கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,331 
 

அடகு வைப்பதற்கு வீட்டிலே ஒன்றும் இல்லாவிட்டால், எல்லா பெறுமதியான பொருள்களும் முடிந்துவிட்ட நிலையில், குறுக்கு மூளை அப்பா அவனை அடகு வைப்பார். அவன் பெயர் உக்கோ. ஏப்ரல் மாதம் வரும்போது அவன் தயாராகிவிடுவான். ஆப்பிரிக்காவில் ஏப்ரல் மாதக் கடைசியில்தான் மழைக்காலம் ஆரம்பமாகும். அடகு வைத்தால் மூன்று நான்கு மாதம் கழித்துதான் அவன் மீட்கப்படுவான். ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து தன் உடுப்புகளை அதற்குள் அடைத்தான். உடுப்புகள் என்பது அவன் பள்ளிக்கு அணியும் ஒரு கால்சட்டையும் ஒரு சேர்ட்டும்தான். மீதி இடத்தில் அவன் புத்தகங்களை நிரப்பினான். என்ன நடந்தாலும் அவன் படிப்பை கைவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

உக்கோ பள்ளிக்கூடத்துக்கு வருகிறானோ இல்லையோ வகுப்பில் அவன்தான் எப்பொழுதும் முதல். தலைமையாசிரியருக்கு அவன் பள்ளிக்கூடத்திற்கு வராவிட்டால் அவனை அடகு வைத்துவிட்டார்கள் என்பது தெரியும். அவனிடம் அவர் நிறைய அன்பு வைத்திருந்தார். அவனுக்கு பதினொரு வயது நடந்தபோது அந்தப் பிராந்தியத்தில் நடந்த பரீட்சையில் அவன் முதலாவதாக வந்தான். தலைமையாசிரியர் தன் சொந்தக் காசில் அவனுக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கி பரிசளித்தார். முள்கள் சுழன்று ஓடும் கடிகாரம். வாழ்க்கையில் அதுவரைக்கும் அவன் கட்டியது விளையாட்டுக் கடிகாரம்தான். முதலில் நேரத்தை பார்த்துவிட்டு பின்னர் முள்ளைத் திருப்பி வைக்கவேண்டும். ஆனால் இதில் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் தானாகவே ஒன்றை ஒன்று துரத்தின. அவன் தனது இடது கையில் ஒரேயொருநாள் அதைக் கட்டினான். அடுத்த நாள் அவனுடைய அப்பா அதை எடுத்துப்போய் சந்தையில் விற்றுவிட்டார். அம்மா அவரை ‘குறுக்குமூளை மனுசன்’ என்று திட்டினார். அந்தப் பெயர் பின்னர் நிலைத்துவிட்டது.

உக்கோவுக்கு 3 அம்மாக்கள், நாலு பாட்டிகள், ஒரு அப்பா. அப்பாவுக்கு அவனுடைய அம்மா இரண்டாவது மனைவி. அப்பாவின் மூன்று மனைவிகளுக்கும் பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அடகு வைப்பது என்று வரும்போது உக்கோவையே அப்பா தெரிவு செய்வார். ஒருநாள் அப்பாவிடம் அம்மா கேட்டுவிட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்தான் ஆச்சரியமானது. ‘எனக்கு தெரியும், நீ பேசாமல் இரு. எத்தனை நாள் அடகு வைத்தாலும் இவன் படிப்பை விடமாட்டான். முதலாவதாக வந்துவிடுவான்.’ அதைக்கேட்டதும் உக்கோவுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. தாயாரிடம் பலமுறை கெஞ்சியிருக்கிறான். ’அப்பா குடித்துவிட்டு ரோட்டில் சண்டை போடுவது எனக்கு அவமானமாயிருக்கு. நண்பர்கள் பரிகசிக்கிறார்கள். நீ ஏன் அவரை திருத்தக்கூடாது?’ அம்மா சிரிப்பார். ’கோழிக் குஞ்சின் பிரார்த்தனை பருந்தை ஒன்றும் செய்யாது. நீ சின்னப்பிள்ளை’ என்பார்.

முதல் முறை அவனை அடகு வைத்தபோது அவனுக்கு வயது 11. அப்பா அவனை லெபனிஸ் வியாபாரிகளிடம்தான் அடகு வைப்பார். லெபனானில் யுத்தம் தொடங்கிய பின்னர் நிறைய கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஆப்பிரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதாவது வியாபாரத்தை துவங்கி அதை லாபகரமாக நடத்தினார்கள். பெரிய வீடுகளில் ஆறு ஏழு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு வசதியாக வாழ்ந்தார்கள். அவன் பின்வாசல் கதவு வழியாகத்தான் உள்ளே நுழைவான். காலையில் எசமானின் சப்பாத்துகளை மினுக்கிவைப்பது அவனுடைய முதல் வேலை. அறைகளைத் துப்புரவாக்கவேண்டும், ஆனால் துடைப்பத்தால் கூட்டமுடியாது. சிறுபையன் கூட்டினால் வீட்டிலே பேய் பிடித்துவிடும் என்றார்கள். ஆகவே கைகளினால் பொறுக்குவான். எசமானுக்கு நல்ல நாள் என்றால் அவனுக்கு நல்ல நாள். அவருக்கு கெட்ட நாள் என்றால் அவனுக்கு ஆகக் கெட்ட நாள். எசமானின் அறையில் ஒரு படம் மாட்டியிருந்தது. துப்பாக்கியை வலது கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவர் நின்றார். இடது கால் இறந்துபோன மானின் மேல் இருந்தது. அதன் கண்கள் திறந்தபடியே இருந்தன. எசமானின் கண்களும் திறந்தபடி இருந்தன. அவர் காலை தூக்கினால் மான் எழும்பி ஓடிவிடும் என்பதுபோல அவனுக்கு தோன்றும். சாப்பாடு மூன்று நேரமும் அலுமினியத் தட்டில் கிடைக்கும் அதனால் அவனுக்கு மகிழ்ச்சி. ஆனால் இரவு நேரங்களில் அம்மாவை நினைத்து அழுவதை அவனால் நிறுத்தமுடியவில்லை.

அடுத்த தடவை குறுக்குமூளை அப்பா அவனை அடகுவைத்தது ஒரு லெபனிஸ்காரருடைய மருந்துக்கடையில். அங்கே தினம் பத்து மணிநேரம் வேலை. முதலாளி உயரமாக பெரிய வயிறு முன்னுக்கு தள்ள நீண்ட டிஸ்டாஸா அங்கி அணிந்திருப்பார். தையல்காரனிடம் சொல்லி அவர் அங்கியை முன்னுக்கு நீளமாகவும் பின்னுக்கு கட்டையாகவும் தைப்பிப்பதாக பேசிக்கொள்வார்கள். ஒருவாரம் முடிவதற்கிடையில் அவன் மருந்தின் பெயர், என்ன வியாதிக்கான மருந்து, அதன் பக்க விளைவுகள், விற்பனை விலை இன்ன பிற விவரங்களை மனனம் செய்துவிட்டான். வாங்குபவருக்கு பொறுமையாக மருந்தை சாப்பிடும் முறைபற்றி விளக்கிச் சொல்வான். முக்கியமாக மருந்தை ‘திருப்பிக் கொண்டுவரவேண்டாம்’ என்று நினைவூட்ட வேண்டும். அது முதலாளியின் கட்டளை. அவன் கட்டளைகளை சரிவர நிறைவேற்றியபடியால் முதலாளிக்கு அவன்மீது பிடிப்பு வந்துவிட்டது. அவனுக்கு சம்பளம் கிடையாது. தங்க இடமும் சாப்பாடும்தான். உக்கோவுடைய ஒப்பந்தம் முடிந்து வீட்டுக்கு போகும்போது அவனுக்கு சம்பளம் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவன் செய்த ஒரு முட்டாள்தனம் எல்லாத்தையும் கெடுத்துவிட்டது.

அங்கே ஒரு வழக்கம் இருந்தது. ஆறு மாதத்திற்கொரு முறை காலாவதியான மருந்துகளை ஒரு பெட்டியில் அடுக்கி சுகாதார மந்திரியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வார்கள். மந்திரி மருந்துகளின் ஆயுளை மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டி கடிதம் கொடுப்பார். கணிசமான பணத்தை கொடுத்துதான் அந்தக் கடிதத்தை பெறமுடியும். காலாவதியான மருந்துகளை விற்பதில் உக்கோவுக்கு சம்மதமில்லை. ஒரு நாள் மூச்சுத் திணறியபடி நோயாளி ஒருவர் கேட்டு வந்த மருந்து காலாவதியாகிவிட்டது. விற்க மறுத்தால் முதலாளிக்கு கோபம் வரும். விற்றாலோ நோயாளிக்கு பலன் கிடையாது. இப்படியான இக்கட்டான சமயங்களை கடந்துபோக உக்கோவிடம் ஒரு யுக்தி இருந்தது. இருபது மட்டும் ஒவ்வொன்றாக எண்ணுவான். அதற்குள் யாராவது புது வாடிக்கையாளர் கதவை திறந்து வந்தால் மருந்தை விற்கலாம். வராவிட்டால் கொடுக்கக்கூடாது. வேகமாக எண்ணினான். ஒருவருமே வரவில்லை. மருந்து இல்லையென்று நோயாளியை அனுப்பிவிட்டான். இந்த விசயம் எப்படியோ முதலாளிக்கு தெரிய வந்து அவனை தாறுமாறாக வைதார். தகப்பன் அவனை மீட்க வந்தபோது உக்கோவினால் பெரும் நட்டப்படதாக முறையிட்டு, ஏதோ மருந்து விற்பதுபோல அவனை ‘திருப்பிக் கொண்டுவரவேண்டாம்’ என்று கடுமையாகச் சொல்லி துரத்திவிட்டார்.

அவனுக்கு 15 வயதானபோதுதான் அவனுடைய குறுக்கு மூளை அப்பா அவனை பால்தாஸர் வீட்டில் அடகு வைத்தார். அவர் பெரிய வைர வியாபாரி. மிக நல்ல மனிதர். இலையான்கள் செய்வதுபோல கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டுதான் பேசுவார். ஒருநாள் முழுக்க அவர் பக்கத்தில் நின்றாலும் நாலு ஐந்து வார்த்தைகளுக்குமேல் பேசமாட்டார். உக்கோ அவன் வாழ்நாளில் அத்தனை பெரிய வீட்டை கண்டதில்லை. வீட்டைச் சுற்றி உதை பந்தாட்ட மைதானம் போல பெரிய புல் வெளியும் தோட்டமும். தோட்டத்திலே இரண்டு கருப்பு வெள்ளை நாரைகள், சிவந்த அலகுடன் உலவிக்கொண்டிருக்கும். முதலாளி நல்ல மனிதர். அவனுக்கு புதிய உடையும் காலுக்கு அணிவதற்கு செருப்பும் கிடைத்தன. எந்த நேரமும் தோய்த்து மடித்த சீரான உடையில்தான் வீட்டுக்குள் நடமாடவேண்டும் என்பது கட்டளை. காலை எட்டு மணியிலிருந்து வியாபாரிகள் வந்த வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு சின்னச் சின்ன கிண்ணங்களில் காபியும், மெஸ்ஸே, ஹாமுஸ், லாப்னே என்று சிற்றுண்டி வகைகளும் தந்து உபசரிக்கவேண்டும். மாலையானதும் மதுபானம்தான். அந்த வீட்டில் இருந்ததோ மூன்று பேர்தான். அவர்களைப் பராமரிக்க 17 வேலைக்காரர்கள் உழைத்தார்கள். அவர்களிலே உக்கோவும் ஒருத்தன்.

எசமானின் மகள் பெயர் ஜூலியானா. அவளைக் கண்ட முதல் நாள் அவன் திகைத்துப்போய் நின்றான். அவன் வேலைசெய்த வீடுகளில் பல அழகிகளை கண்டிருக்கிறான். ஆனால் இப்படியும் இந்த உலகத்தில் அழகிருக்கலாம் என்பதை அவன் அறியவில்லை. இன்னொருவர் முந்த முடியாத அழகு. கூந்தலை எதிர்ப்பக்கமாக வாரி உருட்டி அலங்கரிப்பதால் உயரமாகத் தெரிவாள். அந்தப் பெரிய வீட்டில் உள்ள 20 அறைகளில் அவள் எங்கோ வசித்தாள். அபூர்வமாக கண்ணில் தென்படுவாள். சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும்போது. ஒரு நாள் காலை நேரம் அவளை நேருக்கு நேர் கண்டபோது நடுங்கிவிட்டான். நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்கள் கூசின. அழகுகூட ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை அன்றுதான் உணர்ந்தான். ‘உக்கோ’ என்றாள். அவளுக்கு அவன் பெயர் தெரிந்திருந்தது மட்டுமில்லாமல் அது ஞாபகத்திலும் இருந்ததை அவனால் நம்ப முடியவில்லை. பெருமையாகவிருந்தது. வேலையில் சேர்ந்த அன்றே அவனுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எசமானை அவன் ’மாஸ்டர்’ என்றும் எசமானியை ’மாடம்’ என்றும் மகளை ’ஸ்மோல் மாடம்’ எனவும் அழைக்கவேண்டும்.

’எஸ், ஸ்மோல் மாடம்’ என்றான். அவன் தலை குனிந்திருந்தது. அவள் மாட்டியிருந்த வெள்ளிச் சருகை வேலைப்பாடுசெய்த சப்பாத்துகளையே அவன் கண்கள் கண்டன. அவன் அணிந்திருந்த இறுக்கமான உடை பாதி நனைந்துவிட்டது. ‘நீ படிக்கிறாயாமே. என்ன படிக்கிறாய்?’ என்று கேட்டாள். அவன் மூளை படபடவென்று வேலை செய்தது. சில நாட்களுக்கு முன்னர் அவள் மேசையிலே கிடந்த புத்தகங்களை பார்த்திருக்கிறான். அவளுக்கு அவனிலும் பார்க்க இரண்டு வயது கூட இருக்கும். ஆனால் ஒரு வகுப்பு கீழே படிக்கிறாள். இடுப்பிலே கையை வைத்துக்கொண்டு பதிலுக்காக நின்றாள். இந்தச் சின்னக் கேள்விக்கு இவ்வளவு தாமதமான பதிலா என்று அவள் யோசித்திருக்கலாம். வெள்ளை கொலர் வைத்த மெல்லிய பச்சை கவுண் அணிந்திருந்தாள். அதே வெள்ளைக் கலரில் அகலமான பெல்ட் அவள் இடுப்பைச் சுற்றி இறுக்கியிருந்தது. அவன் புத்தியாக அவளிலும் பார்க்க ஒரு வகுப்பை குறைத்துச் சொன்னான். ’சரி போ’ என்றாள். அப்படிச் சொன்னபோது அவளுடைய தலை 40 பாகை தோள் பக்கம் சரிந்தது. விடுதலை பெற்றவன்போல அந்த இடத்தை விட்டு அகன்றான். அகன்றதும் ஏதோ பெரும் இழப்பு வந்து அவனை மூடிக்கொண்டது. மீதி நாள் முழுக்க அவனுக்கு நரகமாகவே கழிந்தது.

அவனுடைய குறுக்கு மூளை அப்பா அந்த தடவை அவனை அடகுவைக்க வந்தபோது அவனுடைய அம்மா எதிர்த்து போராடினார். அவர் படுத்த படுக்கையாக கிடந்தார். அவரை பார்த்துக்கொண்டது மூன்றாவது அம்மா. வேறு ஒருவரும் எட்டிப் பார்ப்பதில்லை. மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். வலியில் அம்மா துடித்தபடியே ’உச்சரிக்கமுடியாத வியாதி வந்துவிட்டதே’ என்று புலம்புவார். ’உக்கோ உக்கோ’ என்று நிமிடத்துக்கு நாலு தடவை அழைப்பார். அவன் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தாலே போதும். இலையான்களின் தொல்லைதான் தாங்கமுடியாமல் இருந்தது. அம்மாவின் கண்களை அவை விடாமல் தாக்கின. எசமான் வீட்டிலே இலையான்களே இல்லை. அவைகளுக்கு எப்படி ஏழை வீடு, பணக்கார வீடு தெரிகிறது என்பது அவனுக்கு புரியவில்லை. தன்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்று நினைத்தபோது அவனுக்கு வாழ்க்கையில் முதல் தடவையாக வெறுப்பு வந்தது. எப்பொழுது அவனுடைய குறுக்கு மூளை அப்பா வந்து தன்னை மீட்பார் என்று தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவர் வந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதை நினைக்க அவனுக்கு வெட்கமாயிருந்தது.

இந்த உலகத்தில் அவனிடம் உண்மையான அன்பு காட்டுபவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒன்று அம்மா. மற்றது அவனுடைய தலைமையாசிரியர். ‘நீ நல்லாய்ப் படி. உனக்கு அபூர்வமான மூளை. நீ வெளிநாடு போய் பெரிய படிப்பெல்லாம் படிக்கவேண்டும்’ என்று இங்கிலாந்து மாப்பை விரிப்பார். அவன் உடனேயே விம்மத் தொடங்குவான். ’ஒரு வரைபடத்தை பார்த்து அழுவது இந்த உலகத்தில் நீ ஒருவன் மட்டுமே’ என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு மாப்பை மறுபடியும் சுருட்டி வைப்பார். அவனால் வரைபடங்களை பார்க்க முடிவதில்லை. ’வெளிநாடு போகமாட்டேன் சேர்’ என்பான் அவன். ’உன் மூளை பெண்டுலம் போல வேலை செய்கிறது. கூர்த்த மதி கொண்டவனாய் ஒரு கணம் தெரிகிறாய். அடுத்த கணம் முழு மூடனாகிவிடுகிறாய். கிளையிலேயே உட்கார்ந்திருக்கும் பறவைக்கு சோளம் எங்கே இருக்கிறது என்பது தெரியாது. தேனி பூப்பூவாய் போய் தேனை திரட்டுவதுபோல நீ அறிவைத் திரட்டவேண்டும்’ என்பார். உக்கோவின் தலைகுனிந்திருக்கும்.

ஒருநாள் கதவு மணி அடித்தது. அந்த ஒலி அடங்குவதற்கிடையில் மறுபடியும் ஒலித்தது. உக்கோ ஓடிச்சென்று கதவை திறந்தான். இரண்டு இளம் பெண்கள், அவர்களை தோளோடு தோள் ஒட்டிவிட்டதுபோல, நெருக்கமாக நின்றார்கள். உக்கோ சிரித்தான் ஆனால் அவர்கள் திருப்பி சிரிக்கவில்லை. அவனை தள்ளி விழுத்துவதுபோல உள்ளே நுழைந்தனர். ஜூலியானாவுடன் படிப்பவர்கள் என்பது உடனே புரிந்தது. படபடவென்று காரியங்கள் துவங்கின. ஒருத்தி கரண்டி ஒன்றை வாய்க்கு முன் பிடித்துக்கொண்டு (அதுதான் ஒலிவாங்கி) பாடினாள். அந்தப் பாட்டுக்கு மற்றவள் நடுக்கூடத்தில் நடனம் ஆடினாள். அது அரேபியர்கள் நடனம் என்பது அவனுக்கு பின்னர் தெரிந்தது. அவள் முறையாக அரேபிய நடனம் கற்றவள் போலிருந்தாள். பின்னர் ஜூலியானாவின் முறை வந்தது. இடுப்பிலே நீலம் சிவப்பு என ரிப்பன்களை இறுக்கி கட்டி இன்னும் இடையை சிறிதாக்கிக்கொண்டு ஆடினாள். நடனத்தின் முக்கியமான பகுதி இடையை ஆட்டுவதுதான். ஒரு கால் நேராக நிற்க மற்றக் காலை சாய்த்து வைத்து, ஒரு கையை இடுப்பிலே ஊன்றிக்கொண்டு நின்ற நிலையிலேயே இடையை மட்டும் தூக்கித் தூக்கி எறிந்தாள். அது மேலும் கீழும் ஆடியது. அவன் அவர்களுக்கு மெஸ்ஸே பரிமாற வந்தபோது பாடிய பெண் கரண்டியை பின்னுக்கு ஒளித்தாள். வாயை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் திரும்பியபோது ஜூலியானா என்னவோ மெள்ளச் சொல்ல இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி அவனை பார்த்தார்கள். அவனுக்கு என்னவோபோல ஆகிவிட்டது. சமையலறைக்கு ஓடி வந்த பின்னரும் அவனுடைய தொடைகள் ஆடின. அவள் என்ன சொல்லியிருப்பாள் என்று அன்று இரவு முழுக்க தூங்க முடியாமல் மண்டையை போட்டு அவன் உடைக்கவேண்டியிருந்தது.

அவளிடம் எண்ணிக் கணக்கு வைக்க முடியாத ஆடைகள் இருந்தன. இரவு ஆடை, வீட்டு ஆடை, பள்ளி ஆடை, விளையாட்டு ஆடை, குளிக்கும் ஆடை, வெளி ஆடை, விருந்து ஆடை என்று பல வகை. ஒருமுறை அணிந்ததை இன்னொரு தடவை அணிவதை அவன் பார்த்தது கிடையாது. சிலசமயம் விருந்து ஆடையை வீட்டுக்கு உடுத்தி அலங்காரம் செய்து கண்ணாடியில் தன்னையே நெடுநேரம் பார்ப்பாள். பின்னுக்கு இழுபடும் மெல்லிய நீல நிற உடையில் இளவரசிபோல, உயர்ந்த கால்செருப்பு சத்தமிட, உலவுவாள். ஒருநாளைக்கு பலமுறை உடைமாற்றுவாள். கழற்றிய உடை கழற்றிய இடத்திலேயே வட்டமாக கிடக்கும். அவற்றை பொறுக்கி கூடையில் உக்கோ பலதடவை போட்டிருக்கிறான். அந்த உடைகளின் மிருதுத்தன்மை விரல்களில் படும் சில கணங்கள் அவன் மனதில் பல மணிநேரம் தங்கும். அவளைத் தொடுவதுபோல மிகவும் மரியாதையுடன்தான் அவற்றை தொட்டிருக்கிறான்.

எசமான் வீட்டில் இரண்டு தோட்டக்காரர்கள் புல் வெட்டுவார்கள். உருளையான மெசினைத் தள்ளிக்கொண்டுபோக அது பெரும் சத்தம் எழுப்பியபடி புல்லை வெட்டிச் சேகரிக்கும். புல் வெட்டும் நாட்களில் ஜூலியானா அழைத்தால் கேட்காது. அந்த வீட்டில் உள்ள 20 அறைகளில் எந்த அறையில் இருந்தும் அவள் கூப்பிடுவாள். அந்தச் சத்தம் சுவர்களில் எதிரொலித்து எதிரொலித்து அவனிடம் வந்து சேரும்போது பாதி பலம் இழந்துவிடும். அவன் ஒவ்வொரு அறையாக அவளைத் தேடிக்கொண்டு அலைவான். அன்று அவள் தீவிரமாக ஏதோ படித்துக்கொண்டிருந்தாள். வீட்டுப் பாடம் செய்கிறாள் என்று பட்டது. எட்டிப் பார்த்தான். பாஸ்கல் முக்கோணத்தில் ஒரு கணக்கு. ‘எஸ் ஸ்மோல் மாடம்’ என்றான். தேநீர் கொண்டுவரச் சொன்னாள். மாடிப்படிகளில் இறங்கி சமையலறைக்குச் சென்று எடுத்து வந்து பூச்செண்டு கொடுப்பதுபோல எட்ட நின்று நீட்டினான். அவள் கோப்பையை வாங்கிய பின்னரும் அவன் கைகள் நீண்டபடியே இருந்தன. ஆறிவிட்டது என்றாள். அவன் மறுபடியும் சமையல் அறைக்கு ஓடி இன்னொன்று எடுத்து வந்தான். அதுவும் சரியில்லை. மூன்றாவது தடவை இரண்டு இரண்டு படியாக தாவி ஏறி குதிரைபோல மூச்சுவிட்டுக்கொண்டு ஓடிவந்தான். அவள் ம்ம்ம் ஆறிவிட்டது என்றாள். தேநீர் கோப்பையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. ‘ஸ்மோல் மாடம். நீங்கள் என் மீது ஏதோ கோபமாயிருக்கிறீர்கள்’ என்றான். ‘கோபமா. உன்மீதா? போ போ’ என்று கையை நீட்டி விரட்டினாள். அவன் தடுமாறி பின்பக்கமாக விழுந்து தன் மீது தேநீரைக் கொட்டிக்கொண்டான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. பதைபதைத்தபடி வந்து ‘ஓ என்னை மன்னித்துவிடு’ என்று அவன் கையை பிடித்து தூக்கிவிட்டாள். அந்த மிருதுவான விரல்கள் அவனைத் தொட்டது ஒரு கணம்தான். சிப்பியின் உள்பக்கம் போல பளபளவென்ற வெள்ளை நகங்கள். அவள் விரல்களை விடுவித்த பின்னும் அந்த சிலிர்ப்பு விடவில்லை. யன்னலைத் துளைத்துக்கொண்டு புதிய சூரிய வெளிச்சம் திடீரென்று உள்ளே பாய்ந்தது. புல்வெட்டும் சத்தம் பெரிதாகி அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அவனுடைய மீதி வாழ்நாள் முழுக்க புல்வெட்டும் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவனுக்கு அவள் ஞாபகம் வரும்.

அவன் மனதில் கள்ளம் புகுந்துவிட்டது. அன்று முழுக்க அவள் கண்களில் படுகிறமாதிரி உலவினான். கால்களிலே புதிய சுறுசுறுப்பு வந்தது. என்றுமில்லாதவிதமாக அவள் அம்மாவின் கழுத்தை பாம்பு சுற்றுவதுபோல கைகளால் சுற்றிப் பிடித்துக்கொண்டு ஏதோ அரேபிய மொழியில் சொன்னாள். பின்னர் அவனைத் திரும்பிப் பார்த்ததுபோல இருந்தது. வழிப்பறிக் கொள்ளைக்காரன்போல திடீரென்று அவள் பாதையில் குறுக்கிடச் சொன்னது அவன் மனம். எங்கே அவள் நின்றாலும் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. கண்ணை வெட்டினால் அவள் மறைந்துவிடுவாள் என்று பயந்தான். அடுத்த நாள் அவள் பள்ளிபோகும்போது அவன் வாசலில் ஏதோ வேலை உண்டாக்கி நின்றான். காரில் ஏறப்போகும் முன்னர் திரும்பிப் பார்த்தாளா என்பதை அவனால் நிச்சயிக்க முடியவில்லை. அவள் பள்ளியிலிருந்து திரும்ப வரும் நேரத்தை கணித்து அதே இடத்தில் காத்திருந்தான். அன்று அவனைத் திகைக்கவைத்த சம்பவம் நிகழ்ந்தது. குறுக்கு மூளை அப்பா வந்து அவனை மீட்டுக்கொண்டு போய்விட்டார்.

அந்த வருடம் சோதனையில் அவன் நாட்டில் முதலாவதாக வந்திருந்தான். பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலாந்தில் மேல்படிப்பு படிப்பதற்கு அவனுக்கு உதவித்தொகை அறிவித்திருப்பதாக தலைமையாசிரியர் சொன்னார். ’எனக்கா?’ என்று மட்டும் கேட்டான். அவனால் வேறு ஒன்றுமே பேசமுடியவில்லை. கண்ணீர் ஒழுகத் தொடங்கியிருந்தது. வீட்டுக்கு ஓடிவந்து மூச்சு வாங்க அம்மாவிடம் செய்தியை சொன்னான். சொன்னதும் தன் தவறை உணர்ந்துகொண்டான். ஆறுமாதமாக அவர் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. வலியில் முனகிக்கொண்டு அவன் தலையை தடவி ’நீ என்னை விட்டுவிட்டு போகப்போகிறாயா? என்றுமட்டும் கேட்டார். அதன்பிறகு அவனுடன் பேசவில்லை. அம்மாவுக்கு மூன்று மொழிகள் தெரியும். அவருடைய கிராமத்து ஃபுலானி மொழி. குறுக்குமூளை அப்பாவிடம் பேசும் ரிம்னி மற்றும் கிரியோல். அம்மா மூன்று மொழியிலும் அவனிடம் மௌனம் சாதித்தார்.

சந்தை பஸ் நிலையத்துக்குப் போய் இரண்டாவது பாட்டியை அழைத்துவரும்படி குறுக்கு மூளை அப்பா கட்டளை இட்டிருந்தார். பாட்டி வந்தால் அம்மா உற்சாகமாகிவிடுவாள். ஹமட்டான் காற்று வீசும் காலை நேரம். சகாரா பாலைவனத்து குளிரை அப்படியே அள்ளிக் கொண்டுவந்திருந்தது காற்று. அவன் மூச்சு விடும்போது அவனுடைய சுவாசப்பை அளவு உருண்டையான புகை மேகங்கள் அவனுக்கு முன்னால் போயின. எந்த நேரம் என்ன பஸ்ஸில் பாட்டி வருவார் என்ற தகவல் அவனுக்கு சொல்லப்படவில்லை. ஒவ்வொரு பஸ்ஸாக அவன் தேடிக்கொண்டு வந்தான். அவனுக்கு முன்னால் ஒரு பெண்ணும் யாரையோ தேடினாள். முதுகிலே ஒரு குழந்தையை கட்டியிருந்தாள். அதே அளவு இன்னொரு குழந்தையை வாளியிலே காவினாள். பஸ்கள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. பஸ் வாசகங்களைப் படித்தபடி அவன் பாட்டிக்காக காத்து நின்றான்.

‘மடியில் உட்காராவிட்டால் முழு டிக்கட்.’

‘கடவுள் மேலே இருக்கிறார். அவசரமாகச் சந்திக்க வேண்டுமென்றால் அடுத்த பஸ்ஸில் ஏறுங்கள்.’

‘பிணங்களை ஏற்றிப்போவது சட்டவிரோதம்.’

கடைக்கண்ணில் ஒளிபட்டதுபோல அதிர்ச்சி. ஒரு மூச்சு தவறியது. அதற்குப் பின்னர்தான் கண்டான். ஜூலியானா. அவனுடைய சிரிப்பை திருப்பிக் கொடுக்காத இரண்டு சிநேகிதிகளுடன் வந்திருந்தாள். வீதியின் மறு பக்கத்தில் அவள் நடந்தபோது அவளுடைய ஆடை நடைக்கு ஏற்ப சுழன்றது. உக்கோ தன் உடையை குனிந்து பார்த்தான். இறுக்கமான காக்கிக் கால்சட்டை, ஒருவாரம் முழுக்கப் போட்டு ஊத்தையான பழுப்பு மேல் சட்டை. கினிக்கோழி புதருக்குள் பதுங்குவது போல மெல்ல பின்பக்கமாக நகர்ந்து பஸ்ஸின் பக்கவாட்டில் மறைந்துகொண்டான். அவளோ ஒரு கவலையும் இல்லாமல் கைகளை ஆட்டி சிரித்துப் பேசிக்கொண்டு போனாள். அவள் உருவம் மறைந்த பின்னர் அவளை மறுபடியும் பார்க்க மனம் அவாவியது. பிரபஞ்சத்தை அவள்தான் இயக்குகிறாள் என்பதுபோன்ற நடை. என்ன ஒய்யாரம். சிநேகிதிகள் பக்கம் திரும்பி கழுத்தை சாய்த்து ஏதோ சொன்னாள். வந்ததுபோலவே திடீரென்று மறைந்தும் போனார்கள். பின்னர் அவளை அவன் வாழ்நாளில் காணவில்லை.

தலைமையாசிரியர் அவனைத் தேடி வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் கோபமாக இருந்தார். ’உண்மைதானா? நீ போகப்போறதில்லையா? எத்தனை பெரிய அதிர்ஷ்டம். இந்தக் கிராமத்துக்கே உன்னால் பெருமை கிடைத்திருக்கிறது.’ உக்கோ நிலத்தை பார்த்தபடி சொன்னான். ’அம்மாவுக்கு விருப்பமில்லை, சேர்.’ ’என்ன பேசுகிறாய்? நான் சந்திரனை சுட்டிக் காட்டுகிறேன். நீ என் விரல் நுனியை பார்க்கிறாய். உன் அம்மாவை பார்த்துக்கொள்ள பாட்டி இருக்கிறார்.’ அன்று தலைமையாசிரியர் அவனுடன் நீண்ட நேரம் பேசினார். ’எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. நீ தலைநகரத்துக்கு புறப்படவேண்டியது மட்டும்தான்’’ என்றார். ’என்னால் முடியாது சேர்’ என்றான் அவன். ‘கதவு திறந்திருக்கிறது. நீ சாவித்துவாரம் வழியாக பார்க்கிறாய்.’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அவர் அப்படிக் கோபித்து அவன் கண்டதில்லை. தாயார் அவனையே வெறித்துப் பார்த்தார். ’நான் விரைவில் செத்துப் போய்விடுவேன்’ என்றார். ’நான் உன்னைவிட்டு போகமாட்டேன் அம்மா’ என்று உக்கோ அவரைக் கட்டிப்பிடித்தான். பழுதாகிப்போன சருமத்தின் மணம் வந்தது.

மூன்று நாட்களாக அவனால் தூங்க முடியவில்லை. நடுச்சாமம் சாடையாகக் கண்ணயர்ந்தபோது நெற்றியை யாரோ தடவினார்கள். கண்விழித்தபோது பக்கத்தில் அம்மா இருந்தார். கிண்டி எடுத்த இஞ்சிக் கிழங்குபோல விரல்கள் அவன் நெற்றியை வருடின. உதடுகள் வெள்ளையாகக் காட்சியளித்தன. இவரா ஒரு காலத்தில் அவனுக்கு பால் ஊட்டி வளர்த்தார். அவருடைய தோளில் அவன் தொட்டபோது கத்திபோல கூராகவிருந்தது. அம்மாவின் வாயில் காணப்பட்ட அத்தனை பற்களும் பெரிதாகி எண்ணெய் விளக்கு ஒளியில் அவனை பயமுறுத்தின. ’ஏன் அம்மா நித்திரை வரவில்லையா?’ என்றான். ’நான் தூங்கினால் நீ போய்விடுவாய், எனக்கு தெரியும்’ என்றார். ’நான் போகமாட்டேன், அம்மா’ என்று அவன் உறுதிகூறி தூக்க மருந்தை எடுத்து கொடுத்தான். அவர் அதை சாப்பிட்டுவிட்டு அமைதியாக தூங்கினார்.

காலை ஐந்து மணிக்கு அவன் வீட்டை விட்டு புறப்பட்டபோது தாயார் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தார். பையை தூக்கிக்கொண்டான். இத்தனை பொய்களை அவன் தாயாரிடத்தில் சொன்னது கிடையாது. அவன் போனது தெரிந்ததும் அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பஸ் தரிப்பில் ஒருவருமே இல்லை. ஒரு நாய் மாத்திரம் படுத்திருந்தது. வீட்டுக்கு திரும்புவோமா என மனம் தடுமாறியது. தலைமையாசிரியர் கோபித்துக்கொண்டு சட்டென்று எழுந்துபோனதை எண்ணி வருந்தினான். அவனுக்கு இருப்பது ஒரு அம்மா மட்டுமே. படிப்பு தடைபட்டால் நாளை இன்னொரு படிப்பு கிடைக்கும். ஆனால் அம்மாவுக்கு அவன் எங்கே போவான். இனிமேல் அவரைப் பார்க்கவே முடியாது என்று எண்ணியபோது மனம் நடுங்கியது. அந்த எண்ணத்தை தள்ளிக்கொண்டு வேறொரு நினைப்பு வந்தது. சிப்பியின் உள்பக்கம் போல பளபளக்கும் நகங்களுடன் கழுத்தை சரித்து மெல்லச் சிரிக்கிறாள் ஜூலியானா. அந்த நினைப்பு அவனை பதைபதைக்க வைத்தது.

நாயை பார்த்தான். அதுவும் அவனை மேல் கண்ணால் பார்த்தது. இன்னும் சில நிமிடங்களில் பஸ் வந்துவிடும். அதற்கு முன்னர் நாய் எழுந்துபோனால் அவன் வீட்டுக்கு திரும்புவான். போகாவிட்டால் அவன் பஸ் ஏறுவான். மூன்று மாதங்களாக அவனை வாட்டியெடுத்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது இப்படித்தான்.

-2012-02-13

Print Friendly, PDF & Email

1 thought on “தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *