கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,230 
 

கருகருவென்று மேகம் சூழ்ந்திருந்ததில், எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருந்தன.

“ரெண்டு நாளைக்கு முன்ன மூர்த்தி வந்து தேடிட்டுப் போனான்டா”- என்று அம்மா சொன்னது மட்டுமில்லை, ஞாயிற்றுக்கிழமை என்பதும் கூட காரணமாக இருந்தது மூர்த்தி என்கிற ராமமூர்த்தியைப் பார்க்க. அவனைப் பார்க்கக் கிளம்பிய பிறகுதான், அவன் வீட்டில் இல்லையென்றால் எங்குபோவது என்கின்ற சந்தேகம் வந்தது.

இதற்கு முன் ஒரு சில தடவை மூர்த்தியை பார்க்க வேண்டுமென்று கிளம்பி, வேறுயாரையாவது பார்த்துவிட்டோ, பேசியிருந்துவிட்டோ வர நேர்ந்திருக்கிறது. கூடிய மட்டும், மூர்த்தி இல்லாத போது—— நன்றாக இருந்தாலும், இல்லையென்றாலும் எதாவது ஒரு சினிமாவுக்கு போய் உட்கார்ந்து பொழுதைக் கழித்து வீடு திரும்புவது சௌகரியமாய்ப்படும். ஆனால், அது மூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்தது போலிருக்காது.

அவனுடைய வீட்டில் தனியாக இருக்கும் மாடி அறை, அவன் அண்ணனின் பிரத்யேக அறையாக இருந்து, நானும், முத்துவும் இன்னும் சிலரும் கொட்டமடிக்க ஆரம்பித்ததில் இருந்து மூர்த்தியின் அறையாகப் போயிருந்தது. டி.வி., பீரோ, என சில பொருட்களோடு, கூடவே கோழிக்குஞ்சுகளும் அந்த அறையின் வாசிகள் ஆயின. பேசித் தீர்ப்பதற்கென்று பெரிதாய் தயாரிப்புகள் எல்லாம் இருந்ததில்லை எந்தவொரு சந்திப்பிலும். எதாவது ஒன்றில் ஆரம்பித்து, எதாவது ஒன்றில் முடிவதற்குள் ஒன்றிரண்டு டீ சாப்பிட வாய்ப்புண்டு. அதிலும் எண்ணிக்கை அதிகமாகும் போது சீட்டும், சிகரெட்டுமாய் நேரம் போவது தெரியாது. முத்து மாதிரி ஆட்கள் வந்து சேரும் போது தான் இயல்பான பேச்சுக்கள் என்பது போய், ஆவேசமான விவாதங்களாய் சிலநேரம் முடிந்துவிடும். அதுமாதிரி சமயத்தில் மூர்த்தியின் முகம் கடுகடுவென்றிருக்கும். இருந்தாலும், அடுத்த நிமிடத்தில் அதைத்துடைத்தெறிந்துவிட்டு இயல்பாகிவிட அவனுக்குப் பழகிப் போயிருந்தது. அவன் மீது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இது.

மூர்த்தி தேங்காய் மண்டிக்கு வேலைக்குப் போயிக்கொண்டிருந்தது வரை, தேடிப்போனாலும் அவன் இருப்பதில்லை என்பதால் அங்கு சென்றது குறைவாகத்தானிருக்கும். மண்டியில் சம்பளப்பாக்கி அது இதுவென்று உண்டான பிரச்சனையில், வேலை இல்லாதிருக்க, மூர்த்திக்கு கஷ்டமாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை பொழுதிற்கு எல்லோரையும் போலவே எனக்கும் வசதியாக இருந்தது அவனது அறை.

கூடவே, அவனிடம் எப்போதும் புதுப்புது புத்தகங்கள் புழக்கத்திலிருந்து கொண்டேயிருக்கும். படிக்காமல் அவனால் இருக்க முடியாது. புதிதாய் எதுவுமில்லையென்று முதலில் சொல்வதும், கிளம்பும்போது எதாவது ஒன்றை கையில் கொடுத்து அனுப்புவதுமாக எனக்கும், அவனுக்குமான வாசிப்பு நெருக்கம் இருந்தது. இதுவும் கூட, நான் அவனைத் தேடிச்செல்வதற்கான காரணங்களில் ஒன்றாகவும் இருக்கலாம்.

வாசலிலிருந்து சத்தம் கொடுத்தபோது “மேலதான் இருக்கான்”- என்று மூர்த்தியின் அப்பாவின் குரல் மட்டும் வந்தது.

இது தெரிந்ததுதான் என்றாலும் திடுதிப்பென்று மாடியேறிப் போவது சரியாக இருக்காது என்பதால் கூப்பிட்டுவிட்டு மாடியேறிச்செல்வது வழக்கமானது.

கூப்பிட்டவுடன், “மேலதாம்ப்பா இருக்கான். அவனுக்கென்ன? வேலைக்கும் போகாம, வெட்டிக்கும் போகாம”- என்று பதில் வரும்போது தான் என்னவோ போலாகிவிடும்.
மாடிப்படியெல்லாம் நாவல்ப்பழ மரத்திலிருந்து பழங்கள் சிதறிக்கிடந்தன. கையில் எடுத்ததில், தூசியும், மண்ணும் ஒட்டியிருந்ததால் கீழே போட வேண்டியதாயிற்று. கீழே போட்டாலும், அதன் ஈரப்பதமும், சாயமும் கையில் இருந்தது. நாவல் பழத்தைப் பார்த்ததும் சாவித்திரி அக்கா ஞாபகம் வந்தது.

“அக்காவுக்கு மரம் வளர்க்கறதுன்னா ரொம்பபிடிக்கும். (யாருக்குதான் பிடிக்காது). எதிர்பார்க்காம கிடைச்சதை ஒருநாள் கூட தப்பாம பொத்திபொத்தி வளர்த்தது. அக்கா அதிகமா சந்தோசப்பட்டது அது காய்க்க ஆரம்பிச்சப்பதான். நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் எனக்கு தர்றதுக்காகவே பொறுக்கி எடுத்து துடைச்சு வச்சிருக்கும்”- என்று கல்யாணமாகிப் போனபுதிதில் சாவித்திரி அக்காவைப்பற்றியும், நாவல்பழ மரத்தைப்பற்றியும் மூர்த்தி மணிக்கணக்கில் பேசுவான்.

அழுக்குத் துணிகளும், புத்தகங்களும், குப்பைகளும் நிறைந்து கிடந்ததற்கு நடுவே, நல்ல வேளையாக வெளியில் சென்றுவிடாமல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். காற்றாடியின் பலனாய், பாயிலிருந்து வந்த வியர்வை நாற்றம் ரூம் முழுவதும் பரவியிருந்தது. போதாததற்கு கோழிக்குஞ்சுகள் வேறு அசிங்கம் செய்து வைத்திருந்தன.

எழுப்பியதும் வேண்டா வெறுப்பாக எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன ரொம்ப அலுப்பாக்கும்? இப்படித்தூங்கறே?”

“ராத்திரி தூக்கமே சரியாவர்றதில்லே. புத்தகம் படிக்கறதும், மிச்சநேரத்துல வராண்டால வந்து உட்கார்ந்திருக்கறதுமா எதாவது நினைப்புலதான் ராத்திரி பொழுதெல்லாம்”.

“அதான் பகல்ல இந்தத் தூக்கம் தூங்கறியாக்கும்?”

“உட்கார்ந்திரு. வந்துடறேன்”- என்றவனாய் கீழே இறங்கிப்போக, அலங்கோலமாய் கிடந்த அறையை சரி செய்யலாம் என்று பட்டது எனக்கு.

துணிகளை எடுத்து கொடியில் போட்டு, பாயை உதறிவெளியில் காயப் போட்டுவிட்டு கூட்ட ஆரம்பித்தேன். கோழிக் குஞ்சுகள் அங்குமிங்குமாய் அலைந்து இடைஞ்சலைக் கொடுத்தது. கோழியைக் காணவில்லை. குஞ்சுகளை எல்லாம் வெளியில் விரட்டிவிட்டு, குப்பைகளை ஒன்று சேர்த்து பிளாஸ்டிக் கவரில் அள்ளி வைத்த பிறகு அறை பார்ப்பதற்குப் பரவாயில்லாமல் இருந்தது.

கோழிக் குஞ்சுகள் வெளியே “வீச்… வீச்…” சென்று கத்திக் கொண்டிருந்தன. அதற்கு வேறு வேலையென்ன என்று நினைத்தபடி டி.வி.யைப் போட்டுவிட்டு உட்காரும் போது குஞ்சுகளின் சத்தம் முன்னைவிட அதிகமாயிற்று.

“என்னாச்சு இதுகளுக்கு”- என்று ஆத்திரத்துடன் கதவைத் திறந்தபோது, எல்லாமும் கதவோரம் தஞ்சமடைந்திருந்தன. அத்தனையின் கண்களிலும் மிரட்சி.

எதிரே மரத்தின் மீது குஞ்சுகளையே குறிவைத்து காக்கா ஒன்று உட்கார்ந்திருந்தது மிரட்சிக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

குஞ்சுகளின் சத்தத்தைக்கேட்டு ஓடிவந்த கோழி, காக்காவைப் பார்த்ததும், படபடவென்று இறக்கையை அடித்தபடி போர்முரசு கொட்டுவது போல அங்குமிங்குமாய் பறந்து விரட்ட முயற்சித்தது.

கோழியைப் பார்த்ததும் கதவோரமிருந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் பக்கம் வேகமாய்நகர, இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தது போல், குஞ்சுகளில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு, போரின் முதல் சுற்றில் வெற்றிபெற்ற பெருமிதத்தோடு பறந்துபோனது காக்கா.

துடிதுடித்துப்போனது கோழி. பெற்றதில் ஒன்றை கண்ணெதிரிலேயே பறிகொடுத்தது எனக்கே என்னவோ போலிருந்தது. கோழிக்கு எப்படியிருந்திருக்கும்?

“எதுக்கு வெளில வந்து அதோட கண்ல பட்டுத் தொலைச்சீங்க?”

“வீட்டுக்குள்ளதான் இருந்தோம். அவன்தான் விரட்டிட்டான். வெளில வந்தா எதுத்தாப்பில மேல அது உட்கார்ந்திருக்கறதைப் பார்த்ததும் பயமாயிருச்சு”

“நான் தான் அதை விரட்டிட்டு இருக்கேனே அதுக்குள்ள இங்க ஏன் ஓடி வந்தீங்க?”

“நீவந்திட்டேங்கற தைரியத்துல உங்கிட்ட வந்துருவோம்னு வந்தோம். அதுக்குள்ள இப்படியாயிடிச்சு”

கோழியும் குஞ்சுகளும் ஒன்றையொன்று பார்த்தபடி “கீச்… கீச்…” என்றதன் சப்த வெளிப்பாடுகள் வார்த்தைகளாய் இருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று பட்டது எனக்கு.

வானத்தையே வெறித்தபடி அங்குமிங்குமாய் அலைந்தது கோழி. தப்பித்தவறி அதிர்ஷ்டவசமாய் அந்தக் குஞ்சு காக்காவின் பிடியிலிருந்து கீழே விழுந்து விடாதா என்பதற்கான பார்வையாய் அது இருந்திருக்குமோ?

நான் அறையை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, குஞ்சுகளை விரட்டாமலிருந்திருந்தால் இதுமாதிரி நடக்காமலிருந்திருக்கலாம். கோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் உள்ளே தூக்கிக்கொண்டு வந்தேன். குஞ்சுகளும் என்பின்னாலேயே ஓடிவந்தன. கோழியை மடியில் வைத்துத் தடவிக் கொடுத்ததை அதனிடம் மன்னிப்பு கோரும் விதத்தில் என்று சொல்லலாம். குஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாய் மடியில் ஏறிக்கொண்டிருந்தன.

தூக்கில் டீயும், மிக்சர் பொட்டலமுமாய் மூர்த்தி வந்ததும், கோழியை இறக்கிவிட எல்லாமுமாக சுவர் மூலையில் சென்று ஒண்டிக்கொண்டன. குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து மூடியவாறு தன் அலகால் வருடிவிட்டுக்கொண்டிருந்தது கோழி. மிக்சர் பொட்டலத்தைப் பிரித்து மூலையில் கொஞ்சம் வீசிவிட கோழியும் குஞ்சுகளும் கொத்த ஆரம்பித்தன.

“என்ன பாய்கடைல வாங்கினியாக்கும்?”

“இல்ல பக்கத்துலதான். காலைல மண்டிக்குப் போயிருந்தேன்”

“எதும் குடுத்தானா?”

“பைசா தரலை. அவன் தருவான்னும் நம்பிக்கையில்லை. மார்க்கெட்ல ஒருகடை எடுத்துத் தரானாம். அதுல அவனோட காயப் போட்டு வியாபாரம் பாருன்னு சொல்றான்”.

“நீ என்ன சொன்னே?”

“ரெண்டு நாள் கழிச்சு வந்து பேசறேன்னு வந்திட்டேன்”

“காசுதான் வர்றதுக்கு வழியில்லை. கடையும் வச்சுத்தந்து தேங்காயும் தர்றேன்னு சொன்னா, சரிங்கறதுதான”

“அது சிரமம். நாம தனியா பண்ற மாதிரி வராது”

“ஏன் சிரமங்கறே?”

“காசா வாங்கினா நாம ஏதாச்சும் பண்ணலாம். காயா வாங்கிட்டிருந்தா திரும்பத்திரும்ப அவனை எதிர்பார்த்திட்டிருக்கணும் அவனோடதான் ஒத்துவரலேங்கறப்ப எதுக்கு அவன் கிட்ட மாட்டிக்கணும்?”

“அப்ப என்னதான் சொல்லப்போற?”

“ரெண்டு நாள் டயம் இருக்கில்ல. அப்ப என்ன தோணுதோ அதுப்படி. செலவுக்குக் கூட காசில்லை. எதாச்சும் இருக்குமான்னதுக்கு கையை விரிச்சுட்டான்”.

“அவனும் காசு தரலை. பாய்க்கடைக்கும் போகலைங்கறே. இதுக்கு ஏது காசு உங்கிட்ட?”

“அவர் கடைக்கு ரொம்ப பாக்கியாயிட்டுது. அண்ணங்கிட்ட காசுவாங்கி ஏற்கனவே வச்சிருந்த மோதிரத்தை அடகு திருப்பி வித்திட்டேன். அண்ணனுக்கும், பாய்க்கும் போக மிச்சத்துல புத்தகம் வாங்கினேன். கைல இருக்கறது ரெண்டு மூணு நாள் செலவுக்கு வரும்”.

வெளியிலோ, சினிமாவுக்கோ போகலாமென்று மூர்த்தியிடம் சொன்னபோது அப்பாவை கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியிருப்பதாகச் சொன்னான். சரியான காரணம் என்பதால் வற்புறுத்தவில்லை.

கிளம்பத்தயாரான போது “முத்துவுக்கு வேலைபாக்கும் போது அடிபட்டுடுச்சாம். சும்மா கைவீசிவிட்டு போறதுக்கு என்னவோ மாதிரியிருந்ததுன்னு போகலை. முடிஞ்சா நீ போய் பாத்துட்டுவா”- என்று அவன் சொன்னபோது, “சரி” என்றேன்.
இனிமேல் நேரம் என்பது அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் என்றாலும் அதுவரைக்கும் இருந்துவிட முடியாது. இடையில் கண்டிப்பாய் முத்துவை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும்.

கோழிக்குஞ்சு ஒன்று குறைவதை நானிருக்கும் வரை மூர்த்தி கவனித்திருக்கவில்லை. யதேச்சையாக கவனித்து, கேட்கிறபட்சத்தில், எனது வெளிப்படையான பதில் அவனுக்கு கவலையைவிட கோபத்தினை உருவாக்கியிருக்கலாம்.

நடந்ததைப் பற்றி மூர்த்தியிடம் சொல்லாமல் விட்டதை விட, அப்படியொரு விபரீதம் நடந்துவிட நானும் கராணமோ என்கிற உறுத்தல் தான் எனக்குப் பெரிதாய் இருந்தது.
படியிறங்கும்போது மூர்த்தி எதுக்காக தேடிவந்தான் என்பது கேட்க மறந்துபோனது ஞாபகத்திற்கு வந்தது. பணத்திற்காக இருக்கலாம். கேட்டால், வேறு எதற்காகவோ, இல்லை வெறுமனே பார்க்க வந்ததாகவும் கூட அவன் சொல்வான்.

மழைக்கு முந்திய காற்றிற்கு இன்னும் அதிகமாய் நாவல்பழங்கள் சிதறிக்கிடந்தது. காலில் மிதிபட்டு விடாமல் கவனமுடன் இறங்கினேன். இதுவரைக்கும் மழை பெய்யவில்லையென்றாலும் கூட கருமேகம் விலகியதாயில்லை. எதிர்பார்க்கும் நேரங்களில் இல்லாமல் தேவையற்றுப் பெய்ய பழகிப் போயிருக்கும் மழையை என்ன சொல்வது?

இன்னும் கொஞ்சநேரம் மழை தாமதித்தால் வீட்டிற்குப் போய்ச்சேர ஏதுவாயிருக்கும். மூர்த்திக்கும் கூட ஆஸ்பத்திரிக்கு போய் வருவதற்கும்.

சைக்கிளை எடுத்து மிதிக்க யத்தனிக்கையில், யாரோ, எதற்காகவோ கூப்பிட்டதைப் போலிருக்க நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்.

கைப்பிடிச்சுவரில் அமர்ந்து, மறுபடி மறுபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது கோழி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *