தாய்மை எனும் தவம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,425 
 

என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை திறந்தா<லும் குற்றம்; சும்மா இருந்தாலும் குற்றம்; ஏதேனும் வேலை பார்த்தால், அதுவும் குற்றம். இப்படியாக, அம்மாவிடம் குற்றம் கண்டறிந்தே, வாழ்ந்து கொண்டிருப்பவள் தான், என் மனைவி தேன்மொழி. பெயரில் தான் இனிமை இருக்கிறதே தவிர, அவளது எண்ணத்திலும், செயலிலும் எள்ளளவும் அது கிடையாது.
எங்களுக்கு திருமணமாகி, இரண்டு வருடங்களாகின்றன. அப்பா, போன வருடம் மாரடைப்பால் இறந்து விட்டார். அதிலேயே பாதி உயிரைத் தொலைத்து விட்டு நிற்கிறாள் அம்மா. மீதி உயிரை, துளைத்துப் புண்ணாக்கி சுகம் காண்பவள், என் மனைவி.
தாய்மை எனும் தவம்!இவ்வளவு கீழ்த்தரமாக மனைவியை பற்றிச் சொல்லும் நான், அவளிடம் எதற்கும் வாய் திறப்பது இல்லை. அவளுக்கு முன், நான், “பூம்பூம்’ மாடு தான். அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசினால், ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள். போய் தொலைகிறாள் பேர்வழி என்று, விட்டுக் கொடுத்து, என் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு நாள் காலை நடந்த நிகழ்ச்சி இது…
“தேன்மொழி… எனக்குச் சாப்பாடு எதும்மா?’ என்று கேட்டாள் அம்மா.
“அதான், டேபிளில் இரண்டு சப்பாத்தி இருக்கே…’ என, சலிப்போடு வார்த்தைகளை உமிழ்ந்தாள், தேன்மொழி.
“நாலு நாளா பல்வலி இருக்கும்மா. மெல்லறதுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குடா…’ என, குழந்தையாய் கெஞ்சினாள் அம்மா.
“ஒரு கிண்ணத்திலே பிச்சுப்போட்டு, குழம்பை ஊற்றி, பத்து நிமிஷம் ஊற வைச்சு சாப்பிடுங்க…’ என, துப்பாக்கித் தோட்டாக்களாக வெடித்தாள்.
ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்த எனக்கு, இவர்கள் உரையாடல், தெளிவாகக் கேட்டது. மெல்ல கிச்சனுக்குள் நுழைந்து, தேன்மொழியிடம், “கிசுகிசு’த்தேன்.
“அம்மாவுக்கு மட்டும் பொங்கல் தயார் பண்ணு; அவங்க மெல்லறதுக்கு ஈசியா இருக்குமே…’
“உங்க வேலை எதுவோ, அதை மட்டும் பாருங்க. கிச்சன் டிபார்ட்மென்ட் என்னோடது. தோசைக் கல்லையும், குக்கரையும் மாறி மாறி வைச்சு சமையல் செஞ்சா, காஸ் சீக்கிரமா காலியாப் போயிடும்…’ என்று அவள் பேசியது,
“சட சட’வென மரக்கிளைகள் ஒடிந்து, தலையில் விழுந்ததை போல் இருந்தது.
அப்பாவை இழந்து நிற்கும் அம்மாவுக்கு, சாமரம் வீசி, சேவகம் புரியா விட்டாலும் பரவாயில்லை; மூன்று வேளை சாப்பாடாவது, மனநிறைவோடு அவளுக்கு கொடுக்க முடியவில்லையே… இதற்கு, நானும் ஒரு காரணமாகி நிற்பதை எண்ணி, மனம் வெதும்பியது.
மதியம் ஒரு மணி இருக்கும் போது, என் மொபைல் போன் ஒலித்தது; என் அருமை மனைவி தான் பேசினாள். நான் ஆபீசுக்கு கிளம்பி வந்ததிலிருந்து, இப்போது வரை, அம்மா நடந்த விதத்தைப் பற்றி நிறைய குறை சொன்னாள்…
“”உங்க அம்மா பல்வலின்னு சொல்லிட்டு, முறுக்கு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க…”
“நீ தான், மற்ற தின்பண்டங்கள் இருக்கிற டப்பாவை, நம்ம ரூமிற்குள் வைச்சிருக்கியே…’ என்று, எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
“”இன்னைக்கு சாயங்காலம், சினிமாவுக்கு போகணும். சீக்கிரமா வரப் பாருங்க…”
“”அம்மாவை, பல் டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போலாம்ன்னு நினைச்சேன்…”
“”நாலுநாள் பல்வலியை பொறுத்தவங்க, இன்னைக்குச் சாயங்காலம் மட்டும் பொறுத்துக்க மாட்டாங்களா என்ன?”
“”நாலு நாளா பல்வலியைச் சிரமப்பட்டு தாங்கிக்கிட்டு இருக்காங்களே… காலகாலத்தில் டாக்டர்கிட்ட காண்பிச்சு, மாத்திரை வாங்கி குடுத்தா, பல்வலி குறையும்ன்னு, நல்ல கோணத்தில் நீ யோசிக்கவே மாட்டியா தேன்மொழி?”
அவ்வளவு தான்,”பிலுபிலு’வென்று பிடித்துக் கொண்டாள். நான், அம்மா பித்துப் பிடித்து அலைவதாக குற்றம் சாட்டி, வதைத்து எடுத்தாள். இறுதியில், அவள் வழிக்குத் தான், நான் வரவேண்டியதாயிற்று.
“”சரி… சரி… சாயங்காலம் சீக்கிரமா வர்றேன். சினிமாக்கு போகலாம்.”
சினிமா முடிந்து, இரவு வீட்டிற்குள் நுழைந்த போது, அம்மா பல்வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கக் கன்னம் பெரிதாக வீங்கியிருந்தது. பார்த்ததும் மனம் பதறியது. என் மனைவி மேல் கோபம் பீறிட்டது.
என்னால் ஆண்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள முடியவில்லையே என்று நினைத்த போது, என் மீதே வெறுப்பு வந்தது. பிரச்னைகளை எடுத்துச் சொல்லிப் புரியவைத்தாலும், என் மனைவி தெளிய மாட்டாள்; பிரச்னையை மென்மேலும் பெரிதாக்குவாள். இதனால் தான், நான் பொறுத்துப் பொறுத்துப் போகிறேன்.
அம்மாவின் அருகில், குற்ற உணர்வோடு போய் நின்றேன்.
“”சாரிம்மா… நான் டாக்டர்கிட்ட உங்களை கூட்டிட்டுப் போயிருக்கணும்…”
“”பரவாயில்லைப்பா… அம்மாவுக்கு உன் நிலைமை புரியும்…” என்று அவள் கூறிய வார்த்தை, பூஞ்சாரலாய் மனதிற்குள் ஊடுருவியது.
“”இந்தாங்க வலி மாத்திரை… இதைப் போட்டுட்டு பேசாமப் படுங்க. காலையில டாக்டர்கிட்ட போய்க்கலாம்.”
அம்மாவுக்கு மாத்திரை கொடுத்ததை, பெரும் தியாகச் செயலாகக் கருதி, அவள் பேசியது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது.
வலிமாத்திரையைப் போட்டுக் கொண்டு, உறங்கச் சென்றாள் அம்மா.
அடுத்த நாள் காலை, என் மனைவி தான், அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றாள்.
நான் அம்மாவுடன் சென்றால், ஏதேதோ பேசி விடுவேனாம்; அம்மாவும், ஏதாவது சொல்லி, என் மனதை அவர்கள் பக்கம் இழுத்து விடுவாராம்! அவள் கணிப்பு, இப்படி கீழ்த்தரமாக இருந்தது. இப்படி பல சந்தர்ப்பங்களில் என்னையும், அம்மாவையும் பிரித்து வைக்கும் செயல்களில் ஈடுபடுவாள். மல்லிப்பூ வாசனையாய், சின்ன சின்ன வார்த்தைகளை மட்டுமே, உதிர்க்கும் மென்மையான அம்மா ஒருபுறம், வார்த்தைகளை கொடுக்காகவே பயன்படுத்தும், அடங்காத மனைவி ஒருபுறம் என, வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
இப்போது, எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்து விட்டன; இன்னும் குழந்தை இல்லை. இதை குறித்து, நானும் அம்மாவும்தான் கவலைப்படுவோம். என் மனைவியோ சற்றும் கவலைப்படவில்லை.
அம்மாவிற்கு, 60 வயது நடந்து கொண்டிருந்தது. இதை, சின்ன விசேஷமாக, நாங்கள் மூவரும் சேர்ந்து, ஒருநாள் கொண்டாடினால் என்ன? என்று, என்னுள் ஒரு ஆசை முளைத்தது. அப்பாவின் பிறந்த நாளன்று, அம்மாவின், 60வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். முதலிலேயே சொன்னால், என் மனைவி கத்துவாள். அம்மாவும் கூட இதையெல்லாம் விரும்ப மாட்டார் என்பதால், நான் இருவரிடமும் எதுவும் சொல்லவில்லை.
அப்பாவின் பிறந்த நாளும் வந்தது. அம்மாவின் 60வது வயதைக் கொண்டாட வேண்டும் என்ற விஷயத்தை, அன்று காலை மனைவியிடம் சொன்னேன். எப்போது காரணம் கிடைக்கும் எனக் காத்திருந்தவள், “பட பட’வெனப் பொரிந்து தள்ளினாள்.
“”இந்த வயசுல, உங்களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையா அத்தை?”
“”நான் எதுக்கும் ஆசைப்படலம்மா… என்னை விட்ரு…”
“”இவர் என்னடான்னா, கொஞ்சம் கேசரி பண்ணுன்னு சொல்லிட்டு போறார். ரொம்ப முக்கியம்தான்…”
“”என் பிறந்த நாளுக்காக, அவன் கேசரி பண்ணச் சொல்லலைம்மா… உன் மாமா, கேசரின்னா பிரியப்படுவார். நீ செஞ்சு தந்தீன்னா, அவர் படத்து முன்னால வைக்கலாமேன்னு நினைச்சிருப்பான்.”
“”நீங்க மந்திரம் ஓதிட்டு, இப்போ கதையை திருப்பாதீங்க… செத்துப் போனவங்க வந்து சாப்பிடப் போறாங்களா என்ன?” என, கத்தியை கழுத்தில் செருகியது போல், வார்த்தைகளை வீசினாள்.
“”இதோட பேச்சை முடிங்க… யாரும் யாருக்கும் எதுவும் செய்ய வேணாம். உள்ளே போயேன் தேன்மொழி… ப்ளீஸ்… ” கெஞ்சினேன் நான்.
“”எனக்கு நிம்மதியே போச்சு…” என்று, முறைப்புடன் சொல்லியவாறு நகர்ந்தாள் அவள்.
இங்கே நிம்மதியைத் தொலைத்துவிட்டு தவிப்பது, நானும், அம்மாவும் தான்.
நான் வழக்கம் போல் ஆபீசிற்கு போனேன். ஆனால், எந்த வேலையிலும் மனது லயிக்கவில்லை. காலையில் வீட்டில் நடந்த நிகழ்ச்சியால், அம்மா எத்தனை தூரம் சிதைந்து போயிருப்பாள்? என, மனம் தவித்தது. மதிய உணவு வேளையின் போது, தேன்மொழியிடமிருந்து போன் கால் வந்தது.
“”அத்தை, பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க; ஆஸ்பத்திரிக்கு போய்க்கிட்டு இருக்கோம்… அங்கே வந்துடுங்க…” என்றவள், இணைப்பை துண்டித்தாள்.
அம்மாவின் தலையில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. சீரியசான நிலையில் அம்மா இருக்கிறாள் என்பதை, ஆஸ்பத்திரி சூழல் உணர்த்தியது. இருபத்து நான்கு மணிநேரம் கழித்து தான், எதையும் சொல்ல முடியும் என, டாக்டர் கூறி விட்டார். நான், அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தேன்.
“”நீங்க வேணும்ன்னா ஆபீஸ் கிளம்புங்களேன்… நான் அத்தையை பார்த்துக்கறேன். எதுவும்ன்னா போன் பண்றேன்…” என்ற போது, “எதுவும்ன்னா!’ என்ற சொல்லுக்கு, அதிக அழுத்தம் கொடுத்தாள் தேன்மொழி.
புழுவை பார்ப்பது போல, அவளை நான் பார்த்த பார்வையில், அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
அம்மாவின் கண்கள் மூடியிருந்தன. மூச்சு, மெல்ல ஏறி, இறங்கிக் கொண்டிருந்தது. அவளது கையை எடுத்து, என் உள்ளங்கையில் வைத்துக் கொண்டேன்.
என் கண்கள் வெதுவெதுப்பான, ஸ்பரிசத்தோடு கண்ணீரை உதிர்க்க, ரகசியமாய் துடைத்துக் கொண்டேன்.
“ஒரு சாதாரண கேசரியை வைத்துக் கூட, நீ அப்பாவை வழிபட முடியாத அளவுக்கு, உன்னை வழி நடத்தி இருக்கேன். நான் பாவிம்மா…’ என்று, உள்ளம் அழுதது.
அப்பாவின் இறப்புக்குப் பின், அம்மா வாழ்ந்த நாட்கள் யாவுமே, நரக நாட்களாகிப் போனதற்கு, நானும் கூட காரணம் என்பதை நினைத்து வெட்கப்பட்டேன்.
மறுநாள் காலை அம்மா இறந்து விட்டாள். அழகான தேவதையாக, அமைதியான குழந்தையாக அம்மா படுத்திருந்தாள். அங்கே, தாய்மை எனும் தவம், ஆழ்ந்த நித்திரையில் இருந்தது.
அம்மாவின் கரம் பிடித்து நடந்த நாள் முதல், நேற்று வரை, அம்மாவுடன் வாழ்ந்த நாட்களின் நிகழ்வுகள் எல்லாம், மனதில் வந்து போனது.
சடங்குகள் எல்லாம் செய்து முடித்து, இடுகாட்டில் அம்மாவின் உடலை எரித்தாயிற்று.
மூன்று நாட்கள் சென்றதும், உறவினர்கள் அவரவர் வேலையை கவனிக்க, ஊர் திரும்பினர். நானும், என் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தோம்.
நான், அம்மாவின் பொருட்கள் உள்ள அலமாரியைத் திறந்து, ஆசையோடு பார்த்தேன்.
சணல் கயிறால் கட்டப்பட்டிருந்த ஒரு மஞ்சள் பை, என் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பைக்குள், ஒரு பாலிதீன் கவரில், எதுவோ பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
என்னவாக இருக்கும்? என எண்ணியவாறே, கவரில் இருந்ததை வெளியே எடுக்க எத்தனித்தேன்.
திரும்பவும், ஒரு வெள்ளைக் காகிதம் பக்குவமாகச் சுற்றப்பட்டு இருந்தது. அதில், அம்மாவின் அழகான கையெழுத்தில், “என் உயிரினும் மேலான…’ என்று, பென்சிலால் எழுதப்பட்டு இருந்தது.
கனத்த மனதோடு, மெல்ல காகிதத்தை அகற்றினேன். அதில், புகைப்படங்கள், திருப்பியவாறு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அப்பாவின் புகைப்படங்களை, அம்மா எவ்வளவு பாசமாக வைத்திருக்கிறாள் என்ற சிலிர்ப்போடு, அனைத்தையும் திருப்பினேன். ஆனால், அத்தனையும் என் படங்கள்.
சிறுவயது முதல், திருமணம் ஆன நாள் வரை உள்ள, குறிப்பிடத்தக்க படங்களை, வெகுசிரத்தையுடன் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். என் புகைப்படங்களைக் கூட, மெல்லிய உணர்வோடு அம்மா கையாண்ட விதம், மனதை இதமாக வருடியது.
“”பணத்தைத் தான் இப்படி ஒரேயடியாக உள்ளே வச்சு பத்திரப்படுத்தி இருக்காங்களோன்னு நினைச்சேன்… உங்க போட்டோக்குத் தானா இத்தனை பாதுகாப்பு?” என்று, என் முதுகுக்குப் பின்னால் நின்ற மனைவியின் பேச்சு, தேளாகக் கொட்டியது.
நல்ல இதயங்களின் உயிரோட்டமான உண்மை உணர்வுகள், இவளைப் போன்றவர்களுக்கு என்றைக்குமே புரியாது என, மன” சொல்லியது.
அப்போது, என் மாமா எனக்கு போன் செய்து, பதினாறாவது நாள், அம்மாவிற்கு சாமி கும்பிட வேண்டுமென்றும், அம்மாவின் புகைப்படம் ஒன்றை, “பிரேம்’ போட்டு தயார் செ#யும்படி கூறினார்.
“”உங்க அம்மா போட்டோ ஒண்ணுகூட இல்லையே…” என்று, சட்டம் பேசுவது போல் பேசினாள், என் மனைவி.
“”இல்லாமல் போகுமா? நான் தேடி எடுக்கிறேன்.” என்றவாறு, தேட ஆரம்பித்தேன்.
அப்பாவை இழந்த பின், தன் ஆசாபாசங்கள் அனைத்தையும் துறந்து, தவவாழ்வு வாழ்ந்த அம்மாவின் புகைப்படத்தை மட்டுமா தேடிக் கொண்டிருக்கிறேன்; இல்லை, கண்ணிருந்தும் குருடனாக, என் பாதையைத் தொலைத்த நாட்களையும் அல்லவா தேடிக் கொண்டிருக்கிறேன்!

– எஸ்.கீதா (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *