ஞாயிற்றுக்கிழமை

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,991 
 

அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த கோலத்தை கண்ணை மூடிக் கொண்டு மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், அணிவகுத்து நிறுத்தப்பட்ட புள்ளிகளை மளமளவென ஒன்றிணைத்துப் போட்டு முடித்தாள்.
அதற்குள் செல்வியின் ஏழு வயது மகன், எழுந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் தனக்கும் மட்டும் தேநீர் தயார் செய்தார். செல்வியின் கணவன் பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒன்பது மணிக்கு மேல்தான் விடியும். மற்ற தினங்களில் ஒன்பது மணிக்கெல்லாம் பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். அரக்கப் பரக்க எழுந்து, அரை குறையாய்க் குளித்து, எவ்வளவு வேகமாய் முடியுமோ அவ்வளவு வேகமாய் ஐந்தோ அல்லது ஆறு இட்லிகளை விழுங்கிவிட்டு, அடைக்கப்பட்ட மதிய உணவுப் பையுடன், டி.வி.எஸ். 50யை ஒரு தள்ளுத் தள்ளி ஸ்டார்ட் செய்து ஒரே ஓட்டமாய் ஓடினால் மாலைதான் திரும்புவான். வண்டியைத் தள்ளியபடி ஸ்டார்ட் செய்ய, பன்னீர்செல்வத்தின் ஓட்டம் பார்ப்பதற்கு வினோதமாயிருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும், ஒன்பது மணிக்கு முன்பு எழுந்திருக்க மாட்டான். தேநீர் பருகிவிட்ட செல்வி, மகனின் சிறுநீர்ப் படுக்கைகளை அலசிப் போட்டுவிட்டு, உழவர் சந்தைக்குச் சென்று ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்க கிளம்பினாள். தானும் வருவேன் என அடம்பிடித்த பையனையும் அழைத்துக் கொண்டு சென்று, முக்கால் மணி நேரச் செலவில், பையை நிரப்பியிருந்தாள். பிறகு அங்கிருந்து நேராய் இறைச்சிக் கடைக்கு வந்தாள். புரட்டாசி மாதம் என்பதால் கூட்டம் சற்றே குறைவாய் இருந்தது. மற்ற சமயமென்றால் நீண்ட நேரம் இங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கும். செல்விக்கு அசைவத்தின்மேல் அவ்வளவு ஈடுபாடில்லை, ஆனால், செல்வியின் கணவனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை டிஃபனே கறியில்தான் தொடங்க வேண்டும். ஆட்டுக்கறியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீடு வந்தவளுக்கு ஒரே ஆச்சர்யம்! படுக்கையில் பன்னீர்செல்வத்தைக் காணோம், எட்டு ஐம்பதுக்கெல்லாம் எழுந்துவிட்டாரா என்ற வியப்பு செல்விக்கு ஏற்பட்டது. படுக்கைகளை மடித்து எடுத்து வைத்தாள். பன்னீர்செல்வத்தின் சுமையைத் தாங்கமுடியாத பாய், பன்னீர்செல்வத்தை எழுப்பி கழிப்பறைக்குத் தள்ளியிருந்தது. உள்ளிருந்த வெளிப்பட்ட பன்னீர் செல்வத்தின் முகத்தில் தூக்கம் இன்னமும் மிச்சமிருந்தது. அதற்குள் படுக்கை எடுத்து வைக்கப்பட்டதற்காக, சாட்டையில் அடிப்பதைப் போலான ஒரு கோபப் பார்வையை செல்வியை நோக்கி வீசிவிட்டு, செய்தித்தாளுக்குள் புகுந்து முறைத்த தன் முகத்தை மறைத்துக்கொண்டான்.

அவனுக்கொரு தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சமைப்பதற்கு ஆயத்தமானாள். அரைமணி நேரத்தை செய்தித்தாளுக்குள் செலவழித்த பன்னீர்செல்வம் குளிப்பதற்கெனக் கிளம்பியதைக் கவனித்தவள், மனத்துக்குள்ளாகவே கணக்கிட்டாள்; அடுத்த அரை மணி நேரத்துக்குள் பன்னீர்செல்வம் டைனிங் டேபிளில் அமர்ந்து விடுவான் அதற்குள் இட்லிகளைச் சுட்டுத் தள்ளவேண்டுமே என்ற பரபரப்பு அவளைத் தொற்றிக் கொண்டது. கேஸ் அடுப்பின் இருபுறங்களும் அவளது அவசரமறிந்து உச்சபட்ச அனலைக் கக்கியதில் தேவைக்கு அதிகமாகவே வாடிப் போனாள். அதற்குள் குளியலறையிலிருந்து டவல் எடுத்து வரச் சொல்லியும், ஃபோனடிக்கிறது யாரெனப் பார் எனவும், இரண்டு கட்டளைகள் இராணுவத்தின் மிடுக்கோடு வந்து விழுந்தன.

செல்வி கணித்ததைப் போலவே, கணித்த நேரத்துக்குள்ளாகவே பன்னீர்செல்வம் தன்னை சாப்பிடத் தயார் படுத்திக் கொண்டுவிட்டிருந்தான். பையன் இன்னமும் குளிக்காமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். மகனை ஒரு அதட்டு அதட்டி பல் தேய்த்துவிட்டு வரச் சொன்னாள். சமைத்து வைத்ததை டேபிளில் பரப்பி வைத்துவிட்டு கழிப்பறையை நோக்கி நடந்தாள். கழிப்பறைக்குள் அமர்ந்திருந்தவளின் கண்கள் கலங்கி விட்டிருந்தன. பேசாமல் இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பரிமாறிவிட்டே கூட வந்திருக்கலாம். பையனோ அதட்டினால்தான் நாலுவாய் சேர்த்துச் சாப்பிடுவான். அதற்கே காரம் காரம் என அலறுவான். அவருக்கோ கொஞ்சம் ஒறப்பாய் இருந்தால்தான் பிடிக்கிறது என ஏதேதோ யோசித்தவளாய் வெளியேறினாள். பரிமாறாமல் போனதற்கு ஏதேனும் முகத்தைக் காட்டுவாரோ என எதிர்பார்த்தாள். பன்னீர்செல்வம் உணவில் முசுவாய் இருந்ததால் அவளின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.

பதினொரு மணிவாக்கில் சாப்பிட்டு முடித்துவிட்டு, பையனுக்கு தண்ணீர் காய்ச்சி ஊற்றிவிட்டுக் கொண்டிருக்கம்போதே மகன், “இன்னிக்காச்சும் செஸ் விளையாட சொல்லிக் குடுப்பையாம்மா’ என ஏக்கத்தோடு கேட்டான். அவனும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் கேட்பதும், அவளுக்கு எதேனுமொரு வேலை இருந்து கொண்டே இருப்பதால், அது தட்டிக் கழிவதும் கடந்த நான்கு ஞாயிறுகளாய் நடந்துகொண்டிருக்கிறது. கணவனைக் கைகாட்டி விடலாம் என்றால் அவனுக்குச் சதுரங்கம் விளையாடவே தெரியாது. அதிலும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அவன் வீட்டில் இருக்கும்போது பையனுக்குச் சொல்லித் தரவே முடியாது. ஏனென்றால், தனக்குத் தெரியாதவொன்றை, இவள், பையனுக்குச் சொல்லித் தருவதா என்ற எண்ணம் அவனுள் மேலோங்கியிருக்கும். எப்படியும் இன்று சொல்லித் தருவதென முடிவெடுத்தவள் அதற்கென உறுதியளித்தாள். பையனும் வழக்கம் போலவே குதூகலித்தான்.

மதிய சாப்பாட்டுக்கான சமையலைத் தொடங்கினாள். கணவன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள் அனைத்தையும், சேனலுக்கு சேனல் தாவித் தாவி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

காலையில் போல் இல்லாமல், மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள். பன்னீர்செல்வம் ஒரு குட்டித் தூக்கத்துக்குச் செல்லத் தயாரானான். பையன் பரணிலிருக்கும் செஸ் போர்டை எடுக்கட்டுமாவெனக் கேட்க, அவளுக்கும் தூக்கம் கண்களைக் கவ்வியது. நான் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டுப் பிறகு செஸ் சொல்லித் தருகிறேன், என அவனிடம் ஒருவித கெஞ்சலோடு கூறி, அவனைத் தலையசைக்க வைத்துவிட்டு, தலையைச் சாய்த்தாள். ஒரு பத்து நிமிடம்கூட இருக்காது கதவு தட்டும் சத்தம் கேட்டு எரியும் கண்களோடு கதவைத் திறந்தாள். வெளியே அவனது அண்ணன் மகளும், அவளின் கணவனும் நின்றிருந்தனர். புதிதாய்த் திருமணமான அவர்கள் இப்போதுதான் இரண்டாவது முறையாய், அவளது வீட்டுக்கு வந்தார்கள். சருகுகளில் சரசரவென பற்றும் தீயென செல்விக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த பன்னீர்செல்வம் இவர்களை ஒப்புக்கு வரவேற்றான். வேறேதும் பேசவில்லை, முகம் கழுவித் தயாராகி வெளியே கிளம்பினான். இனி இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவான் லேசான மது வாடையுடன். வந்தவர்கள் காஃபி சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசி முடித்து, அவளது தூக்கத்தையும் கெடுத்துவிட்டுப் போனார்கள்.

இன்றைக்கும் பையனை ஏமாற்ற வேண்டாமென நினைத்தவள் அவனைப் பார்த்துக் கண்ணசைத்தாள். அவனும் உற்சாகத்துள்ளலுடன் நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டு அதில் ஏறி பரண் மேலிருந்த செஸ் போர்டை எடுத்தான். அவள் அவளது தையல் மிஷினையே பார்த்துக்கொண்டிருந்தாள், இன்று தனக்கு லீவு விட்டதற்காக அது, நன்றி தெரிவிப்பதாகக் கற்பனை செய்தாள். போர்டை தரையில் வைத்து காய்களை அடுக்கும்போதே அதற்கான நகரும் விதிமுறைகளைக் கூறினாள். இது ராணி, எந்தப் பக்கம் வேணாலும், எப்படி வேணாலும் போகும். நேராகவும் போகும். மேலிருந்து கீழ், இடமிருந்து வலம், கிராஸாகவும் போகும். இதுதான் ராஜா, தேவையில்லாமல் ஒரு அடிகூட நகராது. அதைச் சொல்லும் போதே, டவல் எடுத்து வைடி… என்று கணவனின் குரல் அசரீரியாய்க் கேட்டது. தேவையே ஏற்பட்டாலுங்கூட ஒரு கட்டத்துக்கு மேல நகரவே நகராது. “ஃபோனடிக்குது… யாருன்னு பாரு’ மற்றவர்களை ஏவிவிட்டு, தான் சௌகர்யமாய் இருக்கும். “டிஃபன் எடுத்து வச்சாச்சா’ அசரீரி கேட்டுக்கொண்டிருந்தது.
மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. “இன்னிக்கு இது போதும், நான் சொல்லித்தந்தத நல்லா ஞாபகத்துல வச்சிக்கோ, அடுத்த வாரம் நீயும் நானும் விளையாடலாம், இப்ப வா சாப்பிடலாம்’ என்று அழைத்தாள். இருவரும் சாப்பிட்டார்கள், உடனே பையன் தூங்கச் சென்றுவிட்டான். அவளுக்கும் தூக்கம்தான், தூங்கிவிட்டால், உடனே கணவன் வந்து கதவைத் தட்டினால் எழ வேண்டியிருக்கும். இப்போதிருக்கும் நிலைக்குப் படுத்தால் எழுந்திருக்க முடியுமெனத் தோன்றவில்லை. கதவு ஜன்னல் எல்லாவற்றையும் தாழிட்டால்தான் அவளால் நிம்மதியாய்த் தூங்கவே முடியும். அவன் வரும்வரை வாசலிலே உட்கார்ந்திருந்தாள். பதினொரு மணி வாக்கில் வீடு வந்தான் ஏதும் சாப்பிடவில்லை. உடை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டான். பிறகு அவளும் தூங்கிப் போனாள்.

பால்காரனின் சத்தம் கேட்டு விழித்தவள், அதற்குள் விடிந்துவிட்டதேயென இயற்கையை நொந்துக்கொண்டாள். பால் வாங்கி வைத்துவிட்டு, வாசல் பெருக்கிக் கோலமிடத் தயாரானாள். முற்றத்தில் பழுத்து உதிர்ந்திருந்த நேற்றைய தினம், அவளைப் பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைத் துளியும் அறியாமல், முந்தைய தினத்தைப் பெருக்கிவிட்டு, வீட்டை திங்கட்கிழமைக்குத் திருப்பி வைத்தாள்.

– பா.ராஜா (ஜனவரி 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *