சொல்லவந்த ஏகாதசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 7,277 
 

ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் அந்த மரத்தில் காலை நேரத்தில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் . பின்புறம் பம்பிங்க் ஸ்டேஷனும் அதைத்தொடர்ந்து நாங்கள் அதிகம் பார்க்கக்கிடைக்கும் நத்தைகள் ஊறும் யானைப்புல் காடும் நீண்டிருக்கும். புளியமரம் ஆயிரம் வருஷங்களாக அங்கிருப்பதாகவும் அதில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்தவர்களும் குறைந்தது ஆயிரம்பேர் எனவும் ” வெள்ளெலி ” ரவிச்சந்திரன் புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறான். வருஷத்திற்கு ஒருவர் என வைத்துக்கொண்டாலும் ஆயிரம் என்பது சரியான கணக்குதான் என ஸ்கூல் முதல் மாணவன் குணா அதை அங்கீகரித்துவிட்டதால், எல்லோரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை ஒப்புக்கொண்டு அந்தப் பக்கம் தேவையில்லாமல் அதிகம் போகமாட்டோம். காலையில் மாட்டுக்குப் புல்வாங்க அந்தப்பக்கம் போகும்போதுகூட, புளியமரத்தைத் தாண்டும் சமயத்தில், எங்களது மானசீக மோட்டர் பைக்கில், அதிக சத்தத்துடனும் அதிவேகத்துடனும் நானும் என் தம்பியும் விரைவோம். ஒரு காலாண்டுத் தேர்வில், என் தம்பி இரண்டு சப்ஜெக்ட்டுகளில் ஃபெயிலாகிவிட ப்ராக்ரெஸ் ரிபோர்ட் வரும்போது, அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி அக்குளில் வெங்காயத்தை வைத்துக்கொண்டு செயற்கை ஜுரத்தை வரச் செய்து கண்கள் செருக நின்று அப்பாவிடம் “சிம்ப்பதி” வோட் வாங்கி ஜெயித்துவிட்டான். அதோடு மட்டுமில்லாமல், ஃபெயிலான சப்ஜெக்ட்டுகளின் பரீட்சை அன்று, அந்தப் புளியமரம் தாண்டிப்போய் யானைப் புல் வாங்கி வரும்போது யாரோ “அடித்தது ” மாதிரி இருந்ததால் தேர்வுகளை ஒழுங்காக எழுதமுடியாமல் போனதாகச் சொல்லி, செய்துகொண்டிருந்த ஒரே வீட்டுவேலையிலிருந்தும் ‘ எக்செம்ப்ஷன் ‘ வாங்கிவிட்டான்.

ஆனால், எனக்கு அந்தப் புளியமரத்தை விடமுடியவில்லை. புளிய மரத்திற்குப் பக்கத்தில் அதன் ஒன்றுவிட்ட அண்ணா பையன்போல் ஒரு கொடுக்காய்ப்புளி மரமும் இருக்கும். அதற்கு அவ்வளவு வயசானதாக வெள்ளெலி ஒன்றும் சொல்லவில்லை. அதன் காய்களின் சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றுதான் எங்களுக்கு அப்போது தோன்றியது. அந்தக் காய்கள் திண்பதற்கு மட்டுமின்றி, அதன் விதைகள் முழுப் பரீட்சையில் ஒரிஜினல் ரிசல்ட் வருவதற்குமுன் எங்கள் தலைவிதி எப்படி இருக்கும் என டாஸ் போட்டுக் கண்டறிவதற்கும் பயன்பட்டுக்கொண்டிருந்தது. பக்கத்து சீட் சங்கரன், பழத்தை எங்களிடம் கொடுத்துவிட்டு, விதைகளாகச் சேர்த்துவைத்துக்கொண்டு மணிக்கொருதடவை ரிசல்ட் பார்த்துக்கொண்டிருந்தான். பாதிக்குப் பாதி, பாதிப்பான ரிசல்ட்வர ஒரிஜினல் ரிசல்ட் வரைக்கும் ரொம்ப நெர்வசாக இருந்தான். கூடவே அரளி விதைகளையும் ரகசியமாகச் சேர்த்துக்கொண்டிருப்பது எங்கள் ஹெட்மாஸ்டர் வரைக்கும் தெரிந்திருந்தது. அவன் உயரத்திற்கு அவன் எப்போதோ காலேஜ் முடித்தே போயிருக்கவேண்டும். பாவம் , எங்களுக்கு கொடுக்காய்ப்புளிப் பழங்களைப் பறித்துக்கொடுத்துவிட்டு விதைகளை சேகரித்துக்கொண்டிருந்தான்.

வெள்ளெலி ரவிச்சந்திரன் படிப்பில் சுமார் என்றாலும், கெட்டிக்காரன். தாயில்லாதவன். புளிபோட்டுத் தேய்த்த வெண்கலப்பானைபோல இருப்பான். அவன் அப்பாவோ முரடு. காலையில் ஐந்துமணிக்கே எழுந்து, அவன் அப்பாவுக்கு காஃபி டிஃபன் எல்லாம் தயார் செய்து கொடுப்பதிலிருந்து மதியம் சாப்பாடுவரை தயார்செய்துவிட்டு தினமும் லேட்டாகத்தான் பள்ளிக்கு வருவான். எவ்வளவு அடிவாங்கினாலும், லேட்டாவதற்கான உண்மைக்காரணத்தைச் சொல்லமாட்டான். அவன் வீக்னஸ் அவனது முன்கோபமும் நிறையக் கதைபுஸ்தகங்கள் படிப்பதும்தான். சாண்டில்யனும், விக்ரமனும் மற்றும் கல்கியும் அவனது ஆதர்ஸ எழுத்தாளர்கள். அவனிடம் கதைப் புத்தகங்கள் ஓசி வாங்க அவன் வீட்டிற்கு அடிக்கடிப் போகவேண்டியிருந்தது. புளியமரத்திற்கு நேர் எதிர்வீடு அவன் வீடாயிருந்ததால், எனக்கு அந்தப் புளியமரத்தைத் தவிர்க்க முடியவில்லை. பலசமயங்களில் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துப்போக அனுமதிக்காமல், அங்கேயே படித்துவிட்டுப்போகச் சொல்வான். பாவம் தனியாய் இருப்பவனுக்குப் பொழுதுபோக, பேச்சுத்துணைக்கென்று யாராவதுவேண்டும்தானே? அந்தமாதிரி நேரங்களில், கொஞ்சம் இருட்டித்தான் அங்கிருந்து கிளம்பவேண்டியிருக்கும். இருட்டியபின், அந்த ஆயிரம் உயிர்குடித்த அபூர்வ புளியமரம் தாண்டி வருவதுதான் எனக்குப் ப்ரச்சனை. ஆனால், அவன் அப்பா இருக்கும்போது அங்கே இருக்கமுடியாது. கொஞ்சம் அதிகம் மிச்சமான கடைசி மாவில் போட்ட ஒரே போண்டா மாதிரி முகம் சற்றே பெரியதாகவும், கரடுமுரடாகவும் , ஸ்ரீலங்கா மேப் போலவும் இருக்கும். பற்கள் ஒழுங்காக இல்லாமல், பஸ் ஸ்டாண்டில் கும்பலாக நிற்கும் பயணிகள்போலவும் இருக்கும். அவர் வீட்டிலிருந்தால், நாங்கள் ராத்திரியில் புளியமரத்திற்கடியிலேயே தங்கியிருப்பதுபோல உணர்வோம்.

அந்த இரண்டு ப்ளாக்குகளில் ஒன்றில், ஒரு முஸ்லிம் குடும்பமும் இருந்தது. “அப்துல் ரஹீம், ஹெட் க்ளார்க், பர்ஸனல் ப்ரான்ச் ” என்று வாசலில் போர்ட் தொங்கும் வீட்டில் மூன்று அழகான பெண்கள் இருந்தனர். அந்த மூன்று பேரிலேயே மிகவும் அழகான பெண்ணை என் மிக நெருங்கிய நண்பனும் எப்போதும் முதல் மார்க்கே வாங்கும் குணா என்கிற குணசேகரனுக்கு மிகவும் பிடித்துப்போக அதனால்வேறு அடிக்கடி அந்தப் புளியமரம் பக்கம் போகவேண்டியிருந்தது. அந்த அப்துல் ரஹீம் மிகவும் குட்டையாகவும், மூன்று பெண்களை எப்படிக் கடை ஏற்றப் போகிறோம் என்ற கவலையில் நெற்றிச்சுருக்கம் அதிகமாய் இருக்க, நடப்பதே ஸ்கிப்பிங்க் செய்வதுபோல இருக்க ஆஃபிஸ் போவது தவிர மற்ற சமயங்களில் அடிக்கடி கடைக்குப் போய் வந்துகொண்டிருப்பார். ரயிவே காலணியில் திடீரென்று இரண்டு மூன்று இடங்களில் ” இங்கு 30 நாட்களில் ஹிந்தி பேசக் கற்றுக்கொடுக்கப்படும் ” என்று ஹிந்தி ஸ்பீக்கிங்க் ஷாப்ஸ் முளைக்க அந்த மூன்று பெண்களும் காரணமாகிப் போனார்கள். புளிய மரத்துப் பக்கம் ” ஹிந்தி வாழ்க ” என்று சிலபேர் கத்திக்கொண்டு போனதாகவும் கேள்வி. ” பாக்தாத் பேரழகி ! பொன்மலைக்கு நீ அழகி! ” என்று குணா புளிய மரத்துக்குக் கீழேயே உட்கார்ந்து ” மோஹினிப் பிசாசு ” என்ற தலைப்பில் எழுதிய கவிதையை ” தென்றல் – ப்ரீஸ் ” என்ற எங்களின் இரு மொழிப் பத்திரிகையில் பிரசுரித்து அப்துல் ரஹீம் வீட்டினுள் இரவோடு இரவாகத் திணித்துவிட்டான். அந்தப் பெண்களோ கீச்சு கீச்சென்ற குரலில் உருது கொப்பளிக்கப் பேசிக்கொண்டு காற்றைக் கிழித்துக்கொண்டு வேகவேகமய்ப் போய்வந்து கொண்டிருக்க யாருடைய காதல் அப்ளிகேஷனும் பரிசீலனையில் இல்லாத ஸ்டேட் கவர்மெண்ட் ஆஃபிஸ் போல இருந்தது அவர்கள் வீடு. குணாவின் ஒரு தலைக்காதலால், முதல்முறையாக நான் முதல் ரேங்க் வாங்கியதால் எங்கள் நட்பில் கொஞ்சம் தேக்கம் ஏற்பட்டு, காதல் மாயையிலிருந்து விடுபட்டபின் மீண்டும் எங்களுக்குப் புளியமரம் பயத்தைத் தர ஆரம்பித்தது.

பொதுவாக அதிகம் பேசாத வெள்ளெலியின் அப்பா, வருடத்திற்கொருமுறை அதிகம் பேசப்படுவார். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வெள்ளெலியின் அப்பா செய்யும் பூஜை அந்த ஏரியாவிலேயே வெகு பிரசித்தம். கார்த்திகையின் கடைசி வாரத்தில் புளியமரமே நடுங்குமாறு உடுக்கு அடிக்கும் சப்தம் அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டிருக்கும். வீடெங்கும் மஞ்சளால் மெழுகப்பட்டிருக்க காளி, கருமாரி, மகமாயி மற்றும் உக்ர தெய்வங்களின் படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தினமும் வேறு வேறு ஊர்களிலிருந்து பூசாரிகள் தருவிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான பூஜைகள் நடத்தப்படும். எங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது அவர்கள் வீட்டு வாசலில் நட்டுவைக்கப்பட்ட திரிசூலம்தான். மூன்று எலுமிச்சம்பழங்கள் செருகிவைக்கப்பட்ட அதன் சூலங்களில் குங்குமம் ரத்தம் போல் வழிந்துகொண்டிருப்பது போதாதென்று தினம்தினம் ஆடோ கோழியோ லைவ்வாக அங்கேயே கழுத்துத் திருகப்பட்டு, சூலத்தின்மேல் ரத்த அபிஷேகம் செய்யப்படுவது பார்க்கவேண்டும்போலும் பார்க்கக்கூடாததுபோலும் என்னை இருவேறு உணர்வுகளுக்குத்துத் தள்ளும். இந்த ஒருவார விஷேசத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, பூசாரிகள் புடைசூழ வெள்ளெலியின் அப்பா, ஓயாமரி சுடுகாடு சென்று அங்கு நள்ளிரவில் பூஜை செய்து மண்டை ஓடுகள் அணிந்துகொண்டு , போதாதற்கு, கைகளில் எலும்புகளைத் திரட்டிக்கொண்டு உடுக்கு, உருமி மற்றும் விதவிதமான மேளங்கள் முழங்க கையில் ப்ரம்மாண்டமான கத்தியை ஏந்திக்கொண்டு கொஞ்சம் முன்னால் குடித்திருந்த ரத்தம் உதட்டோரம் ஒழுகிவர எந்தவிதமான ஆட்டமுமில்லாமல் கண்கள் யாருக்கும் தெரியாத ஏதோவொன்றை முறைத்துப் பார்த்துகொண்டு வருவதைப் பார்க்க பெரியவர்களே பயப்படுவார்கள். அன்று இரவு வெள்ளெலியின் அப்பாவிடம் நிறையபேர் குறி கேட்பார்கள். ஆனால், அவர் கொஞ்சம் பேரின் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வார். அதற்கு அடுத்த சில நாட்களில் புளியமரம் மேலும் அதிக பயங்கரத்தைப் போர்த்திகொண்டிருப்பதாகத் தோன்றும் எனக்கு. அந்த ஞாயிற்றுக் கிழமைக்குப்பின் வெள்ளெலியை கொஞ்ச நாட்களுக்குப் பார்க்கமுடியாது.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்வரும் ஏகாதசி அன்று அரங்கனை ஸேவித்து வந்த நாளில், வெள்ளெலியின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஒருமாதிரித் தயங்கித் தயங்கி நின்றிருந்ததும், பேசுவதற்குத் தடுமாறியதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பேச முடியாதவாறு உணர்ச்சி வசப்பட்டிருந்தார். அவரை ஆசுவாசப்படுத்த முயன்றபோதெல்லாம் பொங்கிப்பொங்கி அழ ஆரம்பித்தார். அவரைப் பற்றி நான் கொண்டிருந்த வெருட்டும் பிம்பங்களெல்லாம் அவர் குலுங்கிக் குலுங்கி அழும்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துகொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி அவர் உதிர்த்த உடைந்த வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒரு மனிதனை எப்படி சில நிகழ்வுகள் இறுக்கமாகிவிடும் அல்லது இளக்கிவிடும் என்று ஆச்சர்யப் படவைக்கிறது.

வெள்ளெலி பிறந்த வருடத்தில் வந்த கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அவன் அம்மா அந்தப் புளிய மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டதையும் ( காரணத்தைக் கடைசிவரை சொல்லாத அவரது அந்தரங்க நியாயம் அவரை என் மதிப்பில் பலமடங்கு உயர்த்திவிட்டது ) அதன் பின்வந்த ஒவ்வொரு வருடத்து பூஜைகளையும் கோர்வையற்ற வார்த்தைகளில் விவரித்த அவர், இனி அந்த பூஜைகளைத் தொடரமுடியாத உடல் நிலை குறித்தும் , அவரின் ஒரேவாரிசான வெள்ளெலி அந்த பூஜைகளைச் செய்ய மறுப்பதையும் அவர் உயிரோடிருக்கும்போதே அந்தப் பூஜையின் நுணுக்கங்களையும் அவசியத்தையும் உபதேசித்துவிட வேண்டிய கடமையையும் ஒருவாறு சொல்லிமுடித்தபின், வெள்ளெலிக்கு இதுபற்றி அட்வைஸ் செய்யுமாறு என்னையும் என் பெரியண்ணாவையும் கேட்டுக்கொள்ளத்தான் அவர் வந்திருப்பதாகவும் சொல்லி நிறுத்தியபோது எனக்கு நிலை கொள்ளவில்லை. அவனுக்கு அறிவுரை சொல்ல எப்படி எங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றே புரியவில்லை. புத்தகப் பரிமாற்றமும், பேச்சுத் துணையாய் சிலசமயங்களில் இருந்திருக்கிறேனென்றதைத்தவிர, நான் சொல்லிக் கேட்கிற அளவிற்கு அவன் என்னிடம் ஸ்நேகம் பாராட்டியதில்லை என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது? சூழ் நிலையை மனதில் கொண்டு என் பெரியண்ணா அவருக்கு ஆறுதலும் வெள்ளெலியிடம் பேசுவதாகவும் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையைத் தரும் இனிய வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான்.

அதற்கடுத்த ஒருவாரத்தில், மனம் உடைந்திருந்த வெள்ளெலியின் அப்பா அதே புளியமரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டு அவர் மனைவியுடன் கலந்துவிட்டார். கடைசிவரை வெள்ளெலி அந்தப் பூஜைகளைச் செய்யவில்லை. எஸ்.எஸ்.எல்.ஸி முடித்தபின் “கம்பேஷனேட் க்ரௌண்ட்” டில் ஒர்க் ஷாப்பில் வேலைக்குப் போய்விட்டான் வெள்ளெலி. அந்தப் புளியமரம் அந்த வருடம் அடித்த வரலாறுகாணாத புயற்காற்றில் வேரோடு பெயர்ந்துவிழுந்தது. எங்களை இனம்புரியாத உணர்விற்கு ஆட்படுத்தியிருந்த அந்தப் புளியமரம் வெள்ளெலியின் அப்பாவுடைய சோகத்தின் கனம் தாங்காமல்தான் விழுந்திருக்கவேண்டும் என்று துபாயிலிருந்து விடுமுறைக்கு வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாள் சேவிக்க வந்திருக்கும் குணா நேற்று சொன்னான். அப்துல் ரஹீமின் கடைசிப் பெண்ணும் துபாயில்தான் இருப்பாதாக ஒரு உப தகவலைச் சொல்லும்போது அவன் வார்த்தைகளில் ஏக்கம் தொக்கி நிற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

கொடுக்காய்ப்புளி மரம் மட்டும் இன்னும் இருப்பாதாகவும், சங்கரனின் இரண்டு பையன்களும் அந்தமரத்தில் பொன்வண்டு பிடித்து மற்றவர்களுக்கு விற்றுக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் சங்கரனைப் போல் ரிசல்ட்டுக்காக கொடுக்காய்ப்புளி விதைகளை சேகரிப்பதில்லையென்றும் தெரிந்தபோதுமட்டும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *