டாலர் மாமி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 10,646 
 

என் தாயாரும் மனைவியும் காரில் ஏறி அமர்ந்தவுடன் நான் காரைக் கிளப்பினேன்.

டாலர் மாமிக்கு இன்று சக்ஷ்டியப்த பூர்த்தி. ஆராவமுதன் – வேதவல்லி என கல்யாண பத்திரிக்கையில் பார்த்தவுடந்தான் எனக்கு டாலர் மாமியின் பெயர் வேதவல்லி என்பது புரிந்தது.

மாமிக்கு இரண்டு பெண்கள். இருவருமே திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறார்கள். பெண்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து டாலரில் பணம் அனுப்புவதாலும், அதை மாமி கோவில் காரியங்களுக்கும், இன்ன பிற நல்ல காரியங்களுக்கும் தாரளமாக செலவு செய்வதாலும் டாலர் மாமி என்று அழைக்கப் படுகிறாள்.

டாலர் மாமியை எங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாகத் தெரியும். மாமிக்கு வயது நாற்பத்தியெட்டுதான். ஆனால் மாமாவுக்கு அறுபது முடிந்துவிட்டதால் தற்போது அறுபதாம் கல்யாணம். எங்கள் வீட்டிலிருந்து மாமியின் வீடு இரண்டு தெருக்கள் தள்ளியிருப்பதால் நேரிலேயே வந்து எங்களை அழைத்தாள்.

பெருமாள் கோவிலில் மாமியுடன்அறிமுகமான பழக்கம் ஒரு நல்ல குடும்ப நட்பாக மாறியது.
மாமியின் கணவர் ஆராவமுதன் பெங்களூர் ஏஜி ஆபீசிலிருந்து ரிடையர்டு ஆனவர். பெங்களூரிலேயே சொந்தமாக பெரிதாக வீடு கட்டிக்கொண்டு மாமியுடன் வாசம். துணைக்கு கம்பீரமாக ஒரு அல்சேஷன். அதன் பெயர் லைக்கா. காலையில் மாமிதான் அதை வாக்கிங் கூட்டிச் செல்வாள். அதை நாய் என்று சொன்னால் மாமிக்கு கோபம் வரும்.

நான் ராகவன். பெங்களூரில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வைஸ்-பிரசிட்டென்டாக இருக்கிறேன். வயது ஐம்பத்தியிரண்டு. என் ஒரே மகன் அகமதாபாத்தில் பிஸ்னஸ் மானேஜ்மென்ட் படித்துக் கொண்டிருக்கிறான்.

மாமியின் மீது என்னுடைய ஈடுபாடு வேற மாதிரி.

மாமிக்கு நாற்பத்தியெட்டு வயதானாலும் பார்ப்பதற்கு முப்பத்தியிரண்டுக்கு மேல் மதிப்பிட முடியாது. நல்ல நிறம், சிரித்த முகம், நேர்த்தியான உடை என்று பார்ப்பதற்கு அமர்க்களமாக இருப்பாள். எப்பவும் தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள். தானே கார் ஓட்டிக்கொண்டு கோவில் உட்பட அனைத்து இடங்களுக்கும் செல்வாள். டிரைவர் இருந்தாலும் அவனை காரைத் துடைப்பதற்கும், சர்வீஸ் விட்டு எடுத்து வருவதற்கும், மாமாவை எங்காவது அழைத்துச் சென்று வருவதற்கும்தான் உபயோகப் படுத்தினாள்.

வருடத்திற்கு மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று தன் பெண்களுடன் இருப்பாள். எங்களுடன் பேசும்போது அடிக்கடி அமெரிக்காவைப் பற்றி பெருமையடித்துக் கொள்வாள்.

கர்னாடக சங்கீதமென்றால் மாமிக்கு உயிர். நல்ல சாரீரத்துடன் ரசித்து பாடுவாள். சற்று முனைந்திருந்தால் பிரபல பாடகியாக வந்திருக்க முடியும். டி வி யில் சீரியல் பார்க்க மாட்டாள். பகலில் தூங்க மாட்டாள். தையல் கலையில் தேர்ந்தவள். தன் வீட்டு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் போட்டு அதை நன்கு பராமரிக்கிறாள். வீட்டை சுத்தமாக மியூசியம் போல் வைத்திருப்பாள். நன்றாகச் சமைப்பாள். தன் வீட்டுக்கு வருபவர்களை நன்கு உபசரிப்பாள்.

மாமி ரொம்ப மாடர்ன்.. வாட்ஸ் அப், பேஸ் புக், பேஸ் டைம், வைபர், ட்விட்டர், ஸ்கைப் என தன்னுடைய ஸ்மார்ட் போனில் சஞ்சரிப்பாள்.

உலக நடப்புகள், அரசியல் என அனைத்தையும் ஆர்வத்துடன் பேசுவாள். தொ¢யாததை கூகுளில் தேடித் தெரிந்து கொள்வாள். சேகுவாரா பற்றி ஆர்வத்துடன் நிறைய படித்து தெரிந்து கொண்டாள். தற்போது அவரது நண்பரான கியூபாவின் பெடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேச ஆர்வமுடன் இருக்கிறாள்.

மாமியின் சொக்க வைக்கும் அபரிதமான அழகும், பண்பும், புத்திசாலித்தனமும் என்னை மாமியின்பால் மிகவும் ஈர்த்தன. என் அம்மாவும், மனைவியும் பெருமாள் கோவிலுக்கு போகும்போதெல்லம் நான் கார் ஓட்டிச் செல்வேன்… அது பெருமாளை சேவிப்பதற்காக அல்ல. மாமியைப் பார்த்து ஏதாவது நான்கு வார்த்தைகள் பேசுவதற்குதான்.

எங்களை தன்னுடைய காரில் ஏலகிரி, ஆலங்கிரி, மேல் கோட்டை பெருமாள் கோவில்களுக்கு அழைத்துச் சென்றதால், என் அம்மாவுக்கு மாமி மீது தனி வாஞ்சை. என் மனைவிக்கும் மாமி மீது மரியாதையும், பிரமிப்பும் உண்டு. மாமியின் அழகு பற்றி என்னிடமே அப்பாவியாக சிலாகிப்பாள்.

கல்யாண மண்டபம் வந்தாயிற்று. மண்டபத்தில் நுழையும் போது மாமியே புன்னகையுடன் எங்களை எதிர்கொண்டு அழைத்தாள்.

“என்ன கல்யாணப் பெண்ணே எங்களை அழைக்க வந்தாச்சு?” என்றாள் என் மனைவி.

மாமி என்னைப் பார்த்து, “வாங்க ராகவன் சார்” என்றாள். மாமி எப்போதுமே என்னை பெயர் சொல்லித்தான் பேசுவாள். கூடவே சார் சேர்த்துக் கொள்வாள்.

மாமி மயில் கழுத்து நிற பட்டுப் புடவையில் கொள்ளை அழகுடன் ஜொலித்தாள். மடிசார் கட்டியிருந்தாள். புடவையினூடே வெளியே தொ¢ந்த உள் வாழைத் தண்டு போன்ற அழகான பின்னங் கால்களைப் பார்த்து கிறங்கித்தான் போனேன்.

தன் பெண்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். மூத்தவள் உலக வங்கியிலும், அடுத்தவள் அம்னெஸ்டி இன்டர் நேஷனலிலும் வேலை செய்கிறார்களாம். பின் ஏன் டாலரில் பணம் அனுப்ப மாட்டார்கள் ? என நினைத்துக் கொண்டேன்.

அறுபதாம் கல்யாணம் முடிந்து நாங்கள் வீட்டுக்கு வந்த பிறகும் என் நினைவுகள் மாமியையே சுற்றிச் சுற்றி வந்தன. ராத்திரியில் தூக்கம் வராது புரண்டேன். தவறு என நன்றாகத் தெரிந்தே என் ஆசைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. மூளை உண்மையை எச்சரித்தாலும், ஆசையும் ஏக்கமும் அடங்க மறுத்தன. மாமியுடன் பேச எனக்கு இதுவரை தனிமையான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவ்விதம் இனி கிடைத்தால் தைரியமாக என் ஆசையை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கி விட்டேன்.

இரண்டு வாரங்கள் சென்றன.

அன்று ஒரு சனிக்கிழமை. வீட்டில் அதிக வேலை இருந்ததால் என் அம்மாவும், மனைவியும் பெருமாள் கோவிலுக்கு வரவில்லை. நான் மட்டும் காரை எடுத்துக்கொண்டு மாமியைப் பார்க்கும் ஆசையில் கோவிலுக்குச் சென்றேன். கோவில் பார்க்கிங்கில் மாமியின் கார் இல்லாதது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது, சுரத்தில்லாமல் கோவிலுக்குள் சென்றேன். மங்கள தீபாராதனை முடிந்தவுடன் பிரகாரத்தைச் சுற்றி விட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தால், எதிரே டாலர் மாமி. எனக்கு உற்சாகம் கரை புரண்டது.

” எங்கே உங்க காரைக் காணவில்லை?” என்றேன்.

” அவர் இன்னிக்கு கார்த்தாலதான் பெருமாளைச் சேவிக்க மேல்கோட்டைக்குப் போனார்.. சாயங்காலம் வந்துடுவார். நான் ஆட்டோவில் வந்தேன்.”

” போற வழியில் நான் உங்களை ட்ராப் பண்ணிட்டுப் போகிறேன்” ரிமோட்டினால் கார் கதவுகளைத் திறந்து, டிரைவர் சீட்டில் அமர்ந்தேன்.மாமி காரின் முன்புறம் எறி அமர்ந்தாள்.

தற்போது மாமி என் மிக அருகில். வாசனையாக இருந்தாள். மாமியின் அருகாமை எனக்கு புளகாங்கிதமாக இருந்தது. மனசும், உடம்பும் சிலிர்த்தது,

மாமி ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள். எதுவுமே எனக்கு காதில் ஏறவில்லை. வீடு வந்ததும், இறங்குவதற்கு முன், “உள்ளே வந்து ஒரு வாய் காபி சாப்பிட்டுவிட்டு போங்க ராகவன் சார்” என்று அழைத்தாள்.

‘ஆஹா, மாமாவும் இல்லை…தனிமையான சந்தர்ப்பம்’ என் மனசு குதூகலிக்க காரை விட்டு இறங்கி மாமியைத் தொடர்ந்தேன்.

லைக்கா என்னைப் பார்த்து உறுமியது. மாமி, “லைக்கா, கீப் கொயட்” என்று அதட்டியவுடன் அமைதியானது. வீட்டினுள் சென்றோம்.

விஸ்தாரமான வரவேற்பறையில் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தேன். வீடு அமைதியாக இருந்தது. அங்கிருந்த புராதன கிரான்ட் பாதர் கடிகாரம் பதினோருமுறை அழகாக அடித்தது. மாமி ஏஸியை இயங்கச் செய்து, என் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

மாமி பெங்களூர் வெயில் பற்றியும், டிராபிக் நெரிசல் பற்றியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். எனக்கு மனசும் உடம்பும் படபடத்தது.

‘சொல்லிவிடு ராகவன், இதுபோல் சந்தர்ப்பம் இனி அமையாது ‘என்று உள் மனசு கட்டளையிட்டது.

சற்று தைரியத்துடன், “நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும், பேசலாமா?” என்றேன்.

“………. ?” மாமி என்னைக் கூர்ந்து பார்த்தாள்.

” எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுடைய சிரித்த முகமும், அழகும், புத்திசாலித்தனமும் எனக்கு உங்கள் மீது ஆசையை உண்டாக்கியது… என் ஆசைகளுக்கான நல்ல புரிதலும், தனிப்பட்ட நெருக்கமும் உங்களிடம் எனக்கு கிடைத்தால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி” என்றேன். இதைச் சொன்னபோது என் குரல் எனக்கே அன்னியமாகப் பட்டது, நாக்கு உலர்ந்து விட்டது.

மாமி அதிர்ந்து போனாள். சில நொடிகளில் சமாளித்துக் கொண்டு, “ஒரு நிமிஷம்” என்று சொன்னவள், வாசற் கதவை திறந்து வெளியே சென்றாள். அடுத்த நிமிஷம், லைக்காவை தன்னுடன் இழுத்து வந்து அருகே அமர்த்திக் கொண்டாள்.

மாமியின் இந்தச் செய்கை என்னைப் பெரிதும் சுட்டது. அவமானமாக இருந்தது.

“மிஸ்டர் ராகவன், நீங்க உங்க அம்மாவிடம் எவ்வளவு அன்பும், பாசமும், மரியாதையும் வச்சிருக்கீங்க்க.. ஆனா அதே சமயத்தில் உங்க அம்மாவை விட எத்தனையோ அழகான அம்மாக்களை நீங்க சந்திச்சிருப்பீங்க, அப்ப என்னிக்காவது இவ வயத்துல நான் பொறக்கலியே, இவ எனக்கு அம்மாவா இருந்திருக்கக் கூடாதா என வேறு அம்மாக்களைப் பார்த்து ஏங்கியிருக்கீங்களா?

“………….”

“அது மாதிரிதான் உங்க மனைவியும். அக்னி சாட்சியா கைப்பிடித்த மனைவி உங்களுக்கு இரண்டாவது அம்மா. இன்பாக்ட், முதல் அம்மாவை விட உங்களுக்கு வாய்த்த இரண்டாவது அம்மாவின் பாசமும், ஈடுபாடும், தியாகமும் மதிப்பிட முடியாதது… அம்மா என்றால் தாய்மை. முதல் அம்மா பத்து மாதங்கள் சுமந்து உங்களை ஈன்றெடுத்தவள்.. இரண்டாவது அம்மா உங்களின் உதிரத்தை, வாரிசை பத்து மாதங்கள் சுமந்து வார்த்தெடுத்தவள்…”

“…………”

“தயவுசெய்து இந்த மாதிரி புனிதமான உறவுகளை, பிற பெண்கள் மீது ஆசைப்பட்டு கொச்சைப் படுத்திவிடாதீர்கள். நல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும், கம்பீரமும்தான் ஒரு நல்ல ஆணுக்கு அழகு… நான் உங்களை மிகவும் பண்பாணவர், நாகரிகம் தெரிந்தவர் என்று நினைத்தேன்… ப்ளீஸ் ” வலது கையை நீட்டி வாசற் கதவை காண்பித்தாள்.

செருப்பால் அடித்தது போலிருந்தது.

அவள் கையை நீட்டியதைப் பார்த்த லைக்கா, என்ன புரிந்து கொண்டதோ, என்னைப் பார்த்து விரோதமாக குரைத்தது.

நான் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

நாணயங்களில் டாலரின் மதிப்பு மிக உயர்ந்தது… டாலர் மாமியின் மதிப்பும்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “டாலர் மாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *