தீர்மானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,085 
 

சந்தானம் கையை விரித்துப் பிடித்திருந்த புஸ்த கத்தின் வரிகள் ஒரு குறிப்பு இல்லாத பார்வையில் மிதந்து சென்று கொண் டிருந்தன. எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த சிந்தனைகள் அத்தனையும் ஒருமிக்கச் சேர்ந்து வந்து அமிழ்த்தினதுபோல ஒரே ஜடமாக உட்கார்ந்திருந்தான். எதிரே மேஜைக்கு மேலாகச் சுவரில் உயரே பதித்திருக்கும் கடியாரம் தன் முறை வேலைப்படி மூன்றுதரம் அடித்துவிட்டு, அவனை உஷார்ப் படுத்தியதுங்கூட அவன் காதுகளில் விழவில்லை; இல்லை விழுந்தும் அவன் பொருட் படுத்தின தாகத் தெரிய வில்லை. இன்னும் ஒரு மணி அவகாசம் இருந்தது , அவன் சிந்தனைக் கனவிலிருந்து விழிப்பதற்கு. நாலு மணிக்கு அவர்கள் புறப்பட்டுப் போக ஏற்பாடாகி இருந்தது.

இந்த ஏற்பாட்டுக்கு அவனைச் சம்மதிக்கச் செய்வ தற்குள் எவ்வளவு கஷ்டமாகப் போய்விட்டது அவர்களுக்கு. ஏன், இன்னுங் கூட அவர்களுக்குச் சந்தேகந் தான், எந்த நிமிஷத்திலும் அவன் மறுத்துவிடலா மென்று. ஆனாலும் வாய்விட்டுச் சரியென்று அவன் ஒப்புக்கோ, அல்லது மனப்பூர்வமாகவோ சொல்லி விட்டபிறகு, அவன் அப்படிச் செய்வான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடைசி நிமிஷம் வரைக்குங்கூட ஏதாவது பேசிக் கிளப்பி அவன் மன நெருக்கடியை வேகப்படுத்த அவர்கள் விரும்பவில்லை அவன் போக்கிலே விட்டு விடுவதுதான் உசிதம் என்று அவர்களுக்குப் பட்டது.

‘சாண் ஏற முழம் சறுக்க’ என்றபடி ஆனது சந்தானத்தின் வாழ்க்கை. எல்லோரையும் போலத் தான் அவனுடைய வாழ்க்கைச் சக்கரம் குடும்பத்தை இழுத்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது. ஆனால் அவன் மத்திய காலத்தைத் தாண்டு முன்பே இரண்டு தரம் அச்சு முறிந்து சக்கரம் சுழலுவது தடைப்பட்டது. இரண்டு தடவைகள் புது ஆரம்பம் செய்தாகிவிட்டது; இப்போது மூன்றாம் தடவை ஆரம்பிக்க வேண்டும் அவன்.

அவன் இரண்டாவது மனைவி பிரசவத்தில் இறந்து தலைமாசியம் ஆகி இரண்டு நாட்கள் தாம் ஆகின்றன. போனவள் பிழைத்தாள், இருப்பவர்கள் உயிரை வாங்க வைத்துவிட்டு. தாயைப் பலிவாங்கின அந்தச் சிசுவோடு கூட பெரிய குஞ்சு இரண்டையும் அவன் காலடியில் போட்டு விட்டு அவள் கண்களை மூடிக்கொண்டாள். பெரிய குஞ்சுகள் இரண்டும் அவனோடு வந்து விட்டன. சிசுவைப் பாட்டி வீட்டிலேயே வைத்துக்கொண்டு விட்டார்கள்.

பம்பாயில் சர்க்கார் இலாகா ஒன்றிலே இருநூறு ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு உத்தியோகம். வயது நாற்பதை அடுத்துச் சென்று கொண்டிருந்தது. வாலியத்தின் அறிகுறிகள் லேசு லேசாக மங்கிக் கொண்டே வந்து மூப்பின் அறிகுறிகளைப் பிரகாசமாக எடுத்துக் காட்டினது அவன் தேகக்கட்டு. ஏன், வயசுக்கு மீறின மூப்பு என்று கூட வியக்தமாகச் சொல்லி விடலாம்.

அதற்கு வயசை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. அவன் முப்பதாவது வயதில் முதல் மனைவி இறந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் இந்த மத்திய காலத்திலும் அவன் நினைவில் அழியவில்லை. அந்தப் புது மணத்தை அவன் மூச்சுத் திணறும் வரையில் வாசனை பிடித்து அனுபவித்தான். அப் போது தான் மலரே வாடி விழுந்துவிட்டது. அவன் உணர்ச்சியும் அதோடு மரமரத்துப் போய்விட்டது. ஆனால் அது நிரந்தரமாகத் தங்கி விடவில்லை. அவனுக்குத் தெரியாமல் எப்படியோ புது ஆரம்பம் மறுபடியும் ஆகிவிட்டது. ஆறு வருஷங்கள் குதி போட்டுக்கொண்டு அவன் முன்னே ஓடிச் சென்றன.

அதற்குள் இந்தச் சம்பவம். முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி இப்போது ஏற்படவில்லை. ஒரு சாவைக் கண்ட அவன் மனம் ‘இன்னும் ஒன்று’ என்று கணக்குப் பண்ணிவிட்டது. ஆனால் ஒரு புதுப் பாரம் அவன் நெஞ்சிலே ஏறி அழுத்தினது. மூன்றாகப் பிரிந்த அவள் சாயல் கொண்ட உருவங்களின் எதிர்காலம் அவனுக்குக் கேள்விக்குறி போட்டுக்கொண்டே இருந்தது.

இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன, அவன் லீவு கழித்து வேலையை ஒப்புக்கொள்வதற்கு. தலை மாசியம் எப்போது தீரப்போகிறது என்று வாயசக் காக்கை போலக் காத்துக்கொண் டிருந்தவர்கள் மறு நாளே பேச்சு ஆரம்பித்து விட்டார்கள். கல்யாணப் பிரஸ்தாபம் ஜ்வரவேகத்தில் வலிவடைந்து விட்டது , இந்த இரண்டு தினங்களுக்குள். முந்தின தடவை போல ஆளுக்கு ஆள் அவன் மனத்தைப் பண்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவன் மனமே பக்குவம் அடைந்து தான் இருந்தது. சந்தர்ப்பத்துக்கு வேண்டியபடி நேர் எதிரே தோன்றும் அந்த மூன்று உருவங்கள் போதாவா? புது ஆரம்பம் செய்ய அவனைத் தூண்டுவதற்கு இதைவிட வலிவானது வேறு என்ன வேண்டும்?

அன்று காலையில் தான் அவர்கள் பார்க்கப் போக இருந்த பெண்ணைப்பற்றி அவன் தமக்கை ஏதோ தனக்குத் தெரியாத தகவல்களுடன் அவனிடம் பேச்சுக் கிளப்பினாள். அவர்கள் குலம், கோத்திரத்தைப்பற்றிப் பூர்வ பீடிகை போட்டாள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு அவ்வளவாகச் சொத்து இல்லை. ஏதோ ஒரு காணி, இரண்டு காணி இருந்ததை வைத்துக் கொண்டு மானமாக அரைக்கஞ்சி குடித்துக் காலம் தள்ளிவரும் குடும்பம். இந்தப் பெண் அவருக்கு மூன்றாவது பெண் ; முதல் இரண்டு பெண்களை எப்படியோ மேடேற்றிப் புருஷன் வீடுகளில் கொண்டு சேர்த்து விட்டார். இதற்குப் பிறகு ஒரு பெண்ணும் இரண்டு பிள்ளைக் குழந்தைகளும். இதையெல்லாம் தமக்கை சொல்லி வரும்போதே சந்தானம் காதுகளில் கிரஹித்துக்கொண்டான். பெண்ணின் குடும்பத்தைப் பற்றி அவனுக்கு அக்கறை விழவில்லை. ஏழைமையைப் பற்றியும் அவன் பொருட்படுத்தவில்லை. ஹும்! அவன் முதல் மனைவி பெயருக்கேற்றபடி வீட்டில் செல்வத்தைக் கொண்டு நிரப்பினாள். அவனுக்கே செல்வமாக விளங்கினாள். ‘ஆனாலும் என்ன? அந்தச் செல்வம் இப்போது எங்கே?’ என்றெல்லாம் மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருந்தான்.

அந்த நிலைமையில் தான் அவன் தமக்கை மேலும் பேச்சுக் கொடுத்தாள், “அம்பீ, பெண்ணுக்கு வயது பதினாறு நடக்கிறதாம்; நல்ல ஈடு தாடு என்று சொல்லுகிறார்கள்” என்றாள்.

“ரொம்ப நல்லதாகப் போச்சு; கையோடே கூட்டிக் கொண்டு போய்விடலாம்” என்றான் சந்தானம்.

“அது தானே உனக்குச் சௌகரியம், அம்பீ! தவிரவும் பெண் அழகு என்று சொல்லலாமாம், அம்பீ” என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள்.

‘பெண் அழகு’ என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தது தான் தாமதம். சந்தானம் சடக்கென்று அக்கா பக்கம் திரும்பிப் பார்த்தான். மனத்திலே அது உண்டாக்கின வேதனையின் குறிகள், அவன் பார்வை, உதடுகளின் அசைவு , முக நரம்புகளின் வெடவெடப்பு ஒவ்வொன்றிலும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. தமக்கை அதைப் பார்த்ததும் பின்வாங்கினாள். அவன் வாயி லிருந்து என்ன வார்த்தை வெடித்துக் கிளம்பப் போகிறதோ என்று அந்தச் சில விநாடிகளில் எவ்வளவு பயந்துவிட்டாள்! ” அக்கா! இன்னுமா உங்களுக்கு அந்த நினைப்பு? நப்பாசை. இரண்டு தரம் அழகுக்கு இந்தக் கை கொள்ளி வைத்துவிட்டதைப் பார்த்திருக்கிறாயே; அந்த வயிற்றெரிச்சலை ஏன் கிளப்புகிறாய், இப்படிப் பேசி?” என்று படபடத்துக் கொட்டி விட்டான்.

“அம்பி, அம்பி” என்று அவனை இடைமறித்துப் பேசப் போனவள் வார்த்தையின் வேகம் தாளாமல் தயங்கி நின்று விட்டாள். ஒரு பெருமூச்சு விட்டுச் சமாளித்துக்கொண்டு, “ஹூம்! இந்த வயசிற்குள்இத்தனை அலங்கோலங்களுக்கு ஆளாக வேண்டுமென்று உன் தலைவிதி இருக்கிறது!” என்று மறுபடியும் ஒருபெருமூச்சு விட்டாள்.

கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தார்கள். மீண்டும் அக்காவே பேச்செடுத்தாள். “அம்பீ! அதை ஒரு காரணமாகக் காட்டி உன்னைச் சம்மதிக்கச் செய்ய வரவில்லை. ‘அடுக்குள் தூணுக்கு அழகு என்ன வேண்டி இருக்கிறது’ என்பது பழமொழி. இருந்தாலும் பங்கரை இல்லாமல் இருக்க வேண்டாமா? அதற்குத்தான் சொல்ல வந்தேன், பெண்ணைப் போய்ச் சாயந்திரமாகப் பார்த்துவிட்டு வரலாமென்று” என்று கொஞ்சம் கொஞ்ச மாகக் சுருதியை இறக்கிப் பேசினாள்.

“என்னது? பெண்ணைப் பார்க்கவா! என்னையா கூடவரச் சொல்கிறாய்?” என்று விழிகள் பிரமிப்புக் காட்டக் கேட்டான் சந்தானம். ஒரு கசப்புச் சிரிப்பு அவன் வாயிலிருந்து கிளம்பியது..

“ஆமடா, அம்பீ. பின்னே போக வேண்டாமா அதென்ன, புதுசு இல்லியே! முந்தி எல்லாம் போக வில்லையா?”

“முன்பு போயிருந்தால்…” என்று வேகமாக ஆரம்பித்தவன் அதை முடிக்கவில்லை. வார்த்தை நின்று மனத்தில் பழைய நினைவுகள் படர்ந்தன. முதல் முறை பெண் பார்க்க அக்காவுடன் போன அந்தச் சம்பவம் அவன் கண்களுக்கு முன் அப்படியே நின்றது. “ஏண்டாப்பா, நாங்கள் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் போதாதா? புதிசாக, மாப்பிள்ளை போய் பார்க்க வேண்டும் என்று முரண்டு பண்ணுகிறாயே?” என்று பெரியவர்கள் குரல்கள் அவனைக் கண்டித்தது ஞாபகம் வந்தது பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அப்படி. யுவர்கள், பெரியவர்கள் பொறுப்புக்குப் பெண்கள் தேடுவதை விட்டிருந்த நாட்கள் அவை. புதுமைப் படிப்பிலே ஏற் பட்ட ஒரு கிளர்ச்சி அவனை அவர்கள் முடிவை ஏற்கத் தடை செய்துவிட்டது. தானே பார்த்து வந்து தான் மணத்துக்குச் சம்மதப்பட்டான். அதே மாதிரிதான் இப்போதும், இரண்டாவது தரமும். அவனே பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொண்டது தான். அதேமாதிரிதானா இப்போதும்? மாறி மாறி இந்த நிலைமைகளை மனத்திற் குள்ளாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டான்.

முன்பு இருந்த ஓர் ஆத்திர உணர்ச்சி தன் மனத்தில் அப்போது அவ்வளவு வேகத்துடன் இல்லை என்றுதான் அவனுக்குப் பட்டது. “அக்கா, நான் எதற்கு வர வேண்டும்? நீங்களே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுங்களேன்” என்றான்.

“நாங்கள் ஆயிரம் பார்த்தாலும், வைத்து, ஆளப் போகிறவன் நீ. உனக்குத் திருப்தி ஏற்படவாவது…”

“என் திருப்திக்கா?” என்று சந்தானம் தனக்குள் கேள்வி போட்டுக்கொண்டான்.

“வேண்டியது தான். முன் தடவைகளில் அதைத் தான் நான் முக்கியமாகக் கருதினேன். ஆனால் எனக்குத் திருப்தி அளித்த அந்தப் பொருளில் எதை என்னிடம் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடிந்தது? என் திருப்திக்கு அந்தச் சக்தி இல்லை. அப்படி இருக்க நான் திருப்திப்பட்டுத்தான் என்ன பிரயோசனம்?” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். வெளியே பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அக்கா மறுபடியும் ஆரம்பித்தாள்: “இன்று நாம் போய்ப் பார்த்துச் சம்மதம் அவர்களுக்குத் தெரிவித்து விட்டால் இன்றைக்கு எட்டாம் நாள் முகூர்த்தம் நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஒரு வாரந்தானே உனக்கு லீவு இருக்கிறது? போவதற்குச் சரியாக இருக்கும்.”

“அக்கா எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. என்னைத் தொந்தரவு செய்யாமல் போய், நீயும் அத்திம்பேரும் திருப்தியாக இருக்கிறதா என்று பார்த்து முகூர்த்தம் நிச்சயித்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்றான் மறுபடியும்.

“அம்பி, நாங்கள் எதற்கு? யோசனை பண்ணாதே. நீயே ஒரு தடவை போய்ப் பார்த்து வந்துவிடு. நாலு மணிக்கு மேல் புறப்பட்டு வருவதாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டேன்” என்றாள்.

சந்தானம் அதற்குமேல் பேசவில்லை. அவன் மௌனத்தின் அளவைக் கொண்டு, சம்மதித்து விட்ட தாக எண்ணி அவன் தமக்கையும் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் போய்விட்டாள்.

அதுமுதல் சந்தானத்தின் மனசு குழம்பின நிலை யிலேயே அவஸ்தைப்பட்டது. மனைவி செத்த ஒன்றரை மாதத்தில் கல்யாணம் செய்து கொள்வதில் கூட அவனுக்கு ஆக்ஷேபணை இல்லை. ஆனால் பெண்ணைப் போய்ப் பார்ப்பது என்பது மட்டும் அவன் மனத்தில் இன்னும் திருப்தியாகப்படவில்லை. கையில் பிடித்திருந்த புஸ்கத்தின் வரிகளை, அர்த்தம் மனத்தில் பதியாத நிலைமையில் புரட்டிக்கொண்டே இருந்தான். அவன் – சிந்தனை எங்கெங்கெல்லாமோ ஓடித் திரிந்து கொண்டிருந்தது. ஆயிற்று; இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, அவன் புறப்படுவதற்கு.

புஸ்தகத்தைப் புரட்டுவது கூட நின்று அவன் கண்கள் மூடி, தலை பின்புறமாக நாற்காலியின் முதுகு விளிம்பில் சாய்ந்து கொடுத்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தான் போக இருந்த அந்தப் புது இடம், அங்கே தான் வரவேற்கப்படும் விதம், அங்கே நடக்கப் போவது, தான் நடந்து கொள்ள இருப்பது இவைகளைப் பற்றிய நினைவுகள் கனவின் தோற்றத்தில் அவன் மனத்தின் முன்னே எழுந்தன. கனவிலே ஐக்கியமாகி விட்ட ஓர் உணர்ச்சிப் போதையில் அவன் உணர்வு இழந்து விட்டான்.

***

ரிக்ஷா வீட்டு வாசலில் போய் நின்றது. மெதுவாகக் கீழ் இறங்கி இரண்டு படியேறிக் கடைசி மூன்றாவது படியிலே அடிவைத்து உள்ளே நுழைந்தான். அவன் வாழ்க்கையில் அவன் செய்ய இருக்கும் மூன்றாவது ஆரம்பத்தை அது ஞாபகப்படுத்தினது போல் இருந்தது.

“வாருங்கோ, வாருங்கோ” என்று உள்ளே இருந்து அவனை உபசார முறையில் வரவேற்றுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார் ஒருவர். அதை ஒரு புன்னகையோடு சந்தானம் ஏற்றுக்கொண்டான்.

கூடத்திலே இரண்டு பழைய ஜமக்காளங்களை அதன் பொத்தல் தெரிந்தும் தெரியாமலும் சேர்த்து விரித்திருந்தார்கள். அதிலே ஒரு நொடியில் சந்தானம் போய் உட்கார்ந்தான். அவனை வரவேற்றவர் இன்னும் ஒரு கோடியிலே உட்கார்ந்து கொண்டார். “ஏன், அத்திம்பேரும் அக்காவும் வரவில்லையா?” என்று முகத்தில் ஓர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சந்தானத்தோடு ரொம்பப் பழகின ரீதியில் அவர் கேட்ட கேள்விக்கு, “இல்லை, அத்திம்பேர் ஆபீஸுக்குப் போயிருக்கிறார்; அக்காளுக்கு உடம்பு சரியாக இல்லை” என்று ஏதோ ஒரு முகாந்தரம் ஒப்புக்குச் சொல்லித் தானும் பதில் பேசினான்.

“அதனாலே என்ன? பரவாயில்லை” என்றார் அவர். “உங்களுக்கு இன்னும் இரண்டு வாரந்தான் லீவு. இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நேரே பம்பாய்க்குத் தான் போகணுமோ?” என்றார் மீண்டும்.

“ஆமாம்; நாலு நாளைக்கு முந்தியே புறப்பட்டுப் போனால் தான் சௌகரியமாக இருக்கும்” என்றான் சந்தானம்.

“அதான், அதான், எட்டாம் நாளே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு. அதில் நடத்திவிடலாம் என்று உத்தேசம்” என்று அவர் பேச்சை இழுத்தார்.

“ஹம்!” என்று சந்தானம் லேசான ஓர் உறுமலுடன் அதற்குப் பதில் அளித்தான். பாவம்! பெண்ணைப் பெற்றவருக்கு அவ்வளவு ஆத்திரம்! பெண்ணைப் பார்க்கவில்லை. முகூர்த்தம் நிச்சயித்து விட்டார். “கொஞ்சம் மன்னிக்கணும். ஒரு நிமிஷம் உள்ளே போய்விட்டு வரேன்” என்று எழுந்து போனார். சந்தானம் தன் கண்களைத் திருப்பி அந்த இடத்தை ஒரு தரம் ஆராய்ந்து பார்த்தான். வரும்போதே அவன் மனசு கொஞ்சம் அசாதாரணம் அடைந் திருந்தது. சமையலறைப்பக்கம் அவன் கண்கள் திரும் பினபோது, அங்கிருந்து இரண்டு மூன்று உருவங்கள் எட்டி எட்டிப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக்கொள்வதுமாக இருந்தன. “இவர்தானா மாப்பிள்ளை! நம்ப….வைப்பார்க்க வந்திருக்கிறவர்?” என்று அந்த முகங்கள் ஒன்றையொன்று கேட்டுக் கொள்வது போலவும் தன்னைப்பற்றியே அவர்கள் பேச்சு முழுதும் இருக்கும் என்றும் சந்தானத்துக்குத் தோன்றியது.

சந்தானம் பார்க்கவும் அந்த உருவங்கள் தலைகளைச் சரேலென உள்ளே இழுத்துக் கொண்டன் ஒரு விநாடிக்குச் சப்தம் உட்புறம் போய்விட்டது. அதே சமயம் அவரும் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பேச்சுத் தொனி பலத்தது. ஆனால் சந்தானத்தின் காதில் அது விழவில்லை.

அவர் அங்கே போய் என்ன பேசினார்? இல்லை, அந்தப் பெண்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு என்ன கேட்டது? இவர் என்ன பதில் சொல்லிக்கொண்டிருந்தார்? “என்ன, மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்? பிடித்திருக்கிறதா?” என்று அவர்களைக் கேட்டாரா? அவர்கள், “என்ன அப்பா, அண்ணா, மாமா” என்று கத்தி, “மாப்பிள்ளை அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னீர்களே. இப்படி இருக்காரே. அப்படிச் சிவப்பு இல்லையே! மூக்கு முழி எல்லாம் எவ்வளவு பெரிசு! ஹம்! நாற்பது வயதுக்குக் குறையாது. முப்பத்தைந்து என்பது பொய்” என்றெல்லாம் அவரவர் அபிப்பிராயங் களைச் சொல்லிக்கொண்டிருந்தார்களா?

சந்தானத்தின் கற்பனை பறந்து பறந்து தவித்தது. மூலைக்கு மூலை ஓடி அவர்கள் பேச்சைக் கிரஹித்து இழுக்க அது ஆசைப்பட்டது. அந்த ஆசை நிறைவேறாத நிலைமையில் தனக்குத் தோன்றியபடி உருவகித்துக் கொண்டது. அந்த இடத்தின், சுற்றுப் புறத்தின் ஒவ்வோர் அசைவிலும், சப்தத்திலும் தனக்குப் பாதகமான அபிப்பிராயங்களைத்தான் அது கணக் கெடுத்தது.

அப்போது ‘களுக்’கென்று ஒரு பலத்தச் சிரிப்புச் சப்தம் அறையிலிருந்து கிளம்பிற்று. அதைக் கேட்ட சந்தானம் திடுக்கிட்டு விட்டான். ஏன் இந்தச் சிரிப்பு? அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களையும் மீறிவருவானேன். அவர்களுக்கு விருப்பமற்ற ஓர் அபிப்பிராயத்தை அதன் மூலம் தெரிவிப்பதாக இல்லாமல் இருந்தால்? ஆமாம். நிச்சயமாக, அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் அதுதான். சந்தேகமே இல்லை. சிரித்த அந்தக் குரல் அதற்கு முன் பேசின வார்த்தை வேறு எதுவாக இருந்திருக்கக் கூடும்? அதுதான் என்பதில் சந்தேகமே இல்லை.

சந்தானத்தின் தேகம் ஒருதரம் நடுங்கிற்று, அந்த வார்த்தைகளின் நினைப்பில். இதுவரை அந்த நினைப்பு அவனுக்குத் தோன்றவேயில்லை. அவன் மனசு உடைந்து போயிருந்த நிலைமையில் இந்த அம்சத்தைப் பற்றியே அவனுக்குத் தோன்றி. இராது – அக்காவோடு தர்க்கித்த அந்த நிலைமையிலும் – என்ன முட்டாள் தனம் என்று அவன் மனசு அலைமோதிக் கொண்டது. அந்த வார்த்தைகள் ! என்ன கோரம் ! நான் லகுவாக அந்த வார்த்தைகள் காதில் விழாமல் நிவர்த்தி செய்திருக்கக் கூடும். அதற்குச் சந்தர்ப்பமே இல்லாமல் செய்திருக்க லாம். அவமானம்! அவமானம்! புத்தியைச் செருப்பால் தான் அடித்துக்கொள்ள வேண்டும். அக்கா! நீங்கள் தான் இதற்கெல்லாம் காரணம். பேசாமல் நீங்கள் போய்த் தொலைந்திருந்தால், இந்த வார்த்தைகளை என் கேட்டுக் கொள்ள வேண்டும்? என்னால் பொறுக்க முடியாது. முடியாது என்னால்!’

மறுபடியும் ஒரு சிரிப்பு அதே ரீதியில்! இதற்கும் அதே அர்த்தந்தான். ஒரு துடுக்குக் குரல் கேட்கிறது “மூணாம் இளையாளைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்குப் பெண் வேறே பார்க்கணுமா, இந்த லக்ஷணத்தில்!” ‘கோரம்! கோரம்! ஐயோ! என்ன தப்புச் செய்து விட்டேன்…’

ஆனால் நான் வந்தாகி விட்டது. என்ன செய்வது இப்போது? வேறு வழியில்லை. சோதனை முழுவதையும் கடந்து தான் தீரவேண்டும். கோரம்! கோரம்! அவன் தலை சுழன்றது.

அவர் மறுபடியும் வந்து உட்கார்ந்தார். அவருக்குப் பின்னால் ஓர் உருவம் சாயலாக எதையோ எடுத்துக் கொண்டு வந்து குனிந்து கீழே வைத்தது. ஏதோ குலுங்கும் சப்தந்தான் அருகில் கேட்டது. சந்தானத் தின் காதுகளில் இது ஏதோ ஸ்வப்ன சப்தம் போல் விழுந்தது. அந்தச் சாயலும் சப்தமும் அப்போது அவன் கவனத்தை, அது எங்கேதான் தவறிப்போயிருந்த போதிலும் இழுத்திருக்க வேண்டுமே, அதுதான் இல்லை! இன்னும் அவன் தலை குனிந்து தான் இருந்தது. அந்த வார்த்தைகளும், அந்தக்கசிரிப்பும் கொடுத்த அர்த்தம் மூளையைச் சுற்றிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி விட்டன.

“ஸார்! ரெண்டு எடுத்துக் கொள்ளுங்கோ” என்று அவர் தட்டை இழுத்துப் பாயின் குச்சியைக் கிள்ளிக் கொண் டிருந்த அவன் கண்முண்ணே நீட்டின துந்தான், “அதுக்கென்ன?” என்று சொல்லிக்கொண்டே முகத்தை உயரே திருப்பினான். அப்போது தான் மறுபடியும் ஏதோ குலுங்கல் சப்தம் கேட்டது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தான். அந்த உருவத்தின் முன்புறம் – அவனுக்குத் தெரியவில்லை! அவள் பின் புறம் அவனிடமிருந்து தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அவளைப் பார்க்கவில்லை; இதற்காக வந்தவன்!

வெளியே தெரியாத ஒரு பெருமூச்சு அடக்கிக் கிளம்பியது, சந்தானத்தின் ஹிருதய ஆழத்திலிருந்து.

ஆமாம். நான் இப்போது குற்றவாளி அல்ல. ‘மூணாம் இளையாளைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் பெண்ணைப் பார்க்க வந்தானாம், வெட்கமில்லை’ என்று என் மேல் அவர்கள் இனிமேல் குற்றம் சாட்ட முடியாது. நான் தான். அவளைப் பார்க்கவே இல்லையே! நான் பிழைத்தேன். எனக்கு என்ன உரிமை இருக்கிறது, அந்தப் பெண்ணைப் போய்ப் பார்ப்பதற்கு? முதல் தடவையோடு அதை நான் இழந்து விட்டேன். இரண்டாம் தடவை அதைக் கொண்டாடினேனே, அதுவே தப்பு. மூன்றாந் தடவையா?..இல்லை, இல்லை ; பேச்சுக்கு இடமில்லாமல் செய்து விட்டேன்..”

கடியாரத்தில் மணி நாலடித்தது. கனவிலே ஐக்கிய மான உணர்ச்சி தன்னைப் பலாத்காரமாக ஸ்வப்பனத்தி லிருந்து விடுவித்துக் கொண்டது. “அக்கா!” என்று வேகமாகக் கூப்பிட்டான்.

“ஏன், மணி நாலு அடித்தாகி விட்டதே. புறப்படேன், அம்பி.”

“இல்லை. பொறுப்பு உங்களுக்குத்தான். நான் போகவில்லை.”

“அம்பி, என்னது திடீரென்று?”

“அக்கா, மேலே பேச்சுக்கு இடமில்லை. புறப் படுங்கள் சீக்கிரம். அத்திம்பேரைக் கூப்பிடு.”

“நீ…?”

“நாள்கா, அங்கே வந்து பெண்ணின் மூக்கையும் கண்ணைய உம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறேன்? வயற்றெரிச்சல்!” அந்தத் தொனியின் பாரத்திலே அக்காவின் மேல் வார்த்தைகள் நசுங்கி விட்டன். ஒரு நிமிஷம் தயங்கினாள்.

“அப்போது, நாங்கள் போய்விட்டு வரவா?”

“போங்கள், போங்கள் சீக்கிரம்”

“போய்விட்டு வாங்கோ என்று சொல்லு, அம்பி”.

“சரி, போய்விட்டு வாங்கோ.”

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *