திரும்பிச் செல்லும் வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,609 
 

பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண முடியாதபடி இருள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தது. பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. கண்கள் இருட்டுக்குப் பழகியதும் ஆளுயரத்துக்கு மேலிருந்த திறந்த சாளரத்திலிருந்து புகை போல் மங்கிய வெளிச்சம் புலப்பட்டது. எங்கும் தெளிவான அமைதி நிலவியது. அவருடைய மகன் நகரத்தின் ஓரத்தில் குடியிருக்கும் வாடகை வீட்டில் தேவையற்ற பொருட்களைப் போட்டு வைத்திருக்கும், அவர் சில மாதங்களாகத் தங்கிக்கொண்டிருக்கும் மூலை அறைதான் அது என்பது நினைவுக்கு வந்தது. எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டுமென்கிற உணர்வும் ஏற்பட்டது. அதை மறப்பதற்காகப் படுக்கையில் புரண்டு படுத்தார். இன்று சற்று முன்னால் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை வேளையில் உண்டாகும் சேவல்களின் கூவல்களும் காக்கைகளின் சத்தமும் மீண்டும் ஒலிக்கிறதாவென உற்றுக் கேட்டார். அவை விடியல்களில் இனம் பிரிக்க முடியாத கலவையாகக் காதுகளுக்குள் எப்போதும்போல் சன்னமாக எழுந்துகொண்டிருந்தன. அந்தச் சத்தங்களெல்லாம் ஊரில் பல காலமாகக் காலை வேளைகளில் கேட்டுப் பழகியதால் உருவானவைதாம் என்று எண்ணினார். கூர்ந்து கேட்டதில் சேவல், காக்கை, குருவிகள் எழுப்பிய சத்தங்கள் உண்மையானதாகவே தோன்றின. அவை ஒரே குரலில் பூர்வீக வீட்டுக்குத் தொடர்ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த பெரும் சாலையில் ஒரு வாகனத்தின் சக்கரங்களின் கனத்த ஒலி ஓடிச் சென்று தேய்ந்தது. அதைத் தொடர்ந்து பல ஓசைகளும் ஒன்றோடொன்று கலந்து கேட்கத் தொடங்கின. ஆனால் நேரெதிரிலிருந்த அறை சலனமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. மருமகள் பத்மாவதி எழுந்து வெளியே வர இன்னும் நீண்ட நேரமாகும். அவளையும் மகனையும்கூட அந்தப் பழைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விடியற்காலையின் சத்தங்களைக் கேட்கவைக்க வேண்டும் என்று சுந்தரேசன் நினைத்துக்கொண்டார்.

உள்ளே வெளிச்சம் பரவி மூலையிலிருந்த பெரும் பானை, கை உடைந்த நாற்காலி, அரிசி மூட்டை, பழுதான எண்ணெய் அடுப்பு, ஓர் எலிப்பொறி எல்லாமும் துலக்கமாகத் தெரிய ஆரம்பித்தன. அந்தச் சாளரத்திலும் கண்ணைக் கூசவைக்கும் ஒளி மெதுவாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவர் படுக்கையில் சாய்ந்து உட்காரவும் சுவரில் சுண்ணாம்பு உதிர்ந்ததால் உருவான பல்வேறு வடிவங்கள் தெரிந்தன. பரந்த ஒரு மலைத் தொடரும் அதன் மேல் தவழும் சில மேகங்களும் ஓங்கிக் கிளைத்து நின்றிருக்கும் மரங்களும் பார்க்கும்போதெல்லாம் அந்தத் தோற்றங்கள் உருமாறிக்கொண்டிருக்கின்றன. திடீரென முந்தின நாள் அதில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுருவம் தெரிந்தது. சுந்தரேசன் இருகைகளையும் ஊன்றிக் கட்டிலின் மேல் எழுந்து அமர்ந்தார். அப்போது எதிர் அறையின் கதவு சரியாகச் சாத்தப்படாமல் அரைகுறையாகத் திறந்திருப்பது தெரிந்தது. சிறு இடைவெளியில் இன்னும் விலகாத இருட்டு நிறைந்திருந்தது. அவர் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு கதவை மட்டும் தள்ளித் திறந்து பூப்போட்ட இரவு உடையில் பத்மாவதி கூந்தலைக் கைகளால் கோதியபடி வெளிப்பட்டாள். உள்ளே ஓரமாயிருந்த கட்டிலின் மேல் மகன் மாணிக்கம் குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தான். அவனைச் சிறு வயதில் நிறையமுறை அடித்துத் திட்டியிருந்தாலும் அந்தப் பழக்கம் மாறியிருக்கவில்லை. பத்மாவதி வழக்கம்போல் நேராகக் கழிவறைக்குச் செல்லாமல் அவரை நோக்கிப் புன்னகைத்தாள். அவரும் பதிலுக்கு மகிழ்ச்சி பொங்கச் சிரித்தார். அவள் திரும்பி நடந்துவந்து அறைக்குள் நுழைந்தாள். நெருங்கி நின்று வெது வெதுப்பாயிருந்த புறங்கையால் அவர் கழுத்திலும் நெற்றியிலும் தொட்டுப் பார்த்து “நேத்து ரொம்ப சுரம் அடிக்குதுன்னிங்களே?” என்றாள். அவர் “இன்னிக்கி நல்லாயிருக்குது” என்றார். மறுபுறம் சுருண்டு கிடந்த அவருடைய அழுக்கான பனியன் வேட்டிகளைக் குனிந்து எடுத்தாள். அவளுடைய ஒரு மார்பு கோழிக்குஞ்சைப் போல் அவர்மேல் தவழ்ந்து சென்றது. அவர் அசையாது படுக்கையின் மேல் கிடந்தார். அவள் மீண்டும் நிமிர்ந்து வெளியில் நழுவியிருந்த தாலிக்கயிறை உள்ளே திணித்துக்கொண்டாள். பிறகு சுருட்டிய அழுக்குத் துணிகளோடு வெளியே சென்று மறைந்தாள்.

இன்று ஏதோ விசேஷமான நாள் என்பதால்தான் பத்மாவதி சற்று முன்னதாக எழுந்துகொண்டிருக்கிறாள். திருமணமாகி நாலைந்து வருடங்களாகியும் குழந்தை பிறக்காததால் அவள் புனித நாட்களில் வீட்டைக் கழுவிக் கடவுளைச் சிரத்தையாக வேண்டிக்கொள்கிறாள் போலும். பூர்வீகச் சொத்தான சிறிய நிலத்தை விற்ற பணத்தில் முதன் முதலாக வாங்கியிருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப்பார்த்தார். அதில் இரண்டு முட்களும் எதையெதைக் காட்டி நின்றன என்பதைக் கணிக்க முடியவில்லை. இருந்தாலும் இப்போது மணி ஆறுக்கு மேலாகியிருக்கும். அந்தக் கடிகாரத்தைத் தடவிக்கொண்டிருந்து விட்டுப் பக்கத்தில் வைத்தார். அறையின் மூலையில் அவருடைய மகன் மூலமாக வாங்கியிருந்த கைத்தடி சாய்ந்து நின்றுகொண்டிருந்தது. அதை எடுக்கையில் தலையின் வளைந்த பாகமும் நீண்ட உடலும் பாம்பைப் போன்ற உருவத்துடனும் வழுவழுப்புடனுமிருந்தது. கொஞ்ச நேரம் கையில் வைத்து உருட்டிப் பார்த்து மறுபடியும் அதே இடத்தில் வைத்துவிட்டுக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு எழுந்தார்.

அவர் வெளியே வந்தபோது மூலையில் சுருண்டு படுத்திருந்த மனைவி பொன்னம்மாவின் உருவம் தெரிந்தது. காலை விடிந்து நன்றாக வெயில் காய்ந்தாலும் அவள் ஏழு மணிக்கு முன்பாக எழமாட்டாள். அவளைச் சுற்றிக் காய்ந்த சிறுநீரின் நெடி வீசிக்கொண்டிருந்தது. அவருடைய வாய் வழக்கம்போல் ஒரு கெட்ட வார்த்தையை முனகியது. அவர் வேகமாகப் பின்புறத்துக்கு வந்தார். கழிவறையைத் திறந்து சிறுநீர் கழிக்கையில் எழுந்த ஓசை இனிமையாகக் கேட்டது. வாளியிலிருந்த நீரால் கால்களைக் கழுவுகையில் பத்மாவதி பலமுறை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து மீண்டும் நிறைய நீரை ஊற்றினார். கழிவறையை ஒட்டியிருந்த குளியலறையை நெருங்குகையில் அக்கதவின் மேல் தொங்கிய அவளுடைய ஆடைகள் தென்பட்டன. கரும் பச்சை நிறத்தில் புடவையும் இரவிக்கையும் மடித்துப் போடப்பட்டிருந்தன. அடியில் வளைவு வளைவான வெளுத்திருந்த சந்தன நிறப் பாவாடை மறைந்திருந்தது. நேற்று அவள் உடுத்தியிருந்தது வெளிர் நீலப் பாவாடை என்பதும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றை நினைவில் பதிய வைத்துக்கொள்வது சிறிது நாட்களாகச் சுவாரசியமான விளையாட்டாக மாறியிருந்தது. அங்கிருந்து அவர் பார்க்கையில் சமையலறைக்குள் முகத்தில் தழல் வெளிச்சம் வீசப் பத்மாவதி அடுப்பருகில் நின்றுகொண்டிருந்தாள். அவர் குளியலறையின் கதவைச் சிரமத்துடன் உட்புறமாகச் சாத்திக்கொண்டு அந்தத் துணிகளை நுனி விரலால் தொட்டார். அவை மனித சருமத்தைப் போல் மிருதுவாயும் வெம்மையோடுமிருந்தன. அவற்றை அணைத்துக்கொள்ள எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டு பல் தேய்த்து முகம் கழுவினார். வெளியில் வருகையில் அவரைப் பார்த்ததும் பொன்னம்மா எதையோ முணுமுணுத்தபடி, அது அவரைச் சபித்தல்தான், திரும்பிப் படுத்தாள். துல்லியமாக இல்லையென்றாலும் அவருடைய நடவடிக்கைகளை எப்படியோ அவள் அறிந்துகொள்கிறாள். அவளுடைய சிவந்து பருத்த உடலை ஒரு பழம் புடவை போர்வையாகப் பாதி மூடியிருந்தது. இடது கை எதையும் காண விரும்பாமல் முகத்தின் மேல் குறுக்காகப் படிந்திருந்தது. அவள் இங்கு வந்த பின்னால் சிறிது இளைத்துப்போயிருக்கிறாள் என்று எண்ணியபடி அறைக்குள் வந்தார். முன்பு அனுமானித்ததைப் போல் இன்று விசேஷ தினமாயிருந்தால் பத்மாவதி கண்டிப்பாகக் குளிக்கச் சொல்வாள். தலை மாட்டிலிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு கட்டிலின் மேல் அமர்ந்து கசங்கிய வார இதழொன்றைப் புரட்டினார்.

உடனே பத்மாவதி கையில் காபியை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தாள். “இன்னிக்கி அமாவாசை, குளிச்சிடுங்க” என்றபடி தம்ளரை நீட்டினாள். அவர் இருகைகளாலும் அதை வாங்கிக்கொள்கையில் அவளுடைய விரல்கள் உரசின. அவளுடைய உடலின் வெப்பம் நரம்புகளெங்கும் பாய்ந்து பரவியது. “இதோ குளிக்கறேன், கொஞ்சம் தலைக்குச் சீயக்காய் வேணும் . . .” என்றார். அவர் காபியைக் குடித்து முடிக்கும் வரை அவள் அறையிலுள்ள பொருட்களை வேடிக்கை பார்ப்பவளைப் போல் அருகில் நின்றிருந்தாள். அவளுடைய தலை முடிகள் ஒன்றிரண்டு கலைந்து தொங்கின. இரவு உடையின் தளர்ந்திருந்த மேல் பகுதியை அவர் கண்கள் நாடிச் செல்வதை அவள் கவனிக்காதவளைப் போலிருந்தாள். அவளை மேலிருந்து கீழாக நோக்கியபடி காபியைத் துளித்துளியாக உறிஞ்சினார். இருமாதங்களுக்கு முன்பு மயங்கி விழுந்து இங்கு வந்தபோது அவள் முதலில் அன்னிய மாகத் தெரிந்தாள். படுக்கையாகக் கிடக்கையில் ஆறுதலான சொல்லாலும் செயலாலும் அவள் மெல்ல நெருங்கி வந்தாள். அவருடைய காயத்தை அருவருப்பில்லாமல் களிம்பு தடவி ஆற்றினாள். அவள் எடுத்துத் தந்த மருந்துகளால் உண்டான மயக்கத்தினூடே ஒரு தேவதையைப் போலத் தோன்றினாள்.

சுந்தரேசன் துண்டையும் வேட்டியையும் தோளில் போட்டுக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றார். அதற்குள் அவள் ஆடைகளைத் திரும்பச் சேகரித்துச் சென்றிருந்தாள். அவள் உள்ளேயிருந்து ஒரு பாத்திரம் நிறைய ஆவி பறந்த வென்னீரை எடுத்து வந்து வாளியில் கொட்டினாள். உள்ளாடை எதையும் உடுத்தியிருக்காததால் தாழக் குனிந்தபோது அவளுடைய மார்பகங்கள் வெண்மையாகக் கண்களில் விழுந்தன. அவர் அவற்றைப் பார்த்தபடியே நின்றிருந்தார். அவள் ஒருமுறையும் ஏறிட்டுப் பார்க்காமல் தண்ணீரை விளாவி ஒரு சிகைக்காய்ப் பொட்டலத்தையும் பிரித்து வைத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஏதாவது கேட்டுப் பெற வேண்டுமென அவருக்குத் தோன்றியது. கல்யாணமான ஆரம்ப நாட்களில் அவரைப் பொம்மையைப் போல் அமரவைத்து மனைவி குளிப்பாட்டியிருக்கிறாள். நோய்வாய்ப்பட்ட பின் கடைசி மகளும் வந்திருக்கையில் ஒருமுறை குளிப்பாட்டினாள். அவர் நடமாட முடியாமலிருந்தபோது பத்மாவதி மருத்துவர் சொல்லியபடி வென்னீரில் நனைத்த துணியால் உடலைத் துடைத்திருக்கிறாள். அவர் தயங்கியவாறு “கொஞ்சம் முதுகு தேய்ச்சி விடு” என்றார். அவள் சிறிது வெட்கம் கசிய ஏதும் பேசாமல் தலையாட்டிச் சிரித்தாள். அவர் மனையில் அமர்ந்ததும் தலையிறங்க நீரூற்றிச் சோப்புக் கட்டியால் முதுகில் தேய்த்தாள். அவளுடைய வளையல்கள் ஏறியிறங்கித் தாளத்துடன் ஒலித்தன. சுற்றிலும் நுரைக் குமிழ்கள் பொங்கி வழிந்தோடின. அவருடைய உடல் தேய்ப்பதற்கேற்ப அசைந்து கொடுத்துக்கொண்டிருந்தது. ஓரிரு முறை அவளுடைய விரல்கள் விலாப்புறங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதைப் போல் விளையாடின. வெளியே மனைவி முனகிய சத்தம் கேட்டது. பிறகு பத்மாவதி காலிப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சமையலறை இருட்டுக்குள் சென்று மறைந்தாள். அவர் ஈர வேட்டியைக் களைந்து தண்ணீர் காலியாகும் வரை ஊற்றிக்கொண்டிருந்தார். மாற்று வேட்டியை உடுத்துகையில் வெம்மையாயிருந்த உடல் மெல்லக் குளிரத் தொடங்கியது.

அறைக்கு வந்து பனியனை அணிந்து வாசப்படியில் நாற்காலியை நகர்த்திப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். யாருமற்ற கூடத்தின் மறுமுனையிலிருந்த தொலைக்காட்சி பல வண்ணங்களோடும் சப்தங்களோடும் தனிமையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆண்களும் பெண்களும் வேகமாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும்கூடக் குளிக்காமலிருந்த பத்மாவதி காலையுணவை வைத்துவிட்டுச் சென்றாள். அவளைப் பார்க்கையில் இயல்பாகத் தெரிந்தாள். அவள் உதடுகளின் ஓரத்தில் குறுஞ்சிரிப்பு ஒளிந்திருந்தது போலவும் ஒரு கணம் தோன்றியது. அவர் தட்டில் கையைக் கழுவி விட்டுத் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். மாணிக்கம் வேகமாகக் குளித்துச் சாப்பிட்டு உடை மாற்றிக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டான். அவனைப் பார்த்ததும் நினைவு வந்து “மாணிக்கம், மருந்து காலியாயிருச்சி, வாங்கியாந்திடறியா?” என்றார். “ஏம்பா, காலியா வறதுக்கு முன்னால சொல்லக் கூடாதா? எவ்வளவு தரம் சொல்லியிருக்கேன்?” என்றான் அவன் புறப்படும் அவசரத்துடன். அவர் தொலைக் காட்சியை மீண்டும் மௌனமாகப் பார்த்தார். “சரி, மருந்துக்குப் பேங்குல பணம் எடுக்கனும், கையெழுத்துப் போட்டுத் தா” என்றான். அவர் எழுந்து சென்று தலையணையடியில் வைத்திருந்த பாஸ் புத்தகத்தையும் காசோலைகளையும் எடுத்துவந்து தந்தார். அவன் தொகையை நிரப்பாமல் வெற்றுக் காசோலையுடன் பேனாவை எடுத்து நீட்டினான். அதில் லாவகத்துடன் கையெழுத்திட்டபோது அவருக்குப் பெருமையாக இருந்தது. அவரால் இன்னும் கையெழுத்தைத் தெளிவாகவும் வேகமாகவும் போட முடிகிறது. அதை வாங்கி மடித்து வைத்துக்கொண்டு மாணிக்கம் உடனே வெளியே சென்றான். அவனுடைய வண்டி ஒருமுறை தயங்கி இரைந்து கிளம்பி மறையும் சத்தம் கேட்டது.

சுந்தரேசன் தூரத்திலிருந்த தொலைக்காட்சியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் வினோதமான பாடல் காட்சிகளும் விளம்பரங்களும் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. அப்போது, வீட்டின் பின்புறமிருந்து பொன்னம்மா துணிகளை எடுத்துக்கொண்டு அசைந்து நடந்துவந்து குளியலறைக்குள் நுழைந்தாள். மறுபடியும் பத்மாவதி வென்னீரை எடுத்துவந்து ஊற்றிவிட்டுச் சென்றாள். உள்ளிருந்து சலசலவென்று தண்ணீர் விழுந்த சத்தமும் குப்பென்று சந்தன சோப்பின் மணமும் எழுந்தன. இடையில் கை தவறிய சொம்பு உருண்டோடும் ஒலி கேட்டது. தொலைக்காட்சியில் பிம்பங்கள் விரைந்து மாறிக்கொண்டிருந்தன. சிறிது நேரம் கழிந்து பொன்னம்மா புடவையை மேலே இழுத்துச் சுற்றிக்கொண்டு வெளிப்பட்டாள். அவளுடைய சிவந்த முதுகில் நீர்த் துளிகள் வழிய நடுவில் திருஷ்டிப் பொட்டைப் போல் கருமச்சம் வட்டமாக மின்னியது. அவள் ஒருமுறை அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டாள். சுந்தரேசன் அவசரமாகக் கண்களை வேறுபுறம் நகர்த்தினார். திடீரெனப் பத்மாவதி புகுந்து அவரைப் பாராமலேயே தொலைக்காட்சிப் பெட்டியைச் சட்டென்று நிறுத்திவிட்டுச் சென்றாள். அவர் சற்று நேரம் அணைந்த திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பின் உள்ளேவந்து கட்டிலின் மேல் சோர்வுடன் சாய்ந்தார். அறை குறுகலாகக் கூண்டைப் போலிருந்தது. யாராவது உறவினர்களோ மகள்களோ பார்க்க வந்தால் விடுதலையைப் பெரும் பரிசாக அளித்ததுபோலிருக்கும். பாலிதீன் உறையில் சுற்றிவைத்திருந்த ஒரு ரொட்டித் துண்டை எடுத்துத்தின்றார். மூலையில் மடிந்துகிடந்த ஒரு பழைய செய்தித்தாளை எடுத்து விரித்தார். கண்ணாடி வழியாக வார்த்தைகளெல்லாம் அர்த்தங்களை இழந்து வெறுமையாகத் தோன்றின. தலைப்புகளில் கவனத்தை ஊன்றிப் படிக்க முயன்றார். அப்போது பொன்னம்மா மெதுவாக உள்ளே நடந்துவந்து பழைய பொருட்களில் எதையோ தேடிவிட்டு முகத்தில் நிராசை தெரியச் சென்றாள். அவள் ஒருமுறைகூட அவர் பக்கமாகத் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு தூரத்து உறவினரின் மனைவியோடு அவருக்கு இன்னும் தொடர்பிருப்பதாக அவள் நம்புகிறாள். பத்மாவதியினுடையதைப் போன்றே அந்த உறவுக்காரருடைய மனைவியின் மலர்ந்த முகம் துல்லியமாக அவருடைய ஞாபகத்துக்கு வந்தது. அவள் பாரிசவாயு தாக்கிப் படுத்த படுக்கையாயிருப்பதாகத் தெரிந்ததிலிருந்து அவரும் நோய் பீடித்ததைப் போல உணர்ந்துகொண்டிருந்தார். பிறகுதான் அவருக்கும் மயக்கம் வந்து விழுந்து கை அடிபட்டது. அவளை நினைவில் நிறுத்த முயன்றபடி உறக்கத்தில் மூழ்கத் தொடங்கினார்.

சுந்தரேசன் திடீரென்று விழிப்படைந்து கண்களைத் திறக்கையில் கையிலிருந்த தாள்கள் நழுவி நெஞ்சின் மேல் விழுந்திருந்தன. அவர் எதிர்பார்த்தபடியே பத்மாவதி அறைக்குள் கீழே உட்கார்ந்து நீரில் நனைத்த துணியால் தரையை மெழுகிக்கொண்டிருந்தாள். அவளின் பின்புறம் அதற்கேற்பச் சீராக அசைந்துகொண்டிருந்தது. அவளுக்கு இன்னமும் குளித்து உடை மாற்றிக்கொள்ள நேரம் கிடைத்திருக்கவில்லை. பழைய இரவு உடை கசங்கி அங்கங்கே ஈரமடைந்திருந்தது. அவர் அவளைப் பார்த்துக்கொண்டிருக் கையில் நகர்ந்து முன்புறம் வந்தாள். அவள் முகம் களைப்புடனிருந்தாலும் பண்டிகை தினத்தின் சோபையுடன் விளங்கியது. அவள் துடைக்கும் தரை தண்ணீர் பட்டு கண்ணாடியைப் போல் பளபளத்தது. அதில் அவளுடைய உருவம் தலை கீழாகச் சித்திரம்போல் பிரதிபலித்தது. அவள் ஒருதரம் அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் கண்களைத் தாழ்த்திக்கொண்டு பழையபடி கைகளை வீசித் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு மர்மமான சிரிப்பு குடியிருந்தது போல் மீண்டும் தோன்றியது. எழுந்து வெளியில் செல்லலாமென ஒரு கணம் நினைத்தார். ஆனால் தரையைச் சுற்றிலும் ஈரம் படிந்திருந்தது. அவரும் அவளும் மட்டுமேயான முழுதான தனிமை உடைபட்டுவிடக் கூடாது என்றும் எண்ணினார். அவள் துடைத்தபடியே நகர்ந்து கட்டிலருகில் வந்து விட்டாள். கால்களைத் தூக்கிக் கட்டிலின் மேல் மடக்கி வைத்துக்கொண்டார். பத்மாவதி கையெட்டும் தூரத்தில் நெருங்கியிருந்தாள். அவளுடைய முழங்கால் அழுத்தியதால் மார்பகங்களுக்கு இடையில் உருவான சிறு பிளவு ஆழமாகத் தெரிந்தது. இடது புறங்கை ஒருமுறை உயர்ந்து தொங்கிய தலைமயிரை ஒதுக்கிவிட்டது. உடைக்குள் ஒரு பக்க மார்பு இலேசாக அசைந்தது. அவளுடைய ஆடை இறங்கி மறைந்திருந்த மார்புப் பகுதி மீண்டும் வெண்மையாகப் புலப்பட்டது. சுந்தரேசன் உட்கார்ந்தபடி பித்தச் சிரிப்புடன் “வெளியில தெரியுது பாரு . . .” என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டினார். பத்மாவதி முதலில் வெட்கப் புன்னகை கலந்த ஆச்சரியத்துடன் குனிந்து பார்த்து ஈர விரல்களால் ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள். பிறகு அவரை உற்றுப் பார்த்தபடி எழுந்து நின்றாள். அவரும் கட்டிலிலிருந்து எழுந்து குழறியபடி “பத்மா . . . பத்மா . . .” என்றார். அவர் கண்ணெதிரே அவள் அளக்க முடியாதவளைப் போல் வளர்ந்து நின்றாள். உயிர் ததும்பி நின்ற அவளை அணைத்துக்கொள்ள இருகைகளையும் நீட்டி வேகமுடன் நகர்ந்தார். அவளும் அதை ஏற்று ஆதரவாய் நெஞ்சோடு தழுவிக்கொள்ளக் கூடும். ஆனால் கையிலிருந்த துணிச் சுருள் பயத்தால் நழுவிக் கீழே விழுந்தது. அவள் நினைவு பெற்றவளைப் போல் “அய்யோ” என்று அலறியபடி அறையிலிருந்து ஓடிச் சென்றாள். அவளுடைய கால் இடறி பிளாஸ்டிக் வாளி உருண்டு எஞ்சிய அழுக்கு நீர் வழிந்தது. அவர் அப்படியே செய்வதறியாது கைகளை விரித்தபடி திகைத்து நின்றார். துடைக்கப்பட்ட தரையில் நீர் பரவி ஓடிக்கொண்டிருந்தது. வெளியில் பொன்னம்மா “ஏன் கத்துனா தெரியலையே, கெழவன் என்ன செஞ்சானோ?” என்று புலம்புவது அவர் காதில் தெளிவாக விழுந்தது. பத்மாவிடமிருந்து எவ்விதப் பதிலும் எழவில்லை.

சுந்தரேசன் மீண்டும் கட்டிலின் மேல் சரிந்து எதிர்ச் சுவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். அதில் அடையாளமற்ற பல மனித உருவங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அவை உயிர் பெற்று அசைந்து அவரை நோக்கி வருவனபோல் தோன்றின. சுற்றிலுமிருந்த தட்டுமுட்டுச் சாமான்களில் குடிகொண்டிருந்த வெறுமை அகன்று பயங்கரமாக உறுத்துப்பார்த்தன. ஓரத்தில் அவள் தள்ளிவிட்டிருந்த வாளியும் துணிச் சுருளும் அனாதையாகக் கிடந்தன. அவருக்கு வேர்வை ஊற்று பெருகி உடல் குளிரத் தொடங்கியது. மதிய உணவுக்கு மாணிக்கம் வருகின்ற நேரம் துளித் துளியாக நெருங்கிக்கொண்டிருந்தது. அவன்மேல் அவருக்குக் கடும் துவேஷம் எழுந்தது. அவனுடைய ஆரோக்கியத்தின் மீதும் இளமையின் மேலும் வெறுப்பு பெருகியது. இந்த நிலைமைக்கெல்லாம் காரணம் அவன்தான். அவரை அறைக்குள் அடைத்து சுதந்திரமாக நடமாடவிடாமல் செய்கிறான். அவனை எவ்விதத்திலாவது பழிவாங்க வேண்டும் என்ற தீராத விருப்பம் தோன்றியது. அவர் தீர்மானத்துடன் எழுந்து ஆணியில் மாட்டியிருந்த கசங்கியிருந்த சட்டையை எடுத்து அணிந்துகொண்டார். அதன் பையைத் துழாவியதில் சில ரூபாய்த் தாள்களும் சில்லறைகளும் தட்டுப்பட்டன. அலமாரியில் மடித்துவைத்திருந்த சட்டை வேட்டிகளை எடுத்துப் பைக்குள் திணித்தார். பல்வேறு மருந்து மாத்திரை அட்டைகளை எடுத்துப் பக்கவாட்டில் சொருகினார். சீப்பு, பல் துலக்கும் பிரஷ், சால்வை, துண்டு எல்லாவற்றையும் பையில் அடைத்தார். அது பிதுங்கித் துணி மூட்டைபோல் கனமாயிருந்தது. கவனமாகக் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டார். கைத்தடியைப் பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தார். மீதியிருந்த ரொட்டித் துணுக்குகளை மென்றார். தலையணைக்கடியில் தேடியபோது வங்கிக் கணக்குப் புத்தகத்தை மாணிக்கத்திடம் தந்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவன் பணம் அனைத்தையும் எடுத்துக் காலிசெய்துவிடுவானோ என்ற அச்சமும் எழுந்தோடியது. அவர் உற்றுக் கேட்கையில் வீட்டினுள் எந்தச் சத்தமும் இல்லை. ஓரிரு தட்டுமுட்டுச் சாமான்கள் முட்டும் உலோக ஒலிகளைத் தவிர இறுக்கமான மௌனம் உறைந்திருந்தது. வெளியே சாலையில் ஓசைகள் பொங்கி வழிந்துகொண்டிருந்தன. அவர் வேகமாகக் கூடத்தைக் கடந்து கழிவறைக்குச் சென்று வந்தார். பொன்னம்மா விழித்தபடி கால்களை நீட்டி பாதுகாவலாக மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவரைக் கண்டதும் பக்கவாட்டில் திரும்பி அடித் தொண்டையில் “தூ” வென்றாள். சமையலறை இருட்டுக்குள் எதுவும் புலப்படவில்லை. அவர் மறுபடியும் கட்டிலின் மேல் உட்கார்ந்து காத்திருந்தார். வீடு முழுதும் இறுக்கமான அமைதி நிறைந்திருந்தது.

நடுப்பகல் நேரத்தில் மாணிக்கத்தின் வாகனம் வந்து நின்ற ஓசை கேட்டது. அவன் அறைக்குள் நுழைந்து பத்மாவதியிடம் பேசுவதற்கு முன்பாக அவனைச் சந்தித்துவிட எழுந்து நின்றார். அவர் வெளிப்படுவதற்குச் சிறிது முன்பே அவன் அறைக்குள் சென்றுவிட்டான். உடனடியாக அவனைப் பின் தொடர்ந்து எங்கிருந்தோ வந்த பத்மாவதியும் புகுந்தாள். அறையின் கதவுகள் இழுத்துச் சாத்திக்கொண்டன. உள்ளேயிருந்து விசும்பல்களும் அடிக் குரல்களும் கேட்டன. இன்னும் சற்று நேரத்தில் பூகம்பம் வெடிக்கலாம். அவர் எதற்கும் தயாராக அவர்கள் இருவருக்குமிடையே உருவாகும் நெருக்கத்தை உடைப்பதுபோல் நெருங்கிச் சென்று அந்தக் கதவுகளைத் தள்ளித் திறந்தார். மாணிக்கமும் பத்மாவதியும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு நின்றிருந்தனர். அவரைக் கண்டு பிரிந்து விலகினர். அவளுடைய கண்கள் கலங்கி ஈரமாக இருந்தன. அதைக் காணாததுபோல் அவர் மாணிக்கத்திடம் “ஏன் ப்ளாங்க் செக்குல நீ கையெழுத்து வாங்கிட்டுப் போன? என் பாஸ் புக்கைத் தா…” என்றார். அவன் எதுவும் பேசாமல் உதடுகள் துடிக்க அவரை நோக்கிக் கையை முகத்திற்கு நேராக நீட்டினான். பிறகு அறைக் கதவை வேகமாக அறைந்து மூடினான். அவர் திடுக்கிட்டுச் சற்று நேரம் சாத்திய கதவுகளுக்கு முன்னால் தயங்கி நின்றார். பின் தடுமாறியபடி அறைக்கு மீண்டு கட்டிலில் அமர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து மாணிக்கம் வேகமாக உள்ளே வந்து மருந்துப் பொட்டலத்தையும் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் அவரருகில் வைத்துவிட்டுப் பேசாமல் திரும்பிச் சென்றான். அவர் அதைப் புரட்டிப் பார்க்காமல் மருந்துகளுடன் பைக்குள் வைத்தார். பின் எழுந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கூடத்துக்கு வந்தார். வாசப்படியில் நின்று “நான் ஊருக்கே போறேன்” என்று பொதுப்படையாகச் சொன்னார். மாணிக்கமும் பத்மாவதியும் வெளியில் வந்து பின்னாலிருந்து அவரைப் பார்ப்பது தெரிந்தது. பொன்னம்மா படுக்கையில் எழுந்து அமர்ந்து கால்களை நீட்டியபடி பார்த்தாள்.

சுந்தரேசன் மெதுவாகப் படிகளில் இறங்கித் தெருவில் நடந்தார். குளிர்ந்த காற்றும் கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும் அவரைச் சூழ்ந்தன. வீடுகளின் வெளியே படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த சில பெண்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவரை உற்றுக் கவனித்தார்கள். நாற்புறமும் திறந்த வெளி பாதுகாப்பற்ற பெரும் பயத்தை ஊட்டியது. அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு மெல்ல நடந்துவந்து ஓரமாயிருந்த கல்லின் மீது அமர்ந்தார். அங்கு ஏற்கெனவே பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். மகன் மாணிக்கம் மீண்டும் வந்து கூப்பிடுவான் என்று வீட்டின் பக்கமாகச் சிலமுறை திரும்பிப் பார்த்தார். அவனுடைய உருவம் எங்கும் தென்படவில்லை. அப்படி அவன் வந்தாலும் எல்லோர் எதிரிலும் கடுமையாகத் திட்டி அனுப்ப வேண்டுமென நினைத்தார். அவனைத் தவிர சாலையில் யார் யாரோ போய் வந்துகொண்டிருந்தார்கள். கைத்தடியை அறையிலேயே மறந்துவிட்டு வந்திருந்தது அவரது ஞாபகத்தில் நிழலாடியது. அது உயிருள்ள ஆளைப் போல் தனிமைக்கு உற்ற துணையாயிருக்கும். அதைத் திரும்பவும் போய் எடுத்து வரலாமா என்று யோசித்தார். அதற்குள் ஒரு நகரப் பேருந்து கூட்டம் நிரம்பி வழிய ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி வந்து நின்றது. எல்லோரும் அதை நோக்கிச் செல்லவும் அவரும் நகர்ந்தார். படியில் நின்றிருந்த ஒருவன் அவரைக் கைகொடுத்துத் தூக்கி உள்ளே ஏற்றிவிட்டான். அவருக்கு யாரோ எழுந்து உட்காரச் சொல்லி இடம் தந்தார்கள். சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தின் உள்ளே புகுந்து பேருந்து நின்றது. அதிலிருந்து மெதுவாக இறங்கித் தோளில் நழுவிய பையை இழுத்து விட்டபடி நின்றார். பேருந்து நிலையம் பரபரப்பாகவும் இரைச்சலாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. ஆட்களை அடைத்துக்கொண்டு தொடர்ந்து கிளம்பிக்கொண்டிருந்த பேருந்துகள் பதற்றத்தை அளித்தன. சுற்றிலும் மனிதர்களும் மிக அவசரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்குமிடையில் புகுந்து ஆட்டோக்கள் வலம் வந்துகொண்டிருந்தன. அவரைப் போலவே பலர் தனியாக நின்றிருந்தார்கள். அவருக்குத் திகைப்பாக இருந்தது. எந்தப் பேருந்தில் ஏறி வீட்டுக்குச் செல்வது என்று புரியவில்லை. அவர் ஊரின் வழியாக ஓரிருமுறை மட்டும் போகும் பேருந்து எந்த நேரங்களில் வரும் என்பதும் நினைவிலிருந்து அழிந்திருந்தது. எங்கு நின்று ஏறிச் செல்வது என்பதும் மறந்துபோயிருந்தது. யாரைக் கேட்டால் சரியான வழி சொல்வார்கள் என்ற குழப்பம் பெருகியது. தெரிந்த முகம் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று கண்ணாடிச் சில்லுகளின் வழியே துழாவிப் பார்த்தார். அக்கூட்டத்தில் ஒருவரையும் அடையாளம் காண இயலவில்லை. நெரிசலில் இடிபட்டுப் பழையபடி கீழே மயங்கிச் சரிவோமோ என்ற பீதி மேலோங்கியது. அவர் பேருந்து நிலையத்தின் நடுவில் சுற்றும்முற்றும் பார்த்தபடி நின்றிருந்தார். அவரைச் சுற்றிலும் பேருந்துகள் ஓய்வின்றிக் குறுக்கும் நெடுக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *