தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 7,451 
 

அதிகாலை வேளை.

என் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு என் முதுகின் மேலிருந்த திமிலை தொட்டுக் கும்பிட்டு நகர்ந்தார் வேலுச்சாமி.

பார்த்து தம்பி… ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு காளைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டுடுச்சு… என்ன செய்ய…. காளைகளுக்கும் வயசாகிப்போச்சு.. என் கண்முன்னாலே சாகிறதை விரும்பலை தம்பி.. அதுதான் இந்த முடிவு.. பணத்துக்கு ஆசைப்பட்டு இதைச் செய்யலை.

தவிப்புஇளங்கன்றாக இந்தப்பூமியில் விழுந்து எழுந்து நின்றபோது என் தாய் தன் நாக்கால் என்னைத் தடவிய பிறகு, என்னை வருடிய அந்த முதல் மனிதர் என்னை யாரோ சிலரிடம் விற்றுவிட்டு சென்று கொண்டிருந்தார். என் பார்வையில் மட்டுமே இப்போது தெரியும் உறவாக இருக்கும் வேலுச்சாமி அண்ணன் அந்த பாதை வளைவில் திரும்பி விட்டால் அந்த உறவும் அறுந்துவிடும்.

அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வாட்டசாட்டமாக நான்கு மனிதர்கள் சுற்றி நின்றார்கள். கையில் பெயிண்ட் டப்பாவுடன் நின்றிருந்த ஒருவன் என் முதுகுப் பகுதியில் பெயிண்டால் ஒரு டிக் மார்க் செய்தான். அவர்களின் கைகளில் கனமான நீண்ட இரண்டு சவுக்கு கம்புகள். முன்னங்கால்களை உள்ளடக்கிய பகுதியில் ஓரு சவுக்கு கம்பை நுழைத்து இரண்டுபேர் பிடித்துக் கொண்டார்கள் பின்கால்களை உள்ளடக்கிய பகுதியில் ஒரு கம்பை நுழைத்து இரண்டு பேர் பிடித்துக்கொண்டார்கள்.

இம்… என்ற ஒரு சத்தத்தோடு நான்கு பேரும் தூக்க அடிவயிற்று வலியோடு அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு. “ம்மா….’ என்ற என்னுடைய சத்தம் யாரை உசுப்பேற்றி விழிப்படையச் செய்து விடப்போகிறது…

டக் கென்று சப்தத்தோடு என்னை கீழே இறக்கினார்கள். பூமியிலிருந்து மேலே நிற்கிறேன். அது லாரியின் உள்பகுதி. இப்போது என் உடம்பின் அடிப்பகுதியிலிருந்த கம்புகளை உருவி விட்டார்கள். என்னுடைய மூக்கில் நுழைத்து கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து ஒருவன் இழுக்க நான் நகர்கிறேன்.

எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த என்னைப் போன்ற இனத்தவர்களோடு என்னை வரிசைக்குள் தள்ளி மற்றொரு இனத்தவரின் கழுத்தோடு சேர்த்து கயிற்றால் இறுக்கி கட்டுகிறார்கள்.

அந்த லாரி நிறைய, நிறைய இனத்தவர்கள். நான் கடைசி வரிசையில் கடைசியாக நிறுத்தப்பட்டேன். கால்கள் அசைந்து விடாவண்ணம் எல்லா இனத்தவர்களும் கட்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு வரிசை இனத்தவர்களோடு மற்ற வரிசை இனத்தவர்கள் கலந்துவிடாமல் குறுக்கே தனியாக வேறு கயிறு கட்டி பிரித்திருந்தார்கள்.

கடைசியாக ஒன்றும் நடந்தது. “ம்மா….’ என்று மட்டுமே சொல்லத் தெரிந்த என்னுடைய வாயும் இப்போது கயிற்றால் கட்டப்படுகிறது.

இப்போது லாரியின் பின்கதவு சாத்தப்படுகிறது. என்னுடைய கழுத்துப்பகுதியை தாங்கிக் கொள்ளும் பகுதியாக அந்தக்கதவு மாற கதவுக்கு வெளியே என் தலை தொங்கத் தொடங்க லாரி புறப்பட்டது.

எங்கே போகிறோம்.. எதற்காகப் போகிறோம்… ஒன்றும் தெரியவில்லை எனக்கு. அந்த லாரி பகுதிக்குள் என்னைப்போல நிறைய இனத்தவர்கள் இருப்பார்கள் போலத் தெரிந்தது. நல்ல வெயிலில் பயணம் தொடங்கியபோது, வீசிய காற்று இதமாக இருந்தது.

என்ன மனிதர்கள் இவர்கள்? உதவும் காலம் வரை தாங்கு… தாங்கு…. என்று தாங்குகிறார்கள். ஒன்றுக்கும் உதவாத நிலை வந்தபோது அதையும் கணக்குப் பார்த்து காசாக்கி விடுகிறார்கள்.

வேலுச்சாமி அண்ணன் வீட்டில் நான் செல்லக் காளையாக வளர்க்கப்பட்டவன். ஒட்டு மொத்தக் குடும்பமே என்னைத் தாங்கும்.

இரண்டு நாட்களுக்கு ஓருமுறை என்னை கண்மாய்க்கு அழைத்துச் சென்று முழங்கால் அளவு தண்ணீரில் நிறுத்தி வைக்கோலால் தேய்த்துக் குளிப்பாட்டுவார். நெற்றியிலிருந்து வால்பகுதி வரை பொட்டு வைத்துவிடுவார். என்னைக் குளிப்பாட்டிய அதே கண்மாயில் அவரும் குளிப்பார். ஈர வேஷ்டியுடன் என்மீது கட்டியிருக்கும் கயிறை பிடித்து அழைத்து வருவார். அதையே அவர் கம்பீரமாக நினைப்பார்.

வீட்டில் எனக்கு எந்த வேலையும் இருக்காது. காலையில் பருத்திக்கொட்டை புண்ணாக்குடன் தண்ணீர். மாலையில் அதே போல. ஒரு வேளை இடையில் மேய்ச்சலுக்காக அழைத்துப் போவார்கள். ஆனால் சுதந்திரமாக மேயவிடமாட்டார்கள். என்னுடைய சுதந்திரம் ஒரு நீண்ட கயிறால் கட்டப்பட்டிருக்கும்.

மாலை வேளையில் வேலுச்சாமி அண்ணனின் மனைவி வயலில் அறுத்துவந்த புல்லை உணவாகத் தந்து நான் அசைபோடுவதை பார்த்து முகத்தை தடவிக்கொடுத்துக் கொண்டு நிற்பார்கள்.

எப்போதாவது என்னை மக்கள் கூட்டம் நிறைந்த ஊருக்கு அழைத்துச் சென்று என்னை அவிழ்த்து விடுவார்கள். ஆரம்ப காலங்களில் மூச்சை தம் பிடித்து ஓடிக் கொண்டிருப்பேன். எந்தத் திசையில் எங்கு போகின்றோம் என்று தெரியாமலேயே ஓடுவேன். ஆனால் என்னை யாரும் தொடவிடமாட்டேன். வந்த திசைமாறி ஏதாவது காடு அல்லது ஊர்களில் திரிவேன். அப்போது வேலுச்சாமி அண்ணன் வந்து வீட்டிற்கு கூட்டிச் செல்வார்.

ஆனால் சில வருடங்கள் இப்படியே தொடர்ந்தன. என் வளர்ந்த கொம்புகளை உடைத்த கண்ணாடித் துண்டைக் கொண்டு சீவுவார்கள். கூர்மையாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து சீவுவார்கள். பிறகு என்னுடைய கொம்புக்கு எண்ணெய் தடவுவார்கள். உடம்பெல்லாம் நிறைய எண்ணெய் தடவுவார்கள். கழுத்தில் மணிகட்டுவார்கள். அப்புறம் கலர்கலர் துண்டு. நெற்றியில் வெள்ளியிலான காசுகளைப் போன்ற மணிகளை கட்டுவார்கள்.

மறுபடியும் மக்கள் கூட்டம் நிறைந்த பொட்டல் காட்டில் என்னை அவிழ்த்து ஓடவிடுவார்கள். என்னை மனிதர்கள் விரட்டி வருவார்கள். வாலை எட்டிப் பிடித்து தொங்கிக் கொண்டு வருவார்கள். என் முதுகைப் பிடித்து தொங்கிக் கொண்டு வருவார்கள். அவர்களை ஒரே மூச்சில் உதறிவிட்டு என் கொம்புகளால் முட்டித் தள்ளியிருக்கிறேன்.

பலசமயங்களில் என்னை யாரும் தொடவிடாமல் சுழன்று மனிதர்களை விரட்டியடிப்பேன். அப்படியெல்லாம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லும் போது ஆரத்தி எடுப்பார்கள். கூடுதலான கவனிப்புகள் இருக்கும்.

என்னை யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்கி விடமுடியாது. தலையைக் கீழே கவிழ்த்து உறுமுவேன். என் அருகில் வந்தவர்கள் ஓடிப்போவார்கள். வேலுச்சாமி அண்ணனும், அவருடைய மனைவியும் வந்தால் மட்டும் அமைதியாகி விடுவேன். எனக்கு குடிக்க தண்ணீர் வைப்பதிலிருந்து, உணவு கொடுப்பது வரை எல்லாம் அவர்கள்தான் உலகமாகத் தெரிந்தார்கள்.

வீட்டில் என்னைப் போன்று என் இனத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையெல்லாம் ஓர் ஓட்டுக் கொட்டகையில் கட்டி போட்டு விடுவார்கள். என்னை மட்டும் தனியே வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருப்பார்கள்.

கொஞ்ச நாள்களுக்கு முன்பாக பொட்டல் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் வெள்ளை கோட்டு அணிந்த மனிதர்கள் என்னை சோதனை செய்தார்கள். முன்பெல்லாம் என்னை விரட்டுபவர்கள் யாரென்றே தெரியாது இப்போதெல்லாம் ஒரேமாதிரி உடையணிந்த மனிதர்கள் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

அப்புறம் சில ஆண்டுகளாக என்னை வீட்டை விட்டு எங்கும் வெளியே அழைத்துச் செல்வதில்லை. என்னை இப்போது என் இனத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரே கொட்டகையில் கட்டி வைக்கிறார்கள்.

காலச் சக்கர சுழற்சியில் நான் வலுவிழந்து உருக்குலைந்து விட்டேன். இப்போது என்னை அவிழ்த்து விட்டால் முன்பு ஓடிய நிலையில் என்னால் ஓடமுடியாது. என் கொம்புகளை ஆட்டி மனிதர்களை விரட்டமுடியாது.

இன்று எல்லோருடனும் என்னைக் கட்டிக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

என் கழுத்து சலங்கை, துண்டு, வழுவழுப்பான கயிறுகளுக்கு பழக்கப்பட்டது. இன்று முள்மாதிரி குத்துகின்ற கயிறு கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது. லாரி அங்குமிங்கும் அசையும் போது மொத்தமாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தள்ளும் போது நெரிசலில் உடம்பு நசுங்கி வலிக்கிறது.

உராய்வுகளில் சிதைந்து போன தோலின் வெள்ளைப் பகுதி இரத்தச் சிவப்பாக காட்சியளிக்கிறது. எனக்கு மட்டுமல்ல. என் இனத்தவர்களுக்கும் தான். என்னோடு கட்டப்பட்டிருக்கிற என் இனத்தவரை சற்றே திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறேன். திரும்பினால் கழுத்து ஒடிந்து விடும் அளவிற்கு கயிற்றால் இறுக்கி பிணைக்கப்பட்டிருக்கிறேன்.

இதமாக இருந்து வெயில் இப்போது உச்சந்தலையைப் பிய்த்து எடுக்கிறது. நாக்கு வறண்டு விட்டது. தண்ணீருக்காக ஏங்குகிறது. லாரி செல்லும் வழியெங்கும் நீர் நிறைந்த கண்மாய்கள், குட்டைகள் கடந்து போகின்றன. ஓடிச் சென்று அருந்த நினைக்கையில் கால்களைக் கூட அசைக்க முடியவில்லை.

வேகமாகச் சென்று கொண்டிருந்த லாரி ரோட்டின் ஓரமாக நிற்கிறது. இரண்டு பேர் இறங்கி வந்து பின்பக்கம் பார்க்கிறார்கள். ஒருவன் மட்டும் கதவுகளைப் பிடித்து மேலேறுகிறான்.

என் கழுத்தில் கையை வைத்து அழுத்திப் பார்க்கிறான். நல்ல வேளை. அவிழ்த்து விடப் போகிறான் என்று நினைக்கையில்…..

“”அண்ணே…. கட்டு சரியா இருக்கு… எதுவும் பிரியலை….”

சொல்லிவிட்டு இறங்குகிறான்.

அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து சாப்பிடுகிறார்கள். பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்கள். எங்களை மறுபடியும் ஒருமுறை பின்பக்கம் வந்து பார்த்து விட்டு லாரியில் ஏறி புறப்படுகிறார்கள்.

மீண்டும் குலுக்கல், உரசல்… ரண வேதனையில் என்னுடைய பயணம் தொடர்கிறது.

ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது. நான் அழைத்துச் செல்லப்பவது வேலைக்காக அல்ல. என்னை வேலை வாங்க வேண்டும் என்றால் எனக்கு தெம்பு வேண்டுமே. அதற்காகவாவது கொஞ்சம் தண்ணீர்… கொஞ்சம் தீவனம் தந்திருப்பார்களே… எதுவும் தராமல் கொண்டு செல்கிறார்கள்.

விளையாட்டிற்கு அழைத்துச் செல்லும் போது சற்றே சாய்ந்தால் கூட நான்கைந்து பேர் என்னைத் தாங்கிப் பிடிப்பார்கள். என் முதுகை லேசாகத் தட்டி ஆறுதல்படுத்துவார்கள். இப்போது அப்படி இல்லை….

காலையில் ஏற்றப்பட்ட நான், வெயில் சற்றே தாள மாலை வேளையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணத்தில் வாயில் நுரை தள்ள உடம்பிலிருந்த கொஞ்ச நீர்ச் சத்தும் வற்றத் தொடங்குகிறது. விழித்துப் பார்க்க நினைக்கும் கண்களை இமைகள் தானாகவே வந்து இழுத்து மூடுகின்றன. அதையும் மீறி விழித்துப் பார்க்க முயற்சிக்கிறேன். முடியவில்லை.

இனிமேல் எனக்கு வாழ்க்கை இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனிமேல் எனக்கு விலை இல்லை என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் கொஞ்சமாவது உயிர்த்தண்ணீர் ஊற்றி இருப்பார்களே..!

இருள் கவ்வத் தொடங்குகிறது. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே….. தெரியவில்லை. லாரி உயரமான இடத்தில் ஏறுவது தெரிகிறது. ஏறிக்கொண்டே இருக்கிறது. இரவு நேரங்களில் லாரியை இயக்குபவர்கள் ஆங்காங்கே கடைகள் இருக்குமிடங்களில் இறங்கி இளைப்பாறுகிறார்கள்.

எங்களை அழைத்துச் செல்லும் களைப்பு அவர்களுக்கு… எனக்கோ உடம்பிலிருந்த ஈரச் சத்து போய் இப்போது என் நாக்கு வெளியே தொங்குகிறது. உடம்பு வலியுடன் கண்கள் மூடுகின்றன. உறக்கத்தில் அல்ல… மயக்கத்தில்.

விழித்த பொழுது வெளிச்சம் வந்திருந்தது. ஒரு மிகப் பெரிய பொட்டலில் என்னைப் போல் தோழர்கள் நிறைய நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னைக் கட்டி வைத்திருந்த லாரியின் பின்பக்க கதவு திறக்கப்பட்டது. என் கழுத்தை தாங்கியிருந்த அந்தக் கதவு திறந்தவுடன் தலை தொங்கியது எனக்கு.

மளமளவென்று சிலர் வண்டிக்குள் ஏறினார்கள். எங்களின் கழுத்துக் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. பின்பக்கத் தொடையில் ஒரு தட்டுத் தட்டி விரட்டினார்கள்.

தெம்பிருந்த தோழர்கள் லாரியிலிருந்து குதித்தார்கள். எனக்கோ கால்களை அசைக்கவே முடியவில்லை. என் பின்னாலிருந்து இரண்டு மூன்று பேர் தள்ள, முன்னால் இரண்டு பேர் இழுக்க நானும் தரையைத் தொட்டேன். முன் கால்கள் நின்று கொண்டன. பின் கால்கள் வலுவிழந்து ஊன்ற முடியாத நிலையில் உட்கார்ந்தபடி விழுந்து விட்டேன். என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.

தண்ணீரையும், ஒரு பிடி தீவனத்தையும் தேடுகிறது கண்கள். இப்போது முன் கால்களும் மடங்கிக் கொள்ள தலையை நிமிர்த்த முடியாமல் அப்படியே படுக்கிறேன்.

என்னைப் பார்த்த சிலர் என்னைத் தாண்டி போகிறார்கள். இன்னும் சிலரோ என்னை நின்று பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் ஓடிவந்து என் கொம்புகளை அசைத்து என்னை எழுப்ப முயற்சிக்கிறான். தாழ்ந்து கிடக்கும் தலையை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறான். அவனுடைய முயற்சிகள் தோற்றுப் போகின்றன.

பெயிண்டால் என் முதுகு மீது டிக் மார்க் செய்தவனும், என்னை நிறுத்த முயற்சித்தவனும் இருவரின் கைகளுக்கு மேலே துண்டைப் போட்டுக் கொண்டு கைகளை குலுக்கிக் கொண்டு நின்றார்கள். பிறகு கையை விலக்கிக் கொண்டு பணத்தை கொடுத்தான் அவன்.

சில நொடிகளில் என்னை அவன் ஒரு சின்ன லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். என்னைப் போல் இன்னும் இரு இனத்தார்கள் வண்டியில் இருந்தனர்.

சிறிது நேர பயணம்தான். லாரியை விட்டு இறக்கி நிறுத்தினான். எதிரே நான் பார்த்த காட்சி என்னுடைய முடிவை எனக்கு அறிவித்தது.

என் இனத்தைச் சேர்ந்த ஒன்று தலைகீழாக தொங்கியது.

இனிமேல் என் மீதான கருணைக்கு ஏது இடம்… நான் இறப்பதற்கு பயப்படவில்லை. ஆனால் சாகும்போது “ம்மா….’ என்று ஒரே ஒரு முறை வாய்விட்டு கதற என் வாயில் கட்டியிருக்கும் கயிறு விலகுமா? கால்களை உதறி கம்பீரமாக ஒரே ஒரு முறை நிற்க ஆசைப்படுகிறேன்.

வறண்டு போன நாக்கை நனைத்துக் கொள்ள ஒரு வாய்த் தண்ணீருக்கு ஏங்குகிறேன். வயிற்றுப் பசி போக்கிச் சாக ஒரு கவளம் தீவனம் யாராவது தரமாட்டார்களா என்று ஆசை படுகிறேன்.

சாகப் போகும் எனக்கு கடைசியாக ஒரு தடவை பிழைத்துச் சாக வாய்ப்பு கிடைக்க நினைக்கிறேன்.

துள்ளித் திரிந்த காளையாக நான் ஓடியாடித் திரிந்த போது என்னை பாதுகாப்பதாக போடப்பட்ட மனிதர்களின் சட்டம் சாகும்போது காக்காவிட்டாலும், கருணை மட்டுமாவது காட்டும் சட்டமாக மாற்றக்கூடாதா …

உங்களால் மாற்ற முடியும்… என்னால் முடியாது. இறந்த பின்பு உங்களுக்கான இறைச்சி உணவாக என்னால் மாற முடியும்…. உங்களால் முடியாது மனிதர்களே…..

என் முதுகில் தட்டி இரண்டு மனிதர்கள் இப்போது என்னை கீழே தள்ளி நான்கு கால்களை சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் என் இரண்டு கொம்புகளையும் பிடித்து தரையில் அமிழ்த்தி தலைப்பகுதியை இழுத்து தன்னுடைய கால்களுக்கு இடையில் வைத்துக் கொள்கிறான். அச்ச உணர்வு என்னுள் குடிகொள்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. நடக்கப் போவது தெரியாமலிருக்க கண்களை இறுக்க மூடிக்கொள்கிறேன் நான்.

– குன்றக்குடி சிங்காரவடிவேல் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *