தாய்…? மகள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 4,009 
 

‘இரண்டு முறை கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை! மூன்றாம் முறை முயற்சி செய்யலாமா…? இல்லை…கைபேசியில் அழைப்பைப் பார்த்து தொடர்பு கொள்வாளா…? தொடர்பு கொள்ளவில்லை என்றால் மூன்றாம் முறையும் முயற்சிப்போம். எடுக்கவில்லை என்றால் நேரடியாகப் போய் முடிவு கேட்டுவிட்டு வரவேண்டியதுதான். வேறு வழி இல்லை.!’ என்று நினைத்து…கை பேசியை அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்தேன்.

என்னோடு படித்து அமெரிக்காவில் போய் குடியுரிமை பெற்று வாழும் பால்ய காலத்து நண்பன் பக்கத்து ஊர் பச்சைமுத்து சொந்த ஊருக்கு ஒரு வாரத்திற்குள் என் வீட்டு வாசல் படி ஏறினான்.

“ஒரு உதவிடா…!” தயவாய்க் கேட்டு அருகில் அமர்ந்தான்.

“என்ன..?” ஏறிட்டேன்.

“என் பெரிய பையன் முகிலனுக்குப் பெண் வேணும்.” சொன்னான்.

அமைதியாய் அவனைப் பார்த்தேன்.

“வயது 30. பையன் அமெரிக்காவில் கை நிறைய சம்பாதிக்கிறான். சென்ற வருடம் நூறு சவரன் போட்டு சீர்வரிசை எல்லாம் நிறைய செய்து அங்கே வாழும் இந்திய பெண்ணை திருமணம் முடித்தோம். ஒரு வாரத்தில் பொண்ணு போக்கு சரி இல்லாமல் கணவன் மனைவி பிரிஞ்சாச்சு. உடன் விவாகரத்தும் ஆகி வருசம் ஒண்ணாச்சு. இந்த பெண் பாதிப்பால் அங்கே இருக்கும் அமெரிக்க பெண், இந்திய பெண் வேணாம்ன்னு முடிவெடுத்து இப்போ தமிழ்நாட்டு பெண் முடிக்க ஆசைப் படுறான்.

“எந்த சாதியாய் இருந்தாலும் பரவாயில்லே. பணக்காரத்தனம், மச்சு வீட்ல வாழனும் என்கிற அவசியமில்லை. ஏழை, குச்சு வீட்ல குடி இருந்தாலும் பரவாயில்லை. பொண்ணு படித்திருக்கனும். அழகாய், அடக்க ஒடுக்கமாய் இருக்கனும். ஏழையாய் இருந்தாலும் காத்து மூக்கு பொத்தி அனுப்பனும் என்கிற யோசனை வேணாம். என் தகுதிக்கு அதுக்கு நிறைய நகை நட்டுகள் போட்டு சிறப்பா திருமணமும் செய்துக்கிறேன். பொண்ணுக்கும் பொண்ணைப் பெத்தவங்களுக்கும் முழு விபரம் சொல்லி முழு சம்மதத்தோடு முடிக்கனும். திருமணம் முடிந்ததும் பெண் மூணு மாசத்துல அமெரிக்க குடியுரிமைக்கு மாத்தி அங்கேதான் வாழ்வாள். என்னை மாதிரி வருசம் ஒரு முறை இங்கே சாதி சனம் பார்க்க வருவாள். உனக்குத் தெரிந்த பெண் இருந்தால் சொல்லு….” சொன்னான்.

மனசுக்குள் அமைதியாய் பெண் தேடினேன்.

“என்ன யோசனை…?” கேட்டான்.

“ஒண்ணுமில்லே..” என்றேன்.

“ஏழ்மையிலிருக்கும் பெண், குடும்பம் என்றால் இன்னும் சிறப்பு. பெண் பணக்காரியாகிறதுக்கும், குடும்பம் முன்னேறவும் வாய்ப்பு.. மானாவாரியாக என் பையன் சம்பாதிக்கிறான். மாமனார், மாமியார் குடும்பத்தைக் காபந்து செய்வான். நானும் பணத்தை மூட்டைக் கட்டி வைச்சு என்ன செய்யப்போறேன். சம்பந்தி வீட்டைக் கவனிப்பேன் தேவைக்கு மேல் வங்கிகளில் தூங்கும் பணங்களெல்லாம் வெறும் வெற்றுக் காகிதங்கள்தானே. அதை இப்படி ஏழைப்பட்ட உறவு சனத்திற்கு உதவுவது நல்லதுதானே!” சொன்னான்.

நல்ல எண்ணம் பச்சைமுத்து ரொம்ப நல்லவன். சொன்னது செய்வான்!

இப்படி ஒரு அருமையான வாய்ப்பைப் பெறப்போகும் அதிர்ஷ்டசாலி பெண் யார், குடும்பம் எது…? – யோசனையை முடுக்கினேன்.

ஒரு சில வினாடிகளில் மூளையில் பளிச்சிட்டாள். அமராவதி.

அமராவதி… எனக்கு ஒன்று விட்ட தங்கை. வயதுக்கு வந்த மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று கைம்பெண்ணாக இருந்து ரொம்ப கஷ்டப்படுகிறாள்.

மூத்தவளை முடித்தால் இந்தக் குடும்பம் கண்டிப்பாய் முன்னேறும். அந்தக் குடும்பத்திற்கும் உதவி. நண்பனுக்கும் உதவி ! மனதில் பட…

உடன் விசயத்தை அவனிடம் சொன்னேன்.

பச்சைமுத்து மலர்ந்தான்.

“உன் உறவுமுறை என்றால் எனக்கு இரட்டிப்பு சந்தோசம். நீ முடி. அந்தக் குடும்பத்தை முன்னேத்துறது என் பொறுப்பு !!” சொல்லி புறப்பட்டான்.

நானும் விசயத்தைக் கைபேசியில் பேசினால் சரி வராது. நல்ல காரியம் எதையும் நேரடியாக சென்று பேசி முடிப்பதுதான் சரி! நினைத்துப் புறப்பட்டேன்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தில் மயிலாடுதுறையில் இறங்கி மல்லியத்தில் கால் பதித்தேன்.

அந்தக் கிராமத்தின் கடைக்கோடியில் குடிசை வீடுதான் அவள் குடியிருப்பு. தாய், மகள்கள் எல்லோருமே இருந்தார்கள்.

எதிர்பாராமல் தங்கள் வீட்டு வாசலில் என்னைப் பார்த்ததுமே அவர்கள் எல்லோருக்குமே முகத்தில் மலர்ச்சி, அதிர்ச்சி.

“வாங்கண்ணே !” உள்ளே அழைத்து பாயை விரித்து தரையில் போட்டு அமர வைத்தாள் அமராவதி.

மூன்று பெண்களும் செதுக்கி வைத்த சிலைகள் போல் முத்துகளாய் இருந்தார்கள்.

“வாங்க மாமா…” வாய் நிறைய வரவேற்றார்கள்.

“என்னண்ணே..! என் வீட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் வரவு…?” அமராவதி. குவளையில் தண்ணீர் நீட்டி பாசமாகக் கேட்டாள். கேட்டாள்.

பெண்களும் கேட்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருப்பைப் பற்றி கவலைப் படாமல்…..

“எல்லாம் நல்ல விசயம்தான் அபிராமி……” ஆரம்பித்து… முழு செய்தியையும் சொல்லி முடித்தேன்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட அவள்…..

“புள்ளைங்களைக் கலந்துக்கிட்டு ரெண்டு நாள்ல சேதி சொல்றேன் அண்ணே !”என்றாள்.

நியாயம்தானே ! உடன் எப்படி பதில் சொல்ல முடியும்..?

“சரிம்மா…” புறப்பட்டேன்.

இதோ செய்திக்காக கைபேசியில் தொடர்பு கொண்டு எடுக்கவில்லை. காத்திருப்பு.

மூன்றாவது முறையும் தொடர்பு கொள்வோம். முடியாவிட்டால் நேரில் சென்று பார்ப்போம்!! நினைத்து கைபேசியை தொடும்போதுதான் அதுவாக ஒலித்தது.

அமராவதியேதான்!!

எடுத்து காதில் வைத்து…

“சொல்லும்மா..?” என்றேன்.

“சரி வராதுண்ணே..!” ஒற்றையாய்ச் சொன்னாள்.

“ஏன்ம்மா!”

“வந்து… வந்து…”

“விவாகரத்து , ரெண்டாம் தாரம் என்கிறதுனால யோசனை, மறுப்பா..?” கேட்டேன்.

“அது இல்லே. இது வேற அண்ணே!”

“எதுவாய் இருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லு…”

“பெண் வசதியானால் தாய், தங்கைகளை மதிக்கமாட்டாள் அண்ணே..!” மெல்ல சொன்னாள்.

என்ன யோசனை ..??!!

“அபிராமி!!” ஏகத்துமாய் அதிர்ந்தேன். அலறினேன்.

“நிசம் அண்ணே! எந்தப் பொண்ணும் வசதியான இடத்தில் வாழ்க்கைப் பட்டு வசதியாகிட்டால் ஏழ்மையில் இருக்கிற தாய் தந்தை குடும்பத்தை ஏளனமாய் பார்ப்பாள். அதுவும் அமெரிக்க குடியுரிமையாகிப் போனால் மதிக்கமாட்டாள் இதையும் பெத்த பொண்ணுன்னு நினைச்சு சகித்துக் கொண்டாலும்…இந்த அளவுக்கு மத்தப் பொண்ணுங்களுக்கு வரன்கள் கிடைக்கிறது கஷ்டம். என் ஏழ்மைக்குத் தக்கப்படிதான் அதுங்களைக் கரையேத்தணும் ஒரு கண்ணுல வெண்ணை, மறு கண்களில் வெண்ணை ! புள்ளைங்க நினைச்சு வருத்தப்படும், கஷ்டப்படும். ஏற்றத்தாழ்வு வேணாம் என் தகுதிக்குத் தக்கபடி முடிச்சுக்கிறேன். வருத்தப்படாதீங்க அண்ணே !”முடித்து துண்டித்தாள்.

‘என்ன யோசனையில் நிராகரிப்பு…! இவள் எப்படி தாய் ..? என்ன தாய்…..?????’ யோசனையில் அப்படியே சமைந்தேன்.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் என்று எனக்குத் தெரியாது.

கை பேசி அழைப்பிற்குப் பிறகுதான் சுயநினைவுக்கு வந்தேன்.

எடுத்து காதில் வைத்தேன்.

“மாமா…” பெண் குரல்.

“யாரு..?”

“நான் அமராவதி பெரிய பெண் அபர்ணா பேசறேன்.”

“சொல்லும்மா…?”

“அம்மா நினைக்கிறது தப்பு. நான் பொறந்த இடத்தை மதிப்பேன். உதவி செய்து உயர்த்துவேன். தங்கச்சிங்களைக் காப்பாத்துவேன். தயவு செய்து வாய்ப்பை நழுவ விடாமல் நீங்க சம்மதம் சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்ங்க.”சொன்னாள்..

அவள் தாய்…!!

இவள் மகள் !!! – என்ன முரண்..! – சமன் !!

எனக்குத் திருப்தியாக…… முகம் மலர்ந்து….

“சரிம்மா…” சொல்லி துண்டித்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *