தங்கமாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 5,399 
 

அவர் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தங்கமாமா என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரியும். வயசு சுமார் 65 இருக்கும். மத்ய ஸர்காரில் பெரிய உத்யோகத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்.

அவர் எனக்கு என்ன உறவென்று தெரியாது. Infact உறவா என்றே தெரியாது. ஆனால் எங்கள் குடும்பம் உறவினர் குடும்பம் என்று யார் வீட்டில் என்ன விசேஷமானாலும் தங்கமாமா ஆஜராகி விடுவார். ஹோமம் நடந்து கொண்டிருந்தால் இவரும் வாத்தியாருடன் மந்திரத்தில் சேர்ந்து கொள்வார். அரசியல் விவாதமென்றால் இவரது எக்ஸ்பர்ட் கமெண்ட்ஸ் இல்லாமால் இருக்காது. சீட்டு விளையாட்டிலும் கில்லாடி. இவ்வளவு ஏன், யாராவது ஹாஸ்பிட்டலில் அட்மிட் என்றால் அவர் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் கூட இவர் எடுத்துப் படிப்பார். சுருக்கமாகச் சொன்னால் Somerset Maugham கதையில் வரும் Mr. Know All இவர்தான்!

இவர் தன் இஷ்டத்துக்கு எவர் விஷயத்திலும் மூக்கை நுழைத்தாலும் எல்லாருக்கும் இவரைப் பிடிக்கும். நான் பார்த்து எவரும் இவரைக் கண்டித்ததில்லை. என் மனைவிக்குக் கூட இவர் மீது மிக்க மரியாதை. “மாமா” என்றுதான் கூப்பிடுவாள். ஆனால் எனக்கு இவரைப் பிடிக்காது. அதென்ன இப்படி ஒரு வம்பு மனுஷனுக்கு? எல்லாத்துக்கும் ஒரு வரம்பு இல்லையா? இப்படித்தான் போன வாரம் போயிருந்த ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்தில், இவரும் வந்திருந்தார். அங்கு வந்திருந்த வேறு ஒரு உறவினரின் மனைவி கர்பவதி. அவளிடம் கொஞ்சம் கூட லஜ்ஜையே இல்லாமல் பிரசவம் பற்றியும், சிசேரியன் பற்றி எல்லாம் அட்வைஸ் வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியின் கணவனும் சிறிதும் முகம் சுளிக்காமல் இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
எனக்குத் தான் ஒருமாதிரியாகப் போய்விட்டது. ‘சே! என்ன மனுஷன்? இதெல்லாமா பப்ளிக்கில் ஒரு பெண்ணிடம் பேசுவது? வெட்கம்கெட்ட மனுஷன்’ என்று மனதுக்குள்ளேயே அவரைத் திட்டித்தீர்த்தேன்.

ஆனால் அந்த தங்கமாமா என் வாழ்க்கையிலும் மூக்கை நுழைப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் நினைக்காதது நடப்பது தான் வாழ்க்கை இல்லையா?
என் வீடு ராஜகீழ்ப்பாக்கத்தில் இருந்தது. என் வீட்டுக்கு எதிர் ப்ளாட் காலியாக இருந்தது. அதன் உரிமையாளர் தில்லியில் எங்கோ வேலையாக இருந்தார். அதனால் நாலைந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து தன் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்வார். எனக்கு அவரை சரியாகக் கூட பழக்கமில்லை.

ஒரு நாள் காலையில் நான் பால் பாக்கெட்டை எடுக்கக் கதவைத் திறந்தால் வெளியே தங்கமாமா!
இந்த மனுஷன் எங்கே இந்தப் பக்கம் என்று நான் குழம்பிகொண்டிருந்தபோது என் மனைவி “ வாங்கோ மாமா! சொன்னா சொன்னபடி கரெக்டா வந்துட்டேளே! உள்ள வந்து உட்காருங்கோ! இதோ காப்பி எடுத்துண்டு வரேன்! ஏன்னா, சித்த நேரம் மாமாவோட பேசிண்டு இருங்கோ. அவருக்கு உங்ககிட்ட ஏதோ காரியம் ஆகணுமாம்” என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றாள்.
எனக்கு அதிர்ச்சி. எனக்கோ இவரைப் பிடிக்கவே பிடிக்காது. இவருக்கு என் கிட்ட என்ன வேலை? என் குழம்பிய முகத்தைப் பார்த்து ஏதோ பெரிய ஹாச்யத்தைக் கண்டவர் போல தங்கமாமா பெரிதாக சிரித்தார். “வெங்கட்! ரொம்பப் பயப்படாதீங்கோ! காசு பணமெல்லாம் கேக்க மாட்டேன். ஒரு சின்ன ஹெல்ப். அவ்வளவுதான்” என்றார்.

“ என்னோட பிரெண்ட் ஒருத்தன் டில்லில இருக்கான். அவன் பையனுக்கு இங்க சென்னைல ரெண்டு மூணு ப்ராபர்டீஸ் இருக்கு. அதுல ஒண்ணு உங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கற நிலம். இங்க அடிக்கடி வந்து பார்க்க முடியாததுனால இந்த நிலத்துக்கு ஒரு வேலி போட்டுடலாம்னு நான் சஜஸ்ட் பண்ணேன். அவன் என்னடான்னா என் தலைலேயே அந்த வேலையத் தூக்கிப் போட்டுட்டான்!
அவனால இப்ப சத்திக்கு சென்னை வரமுடியாதாம். அதனால இந்த fencing வேலைய நான் முடிச்சுத் தரணுமாம். வேண்டிய பணம் அனுப்பிட்டான். ஆனா பாருங்கோ வெங்கட், எனக்குத் திடீர்னு பெங்களூர் போக வேண்டிய வேலை ஒண்ணு நேர்ந்துடுத்து. அப்போதான் உங்க ஞாபகம் வந்தது. நான் வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டேன். ஜஸ்ட் அந்த ஆளுங்கள மேய்க்கணும் அவ்வளவுதான். நீங்க ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு அவாளப் பாத்துக்கணும். நேத்திக்கு உங்க ஆத்துக்காரி கிட்ட போன் போட்டுக் கேட்டேன். “ இது ஒரு பெரிய விஷயமா மாமா? பேஷா செய்வார்! நீங்க நாளைக்கு வாங்கோ”ன்னு சொன்னா. அதான் வந்துட்டேன்” என்று ஒரு சிறிய பிரசங்கம் நடத்தி முடித்தார்.

“சே! இவ்வவளவுதானா!” என்று நான் ரிலாக்ஸ் ஆனேன். இத்தோடு விட்டுவிடுவார் என்றால் உதவி செய்யலாம் என்று எண்ணம் ஓடியது. அப்போதுதான் என்னுள் உறங்கிக் கிடந்த சாத்தான் உறக்கம் கலைந்தான். ‘உனக்குத் தான் இவரைப் பிடிக்காதே! இவருக்கு எதுக்கு உதவி செய்கிறாய்? முடியாது என்று சொல்லி உன் கோவத்தைத் தீர்த்துக்கொள்!’ என்று காதுகளில் வேதம் ஓதினான்.

“ரெண்டு நாள் லீவா? பேங்குல ஆடிட் நடக்கறது. சான்சே இல்லை சார். சாரி, மன்னிச்சுக்கோங்க” என்று முகத்தில் அடித்தாற்போல சொன்னேன்.

தங்கமாமா முகம் ஒரு கணம் கறுத்து பின் நார்மலானது.

“அதனாலென்ன! நானே ஒரு ரெண்டு நாள் இருந்து பாத்துக்கறேன்! நீங்க உங்க ஆடிட்ட கவனியுங்கோ” என்று சொல்லிவிட்டு என் மனைவி கொண்டுவந்து வைத்திருந்த காப்பியைக் குடித்துவிட்டு “வர்றேன்மா” என்று என் மனைவியிடம் விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டார்.
என் மனைவி என்னை முறைத்தாள். “ரொம்ப மோசம் நீங்க. இந்த ஒரு சின்ன ஹெல்ப் செய்ய முடியலேனா என்ன உபயோகம்?” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் ஆபீசுக்கு ரெடியானேன். சொன்ன மாதிரியே சென்றவுடன் மேனேஜர் ஆடிட்டருக்கு வேண்டிய உதவிகள் செய்யச் சொல்லி என்னைப் பணித்தார். நான் வேலையில் ஆழ்ந்தேன். மாலை சுமார் நாலு மணிக்கு மனைவியிடம் இருந்து போன். “ ஏங்க உடனே ஹிந்து மிஷன் ஹாஸ்பிட்டலுக்கு வாங்க. நம்ம பையன் மாடில இருந்து விழுந்துட்டான். தலைல பலமான அடி. நிறைய ரத்தம் போயிடிச்சு. உடனே வாங்க.” என்று பதட்டத்துடன் சொன்னாள்.

மானேஜரிடம் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தேன். அங்கே என் மனைவி கவலை தோய்ந்த முகத்துடன் என்னை எதிர்ப்பார்த்திருந்தாள்.

என்னைக் கண்டவுடன் அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. என்னைக் கட்டிக்கொண்டாள். “அழாதே! டாக்டர் எங்க சொல்லு? வா உடனே போய் பார்க்கலாம்” என்றேன்.
“தங்கமாமா எல்லாம் பார்த்துண்டுட்டாருங்க. அவர் இல்லேனா இன்னிக்கு என்ன ஆயிருக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு. ரத்தம் தேவைன்னு டாக்டர் சொல்லிட்டார். நம்ம கொழந்த க்ரூப் இல்லன்னு இங்க ஹாஸ்பிட்டல்காரங்க சொன்னதும் தெகச்சுப் போயிட்டேன். தங்கமாமா தான் அங்கயிங்க அலஞ்சு ரெண்டு பேர கூட்டிண்டு வந்தார். இப்பக்கூட கீழ போய் மருந்தும் எனக்கு டிபனும் வாங்கத்தான் போயிருக்கார். இதோ வந்துட்டார் பாருங்கோ” என்றாள்.

எனக்குத் தங்கமாமவைப் பார்த்ததும் முதலில் வந்தது வெட்கம். அப்புறம் என்னைச் சுதாரித்த்டுக் கொண்டு “ ரொம்ப தாங்க்ஸ் சார்! உங்க ஹெல்புக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல! காலைல நான் உங்ககிட்ட அப்படிப் பேசினதுக்கு ரொம்ப சாரி.” என்று சொன்னேன்.

“ச்சே! என்ன பேச்சு இது? நான் அத அப்பவே மறந்துட்டேன். இந்தாமா டிபன் நீ சாப்டு மொதல்ல. நான் போய் நர்ஸ்கிட்ட மருந்தக் குடுத்துட்டு வர்றேன். அப்புறம் வெங்கட்! இந்தாங்க இந்தப் பணத்தைப் பிடிங்க. உங்ககிட்ட இல்லாம இல்லை. ஆனா இதுக்காக போய் பணம் டிரா எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டாம். கொழந்தை சௌக்கியமா வீடு திரும்பினதும் குடுங்க” என்று சொல்லி என்கையில் ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைத் திணித்துவிட்டு, “ சரி! நான் வர்றேன். அங்க வொர்கர்சுக்கு பணம் குடுக்கணும்!” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

எனக்குக் கண்களில் கண்ணீர். ‘இப்படியும் ஒரு மனுஷனா? எப்படி இவ்வளவு நல்லவராக இருக்க முடிகிறது? கோவமே வராமல் இருக்க முடிகிறது?’ என்று ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியவனாக நான் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று “ சார் ஒரு நிமிஷம்!” என்று அவரைக் கூப்பிட்டேன். அவர் திரும்பி ‘என்ன?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

“நான் உங்கள மாமான்னு கூப்பிடலாமா?” என்று கேட்டேன். என் வார்த்தைகள் என் காதுகளுக்கே அன்னியமாக ஒலித்தது.

தங்கமாமா முகத்தில் ஒரு புன்னகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *