தாய்மையே போற்றுதும்…

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,005 
 

“”நில்லு…” மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின.
பழைய துணியில் பொதிந்து கிடந்த குழந்தையை, இறுக அணைத்துக் கொண்டாள்.
“”காலங்காலமாய் கவுரவத்தோட வாழ்ந்துகிட்டிருக்கிற குடும்பம் இது; கண்டதும் உள்ள வர்றத நான் அனுமதிக்க முடியாது.”
தாய்மையே போற்றுதும்...“”அம்மா…” மனோகரன் குரல் கம்மியது.
“”என்னடா… இதுக்கு நீயும் உடந்தையா… என்ன பத்தி தெரிஞ்சும் இந்த முடிவெடுத்திருக்கேன்னா… அந்த தைரியத்தை கொடுத்தது இவளா?” ரஞ்சிதம் கண்களில் அனல் பறந்தது.
“”அத்தை… நான் சொல்றத…”
“”போதும் நிறுத்து… இனி எந்த உறவுமில்லை!”
வாசல் கதவு படீரென சாத்தப்பட்டது.
திருமணமாகி மாமியார் வீடு வந்த இந்த இரண்டு வருடத்தில், கணவனை விட மிகப்பெரிய ஆறுதல் வேலைக்காரப் பெண் கிருஷ்ணம்மாதான்; சம வயதும் கூட.
“பெரியம்மா பாக்கத்தான் புலியாட்டம் உறுமும்; புரிஞ்சுக்கிட்டு… சும்மா பூனைக்குட்டியாட்டம் நம்மள சுத்தும்…’ எந்த பிரச்னை சொன்னாலும், இப்படித்தான் சமாதானப்படுத்துவாள் கிருஷ்ணம்மா.
“அழுவாதீங்க வசந்தியம்மா… ரசம், கோமியமாட்டம் இருக்குன்னு பெரியம்மா திட்டுனதை நானும் தான் கேட்டேன். வேணும்ன்னா, தலையில தெளிச்சுக்கன்னு மனசுக்குள்ள சொல்லிட்டு கம்முன்னு இருப்பீங்களா… இப்படி அழுவுறீங்க… ஈரேழு பத்தொம்பது லோகத்திலும், மாமியாருங்க இப்படித்தான் இருப்பாங்க!’
“ஈரேழு பத்தொம்பது இல்ல கிருஷ்ணம்மா… பதினாலும்!’ திருத்தினாள் வசந்தி.
“கணக்கெல்லாம் கரெக்ட்டா போடுங்க… முணுக்குன்னாலும் அழுதுடுங்க. ஐயா தங்கமானவரு… அவருக்காக நீங்க எதையும் பொறுத்துக்கலாம்!’
“இல்ல கிருஷ்ணம்மா… நான் சமைக்கறத ஒரு நாளாவது குத்தம் கண்டுபிடிக்காம இருந்திருக்காங்களா?’
“உங்க மாமியாரு இதுவரை யாரையாவது பாராட்டி பேசி நீங்க கேட்டிருக்கீங்களா… நான் எவ்ளோ பாட்டு வாங்குறேன்… அந்தம்மா சுபாவம் அப்படி. தேள பாத்து நாம தான் கவனமாயிருக்கணும். அதுகிட்ட போய், “கொட்டாத, வலிக்குது…’ன்னு சொன்னா, அதுக்கு புரியவா போவுது?’ துவைத்த துணிகளை உதறி காயப் போட்டாள் கிருஷ்ணம்மா.
“ஏன் கிருஷ்ணம்மா… உன் புருஷன் செத்தப்ப நீ ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலையாமே…’ மனபாரம் குறைய சீண்டி விட்டாள் வசந்தி.
“எதுக்கும்மா அழுவணும்… தெனம், தெனம் ஊத்திக்கிட்டு வந்து அடி, ஒத… நான் மாசமாயிருக்கேன்னு தெரிஞ்சும், அடிக்கிறதையாவது நிறுத்தலாம்ல… இது எப்படா தொலையும்ன்னு நான் சாமிகிட்ட வேண்டுனேன்… அதுவும் கள்ளச்சாராயம் குடிச்சி செத்ததுக்கு அழுது, புரண்டு, செலையா வைப்பாங்க?’
“மத்தவங்களுக்காக வாவது நீ கொஞ்சம் அழுதிருக் கலாம்ல… கல் நெஞ்சுக்காரின்னு பேர் வாங்கிட்டியே கிருஷ்ணம்மா…’
“எனக்கு எது சரின்னு படுதோ, அதத்தான் செய்வேன். நமக்காக வாழணுமே தவிர, ஊருக்காக வாழ்றதில எனக்கு இஷ்டமில்லம்மா. இந்தா… எனக்கு நெற மாசம். ஆத்தா அப்பன் கெடையாது… ஒண்டியா நின்னு புள்ளய பெத்து ஆளாக்கணும்… பெரீய்ய ஆபீசராக்கணும். இந்தக் கவலைதான் இப்ப எனக்கு. அதுக்குத்தான் நாலு வீடு சேத்து வேலை பாக்குறேன்…’ கிருஷ்ணம்மாவுக்கு மூச்சு வாங்கியது.
“உடம்ப கெடுத்துக்காத கிருஷ்ணம்மா… காசு, பணம் வேணும்ன்னா அத்தைய கேளு… கொடுக்கலேன்னா, ஐயாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன். உனக்கு ஏதாச்சும்ன்னா புள்ளய யாரு பாப்பா?’ ஆதரவாக கேட்டாள் வசந்தி.
“என்னம்மா… நீங்க இல்ல… எம் புள்ளக்கி இங்கிலீசுலாம் நீங்கதான் சொல்லி கொடுக்கணும்…’ கனவுகளோடு பேசினாள் கிருஷ்ணம்மா.
இரண்டு நாளா கிருஷ்ணம்மா வேலைக்கு வரல. இந்த மாதிரி சமயத்துல ரிக்ஷா ஓட்டுற முருகன்கிட்ட சொல்லி விடுவா…
யோசித்தபடியே, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொணடிருந்தாள் வசந்தி.
“அம்மா…’ வாசலில் குரல் கேட்டது.
“என்ன முருகா… கிருஷ்ணம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?’
“ஆமாம்மா… இடுப்புவலி எடுத்திருச்சு. நான் தான் அழச்சிக்கிட்டு போய், கவருமென்ட் ஆஸ்பத்திரில சேத்தேன். பாவம் அதுக்கு யாரு இருக்கா… உடனே உங்ககிட்ட சொல்ல சொல்லிச்சு. நான்தான் மப்புல மறந்துட்டேன்; வர்றேன்ம்மா…’
மருத்துவமனை பழக்கமில்லேன்னாலும், விசாரித்தபடி சென்றாள் வசந்தி.
“போங்கம்மா… உங்களத் தான் கடைசி வரை தேடிக்கிட்டிருந்தா பாவி மக…’
கிருஷ்ணம்மா வீட்டு தெருக்கார பெண்கள் வார்டு திசையை காட்டிவிட்டு சென்றனர்.
அதிர்ச்சியோடு, வேகமாக நடந்தாள் வசந்தி.
“வந்துட்டீங்களாம்மா… கொஞ்சம் முன் வந்திருக்க கூடாதா… நாளுக்கும், பொழுதுக்கும் உங்கள பத்திதானம்மா பேசுவா…’ வயதான பெண்மணி தலையிலடித்துக் கொண்டு அழுதார்.
மயக்கமே வந்து விட்டது வசந்திக்கு.
“கிருஷ்ணம்மா…’ அவளது கதறலில் மருத்துவமனையே அமைதியாக, ஒரு சின்னக்குரல் மட்டும் சிணுங்கியது.
அப்போதுதான் கவனித்தாள் வசந்தி.
கிழிந்த சேலைக்குள் பூனைக்குட்டி போல் சுருண்டிருந்தது குழந்தை; கண்கள் மட்டும் பளீர்ன்னு இருந்தது.
“நீங்கதான் வசந்தியாம்மா…’ டாக்டர் கேட்டார்.
“ஆமா டாக்டர்… கிருஷ்ணம்மாவுக்கு ஏன் இப்படி?’ கண்ணீர் பொங்கியது.
“ரொம்ப வீக்காயிருந்தாங்க… பேபி பிறந்ததும் துரதிருஷ்டவசமா கர்ப்பபை சுருங்கல… ஓவர் பிளீடிங்… என்ன செய்தும் காப்பாத்த முடியல. இன்னொரு முக்கியமான விஷயம்… இவுங்க கடைசியா பேசுனது உங்கள பத்தித்தான். சொந்தக்காரங்க யாருன்னு கேட்டதுக்கு, எல்லாமே வசந்தியம்மாதான்னு சொன்னாங்க…’ வசந்தியையே பார்த்தார் டாக்டர்.
“கூட வந்தவுங்க பேபிய வேண்டாம்ன்னுட்டாங்க, காப்பகம் எதுலயாவது சேத்திடலாமா மேடம்… கிருஷ்ணம்மா விருப்பப்படி உங்களை கேட்டுத்தான் நாங்க எந்த முடிவுக்கும் வர முடியும்…’ பதிலை எதிர்பார்த்து நின்றார் டாக்டர்.
“நீங்க இருக்கறப்ப எனக்கென்னம்மா கவலை… எம்புள்ளைய பெரீய்ய ஆபீசராக்கணும்… நீங்கதானம்மா இங்கிலீசெல்லாம் சொல்லி கொடுக்கணும்…’ கிருஷ்ணம்மாவின் குரல், மீண்டும், மீண்டும் கேட்டது. வெறித்து சுவரையே பார்த்தாள்; சுவரில் அன்னை தெரசாவின் படம்.
“இல்லாதவர்களிடம் பேசக் கூட மறுக்கும் மாமியார்; அம்மா பேச்சை தட்டாத கணவன். வசந்தி என்ன செய்யப் போற?’ மனசாட்சி கேட்டது.
இயலாமையின் உச்சத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேற எத்தனிக்கையில், கிருஷ்ணம்மாவின் குழந்தை குரலெடுத்து ஓங்கி அழுதது.
அனிச்சையாக ஓடிச் சென்று, குழந்தையை அள்ளிக் கொண்டாள் வசந்தி. மனம் மிக அமைதியாக, தெளிவாக இருந்தது.
“”என்ன வசந்தி… பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்க… அம்மா வர்றாங்கன்னதும் பழசெல்லாம் நியாபகத்துக்கு வருதா?” மனோகரன் கேட்டான்.
“”ஆமாங்க… இப்பதான் ரிஷிமதியோட நாம வந்து வீட்டு வாசல்ல நிக்கிற மாதிரி படப்படப்பாயிருக்கு… அன்னக்கி நீங்களும் ஒதுக்கியிருந்தா எங்க நெலம?”
“”குழந்தையை ஏத்துக்கலேன்னா நீ என்னையே ஒதுக்கியிருப்பியே… சரி, அது போகட்டும்… பாவம் அம்மா, அந்தக் காலத்து மனுஷி, இளகின மனசும் கூட… ஆனா, அவுங்களுக்கு புரியற மாதிரி எடுத்து சொல்ல நம்ம யாருக்கும் தெரியல; தைரியமும் இல்ல… நம்ம மேல உள்ள கோவத்துல மகள் வீட்டுக்கு போய் ஆறு மாசமாச்சுல… ஒரு தடவ கூட நம்மள பேசவும் விடல, பாக்கவும் அனுமதிக்கல… இப்ப திடீர்ன்னு என் தங்கச்சி பானுவுக்கு வளைகாப்பு நடத்த இங்க வர்றேன்னது எனக்கு ஆச்சரியமாயிருக்கு.”
“”அதான்ங்க… எனக்கும் குழப்பமாயிருக்கு… பேசாம ரிஷிமதிய தூக்கிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிடவா… பாவம் அத்தை சொந்த வீட்டில் நிம்மதியா விழாவை நடத்துவாங்கள்ல.”
“”அப்படீன்னா… அம்மாவே தயவு தாட்சண்யமில்லாம நம்மள போகச் சொல்லி இருப்பாங்களே… அம்மா பேசுறப்ப ஒரு கனிவு இருந்துச்சு வசந்தி…” அம்மா இதமாக பேசியதை மனதிற்குள் ஓட விட்டான்.
“”நல்ல கற்பனை உங்களுக்கு!” சிரித்தாள் வசந்தி.
வீடு முழுவதும் உறவினர்கள்… அக்கம் பக்கத்தார், வசந்தி அறைக்குள்ளேயே குழந்தையுடன் முடங்கிக் கிடந்தாள்.
“வசந்தி… நீ பண்ணியிருக்கற காரியத்தை என்னாலேயே ஏத்துக்க முடியல… சம்பந்தி அம்மாவை பாக்குற தைரியம் எனக்கில்ல… அதுமட்டுமில்ல… எல்லார் முன்னாடியும் நீ அவமானபட்டுடுவியோன்னு பயமாயிருக்குடி…’ அம்மா போனில் சொன்னபடி, வரவேயில்லை. நாத்தனார் பானு ரொம்ப நல்ல பெண். அவள் ஒரு வார்த்தை கூட பேசாததும், வசந்தியை ரொம்பவே பாதித்தது.
சபைக்கு நடுவே பானு மனையில் வந்து அமரவும், அவள் மாமியார் வளையல் போட ரஞ்சிதத்தை அழைத்தார்.
“”சுமங்கலிங்க… கொழந்த பெத்தவுங்க தான் நல்ல விசேஷங்கள்ல கலந்துக்கணும்ன்னு நெனைக்கிறோம்; இது சரிதானா சம்பந்தி?”
பானு மாமியாரை பார்த்து கேட்டார் ரஞ்சிதம்.
“”என்ன சம்பந்தி உங்களுக்கு தெரியாதா… நிறைஞ்ச வாழ்க்கை வாழ்றவங்கதான் அடுத்தவங்கள வாழ்த்த முடியும்,” பானுவின் மாமியார் வளையல் போட அடுத்தடுத்து பலரையும் அழைத்தார்.
“”பெத்த புள்ளைங்களை, எல்லாம் தாயுமே உசுராத்தான் நினைப்போம்… நாய், பூனை, கோழி கூட அப்படித்தான். ஆனா, அதே சமயம் மத்த கொழந்தைங்க மேல அன்பு காட்டுகிற மனது, எத்தனை பேருக்கு இருக்கு? அடுத்தவுங்க நல்லாயிருக்கணும்ன்னு வாழ்த்த மனசுதான் வேணும்… அதுக்கு சுமங்கலியா இருக்கணும், கொழந்த இருக்கணும்ன்னு அவசியமில்லை.”
வேகமாக அறைக்குள் வந்த ரஞ்சிதம், ரிஷிமதியை ஆவலாக தூக்கிக் கொண்டு, வசந்தியை கட்டாயப்படுத்தி கூடத்துக்கு அழைத்து வந்தார்.
“”இதோ… என்னோட முதல் பேத்தி ரிஷிமதி; ரிஷி மூலம்… நதி மூலம்… பார்க்க கூடாதுன்னுதான் என் மருமக இந்த பேரை வச்சிருக்கா போல… வசந்தி, உன் நாத்தானாருக்கு வளையல் போடு.”
அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
வசந்தி கண்ணீரும், பூரிப்பும் பொங்க வண்ண, வண்ண கண்ணாடி வளையல்களை பானுவின் கைகளில் கவனமாக போட்டு விட்டாள்.
“”அண்ணி… அதிர்ச்சியாயிருக்கா… அம்மா எங்க வீட்டுலதங்குன இந்த ஆறு மாசமும் செம ட்ரீட்மெண்ட்டுல… குழந்தையை தத்தெடுத்து சந்தோஷமா வாழ்றவுங்களை அம்மாவோட பழக வச்சேன்.
“”காப்பகங்களுக்கு அழைச்சிட்டு போய், பச்சக் கொழந்தைங்க அன்புக்காக தவிக்கறதை பார்க்கவச்சேன். கஷ்டப்படுற குழந்தைங்க… தொழு நோயாளிங்கன்னு, பாதிக்கப்பட்ட அத்தனை பேர்கிட்டையும் அம்மாவை விட அதிகமாக அன்பு காட்டி கவனிச்சுகிட்ட அன்னை தெரசா, தாய்மையில்லாதவங்களா… வாழ்த்தற தகுதியில்லாதவங்களான்னு அம்மாவை கேட்டேன்!”
“”பானு… உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல…” கையெடுத்து கும்பிட்டாள் வசந்தி.
“”என் மருமக ரிஷிமதிக்காக இது கூட செய்ய மாட்டேனா அண்ணி.”
கலகலவென சிரித்தபடி வசந்தி மறுக்க, மறுக்க, அவள் கரங்களில் அழகழகான வளையல்களை அடுக்க ஆரம்பித்தாள் பானு.
எந்த இடத்தில் அன்பு இருக்கிதோ, அந்த இடம் தானே, உலக அழகின் உச்சம்!
***

– எஸ்.அன்பரசி (டிசம்பர் 2011)

கல்வித் தகுதி: எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
சொந்த ஊர்: பிரிஞ்சுமூலை கிராமம், நாகை மாவட்டம்.
கல்லூரி நாட்களிலேயே சிறுகதைகள் எழுதி, பல பரிசுகளை பெற்றுள்ளார். பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன; நாடகங்களும் எழுதியுள்ளார். மதுரை வானொலியில் இவர் எழுதி, நடித்த நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. சிறந்த நகைச்சுவை எழுத்தாளராவதே இவரது லட்சியம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *