கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 5,390 
 

துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இன்பராஜ், வசந்தாவை இனிதே வரவேற்றது. பெயர் பலகையைப் பார்த்ததும் இருவருக்கும் மனது கனமானது போலிருந்தது.

காவலாளி கதவைத் திறந்ததும் இன்பராஜ் காரை உள்ளே செலுத்தினான். காரிலிருந்து இறங்கி இருவரும் குழந்தைகள் காப்பகத்தின் அலுவலகத்திற்குச் சென்றனர். காப்பக பொறுப்பாளர் கதிரரசன் அவர்களை வரவேற்று அமரச் சொன்னார்.

தொலைபேசியில் ஏற்கனவே எல்லா விபரங்களையும் பேசியிருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் பணிப்பெண்ணை அழைத்து, “வன்யாவை கூட்டிட்டு வா” என்றார் கதிரரசன்.

வன்யா என்ற பெயரைக் கேட்டதும் இன்பராஜ் முகம் மாறியது. சிறிது நேரத்தில் பணிப்பெண்ணும் வன்யாவை அழைத்துக் கொண்டு வந்தாள். அவளைக் கண்டதும் இன்பராஜால் அமைதியான மனநிலையில் அங்கு உட்கார முடியவில்லை.

“வன்யா, இவர் இன்பராஜ் அவர் மனைவி வசந்தா நம்முடைய காப்பகத்திலிருந்து சட்டப்படிக் குழந்தையைத் தத்தெடுக்க வந்திருக்காங்க. குழந்தைகள் இருக்குமிடத்துக்குக் கூட்டிட்டுப் போ.” என்றார் கதிரரசன்.

வன்யாவும் அவர்கள் பக்கம் திரும்பி, “வணக்கம்!” என்றவள் இன்பராஜை பார்த்ததும் அதிர்ச்சியில் நின்றாள். “வணக்கம்!” என்றதும் தன் சுயநினைவிலிருந்து மீண்டவள் “வாங்க…” என்று அழைத்துச் சென்றாள்.

குழந்தைகள் அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். “உங்களுக்குப் பிடிச்ச குழந்தையை நீங்களே பாருங்கள்.” என்றாள் வன்யா.

“வாங்க பார்க்கலாம்.” என்று இன்பராஜை அழைக்க, “முழு நேரமும் குழந்தை உன் கூடதான் இருக்கப் போகுது. அதனால், நீயே பாரும்மா.” என்றான் இன்பராஜ்.

வசந்தா குழந்தைகளைப் பார்க்கத் தொடங்கினாள். பணிப்பெண்ணிடம் அவர்களைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அலுலவக அறைக்கு வந்து கதிரரசனிடம், “ஐயா, அவங்க ஏன் குழந்தையைத் தத்தெடுக்க வந்திருக்காங்க?” என்றாள் வன்யா.

கதிரரசன் அவளை வியப்பாகப் பார்த்தார். ஏனெனில், இதுவரை எத்தனையோ பேர் வந்திருக்காங்க. ஆனால், அவர்கள் யாரைப் பற்றியும் கேட்டதில்லை. உடனே அவள் கேட்டதற்குப் பதில் சொன்னார்.

“இன்பராஜ் காரில் போறப்ப ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்கு கீழே பலத்த அடிப்பட்டு அவரால் தாம்பத்ய உறவு வச்சிக்க முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. இந்த விபத்து அங்க திருமணம் முடிஞ்சு தேன்நிலவுக்குப் போன ரெண்டாவது நாளே நடந்ததால் அவங்களுக்குக் குழந்தை வாய்ப்பில்லாமப் போச்சு.” என்றார் கதிரரசன்.

வன்யா பதில் எதுவும் சொல்லாமல் சிந்தித்துக் கொண்டே சென்றாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கதிரரசன் அவள் பின்னாடியே சென்றார். அங்கு இன்பராஜும், வசந்தாவும் மூன்று வயது குழந்தை அஞ்சுவிடம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வன்யா அதைக் கண்டதும் திகைத்து நின்றவள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து, “எங்களுக்கு இந்தக் குழந்தையை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்…” என்று சொல்லவும் கதிரரசன், “அஞ்சுவை கொடுக்க முடியாது. நீங்க வேற குழந்தையைப் பாருங்க.” என்றார்.

இருவரும் புரியாமல் ஏன்? என்று அவரைப் பார்த்தனர். கதிரரசன் என்னவென்று சொல்வதற்கு முன் வன்யா அவர்களிடம், “உங்களுக்கு அஞ்சுவைப் பிடிச்சிருந்தா கூட்டிட்டுப் போங்க.” என்றாள்.

கதிரரசனும் பணிப்பெண்ணும் வன்யாவை ஒன்றும் புரியாமல் வியப்பில் பார்த்தனர்! இதுவரை எத்தனை பேர் அஞ்சுவை கேட்டார்கள். இவளை என் குழந்தையாக நான் வளர்க்கிறேன். அதனால், தயவு செய்து இவளை யாருக்கும் கொடுக்க வேண்டாமென்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அஞ்சுவின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லியும் யார் கேட்ட போதும் கொடுக்க மறுத்தாள். இப்போது இவர்களுக்குக் கொடுக்கச் சம்மதித்தது ஏன்? என்று புரியாமல் முழித்தனர்.

இன்பராஜும் வசந்தாவும் மகிழ்ச்சியில் முறைப்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முடித்துவிட்டு அஞ்சுவை அவர்களுடன் அழைத்துச் சென்றனர். கதிரரசனும் பணிப்பெண்ணும் வன்யாவை கேள்வியாகப் பார்க்க அவள் குழந்தை அஞ்சு செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேற்கொண்டு நின்றால் தன் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தத் தொடங்கிவிடுமென்று வேகமாக அங்கிருந்து தன் அறைக்குச் சென்று அழத் தொடங்கினாள்.

அவள் பின்னாடியே வந்த இருவரும் அவள் அழுவதைப் பார்த்துவிட்டு, “நீதான அஞ்சுவை கொடுக்க முடிவெடுத்த இப்ப ஏன் அழற? யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு சொன்ன. இவங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கச் சம்மதிச்ச?” என்று கதிரரசன் கேட்டார்.

“அஞ்சு போக வேண்டிய இடத்துக்குதான் போயிருக்கா.” என்றாள் வன்யா.

“என்ன சொல்ற? புரியும்படி சொல்.” என்றார் கதிரரசன் அதட்டலாக.

“நான் பிறந்த ரெண்டு வருஷத்தில் நெஞ்சுவலி வந்து என் அப்பா இறந்துட்டார். அம்மா தையல் தொழிலில் சம்பாதிச்சு என்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வச்சு வளர்த்தாங்க. ஒரு ஆண் துணை இல்லைன்னா பெண்கள் சமூகத்தில் வாழ்றது எவ்வளவு கஷ்டம்ன்னு அம்மாவை பார்த்துத் தெரிஞ்சிகிட்டேன். அதே போல் அப்பா இல்லைன்னும் பிள்ளைகள் வளர்வதும் எவ்வளவு கஷ்டம்னு நல்லாவே புரிஞ்சிகிட்டேன்.

எனக்கு எல்லாக் கஷ்டமும் தெரிஞ்சிருந்தாலும் பருவ வயசில் எல்லோரும் அனுபவிக்க நினைக்கின்ற அந்தக் காதல் எனக்கும் வந்துச்சு. காதல் இன்பத்தை எனக்குள் உருவாக்கியது என் கூடக் கல்லூரியில் படித்த ராஜ்தான். கல்லூரியில் படிப்பு முடிச்சிட்டு வேலையைத் தேடிக்கிட்டேன். அதே கல்லூரியில் அவன் மேற்கொண்டு படித்தான்.”

“நான் வேலை செஞ்சிகிட்டே படிச்சேன். ரெண்டு பேருக்கும் படிப்பும் முடிஞ்சதும் “எனக்கு வேலை ஊட்டி எஸ்டேட்டில் கிடைச்சிருக்கு. நான் அங்க போனதும் வேலையில் சேர்ந்துட்டு உனக்கும் அங்க வேலைக்கு ஏற்பாடு செய்றேன். அதுக்குப் பிறகு நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கலாம். உன் அம்மாவையும் நம்ம கூடக் கூட்டிட்டு போயிடலாம்.” என்று ராஜ் சொன்னான்.

ராஜ் சொன்ன மாதிரி ஆறு மாதம் கழித்து வந்தான். “அங்க எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன். உனக்குப் பிடிச்சிருக்கான்னு வந்து பார்த்துட்டா மற்ற ஏற்பாடுகளையும செய்துடலாம்.” ராஜ் சொல்ல.

“நீ பார்த்ததே போதும். எனக்குப் பிடிச்சிருக்க வேண்டிய அவசியமில்லை.” என்று வன்யாவும் அவள் அம்மாவும் சொன்னார்கள்.

வன்யாவை வந்தே தீர வேண்டுமென்று அழைத்துச் சென்றான். அவன் வேலை பார்க்க போகும் நிறுவனத்தைக் காண்பித்தான். வீடு அவன் வேலை பார்க்கும் எஸ்டேட்டிலே கொடுத்திருக்கிறார்கள். அங்கயே நாம் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“பத்து நாட்கள் அங்க அவன் கூட இருந்தேன். அவனை முழுசும் நம்பியதால் அவனோட ஆசைக்கும் இணங்கினேன். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது அவன் சுயரூபம். இங்கு வந்து பல வசதிகளைக் கண்டதும் அவன் மனசு மாறிட்டு.” வன்யாவுக்கு மனதின் வலி கண்களில் நீராக வடிந்தது.

“கையில் நிறையச் சம்பளம். என்னைத் தேடி வசதியான அழகான பொண்ணுங்க நிறையப் பேர் வருவாங்க. அதே போல வந்துட்டா. அவளுக்கும் எனக்கும் இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம்.” என்று ராஜ் வன்யாவின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டான்.

“உன்னைவிட எனக்கு மனசு வரலை. எப்படியாவது உன்னை அடையனும்னு நினைச்சேன். நான் விரித்த வலையில் நீயும் மாட்டிகிட்ட.” ராஜ் தெனாவாட்டாகச் சொல்ல.

“என்னுடைய உண்மையான காதலை நீ அசிங்கப்படுத்திட்ட. கேவளம் சுகத்துக்காக என்னையும் ஏமாற்றிட்ட இதுக்குத் தண்டனையைக் கடவுள் உனக்குக் கொடுத்தே தீருவார்னு வந்துட்டேன்.” என்று வன்யா பழைய கதையைச் சொல்லி முடித்தாள்.

“நாங்க செஞ்ச தப்பால் அஞ்சு என் வயிற்றில் வளரத் தொடங்கிட்டா. அம்மா வேண்டாம்ன்னு சொன்னாங்க. அப்பா இல்லாம நான் உன்னை வளர்க்க பட்ட கஷ்டம் தெரியும். ஆனால், இது அப்பா பேரே தெரியாம வளர்வது அந்தக் குழந்தையை நாம உயிரோடு கொல்றதுக்குச் சமம். அதனால், வேண்டாம்னு சொன்னாங்க. நான் பிடிவாதமா முடியாதுன்னு அஞ்சு பிறந்ததும் என்ன செய்யனு யோசிச்சப்ப உங்க காப்பகத்துக்கு உதவியாளரா ஆள் தேவைன்னு விளம்பரத்தை தினசரி நாளிதழில் பார்த்தேன் விண்ணப்பித்தேன்.” கதிரரசன் அவளை விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அஞ்சு பிறந்த ஒரு வாரத்தில் அம்மாவும் கண்ணை மூடிட்டாங்க. என் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீங்க வரச் சொன்னீங்க. நான் இங்க வரதுக்கு முந்தின நாள் வந்து அஞ்சுவை இங்குள்ள தொட்டிலில் போட்டுட்டு மறுநாளே வந்து வேலையிலும் சேர்ந்துகிட்டேன்.” என்றாள் வன்யா.

“உன் குழந்தையாவே நீ கொண்டு வந்திருக்கலாமே. தொட்டிலில் ஏன் போட்டாய்?” என்றார் கதிரரசன்.

“அப்பா இல்லாம வளர்ந்தா எப்படியிருக்கும்னு கஷ்டத்தை அனுபவிச்சவ அப்பா பெயர் தெரியாம வளர்ந்தா என் அம்மா சொன்ன மாதிரி உயிரோடு கொல்றதுக்குச் சமம். அதுக்கு யாருமில்லாத அனாதையா வளர்வதே மேல்னு தொட்டிலில் போட்டேன்.” என்றாள் வன்யா.

“அப்போ நீ ராஜ்னு சொல்றது இப்ப வந்த இன்பராஜா? அவன் தப்பு செஞ்சவனு தெரிஞ்சும் அவன்கிட்டக் குழந்தையைக் கொடுத்திருக்க ஏன்?” என்றார் கதிரரசன்.

“நான் அவன் மேல வச்சிருந்த உண்மையான காதலை ஏமாற்றியதுக்கு நான் பேசின வார்த்தைகளைக் கடவுள் கேட்டுவிட்டார் போலிருக்கு. அதான், அவனுக்குத் தக்க நேரத்தில் தண்டனையைக் கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன். இவன் செஞ்ச தப்புக்கு வசந்தா ஏன் தண்டனை அனுபவிக்கனும். அதான், அஞ்சுவை கொடுக்கச் சம்மதித்தேன். அஞ்சு இனிமேல் அனாதை இல்லை. அவனைப் பெற்றவனோடு சேர்ந்துட்டா பெற்றவளா வசந்தா இருப்பா.” என்றாள் வன்யா நம்பிக்கையோடு.

குழந்தையின் உணவு முறைகள் பற்றிக் கேட்க மறந்து சென்றதால் திரும்பி வந்த இன்பராஜும் வசந்தாவும் வன்யா பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றனர்.

இன்பராஜ் வசந்தாவின் முகத்தைப் பார்க்கத் துணிவின்றிப் பார்க்கவுமில்லை. பேசவுமில்லை அமைதியாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். வசந்தா காரை நிறுத்த சொன்னாள்.

“நான் செஞ்ச தவறுக்கும் சேர்த்துதான் கடவுள் தண்டனை கொடுத்திருக்கிறார். என்னையும் ஒருவன் காதலிச்சான் நீ எப்படி வன்யாவை விட அழகு வசதின்னு என்ன பார்த்தீயோ அதே போல் அவனைவிட வசதியானவன் நீங்கன்னு சொத்து சுகத்துக்காக உங்களைக் கல்யாணம் செஞ்சேன்.

அவன் என்கிட்ட என் உண்மையான காதலை நீ புரிஞ்சிக்கலை. பணம்தான் முக்கியம்னு போற என்னை ஏமாற்றியதுக்கு நீ சரியான தண்டனை அனுபவிப்பாய். பொய்யான உன் காதலால் நான் ஏமாந்துட்டேன். அதனால், என் உயிரை நானே மாய்ச்சிக்கிறேன்னு தற்கொலைப் பண்ணிகிட்டான். அன்னைக்கு அவன் இறந்தது எனக்குப் பெரிசா தெரியலை. வாழத் தெரியாதவன்னு நினைச்சேன். இது எனக்கும் சேர்த்து கிடைச்ச தண்டனைதான். இதுக்குப் பிராயசித்தம் உங்க இல்லை நம்ம குழந்தையை வளர்க்கிறதுதான்.” என்றாள் வசந்தா.

ஒருவரை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை கிடைத்தே தீரும் என்பதை இருவரும் உணர்ந்தனர். குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *