தமிழ்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,049 
 

புதிதாகக் கல்யாணமாகி என் மனைவியுடன் பெங்களூரில் வேலை நிமித்தம் குடியேறி ஒன்பது மாதங்கள்தான் ஆகிறது.

எங்கள் இருவருக்கும் கன்னடம் பேசத் தெரியாது. டாட்டா நகர் குல்மொஹர் அபார்ட்மெண்டின் மூன்றாவது மாடியில் குடியிருக்கிறோம்.

வீட்டில் தினமும் வாங்குகிற ஆங்கில தினசரியை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மெயின் ரோட்டில் பழைய பேப்பர் வாங்குகிற கடைக்கு எடுத்துப்போய் எடை போட்டு பணத்தை வாங்கி வருவதுதான் என் வழக்கம்.

தெருவில் சைக்கிளில் வருபவர்களிடம் நான் போடுவது இல்லை. ஏனோ எனக்கு அவர்கள்மேல் நம்பிக்கை கிடையாது. எடை போடுவதில் ஏமாற்றுவார்கள் அதுதவிர குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள் என்றும் நினைத்தேன்.

மெயின்ரோட்டுக் கடையில் பழைய பேப்பர் வாங்குகிற விலையை எழுதியே போட்டிருப்பான். ஒரு நிமிடத்தில் எடைபோட்டு, சின்னக் காகிதத்துண்டில் பேப்பரின் எடையையும் அதன் மொத்த விலையை கணக்குப் போட்டு, உடனே கையில் காசைக் கொடுத்துவிடுவான். பேசவேண்டிய அவசியமே கிடையாது.

ஆனால் கடந்த நான்கைந்து மாதங்களாக ஒவ்வொரு சனி ஞாயிறும் மழையோ அல்லது வேறுவேலைகளோ இருந்ததால், மெத்தனமாக இருந்துவிட்டேன். பழைய பேப்பர்கள் சேர்ந்துகொண்டேபோய் என் ஸ்கூட்டரில் தூக்கிச்செல்ல முடியாத அளவுக்கு குவிந்துவிட்டது.

இனிமேல் கடைக்குச்சென்று போடுவதெல்லாம் வேண்டாம் என்று நினைத்து தெருவில் வருகிறவனிடம் போட்டுவிட வேண்டியதுதான் என்று காத்திருந்தேன்.

அந்த சனிக்கிழமை “பேப்பர் பேப்பர்” என்று சைக்கிளில் கூவியபடி போன ஒருத்தனை பால்கனிக்கு ஓடிப்போய் எட்டிப்பார்த்துக் கூப்பிட்டேன்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “இதோ மாடிக்கு நானே வரேன் சார்…” என்றான்.

சைக்கிளை எதிரே மரத்தடியில் நிறுத்திவிட்டு பூட்டிச் சாவியை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். கேரியரில் இருந்த பெரிய கோணியை எடுத்துக்கொண்டு எங்கள் கட்டிடத்தின் கீழ்த்தள வாசலில் படியேறினான். லிப்ட் கிடையாது. நான் போய்க் கதவைத் திறந்தேன்.

அவன் கோணிப்பையை வீட்டின் வாசல் தரையில் வைத்துவிட்டு தானும் அமர்ந்துகொண்டான். கோணிப்பையை தரையில் வைத்தபோது அதற்குள் இருந்த தராசு சப்தம் கேட்டது.

அடர்ந்த மீசையில், நான்கு நாட்கள் ஷேவ் செய்யப்படாத முகத்துடன் வாரப்படாத தலைமயிரில் பழுப்பாக இருந்தான். நாற்பது வயது இருக்கும்.

“கிலோ எஷ்டு?” எனக்குத் தெரிந்த கன்னடத்தில் ஆரம்பித்தேன்.

“ஒருகிலோ பதினோரு ரூபான்னு எடுக்கிறேன் சார்…”

அவன் தமிழில் பேசியது எனக்குச் சந்தோஷமாக இருந்தது.

“உனக்குத் தமிழ் தெரியுமா?”

“தெரியுமாவா…. நான் தமிழ்காரன்தான் சார்…. ஊரு தர்மபுரி. எனக்கு கன்னடம் தெரியாது.”

தமிழ்க்குரல் கேட்டு என் மனைவி சரஸ்வதியும் அங்கு வந்தாள்.

“கடையில் பன்னிரண்டு ரூபாய்க்கு எடுக்கிறானே…” நான் பொய் சொன்னேன்.

“அப்படீன்னா உங்களை கண்டிப்பா எடை மிஷின்ல ஏமாத்துவான் சாமி. நம்மகிட்ட எடை குறைச்சலா இருக்கவே இருக்காது. கரெக்டா எடை போட்டுக் காட்டறேன். நீங்களே பார்த்துக்கோங்க.”

“பதினொன்னரை போட்டுக்கோயேன், அஞ்சுமாச பேப்பர் இருக்கு.”

“உங்ககிட்ட பொய் சொல்லலை சாமி. கிலோவுக்கு எனக்கு நாலணா கிடைக்கும். அவ்வளவுதான்…”

“நான் எப்பவும் மெயின் ரோட்டுக் கடையிலதான் போடறது. இந்தத் தடவை போகமுடியாமப் போச்சு.”

“உங்களுக்கு எதுக்குச் சாமி அந்தச் சிரமம்? ஏதோ எங்கிட்ட கொடுத்தீங்கன்னா உங்க பேரைச்சொல்லி பிழைச்சுப்பேன்.”

“சரி இரு பேப்பரை எடுத்திட்டு வரேன்.”

“வேற புத்தகங்கள், காலிப்புட்டி, பால் கவர் இருந்தாலும் கொடுங்க சார் வாங்கிக்கிறேன்.”

“சரியா ஐந்து மாதப் பேப்பர் இருபதுகிலோ இருக்கணும்.”

“அதாவது சார், இந்த இங்க்லீஷ் பேப்பர் இருக்கே அதை எழுவத்திரண்டு தாள்களை எடுத்துத் தராசில் வச்சா, சரியா ஒருகிலோ இருக்கும்…”

“உனக்கு முந்தியே தெரியும் எனக்கு இந்தக் கணக்கு.”

இந்தக் கணக்கு எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவனிடம் எனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டேன்.

“இதை ஞாபகம் வச்சுக்கிட்டீங்கன்னா எவனும் உங்களை ஏமாத்த முடியாது. எடை போட்டுறலாமா சார்?”

“போடு…போடு.”

அவன் முதலில் கோணிப்பையில் இருந்த தராசை வெளியே எடுத்துப் பிரித்து வெறுமனே தொங்கவிட்டுக் காட்டினான். இரு தட்டுக்களும் சமமாய் நின்றன. எடைக்கற்களை ஒவ்வொன்றாகக் காட்டி ஒரு தட்டில் வைத்து, மறு தட்டில் பேப்பர்களை வைத்தான். நான் கவனமாகப் பார்த்து ஒவ்வொரு முறையும் எடையைக் குறித்துக் கொண்டேன். எல்லாப் பேப்பர்களையும் போட்டபின், மொத்த எடைகளையும் கூட்டினேன்.

“சரியா இருபத்தி அஞ்சு கிலோ இருக்குப்பா”

“பதினோரு ரூபா மேனிக்கி மொத்தம் எவ்வளவு சார் ஆகுது?”

கால்குலேட்டரில் கணக்குப் போட்டுப் பார்த்தேன்.

“இருநூற்றி எழுபத்தி அஞ்சு ரூபா ஆகுது… இதான் கணக்கு. நீயும் ஒருவாட்டி பாத்துக்க, சரியா இருக்கான்னு.”

“நீங்க சொன்னா சரியாத்தான் சார் இருக்கும்.”

அவன் சட்டைப் பையிலிருந்து கொத்தாக பணத்தை எடுத்தான். எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள். என்னைவிட நிறைய சம்பாதிப்பான் போல.

பேப்பர்களை கோணிப்பையில் திணித்துவிட்டு, இரண்டாயிரம் ரூபாயை என்னிடம் நீட்டி, “சேஞ்ச் கொடுங்க சார்” என்றான்.

“என்னிடம் சேஞ்ச் கிடையாதுப்பா…”

“அப்படீன்னா எதிர்ல இருக்கிற பலசரக்கு கடைல மாத்தித் தரேன் சார்.”

கோணிப்பையை எடுத்துக்கொண்டு மடமடவென மாடிப்படிகளில் கீழே இறங்கிச்சென்றான்.

நான் பால்கனிக்குச் சென்று எட்டிப் பார்த்தேன்.

கோணிப்பையை சைக்கிளின் பின்புறம் வைத்து நன்கு கட்டினான். பிறகு சைக்கிளை அங்கேயே வைத்துவிட்டு, பலசரக்கு கடைக்குச் சென்றான். சற்றுநேரக் காத்திருத்தலுக்குப் பின், கடைக்காரன் நோட்டுகளை எண்ணி இவனிடம் கொடுப்பதையும் இவன் அவைகளை எண்ணி தன சட்டைப் பையில் வைத்துக்கொண்டதையும் நான் பார்த்தேன்.

அதன்பிறகு மொபைலில் அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

அதற்குள் சரஸ்வதி, “பால்கனி வெய்யில்ல ஏன் நிக்கறீங்க? உங்க பணத்தை எடுத்துகிட்டு அவன் ஓடிட மாட்டான்” என்றாள்.

வெயில் நன்கு அடித்ததால், நானும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தேன்.

பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பேப்பர்காரன் வரவில்லை.

நான் உடனே எழுந்து சென்று பால்கனியில் நின்று பார்த்தால், அவன் கடையில் இல்லை. எதிரே வைத்திருந்த சைக்கிளையும் காணோம்.

ஓ காட்…. எங்கே போனான்? ஐந்துமாத பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு, எனக்குத் தரவேண்டிய பணத்தையும் தராமல் ஓடிவிட்டான் போலும்.

“சரஸ்வதி, நீ என்னமோ அவன் ரொம்ப யோக்கியன் மாதிரி பேசினியே? இப்ப பாரு அவன் மாயமா மறஞ்சிட்டான்.” பால்கனியில் நின்றபடியே கத்தினேன்.

சரஸ்வதி ஓடிவந்தாள். பால்கனியில் நின்றபடியே தலையைக் குனிந்து எட்டி எட்டிப் பார்த்தாள்.

“என்ன பார்வை வேண்டிகிடக்கு? அவனையும் காணோம், அவன் சைக்கிளையும் காணோம்…. போலீஸ்ல போய் கம்ளேய்ன்ட் பண்ணலாம்னா அவன் பேரும் தெரியாது, அவன் மொபைல் நம்பரும் கிடையாது. இந்த யழவுக்குத்தான் நான் தெருவில் போகிறவனிடம் எந்த டீலிங்கும் வச்சுக்கிறது கிடையாது.” கோபத்தில் இரைந்தேன்.

அவள் முகம் சுருங்கியது. அழ ஆரம்பித்துவிட்டாள்.

அந்த சனி, ஞாயிறு எங்களுக்கு மெளனமாக கழிந்தது. நாங்கள் பேசிக் கொள்ளவில்ல்லை.

அதன்பிறகு. “சரி, சரி நடந்தது நடந்துபோச்சு அத மறந்துட்டு நாம எப்பவும்போல சந்தோஷமா இருக்கலாம்…” என்றேன்.

நாட்கள் நகர்ந்தன…

அன்று ஞாயிற்றுக்கிழமை….

காலை பதினோரு மணிக்கு யாரோ காலிங்பெல் அடிக்க, நான் போய்க் கதவைத் திறந்தேன்.

வெளியே எவனோ ஒருவன் மொட்டைத் தலையுடன் நின்றிருந்தான். அவனை எனக்கு யாருன்னே தெரியாது.

நான் கதவை கவனமுடன் ஒருக்களித்து வைத்தபடி “யாரு நீங்க என்ன வேணும்?” என்று அதட்டினேன்.

வந்தவன், “சார் என்னைத் தெரியலையா நான்தான் சார் இரண்டு வாரம் முன்னாடி, உங்ககிட்ட பேப்பர் வாங்கினவன்….”

உற்றுப் பார்த்தேன்…. ஆமாம் அவனேதான். மொட்டையடித்து, மீசை தாடியெல்லாம் மழித்து இருப்பதால் அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை.

“ஏம்பா, எங்களை ஏமாத்தறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்திச்சு? தரவேண்டிய பணத்தைத் தராம அன்னிக்கி ஓடிட்டயே?”

“சார்…. அப்படியெல்லாம் பேசாதீங்க சார். அன்னிக்கி எனக்கு கடைக்காரரு சில்லறை கொடுத்தாரு. அத வாங்கியவுடன், எனக்கு தர்மபுரிலர்ந்து என்னோட அண்ணன் போன் பண்ணாரு. வயசான என்னோட அம்மா ரோடு க்ராஸ் பண்ணும்போது ஒரு கார் மோதிருச்சு. அம்மா ஸ்பாட்ல செத்துட்டாங்க சார். எனக்கு ஏற்பட்ட பதட்டத்துடல நான் உடனே சைக்கிளை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயி என் பொண்டாட்டி பிள்ளைங்கள தர்மபுரிக்கு கூட்டிகிட்டு ஓடினேன் சார். என்ன மன்னிச்சுடுங்க சார்…. நான் பண்ணது தப்புத்தான். மூணு மாடி ஏறி உங்க பணத்தை செட்டில் பண்ற எண்ணம் அந்தநேர பதட்டத்துல எனக்கு தோணலை சார்…”

குரல் உடைந்து கண்கள் கலங்கியது. .

நான் கதவை அகலத் திறந்து அவனை உள்ளே வரச்சொல்லி அமரச் செய்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *