திருப்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 4,120 
 

மாதவி படுக்கும் போது வைத்த அலாரம்,காலையில் அடித்தது,அவளுக்கு எரிச்சலாக இருந்தது எழும்புவதற்கு,திரும்பி படுத்தாள்,சீலன் மாதவியை எழுப்பினான்,எனக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு லேட்டாகி போகமுடியாது,நீ இப்ப எந்திரித்தால் தான் சரியாக இருக்கும் என்றான் சீலன்.ஆமா!பெரிய கலெக்டர் வேலைக்குப் போறீங்கள்,கடை வேலைக்கு தானே போறீங்கள்,இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எரிந்து விழுந்தாள் மாதவி,உன்னுடன் நான் விடியற்காலை சண்டைக்கு வரவில்லை,நிகில் பாடசாலைக்கு ஒவ்வொரு நாளும் லேட் ஆகிப் வருவதாகப் அவனுடைய மிஸ் என்னிடம் கம்லைன் பன்னுறாங்கள் என்றதும்,நீங்கள் ஏன் அவங்களைப் பார்க்கப் போனீங்கள்,கேட்கிட்ட விட்டிட்டு போகவேண்டியது தானே! என்றாள் அவள்,இவனுடைய கிலாஸ் மிஸ் தான் கேட்டில் நிற்பார்கள்,பிள்ளைகளை உள்ளே அழைத்துப் போவதற்கு என்றான்,பார்க்க அழகாக இருப்பார்களோ,காலையில் ஓடுறீங்களே அவசரமாக,அது தான் கேட்டேன் என்றாள் மாதவி,உன்னை திருத்த முடியாது,என்று கூறிக்கொண்டே அவன் கட்டிலை விட்டு எழுந்துக்கொண்டான்.

தலை முடியை கையில் சுருட்டி தூக்கி ஒரு கொண்டையைப் போட்டுக்கொண்டாள் மாதவி,சோம்பல் முறித்து கட்டிலை விட்டு எழும்பினாள் மெதுவாக,சமையல் அறைக்குப் போனவள்,பால் காய்ச்ச பாத்திரத்தை தேடினாள் காணவில்லை,சிங்கை எட்டிப் பார்த்தாள்,அதற்குள் சில பாத்திரங்களுடன் அதுவும் கிடந்தது,எடுத்து அவசரமாக கழுவி பாலை காய்ச்சி காப்பி போட்டாள்,பல் தேய்க்காமல் காப்பி குடிக்கும் பழக்கத்தை விடு,என்று பல தடவைகள் சீலன் கூறிவிட்டான்,நான் தானே குடிக்கிறேன்,உங்கள் வாய் இல்லையே என்பாள்,தற்போது அவன் எதுவும் கண்டு கொள்வது இல்லை.

அவன் பாட்டி பரமேஷ்வரியை அவனுக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்,அவனுடைய அம்மா வசந்தாவை,காலையில் குளிக்காமல் சமையலறைப் பக்கமே வரவிடமாட்டார்கள்,குடும்ப பெண்கள் காலையில் தலைக்கு தண்ணி ஊத்திக்கனும் என்று நாசுக்காக கூறுவார்கள்,அம்மாவும் அதை புரிந்துக்கொண்டு குளித்து,புடவை மாத்தியப் பிறகே காப்பி போட்டு தருவார்கள்,சீலனுக்கும் அதே பழக்கம்,காலையில் குளித்து சாமிக்கு விளக்கேற்றியப் பிறகே காப்பி குடிப்பான்.மாதவிக்கு காப்பி போடும் போதே சீலனுக்கும்,நிகிலுக்கும் போட்டு வைத்துவிடுவாள்,அது ஆறிப் போய் இருக்கும்,எதுவும் கேட்டால் நீங்கள் போட்டு குடிங்கள் என்பாள்.

அவள் பிரிட்ஜை திறந்து தோசை மாவையும்,முதல் நாள் செய்த சாம்பாரையும் வெளியில் எடுத்தாள்,மாவு புளிப்பு மனமாக இருந்தது அதில் சிறிது தண்ணியை ஊற்றி கலக்கினாள்,ஆளுக்கு இரண்டு தோசையை வார்த்தாள்,முதல் நாள் செய்த சாம்பாரை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடு வரும் முன்பே அடுப்பை அணைத்து விட்டாள்,நிகில் அம்மாவை அழைத்தான்,என்னுடைய ஸ்கூல் யூனிபார்ம் எங்கே? என்று கேட்டான்,நேற்று ஊறவைத்தேன்,துவைக்க மறந்து விட்டேன்,இரு மற்ற யூனிபார்மை தேடி எடுத்து தருகிறேன் என்று,துணி அலுமாரியை திறந்தாள் மாதவி,அப்போதே பாதி துணிகள் கீழே விழுந்தன,யூனிபார்மை தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு மறுப்படியும் கீழே விழுந்துகிடந்த துணிகளைஅள்ளி அலுமாரியின் உள்ளே திணித்து கதவை சாத்தினாள் அவள்

சுருண்டிருந்த யூனிபார்மை சீலன் உதறி அயன் செய்தப் போதும் சுருக்கங்கள் இருந்தது,மறுப்படியும் தண்ணி சிறிது தெளித்துப் அழுத்தி அயன் பன்னி கொடுத்தான்,இதற்குப் பயந்து கொண்டே சீலன்,அவனுடைய துணிகளை மட்டும் துவைத்து,உதறி காயவைத்து,அழகாக மடித்து,ஒரு சிறிய அலுமாரியில் அடுக்கிவைத்துக் கொள்வான் தற்செல்லாக ஏதாவது ஒரு துணியை காணவில்லை என்றால் இலகுவில் தேடி எடுக்க முடியாது இந்த வீட்டில் என்பது அவனுக்கு தெரியும்,சீலன் அவனுடைய துணிகளை அநேகமாக அயன் செய்யமாட்டான்,அதற்கும் மாதவி ஏதாவது கூறுவாள்,ஆபிஸா போறீங்கள்? கடையில் வேலை செய்வதற்கு ஏன் அயன் செய்து ஸ்டைல் பன்னிப் போக என்பாள்.

சீலனும் நிகிலும் செய்து வைத்திருந்த புளித்த தோசையை சாப்பிட்டு,ஆறிய காப்பியை மடக்கென்று குடித்துவிட்டு,புத்தகப்பையுடன் அப்பாவின் சைக்கிளில் ஆசையோடு ஏறிக்கொண்டான் நிகில்,அவனை அவனுடைய ஸ்கூல் கேட் அருகே,இறக்கிவிட்டு அவன் கையில் சிறிது பணத்தை கொடுத்து,பகல் சாப்பாட்டை ஸ்கூல் கேண்டினில் சாப்பிடு என்று கூறிவிட்டு,அவன் கேட் உள்ளே போகும் மட்டும் பார்த்துக்கொண்டு நின்றான் சீலன்,நிகில் கையை அசைத்து காட்டி விட்டு சென்றுவிட்டான்.நிகில் எப்போதும் பகல் உணவை ஸ்கூல் கேண்டினில் தான் சாப்பிடுவான்.

சீலன் வேகமாக சைக்கிளை மிதித்து கடைக்குச் சென்றுவிட்டான்.அவனும்,அவனுடைய நண்பன் தியாகுவும் சேர்ந்து செய்யும் அந்த பலசரக்கு கடையில் ஓரளவிற்கு வருமானம் இருந்தது.வேலைக்கு வேறு ஆட்கள் எடுக்காமல் அவர்களே பார்த்துக்கொண்டார்கள். தியாகு பகல் சாப்பாட்டை கட்டி கொண்டு வந்துவிடுவான்,சீலன் பகல் வீட்டுக்குப் போய் தான் சாப்பிட்டு வருவான்.அதுவே அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்கும்,கடையில் கூட்டம் அதிகம் என்றால் வீட்டுக்குப் போறேன்,என்று கேட்க முடியாது,மாதவியிடம் சொன்னால்,வெளியில் சாப்பிடுங்கள்,எனக்கு காலையில் எழுந்து சமைத்து கட்டி தரமுடியாது என்பாள்,அவனுக்கு வெளியில் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது,தியாகு நண்பன் என்றாலும்,தயங்கி அவனிடம் கூறிவிட்டு அவசரமாக வீட்டுக்குப் வந்தால்,அப்போது தான் குழம்பு கொதிக்குது,சாதம் வேகுது என்பாள் மாதவி.நீங்கள் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு டைத்துக்கு வந்தால் எனக்கு தெரியுமா? சில நாட்களில் வருவதே கிடையாது,இப்படி ஏதாவது காரணம் சொல்வாள் அவள்.

காலையிலிருந்து எதுவும் செய்திருக்க மாட்டாள் படுக்கையில் அப்படியே பெட்ஷீட் மடிக்காமல் கிடக்கும்,நிகில் படித்த மேசை குப்பையாக இருக்கும்,வீட்டை பெருக்கி,சமையல் பாத்திரங்களை கழுவி ஒழுங்காக அடுக்கி வைக்கும் பழக்கமே அவளிடம் இல்லை எப்போதும் சிங்கில் பாத்திரங்கள் நிறைந்து கிடக்கும்,அதை பார்க்கும் போது சீலனுக்கு அருவருப்பாக இருக்கும் ஏன் இப்படி பாத்திரங்களை போட்டு வைத்திருக்க என்றால் உடனே பதில் வரும்,எனக்கு தலைவலி,வேலை செய்து கொடுக்க யாரும் இல்லை,அந்த வசதியும் எங்களிடம் இல்லை அதனால் இப்படி தான் இருக்கும் என்பாள்,சில டப்பாக்கள் திறந்தப் படியே இருக்கும்,சமைக்கப் போனாள் என்றால்,அவ்வளவு நேரம் ஆகும் இத்தனைக்கும் சாதம்,ரசம்,சாம்பார் என்று செய்திருப்பாள்,அதற்கே சமையல் அறை தலைகீழாக மாறிவிடும்,காரணம் அவள் வைத்தப் பொருட்களை அவளுக்கே கண்டுப்பிடிக்க முடியாது,எடுத்தப் பொருட்களை எடுத்த இடத்தில் வைத்தால்,மறுப்படி சமைக்கும் போது தேடுவதற்கு அவசியம் இருக்காது,கடுகு,சீரகம் என்று தேடி எடுத்து சமைப்பதற்குள் நேரமும் வீணாகி,களைத்தும் போய்விடுவாள் மாதவி அஞ்சறைப்பெட்டியில் எதுவும் இருக்காது,வாங்கியப் பொருட்களை கொட்டிவைப்போம் என்ற நினைப்பும் வராது அவளுக்கு,அப்படியே சிறு முடிச்சிகள் போட்டு பையோடு வைத்திருக்கும் பொருட்கள் வீணாகி தூக்கி எரிவதும் உண்டு சிலசமயம்.

பருப்பு அவியவிடும் போது பொங்கி ஊத்தும்,அதை உடனே துடைக்க மாட்டாள்,பிறகு துடைப்போம் என்று நினைப்பதோடு சரி,காய்கறி தோல்,வெங்காயத் தோல் என்று பரவலாக கிடக்கும்,வேலையை முடித்து,கடமைக்கு கூட்டி குப்பையை ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு,வேலை அதிகம் என்று அலுத்துக் கொள்வாள் மாதவி.துணிகள் ஊறியப்படி இருக்கும்,அதை துவைக்கும் மாதவி உடனே காயவைக்க மாட்டாள்,நினைவு வரும்போது காயப் போடுவாள்.காய்ந்த துணிகளையும் உடனே மடிக்காமல் கட்டிலில் போட்டு வைத்திருப்பாள்,சீலன் படுக்கப்போகும் போது துணிகளை அள்ளி அலுமாரியில் திணித்து விடுவாள்.சில சமயம் அத்தியாவசியமான பொருட்கள் கூட வீட்டில் இருக்காது,கேட்டால் மறந்துட்டேன் என்பாள்.

செவ்வாய்,வெள்ளி குளித்து விளக்கேற்ற மாட்டாள்,என்றாவது ஒரு நாள் கோயில் போய் வருவாள்,அவளின் அப்பா,அம்மாவிடம் போன் பன்னிக்கூட நலம் விசாரிக்க மாட்டாள், இவள் குணம் நன்கு அறிந்த அவர்கள்,சீலனுக்கு போன் பன்னி நலம் விசாரித்துக் கொள்வார்கள்.தம்பி!அவளைப் நன்றாகப் பார்த்துக்குவீங்கள்,என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் சந்தோஷமாக இருக்கோம்,என்று அவர்கள் கெஞ்சும் தோணியில் கதைக்கும் போது,சீலனுக்கு பாவமாக இருக்கும்,அவனுக்கு அவனுடைய பெற்றோர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.அந்த ஒரு காரணத்திற்காக தான் அவனும் அமைதியாக இருக்கான்.

டீவியில் ஒரு சீரியல் விடாமல் பார்ப்பாள்,அவளுக்கு குறையே சீலன் ஆபிஸ் வேலைக்குப் போகவில்லை,ஆடம்பரமாக வாழமுடியவில்லை என்பது தான்.இதே வீட்டில் தான் சீலனின் அம்மா வசந்தாவும்,குடும்பம் நடத்தினார்கள்,அப்போது இதை விட வருமானம் குறைவு,சீனுவின் அப்பா வேனுகோபால் கடையில் வேலை செய்தார்,அவரின் அம்மா பரமேஷ்வரியும் இவர்களுடன் தான் இருந்தார்கள்,விடிய காலை வாசலுக்கு தண்ணி தெளித்து கோலம் போடும் அம்மா,பம்பரமாய் வேலை செய்வார்கள்,ஒரு நாளும் சீலன் பாடசாலைக்கு தாமதமாகப் போனது இல்லை,வேனுகோபால் பகல் சாப்பாட்டை கையோடு எடுக்காமல் போனதும் இல்லை,அம்மாவின் ஓய்வு நேரங்களில்,வீட்டில் இருந்தப்படி தையல் வேலை செய்வார்கள்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார்கள்,உள்ளதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியவர்கள் அவர்கள்,ஒரு நாளும் எந்த வேலையையும் தரக்குறைவாக நினைத்தது இல்லை,பொய்,களவு இல்லாமல் நேர்மையாக வாழ கற்றுத்தந்தவர்கள் அவர்கள்.அப்படி பார்த்து வளர்ந்தவன் சீலன்.

மாதவி படித்து முடித்தப் பிறகு,வேலைக்குப் போனவள்,அவளின் சோம்பேறி தனத்தால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போய்விட்டது.கொஞ்சம் பிடிவாதக் காரியும்,பெற்றோர்கள் நிறைய மாப்பிள்ளை பார்த்திருக்கார்கள்,எதிலும் திருப்தி இல்லை என்பதால் ஏதாவது குறை கூறி வேண்டாம் என்று மறுத்திருக்காள் இவள்,கடைசியில் எந்த மாப்பிள்ளையும் அமையாமல்,அவளுக்கு வயதும் போய்கொண்டிருக்க,அவளின் பெற்றோர்கள் பயந்துவிட்டார்கள்,இனி இவளுக்கு திருமணமே நடக்காது என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த சமயம்,சீலனைப் பற்றி ஒரு கல்யாண தரகர் அவர்களிடம் கூறியிருக்கார்,வசதி குறைந்த குடும்பம்.பாட்டி,அப்பா,அம்மா என்று அடித்தடுத்து போய் சேர்ந்து விட்டார்கள்,தற்போது தனியாக தான் இருக்கிறான்,கொஞ்சம் வயதாகிறது என்று தரகர் உண்மையை கூற,பரவாயில்லை இவளுக்கு திருமணம் முடிந்தால்,போதும் என்ற நிலையில்,மாதவிக்கு விருப்பம் இல்லாதப் போதும்,அவளின் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக கழுத்தை நீட்டியவள் மாதவி்.அன்று முதல் இன்று வரை எதிலும் அவள் திருப்தி அடைந்தது இல்லை,எதிலும் குறை கண்டுப்பிடிப்பதும்,சீலனை எடுத்தெறிந்து பேசுவதும்,அவள் வழமையாகிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *