தாய்மை எனப்படுவது யாதெனின் . . .

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,432 
 

மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும் வர்ஷினியும் சிரித்துக் கொண்டிருந்தனர். வர்ஷினி அவள் அப்பாவிற்கு கேக் ஊட்டும் ஃபொட்டோ வந்த போது சற்று தயங்கியது சாவித்திரியின் உள்ளம். “ஏன் இவர் இப்படி உம்மென்றிருக்கிறார்?” யோசித்துப் பார்த்தால் சில நாட்களாகவே ராகவன் மிகவும் குழப்பத்தில் இருப்பதாகத் தோன்றியது சாவித்திரிக்கு. பிறந்த நாளுக்கு உடை வாங்கும் போதும் சரி , கேக்குக்கு ஆர்டர் கொடுக்கும் போதும் சரி அவர் முகம் கூம்பியே இருந்தது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட அவர் சற்று விலகியே இருந்தாற்போல் தோன்றியது.”ஏன் என்னவாக இருக்கும்?” என்று குழம்பியவள் “ஏதேனும் அலுவலப் பிரச்சனையாக இருக்கும் சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும். இதற்கு முன்பு கூட ஒரு முறை அப்படி நடந்திருக்கிறதே?” என்று நினைத்துக் கொண்டாள். புகைப்படங்களை அழகாக அடுக்கி கவரில் போட்டு வைத்தவளை காலிங் பெல் கூப்பிட்டது.

கதவத் திறந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. வந்தது ராகவனும் , அவர்கள் குடும்ப டாக்டர் கிருஷ்ணனும் தான். சாவித்திரிக்கு ஒன்றும் புரியவைல்லை.இருவர் முகங்களும் சிரிப்பைத் தொலைத்து விட்டு வெகு சீரியசாக இருந்தன. சாவித்திரியினுள் பயம் மொட்டு விட்டது. வந்தவர்கள் ஒன்றும் பேசாமல் நேரே ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டனர். “என்னங்க என்ன ஆச்சு? ஏன் இப்படி வேளை கெட்ட வேளையிலே டாக்டரோட வந்துருக்கீங்க? யாருக்கு என்ன உடம்பு பிளீஸ் சொல்லுங்க?” என்றாள் சாவித்திரி. “அம்மா! சாவித்திரி பதறாதேம்மா யாருக்கும் எந்த உடம்பும் இல்ல! ” என்று இழுத்தார் டாக்டர். “யாருக்கும் எதுவுமில்லேல்லே அப்பா! இப்பத்தான் நிம்மதியாச்சு. கொஞ்சம் இருங்க காபி கொண்டு வரேன்”என்று நகரப் போனவளை ராகவனின் குரல் தடுத்தது.”நில்லு சாவி! அவரு உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்திருக்காரு”என்றான்.

“எங்கிட்டயா? முக்கியமான விஷயமா? என்னவாயிருக்கும்? வர்ஷினிக்கு ஏதாவது இருக்குமோ? அவர்தான் யாருக்கும் எந்த உடம்பும் இல்லேன்னு சொன்னாரே! அப்புறம் என்ன?கடவுளே என் குழந்தைக்கு ஒன்றும் வராமல் காப்பாத்து”என்று மனதில் கடவுளோடு மன்றாடினாள் பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு எச்சரிக்க அவள் மௌனமாக டாக்டரின் முகத்தைப் பார்த்தாள். தொண்டையை சரி செய்து கொண்டவர் இவள் பொறுமையை மேலும் சோதிக்காமல் “அம்மா சாவித்திரி! வர்ஷினிய பெத்த தாய்க்கு சுய நினைவு திரும்பிடிச்சும்மா!” என்று மெதுவான குரலில் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார். பெரிய பாறாங்கல் ஒன்று நெஞ்சில் மோதியது போல் இருந்தது சாவித்திரிக்கு.பூமியின் சத்தங்கள் எல்லாம் ஓய்ந்து போய் எங்கும் மௌனம் குடி கொண்டாற் போலிருந்தது.அவள் வாயிலிருந்து தானாகவே “அதனால?” என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.அவளது கண்கள் கூரிய அம்பாக மாறி டாக்டரைத் துளைத்தெடுத்தன. அந்தப் பார்வையின் சீற்றத்தைத் தாங்க முடியாத டாக்டர் தலையக் குனிந்தபடியே “அதனால அவ குழந்தைய திரும்பக் கேக்கறா . சாவித்திரி நீ கொஞ்சம்…”

டாக்டரை முடிக்க விடவில்லை சாவித்திரி. ருத்ர காளியின் சீற்றத்தோடு ” குழந்தைய திருப்பிக் கேக்கறாளா? அது என்ன பொம்மையா? கேட்ட உடனே திருப்பிக் குடுக்க? வந்துட்டாரு பெருசா குழந்தையக் கேட்டுக்கிட்டு ” என்று டாக்டரைச் சாடியவள் கணவன் பக்கம் திரும்பி “ஏங்க அவருதான் அறிவில்லாமக் கேக்கறாருன்னா நீங்களும் வாய மூடிக்கிட்டு உக்காந்துருக்கீங்களே? உங்களுக்குமா அறிவில்லே? என்று பொரிந்தாள். டாக்டரும் விடாமல் “அம்மா! சாவித்திரி! அந்தப் பொண்ணு நெலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா! அவதான் பெத்த தாய். உரிமை அவளுக்குத்தான் அதிகம் “என்று சந்தர்ப்பம் தெரியாமல் பேசினார். “ஒஹோ! உரிமையைப் பத்திப் பேசறீங்களா? குழந்தயைக் குடுக்க முடியாது. வெளியே போங்க. குடும்ப டாக்டராச்சேன்னு பாக்கறேன் இல்ல மரியாதை இல்லாம அசிங்க அசிங்கமா பேசிடுவேன்! இவ்ளோ நாளா இல்லாத உரிமை இப்போ எங்கேயிருந்து வந்தது? உரிமையாம் உரிமை? யாரு கிட்ட வந்து குழந்தையக் கேக்குறீங்க? இப்ப வெளியே போறீங்களா இல்லயா” என்று ஹிஸ்டீரியா வந்தவள் போலக் கத்தினாள். டாக்டரும் இவளிடம் இந்த நிலமையில் பேசி எந்தப் பயனும் இல்லை என்று புரிந்து கொண்டு போய்விட்டார். வர்ஷினியை இதே டாக்டர் இவர்களிடம் கொடுத்த நாள் ஞாபகத்திற்கு வந்து சாவித்திரியின் நினைவலைகளை மீட்டியது.

Illathaசுமார் பத்து வருடங்கள் முன்பு நடந்தது. அப்போது ராகவனுக்கும் , சாவித்திரிக்கும் கல்யாணம் நடந்து ஏழெட்டு வருடங்கள் கடந்திருந்தன. உற்றவர்களும் பெற்றவர்களும் விசேஷ நாளை ஆவலோடு எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயினர். ஏன் சாவித்திரியும் கூடத்தான். வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத வைத்தியமில்லை. எல்லாரும் சொன்ன ஒரே பதில் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்பது தான். ஆனால் ஏன் குழந்தை பிறக்கவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. எதற்கும் ஒரு முறை குடும்ப டாக்டர் என்று எல்லாராலும் புகழப் படும் டாக்டர் கிருஷ்ணனின் மருத்துவ மனைக்கு டெஸ்ட் செய்து கொள்ள வந்திருந்தனர். ராகவனுக்குகு டாக்டர் கிருஷ்ணன் ஏற்கனவே நல்ல பழக்கம். இருவரும் ஒரே ஊர்க் காரர்கள். வழக்கம் போல அங்கேயும் இருவரிடமும் குறையேதுமில்லை என்ற ரிப்போர்ட் தான் இவர்கள் முகத்தில் அடித்தது. ஆனாலும் டாக்டரை சந்தித்து ஒரு வார்த்தை பேசி விட்டுப் போய்விடலாம் என்று இருவரும் காத்திருந்தனர். அப்போது திடீரென ஆஸ்பத்த்ரியில் பரபரப்பு ஏற்பட்டது. வார்டு பாய்கள் ஸ்ட்ரெச்ச்ரை விரைவாக நகர்த்திக் கொண்டு செல்ல , மருந்துகளுக்காக உத்தரவிடும் குரல்களும் , குறிப்பிட்ட ரத்த வகையை வங்கியிலிருந்து கொண்டுவர ச் சொல்லும் கட்டளைகளும் ஆஸ்பத்திரியை நிறைத்தன.

ஏதோ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீவ மரணப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவாறிருந்தனர் ராகவனும் , சாவித்திரியும். ஒரு அரை மணி நேரத்திற்கெல்லாம் டாக்டரிடமிருந்து இருவருக்கும் அழைப்பு வந்தது. ஏதோ ஒரு பொக்கேயைக் கொடுப்பதைப் போல பிறந்து சில நிமிடங்களே ஆகியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையை சாவித்திரியின் கைகளில் ஒப்படைத்தார் டாக்டர்.அந்தக் குழந்தை அவள் கைக்கு வந்ததும் அதற்கு என்ன தோன்றியதோ அழுகையை நிறுத்தி விட்டு லேசாக சிரித்தது. அந்த நிமிஷம் சாவித்திரிக்கு உலகில் உள்ள பூக்கள் எல்லாவற்றையும் சேர்த்து அவள் மேல் கொட்டியது போல ஒரு உணர்ச்சி. இந்த ஒரு நொடிக்காகவே தான் இத்தனை நாள் காத்திருந்தோம் என்று அவள் உள்ளுணர்வு கூற குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள். குழந்தைக்கு வேண்டியவைகளை எப்படிச் செய்வது , அதற்கு ஆகாரம் என்ன கொடுப்பது என்பது போன்ற விவரங்களை அவள் கேட்டுக் கொண்டிருந்ததால் , குழந்தையைப் பற்றிய விவரங்களை பின்னால் ராகவன் சொல்லிதான் சாவித்திரி தெரிந்து கொண்டாள்.

டாக்டர் கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது என்றும் , விபத்தில் சிக்கிய இளம் தம்பதிகள் டாக்டரின் உறவுக் காரர்கள் தான் என்றும் சொன்னான். அந்த விபத்தில் கணவன் இறந்து போக நிறை மாத கர்ப்பிணியான மனைவி தலையில் அடிபட்டு மயமுற்று கோமா ஸ்டேஜில் இருக்கிறாள். அதனால் உடனே ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தவர்கள் , குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அதை குழந்தை இல்லாமல் தவித்த சாவித்திரியிடம் கொடுத்திருக்கிறார்கள். விபத்தில் சிக்கிய பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் , அவள் பிழைப்பது அரிது என்றும் டாக்டர் கிருஷ்ணன் சொன்னதாக ராகவன் சொன்னான். ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் முடிந்த நிலையில் இப்படி ஒரு இடி.

ராகவன் சாவித்திரியோடு பேச எவ்வளவோ முயற்சி செய்தான். ம்ஹூம்! எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை சாவித்திரி. வர்ஷினியோடு மட்டும் எப்போதும் போல பேசுவாள். குழந்தை சிரித்து மகிழும் போதெல்லாம் அவளை இறுகக் கட்டிக்கொள்வாள் சாவித்திரி. இரவிலும் குழந்தையை அணைத்த்படியே தான் படுத்திருப்பாள். அவளது அந்தச் செய்கை யாராவது குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்களோ என பயப்படுவது போலிருந்தது. அவள் தூங்குகிறாள இல்லையா என்றே தெரியவில்லை. அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது ராகவனுக்கு. ராகவனின் நிலையோ அதை விட மோசம். சிரிப்பு என்பதையே அவன் மறந்ததாத தோன்றியது. வீடு தன் கலலப்பை இழந்து காணப் பட்டது. நாட்கள் மெதுவாக நகர்ந்தன.

ஒரு நாள் சாவித்திரி பொழுது போகாமல் T.V பார்த்துக் கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தாள். திறந்தவள் எதிரே சுமார் முப்பது வயதுள்ள ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். முகச் சாயலைப் பார்த்ததும் யாரென்று சொல்லாமலேயே விளங்கி விட்டது சாவித்திரிக்கு. வந்தவளை “வா” என்றழைத்து சோபாவில் அமர்த்தினாள். வந்தவளின் கண்கள் எதையோ தேடின. புரிந்து கொண்டவள் போல் “என் பொண்ணு வர்ஷினி ஸ்கூலுக்குப் போயிருக்கா” என்றாள். “என் பொண்ணு” என்ற வார்த்தையில் கூடுதல் அழுத்தம். வந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள். ஏதேனும் ஃபோட்டோ இருக்கிறதா என்று பார்க்கிறாளோ? என்று தோன்றியது சாவித்திரிக்கு. இருந்தாலும் “இப்போ வீட்டுல யாருமில்லே நான் மட்டும் தான் இருக்கேன்” என்று சொல்லி வைத்தாள்.

வந்தவள் சாவித்திரியையே கண் இமைக்காமல் பார்த்தாள். கொஞ்ச நேரம் பேச்சு வார்த்தையே இல்லாமல் அமைதியாக இருந்தது. வெளியில் பழம் விற்பவனின் சத்தம் மட்டும் கேட்டது. அதைக் கேட்டு சுய நினைவு வந்தவள் போல் ” என்ன சாப்படறீங்க? காபி, டீ? இல்லே ஏதாவது பழங்கள் சாப்பிடறீங்களா? ” என்றாள் சாவித்திரி
வந்தவளை உபசரிக்கும் நோக்கில். “எனக்கு எதுவும் வேணாம் நான் உங்க கூடப் பேசத்தான் வந்தேன் பிளீஸ் இப்படிக் கொஞ்சம் உக்காருங்க”என்றாள். சாவித்திரிக்கு நெஞ்சு படபடவென அடித்தது. வலிப்பது போலத் தோன்றியது. நல்ல வேளை வர்ஷினி இல்லை, ஸ்கூலுக்குப் போயிருக்கிறாள் என நினைத்தவள் , சமாளித்துக் கொண்டு உட்கார்ந்தாள். வந்தவள் பேச ஆரம்பித்தாள். “மேடம் என் பேரு உமா. நான் யாருன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். இருந்தாலும் சொல்றேன்! வர்ஷினியைப் பெத்தவ நான் தான். என்னைப் பத்தி டாக்டர் உங்க கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியாது. ஆனா நீங்க என் கதையை கேட்டே ஆகணும்.” என்று சொல்லத் தொடங்கினாள்.

உமா உயர் நடுத்தரக் குடும்பத்தின் ஒரே செல்வ மகள். சோகம் துக்கம் என்றால் என்னவென்றே தெரியாத சிறகடிக்கும் பறவை. கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே அவளுக்கும் , அவள் காதலித்த அவள் மாமன் மகன் ஆதித்யனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வாழ்க்கையின் சந்தோஷத்திற்குக் கேட்கணுமா? சிகரம் வைத்தாற் போல அவள் தாயாகப் போகும் செய்தி வந்தது. ஆதித்யனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான். பெண் குழந்தை தான் பிறக்கும் என்று குழந்தைக்கு அப்போதே சிறிய , சிறிய சட்டைகள் . விளையாட்டு பொம்மைகள் என சேகரித்தான். அவ்வளவு ஏன் தன் மகள் கேட்டு கண்ணுறங்க நல்ல நல்ல தாலாட்டு பாடல்கள் பிரபல பாடகர்கள் பாடிய CDக்களை சேகரித்தான். கடைசி செக்கப்பிற்காக டாக்டர் கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்கு காரோட்டி வரும் போது எதிரே வந்த ஆட்டோவைத் தவிர்க்க எண்ணி ஸ்டியரிங்கை வளைத்ததில் எதன் மீதோ மோதியது வண்டி.

சொல்லிக்கொண்டு வந்தவள் கண்களிலும் , கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களிலும் ஒன்று போல் கண்ணீர் வெள்ளம். “நான் பிழைக்க மாட்டேன்னுதான் நெனச்சாங்க ஆனா கடவுளுக்கு என் மேல என்ன கோவமோ தெரியல ஏழு வருஷத்துக்கப்புறம் நான் உயிரோட எழுந்துட்டேன். ஆதி அந்த எடத்துலயே போயிட்டார்னு தெரியும். மொதல்ல எங்கிட்ட குழந்தையைப் பத்தி டாக்டர் ஒண்ணுமே சொல்லல்லே. நான் ரொம்ப வற்புறுத்தினப்புறமும் குழந்தை செத்துட்டதா சொன்னாரு. ஆனா நான் வாழ்க்கையில எனக்குன்னு எதுவுமே இல்லேன்னு தற்கொலை செஞ்சிக்கப் போனேன் . அப்போதான் வேற வழியில்லாம என் குழந்தை உங்க கிட்ட வளர்றதைப் பத்தி சொன்னாரு”. அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் சற்று நேரம் சும்மா இருந்தாள்.

வந்தவள் சாவித்திரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு ” மேடம் பிளீஸ் நீங்க என் நெலமயைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இந்த உலகத்துல எனக்குன்னு சொல்லிக்க இருக்குற ஒரே ஜீவன் என் மகள் தான். தயவு செய்து அவளை எங்கிட்ட குடுத்துடுங்க , உங்க காலைப் பிடிச்சுக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்” அதற்கு மேல் பேச முடியாமல் விம்மல் வெடித்தது அவளிடம். செயலற்ற பதுமையாய் வீற்றிருந்த சாவித்திரி ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். ” உமா! நீங்க வாய் விட்டு உங்க கஷ்டத்த சொல்லிட்டீங்க நான் சொல்லலே அவவளவுதான் வித்தியாசம். வர்ஷினி பிறந்ததிலிருந்து நான் தான் அவளுக்கு அம்மா. இத்தனை வருஷத்துக்கப்புறம் உங்களை அம்மான்னு சொன்ன அவ சின்ன மனசு குழம்பிப் போகாதா? ” சாவித்திரியை முடிக்க விடாமல் “அப்படீன்னா குழந்தையை தர மாட்டேன்னா சொல்றீங்க?” என்றால் உமா கோபத்துடன். சாவித்திரிக்கும் ஆவேசம் வந்தது. ” என்னமோ இன்னிக்கு அம்மான்னு உரிமை கொண்டாடிட்டு வரீங்களே! அவளை வளக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா? கை வருதா? கால் வருதான்னு பாத்து , வெயில் படாம மழை படாம காப்பாத்தி அவளை என் உசுரா நெனச்சிருக்கேன். உங்களுக்கு சின்ன வயசு நீங்க ஒரு வேளை ஆசைப் பட்டா இன்னொரு வாழ்க்கை அமச்சிக்கலாம். என் வர்ஷினி இல்லேன்னா நான் ஏது? இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்றேன் அதை ஏத்துக்கறீங்களா?” வந்தவள் வேறுமே தலையசைக்க , சாவித்திரி தொடர்ந்தாள். ” பத்து குழந்தைங்க மத்தியிலே உங்களாலே உங்க குழந்தைய அடையாளம் காட்ட முடியாது. ஆனா லட்சம் குழந்தைங்க இருந்தாலும் என் வர்ஷினி எனக்குத் தனியா தெரிவா. அதனால என் வர்ஷினிய எனக்கு விட்டுக் குடுத்துடுங்க பிளீஸ் , அதுக்குப் பதிலா இப்போ என் வயத்துல மூணு மாசமா இருக்கற குழந்தை பிறந்த ஒடனே ஒங்க கிட்ட குடுக்கச் சொல்லிடறேன். அதோட முகத்தைக் கூட நான் பாக்க மாட்டேன். நீங்க அதை உங்க குழந்தையா நெனச்சு ஏத்துகுங்க உமா. இது ஒரு தாயோட யாசகம் இதைத் தவிர எனக்கு வேற வழி தோணல்லே” என்றாள் சாவித்திரி.

உமாவை ஆயிரம் மின்னல்கள் ஒரு சேரத் தாக்கின. நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். இப்படியும் ஒரு தாய்மையா? பிறருடைய குழந்தைக்காக இத்தனை வருடம் கழித்து மலர்ந்திருக்கும் தன் குழந்தையையே தியாகம் செய்யத் துணிந்து விட்டாளே? அவள் வர்ஷினி மீது வைத்திருக்கும் பாசம் தான் எத்தகையது? தன்னுடைய பதிலையே ஆவலோடு எதிர்பார்க்கும் சாவித்திரியின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மௌனமாக மெல்ல நடந்தாள் உமா. அப்போது வந்து நின்ற பள்ளி வாகனத்தையோ அதிலிருந்து ஆரவாரமாக இறங்கிய குழந்தைகளையோ திரும்பிக் கூடப் பார்க்காமல் நேரே போய்க் கொண்டிருந்தாள்.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *