட்டி வந்த ரங்கனின் உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டது போல, உள்ளமும் சூடேறிக்கொண்டிருந்தது.

“இரண்டு மைல் வண்டியை தள்ளிச்செல்லணும். அதனாலே எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு ரூபா தரணும்” என்று கேட்டான் ரங்கன்.

”நியாயமான கூலி மூணு ரூபா தானே? நான் ஏன் அதிகமாத் தரனும்? தரமுடியாது” என்று உறுதியாக மறுத்தார் வாடிக்கை யாளர்.

அவன் முரண்டு பிடிக்கவும், அவர் ஏசினார். அவன் முணமுணத்தபடி வண்டியைத் தள்ளிச் சென்றான்.

ரங்கன் சிறிது தூரம் சென்றுவிட்டான். அவனைத் தேடி வந்த ஒருத்தி வேகம் வேகமாக நடந்து வண்டி அருகே சேர்ந்தாள்.

“என்னா, கஞ்சி வேண்டாமா? நான் வாறதுக்குள்ளாறே நீரு வண்டியை தள்ளிக்கிட்டுக் கிளம்பிட்டீரே?” என்று கேட்டாள். சிரித்தாள்.

ரங்கன் முறைத்தான், “ஏ மூளை கெட்ட முண்டம் மனுசன் எத்தினி நேரம் காத்திருப்பான்? நீ எங்கே ஒழிஞ்சு போயிருந்தே சவத்துமூளி! காலா காலத்திலே கஞ்சி கொண்டு வரணும்கிற அறிவு வேணாம்? நீ சோத்தைத் திங்கியா? இல்லே, வேறே எதையும் திங்கியா?” சூடாக வார்த்தைகளைக் கொட்டினான்.

இது சகஜம் என்பதுபோல் தலையை ஒருவெட்டு வெட்டி னாள் அந்தப்பெண். முகத்தைச் சுளித்தாள். “இப்ப கஞ்சி குடிக்கப் போறியா இல்லியா?” என்றாள்.

“வழிச்சு நக்குற நாயே! இதையும் நீயே கொட்டிக்கிடலாம்னு பாக்கியா?” என்று உறுமினான் ரங்கன். “அந்த மரத்தடி நிழலுக்குப் போடி, முண்டம். வண்டியை நிறுத்திட்டு வாறேன்” என்றான்.

அவள் அலட்சிய பாவத்தோடு மரநிழலை நோக்கி நடந்தாள்.

அவன் மனைவி அவள்.

– வஞ்சிநாடு 1983

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *