தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 8,298 
 

கதீஜா புலம்பத் தொடங்குவதற்கும் கல்யாணத் தரகர் காதர் பாய் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

அன்வர் அவசரமாக எழுந்து காதர் பாயைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்துத் திரும்புவதற்குள் கதீஜாவின் புலம்பல் கூடத்தை எட்டி

எதிரொலித்தது.

தாரம்“”நேத்து ராவெல்லாம் மூச்சு இரைப்பு…நேத்தே போய் அந்த சித்த மருத்துவர் கிட்ட சுவாச கல்பம் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன். உங்களுக்கும் கடை, வியாபாரம்னு ஆயிரம் வேலைகள்.. ஹும்..பாழாய்போன இந்த மூச்சு இரைப்பு..”

“”இல்லை கதீஜா..நான் நேத்தே போனேன். அந்த சித்த மருத்துவர் நோயாளியைப் பார்க்க வெளியூர் போய்விட்டாராம். வந்ததும் போய் வாங்கிட்டு வந்துடறேன்.”

மனைவிக்கு ஆதரவாகப் பதில் சொல்லிவிட்டுக் காதர் பாய் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தான் அன்வர்.

“”என்ன அன்வர், நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு? பொண்ணு வீட்ல ரெடியா இருக்காங்க…” அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அன்வர் இடைமறித்தான்.

“”காதர் பாய்..நானும் உங்ககிட்ட எத்தனையோ முறை சொல்லிட்டேன். ரெண்டாவது நிகாஹ் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த விஷயம் கதீஜாவின் காதுகளில் விழுந்தால் அவளுடைய மூச்சிரைப்பு மட்டுமல்ல, பேச்சிரைப்பும் அதிகமாயிடும்”

“”அன்வர், நான் சொல்வதைக் கேள். நான் வெறும் கல்யாணத் தரகர் மட்டுமில்லை. உனக்குத் தூரத்துச் சொந்தம்கூட. கதீஜாவை நான் ரொம்ப நாளா கவனிச்சுட்டு வர்றேன். நாளொரு வியாதியும் பொழுதொரு மருந்துமா கிடந்து கஷ்டப்படுறா. ரெண்டு நாளுக்கு முந்தி வந்தப்ப கதீஜாவுக்கு ஏதோ அலர்ஜி என்று ஸ்கின் டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயிருந்த. அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்பு மூட்டுவலி என்று யாரோ ஆயுர்வேத மருத்துவரைத் தேடிப் போயிருந்த. இதோ இப்ப மூச்சிரைப்பு…உன் மனைவிக்குப் பணிவிடை செய். வேண்டாம் என்று சொல்லவில்லை. உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா? எத்தனை நாள் நிரந்தர

நோயாளி மனைவியுடன் காலம் தள்ளப் போகிறாய்?”

காதர் பாயின் குரலில் உண்மையாகவே அக்கறையும் கரிசனமும் இருந்தன. ஏதோ ஒப்புக்காகவோ புரோக்கர் கமிஷனுக்காகவோ அவர் சொல்லவில்லை என்பது அன்வருக்கும் தெரியும்.

ஆயினும் அன்வரின் மனம் இடம் தரவில்லை. கதீஜாவை ஒதுக்கிவிட்டு அல்லது கதீஜாவின் இடத்தில் இன்னொரு பெண்ணை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அன்வருக்கும் கதீஜாவுக்கும் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்வர் முப்பத்தாறு வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். நல்ல நிறம்.

நல்ல உடற்கட்டுடன் புது மாப்பிள்ளைபோல் மெருகு குலையாமல் இருந்தான்.

கதீஜாவுக்கு முப்பத்திரண்டு வயது. இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இல்லை என்று சொல்வதைவிட அன்வர்தான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தான், கதீஜாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு.

திருமணம் ஆன முதல் ஒரு வருடம் கதீஜா நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் என்ன ஆயிற்றோ, யார் கண் பட்டதோ கிட்டத்தட்ட நிரந்தர நோயாளி ஆகிவிட்டாள். அன்வருக்குப் பணக் கஷ்டம் ஒன்றும் இல்லை. உள்ளூரில் அவனுக்குப் பெரிய ஜவுளிக் கடை இருந்தது. நல்ல வியாபாரம். பதினைந்து ஊழியர்கள் அவனிடம் வேலை பார்க்கிறார்கள். பங்களா போல் வீடு. கதீஜாவின் சொந்தக்காரர்களில் ஒரு விதவை வீட்டோடு இருந்து சமையல் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டாள். சமையலுக்கு உதவவும் இதர வீட்டு வேலைகளுக்கும் மூன்று பணிப்பெண்கள் இருந்தனர்.

அன்வருக்கு இருந்த ஒரே பிரச்னை தீராத பிரச்னை, கதீஜாவின் உடல்நலம்தான்.வருஷத்துக்கு 365 நாள்கள் என்றால் கதீஜாவின் நோய்களைக் கணக்கிட்டால் வருஷத்துக்கு நானூறைத் தாண்டும்.

இந்த வயதிலேயே பற்கள் எல்லாம் பூச்சி விழுந்து பாதிப் பற்களை எடுத்தாயிற்று. ஆனால் இப்பவும் ஈறுகளில் வலி என்று புலம்பிக் கொண்டே இருப்பாள்.

மூட்டுவலிக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள்.

திடீர் திடீர் என்று உடம்பு முழுக்க தடிப்புகள் தோன்றும். கடுமையாக அரிக்கும். சொறிந்து சொறிந்து முடியாமல் அந்த எரிச்சலில் கத்தத் தொடங்கிவிடுவாள்.

அந்தத் தடிப்புகள் ஏன் வருகின்றன என்று ஆனானப்பட்ட தோல் மருத்துவர்களுக்கும் தெரியவில்லை. அலர்ஜி என்று மாத்திரைகளை எழுதித் தள்ளுவார்கள்.

கதீஜா அவற்றை உள்ளே தள்ளுவாள். மாத்திரைகள் வேலை செய்யும் வரை தடிப்பும் அரித்தலும் சற்று குறைந்ததுபோல் தெரியும். இரண்டு நாள் மாத்திரைகளை நிறுத்திவிட்டால் மீண்டும் பழைய கதைதான்.

இதற்கு இடையில் வாரத்திற்கு இரண்டு தடவையாவது அவளுக்கு மூச்சிரைப்பு வந்துவிடும். அதற்கு சித்த மருத்துவரிடமிருந்து சுவாச கல்பம் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தி வந்தாள். அதைச் சாப்பிட்டால் மூச்சு விடுவது கொஞ்சம் சீராகும். ஆனால் மூச்சிரைப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. சுவாச கல்பம் எப்போதும் வீட்டில் இருப்பு இருக்கும். போன மாதம் ஊரிலிருந்து கதீஜாவின் அக்கா வந்திருந்தபோது, தனக்கும் மூச்சிரைப்பு இருப்பதாகக் கூறி வீட்டிலிருந்த சுவாச கல்பத்தை எடுத்துச் சென்றுவிட்டாள். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்தானே, நாம் வாங்கிக் கொள்ளலாம் என்று கதீஜாவும்

கொடுத்துவிட்டாள். அதற்குப் பிறகு சில நாட்களாய் அவளுக்கு மூச்சிரைப்பு வராததால் மருந்தின் தேவை ஏற்படவில்லை. அன்வருக்கும் நினைவில்லை.

நேற்றிலிருந்து திடீரென மீண்டும் மூச்சிரைப்பு..

பலவிதமான நோய்களால் கதீஜா தாக்குண்டிருந்தாலும் அன்வர் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவளைக் கவனித்துக் கொண்டான். எல்லா உதவிகளும் செய்தான். கதீஜாவுக்கு சர்க்கரை வேறு. 280, 300 எனும் அளவில் இருப்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. எந்த வகையிலும் கதீஜாவுக்கு உணவில் சர்க்கரையோ, இனிப்போ, சர்க்கரை நோயை அதிகப்படுத்தும் உணவு வகைகளோ இருக்கக் கூடாது என்று சமையல்கார அம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தான் அன்வர்.

அவனுடைய இந்த நிலைமைகளை எல்லாம் நன்கு அறிந்தவர்தான் காதர் பாய். ஆகவே அவனுக்கு எப்படியாவது இரண்டாம் தாரமாக ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து நிகாஹ் முடித்துவிட்டால் அவனுடைய சிரமங்கள் சற்றுக் குறையுமே என்று யோசித்தார்.

கதீஜாவுக்கும் இந்தச் செய்தி காதில் விழாமல் இல்லை. அன்வர் இரண்டாம் திருமணம் முடிப்பதில் அவளுக்குச் சற்றும் சம்மதமில்லை. ஆனாலும் அதற்குப் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் அவள் இல்லை. ஒருமுறை நோய்த் துன்பம் அதிகமாகி வழக்கமான புலம்பலுடன் இதையும் சேர்த்துப் புலம்பினாள்.

“”அந்த மனுஷன்தான் என்ன செய்வார்? ஊர் உலகத்திலுள்ள எல்லா டாக்டர்கள் கிட்டயும் கார் வச்சுதான் கூட்டிக்கிட்டுப் போறார். ஒரு ராணியைத் தாங்குற மாதிரிதான் தாங்குறார். என்னோட நஸீபு…இப்படி வியாதிகளோடு விழுந்துகிடக்கணும்னு எழுதியிருக்கு…அவராவது இன்னொரு நிகாஹ் பண்ணிக்கட்டுமே..” என்று காதர் பாயின் காதிலும் விழும்படிக் கூறிவிட்டாள்.

அன்றிலிருந்து காதர் பாயின் நெருக்குதல் இன்னும் அதிகமாகிவிட்டது. நல்லதொரு இடத்தில் பெண் பேசி தயாராயும் வைத்திருந்தார். எல்லா உண்மைகளையும் சொல்லித்தான் பெண் கேட்டார். பெண் வீட்டாரும் எல்லாவற்றுக்கும் சம்மதித்தனர். ஆனால் அன்வர்தான் பிடி கொடுக்காமல் இருந்தான்.

“”அன்வர், எல்லாமே ஒத்துவரும்போது ஏன் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிற உனக்கு ஒரு மனைவி வந்தால் உன்னையும் கவனித்துக் கொண்டு, வீட்டையும் பராமரித்து, கதீஜாவையும் சொந்த சகோதரி போல் பார்த்துக் கொள்வாள். பெண் வீட்டாரிடம் நான் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன். நீ மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என்றார் காதர் பாய்.

“”முதல் தாரம் இருக்கும்போது…” என்று இழுத்தான் அன்வர்.

“”அட, என்னப்பா நீ வேற? ஊர் உலகத்துல நடக்காததா? நம்ம மார்க்கத்துலயும் ஷரீஅத்திலும் எந்தத் தடையும் இல்ல. பின்ன என்ன?”

காதர் பாய் வசமாகத் தூண்டில் போட்டார்.

“”பலதார மணத்தை மார்க்கம் அனுமதிக்கிறது என்பது உண்மைதான் காதர் பாய். ஆனால் அது மிகமிக அவசியமான கட்டத்தில்தான். வேறு வழியே இல்லை எனும் நிலையில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை மணம் முடிக்க மார்க்கம் அனுமதிக்கிறது. இப்ப அப்படி ஒரு நிலை எனக்கு இருப்பதாக நான் நினைக்கல.

அது மட்டுமல்ல காதர் பாய், குறிப்பிட்ட சூழல்களில் மட்டும் பலதார மணத்தை அனுமதித்துள்ள நம்முடைய மார்க்கம் அதைக் கட்டாயப்படுத்தவுமில்லை,

ஊக்கப்படுத்தவும் இல்லை. பலதார மணத்தின் விளைவுகளையும் அதனால் ஏற்படும் அநீதிகள் குறித்தும் பல இடங்களில் குர்ஆன் விளக்கியிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும்போது எல்லா மனைவியரிடமும் ஒரே போல் நீதி செலுத்த முடியாது என்றும், இதர மனைவியைப் புறக்கணித்து ஒரு குறிப்பிட்ட மனைவியின் பக்கமே சாய்ந்துவிடுகின்ற ஆபத்து பற்றியும் குர்ஆன் எச்சரிக்கிறது. ஆகவே ஒருதார மணத்தைதான் குர்ஆன் பெரிதும் வலியுறுத்துகிறது” என்று அன்வர் அழுத்தமாக எடுத்துரைத்தான்.

“”சரி, அன்வர்…இதுதான் உன் முடிவு என்றால் இனி உன்னை வற்புறுத்த மாட்டேன்” சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் காதர் பாய் புறப்பட எழுந்தார்.

“”என்னங்க, இங்க கொஞ்சம் வாங்க” எனும் கதீஜாவின் அழைப்பைக் கேட்டதும் அன்வர் உள்கட்டுக்கு விரைந்தான்.

“”என்னவோ தெரியலீங்க, இன்னிக்கு மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மூட்டு வலிகூட அவ்வளவாக இல்ல. மூச்சிரைப்பும் நின்னு இப்ப என்னால நல்லா மூச்சு விட முடிகிறது. ஒரு புதிய உயிர்க்காற்று உள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குங்க. இன்னிக்குக் காதர் பாய்க்கு நம்ம வீட்லதான் விருந்து. இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லுங்க.”

கதீஜாவின் முகத்தில் ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு பளீர் சிரிப்பு…திருமணமான புதிதில் அவள் முகத்தில் கண்ட அதே மகிழ்ச்சி…

அன்வர் அதிசயித்து நிற்க, காதர் பாய் வியந்துபோய் அமர்ந்திருக்க, நண்பகல் விருந்துக்காக பிரியாணி கமகமவென்று தயார் ஆகிக்கொண்டிருந்தது.

– சிராஜுல்ஹஸன் (ஜனவரி 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *