கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 6,575 
 

சென்னையின் பரபரப்பான தி.நகரில், பெண்கள் பலர் தங்கியிருக்கும் கட்டுப்பாடுகளற்ற ஒரு விடுதி அது.

மாதம் ஏழாயிரம் கொடுத்து கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். ஒரே ரூமில் நான்கு பெண்கள்.

மிகப் பெரும்பாலோர் கல்யாணமாகாத இளம் வயதுப் பெண்கள்.

அவரவர் கைகளில் மொபைல் இருப்பதால், ரூமுக்கு வந்தவுடன், தங்களுடைய பாய் பிரண்டுகளுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்து அவர்கள் அழைத்ததும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

இம் மாதிரியான ரகசியப் பேச்சுக்கள் இரவுச் சாப்பாட்டின் போதும், அதைத் தொடர்ந்து தூங்கப்போகும் வரையில் தொடரும். சற்று பயந்த பெண்கள், பேசும் போது ரூம் மேட்ஸ் எவரும் சந்தேகப்படாமல் இருக்க, ‘போடி, வாடி’ என்று சொல்லி நடிப்பார்கள். உடன் தங்கி இருக்கும் பெண்களும் இவர்கள் நடிப்பை நம்பிவிட்ட மாதிரி பாவ்லா காட்டுவார்கள்.

சற்று தைரியமான பெண்கள், பேசிமுடிந்ததும் “யப்பா சரியான ஜொள்ளு பார்ட்டி….எப்படி வழியராணுங்க” என்று அவர்களைப்பற்றி கமென்ட் வேறு அடிப்பார்கள். மற்ற பெண்கள் ஒருவரையொருவர் மெளனமாகப் பார்த்து கண்களால் கிண்டலாக சிரித்துக் கொள்வார்கள்.

சில மாதங்களுக்கு முன் இந்த விடுதியில் சேர்ந்துகொண்ட கற்பகத்திற்கு இவை அனைத்தும் வேடிக்கையாக இருந்தது. கற்பகம் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியில் அட்மின் அசிஸ்டெண்ட். தற்போது எம்.ஏ. ஆங்கில இலக்கியம் தபால் மூலம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அந்த விடுதியில் கற்பகம் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று எப்போதும் ஒதுங்கி இருப்பவள். இதுவரை அவளுக்கு பாய் பிரண்டு எவரும் கிடையாது. அதுபற்றி அவளுக்கு ஆர்வமும் இல்லை. அவள் மொபைலில் இதுவரை அவள் அம்மா, அப்பா தவிர உறவினர்கள் மட்டும்தான் பேசியிருக்கிறார்கள்.

அதுதவிர அவளது சென்னை கார்டியன் மல்லிகா அக்கா எப்போதாவது அவளிடம் பேசுவாள். சென்னைக்கு வந்த புதிதில் அவள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாள். அம்மாவின் பஜனை மண்டலியில் ஒரு நண்பர் மூலமாக அறிமுகம். ஒரே ஊர்க்காரி, ஒரே ஜாதி என்பதால் இவளிடம் ரொம்ப வாஞ்சையுடன் பழகுவாள். மற்றபடி மல்லிகா அக்காவை வீட்டில் யாரும் பார்த்ததில்லை. .

கற்பகத்தை பொறுத்தவரை மொபைல் போன் வைத்துக் கொள்வது, ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு மட்டும்தான். இரவு பத்து மணியானால் மொபலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தூங்கிவிடுவாள்.

அந்த விடுதிப் பெண்கள் கற்பகத்தை ஒரு அதிசயப் பிறவியாகப் பார்த்தனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை கற்பகம் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தாள். அப்போதுதான் எழுந்திருந்து சோம்பல் முறித்த ரூம்மேட்ஸ் அவளை அதிசயமாகப் பார்த்தனர்.

தான் கொண்டுவந்திருந்த கோவில் பிரசாதம் ஒரு தொன்னை நிறைய சூடான சர்க்கரைப்பொங்கலை அவர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அனைவரும் பல்கூட தேய்க்காமல் போட்டி போட்டுக்கொண்டு அதை விரல்களினால் வழித்து எடுத்துச் சாப்பிட்டனர். பின்பு விரல்களை நக்கி விட்டுக்கொண்டனர். “யம்மி, யம்மி” என்றனர்.

ரூம்மேட் தீபா, “ரொம்ப தாங்க்ஸ் கற்பு….உன்னைக் கட்டிக்கப் போறவன் கொடுத்து வச்சவன்….உன்னோட அமைதியும், அழகும், சுறுசுறுப்பும் எனக்கே உன்ன கட்டிக்கணும்னு ஆசையாத்தான் இருக்கு, ஆனா நான் ஆம்புளையா பொறக்கலியே” என்றாள்.

மற்ற இரண்டு ரூம்மேட்ஸ்களும் பெரிதாகச் சிரித்தனர். கற்பகமும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.

தீபா தொடர்ந்து, “உனக்கு பாய்பிரண்ட் இல்லியா கற்பகம்?” என்றாள்.

“இல்ல தீபா, எனக்கு அது இப்ப அவசியம்னு தோணல…கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவர பாய்பிரண்ட்டா ட்ரீட் பண்ணா போச்சு.”

“மொபைல் போனை வச்சுகிட்டு பாய்பிரண்ட் நம்பர் வச்சிக்காம இருக்கீங்களே, மொபைலுக்கு வாய் இருந்தால் அழும்… என்ன பொண்ணு நீங்க? உங்களுக்கு என்ன குறைச்சல்? பருப்பு இல்லாத சாம்பாரும், பாய்பிரண்ட் நம்பர் இல்லாத மொபைல்போனும் சுவைக்காது கற்பு…”

அப்போது தீபாவின் மொபைல் ஒளிர, அதை காதலுடன் எடுத்து, “சொல்லுடா கண்ணா” என்றாள்.

அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை யுனிவர்சிட்டியின் எம்.ஏ.கான்டாக்ட் கிளாஸ் ஒரு கல்லூரியில் நடைபெற்றது.

அங்குதான் முதன் முதலாக கற்பகம் வசீகரனைச் சந்தித்தாள்.

வசீகரன் பெயருக்கேற்ற மாதிரி அழகாக இருந்தான். அவனும் எம்.ஏ லிட்டரச்சர் படிக்கிறானாம். ஒரு பிரபல தனியார் கம்பெனியில் ஹெச்.ஆர் எக்சிகியூட்டிவ்வாக பணி புரிகிறானாம். அவனது விசிட்டிங்கார்டை எடுத்து நீட்டினான். பாலவாக்கத்தில் சொந்த வீடாம். ஒரே பையனாம்.

கான்டாக்ட் கிளாஸ் முடிவதற்குமுன் நிறையப் பேசினான். இருவரும் அடுத்தவர்களின் மொபைல் நம்பரை வாங்கி சேமித்துக் கொண்டார்கள். கிளாஸ் முடிந்ததும் கற்பகத்தை மிகவும் வற்புறுத்தி தன்னுடைய சான்ட்ரோ காரில் அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பாலவாக்கத்தின் பீச் ரோடில் பெரிய வீடு. அவனுடைய அம்மாவும் அப்பாவும் கற்பகத்தை மிகவும் மரியாதையாக நடத்தினர். பரிவுடன் பேசினர். அவளைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டனர். தங்களுடைய ஒரேமகன் வசீகரனின் விருப்பம்தான் தங்களுடைய விருப்பமும் என்றனர்.

நன்கு இருட்டிவிட்டது. மணி எட்டாகி விட்டது. வசீகரனின் தந்தையே தன்னுடைய மாருதி காரை ஒட்டிக்கொண்டு வந்து கற்பகத்தை அவளது விடுதியில் பொறுப்பாக இறக்கிவிட்டார். வசீகரனே தன்னை மறுபடியும் கொண்டுவந்து விட்டிருக்கலாமே என்று நினைத்தாள்.

அடுத்த பத்து நாட்களுக்கு வசீகரனிடமிருந்து போன் எதுவும் வரவில்லை.

தன்னுடைய மொபைலை எடுத்து அவன் நம்பரையே இரண்டு மூன்றுமுறை பார்த்தாள். வசீகரன் அவள் மனதில் அடிக்கடி அலையடித்தான். அவனை நினைத்து தவித்தாள். பின்பு தன்னையே கடிந்துகொண்டாள்.

பதினோராம் நாள் மாலை ஏழுமணிக்கு வசீகரனிடமிருந்து போன் வந்தது. மொபைலில் அவன் நம்பர் ஒளிர்ந்ததும் அவள் உள்ளம் குதூகலத்தில் விம்மியது. நல்ல வேளையாக ரூமில் யாரும் இல்லை. “ஹலோ” என்றாள்.

அவன் மிகவும் கண்ணியத்துடன் அவளிடம் பாட சம்பந்தமாக ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் காதல் பற்றி நிறைய பேசினான். அவளுக்கு மனசெல்லாம் கிளுகிளுப்பாக இருந்தது. அதன்பிறகு அடிக்கடி பேசினான்.

ஒருநாள் அவன் வீட்டிற்கு அவளை படிக்க அழைத்தான். அவளும் மறுக்காது சென்றாள். வீட்டில் யாரும் இல்லை. திருப்பதி சென்றுவிட்டார்களாம், எக்ஸாம் வருவதால் இவன் போகவில்லையாம்.

அன்று கிடைத்த தனிமையில் அவன் அவளை காதலிப்பதாகச் சொன்னான். அவன் குடும்பப் பின்னணி, தவிர சிகரெட், மது போன்ற எந்தவித கெட்ட பழக்கங்களும் அவனுக்கு இல்லாததால் கற்பகம் அவனிடம் தன் மனதை பறிகொடுத்தாள். தனிமையில் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டதை எண்ணி வியந்தாள்.

அடுத்த வாரம் கற்பகம் அவன் வீட்டிற்கு படிக்கச் சென்றபோது வீட்டில் உள்ளவர்கள் ஏற்காடு சென்றிருந்தனர். தனிமை தந்த தைரியத்தில் வசீகரன் கற்பகத்தை இழுத்து அணைத்து முத்தமிட்டான். பின்பு அவளைத் தழுவினான். கிசுகிசுப்பான குரலில் “கற்பகம், ப்ளீஸ் ஐ நீட் யூ” என்றான். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. அந்தக் கணநேர உசுப்புதல்களில் இருவரும் லயித்து ஏகாந்தமாக சங்கமித்தார்கள்.

விடுதிக்கு திரும்பியவுடன் அவளுக்கு குற்ற உணர்ச்சி அதிகமானது. தான் ஏமாந்தது மட்டுமல்லாது தன் பெற்றோர்களின் நம்பிக்கையையும் சீரழித்துவிட்டதை எண்ணி வருத்தமடைந்தாள்.

மறுநாள் வசீகரனுக்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. நான்கு தடவைகள் போன் செய்தப்புறம், “என்ன வேணும் சொல்லு” என்றான். கற்பகத்துக்குப் புரிந்துவிட்டது அவன் தன்னை அவாய்ட் பண்ணுகிறான் என்று.

அவள் அன்று மாலை போன் செய்தபோது விட்டேத்தியாக “உனக்கு என்னதான் வேணும் சொல்லு” என்றான்.

“ப்ளீஸ் வசீகரன் உங்களை நம்பி என்னையே நான் உங்களுக்கு தந்தேன். நான் உங்களை உடனே பார்க்கணும்.”

“டோன்ட் வேஸ்ட் மை டைம்…எங்கிட்ட உரிமை எதுவும் கொண்டாடாத..”

அன்று மாலை அவன் வீட்டிற்கே சென்றாள். வீட்டில் வசீகரன் இல்லை. ஆனால் அவன் அம்மா இவளிடம் சகஜமாக பேசத் தொடங்கினாள்.

கற்பகம் எதையும் மறைக்காமல் நடந்தது அனைத்தையும் அவளிடம் கூறினாள்.

அவள் ரொம்ப சாதாரணமாக, “இது அவனோட பர்சனல் மேட்டர். அவன் முடிவுதான் எங்க முடிவும்…இருந்தாலும் அவன்கிட்ட பேசறேன்” என்றாள். கற்பகம் வாழ்க்கையே வெறுத்துப் போனாள்.

அவன் விஸிட்டிங்கார்டை எடுத்துக்கொண்டு ஆபீஸ் போனால், அந்த வேலையை விட்டுப்போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்றார்கள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மல்லிகா அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், அதற்கு தானும் உடந்தை என்கிற உண்மைகளைச் சொல்லி அழுதாள்.

மல்லிகா அவளை சமாதானப்படுத்தி முதலில் அழுகையை நிறுத்தச் சொன்னாள். பின்பு நிதானமாக,

“உன் மன ஓட்டத்தை மோப்பம் பிடித்து, உன் வழியிலேயே சென்று உன்னை படுக்கையில் வீழ்த்திவிட்டான் வசீகரன். நீ அவனிடம் சோரம் போய்விட்டாய். அவனது நோக்கம் நிறைவேறிய அடுத்த கணம், உன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டான். அவ்வளவுதான்.

பொம்பள சிரிச்சா போச்சு, புகையில விரிச்சா போச்சு என்பது உன் விஷயத்தில் உண்மை. இந்தக் காலத்து இளசுகள் மிஸ்டு கால் கொடுத்து ஆண்களைத்தான் பைத்தியமாக அலைய விடுவார்கள். அவனைக் கெஞ்ச விட்டு, அதன்பின் சினிமா, பீச் போவார்கள். முத்தமிட, சற்று உரசிக்கொள்ள அனுமதிப்பார்கள். மிஞ்சிப்போனால் தனிமையில் ஸ்மூச் பண்ணுவார்கள். நீ அதையெல்லாம் செய்யாது தலைவாழை இலைபோட்டு ஈடுபாட்டுடன் ஒரு முழு படையலே அவனுக்கு படைத்திருக்கிறாய்.

“இனி உன் குற்ற உணர்ச்சி அர்த்தமற்றது. நடந்ததை ஒரு கெட்ட கனவாய் மறந்துவிட்டு அடுத்து ஆகவேண்டியதைப் பார். நீ கற்பிழந்த விஷயம் உன் வருங்கால கணவருக்குத் தெரியாது. உன் பெற்றோர் பார்த்துவைக்கும் பையனை திருமணம் செய்து வாழ்வில் சீக்கிரம் செட்டிலாகிவிடு. முதல்தடவை என்பதால் இது கர்ப்பத்தில் முடிய வாய்ப்பில்லை. உணர்ச்சிப் பூர்வமாக இதை அணுகாமல், அறிவுபூர்வமாக அணுகு. இதை வேறு யாரிடமும் சொல்லிவிடாதே.” என்றாள்.

மூன்று மாதங்கள் சென்றன. கற்பகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாள்.

அந்த ஞாயிறு காலை மல்லிகா அக்காவுக்கு மொபைல்போன் செய்தாள். சுவிட்சுடு ஆப் என்றது. லேண்ட்லைன் பண்ணியபோது அவளது கணவர் “மல்லி நெல்லை போயிருக்கிறாள், திரும்பிவர இரண்டு வாரங்கள் ஆகும்” என்றார்.

வெள்ளிக்கிழமை மதியம் கற்பகத்தின் அப்பா போன் செய்து, ஒரு நல்ல வரன் வந்திருப்பதாகவும், ஞாயிறு காலை அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள் எனவும், சனி, ஞாயிறு திருநெல்வேலியில் இருக்கும்படி அவளை வரச்சொன்னார். கற்பகம் உடனடியாக விரைந்தாள்.

ஞாயிறு காலை பதினோரு மணிக்கு இரண்டு கார்களில் பிள்ளை வீட்டார் வந்தனர். அவர்களுடன் வந்த மல்லிகா அக்காவைப் பார்த்ததும் கற்பகத்துக்கு தூக்கி வாரிப்போட்டது.

மல்லிகா இயல்பாக, “எப்படி இருக்க கற்பகம்? என்னோட சித்தி பையனுக்கு பெண் பார்க்க நானும் கூட வந்தேன்.” என்றாள்.

கற்பகம் தன் தந்தையிடம், “இவங்கதாம்பா மல்லிகா அக்கா. சென்னைல முதல் இரண்டு நாட்கள் இவங்க வீட்லதான் தங்கினேன்.” என்றாள்.

மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் வீட்டில் உற்சாகமாக மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும்போது, மல்லிகா “நாங்க எல்லோரும் கலந்து பேசி முடிவு பண்ணனும்…. வீட்டுக்குப்போய் சாயங்காலம் போன் பண்ணுகிறோம்” என்றாள்.

நான்குமணிக்கு போன் வந்தது. “பையன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான்” என்று.

கற்பகத்தின் அப்பா கடுப்பாகி, “அப்ப என்ன மயிருக்கு இங்க வந்தானாம்?” என்றார். கற்பகத்துக்கு இது மல்லிகா அக்காவின் உள்குத்து என்பது புரிந்துவிட்டது.

எனினும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மல்லிகா அக்கா வீட்டுக்குச் சென்றாள்.

“வா கற்பகம்…எனக்கு உன்னப்பத்தி எல்லாம் தெரியும். அதுனால என் தம்பிக்கு உன்னைக் கட்டிக்கொடுக்க எனக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை. அதனால நீ திமிரு பிடிச்சவ, கோபக்காரி, சண்டைக்காரி ஒரு நல்ல குடும்பத்துக்கு நீ லாயக்கில்லை என்று பொய்சொல்லி இந்த சம்பந்தத்தை முறித்தேன்….. என்னை மன்னித்துவிடு” என்றாள்.

கற்பகம் பரிதாபமாக ஈனமான குரலில், “வேறு எதுவும் என்னைப்பற்றி சொல்லலியே அக்கா?” என்றாள்.

“ச்சீ…ச்சீ இதெல்லாம் போய் சொல்லுவாங்களா…அப்புறம் என்னப்பத்தி என்ன நினைப்பாங்க?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *