தந்தை சொல் மிக்க…

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 8,389 
 

“கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து. இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்டக பண்ணவனை விட்டுக் கொடுப்பானா?’ தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சொல்லப் பட்ட பையன் விபூதி இட்டுக் கொண்டு உத்தரத்து ஒட்டடையை வெறித்துக் கொண்டிருந்தான் சரவணன் அப்பாவைப் பார்த்தான். கேட்காதவர் போல அவர் கவனமாக இவன் பார்வையைத் தவிர்த்தார்.

சரவணன், சட்டைப் பையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான் “சரவணன், நீங்கள் விரும்பிய பி.எஸ்.சி. கணிதம் சேர ஆறாம் தேதிக்குள்…’ நான் விரும்பிய – உண்மைதான். அப்பா விரும்பவில்லையே. சரவணன் பெஞ்சில் இருந்து எழுந்தான்.

“எங்கேடா போறே?’

“சும்மா அந்த நோட்டீஸ் போர்ட் வரைக்கும் பாய் பார்த்துட்டு வர்றேன்.’

“கூப்டுட்டாங்கன்னா?’

“செல் வெச்சிருக்கேனில்ல? கூப்பிடுங்க. ரொம்ப தூரமெல்லாம் போயிட மாட்டேன்.’

பிரின்ஸிபால் அறையைத் தாண்டும்போது காலிங் பெல் அலறியது. வந்ததில் இருந்து மூன்று முறை அலறி இருக்கிறது. க்யூ அசைவேனா என்கிறது. அவசரமாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க் கொண்டிருந்த காக்கிச் சட்டைப் பையன்கள் விரோதமாகப் பார்த்தார்கள்.

அறிவிப்புப் பலகையில் சரம்சரமாக டாட் மாட்ரிக்ஸ் பிரிண்ட் அவுட் நீண்டது. ஏதேதோ பேர்கள், எண்கள். இந்த லிஸ்டுகளை இனிமேல் துரத்தவேண்டும். இந்தச் சரத்தில் எந்தப் பக்கத்தில் சரவணன் என்று அச்சடித்திருக்கறதோ அதுதான் வருங்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது. ஓரத்தில் ஒரு காகிதம் “அரியர்ஸ் உள்ளவர்கள் கிரிக்கெட் ப்ராக்டிஸுக்கு கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.’

வாசலில் இருந்து ரொம்ப தூரத்தில் பஸ் ஸ்டாப் தெரிந்தது. பிட்சுக்கும் அவுட்ஃபீல்டுக்கும் வித்தியாசம் தெரியாத களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அரியர்ஸ் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

இங்கேதான் என் அடுத்த நான்கு வருஷம் கரையப்போகிறதா? ப்ளேஸ்மெண்ட் 80 சதவிகிதம் என்கிறார்கள். நான்கு வருஷத்துக்குப் பின் வேலை. சம்பளம். எட்டாம் கிளாஸில் இருந்து ஒலிக்க ஆரம்பித்த காலை 4 மணி அலாரம் ஓய்வே இல்லாமல் ஒலிக்கப் போகிறது. சமுதாயப் பல் சக்கரங்களில் நானும் ஒரு கண்ணி. ஆனால் என்ன, பற் சக்கத்தில் ஒன்று உடைந்தாலும் வேலை செய்யாது. இங்கே ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்றும் தெரியவே தெரியாது. வேலை கிடைக்கக்கூடிய காலேஜ் என்று அப்பா தேடிப்பிடித்தது இதைத்தான்.

“ஹாய்’ சத்தம் கேட்டுத் திரும்பினான். க்யூவில் இருந்த விபூதிப்பையன். “எவ்வளவுநேரம் தான் சும்மா உட்கார்ந்துகிட்டே இருக்கறது? அதான் உலாத்தலாம்னு.’

கையைக் குலுக்கினான். “நான் கணேஷ். எம்.ஏ.வி.ஸ்கூல். நீங்க?’

“சரவணன், க்வீன்ஸ் சைதாப்பேட்டை.’ அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்று சரவணனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஏமாற்றாமல் கேட்டான் கணேஷ்.

“உங்க கட் ஆஃப் என்ன?’

“185 எஞ்சினியரிங். 178 மெடிக்கல். உங்களுது?’

கேட்காவிட்டாலும் சொல்வான்.

“186 எஞ்சினியரிங்…’ சரவணனைவிட ஒரு மார்க் அதிகம் என்பதால் அனிச்சையாகவே அவன் குரலில் பெருமை ஏறி விட்டிருந்தது. 200ல் ஆரம்பித்து 186க்குள் 45 காலேஜ் ரேங்குகள் கழிந்துவிடுகின்றன. இது சரியான பரவல்தானா? சரவணனின் கணித மூளை நார்மல் டிஸ்டிரிப்யூஷன் கர்வ் லேம்ப்டா என்றெல்லாம் ஓடியது.

“கெமிஸ்ட்ரிலே 200 எதிர்பார்த்தேன். ரொம்ப குறைஞ்சு போச்சு. ரீவால்யூவேஷன் கேட்டாலும் யூஸ் இல்லைன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க…’ அவன் அப்பாவும் இதையே தான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“இங்கே மெரிட் கண்டுக்கவே மாட்டாங்களா?’

“இவங்களுக்கு எக்ஸாம் மார்க் பத்திக் கவலை இல்லை. நிறைய டீம்டு யூனிவர்சிட்டிலே எல்லாம் தனியா என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைக்கறாங்க. இவங்க அப்படிக்கூட வைக்கிறதில்லை. காசு மட்டும்தான்.’

“கவர்மெண்டு காலேஜே தேவலாம்…’

“தேவலாம்தான்.’

சரவணன் அப்பா இருந்த பெஞ்சைப் பார்த்தான். ஒரு சீட்கூட முன்னேறவில்லை.

“கேண்டீன் போலாமா கணேஷ்?’

டீ குடித்துக்கொண்டே கேட்டான். “இந்த காலேஜ்லே வந்தா ஹாஸ்டல்லதான் இருக்கணுமா?’

“அவசியம் இல்லை. ஆனா நான் ஹாஸ்டல்லதான் இருப்பேன். நாமக்கல்ல ஹாஸ்டல்ல தங்கித்தான் படிச்சேன். தொடர்ந்து சூப்பர்விஷன் நடந்துகிட்டே இருக்கும் அங்கே. அப்பதான் செல்ஃப் கண்ட்ரோல் வரும்.’

சரவணனுக்கு சிரிப்பு வந்தது. செல்ஃப் கன்ட்ரோலால் என்னைவிட ஒரு மார்க் அதிகம் எடுத்திருக்கிறான்.

“ஒரு வருஷம் லேட்டா பொறந்து இருக்கலாம். ஐ.ஐ.டி.க்கும் ஏ.ஐ.ஈ.ஈ.ஈ.க்கும் ஒரே என்ட்ரன்ஸாம் அடுத்த வருஷத்துல இருந்து.’

“அதனால என்ன? சீட்டையும் சேர்த்துப் பிரிச்சுப் போடுவாங்க. அவ்வளவு தானே?’

“அது மட்டுமில்லை. +2 மார்க்கையும் அதுக்கு எடுத்துப்பாங்களாமே!’

நாமக்கல்லுக்கும் ஐ.ஐ.டி. போக ஒரே வாய்ப்பு. சரவணன் வாய்வரை வந்த வார்த்தைகளைத் தவிர்த்தான்.

“எனக்கு அப்படியாச்சும் இங்கே படிக்கணுமான்னு இருக்கு கணேஷ். நான் பி.எஸ்சி மேத்ஸ் எடுக்கலாம்னு சொன்னேன். அப்பாதான் இங்கே கூட்டிக்கிட்டு வந்தார்.’

கணேஷ் பார்த்த பார்வையிலேயே புரிந்துவிட்டது. ஒருவேளை காலேஜில் சேர்ந்தாலும் இவர்கள் நண்பர்களாகப் போவதில்லை. கணேஷ் முகத்தில் பிறந்த உடனே ஒட்டிவிட்டிருந்த “நான் எஞ்சினியர்’ தெரிந்தது.

“பி.எஸ்சி, எம்எஸ்சி, பி.எட்… எப்பதான் வாழ்க்கையிலே செட்டில் ஆகறது?’ கணேஷ் புண்பட்டவனாகக் கேட்டான்.

“செட்டில் ஆகறது என்றால் என்ன?’ என்று கேட்க இருந்த சரவணனை செல் அடித்துக் காப்பாற்றியது.

“வந்துடறேன்ப்பா.’

அப்பா பரபரப்பாக ஃபைலை இன்னொருமுறை புரட்டிக் கொண்டிருந்தார். “டி.சி.க்கு ரெண்டு காபி இல்லையா? ஒண்அதானே இருக்கு?’

ப்யூன் வந்து “நீங்க உள்ளே போகலாம் சார்.’

பிரின்ஸிபால் அறைக்குள் சீட்டில் அமர்ந்திருந்த ஆசாமியைப் பார்த்தால் பிரின்ஸிபால் போல் தெரியவில்லை. அம்மைத் தழும்பிட்ட முகத்தில் அரிவாள் மீசை. கிடைமட்டமாக முழுநெற்றியையும் ஆக்கிரமித்த குங்குமத் தீற்றல். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, அரசியல்வாதி.

“என்னய்யா? 10 கொண்டு வந்திருக்கியா?’ ரம்பிக்கும்போதே ஏகவசனத்தில் ஆரம்பிக்கிறாரே. உட்காரக்கூடச் சொல்லவில்லை. அப்பாவும் உட்கார்வதில் ஆர்வம் காட்டவில்லை. அப்பா மீதி எல்லா இடத்திலும் டெரர். ஆனால் பள்ளிக்குப் போகும்போது பம்மிவிடுவதைப் பார்த்திருக்கிறான். இப்போது கல்லூரியிலும் அதே பம்மல் தொடர்கிறது.

“சார்… யெஸ்டர்டே த பர்சன் ஆன் த டோர் டோல்ட் ஒன்லி செவன் சார்…’ அப்பா ஏன் ஆங்கிலத்தில் பேசவேண்டும்?

“என்னாது ஏழா? உன் பையன் வாங்கின மார்க்குக்கு ஏழுக்கெல்லாம் சீட் கொடுத்தா நல்ல மார்க் வாங்கினவனுக்கு ஃப்ரீயாவா கொடுக்க முடியும்?’

185 நல்ல மார்க் இல்லையா? சரவணனுக்கு கோபம் ஏறியது. அவமானப் பட்டாவது சீட் வாங்கவேண்டுமா? ஆனால் அப்பாவிடம் இதையெல்லாம் பேச முடியாது. “உனக்கு முதல்லே இருந்தே பிடிக்கலை… அதான் காரணம் தேடறே’ போன் அடிக்க வெள்ளை சட்டையை எடுத்தார்.

“ம்….ம்… சரி..’ என்று எதிர்முனைக் கரகரப்பைக் கேட்டுக் கொண்டிருந்தவர் முகத்தில் கோபம் ஏறுவது தெரிந்தது.

“அப்பாகிட்ட கொடு போனை.’

“சொல்லுப்பா… இப்ப என்ன பண்ணுது?’

“அதெல்லாம் சொல்லாதே… இந்தக் காலத்துல எழுவத்தஞ்செல்லாம் ஒரு வயசா?’

“அதை இப்ப முடிவு பண்ண முடியாது. நான் வந்து பேசறேன்.’

“டாக்டர் வருவார். அவர் என்ன சொல்றாரோ அதைச் செய். எல்லாம் சரியா போயிடும். அந்த நர்ஸுகிட்ட கொடு போனை.

“என்னம்மா வேலை பார்க்கறீங்க? பெரியவர்கிட்ட போனை தராதீங்கன்னு எத்தனை முறை சொல்றது?’

போனை வைத்தவர் கோபம் அடங்காமல் “எட்டாயிரம் ரூவா கொடுக்கறேன் இவளுகளுக்கு. சாக்கு சொல்றாளுங்க.’

அப்பாவைப் பார்த்தார். “உன்கிட்ட என்னய்யா சொல்லிக்கிட்டிருந்தேன்? பத்துன்னா உள்ளே வா. இல்லாட்டி கிளம்பு.’

“இல்லை சார்… பணங்காசு உள்ள குடும்பம் இல்லை சார் நாங்க…’ அப்பா எப்போது தமிழுக்கு மாறினார்?

“சரி உனக்காக ஒன்பதரைலே முடிச்சுரலாம். கொண்டு வந்துருக்கியா?’

“இல்லை சார். ஏழுன்னுதான் சொன்னாங்க. அதைத்தான் கொண்டு வந்திருக்கேன்.’

“அப்ப நாளைக்கு வா… உன் பேரை எழுதிக்கச் சொல்லு அந்த க்ளார்க்கை…’ க்ளார்க்கே உள்ளே நுழைந்தான். “யோவ். இந்தாள்கிட்ட பேரை எழுதி வாங்கிக்க… ஒன்பதரை போட்டுக்க…’

ரெஜிஸ்டரெல்லாம் எதுவும் இல்லை. 40 பக்க நோட்டு. பின்னே… இதற்கெல்லாம் ரெக்கார்டா வைத்துக் கொள்ள முடியும்? அப்பா அழுத்தம் திருத்தமாக எழுத ஆரம்பித்தார்.

“நாம நினைச்சதைவிட ரெண்டரை அதிகமாச்சேப்பா.’

“ஆமாம். ஆனா பிரச்னை இல்லை. எஃப்டி ப்ரீக்ளோஸ் பண்ணணும். அம்மாகிட்ட நகை இருக்கு.’

“இருந்தாலும்’

“அதெயெல்லாம் மறுபடி ஆரம்பிக்காதே சரவணா… எல்லாம் பேசி முடிச்சாச்சு. மை டெசிஷன் இஸ் ஃபைனல்.’

அப்போது இரண்டு பேர் வேகமாக ஏறத்தாழ அப்பாவை இடித்துக் கொண்டு பிரின்ஸிபால் ரூமுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வெள்ளைவேட்டியின் குரல் கேட்டது. “யோவ் யாருய்யா இவங்களை உள்ளே விட்டது?’

அப்பாவின் மிடில் க்ளாஸ் உள்ளுணர்வு வரப்போகும் சண்டையைக் கண்டுபிடித்து விட்டிருக்க வேண்டும். “கிளம்பு போலாம்…’

வாசலில் இன்னும் இரண்டு பேர் நிற்க, வெளியிலும் போக முடியாமல் அடைபட்டார்கள்.

கரஸ்பாண்டெண்ட் கத்தினார். “என்னய்யா வேணும் உங்களுக்கு? செக்யூரிட்டி…’ கத்தினார். க்ளார்க் குறிப்புணர்ந்து செக்யூரிட்டிக்கு போன் செய்தான்.

“பெரியவரு போன் பண்ணாரு.. எங்களுக்கு சேர வேண்டியது சேர்ந்தா நான் ஏன்யா இங்க வரப்போறேன்’ உள்ளே நுழைந்த ஆளாக இருக்க வேண்டும்.

“உங்களுக்கு சேர வேண்டியது என்னய்யா? நீயா சேர்த்தே சொத்து… ரோட்லே போறவனுக்கு எல்லாம் அள்ளித் தர இங்க கொட்டியா வெச்சிருக்கு? மூடிகிட்டு போ.’

“ரோட்ல போறவனா நானு? உன் மாமன்… உன் அக்காவுக்கு புருசன்.’

“பாசத்தை பத்தி என்கிட்டே பேசாதே… எவ்வளவு கொடுத்திருப்பேன் உனக்கு?’

“பெரியவரு சொல்லிட்டாராமே உன்னை எழுதித்தரச்சொல்லி….’

“ஆமாம்… பெரிய பெரியவரு… அந்தாளு என்னைப் பெத்தாரு. வளர்த்தாரு எல்லாம் சரிதான். அதுக்காக அந்தாள் பேச்சையே கேட்டுக்கிட்டிருந்தா நான் உருப்பட்டிருப்பேனா? ரயில்வே டிக்கட் கிழிக்கற உத்தியோகத்துக்குப் போன்னு சொன்னாரு – கேட்டேனா? இதைச் செய் அதைச் செய்யுன்னு ஆயிரம் கட்டளை… ஒரு மண்ணும் தெரியாட்டியும் நான் அப்பன்…. நான் சொல்றது சரின்னு பேச்சு. இப்ப நான் கஷ்டப்பட்டு சேத்த சொத்துக்கு ரோட்ல போறவனுக்கு பங்கு கொடுன்னா கேக்கணுமா?’

செக்யூரிட்டிகள் நாøந்துபேர் வர வந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெள்ளைவேட்டியின் குரல் போனில் சத்தமாக ஒலித்தது.

“அப்பாகிட்ட கொடு.’

“என்னதான் நினைச்சுகிட்டிருக்கீங்க? உங்களைப் பத்திரமா வெச்சுக்க வேண்டியது என் கடமை. உங்களுக்கு என்ன ஆசையோ அதைச் செய்யத்தான் ஆளு தேளு எல்லாம் போட்டிருக்கேன். ஆனா உங்க பேச்சையே கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா?’

“கடைசியா சொல்றேன்… பாசம் வேற… முடிவெடுக்கறது வேற… ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காதீங்க… இன்னொரு முறை அவங்களுக்கு போன் செய்யாதீங்க! இங்க வந்து மானத்தை வாங்கறாங்க.’

செக்யூரிட்டி எல்லாம் போனபிறகுதான் அப்பாவுக்கு வெளியே வர தைரியம் வந்தது. கணேஷ் எதிர்ப்பட்டான். “எட்டுக்கு முடிச்சிட்டோம்… புக்ஸ் மெடீரியல் எல்லாம் இன்னிக்கே வாங்கிடச் சொல்லிட்டாங்க!’ பெருமிதம் தெரிந்தது அவன் குரலில்.

ஆட்டோக்கு வரும்வரை அப்பா பேசவில்லை. ஆட்டோக்காரன் “எங்கே போகணும்?’

“சரவணா… அந்த காலேஜ் அட்ரஸ் சொல்லுடா… பி.எஸ்சி கார்டு வந்து இருந்துதே…’

– ராம் சுரேஷ் (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *