தழும்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 9,010 
 

அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது கல்யாணத்துக்கு அம்மா வராததில், சங்கருக்கு நிரம்பவே வருத்தம்.

நன்றாகப் படித்துப் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு வந்த சங்கரை, அவனது மேலதிகாரிக்கு நிரம்பவே பிடித்துப் போயிற்று. பழகுவதில் பண்பும், பேசுவதில் இனிமையும், வேலையில் நேர்மையும் தெரிந்ததில், சங்கரைத் தனது மாப்பிள்ளை ஆக்கிக் கொள்வதில் தீவிரம் காட்டினார்.

ஓரிரு சமயத்தில் சங்கரை அவரது வீட்டுக்கு டின்னருக்கு அழைத்ததில், அவரது ஒரே மகள் சரளாவுக்கும் சங்கருக்கும் இடையே ஆத்மார்த்தமான பழக்கம் ஏற்பட்டது. நேரடியாக மேலதிகாரி திருமணப் பேச்சை ஆரம்பிக்கவும், உடனே சங்கர் அம்மா ஜனகத்திடம் சரளாவைப் பற்றிச் சொன்னான். ஜனகம் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததுடன், டெல்லியிலேயே திருமணத்தை முடித்துக்கொண்டு வரவும் கூறினாள்.

டில்லிக்குத் தன்னால் வர முடியாமல் உடம்பு படுத்துவதாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக், கல்யாணம் முடிந்த கையோடு சரளாவை அழைத்துக் கொண்டு வரச் சொன்னாள். தன்னுடைய அன்பும் ஆசியும் அவனுக்கு எப்போதும் உண்டு என்று மிக்க ஆதரவாகப் பேசியதில், சங்கர் நெகிழ்ந்து போனான். ரொம்பவும் சிம்பிளாகப் போனவாரம் திருமணம் நடந்து முடிந்து, இதோ சரளாவுடன் அம்மாவைப் பார்க்க வந்தாயிற்று.

வாசலில் பெரிதாகக் கோலம் போட்டுச் செம்மண் பூசியிருந்தது. “சரள், அம்மா கோலம் போடுவதில் எக்ஸ்பர்ட் தெரியுமா?”

அத்தனாம் பெரிய கோலத்தைச் சரளா பார்த்ததே இல்லை. கண்களில் பிரமிப்பு நீங்கும் முன்பே, ஆரத்தித்தட்டுடன் வந்த ஜனகம், “வாம்மா சரளா, சங்கர்கண்ணா வாங்கோ… ரெண்டுபேரும் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ” குரலில் ஏகக் கனிவுடன் வரவேற்றாள் ஜனகம். ஒன்பது கஜப் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்த அம்மாவைப் பார்த்ததும் சங்கரின் கண்கள் கசிந்தன “ரொம்பவும் இளைச்சுட்டியேம்மா….”

“என்ன சங்கர் இது, சின்னக் குழந்தையாட்டமா? சரி சரி, உள்ள வந்து சாமி நமஸ்காரம் பண்ணிட்டு, அப்பா படத்துக்கும் நமஸ்காரம் பண்ணுங்கோ. மொதல்ல பால், பழம் தரேன். அப்புறம் காபி. வெந்நீர் ரெடியா இருக்கு. குளிச்சுட்டு வந்துட்டா இலை போட்டுச் சாப்பிட்டுடலாம்.”

ஜனகத்தின் இதமான பேச்சில், இங்கிதமான வரவேற்பில், இனிமையான உபசரிப்பில், சரளா ரொம்பவே கரைந்து போயிருந்தாள். “ஓ! நீங்கள் எனக்கும் அம்மாதான்” என்று சொல்லி நமஸ்கரித்தபோது, ஜனகம் சிலிர்த்துப் போனாள்.

கோதுமை அல்வா, தயிர்வடை, சேனை வறுவல், பீன்ஸ் உசிலி, உருளைக் கறி, முருங்கை சாம்பார், மைசூர் ரசம், பால் பாயசம்….பெரிய விருந்துதான்….வீடே மணத்தது.

“தேங்க்ஸ்மா” ஜனகத்தின் கைகளைப் பற்றிக்கொண்டு சரளா சொன்னபோது, சரேலென்று கைகளை இழுத்துக் கொண்டாள் ஜனகம். “ஓ! இதென்ன பெரிய தழும்பு கைகளில்?”

சங்கர் பதில் சொல்லுமுன் ஜனகம் முந்திக்கொண்டாள். “அது ஒண்ணுமில்லமா. சங்கர் சின்னக் குழந்தையா இருக்கச்ச தவழ்ந்து வந்து, கொதிக்கிற ரசத்துல கைய விடப் போய்ட்டான். அவசரமா நான் வந்து பாத்திரத்த நகட்டினத்துல, என் கைல பட்டு தோல் வழண்டு போச்சு” இயல்பாகப் பேசிய ஜனகம், பார்வையால் தன்னைத் துளைத்த சங்கரைத் தவிர்த்தாள்.
நடக்கையில், புடவைக் கொசுவம் விலகிக் கட்டிக் கரியாகக் காலில் தெரிந்த தழும்பு பற்றிக் கேட்ட போதும், சங்கருக்கு முன்பாகப் படபடத்து…வெந்நீர் அடுப்பிலிருந்து, தவறுதலாக எரியும் விறகுக்கட்டை பட்டு ஏற்பட்ட தழும்பு என்றாள். சரளாவின் கேள்விகள் ஜனகத்தை சகஜமாக இருக்கவிடாமல் செய்தன.

பழகிய நாட்களிலேயே, சரளாவிடம் அம்மாவைப் பற்றிச் சொல்லிடணும் என்று சங்கர் நினைத்துக் கொள்வான். ஆனாலும், இருவரும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளும் போது எப்படியும் தெரியத்தானே போகிறது என்று இருந்து விட்டான். ஆனால், அம்மா தனது நிஜத்திலிருந்து விலகிய நிழல்போல் தெரியவே, ஜனகத்திடம் தனிப்படப் பேச எழுந்த உந்துதலில் சமையற்கட்டுக்குள் நுழைந்தான்.

ஒரு பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு, சற்றே கண் அயர்ந்த ஜனகம், சங்கர் தனது காலைப் பிடித்து விடுவதைப் பார்த்து விருட்டென்று எழுந்து கொண்டாள். “என்னப்பா சங்கர்! போய் சரளாவோட ரெஸ்ட் எடுத்துக்கோ”.

“அம்மா, நீ ஏன் சரளா கிட்ட நடந்ததைச் சொல்லாம, என்னவோ கதை சொல்லிண்டிருந்தே?”

“எதைச் சொல்லணும் சங்கர்?”

“அம்மா, கொதிக்கும் ரசம் தன்னிச்சையா பட்டா, உன் கை இப்படி ஆச்சு? அடுப்புச் சுள்ளியா உன் காலைப் பதம் பார்த்தது? கதவு இடுக்குல கை வச்சா, உன் விரல் நசுங்கித்து? அந்த மனுஷனைப் பத்தி ஏன் சொல்லல?” அவன் கை, படமாகச் சுவரில் முறைத்துக் கொண்டிருந்த அவனது அப்பாவின் பக்கம் நீண்டது.

அந்தக் கொடூரமான நாட்கள் அவன்முன் விஸ்வரூபம் எடுத்தன.

“ஏய் ஜனகம், இது என்ன சட்னியா, இல்ல கரம்ப மண்ணா? ஒரே கல்லா இருக்கு?” வேகமாக வந்த கிருஷ்ணமூர்த்தி, அம்மாவின் கைவிரல்களை அங்கிருந்த அம்மிக்கல்லில் வைத்துக் குழவியால் நசுக்கிய போது, சிறுவன் சங்கரின் இதயமே அங்கு சட்னியானது போலிருந்தது. அந்த வயதில் அவனால், கதறத்தான் முடிந்தது. ரத்தம் கட்டி வீங்கிப் போன ஜனகத்தின் விரல்கள், நாளடைவில் சிதைந்து கோணிப் போயின. சங்கர், கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து விலகிப் போவதற்கான முதல் நிகழ்ச்சியாக அது அமைந்தது.

இன்னொரு சமயம “இது குழம்பா? நெடி அடிக்கிறது? சமைக்கும் போது, சிரத்தை வேண்டாம்? உன் கவனம் எங்கே இருக்கு? கையக் கொண்டா” என்றவர் கற்சட்டிக் குழம்புக்குள் விட்டு எடுத்த போது, அம்மாவின் கதறலோடு, சங்கரின் கதறலும் சேர்ந்து கொண்டது.

அன்று தீபாவளி. உள்காரியமாக இருந்தாள் ஜனகம். கண்களில் சீயக்காய்ப் போடி விழுந்து, அவர் கூப்பிட்டு உடனே வரவில்லை என்று, பெரிதாகக் கத்தி, எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையால் ஜனகத்தின் காலில் பழுக்கச் சூடு வைத்தார். துடிதுடிக்க, அம்மா நொண்டிக் கொண்டு புடவையைக் கூடச் சரியாகக் கட்ட முடியாமல் வெகுநாட்கள் அவஸ்தைப் பட்டபோது, சங்கருக்குத் தன் அப்பாவைச் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.

என்ன மனிதர் இவர் என்று பொறுக்க முடியாமல், ஒரு நாள் அவரைத் தட்டிக் கேட்டபோது, வயசுப் பையன் என்றும் பாராமல், குடைக்கம்பால் அவனை உண்டு இல்லை என்று பந்தாடி விட்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது கஷ்டம் தன்னோடு போகட்டும், இந்தத் தளிர் வாடக்கூடாது என்று தீர்மானித்த ஜனகம், சங்கரைத் தனது ஒன்றுவிட்ட சகோதரனிடம் அனுப்பிப் படிக்க வைத்தாள். படுத்தி எடுத்த அப்பா, ஒரு நாள் நெஞ்சடைத்து உயிர் விட்டபோது, சங்கரின் கண்களிலிருந்து, ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை!

இப்படி, தென்றலைத் தனக்கு அனுப்பிவிட்டுத், தனியே புயலை எதிர்கொண்ட அம்மாவை நன்றாக வைத்துக்கொள்ள மனது விழைந்தது. தான் வளர்ந்து வரும் வேளையில், உடம்பால் உழைத்துத் தேய்ந்து கொண்டிருந்த அம்மாவை, அவனது உள்ளத்தில் ஒரு உயர்ந்த சிம்மாசனம் போட்டு அமர்த்தினான்.

“அம்மா, சொல்லுமா. ஏதானும் பேசும்மா” சங்கரின் கேள்வி ஜனகத்தை உலுக்கிற்று. கண்களில் ஈரம் பூத்தது. பேசுகையில் குரல் கம்மிப் போயிற்று.

“சங்கரா, துயரத்தின் கறை படியாத மனுஷாளே உலகத்துல கிடையாதுப்பா. நமக்கு வரும் கஷ்டத்தயோ, துக்கத்தயோ ஏத்துண்டு, கடந்து போவது மட்டும்தான், அதை வெல்லும் ஒரே வழி! உன்னோட ஆதங்கம் எனக்குப் புரியறது. நான் பட்ட கஷ்டங்களும், அதுக்கான காரணங்களும், சரளாட்ட சொல்றதால ஒண்ணும் ஆகப் போறதில்ல. அப்படிச் சொன்னா, என்மேல அவளுக்குப் பரிதாபமும், அனுதாபமும் ஏற்படலாம். உன் அப்பா மேல மரியாதை தோணாமப் போகலாம். சங்கர், இந்தத் தழும்புகளைப் பார்க்கும்போது, நான் கஷ்டப் பட்டதாகவே நினைக்கிறதில்லை. என்னைப் பொறுத்த வரையில், என்னோட மொத்த வாழ்வின் சுழற்சியாக நீ இருந்தே. எந்த அடியோ, வலியோ என்னைத் தாக்கினாலும், அவை உன்னைத் தாக்காமல், உனக்கு நான் ஒரு குடையா இருக்கணும்னு நினச்சேன். அம்பால் தாக்கப்பட்டவர்கள், அடி பொறுக்கும்போதும் இதனால் ஏற்படும் வலி மறுக்கும்போதும், எய்தப்படும் அம்புகள் நிச்சயம் வீரியம் இழக்கும், ஏன் விழவும் செய்யும்தானே? அதனால்தான் எனக்கு விழுந்த அடியையும், வலியையும் பொறுத்துக் கொண்டேன்.

உன்னை நல்லபடியா வளர்க்கணும்னு எனக்குள் ஒரு தீயை வளர்த்துக் கொண்டேன். தீக்குள் விரலை வைக்கும் அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும் சொல்லு?

மனுஷமனம் ஒவ்வொண்ணுக்குள்ளும் ஒரு ஹோமகுண்டம் இருக்கும் சங்கர்! ஒவ்வொருவரும் அதில் ஒருவகை தீயை வளர்க்கிறார்கள். அதில் தீயை வளர்ப்பதே முக்கியம். அதைவிட, அந்தத் தீயை அணைந்து விடாமல் காப்பது அதைவிட முக்கியம். தீ அணைஞ்சு போனா, யாகம் முற்றுப் பெறாமல் போய்விடுமே? எனக்குள் நீ தீயாகச் சுடர் விட்டுக் கொண்டிருந்தாய்.

யாருமே முயற்சிக்கத் தயங்கும் ஒன்று, தன்னை மாற்றிக் கொள்வதுதான். அந்தச் சோதனைக்கு நான் என்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டேன்.

சாப்பிடவும், சுகிக்கவும், மற்றைய சுய லாபங்களுக்கும் மட்டும் ஏற்பட்டதல்ல இந்த வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து காட்டுவது நம் கையில்தான் இருக்கு. நாலு தடவை கீழே விழுந்து எழுபவனுக்குத்தானே கேடயங்கள் பரிசாகக் கிடைக்கும்? உன்னை நல்லவனாகவும், வல்லவனாகவும் உருவாக்குவதற்கு நான் மனமுவந்து ஏற்றுக் கொண்ட பரிசுகள்தான், இந்தத் தழும்புகள்!

இந்தத் தழும்புகள் என் உடலில் ஒட்டிக் கொண்டது மாதிரி, கடந்த காலத்து நிகழ்வுகளும், என்னுடனேயே தங்கி விடட்டும்! நீ எனக்கு வெற்றிக் கோப்பையாகக் கிடைத்திருப்பதை, இந்தத் தழும்புகள் எனக்கு எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.”

சங்கர் நிமிர்ந்து உட்கார்ந்தான். நம்முடைய நிழல், நம்மோடு தொடர்ந்து வந்தாலும், நம்மோடு எதுவும் பேசுவது இல்லையே? நம்மைப் பெற்று ஆளாக்கும் அம்மாவும் அப்படித்தானோ? கல்லுக்குள் தேரை போலத் தன்னைப்பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பாத அம்மா, திறக்காத சிப்பிக்குள் திரண்டிருக்கும் முத்தாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *