சொந்த வீடு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 15,973 
 

படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னல் பக்கம்போய் வெளியே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்த சத்தம் மட்டும் கேட்டது. திரும்பி வந்து கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அறையை ஒருமுறை நோட்டம் விட்டாள். அறையில் ஒரு சாமி படம்கூட இல்லை. ஷெல்பில் சீலைகள் மட்டும் ஏழு எட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு இரும்புக் கட்டில், ஒரு போர்வை, ஒரு தலையணை அவ்வளவுதான் அந்த அறையில் வேறு பொருள் இல்லை. அறையைக் கூட்டுவதற்கு விளக்குமாறுகூட இல்லை. அறையையே வெறித்துப் பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன தோன்றியதோ எழுந்து வாசல்வரை வந்தாள். தெருவைப் பார்த்தாள். ஆள் நடமாட்டம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வீட்டிலுமிருந்தும் தொலைக்காட்சி ஓடுகிற சத்தம் மட்டுமே கேட்டது. சிறிதுநேரம் தெருவையே பார்த்து கொண்டிருந்துவிட்டு திரும்பி வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள். கொஞ்ச நேரத்திற்குமேல் அவளால் படுத்திருக்க முடியவில்லை. எதைஎதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று அவளுக்கு ஊருக்குப் போய் வந்தாலென்ன என்ன எண்ணம் வந்தது. அந்த எண்ணம் வந்ததும் லேசாக உற்சாகம் வந்த மாதிரி ஊரைப்பற்றியும், வீட்டைப்பற்றியும் யோசித்தாள். “மவன் ஊட்டுக்குப்போயி இட்லியும் தோசயும் தின்னதால ஊட்டு நெனப்பு, ஊரு நெனப்பு இல்லாமப் போயிடுச்சா?” என்று ஊர்க்காரர்கள் கேட்பார்களே என்று நினைத்ததும் அவளுடைய முகத்தில் லேசாக மலர்ச்சி ஏற்பட்டது. ஊரில் இருந்தபோது “மவனும் மருமவளும்தான் பேங்குல பெரிய பெரிய வேலயில இருக்காங்களே. அப்படியிருக்கயிலெ இங்க நீ எதுக்கு ஒத்தயிலெ கஷ்டப்படுற? ஒம்மருமவ ஒனக்கு மட்டுமா தனியா ஒல வச்சி வடிக்கப்போறா? போ, போயி நாலு ஊரு நாட்டெ பாத்துட்டு வா” என்று ஊரில் கேட்காதவர்கள் இல்லை. அப்படிக் கேட்கும்போதெல்லாம் துளசியம்மாளுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஊருக்கு வந்து இருபத்தியெட்டு நாட்களாகிறது. இப்போது ஊருக்குப் போனால் ஊர்க்காரர்கள் துருவித்துருவி எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று நினைக்கும்போதே அவளுக்கு சிரிப்பாக இருந்தது. ஊருக்குப்போய் தன்னுடைய மகனும் மருமகளும் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறார்கள், வீட்டில் என்னென்ன பொருள்கள் வைத்திருக்கிறார்கள், என்னென்ன விதமான சாப்பாடெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. மகனைப்பற்றியும் மருமகளைப்பற்றியும், அவர்களுடையப் பெருமைகளைப் பற்றியும் சொல்வதற்காகவே ஊருக்குப்போக வேண்டும் என்று நினைத்தாள். மறுநொடியே மகனும் மருமகளும் ஊருக்குப் போகவிடமாட்டார்களே என்ற கவலையும் உண்டாயிற்று. நேரமாக நேரமாக ஊருக்குப்போக வேண்டும் என்ற எண்ணமும் மகனைப்பற்றிய பெருமைகளை ஊரில் சொல்ல வேண்டும் என்ற ஆசையும் கூடிக்கொண்டேயிருந்தது. ஊருக்குப் போகிறேன் என்று சொன்னாலே கோபப்படுவார்கள். அதோடு “வயசான காலத்திலெ அதுவும் சரியா நடக்க முடியாத நிலையில, சரியா கண்ணு தெரியாத காலத்திலெ ஒத்தயிலெ தனியா எதுக்கு இருக்கனும்? ஒங்களால எங்களுக்கு என்னா தொந்தரவு. ஊருக்குப் போறன்ங்கிற பேச்ச விட்டுட்டு வேற பேச்சு பேசுங்க” என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்களே என்று கவலைப்பட்டாள். என்ன சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்த முடியும் என்று யோசித்தாள். ஒரு பேச்சுக்குக் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தாள். எழுந்து வாசல்வரை வந்தாள். முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்தது. கேட்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தால் திரும்பிவந்து முன்புபோலவே கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். ஊரார்களிடம்போய் மகனுடைய பெருமைகளையும் மருமகளுடைய பெருமைகளையும் சொல்லாமல் எப்படி இருப்பது என்ற எண்ணம் அரித்தெடுக்க ஆரம்பித்தது. அந்த அரிப்பு நிற்பதுமாதிரி தெரியவில்லை. ஒரே ஒரு நாள் மட்டும் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்ததுமே புதுத்தெம்பு பெற்றவள் மாதிரி எழுந்து மாடியைவிட்டு கீழே வந்தாள்.

ஹாலில் நாற்காலியில் உட்கார்ந்து லதா புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். கௌதமும், கௌசிகாவும் அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். ராமன் தன்னுடைய அறையில் கணினியில் டைப் செய்து கொண்டிருந்தான். ஹாலுக்கு வந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்த துளசியம்மாளை யாருமே பார்க்கவில்லை. என்ன பேசுவது, யாரிடம் பேசுவது என்று நினைத்தவாறு காரணமின்றி அடுப்படிக்கு வந்து தண்ணீர் குடித்தாள். திரும்பவும் ஹாலுக்கு வந்தாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை யாருமே பார்க்கவில்லை. அதனால் தொலைக்காட்சியை நிறுத்தச் சொல்லலாமா என்று யோசித்தாள். லதாவை பார்த்தாள். பார்வையை அப்படி இப்படிக்கூட நகர்த்தாமல் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். ராத்திரி சாப்பிடும்போது பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அரவம் காட்டாமல் மாடியிலிருந்த தன்னுடைய அறைக்குப் போனாள்.

துளசியம்மாவால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய ஆசையை எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. அறையை வெறுமனேப் பார்த்தாள். ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததிலிருந்து வீடு என்னவாயிற்றோ என்ற கவலையும் வந்துவிட்டது. ஒரு மாதத்திற்கு முன் லேசாக உடம்பு சரியில்லாமல்போய், படுத்த படுக்கையாகிவிட்டது. பார்க்க வந்த ராமனும் லதாவும் “இனிமே இங்க இருக்கவே கூடாது. நெலம் இருக்கிறதாலதான இங்கியே இருக்கணுங்கிற. அது இல்லன்னா இங்க என்னா இருக்கு? நெலத்தயும் வீட்டையும் வித்துடலாம். ஒன்னெ இனிமே தனியா வுடுறது நல்லதில்லெ. செத்தாக்கூத் டதெரியாது” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி நிலத்தை விற்றார்கள். வீட்டையும் தோட்டத்தையும் விற்க முடியாது என்று துளசியம்மாள் ஒரே பிடிவாதம் பிடித்ததால் அதை மட்டும் விற்கவில்லை. நிலத்தை விற்ற கையோடு ஊருக்கு வந்ததுதான். அதன் பிறகு ஊருக்குப் போகவில்லை. வீடு என்னவாகியிருக்கும்? தோட்டத்தில் இருந்த புளியமரத்தின் பழத்தை எல்லாம் யாராவது அறுத்துகொண்டு போய்விடுவார்களே? தோட்டத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஏழெட்டு வேப்ப மரங்களிலிருந்த பழத்தையெல்லாம் பிள்ளைகள் பொறுக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று பல கவலைகள் அடுக்கடுக்காக வந்துகொண்டிருந்தன. இதையெல்லாம் சொன்னால் தன்னுடைய மகன் சிரிப்பானே என்ற கவலையும் வந்தது. தினமும் வீட்டில் யாரையாவது விளக்கு ஏற்றச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். ராமனும் லதாவும் படுத்திய அவசரத்தில் ஒழுங்காக எதையும் செய்யவில்லையே என்று தன்னையே நொந்துகொண்டாள். அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. விஷயத்தைச் சொல்லிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் மாடி அறையை விட்டுக் கீழே வந்தாள்.

துளசியம்மாள் அறைக்குள் வந்ததுகூடத் தெரியாமல் ராமன் வேகமாகக் கணினியில் டைப் செய்துகொண்டிருந்தான். சிறிதுநேரம் சத்தம் காட்டாமல் ராமனுடைய முகத்தைப் பார்த்தாள். களைப்படைந்தது மாதிரி தெரிந்தது. இந்த நேரத்தில் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள். அப்போது யதேச்சையாகப் பார்த்த ராமன் “என்னம்மா?” என்று கேட்டான். அதற்கு “ஒண்ணும் இல்லப்பா. சும்மா வந்தன். நீ வேலயப் பாரு” என்று சொன்னாள். “சரி” என்று சொல்லிவிட்டுக் கணினியில் மீண்டும் டைப்செய்ய ஆரம்பித்த ராமனுக்கு என்ன தோன்றியதோ டைப் செய்வதை நிறுத்திவிட்டு “அம்மா” என்று கூப்பிட்டான். வாசலில் நின்று தெருவைப் பார்த்து கொண்டிருந்த துளசியம்மாள் “என்னப்பா? சும்மாதான் வந்தன். நீ ஒன் வேலயப் பாரு” என்று சொன்னாள். அதைக் கேட்ட ராமன் எழுந்து வந்து “உள்ள வாம்மா. எதுக்கு வெளிய நிக்குற?” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி அவனுடைய அறைக்கு அழைத்துக்கொண்டு போனான். அவன் சொன்னதைக் கேட்காமல் ராமனுடைய நாற்காலிக்கு எதிரில் இரண்டு மூன்றடி தூரத்தில் தரையில் உட்கார்ந்தாள். ராமனையே கூர்ந்து பார்த்தாள். பிறகு கணினியைப் பார்த்தாள். என்ன தோன்றியதோ “பொயிதினிக்கும் இந்த மிஷினிலியே ஒக்காந்து வேல பாக்குறியே. கண்ணு கெட்டுப் போவாது? ஊட்டுக்கு வந்தததிலிருந்து அதிலியே குந்தியிருக்கியே, செத்த படுத்தா என்ன?” என்று கேட்டதற்கு லேசாகச் சிரித்த ராமன் கணினியை நிறுத்தினான். கண்களை அழுத்தி தேய்த்துவிட்டுக்கொண்டு “பொழப்பு அப்பிடி இருக்கு. என்னா செய்ய முடியும்?” என்று சொன்னான். பிறகு திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது மாதிரி “மத்தியானம் சாப்புட்டியா?” என்று கேட்டான்.

“சாப்புடாம என்னப்பா.”

“சாயங்காலம் டீ, காபி குடிச்சியா?” என்று கேட்டுவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த லதா பக்கம் எட்டிப் பார்த்து “சாயங்காலம் டீ, காபி ஏதாச்சும் அம்மா சாப்புட்டிச்சா?” என்று கேட்டான். லதா பதில் சொல்லவில்லை. அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. ஆனால், துளசியம்மாள் “பொயிதோடவே சாப்புட்டம்பா” என்று சொன்னாள்.

“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க? ஒடம்பு கிடம்பு சரியில்லியா?”

“அதெல்லாமில்லெ. எப்பியும்போல நல்லாத்தான் இருக்கன்” என்று சொன்ன துளசியம்மாள் தயக்கத்துடன் “இந்த வாரத்திலெ ஒரு நாளு ஊருக்கு ஒரு முற போயிட்டு வரலாமின்னு நெனக்கிறன். என்னப்பா சொல்ற?” என்று கேட்டாள்.

“பேசாம இரும்மா. ஊருகீருன்னுக்கிட்டு. ஊருலதான் ஒண்ணுமில்லியே?”

“ஊடு என்னாச்சின்னு தெரியல. நான் இங்க வந்த நாளா வெளக்கு ஏத்தாம ஊடு இருண்டுபோயிக்கெடக்கும்.”

“அதுக்குத்தான் நான் அன்னிக்கே அதெயும் சேத்து வித்துடலாமின்னு சொன்னன். நீ கேக்கல. அந்த ரவ ஊட்டுக்காக நீ ஊருக்குப் போவணுமா? திரும்பியும் ஒடம்பு சரியில்லாமப்போனா நீ என்னா செய்வ?”

“சாவறன்.”

“என்னம்மா பேசுற நீ? அந்த ரவ ஊட்டெ நீ பாத்து என்னா செய்யப்போற? ஊட்டெ சுத்தி எப்பவும்போலப் பன்னிதான் மேஞ்சிக்கிட்டிருக்கும்.”

“அப்பிடிச் சொல்லாதப்பா. அந்த ரவ ஊட்டுலதான் ஒன்னயும் சேத்து ஒன்னோட அக்காளுவோ மூணு பேரும் பொறந்தாளுவோ. நீ பொறந்து வளந்த எடத்த மட்டரகமா பேசாத.”

“நான் பொறந்தம்ங்கிறதுக்காகப் பன்னிக் குடிச மாரி இருக்கிற அந்த ஊட்டுலியே சாவுறமுட்டும் இருக்கச் சொல்றியா?”

“கூடுன்னாலும் குருவிக்கு அதுதாம்ப்பா அரண்மன. இன்னிக்கி நம்பளுக்குப் பணம் காசி வந்துட்டாப்ல அது ஊடு இல்லன்னு ஆயிடாது. நீ அந்த ஊட்டுக்கு வர வாணாம். ஒம் புள்ளிவுளும் வந்துட்டதனால போவ வாணாம். நான் மட்டும் போயி என்னா ஏதுன்னு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறன்.”

“மொதல்லப் போயிப் பாத்துட்டு வரன்ம்ப. அப்புறம் அங்கியே தங்குறன்ம்ப. இதான் ஒங்கிட்டெ பெரிய பிரச்சன. கடல்மாரி ரெண்டு மாடி ஊடு கட்டி அதுல ஏசி போட்டுக்கிட்டு நான் படுத்துத் தூங்குவன். நீ தனியா மண்ணு தரயில கெடப்பியா?” என்று வேகமாக ராமன் கேட்டான். அப்போது லதா உள்ளே பார்த்தாள். அவள் பார்த்ததைத் துளசியம்மாள் மட்டும்தான் பார்த்தாள். மகனைச் சமாதானப்படுத்துவது மாதிரி இறங்கின குரலில் சொன்னாள்: “ராசா செத்தாலும் மண்ணுலதான் போடுவாங்க. கோமணாண்டி செத்தாலும் மண்ணுலதான் போடுவாங்க. யாரு செத்தாலும் வாயில மண்ணுதான் வியும். பொன்னு பொருளா வியப் போவுது? தரயிலியே காலு படாம ஆகாயத்திலேயே பறந்தாலும் கடசியா எல்லாரும் ஒருநாளக்கி மண்ணுக்குள்ளதான் தம்பிபோவணும். சும்மா கெடக்குற ஊட்டெ பாத்து ஊருல நாலு பேரு நாலு விதமா பேச மாட்டாங்க? நம்பப் பொருளுன்னு ஊருல அது ஒண்ணுதான் இருக்கு. அதெ என்னா ஏதுன்னு பாத்துட்டு வரக் கூடாதா. ஒனக்கும் ஒம் பொண்டாட்டிக்கும்தான் வேல ஓயல. நான் பொயிதினிக்கும் சீக்குப்புடிச்ச கோழியாட்டம் குந்துன எடத்திலதான் குந்திக்கெடக்குறன். ஒரு எட்டு போயிட்டு வந்தா என்னா? எல்லாத்துக்கும் மேல கவருமண்டுல கேசு அடுப்பு தரன்னாங்க. போன வருசம் டி.வி. கொடுத்தானில்லெ அந்த மாரி. ஊருல அப்பப்ப தலய காட்டுலன்னா மணியக்காரன் கேசு அடுப்ப எடுத்துக்கிட்டுப்போயிடுவான். பழய காலம் மாரியா இப்ப இருக்கு? எப்ப எவன் ஏமாறுவான் புடுங்கித்திங்கலாமின்னு அலயுற காலமா இல்லெ இருக்கு. ”

“வுடும்மா ஊடு-காடுன்னுக்கிட்டு. அதெல்லாம் ஒரு ஊடா?”

“என்னப்பா அப்பிடிப் பேசுற? நீ பொறந்து வாயிந்த மண்ணுடா அது. அந்த ஊட்டுலதான் நான் ஒங்கப்பாகூட நாப்பத்தாறு வருசம் இருந்தன். அவுரு செத்த இந்த ஏயி வருசமாவும் அந்த ஊட்டுலதான் இருந்தன். இந்த இருவத்தி எட்டு நாளாத்தான் இங்க இருக்கன்.”

“ஒனக்கு இங்க என்னா கொற, சொல்லு. லதா எதனா சொன்னாளா?”

“அந்தப் பொண்ண கொற சொன்னா வாயி அயிவிப் போயிடும். ஊரான் ஊட்டுப் புள்ளெய பாத்து பொழப்பேச்சுப் பேசுறதா?” என்று சொன்ன துளசியம்மாள் லதாவைப் பார்த்தாள். அதுவரை அறையைப் பார்த்துக்கொண்டிருந்த லதா சட்டென்று முகத்தைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பிக்கொண்டாள். அது தெரிந்ததும் துளசியம்மாளுக்குத் தான் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்தது. அப்படிப்பட்ட பெண் இல்லையே என்ற எண்ணமும் வந்தது. லதாவைப் பற்றி யோசிக்கவிடாமல் ராமன் அவளிடம் கேட்டான்.

“அந்த ஊட்டயும் வித்துப்புட்டாதான் நீ ஊரு பேச்ச எடுக்க மாட்டன்னு நெனக்கிறன்.”

“எங்காலமுட்டும் அப்பிடி செய்யாத. நான் போனதுக்குப் பின்னாடி நீ ஒன் இஷ்டம்போல செஞ்சிக்க. ரெண்டு பேருகூட நீட்டிப்படுக்க முடியாத அந்த ரவ ஊட்டுலதான் நாத்தனாரு ரெண்டு பேருக்கும் கொழுந்தனாரு மூணு பேருக்கும் கண்ணாலம் கட்டிவச்சன். ஒன்னோட அக்காளுவோ மூணு பேரு கண்ணாலமும் அந்த எடத்திலதான் நடந்துச்சி. ஒன்னோட ஒரு கண்ணாலம் மட்டும்தான் விருத்தாலம் மண்டபத்திலெ நடந்துச்சி. நானு நாலு புள்ளெய அந்த எடத்திலதான் பெத்தன். அக்காளுவோ மூணு பேரும் ஆளுக்கு மூணு நாலு புள்ளிவோன்னு அதுலதான் பெத்தாளுவோ. ஒரு கொறயும் கெடயாது. எல்லாப் புள்ளிவுளும் ஒரு பழுதும் இல்லாம மண்ணுல தரிச்சி நெலச்சி நிக்குதுவோ. நல்ல காரியமின்னு இல்லெ, ஒங்கப்பன் சாவோட சேத்து நாலு கெட்டகாரியத்தயும் அந்த ஊட்டுலதான் தம்பி பாத்தன்.”

“அதெல்லாம் சரிம்மா. எல்லாக் காலத்துக்கும் அதெயே பேசிக்கிட்டு இருக்க முடியுமா? ஒங் காலத்தியே பேசிக்கிட்டிருந்தா அவ்வளவுதான். அந்தக்காலம் வேற; இந்தக் காலம் வேற. இப்ப காசிதான் ஒலகமின்னு ஆயிப்போச்சி. ஒங்காலத்திலெ ஒரு வல்லம் சோளமோ வரகோ இருந்தோ போதும். ஒரு நாளுபொழுது ஓடிடும். இப்ப அப்பிடியா? எம்மாம் வாங்குனாலும் பத்தல? ஒரு புட்டியில சோளம் வரவுன்னு எடுத்துக்கிட்டுபோயி செட்டிக் கடயிலெ கொடுத்தா உப்பு, மிளகா, புளின்னு கொடுப்பான். இப்ப அப்பிடியா? சோளக் கதிரு கொடுத்துத்தான நானே ஐஸி, மிட்டாயின்னு வாங்கித் தின்னுயிருக்கன். இப்ப தானியத்த கடயில கொடுத்தா எவன் வாங்கிக்கிட்டு பொருளு கொடுக்கிறங்கிறான்.”

“ஊடு முயிக்க மிஷினா வாங்கிப்போட்டா எப்பிடிப்பா சம்பளம் பத்தும்?”

“இன்னிக்கி இருக்கிற ஒலகம் ஒனக்குப் புரியாது. கம்ப்யூட்டர் இல்லன்னா இந்தப் பசங்ளுக்குப் பொழுதுபோகாது. ஏசியில்லன்னா தூக்கம் வராது” என்று சொன்ன ராமன் ஹால் பக்கமாக எட்டிப் பார்த்து “லதா தண்ணி கொடு” என்று சொன்னான். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் போட்டுவிட்டுப்போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஹாலில் போய் உட்கார்ந்து வெங்காயம் உரிக்க ஆரம்பித்தாள். லதாவின் முகம் எப்போதும்போல் இல்லாமல் இருப்பதாகத் துளசியம்மாளுக்குத் தோன்றியது. தலைவலியாக இருக்குமா, உடம்பு சரியில்லாமல் இருக்குமா என்று சந்தேகப்பட்டு லதாவின் பக்கம் திரும்பி “ஒடம்புக்கு முடியலியா?” என்று கேட்டாள். லதா பதில் சொல்லாதது மட்டுமல்ல; துளசியம்மாள் கேட்டதைக்கூடக் காதில் வாங்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தில் கேட்டிருக்காது என்று நினைத்துக்கொண்டு ராமன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அப்போது அவன் ஏதோ ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான். அவன் படிப்பதைப் பார்த்ததும் “நான் மேலப் போறம்ப்பா” என்று சொன்னாள். “இரும்மா. என்னா அவசரம்?” என்று சொன்னான். படித்துக்கொண்டிருந்த காகிதத்தை மேசைமீது வைத்தான். பிறகு மூக்குக்கண்ணாடியைக் கழற்றித் துடைத்தான். யோசிப்பவன் மாதிரி சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு தணிந்த குரலில் “சின்ன வயசு புள்ளைங்க மாரி அங்கப் போறன், இங்கப் போறன்னுக்கிட்டு அலயாத. இனிமே அலஞ்சி திரிஞ்சி என்னா செய்யப்போற? புள்ளெகளப் படிக்கவைக்கப்போறியா? இல்லெ கல்யாணம் கட்டிவைக்கப் போறியா? எல்லாம் முடிஞ்சிபோச்சி. சாவு ஒண்ணுதான் பாக்கி. அது தானா வரும். அதெத் தேடிக்கிட்டு ஏன் ஓடுறன்ங்கிற. மழயில நனயக் கூடாது, வெயில்ல அலயக் கூடாது, காட்டுலப்போயி கஷ்டப்படக் கூடாதின்னுதான என்னெ படிக்க வச்செ?”

“ஆமாம்.”

“எனக்கு சௌகரியம் வந்தா அது ஒனக்கு வந்த மாதிரிதான். அதனால வயசான காலத்திலெ எங்கயும் அலயாம படுத்துக் கெட. அந்த ரவ ஊடு எப்பிடியாவது கெடந்தா போவுது. மொதல்ல ஒன்னெக் கவனிச்சிக்க. என்னோட ஒரு மாச சம்பளத்தோட மதிப்புக்கூட அந்த ஊடு இருக்காது.”

“நான் கெழவி. என்னிக்கி செத்தா என்ன? அது ஊடுப்பா. பத்து சனம் வாயிந்த ஊடு. பணமும் ஊடும் ஒண்ணாவாது தம்பி. கட்டுக் கட்டா பணம் இருக்கலாம்-அதெத் திங்க முடியுமா?”

“அப்பிடின்னா இது ஊடு இல்லியா?”

“ஊடுன்னா எல்லாம் ஊடாயிடுமா? ஊட்டுல இருக்கிற நாலு சனமும் சண்டக்காரங்க மாரி மூலா மூலக்கி குந்திக்கிட்டு ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்காம, பேசிக்காம இருக்கிறதுதான் ஊடா? பத்து சனம் வந்து போற எடத்துக்கு பேருதான் ஊடு. ஊடுன்னா சோளம், வரவு, நெல்லு, எள்ளு, கொள்ளுன்னு ஒரு பத்து மூட்டெ தானியமாவது கெடக்க வாணாம்? சோறாக்கித் திங்கிறதுக்கு மட்டும் நாலே நாலு ஏனம் இருக்கிற எடத்துக்கு பேருதான் ஊடா? நம்ப ஊட்டுல என்னிக்காச்சும் ஒரு மூட்டெ தானியம்கூட இல்லாம இருந்திருக்கா? வண்ணான், பரியாறி, வழிப்போக்கின்னு யாராச்சும் ஒரு நாளாச்சும் சோறு வாங்காம இருந்திருக்கா? காலயிலெ ஏயிஎட்டு மணிக்கிப் பூட்டிப்புட்டுப்போயி வெளக்கு வைக்கிற நேரத்துக்கு வந்து அவதிஅவதின்னு எதியோ ஆக்கித்தின்னுப்புட்டு தூங்க வேண்டியது. அப்புறம் காலயில எயிந்திருச்சி ஓட வேண்டியது. ஈ, எறும்பு, எலி, பூனன்னு நொய்யாத ஊடு ஒரு ஊடா தம்பி? இங்க இருக்கிற ஊடுவோல்ல என்னா இருக்கு? நாலு தப்படிக்கு தப்படி காத்தாடி, ஊட்ட அடச்சாப்ல ஒரு டி.வி.பொட்டி, துணி தொவக்க மிஷினு, ஊடு கூட்ட ஒரு மிஷினு, எயிதப் படிக்க மிஷினு, தூங்குறதுக்குக் குளுந்த காத்து மிஷினுன்னு எல்லாத்துக்கும் மிஷினா இருக்கு” என்று துளசியம்மாள் சொல்லி லேசாகச் சிரித்தபோது லதா திரும்பி அறைப் பக்கம் பார்த்தாள். அவள் பார்த்த விதம் ஏதோ ஒரு மாதிரியாக இருப்பதாகத் தெரிந்ததும் சிரிப்பதை நிறுத்தினாள். திடீரென்று அவளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ராமனுடன் தான் பேசிக்கொண்டிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையா? படிக்கிற காலத்திலும் சரி, வேலைக்குப் போன பிறகும் சரி, ராமன் அதிகமாகப் பேச மாட்டான். கல்யாணமான இந்தப் பத்து வருசத்தில் அவன் துளசியம்மாளிடம் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். இங்கு வந்து நிலையாகத் தங்கிய இந்த இருபத்தியெட்டு நாட்களில் அதிசயமாக இன்றுதான் கூடுதலாகப் பேசியிருக்கிறான். அதுகூட அவளுக்குப் பிடிக்கவில்லையா? ஒவ்வொரு நாளும் “சாப்புட்டியா?”, “டீ குடிச்சியா?” , “ஜாக்கிரயா பூட்டிக்கிட்டு இரு. போன் மணி அடிச்சாலும் எடுக்காத. யாரு வந்து கூப்புட்டாலும் கதவத் தொறக்காத” என்பதுதான் அவன் தினமும் பேசுகிற வார்த்தைகள். அதற்கு மேல் அவனும் பேச மாட்டான். இவளும் பேச மாட்டாள். அப்படியிருக்கும்போது லதா கோபப்படுவதற்கு விசயமில்லையே என்று யோசித்தாள். அப்போது அவளுக்குச் சட்டென்று தான் இங்கு இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. “யாரு மனசுல என்னா இருக்கோ” என்று சொல்லி முனகிக்கொண்டே, முன்பு ஒரு நாள் மட்டும் ஊருக்குப்போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பேச்சை மாற்றி ஊருக்குப் போகிறேன் என்று சொன்னால் என்ன நடக்கும் என்று பார்க்க விரும்பி “ஊடு மட்டுமில்லெ. ஊட்டுக்குப் பின்னால இருக்கிற புளியமரத்து பழங்களயும், வேப்பமரத்து பழங்களயும் யாராவது பறிச்சிக்கிட்டுப் போயிடுவாங்கப்பா. அதனால அதெயெல்லாம் பொறுக்கி உரு சேத்துட்டு வரன்” என்று சொன்னாள்.

“புளியம்பழமும் வேப்பம்பழமும்தான் பெருசா? இல்லாதவங்க பறிச்சிக்கிட்டுப் போனாப் போறாங்க. எட்டணா ஒரு ரூவாய எல்லாம் பெருசா பேசிக்கிட்டு.”

“ஒரு ஒரு ரூவாயா சேத்தாத்தன் தம்பி நூறுரூவா வரும்.”

“வுடும்மா அந்தப் பேச்ச. பேன் காத்து சூடாயிருந்தா ஏசி போடச் சொல்றன். அந்த ரூமிலபோயி படுத்துக்க ” என்று ராமன் சொன்னபோது அறைப் பக்கம் லதா பார்த்ததைத் துளசியம்மாள் கவனித்தாள். மறுநொடியே “அதெல்லாம் வாண்டாம்ப்பா” என்று சொன்னாள். மருமகளுடைய மனதை அறிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் “அந்தப் புள்ளெதான செருமப்படுது. வேலக்கும் போயிக்கிட்டு ரெண்டு புள்ளெவுளயும் வளக்கிறதின்னா சும்மாவா? அந்தப் புள்ளெ ஊட்டுலயிருந்தும் ஒருத்தரும் வந்து ஒத்தாச பண்ற மாரி தெரியல. ஒண்டிக்காரப் புள்ளெ என்னாப் பண்ணும்” என்று சொல்லிவிட்டு ரகசியமாக ஓரக்கண்ணால் லதாவைப் பார்த்தாள். லதா இந்த முறை திரும்பிப் பார்க்காதது மட்டுமல்ல; துளசியம்மாளின் பேச்சைக் கேட்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. தனியாக ஆளில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி இருந்தது அவளுடைய தோற்றம். துளசியம்மாள் ஆச்சரியமடைந்தாள். “அந்த அளவுக்கா நெஞ்சழுத்தக்காரி?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். உடனே லேசாகக் கோபம் உண்டாயிற்று. “ஊருக்கு எதுக்குப் போறங்குறீங்க? பேசாம இருங்க” என்று ஒரு வார்த்தையாவது லதா சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவள் வெங்காயம் உரிப்பதிலும் தொலைக்காட்சிப் பார்ப்பதிலும்தான் கவனமாக இருப்பதாகத் தெரிந்தது. “இதே அவளோட அம்மாவா இருந்தா வாய மூடிக்கிட்டு இருப்பாளா?” என்று யோசித்த துளசியம்மாளுக்கு முதன்முதலாக லதாவின் மீது கோபம் வந்தது. அவள் இப்பிடியே இருந்தால் ஊருக்குப் போய்விடுவதுதான் நல்லது என்று நினைத்தாள். அவசரப்பட்டு நிலத்தை விற்றுவிட்டோமோ என்ற சந்தேகம் வந்தது. சந்தேகக் கண்ணோடு லதாவைப் பார்த்தாள். உரித்த வெங்காயத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் லதா. அந்த நேரம் பார்த்து “சரிம்மா. வேற ஒண்ணுமில்லியே” என்று கேட்டான் ராமன்.

“எனக்கு என்னாப்பா இந்த வயசில சேதி இருக்கப்போவுது. ஊட்டெ போயி ஒரு எட்டுப் பார்க்கணும். ஊடு என்னாச்சின்னு தெரியல. ஆளு நடமாட்டம் இல்லன்னா சுடுகாடு மாரிதான் கெடக்கும்.”

“அந்த பேச்ச வுடு. ஊருக்குத் தனியா போயி எப்பிடி வருவ?”

“ஒக்காந்தே கெடக்குறதுதான் கஷ்டமா இருக்கு. தனியா ஆளில்லாத ஊட்டுல எப்பிடி பொயிதினிக்கும் ஒக்காந்திருக்கிறது?”

“ஒக்காந்து இருக்கிறதிலெ என்னம்மா கஷ்டம்?”

“வேல செய்யாம எப்பிடித் தம்பி ஒக்காந்தே இருக்கிறது? ஒக்காந்துகிட்டே சோறு தின்னா-தின்னச் சோறு எப்பிடி செரிமானம் ஆவும்?”

“எழுவது வயசிக்கு மேல ஒன்னால என்னம்மா வேல செய்ய முடியும்?”

“ஏதோ என்னால ஆனத செய்யுறன். இப்பிடி இருக்கிற பொருள அப்பிடித் தூக்கிப்போடாம அப்பிடி இருக்கிற பொருள இப்பிடித் தூக்கிப்போடாம எப்பிடியிருக்கிறது? சும்மா குந்திகெடக்குறது பித்துப் புடிச்சாப்ல இருக்கு.”

“வீட்டுல இருக்க போர் அடிச்சா அக்கம்பக்கத்திலெ பேசிக்கிட்டு இரன்.”

“எந்த சனத்த தெருவுல பாக்க முடியுது? காலயிலேயே அங்க இங்கன்னு ஓடிப்போவுதுவோ. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் கேட்ட பூட்டிக்கிட்டு, கதவ சாத்திக்கிட்டு உள்ளாரியே டி.வியப் பாத்துக்கிட்டு கெடக்குதுவோ. அனாத காட்டுக்கு வந்த மாரி வா வாத்த பேச ஆளில்ல. ஊடு மட்டும் பெருசா இருந்தா போதுமா?”

“டவுனுன்னா அப்பிடித்தான் இருக்கும். பசங்கக்கூட பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?”

“அடெ போப்பா. ஒனக்காவது ஒரு நேரம் வுட்டா ஒரு நேரம் ரெண்டு வாத்த பேச நேரம் இருக்கு. அதுவுளுக்கு அதுகூட இல்லெ. காலயிலியே போயி சாயங்காலம்தான் வருதுவோ. அப்புறம் டிவுசனுக்குப் போயி ராத்திரி எட்டு ஒம்போது மணிக்கு வருதுவோ. அப்புறம் எயிதுதுவோ. அதிலயும் ரவ நேரம் கெடச்சா இந்தா இந்த மிஷினுக்கு மின்னாடி வந்து குந்திக்குதுவோ. ஒம் புள்ளிவுள ஓடி ஆடி வெளயாண்டு நான் என் கண்ணால பாக்கல.”

“இங்கலாம் அப்பிடித்தான்.”

“அதனாலதான் நான் ஊருக்குப் போறன். தண்ணிக்கிப் போயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். வெளிய வாசல போவயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். ஊடு கூட்ட வாசகூட்டன்னு எம் பொயிது போயிடும். வாசல்ல ஒக்காந்தா ஊரு சனங்களயே பாத்துப் பேசிப்புடலாம். இங்க இருந்தா ஒம் மூஞ்சிய நான் பாக்கலாம். எம் மூஞ்சிய நீ பாக்கலாம்” என்று சொல்லும்போது லதா எதையோ தேடுவது மாதிரி ராமனுக்குப் பக்கத்தில் வந்து தேடினாள். அதைப் பார்த்ததும் துளசியம்மாளுக்கு என்ன தோன்றியதோ சற்று அழுத்தமாகவே “நம்ப ஊட்டுக்குப் போனாத்தான் தம்பி எனக்கு நல்லாத் தூக்கம் வரும்” என்று சொன்னாள். “என்னம்மா சொல்ற?” என்ற ராமன்தான் அதிர்ச்சியோடு கேட்டான். பக்கத்திலிருந்த லதா ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல துளசியம்மாள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதையும் இதையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் நாற்காலியில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தாள். லதாவையே வெறித்துப் பார்த்த துளசியம்மாளுக்கு லதாவினுடைய மௌனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராமனுக்கும் லதாவுக்கும் கல்யாணம் முடிந்து சரியாக பத்து வருசம் முடிந்துவிட்டது. இந்தப் பத்து வருசத்தில் லதாவுக்கும் துளசியம்மாளுக்கும் சிறு சண்டையோ மனக்கசப்போ வந்ததில்லை. மகன் வீட்டுக்கு வந்தால் ஒரு நாள் இரண்டு நாள்தான் தங்குவாள். இப்போதுதான் இருபத்தியெட்டு நாள் தங்கியிருக்கிறாள். எந்தச் சந்தர்ப்பத்திலும் வாய்த் தகராறுகூட வந்ததில்லை. அப்படியிருக்கும்போது ஏன் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன்கிறாள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. “கரயாத கல்லு மனசா? அடேயப்பா. கரைக்கிறவங்க கரச்சா கல்லும் கரயுமின்னு சொன்னதெல்லாம் பொய்யா?” என்று சொல்லி முனகினாள். ஒரு வார்த்தைக்கூட பேசாத பெண் போடுகிற சோத்தை எப்படிச் சாப்பிடுவது, இத்தனை நாட்களாக என்ன எண்ணத்தில் சோறு போட்டிருப்பாள் என்று யோசித்ததுமே உடனே ஊருக்குப் போக வேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. இன்னதுதான் காரணம் என்று தெரியவில்லை. துளசியம்மாளுக்கு அழ வேண்டும்போல இருந்தது. அப்போதுதான் அவளுக்குத் தோன்றியது தன்னை தனியாக மாடியில் படுக்க வைத்த மாதிரி சாப்பிடுகிற தட்டையும் தனியாகத்தான் வைத்திருப்பாளோ என்று. மாடியில் ஒரே ஒரு சொம்பும் தம்ளரும்தான் இருந்தது. அவற்றை இவளுக்கென்றே ஒதுக்கி வைத்துவிட்ட மாதிரி இருந்தது. செல்லாத பொருளை மூலையில் போட்டு வைப்பது மாதிரி தன்னை மாடியில் தனியாகப் போட்டுவிட்டாளா என்று நினைத்ததுமே “விடிஞ்சதுமே நான் ஊருக்குப் போறன்” என்று சொன்னாள்.

“முட்டாள்த்தனமா பேசாம, போயி படும்மா” என்று சொன்ன ராமன் வெளியே எட்டிப் பார்த்து “லதா, அம்மா ஏதோ உளறிக்கிட்டு இருக்கு, அதெ என்னா ஏதுன்னு கேளு” என்று சொன்னான். அப்போதுதான் லதா தொலைக்காட்சியின் ஒலியை அதிகமாக்கினாள். அவள் அவ்வாறு செய்ததைத் துளசியம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே எழுந்து மாடிக்கு ஓடிவிடலாம் போலிருந்தது. ராமனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். பிறகு லதாவை ஆராய்வது மாதிரி பார்த்தாள். அப்போதுதான் அவளுக்குத் தோன்றியது நிலையாக இங்கு தங்குவதென்று வந்த பிறகு லதா பேசிய மொத்த வார்த்தைகளையும் எண்ணிவிடலாம் என்று தோன்றியது. அவள் பேசிய வார்த்தைகளை யோசித்துப் பார்த்தாள். ஒரு நாள்கூட “சாப்புட வாங்க” என்றோ, “சாப்புடுங்க” என்றோ சொன்னதில்லை. “சாப்புடுறீங்களா?”, “டீ குடிக்கிறீங்களா?” என்றுதான் கேட்டிருக்கிறாள். இந்த இருபத்தியெட்டு நாட்களாக இந்த இரண்டு வார்த்தைகளைத் த்தவிர வேறு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது தெரிந்ததும் துளசியம்மாள் அதிர்ச்சியாகிவிட்டாள். அவள் பேசாதது மட்டுமல்ல, அவளுடைய பிள்ளைகளையும் பேச விடவில்லை என்பது இப்போதுதான் தெரிந்தது. கௌதமிடமும் கௌசிகாவிடமும் இதுவரை அதிகம் பேசியதில்லை. அதற்குக் காரணம் இவளாகப் பேசினால்தான் பேசுவார்கள். அவர்களாக வந்து ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்கள். பேசினாலும் இவள் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வார்கள். ஒவ்வொரு விசயமாகத் துளசியம்மாளுக்கு இப்போதுதான் புரிந்தது. விசயங்கள் புரிந்ததும் உடம்பெல்லாம் பற்றியெறிவது மாதிரி இருந்தது. அழுகை வந்துவிடும்போல இருந்தது. “என்னோடதின்னு இந்த ஊட்டுல எதுவும் இருக்கக் கூடாது” என்று நினைத்தாள். பிறகு ராமனைப் பார்த்தாள். அவன் மீண்டும் கணினியைப் போட்டு ஏதோ டைப்செய்ய ஆரம்பித்தான். மாடிக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த துளசியம்மாள் வேகமாக “காலயில நான் ஊருக்குப் போறன். ஒனக்கு செலவா இருக்கல” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே வந்த ராமன் “ஒன்னால எனக்கு என்னம்மா செலவு?” என்று கேட்டான்.

“குந்த வச்சி சோறு போடுற இல்லெ. அதான் செலவு. ஒரு ஆளுக்குச் சோறு போடுறதின்னா சும்மாவா?”

“அதிகமாக பேசாத, திட்டிப்புடுவன். ஊருக்குப் போவ வேற காரணம் இருந்தா சொல்லு. இப்பவே அனுப்பி வுடுறன்.”

“சோறு ஆக்கற எடத்துக்குப் பக்கத்திலேயே வெளிய வாசல போயிட்டு வந்து என்னால சோறு திங்க முடியல.”

ராமன் சிறிது நேரம்வரை பேசாமல் நின்றான். பிறகு ஒரு நிதானத்திற்கு வந்தவன் மாதிரி ரொம்பவும் அடங்கின குரலில் “சரிம்மா. காலயிலியே பஸ் ஏத்திவுடுறன்” என்று சொன்னான். அப்போது வெளியே வந்தாள் லதா. அவளைப் பார்த்ததும் துளசியம்மாளுக்கு என்ன தோன்றியதோ ராமனுடைய கையை எடுத்து தன் தலை மேல் வைத்துக்கொண்டு “எனக்கொரு சத்தியம் பண்ணுப்பா” என்று சொன்னாள். லேசாகச் சிரித்துக்கொண்டே “ஒனக்கென்ன பைத்தியமா புடிச்சி இருக்கு? இத்தன வருசமா இல்லாம என்னம்மா புதுசா செய்யுற?” என்று கேட்டான். அப்போது தலைகால் புரியாத கோபத்தில் சத்தமாக “எனக்கு சத்தியம் பண்றியா இல்லியா?” என்று கேட்டாள். துளசியம்மாளின் குரலையும் முகத்தையும் பார்த்த ராமன் ஒன்றும் புரியாமல் “சரிம்மா சத்தியம். விசயத்தைச் சொல்லு” என்று கேட்டான்.

“நான் உசுரோட இருக்கிறமுட்டும் என்னோட ஊட்டுலதான் இருப்பன். நான் செத்தா என்னோட பொணத்த என்னோட ஊட்டுல வச்சித்தான் எடுக்கணும்” என்று சொன்ன துளசியம்மாள் மடமடவென்று மாடிப்படியில் ஏறினாள். அவள் ஏறிக்கொண்டிருக்கும்போதே “வெளியிலெ எதுக்கு நிக்குறீங்க, உள்ளெ வாங்க” என்று சொல்லி லதா கேட்டைச் சாத்தினாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “சொந்த வீடு

  1. அற்புதம் இமயம். என் அம்மாவும் இப்படித்தான். என்ன செய்வது என்றே புரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *