தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,275 
 

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து கொண்டிருந்தான்.
“”துரை… உன் மாமா வர்றாருப்பா…” யாரோ கூறினார்.
காதில் விழாதது போல் இருந்தான் துரை.
“”என்னங்க… பெரியவர் வந்திருக்கார்…” என்றாள் மனைவி கமலா.
“”ம்ம்…” வேண்டா வெறுப்போடு திரும்பிப் பார்த்தான். குமாரசாமி வந்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஓரிருவர் அவரை நெருங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். அவருக்கே உரிய, “டிரேட் மார்க்’ சிரிப்புடன், பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
தாய் மாமா!ஒரு காலத்தில், அந்த சிரிப்பு, துரைக்கு ரொம்பவே பிடிக்கும். ஆரவாரம் இல்லாத சாந்தமான சிரிப்பு; புத்தர் புன்னகை செய்தது போல் இருக்கும்.
வெட்ட வரும் எதிரி கூட, அரிவாளை போட்டு விட்டு சாமியாராகி விடுவான். அலட்டலோ, ஆரவாரமோ இல்லாமல், வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் குமரேசன் மாமா, அவனுக்கு மானசீக வழிகாட்டி, ஆசான், குரு. கிரி வலம் போல் அவரையே சுற்றி வருவான்.
ஒரு ஈர்க் குச்சியை எடுத்துப் போடுவதானாலும், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு தான் செய்வான். அவர் மனைவி செல்லாத்தா மீதும் அதே மரியாதை வைத்திருந்தான்.
அவர் கையால் ஒரு கவளம் சோறு தின்பது, தேவாமிர்தம் சாப்பிடுவது போல அவனுக்கு. ஊரே வியக்கும்படியான உறவுப் பாலம், அந்த இரண்டு குடும்பத்தார்க்கும். சமீபத்தில் தான், அதில் ஒரு விரிசல்…
“”வாங்க… ஒரு வார்த்தை வரவேற்போம்…” மனைவி கமலா.
“”அதான் வந்துட்டார்ல…” என்று, அழுத்தமாக நின்றான் துரை.
“”பாக்கறவங்க தப்பா நினைக்கப் போறாங்க… ஒப்புக்காவது ஒரு வார்த்தை கூப்பிட்டு வைப்போம்; ஒரு வேளை, பணமோ, நகையோ கொண்டு வந்திருக்கலாம்…”
“” பார்த்தால் தெரியல… மனுஷன் வெறுங்கையை வீசிகிட்டு வந்திருக்கார்; மனைவியைக் கூட அழைச்சுகிட்டு வரலை. ஹூம்… நான் ஏமாந்துட்டேன்…” என்று, “முணுமுணுத்த’படியே வேண்டா வெறுப்பாக, “”வாங்க மாமா… அத்தை வரலையா…”
“”இல்லப்பா…”
“”வாங்க, டிபன் சாப்பிடுங்க…”
“”அதுக்கென்ன அவசரம்; மத்த வேலைகளை கவனிங்க…” என்றார்.
“”யார் எங்களை கவனிக்கலைனாலும், எங்க வேலையை நாங்க கவனிக்கத் தான் செய்றோம். நம்பினவங்க கைவிட்டாலும், நல்லவங்க கைவிடலை எங்களை…” என்று, “குத்த’லாக சொல்லி நகர்ந்தான்.
அப்போதும், அவர் முகத்தில் சாந்தமான புன்னகை.
“இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை…’ எண்ணிக் கொண்டான்.
அதற்குள், சம்பந்தி வீட்டார் அங்கு வந்து, பெரியவரை குசலம் விசாரித்தனர்.
“”அந்த மனிதருக்கு நான் எவ்வளவு செஞ்சிருக்கேன் தெரியுமா… அவருக்குப் பிள்ளைகள் இருந்திருந்தால் கூட, அவ்வளவு செய்திருக்க மாட்டாங்க. அவர் காலால் இட்ட வேலையை, தலையால் செய்திருக்கிறேன்…” என்று, நண்பரிடம் குமுறினான் துரை.
“ஆனாலும் இது ரொம்ப அதிகம்… என்னமோ, சொத்து பத்துகளை உங்க பேருக்கு எழுதி வைக்கப் போறாங்கங்கிற நினைப்பு உங்களுக்கு… இன்னைக்கு எட்டி நிக்கிற உறவெல்லாம், அவங்க மண்டை போட்டதும் எனக்கு, உனக்குன்னு உள்ளதை பிச்சுகிட்டு ஓடும்ங்க… அவ்வளவும் செய்துட்டு, கடைசில, நீங்க வெறுங்கையா நிக்கப் போறிங்க… அவசியமானதைச் செய்துட்டு, ஒதுங்கி நின்னுக்குங்க…’ என்று, கமலா பல முறை எச்சரித்திருக்கிறாள். மனசு கேட்காது… சின்ன வயதிலிருந்து பழகிப் போனது.
படிக்கும் போது, ஸ்கூல் விட்டு வந்ததும், அவங்க வீட்டுக்கு தான் ஓடுவேன். கடைக்குப் போக, ரேஷனுக்கு போக, கரன்ட் பில்லு கட்ட, பால் வாங்கி வர, துணிகளை இஸ்திரி போட்டு வர என, சின்னதும், பெரியதுமாக பல வேலைகள் காத்திருக்கும்.
வீட்டில், நோய்வாய்ப்பட்ட அம்மாவுக்கு கூட, அவ்வளவு ஒத்தாசை செய்ததில்லை.
“ஆமாம்டா… அந்த வீட்ல, இரும்பு இடிக்கச் சொன்னாலும் இடிப்பே; இங்க, தவிடு இடிக்கச் சொன்னா உனக்கு நோகுது…’ என்று, இருமலுக்கு இடையே சொல்லுவாள்.
“நம்ம சொல்லைக் கேட்கலைன்னாலும், மாமன் சொல்லைக் கேட்டாவது உருப்படட்டும்’ என்பார் அப்பா. அது ஓரளவுக்கு உண்மை தான். ஒழுங்காக ஸ்கூல் போய் படித்தது, கம்பெனியில் சேர்ந்தது, கல்யாணம் செய்தது எல்லாம், மாமாவின் கட்டளைக்கு உடன் பட்டே செய்தேன்.
இத்தனைக்கும், அவர் காசு ஒன்றும் செலவழித்து விடவில்லை. செய்த வேலைக்கு, ஒண்ணு, ரெண்டு என்று கணக்கு பார்த்து, பீஸ் கட்டுவது, புத்தகம் வாங்கித் தருவது, வருஷத்துக்கு ஒரு யூனிபார்ம் எடுத்துத் தருவது என்று, ஊர் கண்ணுக்கு, கணக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.
“என்னக்கி இருந்தாலும், உனக்கு நான் தான் நல்லது செய்யணும்; அந்தக் கடமை எனக்கு இருக்கு…’ என்று, சொல்லிக் கொண்டிருப்பார். இன்னைக்கு, என் அப்பா, அம்மா இல்லை.
“” அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவார்னு நினைச்சேன்…” நண்பரிடம் கூறினான்.
“”அதான் எல்லாம் நல்லபடியா நடந்துகிட்டிருக்கில்ல… ஏன் தேவையில்லாததை எல்லாம் நினைச்சுகிட்டு…”
“”மனசு ஆறலை பிரதர்… எப்பவுமே நான் அவர்கிட்ட ஒண்ணும் எதிர்பார்த்ததில்லை. அவங்க உறவு இருந்தாலே கடைசி வரைக்கும் போதும்ன்னு நினைச்சேன். ஆனால், மனுஷனுக்கு ஒரு நேரம் இல்லாவிட்டாலும், ஒரு நேரம், இக்கட்டு ஏற்படத்தானே செய்யுது.
“”எதிர்பாராத விதமா மகளுக்கு கல்யாணம் கூடி வந்தது. என்ஜினியர் மாப்பிள்ளை… கேட்டதெல்லாம் போட்டு, பெண்ணைக் கட்டிக் கொடுக்க போட்டி மேல போட்டி போட்டுகிட்டு இருக்காங்க. என் மகளை அவங்களுக்கப் பிடிச்சுப் போனதால, முப்பது பவுன் போட்டு, சீர்வரிசை கொடுத்து, கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னதுக்கு சம்மதிச்சாங்க…
“”கல்யாணத்தையொட்டி வீட்டை சீர்செய்ய வேண்டியிருந்தது. நாம் ஒரு பட்ஜெட் போட்டால், அது ஒரு பட்ஜெட்டுக்கு இழுத்துட்டுப் போகுது… இந்த நேரம் பார்த்து, கமலாவுக்கு டைபாய்டு… செலவுக்கு மேல செலவு… பி.எப்., லோன், பர்சனல் லோன், அங்க இங்க கைமாத்துன்னு அலைஞ்சுகிட்டிருக்கேன். இவ்வளவையும் பார்த்துகிட்டு, கல்லுமாதிரி நிக்கறார் மனுஷன்…
“”மனைவி வாயையும், ஊசி போட்டு தச்சு வச்சுட்டார் போல… அவங்களும், “எவ்வளவு செலவு ஆகுது… பணத்துக்கு என்ன பண்ற… ஏதாவது <உதவி வேணுமா’ன்னு, ஒரு வார்த்தை கூட கேட்கலை…’ ரொம்ப சிரமமா இருக்கு… தலைக்கு மேல் செலவு ஒடுது; கல்யாணத்தை நடத்த முடியுமான்னு சந்தேகமாயிருக்கு…’ன்னு, நானே வாய் விட்டு சொல்லிட்டேன். அதுக்கு, “அதிகமா இழுத்து விட்டுக்காத; சிக்கனமா செய்’ன்னுட்டாரு…
“”அவருக்கு பிரச்னை இருந்திருக்கலாம்… அவருக்கு சுகர் பிராப்ளம், அத்தைக்கு ஹார்ட் ப்ராப்ளம், ரெண்டு பேருமே, மாத்திரையும் கையுமா இருக்கறவங்க தான். நான் தானே ஓடி ஓடி மருந்த வாங்கி கொடுக்குறேன். அவர், வி.ஆர்.எஸ் வாங்கினவர். வந்த தொகையை பாங்கில் போட்டு வச்சிருக்கார்; வட்டி வருது; தவிர, வீட்டை இரண்டாக தடுத்து, ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கார். பணம் இல்லாமல் போகல… எப்பவும் பாஸ் புக்ல, 40 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் இருக்கும். நான் ஒண்ணும், “டெபாசிட்’ல இருக்கிற லட்சங்களைக் கேட்கலை…
“”ஆனால், ஒரு பத்தாயிரத்துக்குக் கூடவா பஞ்சம் வந்துடும். அதை கொடுத்திருந்தா கூட, சந்தோஷப் பட்டிருப்பேன். அட்லீஸ்ட்… “ஏதாவது உதவி வேணுமா’ன்னு கேட்டிருந்தாலும், மனம் ஆறியிருக்கும். வாயே திறக்கலையே…”
ஒரு முறை, அவர் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தேன். எதுவுமே நடக்காதது போல், மணமக்களை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் குமரேசன் மாமா.
வன்மத்துடன், “கள்ளன்’ என, முணுமுணுத்துவிட்டு, “”ஏதோ அதிருஷ்டம்… நிலைமை புரிஞ்சு, முடிஞ்சதை செய்ங்க… உங்க பெண், எங்க வீட்டு மருமகளா வந்தாலே போதும்னு சம்பந்தி சொன்னதால, இந்தக் கல்யாணம் நடக்குது,” பெருமூச்சு விட்டேன்.
அந்த நேரம், “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…’ என, குரல் வரவும், மண மேடை நோக்கி விரைந்தேன்.
அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்து, டிபன் கூட சாப்பிடாமல், மொய்க்கவர் ஒன்றை கையில் திணித்து விட்டு, அவசர வேலை என்று கிளம்பி விட்டார், குமரேசன் மாமா.
கவருக்குள் நூறு ரூபாய் நோட்டுகள் சில இருந்தன; அவரிடமே திருப்பிக் கொடுக்க நினைத்து தேடினேன்.
அதே நேரம், சம்பந்தியும் மண்டபம் முழுக்க வலை போட்டு தேடினார்.
“”உங்க மாமா எங்கே… அவரோடு பேசலாம்னு நினைச்சேன்… ஆளைக் காணமே…”
“”எங்களுக்குள், அப்படி ஒரு <உறவு இருக்கிறதையே நீங்க மறந்துடுங்க. அவங்களோடு, எந்த தொடர்பும் வச்சிக்காதிங்க… என்ன, ஏதுன்னு விவரமா, பின்னொரு நாள் சொல்றேன்… மற்ற வேலைகளை கவனிக்கலாம் வாங்க…” என்று, அழைத்தேன். சம்பந்தி அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“”பெரியவரைப் பத்தியா அப்படிச் சொல்றிங்க… அவர் ரொம்ப நல்லவராச்சே… உங்களைப் பத்தியும், உங்க குடும்பத்தை பத்தியும், அவருக்கு நல்ல அபிப்ராயம். அவர் உங்கள் மேல் ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். அவருக்கு பிள்ளை இல்லேங்கிற குறை தெரியாத அளவுக்கு, நீங்க பிள்ளைக்கு பிள்ளையாய் இருக்கீங்கன்னு, நெகிழ்ந்து பேசுவாரே… இந்தக் கல்யாணத்தில், உங்கள் அளவுக்கு அக்கறையும், ஆர்வமும் காட்டினவர் அவர்…”
“”தவறியும் அவரைப் பற்றி மட்டும் பேசி என் வருத்தத்தை அதிகமாக் காதிங்க…”
“”மிஸ்டர் துரை. எனக்கு எதுவும் விளங்கலை… நீங்கள் கோவில் கட்டி வணங்கறதா இருந்தால், அதை உ<ங்கள் மாமாவுக்கு தான் செய்யணும்… ஒரு கட்டத்துல பணத்தட்டுபாடு ஏற்பட்டு, நீங்க கல்யாணத்தையே நிறுத்தறதாய் இருந்தீங்களாம்… அப்ப, உங்க மாமாவும், அத்தையும் எங்களை வந்து பார்த்தாங்க…”மகளுக்கு, “ஓஹோ’ன்னு கல்யாணம் செய்துப் பார்க்க ஆசைப்பட்ட பாசக்கார அப்பா அவன். சக்திக்கு மீறி வாக்கு கொடுத்திருக்கான்… அவனால அவ்வளவு செய்ய முடியாது. நீங்க கொஞ்சம் இறங்கி வரணும். குறையறதுக்கு, இதுல இருந்து பணம் எடுத்துக்கங்க…’ அப்படின்னு, டெப்பாசிட் சர்ட்டிபிகேட்ஸைக் கொடுத்தாங்க. “இதை துரைகிட்டயே கொடுத்திருக்கலாமே…’ன்னு கேட்டோம். அதுக்கு, “அவன் வாங்க மாட்டான்… காலமெல்லாம் எங்கள் நல்லதுக்காவே பாடுபட்டவன். நாங்கள் கொடுத்ததை, அவனுக்கு தெரிவிக்க வேண்டாம்…’ ன்னு கேட்டுகிட்டாங்க.
“”அவங்களோட அணுகுமுறை எங்களை நெகிழ வச்சிருச்சி…’ பணத்துக்காக இல்லை… உங்க குணத்துக்காக உங்கள் வீட்டில் சம்பந்தம் வச்சிக்கிறோம்…’ன்னு சொல்லி அனுப்பினோம். தவிர, அந்த நேரம், அந்த அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை… “ஆஸ்பிடலைஸ்’ பண்ண வேண்டியிருந்தது. எங்க அதனால, கல்யாண வேலைல தடங்கல் ஏற்படுமோனு, அட்மிட் ஆகாம இருந்தாங்க… ஆனாலும், நேற்று முன் தினம் சீரியசாகி, சேர்த்திருக்கிறதா சேதி…” என்று அவர் சொல்லச் சொல்ல, என் கன்னத்தில்,”பொலபொல’வென்று கண்ணீர் வழிந்தது.
“”இதைப் பத்தியெல்லாம் ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்லையே… கடவுளே… நான் எப்படிப்பட்ட தவறை செய்துட்டேன். என் தலையில இடி விழ… எந்த ஆஸ்பத்திரின்னு சொன்னாரா… அவரால ஒரு வேலையும் செய்ய முடியாதே. ஈர்க்கை எடுக்கணும்னாலும் பக்கத்துல நான் இருக்கணுமே… இப்ப அத்தையை ஆஸ்பத்திரியில சேர்த்து, தனி ஆளாய் என்ன பாடு படறாரோ தெரியலையே…” பதறினேன்.
மண்டபத்தின் மற்ற விஷயங்கள் நடந்தேறும் வரை, தவிப்புடன் நின்று விட்டு, முடிந்தவுடன், ஆஸ்பத்திரி வாசலில் போய் நின்றேன்.
“”ஆனாலும், நீங்க இப்படி செய்திருக்கக் கூடாது. பெரிய மனுஷனாம்… பெரிய மனுஷன்… எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம, சம்பந்தி வீட்டுக்குப் போய் சமரசம் பேசினதையும், அத்தைய ஆஸ்பத்திரியில் சேர்த்ததையும் மறைச்சு, உங்களைப் பத்தி தப்பா நினைக்க வச்சு, நாலு பேர்கிட்ட புலம்ப வச்சு, ஏன் மாமா என்னை பாவியாக்கினீங்க… உங்களுக்கே நல்லா இருக்கா…போய் உட்கார்ங்க அந்தப் பக்கம்…” என்று சொல்லி, அவர் கையிலிருந்த மருந்துச் சீட்டை பிடுங்கி, பார்மசி நோக்கி நடந்தேன்… நிதானப் புன்னகையுடன் பார்த்தபடி நின்றார், மாமா!

– வசந்தன் விஜயகுமார் (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *