திருட்டுப்போன பொண்ணு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,639 
 

“திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான்.

“பொண்ணு ஊட்டயா கேக்குறீங்க?”

“இல்லீங்க. திருட்டுப்போன பொண்ணுன்னு ஒருத்தங்க இருக்கங்களாமே அவுங்க வீட்டெ கேட்டன்.”

“அது பேரூதான் பொண்ணு.”

“நீங்க ஆள மாத்தி சொல்றீங்கின்னு நெனக்கிறன்.”

லேசாக சிரித்துக்கொண்டே அந்தப் பெண் சொன்னாள். “நீங்க சொல்ற ஆளும் நான் சொல்ற ஆளும் – ஒரே ஆளுதான். அது பேரூ பொண்ணுதான். ஊருல அதெ

திருட்டுப்போன பொண்ணுன்னும் சொல்வாங்க.” மீண்டும் அந்தப் பெண் சிரித்தாள்.

“வீடு எங்க இருக்கு?” டேவிட் கேட்டான்.

“தெரு கடசியில ஒரு பழய காலத்து ஓட்டு ஊடு தெரியுதில்லெ.அதுக்குப்பக்கத்திலெ ஒரு கூர ஊடு இருக்கு பாருங்க. அதான்.” அந்தப் பெண் கிழக்குப்பக்கமாக கையைக் காட்டினாள்.

“சரிங்க” என்று சொல்லிவிட்டு டேவிட்டும் சேதுபதியும் திரும்பும் போது அந்தப் பெண் “வௌக்கார ஆளுயெல்லாம் வந்து இருக்கே என்னா விசியம்? ” என்று கேட்டாள்.

“சும்மா ஊர பாக்கத்தான்.”

“இந்த மொட்டயான மலக்காட்டுலயும், கட்டாந்தரயிலயும் என்னா இருக்குன்னு பாக்க வந்து இருக்காரு நாடுவுட்டு நாடு?” என்று கிண்டலாக கேட்டாள்.

“சும்மாதான்.”

“போட்டோ கீட்டோ எடுக்கப்போறாங்களா?”

“அதெல்லாமில்லெ. அவுங்க இப்ப வீட்டுல இருப்பாங்களா?”

“ஊட்டுலதான் இருக்கு. இப்பத்தான் தண்ணீ எடுத்துக்கிட்டுப்போச்சி.”

என்று சொல்லிவிட்டு சீப்பிலிருந்த முடியை கொத்தாகப் பிடுங்கி சுருட்டித் தரையில் விட்டெறிந்தாள்.

“சரிங்க” என்று சொல்லிவிட்டு சேதுபதியும் டேவிட்டும் நடக்க ஆரம்பித்தனர்.

இருவருடைய பார்வையும் தெருவின் இரண்டு பக்கமும் இருந்த வீடுகளின் அமைப்பை அலசின.

“வீட்டுல யாருங்க?” என்று வாசல்முன் நின்றுகொண்டு சேதுபதி கேட்டான்.

சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஒரு பையன் வெளியே வந்து “என்னா வேணும்?” என்று கேட்டான்.

“திருட்டுப் போன பொண்ணு வீடு இதுதான?” என்று சேதுபதி கேட்டான்.

“ஆமாம். பொண்ணெ பாக்கணுமா?”என்று அந்தப் பையன் கேட்டான். டேவிட்டும் சேதுபதியும் ஒரே நேரத்தில் “ஆமாம்”என்பது மாதிரி தலையை ஆட்டினர்.

“யே பொண்ணு” என்று அந்தப் பையன் வீட்டைப் பார்த்து கத்தினான்.

“என்னடா பயல பொண்டாட்டிய கூப்புடுற மாரி கூப்புடுற?” என்று கேட்டுக்கொண்டே வயதான பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.

“வா, வந்து ஒன்னெ பாக்குறதுக்கு வெளிநாட்டுக்காரங்க வந்திருக்கிறத பாரு” என்று சொல்லி அந்தப் பையன் சிரித்தான்.

“யாரு?” என்று பொண்ணு கேட்டாள்.

“நான் இந்த பக்கம்தான். இவுரு அமெரிக்கா. ஒங்க பேரப்பத்தி இவுரு கிட்டெ சொன்னன். ஒடனே ஒங்கள பாக்கணுமின்னுட்டாரு. அதான் வந்தம்?” என்று சேதுபதி சொன்னான்.

“எங்கிட்டெ என்னா இருக்கு பாக்குறதுக்கு, அதுக்குன்னு ஆளகூட்டியாந்துட்டெ” என்று சிரித்துகொண்டே பொண்ணு கேட்டாள்.

“இவுரு நம்பநாட்டோட பேரூகளப்பத்தி ஆராய்ச்சி பண்ண வந்து இருக்காரு, ஒங்கள பாக்கணுமின்னு சொன்னாரு. அதான் கூட்டியாந்தன்.”

“எங்கிட்டெ என்னா இருக்கு ஆராய்ச்சி பண்றதுக்கு? நானு என்னெ குமரிப்புள்ளெயா?”

“யே கிழட்டு மூதி. மெனக்கிட்டு பாக்க வந்தவங்கக்கிட்டெ அது இதுன்னு பேசிக்கிட்டு. ஊட்டுக்குளார அழச்சிக்கிட்டுபோயி பேசுவியா?” என்று அந்தப் பையன் சத்தமாக போட்டான்.

“எல்லாம் எனக்கு தெரியும். நீ போ. ஒன் மணியாரு வேலயப்பாத்திட்டு” என்று சொல்லி பொண்ணு பையனை முறைத்தாள். அவள் முறைத்ததை பொருட்படுத்தாமல் “சார் நீங்க உள்ளெ போங்க” என்று சொன்னான். பிறகு பொண்ணுவிடம் “போ. ஒனக்கு யோகம்தான். வெளிநாட்டுக்காரங்க எல்லாம் ஒன்னெ பாக்க வராங்க பாரு” என்றான்.

“எல்லாம் பாத்துக்கிறன். நீபோடா. இல்லன்னா ஒன் கிளியப் புடிச்சி அம்மீயில வச்சி அறச்சிப்புடுவன்” என்று சொல்லி சிரித்தாள்.

“கிழடிக்கு வாய பாரு” என்று சொல்லி சிரித்துக்கொண்டே அந்தப் பையன் நடக்க ஆரம்பித்தான். அதற்குள் டேவிட்டை பார்ப்பதற்கு ஐந்தாறு பிள்ளைகள் வந்துவிட்டார்கள்.

“ஓடுங்கடா. இங்க என்னெ படமா காட்டுறாங்க. வேடிக்கப் பாக்குறதுக்கு வந்துட்டீங்க? அவுரும் நம்பளப்போல ஆளுதான்” என்று சொல்லி பிள்ளைகளை துரத்தினாள். பிறகு “உள்ளார வந்து குந்துங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்.

“எம் மனசுதான் வெம்பரப்பாப் போயிடிச்சே. அதுல என்னா இருக்கும்ன்னு கேக்கவந்தீங்க?”

“ஒங்கப்பேர பத்தி கேள்விபட்டன். அதனாலதான் இவுர கூப்புட்டுக்கிட்டு வந்தன். பொண்ணுன்னு சொன்னாங்க” தயக்கத்தோடு கேட்டான் சேதுபதி.

“பொண்ணா இருந்தாத்தான் பாப்பீங்களா? கிழடியா இருந்தா பாக்க மாட்டீங்களா? பேரூதான் பொண்ணு. கிழடிதான்.”

“சரிதான்” ஆர்வமில்லாமல் சொன்னான் சேதுபதி. டேவிட்டின் முகமே மாறிவிட்டது.

“இவுருக்கு நாம்ப பேசுறது புரியுமா?”

“நல்லாப் புரியும். நாலு வருசமா இங்கதான் இருக்காரு. ஊர் ஊராப்போயி வயசானங்க பேரயெல்லாம் எழுதிவச்சியிருக்காரு. அவுங்க பேசுறத டேப்புல புடிச்சி வச்சியிருக்காரு. கேக்குறீங்களா?” என்று சொல்லி ஒரு கை அகலமுள்ள டேப்ரிக்காடரை எடுத்து வெளியே வைத்தான்.

“அதெல்லாம் போடாதீங்க. கும்பக்கூடிப்புடும்.”

டேப்ரிக்காடரை ஆன் செய்துவிட்டு “இவரோட ஆராய்ச்சியே நம்ப ஊருல உள்ளெ பேரூகளப் பத்தித்தான். மதுர பக்கம் ஒரு அம்மாவுக்கு வசந்த மாளிகன்னு பேரு. வசந்த மாளிக சினிமாவ பாத்துக்கிட்டிருக்கும்போது சினிமா கொட்டாயிலியே புள்ளெ பொறந்ததால அந்த பேரு. அதே மாதிரி காஞ்சிபுரம் பக்கம் ஒரு ஆளுக்குப் பேரு மீனவன். மீனவ நண்பன்ங்கிற சினிமா பாத்துக்கிட்டிருக்கும்போது பொறந்ததால அந்த பேரு. மணப்பாற பக்கத்தில ஒரு பொண்ணுக்கு பேரு ‘வண்டி’. பிரசவத்துக்காக வண்டியில போயிக்கிட்டு இருந்திருக்காங்க. வழியில வண்டியிலியே குழந்த பொறந்திடுச்சாம். அதான் அந்த பேரு. இன்னம் சொல்லப்போன ஒரு ஆளுக்கு ‘கட மொல’ன்னு பேரு இருக்கு.

அப்பறம் இன்னொரு ஆளுக்கு உருட்டுன புளின்னு பேரு” சேதுபதி சிரித்தான்.

“இப்பிடியொரு பேரா? அதிசயம்தான்” என்று சொன்ன பொண்ணுக்கு என்ன தோன்றியதோ

“அந்தக் காலத்தில பெத்த புள்ளெக்கி நல்ல பேரா வைக்கணும்ங்கிறதுகூட தெரியாமத்தான் இருந்திருக்குதுவோ.”

“அந்த காலத்திலெ குலசாமி பேரூ, குடிசாமி பேருன்னு வச்சாங்க. அப்பறம் அரசியல் கட்சி தலைவருங்க பேர வச்சாங்க. இப்ப சினிமா நடிகர், நடிகயோட பேர வைக்கிறாங்க. எல்லாம் வடநாட்டு பேரா இருக்கு. இதத்தான் இவுரு ஆராய்ச்சிப் பண்றாரு.”

“நல்ல ஆராய்ச்சிதான்” பொண்ணு சிரித்தாள்.

“எந்தப் பேரா இருந்தாலும் அது சொந்த பேரா இருக்கணும். பட்டப்பேரா இருக்கக் கூடாது. பண்ணிக்காரன், தொந்தாளி, சக்கர, மரக்காயன், மாங்கான், குழம்புச்சட்டி அடியாளு-ன்னு இருந்தாலும் சொந்த பேரா இருக்கான்னுதான் இவுரு பாப்பாரு. ஒவ்வொரு பேருக்குப் பின்னாடியும் ஒரு கதெ இருக்குல்ல.

அந்த கதெதான் முக்கியம்.”

“யாருக்கு எப்பிடி பேரு இருந்தாலும் கல்யாணம் நடந்திருக்கும்ல்ல.”

“ஆமாம்.”

“அப்பறமென்ன? கழுதன்னு இருந்தாலும் குதிரன்னு இருந்தாலும் என்னா கெட்டுப்போச்சி?”

பொண்ணு என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் அவர்கள் பேசாமல் உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கக்கூட யாரு இருக்காங்க?” சேதுபதி மறைமுகமாக பேச்சை ஆரம்பித்தான்.

பொண்ணு சிரித்தாள். சிரிப்பினூடே சொன்னாள்.

“நான்பட்டெ துன்ப துயரம்தான் எங்கூட இருக்கு. சனங்கின்னு ஒருவருமில்லெ.”

“வாட்?”என்றான் டேவிட். அப்போது முன்பு பொண்ணுவின் வீட்டுக்கு வழிகாட்டிய பெண் உள்ளே வந்தாள்.

“என்னா ஆயா, ஒன்னெ பாக்குறதுக்கு வெளிநாட்டு ஆளுவோ எல்லாம் வந்திருக்கு?” என்று கேட்டு கிண்டலாகச் சிரித்தாள்.

“போடி போக்கத்தவள, இந்த வயசில என்னெ பாக்குறதுக்கு வெளிநாட்டுக்காரங்கயெல்லாம் வராங்க. நீயும்தான் எளந்தாரியா நிக்குற. உள்ளுர் பய ஒருத்தங்கூட ஒன்னெ திரும்பிப் பாக்க மாட்டன்ங்கிறான்.”

“ஒம் பேரு பொண்ணுன்னு சொன்னன். இவுங்க நம்ப மாட்டன்னுட்டாங்க” என்று சொல்லிச் சிரித்தாள்.

“எம் பேருதான் ஊரு அறிஞ்சி கெடக்கே. போ. போயி எவனயாவது புடிச்சிவச்சிக்க. இல்லன்னா ஒம்பூட்டுக்கு தொறக்கோலு கெடைக்காது.” என்று சொல்லிச் சிரித்தாள் பொண்ணு.

“கிழட்டு முண்டக்கி பேச்ச பாரேன். ஊட்டுக்கு வருவ இல்லெ. அப்ப வச்சிக்கிறன் ஒன்னெ” என்று சொன்னதோடு பொண்ணுவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு போனாள் அந்தப் பெண்.

“போடி போ. பொண்ணு புழுக்கத்தான். போன எடம் வழுக்கத்தான்” என்று சொல்லி சிரித்தாள் பொண்ணு.

“ ஒங்க பேரு என்னெ?”

“எதுக்கு கேக்குறீங்க”

“பொண்ணுன்னு சொன்னாங்க. அப்பறம் திருட்டுப்போன பொண்ணுன்னு சொன்னாங்க.

ஏழாம் பொண்ணுன்னும், கசம்பாயின்னும் சொன்னாங்க.”

“ இப்ப வந்தாளே அந்த மினிக்கியா”

“ ம்”

“ அது இல்லெ எம் பேரு.”

“ நாங்க வீட்டுக்கு வரும்போது இங்க இருந்த பையனும் அப்பிடித்தான் சொன்னாரு?” என்று சீண்டுவது மாதிரி கேட்டான் சேதுபதி.

“ அந்த நாயிவோ சொல்ற மாரிதான் என்னெ ஊருல கூப்புடுவாங்க.”

“ பொண்ணுன்னா-இல்லெ திருட்டுப்போன பொண்ணுன்னா?”

“ ரெண்டு விதமாவும் சொல்லுவாங்க, கூப்புடுவாங்க.” கொஞ்சம் கடுப்புடன் சொன்னாள் பொண்ணு.

“ ரியலி” என்றான் டேவிட்.

“ எதனால அப்பிடிச் சொல்றாங்க?” துருவித்துருவி கேட்டான் சேதுபதி.

“அம்பது அறுவது வருசத்துக்கு முன்னால நடந்த கதெ அது.”

“ கோவப்படாம அதெப்பத்தி சொல்லு. இநத மாரி பேர நான் கேள்வி பட்டதே

இல்லெ. நீங்க சொல்றது இவரோட பிஎச்.டி. ஆராய்ச்சிக்கு ஓதவும். ”

“ ஆமாம் ” என்றான் டேவிட். அதோடு புது செல்லையும் புது கேசட்டையும்

போட்டு டேப்ரிக்கார்டரை கொஞ்சம் நகர்த்தி பொண்ணுக்குப் பக்கத்தில் வைத்தான்.

“அய்யோ அதயேங் கேக்குறீங்க? சொன்னா ஏழு ராத்திரி கதயாவும்.”

“பரவாயில்லெ சொல்லுங்க. நாங்க கேக்குறம்.”

“என்னியப்பத்தி என்னாத்தா சொல்றது? நாந்தான் செத்துப்போனவளாச்சே.”

“எந்த கதெயா இருந்தாலும் நாங்க கேப்பம்?” சிரித்துக்கொண்டே சொன்னான் சேதுபதி.

“நான் வயசுக்கு வந்த எட்டாம் நாளு நடந்தது.” அடுத்து பேசாமல் பொண்ணு உட்கார்ந்திருந்ததால் அவளிடமிருந்து வார்த்தையை பிடுங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு “அப்பிடியா?”என்று கேட்டான் சேதுபதி.

“நான் வயசுககு வந்தது நெறஞ்ச வெள்ளிக்கிழம. வங்கோட. மந்தயில வௌயாடிக்கிட்டிருந்தன். உச்சி மத்தியான வெயிலுநேரம். வவுத்த சண்டிசண்டி இயித்துச்சி. கருங்கல்ல தின்னுப்புட்டாப்ல வவுறு கனமா இருந்துச்சி.

சரின்னு ஒரு வேப்ப மரத்துக்கீயப்போயி குந்துனன். செத்தெக்கெல்லாம் சித்தாட நனஞ்சிப்போச்சி. என்னான்னு பாத்தா வெவகாரம் தெரிஞ்சது. ஒண்ணும் சொல்ல முடியல. ஊட்டுக்கு ஓடியாரன். எங்கம்மாள கண்டதும் தேளு கடிச்சிட்டாப்ல அயிதன். விசியம் இப்பிடின்னு சொன்னதும் ‘இதுக்குயாண்டி அயிவுற? ஊட்டுக்குத்தீட்டு ஆவாது. போயி ஊட்டுக்குப்பின்னால குந்து’ன்னு சொல்லிப்புட்டு ஊடுஊடாபோயி தாக்கலு சொல்லி சிரிக்கிறா. செத்த நாழிக்கெல்லாம் ஊரு பொம்பளயெல்லாம் என்னெ வேடிக்க பாக்க வந்துச்சிவோ, எனக்கு வெக்கமாப்போயி அயிவயா வந்துச்சி. வந்தவங்க எல்லாம் ‘இதுக்கு யாண்டி அயிவுறா? எம் மவனுக்கு கட்டிக்கிறன். அயிவாத’ன்னு கேக்குறாங்க, நான் வாயத் தொறக்கல. ரெண்டு பொம்பளய வச்சிக்கிட்டு எங்கம்மா மாவு இடிச்சா. எங்கண்ணன் ஓடிப்போயி எங்க மாமன அயிச்சாந்தாரு. வந்த வேகத்திலியே எங்க மாமன் சோளத்தட்டய வச்சி ஊர் மந்தயில குச்சல் கட்டுனாரு.”

“ஊரு மந்தயிலியா?”

“ஆமாம்.”

“குமரிப்புள்ளெ குச்சல கட்டி முடிச்சதும் எங்க எனத்து பொம்பளங்கயெல்லாம் கூட்டமா சேந்து என்னெ அயிச்சிக்கிட்டு போயி குச்சல்ல குந்த வச்சிட்டு வந்தவங்களுக்கெல்லாம் மாவு கொடுத்தாங்க. மாவ தின்னுக்கிட்டே எல்லாரும் போயிட்டாங்க. நான் மட்டும் தனியா பரண்ல குந்தியிருந்தன்.”

“பரண்லயா?”

“ஆமாம். குமரிப்புள்ளெ குச்சல் கட்டும்போதே பரண் வச்சிகட்டுவாங்க.வயசுக்கு வந்த குமரு ஏணியில ஏறி மேல இருந்துக்கணும். காவலுக்கு இருக்கிறவங்க கட்டுல போட்டு கீய படுத்துக்குவாங்க.”

“எதுக்காக பரண் வச்சி கட்டுறாங்க?”

“ஊர சுத்தியும் மலக்காடா இருக்கிறதால ராத்திரியில நரி, காட்டுநாயி, பூரான், பூச்சின்னு பலதும் வரும். அதுக்குப் பயந்துகிட்டுத்தான்.”

“துணைக்கு யார் இருப்பாங்க.”

“ராத்திரியில மட்டும் எங்கண்ணனோ எங்கப்பாவோ வந்து படுத்துக்குவாங்க.”

“பகல்ல தொணைக்கு?”

“தீட்டு வாசனக்கி காத்து கருப்பு, பேயி பிசாசு வருமின்னு பண்ணருவா, இரும்பு சீணுக்கருக்கிய பொண்ணுக்கிட்டெ கொடுத்திடுவாங்க அதான் தொண. ”

“எத்தன நாளு குமரிபுள்ளெ குடிசயில இருக்கணும்.?”

“பதினாறு இல்லன்னா இருவத்தியொரு நாளு.”

“சாப்பாடெல்லாம்?”

“ஊட்டுலயிருந்து வரும். சொந்தக்காரங்கயெல்லாம் ஒறவு மொற சோறுன்னு கோழி அடிச்சி எடுத்துக்கிட்டு வருவாங்க. ஆட்டுக்கறி, கோழிக்கறின்னு மூணு வேலயும் சோறும் வெஞ்சனமும் வரும். தின்னுப்புட்டு எலும்புவுள குடிசக்குள்ளியே ஒரு பள்ளம் வெட்டி வச்சியிருப்பாங்க. அதுக்குள்ளார போட்டுடணும். அப்ப திங்குற நெல் அரிசி சோறுதான் ஒரு பிள்ளய பொம்பளயாக்குறது.”

“நெல்லரிசி சோறுங்கிறது பெரிய விசியமா?”

“அப்பலா மாசத்துக்கு ஒரு நாளக்கி நெல்லரிசி சோறு கெடச்சாலே அதிசயம்தான் நெல்லரிசி சோத்துக்கு, ‘ஆச்ச் சோறு’ன்னு சொல்லுவாங்க.”

“மழ காலமா இருந்தா?”

“எந்த மழயா இருந்தாலும், இடியா இருந்தாலும் குச்சல்ல வுட்டு வெளிய வரக் கூடாது. ஊருக்காரவங்களும் வந்து கூப்புட மாட்டாங்க. குடிசய தொடவும் மாட்டாங்க. பொழுது மசங்குன பெறவு யாரு கண்ணிலயும் படாமத்தான் மூத்தரம் வுடுறதுக்கு பீ பேளுறதுக்குபபோவணும். சாமி வேட்டக்கி போற நேரத்துல குச்சல வுட்டு வெளிய வரக் கூடாது.”

“ஆச்சரியமா இருக்கு. ஒலக அதிசயமாவும் இருக்கு” என்று சேதுபதி சொன்னான்.

“ஆச்சரியமுமில்லெ. அதிசயமுமில்லெ. இன்னிய தேதிமுட்டும் எங்க எனத்தில இதான் வயக்கம். எங்க ஆறு அக்காளும் மந்தயில குமரிப்புள்ளெ குச்சல்லதான் குந்தியிருந்தாங்க. நானும் குந்தியிருந்தன்.”

“எங்க பக்கத்திலெ இந்த மாரி இல்லெ.”

“எங்க ராஜ கம்பளத்து தொட்டி நாயக்கரு எனத்திலெ இதான் வயக்கம். கோடி ரூவா கொடுத்தாலும் மாற மாட்டாங்க.”

“இன்னிக்குமா?”

“ஆமாம்.”

“ரியலி?” என்று வியப்பு மேலிட டேவிட் கேட்டான்.

“அப்பறம் என்னா நடந்துச்சி?”

“என்னெ ஊட்டுக்கு அழக்கிறதுக்கு நாலுநாளு இருக்கயில மேலத்தெருவுல முத்துபேச்சின்னு ஒருத்தி வயசுக்கு வந்தா. அதுக்கு மறாம்நாளு சொல்லி வச்ச மாரி அரசாலன்னு ஒருத்திக்கு குமரிப்புள்ளெ குடிச கட்டுனாங்க. எனக்கு தலக்கி ஊத்தி மோளமடிச்சி ஊட்டுக்கு அழக்கிறது இன்னம் ரெண்டு நாளுதான் இருந்துச்சி. அன்னிக்கித்தான் எங்க மாமன் எனக்கு கரக்கட்டுதுணி கண்ணுமை டப்பி, மஞ்ச, சீப்பு, மொக பவுடரு, என்ணெய் கண்ணாடின்னு சோடிப்புப் பொருளு எல்லாம் வாங்கியாந்து தந்தாரு. ராத்திரி சோறு எடுக்கறதுக்கு எங்கப்பா ஊட்டுக்குப் போன நேரத்திலதான் எனக்கு எல்லா வெனயும் நடந்துபோச்சி.” அதோடு நிறுத்திவிட்டாள் பொண்ணு. முகம் மாறிவிட்டது. முதன்முதலாக அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வெளிப்பட்டது. அவளாக பேசட்டும் என்று சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். சிறிதுநேரம் கழித்து அவளைப் பேசவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேதுபதி கேட்டான்:

“அப்பறம் என்னாச்சி?”

“கண் சிமிட்டுற நேரம்தான். அஞ்சாறு பேரு ஓடியாந்து வாயக்கட்டி, கைகால கட்டி ஒரு சாக்குல போட்டு என்னெ தூக்கிக்கிட்டுப்போயிட்டாங்க. ஆளு மாத்தி ஆளு ஆறு ஏயிமையிலு தாண்டி தூக்கிக்கிட்டு போனாங்க. கத்தி அயிவ முடியல. கையகால ஒதைக்க முடியல. கண்ணுல தண்ணீ மட்டும்தான் வருது. மூக்குல சாக்கு அருவி அருவி தும்மலா வருது. தும்ம முடியல. ’முக்காத, மொணவாத மீறி முக்குணா சூரி கத்தியால வவுத்தில சொருவி புடுவன்’னு கத்துறான் ஒருத்தன். மின்நேரத்திலெ தலச்சொமயா தூக்குணவங்க விடியுறதுக்கு செத்த இருக்கயிலெ ஒரு மாட்டுக்கொட்டாயில மூட்டய எறக்கி வச்சாங்க. இன்னா ஊரு, இன்னா எடமின்னு நெகா தெரியில. நான் சாக்குக்குள்ளாரியே கண்ணு தண்ணீய வுட்டுக்கிட்டு குந்தியிருக்கிறன். வாய்வுட்டு அயிவ முடியல. உச்சி உரும நேரத்துக்குத்தான கட்ட அவுத்துவுட்டாங்க.”

ஆர்வம் மேலிட “அப்புறம்” என்று சேதுபதி கேட்டான்.

“கட்டெ அவுத்து வுட்டாங்க. எம் மின்னால ஆறு ஆம்பள வீமசேணனாட்டம் நிக்குறாங்க. அதுல ஒருத்தன் திடுமலா இருந்தான். அவந்தான் என்னெ பாத்துக்கிட்டு தலயில அடிச்சிக்கிட்டு அயிது புரண்டான் ‘யே சண்டாள பாவிவுளே யாருடா இது? பொண்ண மாத்தித்தூக்கிக்கிட்டு வந்துட்டீங்களே.

குடி முழுவிப் போச்சே’ன்னு அயிவுறான். எனக்குமேல அந்தாளு அயிவறான்.

‘என்னெ கொண்டுபோயி எங்க ஊட்டுல வுட்டுடுங்கன்னு சொல்லி நான் அயித அயிவயப் பாத்திட்டு அந்த திடுமலான ஆளு ‘நீ அயிவாம இருந்தாத்தான் நான் ஒன்னெ கொண்டு போயி ஒங்க ஊட்டுல வுடுவன். அதுமுட்டும் சத்தம் காட்டக் கூடாது. மீறுனா ஒன்னெ இங்கியே வெட்டி பொதச்சிப்புடுவ’ன்னு சொன்னான். அதோட இடுப்புல இருந்த சூரி கத்திய உருவிக்காட்டுனான். அப்பியும் நான் அயிவய நிறுத்தல. துடியா துடிக்கன். அங்க இங்க நவுர வுடாம ரெண்டாள காவலுக்கு குந்த வச்சான். என்னெ கொண்டுபோயி எப்பிடி சேக்குறதின்னு பேசிக்கிட்டானுவ. ‘அந்த ஊருல என்னா நடக்குதின்னு தெரிஞ்சிக்கிட்டு வாடா’ன்னு ஒரு ஆள அனுப்புனாங்க. அவன் போயிட்டு வந்து ஊரே ‘திமிலோக படுது. பொண்ணெ தேடிக்கிட்டு ஊர் ஊராக ஆளு போயிருக்கு. எனக் கூட்டம் கூட்டியிருக்காங்க. பொண்ணெ எடம் மாத்தி வைக்கிறது நல்லது. இருக்கிற நெலமயில கொண்டுபோயி வுட முடியாது’ன்னு சொன்னான். ‘நீங்க நாலுபேரூம் இந்த எடத்தவுட்டு வெளிய போவக் கூடாது. காவலு இருங்க. சோறு தண்ணீயெல்லாம் நானே கொண்டாரன். ரெண்டு மூணு நாளு கழிச்சி நெலவரத்துக்கு தக்கன செஞ்சிக்கலாம். நம்ப ஊருக்கும் ஆளுவந்தாலும் வரும் ஜாக்கிர’தின்னு சொல்லிட்டு அந்த திடுமலான ஆளு போயிட்டான். எனக்கு மூணுவேளக்கும் சுடுசோறும் வெஞ்சனமும் வருது. நான் ஒண்ணத்தயும் தொடல. மூத்தரம் பீபேளக்கூட அவனுவோ என்னெ வுடல. கூடவே செவுத்துக்கிட்டெ வந்து நின்னானுவ. அதோட ‘சத்தம் போட்டாலும் சரி, ஓடிப்போவ நெனச்சாலும் சரி. ஒன் உசுரு ஒனக்கு சொந்தமில்ல’ன்னு வாயிக்கு வாயி சொல்லிக்கிட்டே இருந்தானுவ. மூணு பவலு மூணு ராத்திரி குந்துன எடத்தெ வுட்டு நவுராம உசுர கையில புடிச்சிக்கிட்டு குந்தியிருந்தன். நாலாம் நாளு ராத்திரி வாயக்கட்டி, கைகால கட்டி ஒரு சாக்குல என்னெ தூக்கி வச்சி கட்டுனாங்க.

நடுச்சாமத்துக்கு என்னெ தூக்கி கிட்டு வந்து எங்க ஊரு இலுப்பத்தோப்புக்கிட்டெ மூட்டய எறக்கி வச்சிட்டு என்னெ அவுத்துவுட்டுட்டு ஓடிப்போயிட்டானுவ. நான் ராத்திரின்னும் பாக்கல இருட்டுன்னும் பாக்கல.

பேய் மாரி நின்னுக்கிட்டிருந்த பனங்காட்டயும் பாக்கல. ஏழு பன கழிஞ்சா

ஊர்க்காடு. கத்தி கமுறிக்கிட்டே ஊட்டுக்கு ஓடியாந்தன்.”

“ஓ பியூட்டி ஃபுல்” என்று ஆச்சரியத்தோடு சொன்னான் டேவிட்.

“அப்பறம்?” என்று கேட்டான் சேதுபதி.

“அப்பறம் என்னாவும்? பொண்ணெ யாரோ தூக்கிட்டுப்போயிட்டாங்கின்னு நாளு நாளும் ஊர் ஊரா ஆளுவுட்டு தேடியிருக்காங்க. சொந்தக்காரங்க யாரும் தூக்கிட்டுப் போவலன்னு தெரிஞ்சதும் எனக் கூட்டம் எட்டு நாளு வச்சாங்க. யாரும் குத்தத்த ஒப்புக்கல. நாயத்துக்கு கட்டுப்பட்டு யாரும் நடக்கல.

ஒண்ணெ தூக்கிட்டுபோன ஆளுவுள அடயாளம் காட்டுன்னு கேட்டாங்க. எந்தத் திருடன் வந்து மந்தயில உலாத்திக்கிட்டு நிப்பான். நான் அடயாளம் காட்டுறதுக்கு? மேலத் தெரு அரசாலங்கிற பொண்ணெ தூக்கிட்டுபோவ வந்தவங்கதான் ஆள மாத்தித் தூக்கிக்கிட்டு போயிட்டாங்கின்னு ஒரு பத்து நாளு கயிச்சி தெரிஞ்சிச்சி. எனக் கூட்டம்வச்சி இந்தக் காரியத்த செஞ்சது யாருன்னு கேட்டாங்க. குத்தவரி கட்டணுமின்னு யாரும் வாயத்தொறக்கல. அரசாலயோட தாய்மாமன் நாலுபேரயும் அவனுவோ மவனுவளயும் கூட்டிவச்சி கேட்டதுக்கு ‘ஐயோ சாமி நாங்க ஒரு பழிபாவத்தயும் கண்டதில்லெ. எங்க தங்கச்சி மவள நாங்க எதுக்குத் தூக்கப்போறம்’ன்னு இடுப்புத்துணிய அவுத்துப் போட்டு தாண்டி சத்தியம் செஞ்சாங்க. பஞ்சாயத்திலெ நீங்க பேசுறதுக்கு ருசு இல்லெ. அதனால குளிச்சிட்டு ஈரத்துணியோட வந்து நம்ப ஜக்கம்மா கோவுல்லெ சத்தியம்பண்ணீ திருநீரு எடுங்கின்னு சொல்லிட்டாங்க. அந்த மாரியே அரசாலயோட தாய் மாமனுவோ, அவனுவோ மவனுவோ எல்லாம் சேந்து சத்தியம் செஞ்சாங்க. குத்தவரி கட்டணுமின்னு எனக்கூட்டத்திலெ குத்தத்த ஒப்புக்கல.”

“ஜக்கம்மா கோயிலு இந்த ஊருல இருக்கா?”

“இல்லெ.”

“பின்னெ எப்பிடி?”

“ஒரு கை புடி மண்ணெடுத்து ஜக்கம்மா மாரி உருவஞ்செஞ்சி வச்சி சத்தியம் வாங்குனாங்க.”

“கடசி வர்ற ஒங்கள யாரு தூக்கிக்கிட்டுப் போனாங்கின்னு தெரியலீயா?”

“ஏன் தெரியல? எல்லாம் தெரிஞ்சித்தான் போச்சி. ஆனா ஒண்ணும் செய்ய முடியல?”

“யாரு தூக்கிக்கிட்டு போனது?”

“அரசாலயோட மாமன் ஒழுங்குமுற கூட்டத்திலெ சத்தியம் செஞ்சிட்டு போன மூணாம் நாளே தடத்திலெ கெடந்த பாம்பு கடிச்சி செத்துப்போனான். அவன் மவன் எட்டாம்நாளே கொண பேதகமாயி ஊட்டவுட்டுப்போனவந்தான். இன்னியமுட்டும் ஊரு நாடு திரும்பல.”

“ஓ” என்று ஆச்சரியப்பட்டான் டேவிட்.

“நீங்க என்னா செஞ்சீங்க?”

“நான் என்னெ செய்யுறது? சமுத்திரத்தில குதிச்சா தப்பிக்க முடியுமா?

கொதி எண்ணெயில வியிந்த ஈயாட்டம் கெடந்தன். எங் கதெதான் ஊரே பாரு நாடே பாருன்னு எட்டு நாளு நடந்துச்சி. அப்பறம் திருட்டுப்போன பொண்ணு திரும்பி வந்துருச்சின்னு ஊரு ஒலகத்து சனமெல்லாம் வண்டிக்கட்டிக்கிட்டு வந்து என்னெ பாத்துச்சிவோ. திருட்டுப்போனதில திரும்பி வந்த ஒரே பொண்ணு நான் மட்டும்தான்.”

“அப்பிடின்னா பொண்ணு திருட்டு போவுமா?” நம்பாதது மாதிரி கேட்டான் சேதுபதி. பொண்ணு சொன்னதில் டேவிட்டுக்கும் நம்பிக்கை ஏற்படாமல் உண்மயா, உண்மயா? என்று திரும்பத்திரும்பக் கேட்டான்.

“வருசத்தில ஒரு பொண்ணாவது திருட்டுப்போகாம இருக்காது”

“சத்தியமா?”

“பொய்யாச்சொல்றன்? வேணுமின்னா ஊருல கேட்டுக்க. எங்க எனத்துக்காரங்கக்கிட்டெ கேட்டுக்க. எம் மனசுல உள்ளபடிதான் சொல்றன். ஆகாயம் சாச்சியா, பூமாதேவி சாச்சியாத்தான் சொல்றன்.”

“யாரு திருடிக்கிட்டுப் போவாங்க?”

“அத்த மவனுங்க. தாய் மாமன், இல்லன்னா தாய் மாமன் மவனுங்கதான். பிறத்தியாரு கிட்டத்திலியும் வர மாட்டாங்க.”

“எதுக்காக இப்பிடி தூக்கிக்கிட்டு போறாங்க?”

“நாலஞ்சி தாய்மாமன் இருந்தா போட்டியில தூக்கிக்கிட்டு போயிடுவாங்க. அப்பிடி தூக்கிக்கிட்டுப் போயி தாலியகட்டிப்புட்டா அம்புட்டுத்தான். அப்பறம் ஒண்ணும் செய்ய முடியாது.”

“ஒண்ணுமே செய்ய மாட்டாங்களா?”

“அத்த மவன், தாய் மாமன் மவன்கிட்டெ என்னாப் பேச முடியும்? பொண்ணுக்கு உரும உள்ளவன். பொருளுக்காரன் பொருள தூக்கிக்கிட்டுப்போயிட்டான். என்னா பேசுறதின்னு பஞ்சாயத்தில சொல்லிடுவாங்க.”

“அப்பறம் ஒங்க கதெ என்னாச்சி?”

“ எங்கண்ணீர எந்த பானயில வடிக்க? மரத்தோட ஆணி வேர புடுங்குனாப்லதான். அரசாலயேடெ மூணாவது மாமன் ஆளுவச்சி தூக்கிக்கிட்டுப் போனானா, இல்லெ வேற யாரும் தூக்கிக்கிட்டுப் போனாங்களா தெரியாது. தெரிஞ்சி செஞ்சாங்களா தெரியாம செஞ்சாங்களா தெரியாது. அப்ப நானு ரவப் புள்ளெதான். அதோட தீட்டுக்காரிச்சி வேற, தீட்டோடதான் என்னெ தூக்கிக்கிட்டு போயிட்டாங்க. காலத்துக்கும் குமரி பொண்ணாவே நின்னுட்டன். திருட்டுப்போன பொண்ணுங்கிற பேரூம் நெலச்சிப்போச்சி. நெஞ்சும் தூந்து போச்சி” என்று சொல்லும்போது பொண்ணுவின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். அப்போது தீட்டுன்னா என்ன? என்று டேவிட் சேதுபதியிடம் கேட்டான். சேதுபதி ஆங்கிலத்தில் சொன்னதும் டேவிட் குறித்துகொண்டான்.

“அப்பிடின்னா இன்னிய வர்ற ஒங்களுக்கு கல்யாணமே நடக்கலியா?” சேதுபதி ஆதங்கத்தோடு கேட்டான்.

“நான் திருட்டுப்போனது மூணாம் பேருக்குத் தெரியாம இருந்திருந்தா நடந்திருக்கும். அதான் ஊரு ஒலகமே தெரிஞ்சிப்போச்சே? பொண்ணு ஒண்ணு திருட்டுப்போயிடிச்சின்னு ஊர்ஊரா தேடப்போனதால எல்லா ஊருக்கும் விசியம் தெரிஞ்சிப்போச்சி. இன்னியமுட்டும் எம் மேல ஆம்பள வாட படாமத்தான் இருக்கன்.”

“ரியலி?” என்று டேவிட் வியப்புடன் கேட்டான்.

“ஒங்க வீட்டுல எந்த முயற்சியும் எடுக்கலியா?”

“இருக்கிற ரெண்டு காணி பூமியயும் வித்து தர்றன். ‘ஊட்டெயும் எய்திவைக்கிறன். ஒரு பயல பாத்து முடி’ன்னு எங்கம்மா சொல்லிச்சி. எங்கய்யாவும், எங்கண்ணனும் ஊர்ஊரா அலஞ்சாங்க. நடந்தாங்க. ரெண்டாம் தாரமா இருந்தாலும் சரி, பொண்டாட்டிய சாவ கொடுத்தவன்னாலும் சரின்னு தேடுனாங்க. கடசி முட்டும் எங்கயித்திலெ தாலி ஏறல.”

“அதிசயம்தான்” என்று சேதுபதி சொன்னான்.

“அதிசயமெல்லாம் ஒண்ணுமில்லெ நடந்த கதயத்தான் சொல்றன்.”

“பொண்ணு கேட்டு யாருமே வல்லியா?”

“ஏன் வல்லெ. எல்லாம் வர்றத்தான் செஞ்சாங்க. ‘தூக்கிக்கிட்டு போனவங்க எத்தன நாளு வச்சியிருந்தாங்க? என்னா சாதி ஆளு தூக்கிக்கிட்டு போனாங்க’ன்னு வந்தவனெல்லாம் அதியேதான் திறுப்பித்திறுப்பி கேட்டாங்க. சொல்லிச்சொல்லி எனக்கும் சீ போன்னு ஆயிப்போச்சி. இனிமே இந்த ஆம்பளவோ மூஞ்சிலியே முழிக்கக் கூடாதின்னு புடிவாதமா இருந்தன். அப்பலாம் ஆம்பளயோட கை வயசுக்கு வந்த குமருமேல பட்டாலே புள்ளெபொறந்திடும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்த காலம் அது” என்று சொல்லும்போது பொண்ணுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அழுகையினூடே “என்னெ தூக்கிக்கிட்டுப் போயி நாலு நாளு வச்சியிருந்தானுவங்கிறதுக்காக ஒருத்தனும் எனக்கு தாலி கட்டல. ஒலகத்திலியே நான் ஒருத்தித்தான் அவுசாரியா போயிட்டாப்ல. அப்ப நான் வெடல புள்ளெதான். இடுப்புல துணியக்கூட சரியா கட்டத்தெரியாது. சரி நம்பளுக்குன்னு ஒலகத்தில ஒரு சப்ப சருவ இல்லாமியாப் போயிடுவான்னு இருந்தன். காலம் ஓடிப் போச்சி. கிழவி ஆயிட்டன்.”

பொண்ணு சொன்னதை நம்பாதவன் மாதிரி சேதுபதி கேட்டான். “அப்ப கடசி வர்ற ஒங்களுக்கு கல்யாணமே நடக்கல?”

“ஆமாம். என்னெ கட்டிக்கத்தான் ஒருத்தனும் வல்லெ. ஆனா எங்கூட படுக்கிறதுக்கு ஊரே அலஞ்சிச்சி. நான் ஊருக்கு தரிசு நிலம் மாரி. அரநாழியில அவனவன் சோலியமுடிச்சிட்டு, சூட்டெ தணிச்சிக்கிட்டுப்போயிடுவான். நானில்ல வவுத்து சொமய சொமக்கணும்?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். திடீரென்று நினைவுக்குவந்த மாதிரி “பட்டா இல்லாத நெலம் தானன்னு ஊர்ப்பட்ட ஆடுமாடு எல்லாம் மேயறதுக்கு வர்றத்தான் செஞ்சிச்சி. ஒண்ணும் வௌயாட்டியும்போவுது, கடசிமுட்டும் கரம்பா கடந்தாலும் சரின்னு ஒரு நாயயும் நான் கிட்டெ சேக்கல. கால ரெண்டயும் இறுக்கிக்கிட்டு இன்னிய முட்டும் இருந்திட்டன். நம்ப மனசுக்கு நாம்ப தான காவ இருக்கணும்? இந்த நேரமுட்டும் நான் ஒரு ஆம்பளக்கூடயும் பேசிப்பழகி புழங்கி ஒரு குடும்பமா இருக்கல.”

“ஊருல என்னா சொன்னாங்க?”

“யாரோ ஒரு சண்டாளன் செஞ்சதுக்கு ஊரு என்னாப் பண்ணும்? கொஞ்சம் நாளானா எல்லாம் சரியாப்போயிடும். ஊரு மறந்திடும்ன்னு எங்க ஊட்டுச் சனங்க நெனச்சாங்க. ஆனா நாளவ நாளாவ கதய மறக்கிறதுக்குப்பதிலா வளத்துட்டாங்க. மொதல்ல தூக்கிக்கிட்டு போயி நாலு நாளு வச்சி இருந்தாங்கிறத எட்டு நாளு பத்து நாளுன்னு சொன்னாங்க. அப்பறம் ஒரு மாசமின்னாங்க. அதுக்கப்பால தீட்டுக்காரிச்சின்னு பாக்காம சோலிய முடிச்சாங்கன்னு சொன்னாங்க. அப்பறம் வவுத்து புள்ளெயோட வந்தான்னும், புள்ளெய கலச்சிட்டான்னும் ஊருல ஆளாளுக்கு ஒரு கதெய பரப்பிவுட்டாங்க. மனசுக் கேத்தப்படி, கேக்குற ஆளுக்கு ஏத்தப்படி, கதெக்கி காது மூக்கு, கண்ணுவச்சி உசுரு கொடுத்தாங்க. அது மரம் மாரி வளந்துபோச்சி. அடுப்பு ஒலய மூடமுடியும், ஊரு வாய மூட முடியுமா? நெருப்பில்லாமியே எரியறது ஊரு வாயிதான?”

“நீங்க சொல்றது அதிசயமா இருக்கும்மா. ஒரு ஆம்பளக்கூட வல்லெங்குறீங்களே.”

“ஆம்பளயா வல்லெ. தொகதொகயா வகவகயா எல்லாம் வரத்தான் செஞ்சானுவ, என் வவுத்திலெ புள்ளெய கொடுக்கிறதுக்கு. தாலிதான் கட்ட மாட்டன்னானுவ. அப்பிடித்தான் ஒரு சமயம் தொழிலுக்குப்போயிருந்தப்ப ஒரு ஊருல ஒரு பய என்னெ ஒரு விதமா பாக்குறதும் ஓரிடமின்னு இல்லாம திரியுறதுமா இருந்தான்.

இதென்னடா சனீயன், போற வர்ற எடமெல்லாம் ரச்சயா இருக்குன்னு கண்ணு பாக்கல, காது கேக்கலன்னு இருந்தன். அந்த பயலோட நடெய ஒடய பாத்திட்டு எங்கம்மாக்காரி தரிசா கெடக்குற நெலத்தில ரெண்டு புள்ளு பூண்டாவது மொளக்கட்டும்ன்னு தானா போயி அவங்கிட்டெ வாத்தய வளத்தா. கேண செருக்கி மவ எனக்கு அந்த வெகரம் எல்லாம் புரியல. நான் எம் பாட்டுக்கும் ஊட்டு வேலய செய்யவும் காச்சுன கஞ்சிய குடிக்கவுமின்னு இருக்கிறன். கம்மாயிக்கு குளிக்கப் போனா அந்த பய எம் பின்னாலியே வர்றான். நான் பயந்துகிட்டுப்போயி எங்கம்மாக்கிட்டெ சொன்னா, நீ போத்தா. அவன கோக்குமாக்கு போட்டு வுடுறன்னு சொல்லி இன்னது இப்பிடின்னு கதெய அவுத்துவுட்டா. அந்த பழிகாரி. நானும் அந்த பயகிட்டெ போயி நெயலாட்டம் பின்னாலியே சுத்துறியே என்னா வெகாரம்? நீ என்னா சாதின்னு தெரியில.

ஒனக்கு பொண்டாட்டி புள்ளென்னு இருக்கு. அப்புறம் எதுக்கு எம் பின்னால சுத்துற? நீபாட்டுக்கும் ஒன் சோலிய முடிச்சிட்டு போயிட்டின்னா எங் கதெ என்னாவறது? குளிக்க வந்தனா, ஒங்கூட படுத்து புள்ளெ பெக்க வந்தனான்னு கேட்டன். அதுக்கு அந்த பய சொல்றான், சங்கிலிய வாங்கிப்போடுறன்.

ஒலகத்திலுள்ள அத்தன வக கறியும் சோறும் வாங்கி போடுறன். ஒன்னெ கண்ட நாளா கண்ணுல தூக்கமில்லெ. செத்த ஒதுங்கிட்டு போனா ஒங்களது தேஞ்சிடும்மாக்கும்.

வெத்தல பாக்கு போடுற நேரம் ஆவுமா? இன்னிக்கு முடியாட்டி நாள பின்னெ வரட்டுமா? இல்லெ இன்னிக்கி பொழுதடய வரட்டுமா? ஒனக்குள்ளத நான் எடுத்துக்க முடியாது. எனக்குள்ளத நீ எடுத்துக்க முடியாது. அப்பறம் எதுக்கு மன வேசட?

ஒண்ணுக்கு வுடுற நேரந்தான் ஆவும். ஒரு நாளு எங்கூட பேசி புழங்கிட்டு போன்னான். அடெ தூமய தின்ன பயல. ஒங்கூட ஒரு நாளு படுக்கவா புள்ளயா பொறந்தன்? புள்ளெ உண்டானா ஒம் பேரத்தான் சொல்லுவன். கம்புகாட்டெ பங்குபோடுவன்னு சொன்னதும் அந்த பய போன எடம் தெரியில” பொண்ணு வாய்விட்டு சிரித்தாள்.

“ஒங்கம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“அந்த சண்டாளிதான் மொத்தத்துக்கும் காரணம். அந்த ஊருல இருக்க மட்டும் அந்த பய தான் அவளுக்கு வெத்தல, பாக்கு, பொவலன்னு குத்துகுத்தா வாங்கி கொடுத்தான். வாக்கு சொல்லு, குறி சொல்லு, மை வைய்யி, தகடு வையின்னு காசு பணத்த கொடுத்துக்கிட்டிருந்தான். ஒரு நாளு எங்கம்மாக்காரி அவனப்பத்தி எங்கிட்டெ பேச்ச எடுத்தா.”

“சும்மாயிருடி சண்டாளி. வரவன் புள்ளெய உண்டமாச்சிப்புட்டு தானாச்சி தன்னோட தடியாச்சின்னு ஓடிப்போயிட்டா வவுத்தத் தள்ளிக்கிட்டு நானில்லெ ஊருல பங்கப்பட்டு நிக்கணும். ஏற்கெனவேதான் ஊரு ஒலகம் சிரிச்சிப்போயி நிக்குறனனேன்னு சொன்னன். அதுக்கு அவ நீ வாயாலியே சிரிச்சிபேசி அவன் சரக்க எறக்கு. பண்டத்த எதுக்கு காட்டப்போற? அவன மயக்குறதுக்கு சீட்டுகட்டி மை வச்சிப்புடுறன்னு சொன்னா. எனக்கு கோவம் வந்துச்சி. அடெ கண்டாரஒளி முண்டெ, என்னா பாவம் செஞ்சனோ இந்த கதிக்கு ஆளாயி நிக்குறன். எனக்கு இந்த பாவம் வேறயான்னு கேட்டு சண்ட புடிச்சன்.”

“அதுக்கு ஒங்கம்மா என்னா சொன்னாங்க?”

“அதுக்கு அந்த ஒங்கப்பன ஒளி மவ சொன்னா. ஆம்பளகூட பேசுறதுன்னா புழங்கிறதுன்னா என்னான்னு தெரியாமியே எம்மாம் புள்ளிவோ பயலுவுள இயித்துக்கிட்டு ஓடிப்போவுதுவோ. கண்ணாலம் ஆவாமியே திருட்டுப் புள்ளெ வாங்குதுவோ. ஒரு பயல சிரிச்சிபேசி மயக்கி இயித்துக்கிட்டுப்போவ ஒனக்கு துப்பு இல்லெ. ஒரு ஆட்டுக்கார பயல, மாட்டுக்கார பயலகூட ஒனக்கு மசக்க தெரியில. சூத்து பெருக்காதவ மொல பெருக்காதவயெல்லாம் புருசன் சேத்துக்கிட்டு ஓடல? அந்த மாரி நீயும் ஒரு பயல புடிச்சி இயித்துக்கிட்டு ஓடன். பொட்டச்சின்னு எதுக்கு சீலய இடுப்புல சுத்திக்கிட்டு திரியிற சாணி உருண்டயாட்டம். நானும் பெத்தன் பாரு புள்ளன்னு. ஊருல புள்ளிவோ எல்லாம் எம்மாம் விகரமா இருக்குதுவோன்னு என்னெ திட்டுனா” என்று சொல்லிவிட்டு பொண்ணு அழ ஆரம்பித்தாள். அழுதுகொண்டே “எப்பிடியாச்சும் ஒரு ஆமபளக்கூட நான் படுத்து எயிந்திரிக்கணுமின்னு அந்த பழிகார முண்டெ படாத பாடுபட்டா.”

“யாரு?”

“என்னெ பெத்த பாவிதான்.” பொண்ணுக்கு அவளை அறியாமலேயே அழுகை வந்தது. அவள் அழும்போது டேவிட்டும் சரி, சேதுபதியும் சரி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அசைந்துகூட உட்காரவில்லை. மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவளாகவேதான் பேசினாள்.

“அதோட எங்கய்யா எங்கம்மாகூட தொழிலுக்குப்போற எடத்துக்கும் போறத வுட்டுட்டன். எம் புள்ளெக்கி ஒரு நல்லது நடக்க மாட்டங்குதின்னு ஆரம்பத்திலெ அயிதா – புலம்புனா. நாளாவட்டத்திலெ அவ கருதரிச்ச நேரம் சரியில்லென்னு சொல்லி என்னியே திட்டுனா. என்னியே குத்தம் சொன்னா.

பூக்காமியே பட்டுப்போனாளேன்னு சொல்லி ராத்திரியில ஒப்பாரி வச்சி அயிவுவா.

ஊரத் திட்டி திட்டியே செத்துபோனா பாவி.” அழுதுகொண்டே சொன்னாள்.

“சாவுறமுட்டும் எங்கய்யாவுக்கும் எங்கம்மாவுக்கும் எங் கவலதான். எங் கவலியிலியே ரெண்டு பேரூம் ஒன்னெ புடி என்னெ புடின்னு காடுபோயி சேந்துட்டாங்க. இப்ப எனக்கு பெத்தவங்க, கூடப்பொறந்தவங்கின்னு யாருமில்லெ. சொல்லி வச்சாப்ல எல்லாம் அவசரம் அவசரமின்னு மண்ணுக்குள்ளார போயிச் சேந்துட்டாங்க. இப்ப நான் மட்டும்தான் மிச்சம். எனக்கும் என்னிக்கி குழிவெட்டணுமோ.”

சிறிது நேரம்வரை யாருமே பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கக்கூட பொறந்தவங்க எத்தன பேரூ?” சேதுபதி கேட்டான்.

“தண்ணீ குடிக்கிறிங்களா? பேச்சி பிராக்குல கேக்க மறந்துட்டன்.”

“வேணாம். வேணாம். நாங்க பாட்டில்ல வச்சியிருக்கம்” என்று சொன்னதோடு ஆளுக்கொரு பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தனர்.

“காசி போட்டு வாங்குனீங்களா?”

“ஆமாம்.”

“எம்புட்டு?”

“பதனஞ்சி ரூவா.”

“பாட்டுல்ல தண்ணீ குடிச்சா நோவு வராதா?”

டேவிட்டும் சேதுபதியும் சிரித்தனர்.

“ஒரு சொம்பு தண்ணீ பாஞ்சி ரூவான்னா தண்ணீக்கே ஒரு நாளக்கி நூறு ரூவா ஆவும் போல இருக்கு. எனக்கெல்லாம் எந்தத் தண்ணீய குடிச்சாலும் ஒரு நோவும் வராது. ஒரு ரூவா அரிசி சோத்தத்தான் திங்குறன். எங்க எனத்து ஆளுவோ பல ஊரு தண்ணீய குடிப்பாங்க. ஆனா ஒண்ணுஞ் செய்யாது. ஊர் ஊரா நாடு நாடா போனாலும், காடு கரன்னு அலஞ்சாலும் கண்ட எடத்தில படுத்தாலும் ஒடம்புக்கு ஒண்ணும் வராது. காசி பணம் புழுத்துப்போனவங்கதான் காசி போட்டு தண்ணீ குடிப்பாங்க. ஒரு பாட்டுலு தண்ணீ பாஞ்சி ரூவான்னா இதான் ஒலக அதிசயம்.”

சேதுபதி சிரித்தான்.

“என்னா?” என்று டேவிட் கேட்டான்.

“ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா, ஒரு லிட்டர் தண்ணீ பாஞ்சி ரூபா அத சொன்னாங்க.”

“ரியலி?” என்று கேட்டு டேவிட் சிரித்தான்.

“காசி போட்டு தண்ணீக் குடிச்சா நாடும் ஊடும் வாயிந்தாப்லதான்” என்று பொண்ணு சொன்னதும் “வெரி குட்”என்றான் டேவிட்.

“ஒங்கக்கூட பொறந்தவங்க எத்தினி பேரூன்னு முன்னெ கேட்டன்”என்றான் சேதுபதி.

“என்னியும் சேத்தா எட்டு உருப்பிடி. எட்டுல நாந்தான் கடசி. பொன்னரும்பு, பூவரும்பு, பூவாயி, பூங்கோத, பூங்காவனம், பூமாரின்னு ஆறு அக்கா எனக்கு. பூமாலன்னு ஒரு அண்ணன். ஏழாவதா நான் பொறந்ததால அடுத்ததும் பொண்ணா பொறக்கக் கூடாதின்னு எனக்கு ஏழாம் பொண்ணுன்னு பேரு வச்சாங்க. ஏழு பொண்ண பெத்து கஷ்டபட்டதால ஊருல ‘கசம்பாயி’ன்னு பேரு வயி. இனிமே பொம்பள புள்ளெ பொறக்காதுன்னு ‘ஊரே பாத்து’ எனக்கு கசம்பாயின்னு பேரு வச்சது. எல்லாரும் இந்த உள்ளங்கை ஊட்டுலதான் பொறந்தம். எங்க அக்காளுவோ கண்ணாலமும் எங்கண்ணன் கண்ணாலமும் இந்த ஊட்டுலதான் நடந்துச்சி. எங்க அக்காளுவோ ஒவ்வொருத்தியும் நாலு அஞ்சி புள்ளென்னு இந்த ஊட்டுலதான் பெத்தாளுவ.

தன்பங்குக்கு எங்கண்ணன் பொண்டாட்டியும் நாலு பொட்ட குட்டிவுள இந்த ஊட்டுலதான் பிதுக்கித்தள்ளுனா. எல்லாம் சேத்தா நாப்பது அம்பது புள்ளீவோ கணக்கு வரும். அத்தன புள்ளிவோ பீ துணியயும், மூத்தர துணியயும் நாந்தான் அலசுனன். அப்பறம் எங்க அக்கா பெத்தபுள்ளிவோ பெத்தபுள்ளிவுளுக்கும், எங்கண்ணன் பெத்த புள்ளிவோ பெத்த புள்ளிவுளுக்கும் நாந்தான் பீ துணியும் மூத்தரத்துணியும் அலசினன்.”

“ஒங்க அண்ணன் ஒங்களுக்கு ஒண்ணும் செய்யலியா?”

“எங்கண்ணன் தரும தொரதான். சாவுற காலமுட்டும் என்னெ கண்ணாத்தான் பாத்துக்கிட்டாரு. வாயிக்குவாயி ‘அம்மா அம்மா’ன்னுதான் கூப்புடுவாறு.

தொழிலுக்கு போயிட்டு ஊட்டுக்கு வந்தா எம் பேரச்சொல்லி கூப்புட்டுக் கிட்டுத்தான் ஊட்டுக்கு வருவாரு. அவரால முடிஞ்ச மட்டும் மாப்ள பாத்தாரு. வெறும் கழுத்தியா சாவணுமின்னு எந்தலயில எயிதியிருக்கும்போது அலஞ்சா மட்டும் காரியம் நடந்திடுமா? அவரால முடிஞ்சமட்டும் ஓடியாடி பாத்தாரு. கடசியில. “சரிவுடும்மா நீதான் நம்ப ஊட்டு ஜக்கம்மா. சாவுறமுட்டும் நானாச்சு ஒனக்குன்னு சொன்னாரு. ஆனா பட்டுன்னு போயிச்சேந்துட்டாரு.”முந்தாணையால் கண்களை துடைத்துக் கொண்டாள்.

“ஒங்கண்ணன் பொண்டாட்டி ஒங்கள பாக்கலியா?”

“அடக்கடவுளே. எங்கண்ணன் கர்ணனுக்கு வந்த மவராசியப்பத்தியா கேக்குறீங்க? அந்த பாதகத்தி பேரூ என்னா தெரியுமா? பொன்னம்மா. பேரூதான் அப்பிடி. அசலு பித்தளதான். பாக்குறதுக்கு பனமரம் மாரி அப்பிடியொரு வளத்தி. அப்பிடியொரு ஒசத்தி. வாயத்தொறந்தான்னா தமுக்குத்தான். அப்பிடி முழங்குவா. ஊருப்பட்ட புளுவு புடிப்பா. அவள மாரி ஒருத்திய இந்த பூலோகத்திலியே நான் பாக்கல. நல்லத்தங்கா நாத்தனாத்தான் அவ. அம்மாம் சூது, அம்மாம் கவடகம். கருநாகம் தான். அவ சிரிச்சி நான் அறிஞ்சது இல்லெ. எங்கண்ணன் செத்த அன்னீக்கும் அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணீ வல்லெ. அப்பிடியொரு பொறப்பு. கருங்கல்லு பொறப்பு. அவ வேற யாருமில்லெ. தாய்மாமன் மவதான். எங்கம்மாளோட அண்ணன் மவ. பேசுனான்னா சீனிக்கட்டியா இனிக்கும். ஆனா குனிஞ்சி நிமிந்து ஒரு வேல செய்ய மாட்டா. அதுக்குத்தான் புழுக்கச்சி நானிருக்கன்ல்ல. அம்மா மகாராணிதான். தொழிலுக்கு போவா. அவ்வளவுதான். ஊட்டு வேல ஒண்ணு செய்யமாட்டா. ஊட்டெ கூட்ட மாட்டா, வாசலகூட்ட மட்டா. மீறிக்கேட்டா வவுத்த வலிக்குதின்னு சூர்போட்டுக்கிட்டு மொடங்கிக்குவா. மோடி வச்சான்னா வச்சதுதான். எட்டு நாளானாலும் மோடிய எடுக்க மாட்டா. ஊட்டு வேலயெல்லாம் எந்தலயிலதான். அவ ஏவுன வேலய செஞ்சிக்கிட்டு ஊத்துன கஞ்சிய குடிச்சிக்கிட்டு கெடந்தன். ஆனா அவ பெத்த புள்ளிவோ அப்படியில்லெ. எங்கண்ணன் குணம்தான். நாலு புள்ளெ பிதுக்கித்தள்ளுன அந்த கண்டார ஒளி ஒரு ஆம்பள புள்ளெய பெக்கல. எங்கண்ணன் பேரச்சொல்ல ஒரு புள்ளெ இல்ல. அவ பொறப்பே ஆம்பள பொறப்புத்தான்.

கட்டாந்தரயாட்டம் இருக்கும் அவ நெஞ்சுமோடு. பொட்டச்சிக்குமாரு இருந்தாத்தான் பகரு. அந்த பரதேசி நாயிக்கு அதுவுமில்லெ. எப்பிடியோ அவக்கூடயும் படுத்து எங்கண்ணன் நாலு புள்ளெயப் பெத்தாரு. நாலும் பொட்டதான்.”

“ஒங்கண்ணிய ஒண்ணுமே செய்யலியா?”

“ஏன் செய்யல? என்னெ வேல வாங்கவே பொறந்தவ மாரிதான் எனக்கு நாளெல்லாம் வேல வைப்பா. அவ வுடுற வேலய செய்யணும், ஊத்துன கஞ்சிய குடிக்கணும். எனக்கு வேல வுடுறத மறந்துப்புட்டு காடு போயி சேத்துப்புட்டா?” என்று சொல்லி சிரித்தாள். அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த பத்து வயது மதிக்கதக்க பிள்ளை வந்த வேகத்திலியே “எங்கம்மா ஊருக்குப் போவுதாம் ஒன்னெ கையோட கூப்புட்டார சொல்லிச்சி” என்று சொன்னாள்.

“நீ போ. இவுங்ககிட்டெ ரெண்டே ரெண்டு வத்த பேசிப்புட்டு வந்துடுறன்.”

“இப்பியே வா.”

“வரன் போ. மூஞ்சி பூரா எதுக்குடி அம்மாம் பகடர பூசி வச்சியிருக்க? பகடர பூசியே பண்டத்துக்குக் கிராக்கிய உண்டாக்குறியாடி?”

“சீ”என்று சொல்லி சிரித்தது அந்தப் பிள்ளை.

“பண்டத்த பதனமா வச்சிக்கடி. ஊருக்குள்ளார ஊருப்பட்டெ ஆடுமாடு இருக்கு. மேஞ்சிட்டுப்போயிட போவுது.”

“ஊட்டுக்கு வா ஒன்னெ வச்சிக்கிறன்”என்று சொல்லி பொண்ணுவின் கன்னத்தில் கிள்ளிவிட்டு அந்த பிள்ளை வெளியே ஓடியது. பொண்ணு கலகலவென்று சிரித்தாள்.

“அவசரமாப் போவணுமா?”என்று சேதுபதி கேட்டான்.

“ஊட்டுவேல செய்யுறதுக்கு கூப்புட்டு இருப்பா.”

“சின்ன வயசுல என்ன வேல செஞ்சிக்கிட்டு இருந்தீங்க.?”

“ஊட்டு வேலதான்.”

“அவ்வளவு வேல இருக்குமா?”

“எங்க மூத்த அக்கா மவளுக்கு எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். எனக்கு ஒரு வயசு கூடுதல. எங்க பெரியக்கா புள்ளெ பெக்க ஆரம்பிச்சதும்தான் எங்கம்மாவுக்கு புள்ளெ பொறக்குறது நின்னுச்சி” என்று சொல்லும்போதே பொண்ணு சிரிக்க ஆரம்பித்தாள்.

“ரியலி?” என்று டேவிட் கேட்டான்.

“அந்த நாளயிலெ தாயும் மவளும் ஒரே நேரத்திலெ புள்ளெ உண்டாயி இருப்பாங்க.”

மீண்டும் சிரித்தாள்.

“எங்க அக்காளுவோ ஆறு பேராச்சா. வருசத்துக்கு ரெண்டு பேராவது வவுத்தத் தள்ளிக்கிட்டு வராம இருக்க மாட்டாளுவ. ஊட்டுல கெடக்குற ஒரே ஆளு நாந்தான? அதனால வவுத்து புள்ளெக்காரிவுளுக்கு நாந்தான் சித்தாளு. எல்லா பாங்கு படுவிதனயும் நாந்தான் செய்யணும். நான் மட்டும் எப்பிடி சும்மா இருப்பன்னு எங்கண்ணியாக்காரியும் நாளு புள்ளெய பிதுக்கித்தள்ளுனா. தன் பங்குக்கு. புள்ளெ பொறக்காத வருசமின்னு ஒண்ணு பாக்கி இருக்காது.

எல்லாப் புள்ளிவோ பீமுத்தரத்தயும் நாந்தான் வாரி வழிச்சி ஊத்துனன். ஊடு பூரா புள்ளிவுளா நிக்கும். பீமூத்திரத்த அள்ளவே எனக்கு நேரம்பத்தாது.

அப்பிடியே நாலு ஓடிப்போச்சி. அப்பறம் எங்க அக்கா மவளுவோ புள்ளெ பெக்க ஆரம்பிச்சாளுவ. புள்ளெ பொறக்கிற ஊடுஊடா என்னெ அயிச்சிக்கிட்டுப் போயிடுவாளுவ. ஊடுஊடா ஊருஊரா போனன். பீமூத்தரத்த அள்ளுறதுக்கு. காயம் அறச்சிப் போடுறதுக்கு. இந்த ஊட்டுல மின்னலாம் ஒரு மாசம் ரெண்டு மாசம் நெலச்சி தரிச்சி இருந்தாலே பெரிசி. புள்ளெ பொறக்கப் போவுது வான்னு சொல்லி யாராச்சும் வந்து இயித்துக்கிட்டுப் போயிடுவாளுவோ. போன மாசம்கூட பத்து நாளு மெட்ராசில எங்கண்ணன் பேத்தி ஊட்டுல இருந்தன்.”

“மெட்ராசிலயா?”

“ஆமாம்.”

“அங்கியே இருக்க வேண்டியதுதான்.”

“சீ. கருமத்த, அது ஒரு ஊரா? பேயி புடிச்சாப்ல சனங்க அலயுதுவோ. தெருவுல நிக்க முடியல. நடக்க முடியல. மோட்டாரும் வண்டியுமா ஓடுது, அதுல யாரு எப்ப அடிப்பட்டு சாவாங்கின்னு தெரியில. அதுக்கும் மேல எங்கண்ணன் பேத்தி இருந்த ஊடு பொட்டியாட்டம் ஒரு கை அகல ஊடுதான். அதுல எத்தன பேரூ இருக்கிறது? எனக்கு பாம்பப் புடிச்சிபொட்டியில அடச்சிவச்சாப்ல இருந்துச்சி. என்னால இந்த ரவ எடத்திலெ இருக்க முடியாதுன்னு ஓடியாந்துட்டன்.”

“இந்த வீடும் சின்ன வீடுதான்?”என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சேதுபதி.

“தலய சாய்க்கிறதுக்கு மட்டும்தான் இந்த ஊடு. எல்லா வேலயும் வாசல்லயும் தெருவுலயும்தான்.”

“அது சரிதான்.”

“மெட்ராசில அப்பிடியா? சோறு ஆக்குற எடமும், பீ மூத்தரம் பேளுற எடமும் ஒண்ணுதான். நடுவுல செவுறு ஒண்ணுதான். அது எனக்குப் புடிக்கல. ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டன்” என்று சொல்லிவிட்டு புது கல்யாண பெண்மாதிரி பொண்ணு சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சேதுபதியும் டேவிட்டும் சிரித்தனர்.

“வெளியூர் போவாதப்ப, என்னா செய்வீங்க?”

“சும்மா குந்தியிருந்தா ஏனத்திலெ சோறு வந்துடுமா? பச்சப் புள்ளக்காரிவோ, பாலுக்காரிவோ புள்ளிவுள வச்சியிருப்பன். பொடச்சி தொவச்சி தருவன். ஏனம்பானம் கழுவி தருவன். இட்டெ வேல இடாத வேலன்னு செய்வன். ஊடு மொழுவி, மொறம் மொழுவி தருவன். இந்த வேலன்னு இல்லெ. எல்லா வேலயும் செய்வன். கஞ்சி கொடுத்தா குடிச்சிட்டு வந்து மொடங்கிக்குவன்.”

“காட்டுவேலக்கெல்லாம் போவீங்களா?”

“அந்த வேலயெல்லாம் எனக்கு ஒத்துக்காது.”

“ஏன்?” என்று வியப்புடன் கேட்டான்.

“எங்க பெரியக்கா மொத புள்ளெ பெக்கற முட்டும்தான் ஆடுமேய்க்க, மாடுமேய்க்க, கம்பறக்கன்னு போனன். அப்பறம் புள்ளெய வச்சிக்க ஆரம்பிச்சனா. அதுலபத்து பாஞ்சி வருசம் ஓடிப்போச்சி. தொழிலுக்கும் போவ மாட்டன்.”

“அப்ப நீங்கதான் ஒங்க வீட்டு டாக்ட்டரு” சேதுபதி சிரித்தான்.

“ஊட்டுக்கு மட்டுமில்லெ. ஊருக்கும் நாந்தான். இருபது இருபத்தி அஞ்சி வருசமா ஊருல யாருக்கு புள்ளெ பொறந்தாலும் மொதல்ல என்னெத்தான் கூப்புடுவாங்க. புள்ளெக்கி எப்பிடி பாலு கொடுக்கிறது. புள்ளெ வவுத்தில பாலு தங்கலன்னா என்னா செய்யுறதுன்னு நாந்தான் சொல்லுவன். செய்வன், ஊருல இருக்கிற பொட்டச்சிவுளுக்கெல்லாம் நாந்தான் காயச்சோறு ஆக்கிப் போட்டன்.

இப்பத்தான் புள்ளெ தரிச்ச நாளுலயிருந்து ஆசுபத்திரி ஆசுபத்திரின்னு ஓடுறாளுவ.”

“அப்பிடின்னா ஊருல ஒங்கள நல்லப்படியா பாத்துக்குவாங்க.”

“ஆமாம். எல்லாரும் எங்கையில பொறந்த புள்ளீவோதான?”

“கல்யாணம் நடக்கல. அது ஒண்ணுதான் குறை. மனக்கஷ்டமா இருக்கா?”

“சின்ன வயசில வெள்ளரி பிஞ்சாட்டம் இருப்பன். ஊருசனமே என்னப் பாத்து மெச்சிபோவும். அப்ப எங்கம்மாகிட்டெ ‘பொண்ணா பெத்து வச்சியிருக்கிற?

தங்கத்த இல்ல பெத்து வச்சியிருக்கிற. ஒத்த ரூவா பணம் செலவு இல்லாம ஒரு படி அரிசி செலவு இல்லாம ஒம் பொண்ணெ கொத்திக்கிட்டு போயிடுவானுவோ பாரு’ன்னு சொல்லுவாங்க. யாரு கண்ணுபட்டுச்சோ. என்னெ தூக்கிக்கிட்டுப்போயிட்டானுவ. காலமும் நேரமும் கூடி வந்தப்ப கழுத குறுக்கால வந்துச்சாம்ங்கிற கதெதான். ‘எம் புள்ளெக்கி ஒரு மஞ்ச கவுத்த கொடு. ஒனக்கு அக்கினி சட்டி தூக்கி பூ மிதிச்சி, மொற பூச செஞ்சிக்கிட்டு வர்ற’ன்னு ஜக்கம்மாகிட்டெ நேந்துகிச்சி. பொங்க வைக்கிறன். கெடா வெட்டுறன். கோயி காவு கொடுக்கிறன். குதிர கட்டி வைக்கிறன்னு வேண்டாத நாளில்ல. வெள்ளாமயில கழுத வாய வச்சாப்ல என்னெ தூக்கிக்கிட்டுப்போயி சீப்பட்டு சீரழிய வைச்சிட்டானுவ.”

“ஒங்கள ஊருல கிண்டல் கேலி செய்வாங்களா.”

“குத்தம் சொல்லி பேச மாட்டாங்க. அந்த காலத்தில ஐயோ பாவமின்னுதான் சொல்லுவாங்க. எஞ்சோட்டு பொண்டுவோதான் என்னெ ஒரு மாதிரியா பேசுவாளுவோ.”

“எப்பிடி?”

“எனக்குமட்டும்தான் எங்க ஊருல கண்ணாலம் நடக்கல. மத்தவங்களுக்கெல்லாம் நடக்கத்தான செஞ்சிச்சி. எங்க ஊருல கேணையன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு சரியா வாய் பேச முடியாது சரியா நடக்கவும் முடியாது. வேலக்கி வித்தக்கி போவமுடியாது. ஏனத்துல இருக்கிற சோத்தக்கூட திங்க முடியாது. இடுப்பு வேட்டியக்கூட கேணமாணன்னுதான் கட்டுவான். நடக்கறதுக்கூட இயித்து இயித்துதான் நடப்பான். சாவுறமுட்டும் ஊட்டாளாவே இருந்தான். அவனயும் கட்டிக்கிட்டு ஒரு மவராசி ரெண்டு புள்ளயையும் பெத்தா. அந்த மாரி எங்க ஊருல நொண்டிப்புள்ளன்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு வலதுகை சூம்பிப்போயி இருக்கும். கிரணத்துல அடிப்பட்டு மே ஒதடு கிழிஞ்சிப்போயி இருக்கும்.

பாக்கறத்துக்கு அப்புடி இருப்பா. அவ கையால தண்ணி வாங்கி குடிக்க முடியாது. ஆனா அவுளுக்கும் கண்ணாலமாச்சி. என் வயசில கண்ணாலம் ஆனவளுவோ, எங்கூட கூடி வௌயாண்டவ எல்லாம் கண்ணாலம் கட்டிக்கிட்டுபோன மொத நடெ புருசனோட வருவாளுவோ. அடுத்து வரயில வவுத்தத் தள்ளிக்கிட்டு வருவாளுவ.

மறுவருசம் பாத்தா வவுத்தில ஒண்ணு இடுப்புல ஒண்ணுமா வருவாளுவ. வழியில தடத்தில கண்டு வழி மறிச்சி கேட்டா ‘ஒனக்கென்னா கொடுத்துவச்ச புண்ணியவதி. புருசனா புள்ளெயா? இன்னிக்கி பூராவும் இந்த எடத்திலியே நின்னு பேசிக்கிட்டேயிருந்தாலும் என்னா ஏதுன்னு கேக்கறதுக்கு ஆளிருக்கா? மாமனா மாமியா புடுங்கலா? நாத்தனா கொழுந்தனா கொந்தலா? நானு அப்பிடியா? நானு இன்னம் செத்த நேரத்தில போவலன்னா இன்னமுட்டும் எங்கடி போயிருந்த தேவிடியா, புது மாப்பள புடிக்கப் போயிட்டியா’ன்னு கேட்டு மொளக்குச்சிய கழட்டிக்கிட்டு எம் பிரிசன் அடிக்கிறதுக்கு ஓடியாருவான். அவன தாண்டி போன ‘ஊரு சுத்துற மாட்டெ எதுக்குடா ஊட்டுல வச்சியிருக்கிற மானங்கெட்ட பயல. இப்பியே அவ மசுர அறுத்து மானபங்கப்படுத்தி அடிச்சி ஓட்டிவுடு. அவ அப்பன் ஊட்டுக்கு’ன்னு எம் மாமியாக்காரி தூவம் போட்டு வுடுவா. அதுக்குமேல அம்மாள காணுமேன்னு புள்ளிவோ மொகம் வாடிப்போயி கெடக்குங்க. ஒவ்வொன்னும் உசுருப்போறாப்லதான் ஊர கூட்டிவச்சி அயிவும். இதுல எங்க ஒங்கிட்டெ பேசுறது? ன்னு கேட்டுட்டு போவாளுவ. அப்பத்தான் நான் அயிவுவன்.”

பொண்ணு லேசாக கண்கலங்கினாள். மூக்கை உறிஞ்சினாள். முந்தாணையால் கண்களை துடைத்துக்கொண்டு அலுப்பான குரலில் சொன்னாள். “புருசன் பாக்காத கோலம் பொண்டாட்டி கோலம். வெறும் கோலம். ஒலக்கய காணாத ஒரலுண்டா ஒலகத்தில? எனக்கு கண்ணாலம் ஆவல. புருசன் இல்லெ. புள்ளெ இல்லன்னு நான் ஒரு நாளும் அயிதவளில்லெ. கண்ணாலம் கட்டிக்கிட்டுப் போனவளுவோ படுற பாட்ட பாத்தாலேயே யே அப்பா. கழுத்த நீட்டுன பாவத்துக்கு சீரு வரிச வண்டி நெறயா கொடுக்கணும். பொங்க சீரு, தீவாளி சீருன்னு கொடுக்கணும். அப்புறம் புள்ளெ பொறப்பு, புள்ளக்கி பொறந்த முடி எடுப்புன்னு பாக்கணும். மாமனா மாமியா செத்தா அதுக்கும் கல்லு கருமாதி எடுக்கணும். துணிமணி, நக நட்டுன்னு எடுத்துப்போடணும். எல்லாத்தயும் வாங்கிக் கொடுத்துப்புட்டு அவன் கொடுக்கிற அடியயும், ஒதயயும் வாங்கணும். அப்பறம் அவன் பெத்த புள்ளெயோட பீ மூத்தரத்தயும் அள்ளிக் கொட்டணும். எல்லாத்தயும் கணக்கு பாத்தா இந்த ஆம்பள நாயிவோ மூஞ்சியிலியே முழிக்கக் கூடாதின்னு இருக்கு. இத்தினி வயசுக்கும் என் திரேகத்திலெ ஆம்பள வாட பட்டதே இல்லெ.”

“பாவம்தான். உள்ளுர்லதான் ஒங்கள கட்டிக்க யாரும் வல்லெ. சொந்த பந்தத்தில் ஒரு ஆள புடிச்சி ஒங்க ஊட்டுல கட்டிவைக்கலியா? ஒரு ஆமபள கூடவா இல்லெ. சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.” என்று சேதுபதி அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

“ஐயனாரு செலயாட்டம் மீச வச்சிக்கிட்டு எம்மானோ பேரு இருந்தாங்கதான். இல்லன்னு சொல்லல. பிறத்தி ஆளுவுளாவது ‘இந்த வயசிலியே இப்பிடி ஆயிப்போச்சே’ன்னு வெளிய சொல்லாம ஜாதகம் சரியில்லெ, பொருத்தம் சரியில்லெ, கிரகம் சரியில்லன்னு சொல்லிட்டுப்போனாங்க. ஆனா உத்த ஆளுவோதான் ‘ஜாதக குத்தம், கிரக குத்தம் இருந்தாக்கூட கட்டிக்கலாம். இந்தப் பொண்ணுக்கு பேரீல்ல குத்தமா இருக்கு. பேரு குத்தமுள்ள புள்ளய கட்டிக்கிட்டுப் போயி எந்தூர்ல குடும்பம் நடத்துறது. புள்ளெ குட்டி பெக்கிறது? திருட்டுப்போன பொண்ணு இதான்னு எப்பிடிச் சொல்றது’ன்னு மூஞ்சிக்கு நேராவே கேட்டாங்க.”

“ஊருபஞ்சாயத்து சாதிபஞ்சாயத்து ஒண்ணும் இதுக்கு வைக்கலியா?.”

“யாராச்சும் என்னெ தொட்டியிருந்தா வைக்கலாம். அதுக்குத்தான் வையி இல்லியே. இன்னார்ன்னு ஆளு அடயாளமும் தெரியில. அப்பறம் எங்க இருந்து எனத்துப் பஞ்சாயத்த, ஊரு பஞ்சாயத்த கூட்டுறது. மீறி பஞ்சாயத்துக்குப் போனாகூட ‘ஒருவாட்டி எங்கூட படுக்க வரீயா’ன்னு கூப்புடுவானுவ.”

“அதுவும் சரிதான்.”

“கடசிகடசின்னு எம் பிரிசனுக்கு ரெண்டாம்தாரமா கட்டிவைக்கிறனு எங்க மூணாவது அக்கா பூங்கோத வந்து கேட்டா. கட்டி வைச்சாலே சரின்னு ஒரே புடியா நின்னா. எனக்கும் வயசி கூடிப்போச்சி. அக்கா பிரிசன கட்டிக்கிறது அப்ப சாதாரணம் தான்” என்று சொல்லி சிரித்துவிட்டு சொன்னாள். “மூணு பிள்ளெ பெத்தவன்தான். இருவது வயசி கூடுதலதான். முத்துன கிழவன்தான். சரி என்னாப் பண்றது? அங்க இங்க போறதவிட சொந்த அக்கா கிட்டியே போறது நல்லதுன்னு எங்கூட்டுல ஒத்துக்கிட்டாங்க. சரின்னு எங்க அக்காவும் போயிட்டா. தேதி வைக்கிறது ரெண்டு நாளு இருக்கயில எங்க மச்சான்காரன் தொழிலுக்குபோற வழியில பொழுது அடஞ்ச நேரமா வந்து எங்கிட்டெ ரகசியமா ‘வா நம்பரெண்டு பேரூம் ஒண்ணா முண்ணா பேசி பழகி இருக்கலாம். எனக்கு அடங்குனவளான்னு பாத்திட்டு தாலிய கட்டுறன்’னு சொன்னான். அடச்சீ. இவனும் ஒரு ஆம்பளயான்னு ஒரே புடியா மாமன நான் கட்டிக்க மாட்டன்னுட்டன். மீறுனா மருந்த அறச்சி குடிச்சிடுவன். தூக்குல தொங்கிடுவன்னு சொல்லி அயிதன். அடிச்சி ஒதச்சிப் பாத்தாங்க. நான் எதுக்கும் அடங்கல.”

“அப்பறம் என்னாச்சி?”

“அதோட அந்த கண்ணாலம் நின்னுப்போச்சி. அப்பறம் அவன் மூஞ்சிலியே நான் முழிக்கல. ஊட்டுக்கு வந்தாக்கூட நான் என்னா ஏதுன்னு பேசுனது கெடயாது. அவன் சாவுற முட்டும் ஒரு வாத்த நான் பேசல. அவன் செத்த்துக்குக்கூட நான் போவல. கருமாதிக்கும் நான் போவல. எங்க அக்கா சாவுறமுட்டும் கேட்டுப்பாத்தா நான் விசியத்த ஒடைக்கல. ஒருத்தங்க சொத்து இன்னொருத்தங்களுக்கு பாத்தியமாவுமா? எதுக்கும் ஒதவாத ஆட்டுப் புழுக்கன்னாலும் தனிதனிதான்.”

“வெரி குட்” என்றான் டேவிட்.

“ஊருக்கெல்லாம் இவுரு சண்டியரு, என் சாண்ட குடிக்க வந்த மண்டயருன்’னு அப்பறம் எங்கம்மா வகயிறாவுள ஒருத்தன புடிச்சாந்தாங்க. பேரு கருப்புசாமி. பேருக்கேத்த மாரியே இருந்தான். மொத தாரம் செத்துப்போச்சி. ரெண்டாம்தாரம் வாய புடிக்கிலன்னு ஓடிப்போச்சி. அஞ்சிப்புள்ளெக்கி தாயா இருக்கணுமின்னு மூணாம்தாரமா என்னெ முடிக்க வந்தான். கெயவனுக்கு கட்டிவைக்காதீங்கின்னு எங்க ஊட்டுல சொன்னா வாய மூடுன்னு என்னெத்தான் அடிக்க வராங்க.ஊருல, ஊட்டுல சொன்னதால சரின்னு நானும் ஒப்புக்கிட்டன். அவன் ஆளு எப்பிடின்னா கம்பந் தட்டயாட்டம் வெடுக்குவெடுக்குன்னு இருப்பான். வறட்டு இருமலுக்காரன். செத்த நேரம் பேசுனா செத்த நேரம் மூச்சு வாங்குவான். அவனோட மொத மவனுக்கும் எனக்கும் அஞ்சி வயசிதான் கம்மி. எனக்கு அஞ்சி வயசி கூடுதல. இதுவும் விதியாடா கடவுளேன்னு மருவிப்போறன்? சரி ஊருக்கும் பேரூக்கும் கன்னி கழிஞ்சமின்னு பேராயிடுமின்னு இருந்தன். அப்ப அவ மவளுவோ ரெண்டு பேரூ வயசி வந்து ஊட்டுல குந்தியிருக்காளுவ. கடசியில அவங்கூடயும் நான் தாலிக்கட்டிக்கிட்டு வாயறதுக்குப் போவல.”

“அடக்கடவுளே! என்னாச்சி?”

“என்னெ புடிச்ச சனியன் என்னெ சேந்தவங்களயும் புடிச்சிக்கிச்சி. அது வேசட காலம். வெளியூருக்கு தொழிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு ஊருல ஒரு ஊடு தீ புடிச்சி எரிஞ்சிக்கிட்டிருந்திருக்கு. அதெ வேடிக்கப் பாக்க ஓடுனவன்தான். ஓடுறப்பவே மயக்கமாயி கீய வியிந்து வாயாலயும் மூக்காலயும் ரத்தம் வந்து செத்துப் போனான். என் கண்ணாலமும் நின்னுப்போச்சி. ஏழாமிடத்து சனி எடத்த வுட்டு துரத்தும், ஒம்பதாம் எடத்து சனி ஒறவுக்காரங்கள கொல்லும்ன்னு சொல்லுவாங்க.”

“வெரி பேட் லக்” டேவிட் சென்னான்.

“கண்ணாலமாயி அந்தாளு செத்திருந்தான்னா என்னோட கிரகம்தான் அவன அடிச்சிடிச்சின்னு சொல்லியிருப்பாங்க.”

“அதுக்கு ஊருல என்னா சொன்னாங்க?”

“ஊரு வாய்தான் நாறவாயாச்சே. ‘வயசுக்கு வந்து தீட்டுக்கழிச்சி ஊட்டுக்கு அழக்கிறதுக்குள்ளார திருட்டுப்போயிட்டா. சொந்த அக்கா பிரிசன்கூட பேசி முடிச்ச கண்ணாலம் நின்னுப்போச்சி. கடசியா நாளு, தேதி குறிச்சிட்டுப்போனவனும் செத்துப்போயிட்டான். ஆம்பள ராசி கொண்டவ. அதான் கண்ணாலம் ஆவல’ன்னு பேசுனாங்க. வெறும் வாயாலியே கதய கட்டிவுட்டுட்டாங்க. பொண்ணு கேக்க வந்தவனெல்லாம் இந்த கதயகேட்டுட்டு வந்த அடி மாறாம திலுப்பிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்பிடியே காலம் ஓடிபோச்சி. எனக்கு தலயும் நறச்சிப்போச்சி. இப்ப கிழவியும் ஆயிட்டன்.”

“ஒங்கம்மா சொன்ன மாதிரி நீங்களே ஒங்களுக்குப் புடிச்ச ஒரு ஆளக் கட்டியிருக்கக் கூடாதா?”

“திருட்டுப்போன பொண்ண வச்சி எவன் வாயிக்க செய்வான்? சொல்லிக்காட்டி சொல்லிக்காட்டியே சாவடிப்பானுவோ. கண்ணாலம் ஆவாட்டியும் போவுது. வாணலுக்குப் பயந்துகிட்டு அடுப்புல விழ வேணாமின்னு இருந்தாலும் எங்கம்மா வுடல.”

“என்னா செஞ்சாங்க?”

“அடெ நீ ஒண்ணு. ஒரல வச்சிக்கிட்டு என்னா செய்ய, ஒலக்க வாணாமா? ஒரலும் ஒலக்கயும் ஒண்ணா இருந்தாத்தான மாவு இடிக்க முடியும்? சொல்லுக்கு மடங்காத புள்ளெய பெத்தனேன்னு குடிச்சி கஞ்சி கூட்டுல தங்காம எங்கம்மா சாமி ஆடுவா. எங்கம்மாக்காரி புடுங்கலு தாங்க முடியாம வெக்கம் உதிந்துப்போயி அதெயும் தான் செஞ்சிப் பாத்தன். இங்க வடக்கால தெருவுல பாண்டியன்னு ஒருத்தன் இருந்தான். இப்ப அவன் செத்துப்போயிட்டான். பாக்குறதுக்கு கண்ணுக்கு நெறமா இருந்தான். எம் பேருல அவனுக்கு ஒரு இது இருந்துச்சி. எனக்கும்தான் இருந்துச்சி. நான் போறவர்ற எடமெல்லாம் நெயலாட்டம் கூடவே வருவான். பீ மூத்தரம் பேளப்போனாக்கூட கூடவே வருவான். நானும் அவங்கிட்டெ மொகம் கொடுத்து பேசுனன். எங்க ஊட்டுக்கு போக்கு வரத்தா இருந்தான். கட்டுனா இந்த புள்ளெயத்தான் கட்டுவன்னு நின்னான். நான் தோட்டம் தொறவுக்குப் போனா புள்ளிவோயெல்லாம் ‘பாண்டி பாண்டி‘ன்னு எம் பின்னால கத்துங்க.”

“வெரி இண்ட்ரஸ்டீங்க்” சிரித்துக்கொண்டே டேவிட் சொன்னான்.

“பாண்டிக்கி என்னாச்சி?” சேதுபதி கேட்டான்.

“நாயக்க குட்டிய நீ எப்பிடி கட்டுவ. அதுலயும் அவ திருட்டுப்போனவ. எல்லாத்துக்கும் மேல நம்ப சாதி என்னா, அவ சாதி என்னா? மை, மந்திரம், பில்லி, சூனியம், வைப்புன்னு வைக்கிற சாதி. பொண்டாட்டி புள்ளெக்கி கஞ்சி ஊத்த வக்கத்துப்போயி வாக்கு சொல்றன், சோழிப்போட்டு குறி சொல்றன்னு குடுகுடுப்பய ஆட்டிக்கிட்டு எரக்கப்போனாலும் நெறக்கப்போறன்னு ஊர்ஊரா திரியுற கூட்டம். செவத்த தோலுக்காக சாதி மாத்தி கட்ட முடியாது. மீறி கட்டுனா நீ கைகாலோட போவ வேண்டியதுதான். இந்தாப்பாரு நான் தூக்குல தொங்கப்போறன்’னு மாட்டு கவுத்த அவுத்துக்கிட்டு ஓடுனான் அவன் அப்பங்காரன். போறதுக்கு மின்னாடியே இந்த கூத்துன்னா, போன பின்னால என்னா கூத்தெல்லாம் நடக்குமோ, அவனது வலுத்த குடும்பம், என்னுது பஞ்சக் குடும்பமாச்சேன்னு ஆம்பள பயலுவோ ஒறவே வாணாமிண்டா சாமின்னு அந்த பயல மறந்திட்டன். “இதுல பயப்படுறதுக்கு என்னா இருக்கு?”

“தேவமாரு பெரும் கூட்டம். அடிதடி வெட்டுகுத்துக்கு அஞ்சாத சாதி. எங்க எனம் அப்பிடியில்ல. தெனம் ஒரு ஊருக்குப் போறக்கூட்டம். எங்க ஆளுவோ சண்டக்கிப் போவ மாட்டாங்க. வலுவில்லாத கூட்டம். நாடோடிதான.”

“பாண்டிக்கு என்னாச்சி?”

“அடுத்த ஆறாம்மாசம் உள்ளூரிலியே ஒரு பொண்ண பாத்து அவன் அப்பன் கண்ணாலத்த முடிச்சிட்டான். அஞ்சி மக்கள பெத்துப்புட்டு அவனும் செத்துப்போயிட்டான்” என்று சொல்லும்போது பொண்ணுக்கு சிரிப்பு வந்தது. கல்யாண பெண்மாதிரி வெட்கப்பட்டு சிரித்தாள். ஆனால் சேதுபதிக்கும் டேவிட்டுக்கும் சிரிப்பு வரவில்லை. எந்த விதத்திலியாவது அவளுக்கு கல்யாணம் நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

”பாண்டி என்னா சாதி?” டேவிட் கேட்டான்.

”தேவரு.”

”பாண்டியோட அப்பா பேரூ?”

”தங்க பாண்டி தேவரு.” டேவிட் குறித்துக்கொண்டான்.

”அதுக்குப்பின்னால ஒங்கள யாரும் பொண்ணு கேட்டு வரலியா?”

”அப்பப்ப எவனாச்சும் நெனப்பு எடுத்துக்கிட்டாப்ல வருவான். பேசுவான். போயிடுவான். பத்து இருவது வருசம் இதான் நடந்துச்சி. எல்லாரும் என்னெ ஊர்க்காலி மாடா வச்சிக்கத்தான் ஆசப்பட்டாங்க. ஒருத்தனும் தொழுவத்து மாடா வச்சிக்க விரும்பல. நான் பாத்தன். வயசும் முப்பதுக்குமேல ஆச்சி. போங்கடா நீங்களுமாச்சு ஒங்க சாமானுமாச்சுன்னு ஒரேடியா கண்ணாலம் வாணாமின்னுட்டன். இந்தா அந்தான்னு எனக்கும் வயசாயிப்போச்சி. ஒடம்புல இருந்த நீரும் சுண்டிப்போச்சி. சின்ன வயசுல சீனி கிழங்காட்டம் இருப்பன். இன்னமுட்டும் நான் ஒரு ஆம்பளகூட படுத்ததில்ல தெரியுமா?” பொண்ணுவின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிற்று. சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். காரணமே இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் டேப்ரிக்காடரை சரி செய்வதுமாக உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கம்மாதான் மை, மந்தரம்ன்னு செய்யுற ஆளாச்சே. ஒங்களுக்கு அந்த மாரி ஒண்ணும் செய்யலியா?”

“ஊருக்குத்தான் பலிக்கும். ரத்த ஒறவுல செஞ்சா பலிக்காது.”

“ஊருக்கெல்லாம் குறி சொன்ன ஒங்க அப்பா அம்மா ஒங்களுக்கு ஒன்னும் சொல்லலியா?“

“யாருக்கு எப்ப கண்ணாலம் நடக்கும், யாருக்கு எப்ப புள்ள பொறக்கும், யாருக்கு எப்ப நல்லது நடக்கும்ன்னு சொன்ன எங்க அம்மா எனக்கு எப்ப என்னா நடக்கும்ன்னு ஒரு வார்த்த சொல்லல. ”கலியாணம் கட்டி, குழந்த, குடும்பமின்னு இருந்திருந்தா சந்தோசமா இருந்திருக்குமா?”

”ஊருல ஒலகத்தில இருக்கிற பொண்டுவோ படும்பாட்டெ பாக்கயில என் சீவனம் மோசமில்லெ. நேத்துத்தான் என்னெ மந்தயில போயி குமரிப்புள்ளெ குச்சல்ல குந்தவச்ச மாரி இருக்கு. இன்னிக்கிப் பாத்தா கிழவியா குந்தியிருக்கன். காலம் ஓடிப்போச்சி. என்னெ சாக்குல போட்டு கட்டிக் கொண்டாந்து வுட்ட அன்னிக்கி எனக்கு ஒரு அரளி வெதகூட பஞ்சமாபோச்சி. மருந்துகுடிச்சி, தூக்குல தொங்கி சாவணுமின்னு எம் மனசுல படல. அப்ப எனக்கு எள வயசு. சிரிக்கிற மனசு. எங்கூட பொறந்தவங்க, கூட இருந்தவங்க, பெத்தவங்கன்னு எல்லாரும் மண்ணுக்குள்ளார போயிட்டாங்க. நான் மட்டும் குந்தியிருக்கன்.”

”கவலப்படாதீங்கம்மா.”

”எனக்கு நல்ல பொழப்பு கெடயாது. வெறும் வாளியா கெடக்குறன். சேட்டமில்லாம, மண்டயிடி, தலயிடின்னாத்தான் கேக்குறதுக்கு ஆளில்ல. பொண்ணா பொறந்தது குத்தமாப்போச்சி.” பொண்ணுவின் கண்கள் கலங்கியதும் ”அழுவாதீங்கம்மா” என்று சேதுபதி சொன்னான். அவன் சொன்னதை பொருட்படுத்தா மாதிரி தன்போக்கில் சொன்னாள்.

”எவனயாச்சும் இயித்துக்கிட்டு ஓடண்டி. ஊரு ஒலகம் பேசுனா போவுது. திருட்டுப் புள்ளயாவது வாங்கிக்கன்னு ராவும் பகலும் புலம்பி புலம்பியே செத்துப்போனா அந்த சண்டாளி.”

பொண்ணுவின் மனதையும் பேச்சையும் மாற்ற நினைத்த சேதுபதி. “அந்த சமயத்திலெ நான் பொறந்திருந்தா சத்தியமா ஒங்கள நான் கட்டியிருப்பன்” என்று சேதுபதி சிரித்துக்கொண்டே சொன்னான். கொஞ்சம்கூட யோசிக்காமல் “சோலி முடியுற மட்டும் எல்லா ஆம்பள நாயிவுளும் ‘பொம்பளய ‘சக்கர சக்கர‘ம்பானுவோ. சோலி முடிஞ்சதும் ‘கழிசட, கழிசட‘ம்பானுவோ” என்று பொண்ணு சொன்னதும் சேதுபதியின் முகம் தொங்கிப்போயிற்று. டேவிட் வாய்விட்டுச் சிரித்ததும் சேதுபதியும் சிரித்தான்.

“அந்த காலத்தில குஞ்சி தடிக்காத பயளுவோ எல்லாம் எஞ்சூத்து பின்னாலியேதான் திரிவாங்க. எங்க ஊட்டடியே சுத்திசுத்தி வருவாங்க.”

“எதுக்காக?”

“ஊருல வழுக்கி விழுந்தவங்கிற பேரோட ஆளில்லாம ஒத்தயில சும்மா இருந்த பொண்ணு நான் மட்டும்தான? அதுக்குத்தான்” என்று சொன்ன பொண்ணு ஒரு புதுமணப்பெண் மாதிரி வெட்கப்பட்டு சிரித்தாள். மறுநொடியே அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

“ஆனாலும் என் வவுறு தரிசப்போச்சி.”

”சின்ன வயசில எப்பிடியிருந்தீங்க? என்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க?”

”இந்த ஊட்டுலதான் பொறந்தன். இந்த வாசப்படியிலயும், தெருவுலயும்தான் வளந்தன்.”

”கல்யாணம் ஆகாததால ஒங்க வாழ்க்க வீணாப்போயிடிச்சின்னு நெனக்கிறீங்களா?”

”வாழ்க்க வாழ்க்கன்னு சொல்லுறியே அது என்னா கல்லூடா? இப்பிடி கட்டலாம் அப்பிடி கட்டலாமின்னு சொல்றதுக்கு, செய்யுறதுக்கு? பெய்யுற மழ வெள்ளமா ஆத்துல ஓடுமா, ஓடயில ஓடுமா, கம்மாயில தேங்கி நிக்குமான்னு யாருக்குத்தெரியும்? எல்லாம் மனசுதான். ஒருத்தங்கூட படுக்கல. ஒரு புள்ளக்கி பாலு கொடுக்கல. வேற என்னா கொற? இடுப்பு மறைக்கிறதுக்கு ஒரு வட்டுத்துணி, வவுறு காயாம இருக்கிறதுக்கு ரவ கஞ்சி. அதுக்குமேல என்னா வேணும்? நகநட்டயா திங்க முடியும்? ஏதோ பொறந்தம் வளந்தம் செத்தமின்னு போவணும். புள்ளெ மக்கள பெத்தவங்க மட்டும் சாவாம இருக்கப் போறாங்களா?. யாரயோ தூக்கப்போயி என்னெ தூக்கிட்டுப் போயிட்டாங்க. அதுக்கு யார குத்தம் சொல்றது? தெனம் தெனம் சமுத்திரத்தில குதிக்கிறவனுக்கு சமுத்திரம் பெருசா?”

பொண்ணுவின் மனநிலையை மாற்ற நினைத்த சேதுபதி கேட்டான்: ”ஒங்கள மந்தயில உட்கார வச்சப்ப துணைக்கு யாரு இருந்தாங்க?”

வாய்விட்டு சிரித்த பொண்ணு. ”தீட்டுக்காரிச்சிக்கூட யாரு இருப்பாங்க? தனியாத்தான் இருக்கணும். ராத்திரியில மட்டும் பரணுக்குக்கீழ எங்கப்பா படுத்திருப்பாரு. பகல்ல தனியாத்தான் குந்தியிருக்கணும்.”

”எப்பிடி சும்மாவே குந்தியிருப்பீங்க?”

”பொயிதுபோறதுக்கு ஆடு புலி ஆட்டம், தாயங்கட்ட, பள்ளாங்குழி, புளியமுத்து ஆட்டமின்னு ஆடிக்கிட்டிருப்பன்.”

”யாருகூட?”

”ஒத்தயிலதான்”

”ரியலி?”என்று வியப்புடன் கேட்டான் டேவிட்.

”இந்த ஊருல யாரு வயசுக்கு வந்தாலும் மந்தயிலதான் குடிசப்போட்டு தங்கவைப்பாங்களா?”

”எங்க எனத்துல மட்டும்தான்.”

”இப்பியுமா?”

”ஆமாம்.”

”உண்மயத்தான் சொல்றீங்களா?”

”ஜக்கம்மா மேல சத்தியம்.”

”இப்ப யாராச்சும் வயசுக்கு வந்து இருக்காங்களா?”

”போன புதன்கிழம கௌதமின்னு ஒரு பொண்ணு வயசுக்கு வந்தா. இப்ப அவ மந்தயில குமரிப்புள்ள குடிசயிலதான் குந்தியிருக்கா. போனிங்கின்னா பாக்கலாம்.”

“ரியலி ரியலி…… ரியலி ரெண்டாயிரத்து பதிமூணுலயும் அப்பிடி இருக்கா?” என்று திரும்பத்திரும்ப கேட்டான் டேவிட்.

“இப்பிடியே சோத்துகை பக்கமா போனா, குமரிப்புள்ளெ குடிசயில அந்தக்குட்டியப் பாக்கலாம்.”

“போவும்போது பாத்துக்கிறம். ஒங்கப்பா அம்ம எப்ப செத்தாங்க? ஒங்கண்ணன் எப்ப செத்தாரு? அவுருக்குப் பின்னால ஒங்களுக்கு யாரு ஆதரவா இருந்தாங்க?”

“என்னோட எளம் வயசிலியே என்னெ பெத்தவங்க போயிட்டாங்க. எனக்கு தலயில நற தெரியுறப்ப எங்கண்ணன் செத்தாரு. எங்கண்ணனுக்கு முன்னயும் பின்னயுமா எங்க அக்காளுவ போயி சேந்தாங்க.”

“ஒங்களுக்கு யாரு ஆதரவா இருந்தாங்கின்னு கேட்டன்?”

“காட்டுல மொளக்கிற செடிக்கி யாரு காவலு. கடவுளுதான் காவலு. அந்த காலத்திலெ பொறக்குறமுட்டும்தான் தாயோட வவுறு. மத்ததெல்லாம் தெருவுலதான். இந்தத் தெருவுலதான் வளந்தன். நான் மட்டுமில்லெ இந்த ஊருல பொறந்த புள்ளிங்க எல்லாம் தெருவுலதான் வளருங்க. ஊடு தூங்கறதுக்கு மட்டும்தான். அந்த காலத்து சனங்களுக்கு வவுத்துக்கு சோறு மட்டும்தான். அதுக்குத்தான் ராவும்பகலும் பறவா பறந்தாங்க. எங்கண்ணன் இருக்க மட்டும் என் வவுறு பசி அறிஞ்சதில்லெ. அவுறுபோனதும் மழ அறியாத காடு மாரி ஆயிப்போச்சி. எப்பியும் எங்கண்ணன் என்னெ ‘சின்னபுள்ளெ சின்ன புள்ளெ’ன்னுதான் கூப்புடுவாறு.”

“ஒங்க அக்கா பொண்ணுங்க. ஒங்க அண்ணன் பொண்ணுங்கயின்னு இன்னம் ஒங்கள பாக்க வர்றாங்க இல்லியா?”

“எல்லாம் ரெண்டாம் கால் மூணாங்கால் ஒறவாயிடிச்சி. எல்லாத்துக்கும் பச்ச இருந்தாதான் மேயுறதுக்கு ஆடு மாடு வரும்? சொந்தம் அத்துப்போச்சி.”

“அப்ப யாருமே வர்றதில்லியா?”

“வர்றாங்க வர்றாங்க. அதான் முன்னியே சொன்னில்லெ. புள்ளெ பொறந்தா பீ மூத்தரம் அள்ளுறதுக்கு கூப்புடவருவாளுவோன்னு. தொழிலுக்கு போகயில புள்ளிவுள எங்கையில போட்டுட்டுப போயிடுவாளுவ.”

“ஜக்கம்மா கோவுலுக்குப் போயி இருக்கீங்களா?”

“போவாம எப்பிடி இருக்க முடியும்? நான் மட்டுமில்லெ எங்க எனத்து சனத்தில ஒண்ணு பாக்கி இல்லாம ஜக்கம்மா திருநாவுக்கு வந்துடுங்க. எந்த ஊருல, எந்த நாட்டுல இருந்தாலும் ஓடியாந்திடுங்க. அப்பிடி வல்லன்னா அந்த வருசம் தொழிலு மேவாது. ஜக்கம்மா திருநாவுல ஒம்போது ராஜ கம்பளத்து நாயக்கமாரயும் பாக்கலாம். கண்ணு கொள்ளாது கூட்டம். கடலாட்டம் இருக்கும்.”

“ஒம்போது கம்பளத்து நாயக்கருன்னா?”

“தோக்கல வாரு, சில்லு வாரு, ஒட்ட நாயக்கரு, தொட்டி, பசாலின்னு மொத்தம் ஒம்போது இருக்கு. ஒம்போது கம்பளத்தாரயும் விளங்கிட செய்வா ஜக்கம்மான்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த ஒம்போதுல ஒண்ணுதான் கட்ட பொம்மு”

“வாட்-வாட்-கட்ட பொம்மன்?” என்று டேவிட் கேட்டான்.

“கட்டபொம்மன் எதுல வராரு?”

“ஒம்போது நாயக்கமாருல ஒண்ணு.”

“ஜக்கம்மா கோயிலு எங்க இருக்கு?”

“பாஞ்சாலங்குறிச்சியில.”

“கட்டபொம்மன் கும்புட்ட சாமியில்லெ” சேதுபதி ஆச்சரியம் மேலிட கேட்டான்.

“அதான் எங்களுக்கும் சாமி. குல தெய்வம்.”

கட்டபொம்மன் குறித்து சிறிதுநேரம் டேவிட்டிடம் சேதுபதி ஆங்கிலத்தில் சொன்னான். ‘ரியலி-ரியலி’ என்று வியப்புடன் கேட்ட டேவிட் சேதுபதி சொன்ன தகவல்களை குறித்துக்கொண்டான்.

“இன்னம் ஜக்கம்மாவ நம்புறீங்களா?”

“பின்னெ? ஜக்கம்மா ராத்திரி சாமி. ராத்திரியிலதான் அவளுக்கு பவரு. இருட்டுலதான் அவ அதிகாரம் பலிக்கும். கொடூர குணம் கொண்டவ. அவப்பேர சொல்லி மை, மந்தரம் செஞ்சா அப்பிடியே பலிக்கும். ஆனா பகல்ல வெறும் மண்ணாட்டம் கல்லாலட்டம்தான் இருப்பா. அதனாலதான் எங்க ஆளுவ ராத்திரியில தொழிலுக்குப் போவாங்க.”

“சாமக்கோடாங்கி. குடுகுடுப்பக்காரன்னு சொல்லுவாங்களே.”

“அதான்.”

“எங்கம்மா தொழிலுக்கு பகல்லதான் போவா. அவ வாக்கு சொன்னா மாறாது. தோசம், பரிகாரம், மை, மந்தரம்ன்னு அச்சு அச்சா சொல்லுவா. செய்வா.”

“எப்பிடிச் சொல்றீங்க.?”

“ராஜ கம்பளத்து நாயக்கன் வாக்கு கடலு கடந்தும் போவுமின்னு சொல்லுவாங்க.”

“ஒங்கய்யா பேரூ என்ன?”

“ஜக்கய்யா.”

“அம்மா பேரூ.”

“ஜக்கம்மா.”

“எல்லாம் சரி. ஜக்கம்மா ஒங்களுக்கு ஒண்ணும் செய்யலியே.”

“எல்லாம் செஞ்சியிருக்கா, நல்ல வழியத்தான் காட்டியிருக்கா.”

“புரியல. என்னா வழி?”

“சுடுகாட்டுக்குப் போற வழியத்தான் காட்டியிருக்கா.”

“திருப்பிச் சொல்லுங்க.”

“நான் பருவத்துக்கு வராம இருந்திருந்தா எந்த சிக்கலும் வந்திருக்காது. எல்லாம் ஜக்கம்மா முடுவு. என்னெ பாவ கிரகம் புடிச்சிக்கிச்சி பொறக்கயிலியே. அதுக்கு ஜக்கம்மா என்னா செய்வா? வழுக்கி விழுந்தவங்கிற பேரோடதான் என் பொணம் போகும். நான் நெனச்சியிருந்தா ஆயிரம் கண்ணாலம் கட்டியிருக்கலாம். ஆயிரம் புள்ளெ பெத்திருக்கலாம். திருட்டு கண்ணாலம் கட்டுனதா காலத்துக்கும் அவப்பேருதான?”

“திருட்டு கல்யாணமின்னா என்னா?” என்று டேவிட் கேட்டான்.

“லவ் மேரேஜ். அப்பா அம்மாவுக்குத் தெரியாம தானா ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிறது” என்று சேதுபதி சொன்னான்.

“லவ் மேரேஜ்ம் திருட்டு கல்யாணமும் ஒண்ணா?”

“நோ, நோ. ரெண்டும் ஒண்ணு மாதிரி இருந்தாலும் வித்தியாசம் இருக்கு” என்று சொன்ன சேதுபதி ஆங்கிலத்தில் ஏதோ டேவிட்டிடம் சொன்னான். டேவிட்டும் சேதுபதியும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட பொண்ணுக்கு என்ன தோன்றியதோ “மாப்ளயும் பொண்ணும் தானா போயி கட்டிக்கிறதுக்கு பேரு கண்ணாலமில்லெ. ஊட்டுல உள்ளவங்க, ஒறவுக்காரங்க, ஊருக்காரங்க சாதிக்காரங்க பாத்து செஞ்சி வச்சாத்தான் கண்ணாலம். தானா ஓடிப்போயி கட்டிக்கிட்டா அது திருட்டு கண்ணாலம்தான்” என்று பொண்ணு அழுத்தம் திருத்தமாக சொன்னதை கேட்ட டேவிட் “வெரி இண்டரஸ்டிங்” என்று சொன்னான்.

“ஊட்டுல உள்ளவங்க, ஒறவுக்காரங்க, ஊருக்காரங்க, சாதிக்காரங்க இல்லாம நடக்கிற கண்ணாலம்-கண்ணாலமா அது? அப்பிடி செஞ்சா சாதியில சேத்துக்க மாட்டாங்க. சாதியிலிருந்து ஒதுக்கி வச்சிடுவாங்க.”

“ரியலி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் டேவிட்.

“நீங்க எந்த கம்பளத்து நாயக்கரு.”

“வாக்கு சொல்றவங்க. தொட்டிநாயக்கரு. குறிக்காரன், குறிச்சொல்றவன்னும் சொல்லுவாங்க.”

“வாட்?” என்று டேவிட் கேட்டதும், அவனுக்கு சாமக்கோடாங்கிகள் குறித்து விரிவாக சேதுபதி சொன்னான். பகலில் பெண்களும் ஜோசியம் சொல்லப் போவார்கள் என்பதையெல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் டேவிட் நோட்டில் எழுதிக்கொண்டான்.

“ஒங்களுக்கு ஜோசியம் சொல்ல தெரியுமா?”

“தெரியாது.”

“பொய்ச்சொல்லி பொழப்பு நடத்துறதான்னு நான் கத்துக்கலே.”

“ஆச்சரியமா இருக்கு.”

“இந்த ஒம்போது நாயக்காருல வித்தியாசம் இருக்கா?”””’

“அப்பீடிலாம் ஒண்ணுமில்லெ. மத்தவங்க எங்களப் பாத்து ‘அவுங்க கொடுகக பிறந்தவங்க இல்லெ. வாங்க பொறந்தவங்க. நாடாறு மாசம் காடாறு மாசமின்னு திரியிறவங்க. யாசகம் எடுத்துத் திங்கிற பயலுவோ’ன்னு மட்டரகமா பேசுவாங்க.”

“ஜோசியம் சொல்ல எப்பப் போவாங்க?”

“அறுக்கறப்பப் போவாங்க. வெதக்கறப்ப ஊட்டுக்கு வந்துடுவாங்க.” சேதுபதி சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிற? அறுவட நடக்கிறப்பப் போனாத்தான சனங்க கையில தானியம் தவசமின்னு இருக்கும் கொடுப்பாங்க. அப்பத்தான கையில காசி பணம் இருக்கும்? அதுக்காதண்டித்தான் அப்பப் போறது.”

“வெரிகுட்” என்றான் டேவிட்.

வெறுமனே சேதுபதி சிரித்தான்.

“ஆறு மாசத்தில எங்க சனங்க தமிலு நாட்டயே ஒரு சுத்து சுத்தி வந்துடுவாங்க.” என்று சொல்லி பொண்ணு சிரித்தாள்.

“ஒங்க சனங்க ஊர்ஊரா அலயறத வுட்டுட்டு மாயமந்தரம்ன்னு செய்யறத வுட்டுட்டு ஊருலியே இருந்து வேல செஞ்சி சீவனம் செய்யக் கூடாதா?’

“எங்க சனங்க சும்மா இருந்தாலும் ஊர்சனங்கதான் மாயமந்தரம் செய்யற ஆளுவுள தேடிக்கிட்டு அலயிறாங்களே. அதுக்குமேல எங்க சனங்களுக்கு ஒரு எடத்துல இருந்து வேல செய்ய புடிக்காது. ஊர்ஊரா அலயுறதுதான் புடிக்கும்.’

“ஒங்க எனத்துல முக்கியமான சாப்பாடு எது?’

“வெத்தல பாக்கு.’’

“ஒங்க எனத்து ஆளுவோ எங்க அதிகமா இருப்பாங்க?”

“ராஜபாளையத்துப்பக்கம், கோவில்பட்டிப்பக்கம்.”

“சரி நாங்க கிளம்பரம்?” என்று சொல்லிவிட்டு சேதுபதி எழுந்ததும் டேவிட்டும் எழுந்தான். பொண்ணுவிடம் ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தான். பணத்தை வாங்கி திரும்பித்திரும்பி பாத்துவிட்டு “எனக்கு எதுக்கு பணம். அதுவும் இம்மாம் பணம். சும்மா பேசிக்கிட்டிருந்ததுக்கு எதுக்கு பணம் தரீங்க?” என்று சொல்லிவிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தாள். பணத்தைத் திருப்பி தந்த்தும் டேவிட் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளையும், ஐந்து சாக்லெட்டுகளையும் பையிலிருந்து எடுத்து கொடுத்தான்.

“திங்குற பண்டம் திங்குற வயசா எனக்கு? வாசல்ல புள்ளிவோ இருந்தா கொடுத்திட்டு போங்க.”

“ஒரு போட்டோ எடுத்துக்கிறன்.”

“சாவப்போற கிழவிய படம் எடுத்து என்ன செய்யப்போற?” பொண்ணுவின் பேச்சை கேட்காமல் டேவிட் அவளை நிழற்படம் எடுத்தான்.

“நாங்க கௌம்பறம்” என்று சொல்லிவிட்டு சேதுபதி முதலில் வெளியே போனான்.

அவனையடுத்து டேவிட்டும் பொண்ணும் வெளியே வந்தனர். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி சேதுபதி கேட்டான்.

“இம்மாம் நேரம் பேசிக்கிட்டிருந்தாலும் ஒங்கப் பேர கேக்கறதுக்கு மறந்திட்டம் பாருங்க.”

“திருட்டுப்போன பொண்ணுதான்.”

சேதுபதியும் டேவிட்டும் சிரித்தனர்.

திருட்டுப்போன பொண்ணும் வாய்விட்டு சிரித்தாள்.

“ஒங்களுக்கு பொழுது எப்பிடி போவுது?”

“பேசிப்பேசித்தான்.”

“இப்ப சந்தோசமாத்தான் இருக்கீங்க?”

“எனக்கென்ன புருசனா புள்ளயா, மாமியா, மாமனா புடுங்கலா? வவுத்து சொம இருந்தாத்தான காலத்துக்கும் தொவந்தன? அதான் எனக்கு இல்லியே. அப்பறம் சந்தோசத்துக்கு எனக்கு என்னா கொறச்ச?” பொண்ணு அழ ஆரம்பித்தாள். “இன்னிக்கும் அந்த பேரச் சொல்லித்தான் கூப்புடுறாங்களா?”

“ஆமாம். எனக்கு வயசி ஆயிடிச்சி. ஆனா எங்கதெக்கு வயசி ஆவல, பேசிப்பேசி, சொல்லிச்சொல்லியே புதுசா ஆக்கிக்கிட்டேயிருப்பாங்க. எப்பலாம் பொண்ணு திருட்டுப் போவுதோ அப்பலாம் அன்னிக்கித் திருட்டுப்போன பொண்ண வுட்டுட்டு என்னப் பத்தித்தான் சனங்க பேசுறாங்க.”

“ஏன் அப்பிடி?”

“திருட்டுப்போனதில, தூக்கிக்கிட்டுப் போனதில கண்ணாலம் ஆவாம நின்னுப் போன பொண்ணு நாந்தான. வேற யாருமில்லியே.”

“ஒங்கள தூக்கிக்கிட்டுப் போனப்ப என்னா நெனச்சீங்க?”

“ஜக்கம்மா என்னெ சாவடிச்சிடுன்னு வேண்டுனன்.”

“இப்ப நீங்க ஜாக்கம்மாகிட்டெ என்னா வேண்டுவீங்க?”

“என்னெ சாவடிச்சிடுன்னுதான்.”

“சத்தியமாவா?”

“ஜக்கம்மா மேல சத்தியம். அன்னியிலிருந்து இன்னியமுட்டும் நான் வுட்ட கண்ணீரு கடலதாண்டி இருக்கும். புழுத்த நாயா பெருஞ்சோறு தின்னுட்டு குந்தியிருக்கன்” லேசாக அழுதாள். பொண்ணு. மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொன்னாள் : “வேற என்னாத்த வேண்டுறது? ஒரே வேண்டுதலதான். அந்த ஒரு வரத்த மட்டும் அந்த சாகசக்காரி எனக்கு தர மாட்டங்கிறா. உசுரோட இருந்தாத்தான எல்லா துன்பமும்? எனக்கு புள்ளெ வரம் கொடு, புருசன் வரம் கொடுன்னு கேட்டதில்லெ. என்னெ சாவடிச்சிடுன்னுதான் வேண்டுறன். கண்ணு தெரியாத குருடங்களுக்கும், கை கால் இல்லாத நொண்டி மொடங்களுக்கெல்லாம் கண்ணாலம் நடக்குது. புள்ளெ குட்டியும் பொறக்குது. குடும்பமாவும் இருக்குதுவோ. ஒலகத்திலெ யாரும் செய்யாத பாவத்தயா நான் செஞ்சிப்புட்டன்? பச்ச புள்ளய தூக்கிக்கிட்டுப்போயி கழுத்த அறுத்தாப்ல எந்தலயில தீய வாரிக் கொட்டிப்புட்டாங்களே” பொண்ணு அழ ஆரம்பித்தாள்.

அழுது தீர்க்கட்டும் என்று சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் நின்றுகொண்டிருந்தனர். சிறிதுநேரம் கழித்து சன்னமான குரலில் சேதுபதி கேட்டான்: “ஒங்க நெலம இனிமே என்னாகும்?”

“கனிஞ்ச பழம் அயிவிப் போயிடும் இல்லியா? அதான் எங்கதெ. பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். மருமகளா, நாத்தனாரா, கொழுந்தியாளா, பாட்டியா ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்த போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தல எழுத்து-என்னோட கவல, நாந்தான் அழுவணும். இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *