காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,848 
 

காக்கையை உயிரோடு பிடிப்பது பற்றி பல வகைகளில் நாங்கள் யோசனை செய்தோம்.கவண்கற்களை எடுத்து கொண்டு நாண் வைத்து அடித்து பார்க்கலாமா இல்லை வலை விரித்து பிடிக்கலாமா இப்படி பல விதங்களில் யோசனை செய்து முயற்சி செய்தோம் .பிறகு ஒரு குறவனை தேடி கண்டு பிடித்து உயிரோடு ஒரு காக்கை வேண்டும் எவ்வளவு ரூபாய் ஆனாலும் பரவாயில்லை என்று கூறிய பிறகும் காக்கை உயிரோடு கிடைக்கவில்லை.

காக்கையை ஏன் உயிரோடு கைவசப்படுத்த வேண்டும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. காக்கையை உயிரோடு பிடித்து மூதேவி சித்துக்கு தேவையான பாழடைஞ்ச வீட்டு மண் தீட்டு சீலை, வெத்திலை, எருக்கம்பூ ஆகியவைகளை எடுத்து தகடு எழுதி காக்கையின் வாயை பிளந்து ஊமையன் உப்பும் போட்டு சித்தெழுதிய தகட்டையும் வாய்க்குள் தைத்து வெதடலை விறகால் கதகதவென எரிக்க வேண்டும் .அது எரிந்து பஷ்பமாகும். அந்த சாம்பலை எடுத்து எதிரியின் வீட்டு மேல் கூரையில் போட்டால் அந்த வீட்டில் உடனடியாக துர்மரணம் நடக்கும். வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் செடி கொடிகளெல்லாம் பட்டுப் போகும் கணவனுக்கும் மனைவிக்கும் ஓயாது தகறாறு நடக்கும். இருக்க கூடிய வீட வித்துட்டே ஓட வேண்டியது வரும் வீட்டுக். ஆகையினால் காக்கையை உயிரோடு பிடிக்க தீவிரமாய் இறங்கினோம்.

கடைசியாக எப்படியாவது காக்கையை பிடிக்க வேண்டிய பொறுப்பு அவனிடம் கொடுக்கப்பட்டது. முதலில் வீட்டில் உள்ள கோழி கூட்டை திறந்து போட்டு கோழியை வேறு இடத்தில் அடைத்து வைத்தான். திறந்து வைத்த கோழி கூட்டில் ஒரு கோழி முட்டை மற்றும் ஒரு சில உணவு பொருள்களையும் வைத்து விட்டு வாசலில் மறைந்து காவலிருந்தான். அவனுக்கு ஒரு எண்ணம் தெளிவாக இருந்தது. கோழி முட்டையை காக்கா குடித்து ருசி பார்த்து விட்டால் திரும்ப திரும்ப கண்டிப்பாக வரும். எளிதாக பிடித்து விடலாம் என்று எண்ணினான். அவன் நினைத்தது மாதிரி காக்கை அடிக்கடி வந்து முட்டையை குடித்து விட்டு போனது. ஆனால் மாட்டவில்லை.

ஒரு மழை நாளோடு கூடிய அதிகாலையில் கோழி முட்டையை குடித்து கொண்டிருந்த போது கோழி கூட்டை அடைத்து காக்கையை பிடித்து விட்டான். காக்கையை பஷ்பமாக்கும் வேலை தயாராக தொடங்கியது. காளம் போட்டு மேற்கூறிய படி காக்கையை தயார் செய்து காளத்தின் மேலாக பறக்க விட வேண்டும். ஒரு வேளை காக்கை காளத்தின் மேலாக விழாமல் தன் தலை மீது விழுந்தால் அவ்வளவு தான். தனக்கு ஆபத்து நேருவது உறுதி. ஆனால் ஒரு வாரம் எப்படியும் காக்கையை பாதுகாக்க வேண்டும். அதன் பிறகு வருகின்ற பெளர்ணமி அன்று தான் காரியத்தை தொடங்க முடியும்.

காக்கையை பிடித்த நாளிலிருந்தே அவனுக்கு நிம்மதியாக எந்த காரியமும் செய்ய முடியவில்லை.வீட்டு தோட்டத்தை சுற்றியோ ,வயலுக்கோ, இல்லை குளத்துக்கோ எங்கு போனாலும் காக்கைகள் சுத்தி சுத்தி வந்து அவன் தலையை கொத்த தொடங்கின. கொத்தி விட்டு கொத்தி விட்டு ஓடின.ஒரு நாள் அதிகாலையில் குளத்தங்கரையிலுள்ள தென்னந்தோப்பில் மலம் கழித்து கொண்டிருந்தவனை முதுகில் வந்து கொத்தியது. பாதி மலம் கழித்த நிலையில் தலை தெறிக்க வீடு வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து கதவை தாளிட்டு கொண்டான். தனியறையில் உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அழுதான்.

பெளர்ணமிக்கு மூன்று நாள்கள் இருந்த நிலையில் அந்த மூன்று நாள்களும் வீட்டை விட்டு எந்த அவசரத்திற்கும் வெளியே போக கூடாதென முடிவெடுத்தான். ஆனால் அவனது நிலைப்பாட்டை தளர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவன் முடிவெடுத்த அன்றிரவு மஞ்சள் காமாலையால் ஆஸ்பத்திரியில் கிடந்த தாய்மாமா திடீரென்று இறந்து போனார். மறுநாள் காலை துட்டி விசாரிக்க போவது மட்டுமில்லாமல் கண்டிப்பாக சுடுகாட்டிற்கும் போக வேண்டும் சுடுகாட்டில் காக்கைகள் அதிகமாக வரும் என்று அவனுக்கு பயமிருந்தது. இரவோடு இரவாக கிளம்பி விடலாமா என்று கூட யோசித்தான். இரவு காக்கைகளை அவன் அதிகமாக பார்த்ததில்லை. காக்கைகளுக்கு வீடுண்டா? இரவு காக்கைகள் எங்கு போய் தங்கும் என்றெல்லாம் யோசித்தான். இருந்தாலும் கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட காக்கைகள் பதுங்கி இருந்து இரவு நேரத்தில் தாக்கினால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாது என்பதால் காலையில் கிளம்பலாம் என்ற முடிவுக்கு வந்தான். காலையில் ஒரு எட்டு மணிக்கு பிறகு நண்பன் ஒருவனின் பைக்கில் ஏறி பஸ் நிலையம் வந்தடைந்தான். பின்னர் சிவலோகம் போகின்ற பஸ்ஸில் ஏறினான் .சன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு காக்கைகள் ஏதாவது கண்ணில் தெரிகிறதா? சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நிம்மதி பெரு மூச்சொடு பஸ்ஸில் அமர்ந்தான்.

எப்படியும் ஒரு மணி நேரத்தில் சிவலோகம் வந்து விடும். இறந்த வீட்டில் கலந்து கொண்டு இருட்டுவதற்கு முன்பு வீட்டு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பஸ் குலசேகரம் பக்கத்தில் உள்ள கல்லடி மாமூடு வந்ததும் தானாக நின்றது கொஞ்ச நேரத்தில் மாமரத்திலிருந்து பல காகங்கள் பஸ்ஸை சுற்றி பறந்தன. பஸ்ஸில் இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். கண்ணிமைக்கும் பொழுதில் ஒரு காகம் அவனை பார்த்து காட்டு சத்தம் போட்டு கொண்டு வலது கண்ணை கொத்தி எடுத்து கொண்டு கல்லடி மாமூட்டை தாண்டி பறந்து சென்றது.

(திணை காலாண்டிதழ் டிசம்பர்2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *