கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 5,192 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடபுடா சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தச் சப்தத்தையும் மீறி கம்பார்ட்மெண்டில் இருந்தவர் களின் பேச்சு ஒலித்தது. வண்டி கை காட்டியைத் தாண்டி இருக்காது.

‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ நட்டாற்றில் கை நழுவ விட்டேனோ ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ…….’ ராமலிங்க அடிகளாரின் இந்தப் பாடல் கணீரென அப் போது ஒலித்தது. எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஊர்வம்பு பேசி வந்தவரும், நகைச் சுவையென்று ‘ஹோஹோ’ என்று சிரித்துப் பேசி வந்தவரும், அழுத பிள்ளையும், சிரித்த பெண்களும் கூட அரவம் அடங்கிப் பாடி வந்தோரையே பார்த்தனர்.

இரண்டு கண்களும் அற்ற குருட்டுப் பெண். வயது பதினாறு இருக்கும். எழிலும் வனப்பும் வறியவர் எளியவர் என்று பார்ப்பதில்லையே. புதரில் பூத்த புதுமல்லி போன்று தோன்றிய அவள் பாடிய பாடலும் அவள் தோற்றமும் தரும சிந்தனை யற்றவர்களையும் இரங்கும்படி செய்தன.

அவளுக்கு வழிகாட்டி உதவி வந்த அந்த வாலிபன் தான் எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி கிடைத்த காசு களை வாங்கி வந்தான்.

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ? இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ?’ என்று தொடர்ந்து அவள் பாடும் போது அந்தக் கம்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் தரும் துரைகளாகவே விளங்கினர்.

சில நிமிடங்களில் அந்தக் கம்பார்ட்மெண்ட் வேலை அவர்களுக்கு முடிந்தது. கதவருகே போய் அவர்கள் அமர்ந்தனர். அந்த வாலிபன் கிடைத்த காசை எண்ணிக் கூறினான். அவன் எந்தப் பள்ளிக் கூடத்திலும் படித்தவ னல்லன். எட்டணா என்று அவன் கூறியபோது அவள் முகத்தில் எந்த மாறுதலையும் காணோம்.

நாலணாவை காலை நாஸ்தாவுக்கு வச்சுக்க… மீதிக்கு இரண்டு பன்னும், டீயும் வாங்கிடு’ என்று வரவு செலவுத் திட்டம் கூறினாள்.

ரயில் செங்கல்பட்டு சந்திப்பை நெருங்கிக் கொண்டி ருந்தது. ‘ரயில்கேட்டு வந்துடுத்தா?’ என்றாள் அவள், அப்போது ஏற்பட்ட ஒலி மாற்றத்தைக் கொண்டே.

அந்தப் பாசஞ்சர்’ செங்கல்பட்டு சந்திப்பின் முதல் பிளாட்பாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. லயன் மாறுவதால் ஏற்பட்ட குலுக்கலால் அவள் நிலை தடுமாறினாள்.

பூங்காவனம் வண்டிக் கதவருகே நிற்காதே. வண்டி நின்ற பிறகு இறங்கலாம்’ என்று அவள் எச்சரித்தாள்.

பூங்காவனம் குருடியை அழைத்துக் கொண்டு பிளாட் பார ஓரமாக உட்கார வைத்துவிட்டு , டீ ஸ்டாலை நோக்கிச் சென்றான். அன்றைய இரவு சாப்பாட்டை முடிக்க மூன்று மணி நேரமாக அவள் பாடிப் பாடி நெஞ்சு உலர்ந்து விட்டது. ஒரு வாய்த் தண்ணீரை அருகே இருந்த குழாயை நோக்கித் தட்டுத் தடுமாறிச் சென்று குடித்து விட்டு, ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த அந்தப் பிளாட் பாரத்தின் கோடியிலே மங்கிய ஒளி வீசும் இடத்தில் மரத்தின் அடியிலே அமர்ந்தாள். அதுதான் அவளுடைய இரவுப் படுக்கை இடம். அவளைப் பொறுத்தவரை அந்தப் பிளாட்பாரத்து மங்கிய விளக்கும், ஒளி வீசும் மெர்க்குரி விளக்கும் ஒன்றுதான். வெளியுலகில் மை இருளில் தான் மக்கள் வாழ்வதாக அவளுக்கு எண்ணம். ஆனால், இதயத்திலிருந்து வீசிக்கொண்டிருந்த மாய ஒளி ஒன்று தான் அவளை நடமாட விட்டது.

அருகே நின்று கொண்டிருந்த கூட்ஸ் வண்டித் தொடரின் நடுவே புகுந்து முத்தையன் லயனையும் தாண்டி பிளாட்பாரத்திலேறினான். சந்தடியின்றி அவள் ருகே அவன் வந்து உட்கார்ந்தான். மூச்சுவிடும் அரவம் கூட அவளுக்குத் தெளிவாகக் கேட்குமே!

“யாரது, பூங்காவனமா?” என்று கேட்டாள் அவள் – மல்லி. முத்தையன் சிரித்தான். சிரிப்பொலி அவளது முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தியது.

“யாரு முத்தையனா?” என்று அவள் பரபரப்புடன் கேட்டாள்.

“கண்டுகிட்டயே கணக்கா. கண்ணுதான் இல்லைன் னாலும் உனக்கு மனசு கூடவா இல்லாமே போயிடும்?” – முத்தையன் அவளருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டு ஒரு பீடியைப் பற்றவைத்தான்.

அவள் – மல்லி – எழுந்தாள்.

“ஏன் மல்லி எழுந்திட்டே? பீடி வாசனை சகிக்கலையா? இதைத் தொலைச்சு முழுக முடியலையே …. ஆனா, நீ மனசு வெச்சா முடியும்…” என்று வருத்தப்படுபவன் போல் நடித்தான் முத்தையன்.

மல்லி உட்காரவில்லை. நின்று கொண்டே இருந்தாள். “எம்மா நேரம் நிற்போ… அந்தப் பய பூங்காவனம் எங்காவது சுத்தப் போயிருப்பான். இல்லாட்டி அந்தப் பஸ் ஸ்டாண்டிலே கண்ணம்மா இருக்குது, அதைத் தேடிப் போயிருப்பான்’ என்று கூறிவிட்டு முத்தையன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு அவனிடம் காணப்பட்டது. மல்லிக்குக் கண் மட்டும் இருந்துவிட்டால் முத்தையா அவளை விழுங்கி விடுவது போல் பார்ப்பதற்கு அவனைப் பொசுக்கி இருப்பாள்.

“மல்லி, இன்னும் நீ பூங்காவனத்தை நம்பறே. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் உன்னை விட்டுட்டு ஓடிடப் போறான்” என்று கூறிக்கொண்டே முத்தையன் எழுந்தான்.

தொலைவில் சென்னையிலிருந்து வரும் மதுரை பாசஞ் சரின் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

“இந்த வண்டியிலே நான் திண்டிவனம் போறேன். நீ வர்றியா?” என்று கேட்டான் முத்தையன். மல்லி சம்ம திச்சால் பிச்சை எடுக்க அவளுக்கு உதவி செய்யக் கூடத் தயங்கமாட்டான்.

“நான் வல்லே. ராவு தூக்கம் இல்லாட்டி பகல்லே அலைய முடியாது” என்று மல்லி கூறினாள்.

“ராவு தூக்கமா?” – என்று எகத்தாளத்தோடு கேட்டு விட்டு முத்தையன் அங்கிருந்து சென்றான். மல்லிக்கு ஏனோ பரபரப்பு அதிகமாகியது. நிம்மதியாகப் பாடிப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வைக் குலைக்க இந்த முத்தையன் வந்து சேர்ந்தானே என்று அவள் மனம் வேதனைப்பட்டது.)

சிறு வயதிலிருந்தே மல்லி இந்தத் தொழிலில் ஈடுபட வில்லை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம் ஒன்றில் மல்லி பிறந்தாள். பிறக்கும் போதே இரண்டு கண் களும் அவளுக்குக் கிடையாது. வருமானமும் அதிக மில்லாது மண்வெட்டிக் கூலி கொண்டுவந்து வயிறு

வளர்த்த அவளது பெற்றோர்களுக்கு மல்லி பெரும் பிரச்னை யாகவே இருந்தாள். அவர்கள் வேலைக்குப் போகும்போது குருட்டுப் பெண்ணைப் பார்த்துக் கொள்ள ஆள் கிடையாது. அண்டை அயலார் ஆதரவில் வளர்ந்து வந்த மல்லிக்கு எப்பொழுதுமே அண்டை அயலாரே ஆதரவு எனப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. பெரும் கிணறு ஒன்று வெட்டிக் கொண்டிருக்கும் போது மண் சரிந்து விழவே இருவரும் பூமிக்கடியில் புதைந்துவிட்டனர்.

இருண்ட உலகத்தில் மல்லிக்கு ஆதரவு தருவதற்கு கிழவி ஒருத்தியைத் தவிர வேறு எவருமில்லை. அந்தத் தள்ளாத வயதில் அவள் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்த போது குருட்டுப் பெண்ணையும் சேர்த்துக் காப்பாற்ற அவளால் முடியவில்லை. அந்தப் பகுதியில் பல வருடங் களாக மழை பெய்யாததால் பஞ்ச நிலைமை ஏற்பட்டது. கிழவிக்குக் குடிக்கக் கஞ்சிகூட கிடைக்கவில்லை. அரை வயிற்றுக்குக் கிடைத்தாலும் மல்லிக்குக் கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடுவாள். பிழைக்கப் பட்டணம் பெரிதும் உதவும் என்று சென்னை நகரை வந்தடைந்த கிழவிக்கு , வந்த பிறகுதான் பட்டண நிலை புரிந்தது. பிழைப்பு அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்தது. சுலபமான தொழில் பிச்சை எடுப்பது தான் என்பது தெரிந்தது. கிழவிக்குத் தொழில் பழக்கமேது? உண்மையான கஷ்ட நிலையையும், குருட்டுப் பெண்ணையும் எடுத்துக் காட்டி பிச்சை எடுத்து வந்தாள். குருடிக்கும், கிழவிக்கும் இரக்கம் காட்டாத அளவுக்கு மனித இதயத்தில் ஈரம் காய்ந்துவிட வில்லை. கிழவிக்கு இராமலிங்க அடிகளின் பாடல்கள் பல மனப்பாடம். அதைப் பாடி ரயில் வண்டிகளில் பிச்சை எடுக்கும் போது இதயம் கனிந்து உதவாதவர் இல்லை.

மல்லிக்கு விவரம் அறியும் வயது வந்த போது கிழவி காய்ச்சலால் கண்ணை மூடிவிட்டாள். அப்பொழுதுதான் கிழவிக்குத் தெரிந்த பூங்காவனம் மல்லிக்கு உதவ முன் வந்தான்.

முத்தையன் போன பிறகு படபடப்பு அடங்க மல்லிக்கு வெகு நேரமாகியது.

பூங்காவனம் கையில் தகரக் குவளையில் சூடான தேத் தண்ணீருடனும், இரண்டு பன்னுடனும் வந்தான். மல்லியின் படபடப்பு அவனுக்குத் தெரியாது. ‘ மல்லி, மல்லி, இங்கேயே தூங்கு. நானு சினிமா பாத்துட்டு வந்து டறேன். ஜோரான ஆட்டமாம் ‘ என்று பூங்காவனம் கூறி விட்டுக் கிளம்பத் தயாரானான். மல்லி ஏதும் பேசவில்லை. அவள் ஏதோ கூற வாயெடுத்தாள். பூங்காவனம் அங்கு நிற்கவில்லை.

வானம் இருண்டிருந்தது. ‘வீர் வீர் ‘ என்று காற்று வீசியது. எங்கிருந்தோ மேகங்களை அழைத்துக் கொண்டு வந்து மோதச் செய்தது. கம்பி மின்னல் இருண்ட வானத்தைப் பிளந்தது. சப்த சமுத்திரங்களும் பொத்துக் கொண்டது போன்று மழை கொட்டியது. மல்லியம்மாள் தட்டுத் தடுமாறிப் போய் காலியாக நின்று கொண்டிருந்த கம்பார்ட்மெண்டின் பெஞ்சியில் நிம்மதியாகப் படுத்துக் கொண்டாள். அவள் மனத்தில் பலவித எண்ணங்கள் வட்டமிட்டன . முத்தையன் சொல்வதுபோல் பூங்காவனம் பஸ் ஸ்டாண்டுக்கு அவளைத் தேடிப் போயிருப்பானோ……..

‘ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ…?’

மல்லி மனத்திற்குள்ளே இந்தப் பாட்டைச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். வெளியே மழை ஓயவில்லை. ஜங்ஷனுக்கு வரும் வண்டிகள் வேறு ஏதுமில்லை. இதோடு காலை நான்கு மணிக்குத்தான் வண்டி. மழை இரைச்சலைத் தவிர வேறு ஒலி ஏதுமில்லை. பயங்கரமான எண்ணங்கள் அவளைச் சுற்றி வட்டமிட்டன. அவற்றிலிருந்து விடுபட மல்லி கண்ணை மூடினாள். வெகுநேரம் கழித்துத் தூக்கம் வந்தது.

கம்பார்ட்மெண்டின் கதவு திறக்கப்படுவது போன்ற ஓசை. யாரோ ஏறும் ஓசை……..

திடீரென மல்லி கண்விழித்துக்கொண்டாள். கம்பார்ட் மெண்ட் கதவு திறக்கப்படும் ஓசை. யாரோ ஏறும் ஓசை.

“பூங்காவனம்..?” – மல்லி குரல் கொடுத்தாள்.

“உம்….” என்ற பதில் மட்டுமே வந்தது.

பூங்காவனம் வந்துவிட்டான். மல்லிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் எண்ணியது போல் அவன் வேறு எங்கும் போகவில்லை. சொட்டச் சொட்ட நனைந்திருப் பானோ ……..

“நனைஞ்சுட்டாயா?” மல்லி கேட்டாள். தூக்கம் அவள் கண்களைச் சுழற்றியது. வாய் குழறியது.

“உம்…” என்ற பதிலைத் தவிர வேறு ஏதுமில்லை. மல்லியே பேசினாள். பூங்காவனம் போல் நடித்த முத்தைய னிடமிருந்து பதில் எப்படி வரும்? ரொம்பவும் எளிதாக அவன் தன் மனோ பீஷ்டத்தை நிறைவேற்ற வந்துவிட்டான். வெளியே இருந்த சூழ்நிலையும் இடமும் சாதகமாக அமைந்தன.

காலையில் மழை விட்டுவிட்டது. தெற்கேயிருந்தும், மேற்கே இருந்தும், வடக்கே இருந்தும் வண்டிகள் வரத் தொடங்கிவிட்டன. பறவை இனங்கள் இறகுகளில் படிந் திருந்த மழைத் துளிகளை, உதறிவிட்டு வானில் பறந்தன.

ரயில்வே லயனை ஒட்டியிருந்த பெரிய ஏரியில் ஜலம் அலை மோதியது. மல்லி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந் தாள். என்றும் காணாத பெரும் நிம்மதி அவளிடம் குடி கொண்டிருந்தது.

“மல்லி, மல்லி” என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகத் தேடிக்கொண்டு பூங்கா வனம் வந்து கொண்டிருந்தான்.

மல்லி , இன்னுமா தூங்கறே. ராவு நன்னாத் தூங்கி னியா? உன் நெனைப்பேதான் எனக்கு. மழையிலே வர முடியாமை சினிமாக் கொட்டகையிலேயே படுத்துக் கிட்டேன் ……..’

மல்லி சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தாள். புது அனுபவத்தின் நினைவு அலைகளில் மிதந்து கொண்ட அவளது மனத் தெப்பம் திடீரென மோதியது. “உன் நினைப்பேதான் எனக்கு. மழையிலே வர முடியாமெ சினிமாக் கொட்டகையிலேயே படுத்துக்கிட்டேன்…” – இந்தச் சொற்கள் அவளைத் திடுக்கிட வைத்தன.

“என்ன?” – மல்லி கூவியே விட்டாள்.

“நீ ராவு வரலே?” – இவ்வளவுதான் அவள் கேட்டிருப்பாள்.

ஏனோ அதற்குமேல் அவள் பேசவில்லை. முகத்தை மூடிக்கொண்டு விம்மி, விம்மி அழுதாள். பூங்காவனம் எவ்வளவோ முயன்று கேட்டும் மல்லியிடமிருந்து எவ்விதப் பதிலையும் பெற முடியவில்லை. அன்று முழுவதும் மல்லி வெளியே எங்கும் கிளம்பவில்லை. மறு நாளும் அப்படியே. பூங்காவனத்திற்கும் கோபம் கோபமாக வந்தது.

“இப்படியே உட்கார்ந்திருந்தால் சோறு எப்படித் தின்பதாம்?” – பூங்காவனத்தின் குரலில் த்வனித்த ஆத்திரத் தைக் கண்ட மல்லி ‘சுள்’ என்று விழுந்தாள்.

“நான் எப்படியோ போறேன். நீ அந்தப் பஸ் ஸ்டாண்ட் காரியையே தேடிப்போ” என்று கூவினாள்.

பூங்காவனத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் பேசாமல் போய்விட்டான். மல்லி அன்ன ஆகாரம் ஏது மின்றி இரு தினங்கள் பழைய வண்டியின் உடைந்த பெஞ்சியில் படுத்துக்கிடந்தாள்.

அன்று மீண்டும் முத்தையன் மல்லியைத் தேடி வந்தான். சோர்ந்து போய் கிடக்கும் அவளை நெருங்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. தான் செய்த காரியம் அவனுக்கே வெறுப்பாக இருந்தது. அதே சமயம் வெற்றிப் பெருமிதமும் தோன்றாதில்லை.

“மல்லி, மல்லி கோபமா?” என்று கேட்டவாறு அவளருகே வந்தமர்ந்தான். இப்போது மல்லி ஏமாறவில்லை. பதில் ஏதும் பேசவில்லை. ஆனால், அப்பொழுது அவளுக்குக் கோபம் தணிந்திருந்தது. பூங்காவனத்தையும் இரு தினங்களாகக் காணவில்லை. அவனையும் வெறுத்து, முத்தையனை யும் விரட்ட அவளுக்கு விருப்பமில்லை. “கோவ மென்ன? என் விதியை நெனைஞ்சு நான் அழறேன்” மல்லி நெஞ்சு தழுதழுக்கக் கூறினாள். முத்தையனுக்கு அவள் கூறுவது ஒன்றும் புரியவில்லை.

அந்தச் சமயம் மல்லியைத் தேடி பூங்காவனம் அங்கு வந்தான். அங்கு மல்லியும், முத்தையனும் பேசிக் கொண்டி ருப்பதைக் கண்டு, ஒரு வினாடி நின்றவன் மறு கணம் உதட்டைக் கடித்துக்கொண்டு திரும்பி விட்டான்.

முத்தையன் தொடர்ந்து பேசினான் ; “மல்லி, இந்தப் பிச்சை எடுக்கும் தொழிலை விட்டுடு. நான் கொண்டுவரும் கூழோ, கஞ்சியோ குடிச்சுண்டு என்னோடையே இருந்துடு…”

மல்லி எழுந்து நின்றாள். “போ வெளியே, உன்னைப் போன்ற வஞ்சகர்களால் எத்தனை பேர் அழியப் போகிறார்களோ? என்னை ஏமாத்திட்டியேடா பாவி’ – அவள் குரல் முத்தையனை நடுநடுங்க வைத்தது.

மல்லியின் குரல் தொலைவில் சென்ற பூங்காவனத்திற்கும் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். முத்தையன் சென்று கொண்டிருந்தான். மல்லி, வண்டியினின்று இறங்கித் தட்டுத்தடுமாறி லயனைக் கடக்க முயன்றாள். பூங்காவனம் ஓடோடி வந்தான். மல்லியின் கையைப் பிடித்துக் கொண்டு வழி காட்டினான்.

அவன் அவளுடன் ஏதும் பேசவில்லை. “என்னைப் பஸ் ஸ்டாண்டிற்குக் கொண்டு விடு. இனி ரயில் வண்டியில் பிச்சை எடுக்கப் போவதில்லை.” – மல்லி கண்டிப்பாகக் கூறினாள்.

பூங்காவனம் எங்கோ சென்று விட்டான். மல்லியின் உடல் நிலை மாறியது. அவளால் எழுந்து நடமாட முடிய வில்லை. அவள் தாயாகப் போகிறாள் என்பதைச் சகப் பிச்சைக்காரர்கள், பஸ் ஸ்டாண்ட் கூலிகள், போர்ட்டர், டிரைவர், அருகிலுள்ள டீக் கடைக்காரர் எல்லோரும் பகிரங்கமாகப் பேசிக் கொண்டனர். மல்லியையும், பூங்கா வனத்தையும் சம்பந்தப்படுத்திப் பேசினர். உலகம் பேசு வதை அவள் காதால் கேட்டாள். சில சமயம் நெஞ்சு வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏற்படும். தனியே உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டுக் கலங்குவாள். முத்தையன் எங்கிருந்தாவது ஓடிவந்து அவள் தனியே இருப்பதறிந்து அவளைத் தேற்ற முயல்வான். ஆனால் அவ ளுடைய சுடு சொற்கள் அஸ்திரமாக மாறித் துரத்தி அடித்து விடும்.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ
நட்டாற்றில் கை நழுவ விட்டேனோ
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ…..

இந்தப் பாட்டில் வரும் வரிகளை முத்தையன் கேட்கும் போது அவனுக்கு அவ்வளவாகப் புரியாவிட்டாலும் ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ என்ற வரிகள் தன்னைக் குத்திக் காட்டுவதைப் போலவே உணர்ந்தான். மல்லி குழந்தையைப் பெறப்போகிறாள் என்பதறிந்தவுடன் அவன் நடு நடுங்கினான். மல்லியின் அருகில் கூட இனிவரக் கூடாது என முடிவு செய்தான்.

ஒருநாள் ; நடு நிசி. மல்லிக்கு ஏற்பட்ட வேதனையை அறிந்த நல்லவர்கள் சிலர் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். ஆண் குழந்தை ஒன்றை மல்லி பெற்றெடுத்தாள். வயிற்றிலுள்ள ஜீவன் பூமியை மிதித்த பிறகுதான் மல்லிக்கு முத்தையன் நினைவு வந்தது. அவனைக் கடிந்து பேசிய சொற்கள் நினைவுக்கு வந்தது. அவனை விரட்டிய வார்த் தைகள் நெஞ்சில் எழுந்தன. முத்தையா என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன. அவனைப் பாவி என்று சபித்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. முத்தையனுக்குத் தெரியுமோ தன் நிலை என அவள் நினைத்தாள்.

ஆனால், முத்தையனை அந்தச் சமயம் பெரிய ஆஸ்பத் திரிக்கல்லவா எடுத்துச் சென்றிருப்பார்கள். மல்லியிட மிருந்து திரும்பி வந்து எங்காவது ஓடிப்போய்விட எண்ணிய முத்தையன் ஏதோ நினைவாக ரயில்வே லயனைக் கடந்தபோது, பின்புறமாக நடந்து வந்த கூட்ஸ் ஒன்று மோதவே கீழே வீழ்ந்தான். சக்கரங்கள் அவன் கால் மீது ஏறின. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை பெரிய ஆஸ்பத் திரிக்குத் தூக்கிச் சென்றார்கள். அவனுடைய இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன. அவனுக்கு நினைவு வந்த போது தன் கால்கள் துண்டிக்கப்பட்டதை அறிந்தான். அவன் கண்கள் கால் போனதற்காகக் கலங்கவில்லை …. அந்தப் பாட்டின் வரிகள்,

“ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ…..”

எங்கிருந்தோ மல்லி பாடும் ஒலி அவன் காதுகளில் ஒலித்தது. ‘இல்லை இல்லை மல்லி நான் மோசஞ் செய்ய வில்லை. உன்னைக் காப்பாற்ற நான் தயாராக இருந்தேனே’ என்று கூவினான். வலியால் பிதற்றல் என்று ஆஸ்பத் திரியில் இருந்தவர்கள் எண்ணியிருக்கலாம்.

மல்லியுடன் பிறந்த அந்தச் சிசுவும் பிச்சை எடுக்கத் தொடங்கியது. குருடியும், குழந்தையும் கை நீட்டும் போது காசு போடாத அளவுக்குத் தர்மசிந்தனை இன்னும் உலகில் வற்றிப் போகவில்லை, என்றாலும் தவறாகப் பேசாதவர்கள் இல்லாமல் இல்லை . ‘ குருடிக்கு ஆண் குழந்தையா?’ என்று அவர்கள் கூறிச் சிரிக்கும்போது மல்லி வருத்தப்படாம லில்லை. ‘குழந்தை அவளுடையதாயிருக்காது, இரவல் குழந்தையாயிருக்கும்’ என்று பேசிக்கொள்ளும் போது மல்லி ‘இரவல் குழந்தை இல்லை. என்னுடையது, என்னு டையது’ என்று கூறத் துடிப்பாள். அதைக் கூறிப் பயன்? குழந்தையின் தந்தை எங்கே?

முத்தையனுக்கு நேர்ந்த விபத்து மல்லிக்குப் பல நாட்கள் கழித்தே தெரிந்தது. மிகுந்த பரபரப்படைந்தாள். எங்கிருந்தோ புதுப் பாசம் அவளை வந்து ஒட்டியது. ஆஸ் பத்திரிக்கு உடனே ஒடிப் போய்ப்பார்க்கத் துடித்தாள். தட்டுத் தடுமாறி விசாரித்துக் கொண்டு எவரெவருடைய தயவையெல்லாம் நாடி ஆஸ்பத்திரியை வந்தடைந்தாள்.

அன்று முத்தையன் ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை யாகும் நாள். அவனால் இனி மற்றொருவர் துணையின்றி நடக்க முடியாது. முன்போல் பொறுப்பில்லாமல் சுற்றி இஷ்டம்போல் அலைய முடியாது. மூட்டைத் தூக்கிப் பிழைக்க முடியாது. ஆஸ்பத்திரியிலிருந்த நாட்கள் வரை அவனுக்கு எந்தவிதக் கவலையும் தெரியவில்லை. உலகத்தில் இனி எப்படி வாழப் போகிறோமென்றே அவன் எண்ண வில்லை. ஊன்றுகோல் ஒன்றை ஆஸ்பத்திரியில் கொடுத்தார்கள்.

அவன் வெளியே வருவதற்கும் மல்லி குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. முத்தையன் மல்லியைப் பார்த்துவிட்டான். அவளைப் பார்க் காமலேயே போய்விட எண்ணினான். அவள் அங்கு எதற்காக வந்திருக்கிறாளோ ….

‘ஐயா, இங்கே முத்தையன் என்று ஒருத்தர் கால் உடைஞ்சு படுத்திருக்காராமே தெரியுமா?’ என்று மல்லி கேட்பது முத்தையன் காதில் வீழ்ந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றான். தன்னையா மல்லி தேடுகிறாள். இந்தப் பாபியையா? அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.

“முத்தையனா – அவன் பேரு தெரியாது. காலுடைஞ்சு ஒருத்தனிருந்தான். இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகிப் போகிறான். அதோ – போகிறான் பார் -” ஆஸ்பத்திரி வேலைக்காரன் கூறினான்.

“முத்தையா” என்று கூறினாள் மல்லி. தட்டுத் தடுமாறி ஒரு திசையாகச் சென்றாள், முத்தையன் கலங்கிய கண்களுடன் மல்லியை நெருங்கினான்.

“மல்லி, மல்லி என்னை மன்னித்து விடு. உனக்குச் செஞ்ச தவறுக்குத் தண்டனை எனக்குக் கிடைச்சுடுத்து மல்லி. இனி வாழ்நாள் முழுவதும் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போகிறேன் மல்லி” என்று விம்மினான் முத்தையன்.

“அப்படிச் சொல்லாதே முத்தையா, போனதை நெனைச்சு வருத்தப்படாதே. இதோ பார் உன் குழந்தை” – மல்லி இதைக் கூறும் போது வெட்கப்பட்டாள்.

கடபுடா சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அதே பழைய பாடல். ஆனால், பாடலின் புது விளக்கம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.

“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ
நட்டாற்றில் கை நழுவ விட்டேனோ,
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ…”

முத்தையன், மல்லிக்குத் துணையாக வழிகாட்டிக் கொண்டிருந்தான். மல்லி முத்தையனுக்கு உதவியாகத் தோள் கொடுத்து உதவிக் கொண்டிருந்தாள். இருவருக்கும் பிரியாத துணையாக அந்தச் சிசு இருந்து இளநகை புரிந்து தானம் கொடுப்போர் மனத்தைக் கவர்ந்து துணை செய்த வண்ணம் இருந்தது.

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *