ஜெனரெஷன் ‘Y’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 10,186 
 

உடம்பு தூக்கி வாரி போட்டது. படக்கென எழுந்து உட்கார்ந்தாள் உமா. எதிர்புறம் கடிகாரம் காலை 3 மணி என காட்டியது. “சே இந்த பழக்கம் எப்பதான் எனக்கு சரியாகுமோ?” என அலுத்து கொண்டே, பக்கத்தில் படுத்திருந்த குழந்தைகளை பார்த்தாள். இரண்டும் பெண் பிள்ளைகள் அழ்ந்த தூக்கத்தில் இருந்தன. அவள் வீட்டுக்காரர் வெளியூரில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். கல்யாணம் ஆனதில் இருந்து, அவரோடு சேர்ந்து இருந்த காலம் குறைவுதான். அவர் ஒரு பக்கம், இவள் ஒரு பக்கம். பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் இவள்தான்.

பிள்ளைகள் இரண்டும் பெண் பிள்ளைகளாக பிறந்தது. பெரியவள் காலேஜ் சேர்ந்ததில் இருந்து அவளை பற்றிய கவலையும் பயமும் அதிகமாகி கொண்டே போனது. தினமும் ஏதாவது ஒரு கனவு. உடம்பு தூக்கி வாரி போடும். படக்கென எழுந்து விடுவாள். அதன் பின் தண்ணீர் குடித்து விட்டு குழந்தைகள் முகத்தையே பார்த்து கொண்டிருப்பாள். பின் தூங்கி விடுவாள்.

பெரியவளை காலேஜ்ஜில் சேர்த்த பின் இவளது கற்பனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அவளுக்கு போன் வந்தாலும், அவள் ஃபேஸ் புக் நண்பர்கள் ஸ்டேடஸ்களை பார்த்து என்ன ஏது என்று விசாரித்து கொண்டே இருப்பாள். இவ்வளவுக்கும் உமா 17 வயசிலேயே வீட்டை விட்டு தனியாக வேலைக்காக வேறு ஊருக்கு வந்தவள். ஒருத்தர் துணை இல்லாமல் தைரியமாக வேலைக்கு வந்த இடத்தில் ஒரு வீடு எடுத்து தனியாக வாழ்ந்தவள். உடன் வேலை பார்த்தவரை காதலித்து திருமணம் செய்தவள். ஆனால், பிள்ளைகள் என்று வரும் போது அவர்கள் எதிர்காலம் பற்றி பயத்துடன் கூடிய சிந்தனை ஓடி கொண்டே இருக்கும்.

படிக்கும் பத்திரிக்கைகளில் பெண்கள் ஏமாற்றப்பட்ட, கடத்தப்பட்ட செய்திகள் வந்தவுடன் இவளுக்கு பயம் வந்து விடும்.

சில நேரம், பெரியவளிடம், “நான் தான் 19 வயசிலேயே காதலித்து கல்யாணம் பண்ணி சீக்கிரமே குழந்தைய பெத்துக்கிட்டேன். நீ இப்படி இருக்காதே, நல்லா நிறைய படிச்சு வேலைக்கு போன பின், 25, 26 வயசில கல்யாணம் பண்ணு. கல்யாணம் பண்ணா நிம்மதி போய்விடும். பழகுறது எல்லாம் பார்த்து பழகு” என அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுவாள்.

“நீ சும்மா இருக்க மாட்ட, நான் எப்படி இருக்கிறதுன்னு எனக்கு தெரியும். எங்க ஜெனரேஷன் உங்க மாதிரி இருக்காது. நாங்க ஜெனரேஷன் ‘Y’. என்று பெரியவள் அதட்டு போட்டவுடன் வாயை மூடி விடுவாள்.

இருந்தாலும் பிள்ளைகள் எதை படிக்கிறார்களோ? எதை பார்க்கிறார்களோ? யாருடன் பழகுகிறார்களோ? என்ற சிந்தனை ஓடி கொண்டே இருக்கும். அதனாலேயே நைட் நைட் இந்த மாதிரி முழிக்கிற பிரச்சனை. அவள் கணவரிடம் சொன்னால், “இந்த பிரச்சனைக்கு முடிவு உன் கிட்டதான் இருக்கு என்று ஒரு வரியுடன் முடித்து விடுவார். தன் சிந்தனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு உறங்கினாள்.

விடிந்ததும் பரபரப்பு அவளை வந்து ஓட்டி கொண்டது. பிள்ளைகளுக்கும் தனக்கும் உணவு தயாரித்து கொண்டிருக்கும் போது,

“அம்மா, நேத்து பழைய புத்தக கடையிலிருந்து புத்தகம் வாங்கி வந்தயா? என கேட்டாள் பெரியவள்.

“ஆமாண்டி, காலங்கார்த்தால இது என்ன கேள்வி?”

“இந்தா, அதிலிருந்து ஒரு புத்தகம் நேத்து நைட் எடுத்து படிச்சேன். இவ்வளவு கண்றாவி புத்தகத்தை ஏன் வாங்கின? சின்னவ படிச்சா என்ன ஆகுறது. முதல்ல குப்பையில போடு” என்று நீட்டினாள்.

ஆச்சர்யத்துடன் வாங்கி பார்த்தேன். அட்டையில ஒரு கதையின் பெயரை போட்டு விட்டு, உள்ளே படுகண்றாவியாக இருந்தது.

“வாங்கும் போது உள்ளே என்ன கதைன்னு படிச்சு பார்த்து வாங்குமா” என்றாள் பெரியவள்.

“ஏண்டி, இதை படிச்சயா?”

“முத பக்கத்தை படிச்சவுடனே தூக்கி வச்சிட்டேன்”

“படிக்கனும்ன்னு ஆசை வரலையா?”

“அம்மா, உங்க ஜெனரேஷன் மாதிரி இல்ல எங்கது. எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சோஷியல் மீடியா மூலமாக தெரிஞ்சுக்க முடியுது. ஒரு விஷயத்தை சைண்டிபிக்கா அணுகிற அறிவு எங்க கிட்ட இருக்கு. ஆனா உங்க ஜெனரேஷன்ல எல்லாத்தையும் மறைச்சு மறைச்சு, அதை தேடவே உங்களுக்கு நேரம் சரியா போச்சு. எங்களுக்கு அப்படி இல்லை. சின்னவளும் நேரம் வரும் போது எல்லாத்தையும் சரியா தெரிஞ்சுக்குவா. நீ அந்த புத்தகத்தை தூக்கி ஏறி. நாங்களெல்லா யாரு. ஜெனரேஷன் “Y””என்றாள்.

எனக்கு பெருமை கலந்த உவகை. எவ்வளவு தெளிவாக விஷயத்தை என்னிடம் சொன்னது இல்லாமல், தன் தங்கை இதை படித்து விட கூடாது என அக்கறை எடுத்து கொள்கிறாள். இவளை பற்றி கவலை பட எனக்கு என்ன அருகதை இருக்கிறது. முழிப்பு வந்தா வரட்டும். அவளை இறுக அணைத்து கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *