கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 10,233 
 

சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்துகொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் அடைத்துக்கொண்டிருக்க, நாய்களும், பூனைகளும், சில குழந்தைகளும், மீதமிருந்த இடைவெளியில் நடந்தும், உட்கார்ந்தும், விளையாடிக்கொண்டுமிருந்தன.

களிமண்குழைத்து எழுப்பின சுவர்களின்மீது மூங்கில் குச்சிகளை நிறுத்தி, மேலே பனையோலை வேய்ந்த சிறுகுடில்கள், சந்தின் இருமருங்கிலும் நெருக்கிக் கொண்டிருந்தன. அவையெல்லாம் தீபாவளியால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன.

குடிசைகளின் வாசல்கள் துப்புரவாக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தன. காவியும் மாக்கோலமும் ஆங்காங்கே வரையப்பட்டிருந்தன. ஒலிபெருக்கியின் ஓயாத கூச்சலும், சிறுபிள்ளைகளின் உற்சாகக் கூச்சலும் ஒருசேரக்கலந்து, அந்த இடத்தையே கண்களறியா கடலலையால் பீறிட்டு நிறைத்திருந்தது.

அடுத்திருந்த ஐயனார்க்கோயிலில் சேர்ந்து சீட்டாடி பெரிசுகளும் இளசுகளும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடிக்கொண்டிருக்க, பெண்களும் சில ஆண்களும் கூட்டமாக கூடையுடனோ அல்லது பாலித்தீன் பைகளுடனோ ஹுசைன் கடையில் கறிவாங்கக் காத்திருந்தனர்.

வேப்பமரத்தடி முகுந்தன் கடையில் வாங்கின ஊசிவெடியை தேங்காய்ச் சிரட்டையினுள் வைத்து அதன்திரியில் தீ வைக்க, அவை இயல்பைவிட பலமாய் ஒலி எழுப்பிக்கொண்டே சிரட்டையைச் சிதறடித்து வெடிக்கும் விந்தையைக் கண்டு கைக்கொட்டிச் சிரித்தனர் அங்கிருந்த பிள்ளைகள். அவர்களுக்கு, அந்தச் சின்னவெடிகளை பெரிதாக வெடிக்கச்செய்யும் சூட்சுமம் தெரிந்திருந்தது.

அவ்விதம் வெடிக்காமல் வீணாய்ப்போன வெடிகள் சிலவற்றின் மருந்துகளையெல்லாம் சேகரித்து, எறிந்துபோன புஸ்வாணத்தில் கொட்டி, அதை மீண்டும் புனரமைக்கும் வித்தையை மாடன் அறிந்திருந்தானென்பது அங்கிருந்த அவனொத்த வயதுப்பிள்ளைகளுக்குத் தெரியாததாலோ என்னவோ, வீணாய்ப்போனவற்றை அவர்கள் அப்படியே விட்டுச்சென்றுவிட, அவைகளைத் தேடிப்பொறுக்கி ஒரு அரைக்கோள சிரட்டையில் சேகரிக்க அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான் மாடன்.

தொப்புளுக்குக்கீழ்வரை இறங்கி, தொளதொளவென இருக்கும் அவன் காக்கிக் கால்சட்டை இடுப்பில் தொங்க, அதன் இருபக்கங்களிலும் இணைக்கப்பெற்ற தோள்பட்டைகளிலொன்று வலத்தோளில் படர்ந்து, அது கால்சட்டையை இடுப்பிலிருந்து கழன்று கீழேவிழாமல் பார்த்துக்கொண்டது. மற்றுமொன்று, தையல்விட்டு நைந்துபோயிருந்தது.

இத்தனைநேரமும் சேகரித்து, சிரட்டையில் பொறுக்கிவைத்திருந்த நாலைந்து ஊமைவெடிகளை விரல்களால் தடவி, சொல்லும்படியாக ஒன்றும் தேறவில்லை என்பதைக் கண்டுகொண்டு, அங்கே பட்டாசு வெடிப்பவர்களையே பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த மாடன், வெகுநேரம் கழித்துத்திரும்பி, அவனது குடிசையை நோக்கி வேகமாய் ஓடினான்.

அவ்விதம் வேகமாய் ஓடின மாடனின் கால்கள், வழியிலிருந்த பட்டாசுக்கடையருகில் எதையோ பார்த்து எதேச்சையாய் நின்றன. அவனது கண்கள் ஏக்கத்தை இறைத்தன. அதை ஏற்றிச் செல்லும் சுமைதாங்கியாய் அனைத்தையும் உள்ளடக்கிக்கொண்டவன், பின் மீண்டும் அங்கிருந்து வேகமாய் ஓடினான். ஓடி, மூச்சிரைக்க, முடிவில் அவன் தன் குடிசையின் வாசலில்போய் நின்றான். நின்றவன், மேலும்கீழும் மார்பு ஏறியிறங்க, பக்கவாட்டில் சாய்ந்திருக்கும் தென்னந்தட்டியை தன் இருகைகளாலும் பிடித்துக்கொண்டு, உள்ளிருக்கும் அவனன்னை மரிக்கொழுந்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அக்கணம் அவன் கண்கள் வீசின அப்பார்வை, சுட்டெரிக்கும் வெயில் தார்சாலையில் பட்டுத்தெறித்து அனலாய் திரும்பவும் எழ, அதைத் தார்ச்சாலையில் நடப்பவனின் முகம் உள்வாங்கி, பின், சிறுத்து இறுக்கமாவதை நினைவுறுத்தியது. அது, அவன்நெஞ்சை, ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த அவன்கோபத்தை, இயலாமையை, அப்பட்டமாகப் புறம்விரித்து அவளுக்குக் காட்டியது.

கல்லில் அரிசி பொறுக்கிக்கொண்டிருந்த மரிக்கொழுந்து, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு குனிந்து மீண்டும் பொறுக்குவதைத் தொடர்ந்தாள்.

பஞ்சத்தில் பட்டினிக்கிடந்து, துருத்திக்கொண்டிருக்கும் எலும்பும்தோலும்போல் வற்றலாய்ப் போயிருந்த அவள் உடலை போர்த்தியிருந்த ரவிக்கையில், தையலில் இதுவரை கண்டறியா விசித்திர வேலைப்பாடுகளெல்லாம் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியிருந்தன. சேலையும்கூட கந்தையாகவே மாறிவிட்டபடியால், அவளெதிரில் அடுப்பின்மேல் நீர்நிரம்பி கொதித்துக்கொண்டிருக்கும் அலுமினியப்பானையை இறக்கிவைக்க அவளுக்கு வேறு கந்தையைத் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. அலுமியப்பானையும்கூட, அங்கே சுற்றியிருக்கும் சூழலுக்கு குந்தகம் ஏதும் விளைவிக்காமல், சதுரமா? உருண்டையா? என அறுதியிட்டுக் கூற இயலாதவாறு அருங்காட்சியகப் பொருள்போல் நெளிந்து வளைந்து நசுங்கியிருந்தது. அந்தப் பானையிலிருக்கும் தண்ணீர், தீயின் வெம்மையால் முகடுகளில் நீராவிமேகங்களைக் கிளற, அவை மெதுமெதுவாய் கொதிநீரினின்று தவழ்ந்து கூரையை நோக்கி மேலெழும்பின.

‘தரந்தரன்னுட்டு பெறவு இல்லன்னாக்கா யென்னா அர்த்தம்? எல்லா நாளிக்குமா கேக்கறேன் உன்னய? போன தீவாளிக்கி குடுத்த. அத்தோட இப்போ. இத்தோட ஒரு வருசமா ஆவும்’ மாடன் தான் பேசினான்.

மரிக்கொழுந்து குனிந்ததலை நிமிரவில்லை. இன்னமும் அவள், அரிசி பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவளின் பொறுமை மாடனை மேலும் வதைத்தது.

‘யம்மாவ்” சிணுங்கினான் அவன். அவன்குரலை சட்டைசெய்யாமல், பொறுக்கிய இருகரண்டி அரிசியை லோட்டாவில் கொட்டிக்கழுவி, அதை அவள் அடுப்பிலிருந்த பானையில் போட்டாள்.

‘பச்சைக்கிலாம் அவங்கப்பாரு எத்தினிகாசு குடுக்காரு தெரியுமா? புது சொக்கா டவுசுருலாம் போட்டுக்கினு அங்கன ஒரே ஆட்டம்’ மாடனின் வார்த்தையாடல்கள் மரிக்கொழுந்தின் அங்கஅசைவுகள் எதையுமே பாதித்ததாகத் தெரியவில்லை. எரிந்து, அடுப்பின் வெளியில் வரமுற்பட்ட தென்னைமட்டையை அவள் வெளியே தெரியாதவாறு மீண்டும் பக்குவமாய் உள்ளுக்குத் தள்ளினாள்.

‘கண்ணம்மா ஆயாக்கிட்ட கடன்வாங்கிக்குடேன்’

அலுமினியக் குண்டானில் இருந்து வெளிப்படும் நீராவிமேகங்கள், பனையோலைக் கூரையின்மேல்பட்டு, நீர்த்திவலைகளாய் மாற, அதையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மரிக்கொழுந்து.

‘அம்மா உனக்கு அப்பறம் தாரேன். இப்பபோய் வெளயாடு’ என மாடனிடம் அவள் முணுமுணுத்தாள்.

‘ம்க்கும். நேத்தும் இததான சொன்ன. எங்க தந்த? போ.. கண்ணம்மா ஆயா குடுக்கும். நீ கேளு”
மரிக்கொழுந்து, மாடனை நோக்கினாள். அவள்பார்வை, சாதலையும் நோதலையும் கண்டு துணுக்குற்று, போக வாழ்வை வெறுத்த புத்தன் கண்களின் வெற்றுப்பார்வையை ஒத்திருந்தது.

அவள்புருஷன், அதீத குடியால் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்து மாண்ட காலந்தொட்டு, ஒருவேளைச் சோற்றை இதுவரையில் அவள் வயிறார உண்டதில்லை. சில வேளையில், புளித்துக்கெட்டுப்போன கம்பங்கூழே அவளுக்கு கூலியாகக் கிடைக்கும். சிலவேளையில் அரிசிபுடைத்துக் கழிந்த கற்கள்! அதில் இருக்கும், புடைக்கையில் தப்பிப்பிழைத்த நொய்யும், கொஞ்சம் நோஞ்சான் அரிசிகளும்தான் அன்றைய பொழுதுகளில் மாடனுக்கு உணவாகி வயிறுநிரப்பும். அப்போதும்கூட அவளுக்கு அன்று வெறும்நீரோ, இல்லை மாடன் மிச்சம்வைத்த சோற்றுநீரோதான் உணவு. பெரும்போதுகளில் அவள், பட்டினியாய்த்தான் இருந்திருக்கிறாள்.

இருப்பினும், வருடத்திற்கொருமுறை கொடுக்கும் திருவிழாக்காசைக்கூட பிள்ளைக்கு இந்தமுறை கொடுக்கமுடியாத இயலாமையால் வேகும் உள்ளத்தின் நோவை, அவள்முகம் அப்பட்டமாய்க் காட்ட,

‘கண்ணம்மாகிட்ட வாங்கினா திருப்பி குடுக்க வாணாமா? உறவுக்காரியா அவ கேக்கும்போதெல்லாம் குடுக்க?’ என்று மாடனை நோக்கி அவள் மெதுவாய்க்கேட்டாள்.

மாடன்முகம் உருக்குலைந்தது. பிரசவவலியில் துடிக்கும் தலைக்குழந்தைக்காரியின் முகம்போல் அது கோணலாகியது. அவன் அழ ஆயத்தமாகிறான் என்பதை அது அவளுக்கு அழுத்தமாக அறிவித்தது.

‘ஒருவாட்டி சொன்னா கேக்கணும். அம்மா ரூவா இல்லேங்கறனுல்ல? அழிச்சாட்டியம் பண்ணாம ஒழுங்கு மரியாதயா போய் வெளயாடு. காசு வந்ததும் தாரேன்’ மரிக்கொழுந்து அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

ஆனால் மாடன், இப்போது தரையில் தொப்பென விழுந்தான். பால்மணம் மாறாத குழந்தை காலுதைத்து அழுவதைப்போல வாய்பிளந்து அவன் வீறிட்டு அழுதான். கோபமாய்க் கத்தினான்.

‘போடீ. பயலுங்க யெல்லாம் எத்தினி சந்தோசமா திரியுதானுங்க.. எனுக்கு இன்னா வாங்கி தந்த? வருஷத்துக்கொருக்கா ரூவா குடுப்ப. அதுங்கூட இன்னிக்கி தரலயில்ல? இல்லன்னுதான் நீ எப்பவும் சொல்லித் திரியுத. எங்க அப்பாரு இருந்தாக்கா எல்லாம் எனக்கு வாங்கித்தந்துருப்பாவ. நீ சாவு.. நீ சாவு…போடீ’

அடுப்பின் மேலிட்ட கலயம், மிகுந்த தீயால் பொங்கி வழிந்தது. மரிக்கொழுந்தும் கலயமும் வேறுவேறல்ல என்பதை அவளது உணர்ச்சிகள் அக்கணம் படம்பிடித்துக் காட்டின. நெஞ்சு விம்ம, அவள் வேகமாய் அங்கிருந்து எழுந்துவந்து மாடனின் கன்னத்தில் பளீரென அறைந்தாள்.

‘எழவெடுத்தவனே. போடே. போய்ச் சாவு. உங்கப்பன் போனானே, அங்ஙனயே போய்க் கெட்டுஒழி. நானும் நாண்டுகிட்டு ஒழிவேன். எனக்கென்ன விதியா இருந்துஅழிய? நல்லா வாங்கிக் குடுப்பான்லே உங்கப்பன். நாறப்பய. குடிச்சு குடிச்சே குட்டிச்சுவரா போனான். ஒழுங்கா இருந்தா இன்னைக்கு அஞ்சுக்கும் பத்துக்கும் நா சீரழிவனா? ஏன் இங்கிட்டு கால்சோத்துக்குக் கிடந்தழியறேன்? போய்ச்சாவு. உங்கப்பனோடே போ. போடே….” விதிர்த்து, துக்கம் தாளாமல் கனத்து அழுதாள் அவள்.

மாடனும் கூடவே அழுதான். எத்தனை நேரம்தான் இருவரும் அழுதார்களோ தெரியவில்லை. மாடன், தேம்பலுடன் அப்படியே தூங்கிப்போனான். மரிக்கொழுந்து, குத்துக்காலிட்டு அவனருகிலேயே மண்தரையில் அமர்ந்திருந்தாள்.

இயலாமையின், இல்லாமையின், கோரம்தான் எத்தனைக் கொடிது?! தாயொருத்திக்கு, தன் பிள்ளையின் நியாயமான மிகச்சிறுவிருப்பத்தைக்கூட நிறைவேற்றவியலாத இயலாமை என்பது எத்தனைக் கோரமானது? அடித்தட்டில் அகப்பட்டுக்கொண்ட இந்த மரிக்கொழுந்தைப்போன்ற சாபக்கேட்டுச் சராசரி வாழ்க்கையை வாழ்பவர்களின் கதிதான் என்ன?

நெடு நேரம் கண்கள் நிலைகுத்த அமர்ந்திருந்தவள், நேரம் கரைய, தன் கண்களைத் துடைத்துக்கொண்டு இயல்புக்கு வந்தவளாய், மெல்ல மாடனை நோக்கித் திரும்பினாள். அங்கே அவனது அழுதுவீங்கிய கண்களைப் பார்க்கையில் அவள்கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்த்தது. மீண்டும் அதைத் துடைத்துக்கொண்டு ஏதோ நினைத்துக்கொண்டவளாய், தனது கந்தைச்சேலையில் அவசர தேவைக்காக பாதுகாப்பாக முடிந்துவைத்திருந்த ஒற்றை பழைய பத்துரூபாய்த்தாளை விடுவிடுவென அவிழ்த்து எடுத்து, அருகில் விழுந்துக்கிடந்த மாடனை உலுக்கி எழுப்பித் தூக்கிநிறுத்தி, அதை அவனிடம் நீட்டினாள். அவன் கண்களைத்துடைத்தாள்.

‘இந்தா புடி. அழுவாத. நாமென்ன ராசாகுடும்பமா சொல்லு? நாளைக்க சோத்துக்கஞ்சிக்கே வழிதெறியாம முழிபிதுங்குறோம்லா? போ… இதவச்சி பிடிச்சத வாங்கிக்க. பெரியகாசு. பத்தறம். கீழ எங்கனாச்சும் இட்டுத் தொலச்சிறாம’ மரிக்கொழுந்து திணிக்க, கையில் திணித்த காசைக் கலங்கித்தூங்கின கண்களின் வழியாகக்கண்ட மாடன், சிறிதுநேரங்கழித்து, சூழல் புரிந்து மெதுவாகப் பல்தெரியச் சிரித்தான்.

அவன் கண்களுக்குள் இப்போதுதான் உயிர்வந்து குடிகொண்டதை உரக்கச்சொல்லும் சிரிப்பாய் அது இருந்தது. அவன் உள்ளுக்குள் கண்ட அவனது ஒருவருடக்கனவு நினைவாகவிருக்கும் மகிழ்ச்சியை உரைக்கும் சிரிப்பாய் அது இருந்தது. மரிக்கொழுந்து அவனைப்பார்த்து சிரித்தாள்.

எழுந்து நின்றான் மாடன். முகத்தைப் புறங்கையால் துடைத்தவாறே நெகிழ்ந்திருந்த தன் கால்சட்டைப் பட்டையைத் தோள்மீதேற்றிக் கொண்டு வெளியே அவன் மீண்டும் ஓடினான். சந்துகளைக் கடந்து ஓடினான். ஐயனார்க் கோயிலைக் கடந்து ஓடினான். ஆட்களைக் கடந்து ஓடினான். அதிர்ச்சி, ஆனந்தம், சிரிப்பு எல்லாமும் கலந்து அவனது உடலுக்குள் புகுத்திய உற்சாகம் பீறிட நீண்டதூரம் ஓடினான். வேகவேகமாய் ஓடிய அவன்கால்கள், வேப்பமரத்துப் பட்டாசுக்கடையையுங்கூட வேகமாய்க் கடந்தன. அவை, பட்டாசுக் கடையினருகிலிருந்த கிழவியின் கடையெதிரில் சட்டென நின்றன.

கொண்டுபோயிருந்த ரூபாய்த்தாளை, அங்கே, அவன்கரங்கள் கடைக்காரக் கிழவியினடத்தில் ஆவலுடன் துரிதமாய் நீட்ட, நீட்டின காசைப்பெற்றுக்கொண்ட கிழவியும், அவனது தேவையை அறிந்தவளாய், அவனை எதிரிலிருந்த கல்லின்மீது அமரச்செய்து, அடுக்கிவைக்கப்பட்டிருந்த வட்டமான தட்டுக்களிலொன்றில் நான்கு இட்டிலிகளும் தொட்டுக்கொள்ளச் சட்டினியும் சாம்பாரும் வைத்து அவனிடம் நீட்டினாள். அதை நீட்டும்போதே அவசரமாய் அவளிடத்திலிருந்து அதை பிடுங்கிக்கொண்ட மாடன், வேகவேகமாக இட்டிலிகளை விண்டு விழுங்கத்துவங்க, சொம்பில் அவன் குடிப்பதற்குத் தண்ணீர் வைத்த கிழவியின் கண்களில் காரம்பட்டதோ என்னவோ, விழிகளில் வழியத்துவங்கிய அவள் கண்ணீரை அவள் துடைக்கத்துடைக்க, அது இன்னமும் பெருகி வழிந்துகொண்டேதான் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *