ஜல சமாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 6,849 
 

அவள் பெயர் தாரிணி. வயது நாற்பத்திரண்டு. இருபது வயதில் அவளுக்கு தன் சொந்த மாமாவுடன் திருமணமானது. அவர்பெயர் ஸ்ரீராமன். பண்பானவர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவர்கள் இருவரும் மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கின்றனர்.

தாரிணி கொடுத்து வைத்தவள்தான். பெங்களூரில் மத்திய அரசாங்க உத்தியோகத்தில் கெசடட் ஆபீசராக கை நிறைய சம்பாதிக்கும் பண்பான கணவர். அமெரிக்காவில் படிக்கும் இரண்டு மகன்கள். வாழ்க்கை மிக சொகுசாக, அற்புதமாக, அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. செல்வச் செழிப்புடன் வாழ்க்கை அமைதியாக இருந்தால், நம்மில் சிலருக்கு அது ஒத்துக் கொள்வதில்லை. ஏதாவது பெரிய தவறுகளில் ஈடுபட்டு வம்பில் மாட்டிக் கொள்வோம். இப்படிப் பட்டவர்கள் சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்பவர்கள்.

தாரிணி கோதுமை நிறத்தில் நல்ல கலர். பளபளன்னு உடம்பு கட்டுக் குலையாது வளப்பமாக எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள். கண்டிப்பாக அவள் நல்ல அழகுதான். அவள் எங்கு சென்றாலும் ஆண்கள் அவளை உத்து உத்துப் பார்த்து பெருமூச்சு விட்டனர். பலர் அவளுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வதற்காக, அவள் கணவர் ஸ்ரீராமனுடன் தொடர்பில் இருக்க முயன்றனர். அவர் பாவம் அப்பாவி. அவர்கள் அவரைப் பார்க்கும் சாக்கில் வீட்டுக்கு வந்தால், “தாரி சாருக்கு காப்பி போட்டுக்கொண்டா…” என்று வந்தவர்களை வெகுளியாக உபசரிப்பார்.

தாரிணிக்கும் தான் ரொம்ப அழகு என்கிற இறுமாப்பு சின்ன வயதிலிருந்தே அதிகம். பல வயசுப் பையன்கள் அவளை அப்போது அடிக்கடி சுத்தி, சுத்தி வந்தாலும், மாமா என்கிற உரிமையில் ஸ்ரீராமனுக்கே தாரிணியை மணம் செய்து கொள்ளும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

தாரிணி இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் வீட்டின் அருகே இருந்த பெருமாள் கோவிலுக்குப் போயிருந்தபோது, முதன் முதலாக சாரங்கனை பார்த்தாள். அவளுக்கு அவனைப் பார்த்ததும் பிடித்துப் போயிற்று. இன்று வரை ஏன் என்று அதற்கு காரணம் தெரியவில்லை.

பொதுவாக ஸ்ரீராமன் கோவிலுக்குப் போவதில்லை. உண்டியல் எண்ணுபவர்களை மேற்பார்வை பார்க்க, மாதம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குப் போவார். அத்துடன் சரி.

சாரங்கனுக்கு வயது நாற்பது. தாரிணியைப் பார்த்ததும் அவனுக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. அதற்கு காரணம் அவளின் அழகு. பெங்களூரில் ஒரு பிரபல மல்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் ஜெனரல் மானேஜராக இருக்கிறான். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

சாரங்கனுக்கு தான் பார்க்கும் எல்லா பெண்களும் அழகுதான், அழகு இல்லை என்று எந்தப் பெண்ணும் உலகில் கிடையாது, உடம்பு அழகு மட்டுமே அழகல்ல, அதற்கும்மேல் அவர்களுக்கு மனசு என்று ஒன்று உண்டு. எல்லாப் பெண்களுக்குமே மனசு ரொம்ப அழகு என்பான். அதனால் அவன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தான். பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருந்தான். சிரிக்க சிரிக்க பேசுவான்.

சாரங்கனும், தாரிணியும் அடிக்கடி பெருமாள் கோவில் பிரகாரத்தில் சந்தித்தனர். அந்த சந்திப்புகள் மெல்ல விரிவடைந்து, மல்லேஸ்வரம் ஷாப்பிங் மால், தியேட்டர்களில் வளர்ந்து, அருகே இருக்கும் ஊர்களின் ஏ.ஸி. ஹோட்டல்களில் ரகசியமாக வேறு வேறு பெயர்களில் ரூம் எடுத்து தங்கும் அளவிற்கு அன்னியோன்னிய நெருக்கத்தில் தொடர்ந்தது.

தாரிணியும், சாரங்கனும் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக ஈர்க்கப்பட்டனர். அதில் மாய்ந்து மாய்ந்து இருவருக்கும் ஒரு லயிப்பும் வற்றாத ஆசையும் பெருக்கெடுத்தது. அவளுக்கு தன் கணவன் தராத சுகத்தையும், அவனுக்கு தன் மனைவி தாராத சுகத்தையும் கற்பனை வளத்துடன் ஒருவரிடம் ஒருவர் கேட்டு கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

தனக்கு திருமணமாகி இத்தனை வருடங்களாக இவ்வளவு தூரம் கற்பனையுடன் கூடிய ரம்மியமான புரிதல்களை தன் கணவனிடம் உடல்ரீதியாக அனுபவித்ததில்லை என்றும், சாரங்கன் மூலமாகத்தான் தனக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது என்றும், தாரிணி அடிக்கடி சாரங்கனிடம் பெருமைப்பட்டுக் கொண்டாள். அவனும் தன் மனைவி தனக்கு ஈடுகொடுப்பதில்லை என்றும், தாரிணிதான் அள்ளி அள்ளி வழங்குவதாக அவளைப் புகழ்ந்தான்.

இவ்வாறு இருவரும் அடிக்கடி கள்ள உறவில் லயித்திருக்கையில், தினமும் பெருமாள் கொவிலுக்கு வரும் மைதிலி, ஒருநாள் தாரிணியையும் சாரங்கனையும் ஒருசேர மைசூரில் ஒரு ஹோட்டல் லாபியில் பார்த்துவிட்டாள். அதைப் பார்த்த தாரிணி, தன் முகத்தை திருப்பிக்கொண்டு அவளைப் பார்க்காத மாதிரி சென்றுவிட்டாள். அவள் ஒருவிதத்தில் ஸ்ரீராமனுக்கு தூரத்து உறவு வேறு. மேலும் பெருமாள்கோவில் பிரகாரத்தில் தாரிணி சாரங்கனுடன் பேசிக் கொண்டிருப்பதை அடிக்கடி பார்த்திருக்கிறாள்.

மைசூர் ஹோட்டலில் சாரங்கனுடன் இவளுக்கு என்ன வேலை என்று நினைத்தவள், அடுத்த கணமே ஸ்ரீராமனுடன் மொபைலில் தொடர்பு கொண்டு, “நான்தான் மைதிலி பேசறேன், தாரிணி எங்கே ?” என்றாள்.

“அவ ப்ரெண்டு டாட்டர் கல்யாணம்னு சொல்லி நேத்திக்குதான் சென்னை போனாள். திரும்பிவர ரெண்டு நாள் ஆகும் மைதிலி….நீ எப்படிம்மா இருக்கே?”

“உங்கள்ட்ட நன்னா பொய் சொல்லிருக்கா…. அவ இப்ப மைசூர்ல இருக்கா. ஒரு ஹோட்டல்ல நம்ம கோவிலுக்கு வரும் சாரங்கனோட கூத்தடிச்சிண்டு இருக்கா. அவகிட்ட உடனே பேசுங்கோ, நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளுங்கோ. கண்றாவி… இந்தக் கலியுகத்துல இன்னும் என்னவென்ன அசிங்கம் பாக்கி இருக்கோ?”

ஸ்ரீராமன் உடனே தாரிணியின் மொபைலுக்கு போன் செய்தார். அது கன்னடத்தில் “தற்போது சுவிச்டு ஆப்” என்றது.

அவள் சென்னை சென்றிருந்தால் தமிழில் அல்லவா மெசேஜ் சொல்ல வேண்டும்? மைதிலி சொன்னது உண்மைதான் போலும். கடந்த இரண்டு வருடங்களாக அவள் தன்னிடமிருந்து முற்றிலுமாக விலகிப் படுப்பது அவருக்கு சந்தேகத்தை மேலும் உறுதி செய்தது.

திருமணமான இத்தனை வருடங்களில் முதன் முறையாக தாரிணியின் வாட்ரோபை திறந்து சோதனையிட்டார். அவள் புடவையினூடே மூன்று போட்டோக்கள் தென்பட்டன. எடுத்துப் பார்த்தார். அனைத்திலும் அவளும், சாரங்கனும் ஈஷியபடி சிரித்துக் கொண்டிருந்தனர். மறுபடியும் போட்டோக்களை அதே இடத்தில் வைத்து கதவைச் சாத்தினார்.

ஸ்ரீராமனுக்கு சிறிதும் நம்ப முடியவில்லை. ‘தன் அருமை மனைவியா இப்படி? இவள் குழந்தையாகப் பிறந்ததிலிருந்தே பாசமுடன் தூக்கி வளர்த்தேனே…மாமா மாமா என்று என்னை வெகுளியாக சுத்தி வந்தாளே !
இவளுக்கு நான் என்ன குறை வைத்தேன்? தேகசுகத்திற்காக ஒருத்திக்கு உடம்பு இவ்வளவு தூரம் அலையுமா?’

மறுநாள் தாரிணி வந்தாள். ஸ்ரீராமனிடம் “மைசூரில் ஒரு தமிழ்ப்பட ஷூட்டிங் இருந்தது. சாரங்கனும் அதன் ப்ரொட்யூசரும் ப்ரெண்ட்ஸ். அதனால நான் மைசூர் போனேன்.” என்று அவளாகவே ஆரம்பித்தாள்.

“அத நீ நேரடியா எங்கிட்ட சொல்லலாமே…எதுக்கு சென்னை போனதா பொய்சொன்ன?”

“உணமையைச் சொல்லி பர்மிஷன் கேட்டா நீங்க தர மாட்டேள்…அதுனால போனேன். சாரங்கன் சார் என்னை ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு அவர் ப்ரொட்யூசருடன் தங்கிக்கொண்டார். ஹோட்டல் லாபில எங்களைப் பார்த்துட்டு மைதிலி போன் பண்ணாளாக்கும்.”

அவர் கோபத்தில் பதில் பேசவில்லை. அன்று சாப்பிடாமல் போய் படுத்துக்கொண்டார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராமன் கோவில் உண்டியல் எண்ணுபவர்களை மேற்பார்வையிட காலையில் பெருமாள் கோவிலுக்குப் போய்விட்டு, பிற்பகலில் வீடு வந்தபோது அவரது பெட்ரூம் படுக்கைவிரிப்பு கலைந்திருந்தது. கண்டிப்பாக யாரோ வந்து போயிருக்கிறார்கள்.

“தாரி, யார் வந்தா?”

“யாருமே வரவில்லை….நான்தான் சித்த நேரம் ஏ.ஸி. போட்டுண்டு பெட்ரூமில் படுத்துக் கொண்டிருந்தேன்.”

அன்று மதியம் மூன்று மணிக்கு ஏதோ போன் வந்தது. உடனே தன்னை அழகாக அலங்கரித்துக்கொண்டு, மல்லேஸ்வரம் போவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ஸ்ரீராமன் உடனே தன் வீட்டின் எதிரே தள்ளு வண்டியில் துணிகளை ஐயர்ன் பண்ணிக் கொண்டிருந்த முத்துவிடம் சென்று, “காலைல வீட்டுக்கு யார் வந்தா?” என்றார்.

“அதாங்க எப்பவும் வருவாரே உங்க சொந்தக்காரரு…அந்த ஒயிட் கலர் மாருதி காரு.”

ஸ்ரீராமன் விறுவிறுவென வீட்டினுள் சென்று வாட்ரோபைத் திறந்து, அதில் ஒரு புகைப்படத்தில் இருந்த தாரிணியை கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு,
சாரங்கனை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து முத்துவிடம் காண்பித்து, “இவரா வந்தாரு?” என்றார்.

“ஆமாங்க இவரேதான்.”

ஒரு முடிவுடன் வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்தினார்.

=-=௦௦==

மாலை ஐந்து மணிக்கு தாரிணி வீட்டிற்கு வந்தாள்.

ஐயர்ன்காரன் முத்து ஓடிவந்து, “அம்மா இத ஐயா உங்கள்ட்ட குடுக்கச் சொன்னாரு.” என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.

தாரிணி அதை பிரித்து உள்ளிருந்த கடிதத்தை படித்தாள்.

‘எனக்கு எல்லாம் தெரியும். நான் வீட்டைப்பூட்டி விட்டேன். உன்னிடம் சாவி கிடையாது. தோட்டத்தில் உன்னுடைய பெட்டியையும் அதனுள்ளே பத்தாயிரம் பணமும் வைத்துள்ளேன். மனித மலம் தின்று, சாக்கடையில் புரளும் பன்றியைவிட கேவலமானவள் நீ.

உன்னுடன் வாழ்ந்த பாவத்தை நான் காசிக்கு சென்று கழுவிக்கொள்வேன்.’

தாரிணி அதிர்ந்தாள். கேட்டைத் திறந்து உள்ளே தோட்டத்தில் இருந்த அவளது சூட்கேஸை திறந்து பார்த்தாள். அதனுள் சில புடவைகளும், உள்ளாடைகளும் பத்தாயிரம் பணமும் இருந்தன. ஸ்ரீராமன் மொபைலுக்கு அடித்தாள். அது ஸ்விட்ச்டு ஆப் என்றது.

உடனே சாரங்கனுக்கு போன் பண்ணி, “சாரு அவரு வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்ட்டாரு…எனக்குப் பயமா இருக்கு. நான் உடனே உன்னைப் பார்க்கணும்.” என்றாள்.

சாரங்கன் உடனே சுதாரித்துக் கொண்டான். எத்தனை பெண்களைப் பார்த்திருப்பான்?

“இப்ப என்னால வீட்டைவிட்டு வர முடியாது. நாளைக்கு காலைல ஆபீஸ் விஷயமா மும்பை போகிறேன்….வந்து போன் பண்ணுகிறேன்.”

“இன்னிக்கி ராத்திரி நான் எங்கபோய் தங்குவேன்?”

“நீ எப்படியாவது மானேஜ் பண்ணு. முதலில் அவரைத் தேடிக் கண்டுபிடி.”

தாரிணி உடனே காசிக்குச் செல்ல முடிவு செய்தாள். அவரை நேரில் பார்த்து கைல கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அவருடன்தான் திரும்பி வரவேண்டும்.

டெல்லிக்கு அடுத்த ப்ளைட் இரவு எட்டு மணிக்கு. மணி இப்ப ஐந்தரை. உடனே ஊபர் டாக்ஸி பிடித்து ஏர்போர்ட்டுக்கு சென்று டிக்கட் வாங்கிவிடலாம். டெல்லி சென்று அங்கிருந்து காசிக்கு காரில் சென்றுவிடலாம். கையில் கிரிடிட் கார்டும், பத்தாயிரம் பணமும் இருக்கிறது.

உடனே செயல் பட்டாள்.

அடுத்த மூன்று நாட்களும் ஸ்ரீராமனை காசியில் எல்லா இடங்களிலும் தேடினாள். அவர் கிடைக்கவில்லை. காசியில் இருக்கும் பல ஆண்கள் தாரிணியை மொய்த்தார்கள். அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு அழகான பெண் தனியாக ஹோட்டலில் தங்கியபடி தினமும் வெளியேசென்று வருவது எவ்வளவு துன்பகரமானது என்பதை உணர்ந்தாள்.

நான்காவது நாள், அந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கவும், ஸ்ரீராமன் தன்னை அடையாளம் கண்டுகொண்டு ஓடி விடாமல் இருக்கவும், தனக்கு மொட்டை அடித்துக்கொண்டாள்.

ஆறுநாட்கள் சென்று விட்டன.

அவர் இல்லாமல் தான் தனியாக இனிமேல் எங்குபோவது என்று திகைத்தாள். அன்று இரவு, சாரங்கனுடன் தான் அடித்த கூத்துக்களை எண்ணிப் பார்த்து மிகுத்த வேதனையடைந்தாள். தூக்கம் வராது படுக்கையில் புரண்டாள். கண்ணீர் விட்டு அழுதாள். தனக்குள் புலம்பினாள்.

மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு எழுந்தாள். இருட்டில் விறு விறுவென கங்கைநதியை நோக்கி நடந்தாள். கங்கை இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு பிரவாகமெடுத்து ஓடியது. அந்த இருட்டில் அதைப் பார்த்தபோது அமானுஷ்யமாக இருந்தது.

மனதை திடமாக்கிக்கொண்டு படித்துறையில் இறங்கி கங்கையில் மூழ்கினாள் தாரிணி. கங்கை அவளை உள்வாங்கிக் கொண்டது.

ராஜதானியில் டெல்லி வந்து அங்கு சில கோவில்களுக்குப் போய்விட்டு, அன்று விடிகாலை காசிக்கு வந்த ஸ்ரீராமன், ஒரேயடியாக தாரிணியை தலை முழுகிவிட எண்ணி, அங்கிருந்த சாஸ்திரிகளின் உதவியுடன், காலை எட்டு மணிக்கு பிண்டம் வைத்து, கங்கை நதியில் நின்றுகொண்டு அவளுக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பிணம் அவர் கால்களை தொட்டுவிட்டுச் சென்றது. கங்கையில் அது இயல்புதான் என்பதால் சாஸ்திரிகள் அதை அலட்சியப் படுத்திவிட்டு மந்திரங்களைத் தொடர்ந்தார். ஸ்ரீராமனும் மிகுந்த ஈடுபாட்டுடன் சிரத்தையாக மந்திரங்களைச் சொன்னார்.

அது, மொட்டையடித்த பெண்ணின் பிணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *