சைக்கிள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 8,851 
 

கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள். வலது கைப்பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு, கன்றுக்குட்டி பார்ப்பது போலவே மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நடுக் கூடத்தில் கோவணத்தோடு உட்கார்ந்து கொண்டார் மாமா, அவருக்கு முன்னால் அரைப்படி நல்லெண்ணெய்க் கிண்ணம். அவ்வளவையும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அரைக்கித் தேய்த்து உடம்புக்குள் றெக்கியாக வேண்டும் மாமாவுக்கு. ‘சனி நீராடு’ என்கிற வாக்கியத்தை அசரீரி உத்தரவாகவே எடுத்துக் கொண்டு சனிக்கிழமை அரை நாளை எண்ணெய் ஸ்நானத்துக் கென்று அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.

முதலில் எண்ணெய்க் கிண்ணத்தில் நடுவிரலை விட்டு, மூன்று சொட்டு எண்ணெயைத் தரையில் வைப்பார். அந்த மூன்று புள்ளிகளையும் வழித்துத் தலையில் தேய்த்துக் கொண்ட பிறகுதான் உள்ளங்கையில் எண்ணெயை விட்டு உச்சந்தலையில் ஆவி பறக்கத் தேய்ப்பார், “கோலம் மாதிரி புள்ளி வைக்கிறீங்களே… எதுக்கு மாமா…?” என்று ஒருநாள் அவரைக் கேட்டேன்,

“என்னமோ.. எங்க அப்பா அப்படிப் பண்ணுவார். நானும் பண்றேன்.”

உடம்பு முழுக்க அரைப்படி எண்ணெயையும் செலுத்தியான பிறகு சைக்கிளண்டை வருவார். அதற்குள் சைக்கிளண்டை தேங்காய் எண்ணெய்க் கிண்ணமும், துணிக்கிழிசலும் வந்துவிட வேண்டும். சுலோச்சனா அத்தை தவறாமல் இதைச் செய்துவிடும். இல்லையெனில் மாமாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். ‘ஒரு அற்ப காரியம். இதைச் செய்யத் துப்பில்லடா உங்க அத்தைக்கு இவனைக் கட்டிக்கிட்டு சீரழியறதைக் காட்டிலும் ஒரு கழுதையைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தியிருக்கலாம்’ என்பார்.

நெருப்பு வைக்காமல் பேசத் தெரியாது அவருக்கு சுலோச்சனா அத்தை எனக்கு அம்மாவுக்கும் மேலே. என் மேல் அத்தனை அன்பாக இருக்கும். திருப்பி மாமாவைச் சூடாக ஏதேனும் கேட்க வேண்டும் போல் இருக்கும் எனக்கு, ‘வெளியே போடா நாயே…’ என்று அந்த நிமிஷமே சொல்லி விடுவார். அப்புறம் வீட்டுக்குள் தலைகாட்ட முடியாது. சுலோச்சனா அத்தையைக் கூடப் பார்க்காமல், இருந்து விடலாம்தான். அத்தையின் பெண் சுமதியைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே. சோப்புப் பெட்டி மாதிரி சிக்கென்று அழகாக, அளவாக இருக்கிற சுமதி….

பெரும்பாலும் சனிக்கிழமை எனக்கு விடுமுறையாகவே இருக்கும். காலையே பலகாரம் சாப்பிட்ட கையோடு அத்தை வீட்டில் ஆஜராகிவிடுவேன். மாமா சைக்கிளுக்கு எண்ணெய் போடும்போது நான் உடன் இருக்க வேண்டும்.

முதலில் துணியால் சைக்கிளின் மேல் படர்ந்திருக்கும் தூக தும்பைத் துடைக்க வேண்டும். மாமா சைக்கிளுக்குப் பக்கத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு செயினின் ஒவ்வொரு பல்லுக்கும் சொட்டுச் சொட்டாக எண்ணெய் விடுவார். துணியில் லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு பட்டறை, ஹாண்டில் பார், குறுக்குப் பட்டைகள் எல்லாவற்றுக்கும் மினுமினுப்பு ஏற எண்ணெய் போடுவது என் பொறுப்பு. சக்கரப் பட்டையும், பட்டறையும் சும்மா பற்றிக்கொண்டு எரிகிற மாதிரி இருக்க

மாமாவுக்கு, சைக்கிளுக்கு எண்ணெய்க் காப்பு முடிந்ததும், கொஞ்சம் தள்ளி நின்று அதைப் பார்ப்பார். குழந்தை யைப் பார்க்கிற உற்சாகம் அவர் முகத்தில் ததும்பும். அப்புறம் பெடலை வேகமாக மிதித்துச் சக்கரத்தைச் சுழல விடுவார். சக்கரம் மயங்கிக் கொண்டு சுற்றும். சரக்கென்று பிரேக் போடுவார். உதறிக் கொண்டு நிற்கும் சக்கரம். சைக்கிள், சுமதி, நான், மற்றும் அத்தை எல்லோரும் தன் பிடிக்குள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு குளிக்கப் போவார்.

சைக்கிளை அவர் தவிர வேறு யாரும் தொடக் கூடாது. ஒருமுறை, மாமா அப்பால் போனதும், பெடலை வேகமாகச் சுழற்றி பிரேக் போட்டேன். வந்து விட்டார் மாமா. ‘கையை எடுடா கம்மனாட்டி என்றார்.

அது பிரான்ஸிலேயிருந்து வந்த சைக்கிள். அந்தத் தேசத்தி லிருந்து வந்த எதுவும் அவருக்கு உன்னதம். வெள்ளைக்காரர்கள் அவருக்குக் கடவுள் மாதிரி. (நாங்கள் இருந்தது பாண்டிச்சேரியில் – பிரெஞ்சு ஆட்சி நடத்து வந்த காலம்)

மாமா குளியல் அறைக்குள் போன பின்னால், எனக்குக் காப்பி வரும். அத்தை சுமதியிடம் கொடுத்தனுப்பும். ஒரு சனிக்கிழமையின் அற்புதமான கணம் அது. நானும் சுமதியும் பேசிக் கொள்ள ஒன்று மில்லை, பேசினால்தானா? ‘ரொம்ப சூடாக இருக்கே காப்பி, ஆற்றிக் கொள்ள இன்னொரு டம்ளர் கொடேன்,’ என்று தான் ஏதேனும் பேசத் தோன்றும் அதுவே போதும்தானே?

குளியல் அறையிலிருந்து கதம் சோப்பின் மணம் கூடத்துக்கு வந்தது, உடம்பைச் சிலிர்க்க வைக்கிற மணம். மல்லிகையா? மருக்கொழுந்தா? ஜவ்வாதா? எல்லாம் கலந்து, ஒரு மணம், கப்பல் வழி வந்த சோப். மாமா குளிக்காமல் இருப்பார், ஆனால் வேறு சோப்பைத் தொடமாட்டார்.

“வைத்தி சாப்புட்டானா” என்று கேட்டுக் கொண்டே குளியல் அறையிலிருந்து வெளிவந்தார்.

“தான் வீட்டுல ஆப்பம் சாப்பிட்டுதான் மாமா வந்தேன்.” “பரவாயில்லை. ரெண்டு தோசை சாப்பிடு.”

அதற்குமேல் நான் ஒன்றும் பேச முடியாது. சனிக்கிழமை மாமா எண்ணெய்த் தலை முழுகுகிற அன்றைக்குக் காலையில் தோசையும் போட்டிக்கறியும். மத்தியானம் கறிக்குழம்பும், ஈரல் வறுவலும். ராத்திரியில் ரொட்டியும் கறிக்குழம்பும். உலகம் புரண்டாலும் இந்த ‘மெனு’ மாறக்கூடாது. – தோசை வந்தது. சாப்பிடத் தொடங்கினேன். மாமா அறையி லிருந்து பவுடர் வாசனை வந்தது. இதுவும் கப்பல் சரக்குத்தான். இதன் பேர்கூட எனக்குத் தெரியாது. நாங்கள் குட்டிக்கூரா’வைத் தாண்டி வந்திருக்கவில்லை. மாமா உபயோகிப்பதோ, ஒரு வெள்ளைக்கார வாசனை. பந்து மாதிரி மேலே சுருட்டித் தூக்கிப் போகிற, பக்கென்று மூக்கை இடிக்காத, வருடிக் கொடுக்கிற, நாகரிகமான வாசனை.

அரைமணியில், வெளியே கிளம்புகிற ஆடையோடு மாமா வெளிப்பட்டார். பட்டுச்சட்டை, வாயில் வேஷ்டி. மஞ்சளும் இல்லாத சந்தன நிறமும் அல்லாத ஒரு வண்ணச் சட்டை புத்தம் புதிது. வெயில் பட்டால் எரிகிற மாதிரி மினுக்கும் சட்டை.

“சட்டை ரொம்ப நல்லா இருக்கு மாமா.”

“சும்மாவா? கப்பல்ல வந்த பட்டுடா. இந்த மாதிரி உங்க நாட்டுல ஒரு பயலுக்கு நெய்யத் தெரியுமா? சும்மா, உங்க அப்பன் மாதிரி வேலையத்த ஆளுக வெள்ளைக்காரளை ‘வெளியேறுங்க வெளியேறுங்க’ன்னு சுத்திக்கிட்டு இருந்தா ஆச்சா? வெள்ளைக் காரன் போயிடுவானா? இந்த மாதிரி ஒரு சைக்கிள், கச் இல்லாமே நாள் பட்டு உழைக்கிற மாதிரி ஒண்ணு பண்ண முடியுமாடா இந்த ஊர் ஆளுங்களாலே? காந்தி சொன்னாருன்னு கோணித் துணியைக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சா, வெள்ளைக்காரன் பயந்துடுவானாக்கும்” என்றவாறு சைக்கிளின் ஸ்டாண்டை நீக்கினார். வீட்டை மெதுவாகத் தடவிக் கொடுத்தார்.

கோணித்துணி என்றது கதரை, காந்திக் கட்சிக்காரனான என் அப்பாவைச் சொன்னால், அத்தைக்குச் சுருக்கென்னும். “சும்மா எதுக்கு எங்க அண்ணனைப் போறது” என்று கேட்டது அத்தை.

“அடடே டேடே” என்று பவிஷகாட்டினார் மாமா. அப்புறம், “நான் துரையைப் பார்த்துப் போட்டு வந்துடறேன். கோயில் பண்டாரம் வந்தாள்னா இருக்கச் சொல்லு” என்று கிளம்பினார்.

மாமாவுக்கு மல்லாக்கொட்டை ஏற்றுமதி வியாபாரம். அதன் தொடர்பாக வெள்ளைக்காரத் துரைமார்களின் சினேகிதம் அவருக்கு. அதில் மர்த்தேன் துரையோடு அவருக்கு நெருக்கம். மர்த்தேன்தான் அவருக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தியவன்.

சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் முடித்துக் கிடங்குக்குப் போய் மேற்பார்வை பார்த்துவிட்டுப் பன்னிரண்டு மணி அளவில் மாமா வீடு திரும்பினால், மிளகு ரசம் தயாராய் இருக்க வேண்டும், ரசம் குடித்து, அரைமணி கழித்துச் சாப்பிட்டுப் படுத்தால் உடம்பு வலியெல்லாம் ஓடிப் போய்விடும் என்று மாமா நம்பினார். மர்த்தேன் ஒருமுறை சொன்னாராம். ‘ரம் சாப்பிடுங்க மூஸே நட்ராஜன், ரம் கொஞ்சம் சாப்பிட்டு அப்புறமா சாப்பாடு எடுத்துக் கிட்டுப் படுங்க. ரெண்டு மணி தூங்கி எழுந்தீங்கன்னா உடம்பு வில்லு மாதிரி வளையாதா?”

மர்த்தேனே ஒரு பாட்டில் ரம்மும் வாங்கிப் பழக்கப்படுத்தி அனுப்பி வைத்தானாம். மர்த்தேன் வாக்கை வேதமாக ஏற்று ஒழுகி வந்தார் மாமா….

மத்தியானம் வந்தபோது அவருக்காகப் பண்டாரம் காத்தி ருந்தார். “பண்டாரம், திருவிழா ஏற்பாடெல்லாம் ரொம்பப் பிரமாதமா இருக்கணும்… போன வருஷம் மாதிரி இல்லே, இந்த வருஷம், துரைமாருங்கள் வரச் சொல்லியிருக்கேன், துரை கூத்துப் பார்க்கோணும்னார். மாலையெல்லாம் பெரிசா, நறுவிசா இருக்கணும். துணைக்கு இவனையும் வச்சுக்கோ ”

திரௌபதி அம்மன் ஒருநாள் உற்சவத்தை மாமா ஏற்றுச் செய்தார். அவர் பொறுப்பேற்றுச் செய்கிற தாள் ரொம்ப விசேஷமாக மற்ற நாள்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். கூட வெள்ளைக்கார அதிகாரிகள் வேறு விழாவிற்கு வருகிறார்களே. மாமாவுக்குப் பரபரப்பு. என்னை யும் பண்டாரத்தையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்.

அன்று மாமா ரொம்பக் கலையாகக் கம்பீரமாக இருந்தார். பட்டுச் சட்டையும், பட்டு வேஷ்டியும், பட்டுச் சால்வையும் மேலே; என்னமோ பிரான்ஸ் சென்ட் தடவியிருந்தார். கிட்டே போய் முகர்ந்து பார்க்கத் தூண்டும் வாசனை. அத்தை, நான், சுமதி எல்லோரும் கோயிலுக்கு நடந்தோம். முன்னே மாமா தலை நிமிர்ந்து இரண்டு பக்கமும் கம்பீரமாகப் பார்த்துக் கொண்டு நடத்தார். கிட்டத்தில் தான் கோயில். ஆகவே மாமாவின் சைக்கிளை நான் தள்ளிக் கொண்டு நடந்தேன். ஆசை தீரப் பிரேக் போட்டுக் கொண்டும், தள்ளிக் கொண்டும் நடந்தேன். ஏறி ஒரு வட்டம் அடித்தால் தேவலை என்றிருந்தது. மாமா கொன்று விடுவாரே!

உள்ளே போய் சுவாமி தரிசனம் பண்ணிக் கொண்டு மைதானத் துக்கு வந்தோம். கூத்துக்கம்பத்துக்கு முன்னால் நாலு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். கீழே ஜமக்காளம். நாங்கள் ஜமக்காளத்தில் அமர்ந்து கொண்டோம். மாமா நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார். வெளிச்சம் இன்னும் இருந்ததால் கியாஸ் லைட் பொருத்தம் இல்லாமல் எரிந்து கொண்டிருந்தது. சரியாக ஆறு மணி அடிக்கும் போது மர்த்தேன் துரை மனைவியுடன் வந்தார். கூடவே ஒரு போலீஸ்காரத்துரையும் வந்தார். மாமா எழுந்தோடிச் சென்று நாற்காலியில் உட்காரச் செய்தார். கோயில் காரியக்காரர் வத்து மூன்று பேருக்கும் மாலை போட்டார். வெள்ளைக்காரர்கள் ரொம்ப சந்தோஷமாக நீலக் கண்ணால் சிரித்தார்கள். செம்பட்டைத் தாடி மர்த்தேனுக்கு, இன்னொருவருக்கு வெறும் சிவப்பு மீசை. மஞ்சள் வெண்ணெயில் குங்குமம் போட்டுக் கலந்த மேனி.

மாமா அனுமதியுடன் கூத்துத் தொடங்கியது. ‘கர்ணமோட்சம்’ துரியோதனன் வந்து ஆக்ரோஷமாக வட்டமடித்து ஆடிப் பேசி உள்ளே போனான். துரியோதனனைத் தொடர்ந்து விதி ஒரு வெள்ளைக்காரன் உருவத்தில் வந்தது.

மர்த்தேனுக்குப் பெரிய வரும், முக்கிய அதிகாரியுமான செபஸ்தீன்தன் மனைவியோடு மைதானத்துக்கு வந்தார். கூட்டத்தில் சலசலப்பு எழவே, மாமா திரும்பிப் பார்த்தார். எழுந்து செபஸ்தினை தோக்கி ஓடினார். பின்னால் நான் அறிய நேர்ந்தது இது. மர்த்தேன், தான் கூத்துப் பார்க்கப் போகும் விஷயத்தைப் பேச்சு வாக்கில் செபஸ்தீன் துரையிடம் சொல்லியிருக்கிறார். துரை தன் மனைவி யிடம் அதைச் சொல்ல, அவனோ, ‘இந்தியர் நாடகத்தைப் பார்த்து விடுவது’ என்று கிளம்பி வந்துவிட்டாள், புருஷனோடு.

மாமா தின்று கொண்டிருக்க வேண்டி வந்தது. அவருடைய நாற்காலியில் துரையும், மற்றோர் அம்மா இருந்த நாற்காலியில் துரை மனைவியும் உட்கார்ந்து கொண்டார்கள். காரியஸ்தர் மாமாவுக்காக நாற்காலி தேடி ஓடினார். மாமாவுக்கு நிற்பது ஒரு மாதிரியாக இருந்திருக்கும் போல் தோன்றியது. அங்கவஸ்திரத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். நல்லவேளையாக நாற்காலி வந்தது. மாமா கடைசியாக இருந்த துரை மனைவியின் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.

எனக்கு நேர் எதிரே மாமா இருந்தார். துரைசானி திரும்பி இடப்பக்கம் இருந்த மாமாவைப் பார்ப்பது தெரிந்தது. வலப்பக்கம் இருந்த கணவனின் பக்கம் திரும்பி அவர் காதில் என்னவோ சொன்னாள். பெரியதுரை, அடுத்திருந்த மர்த்தேனிடம் கிசுகிசுத்தார். மர்த்தேன் எழுந்து வந்து மாமாவைத் தனியே அழைத்துப் போனார். அவர்கள் பேசியதைப் பின்னால் மாமா மூலம் நான் அறிந்தேன்.

“மன்னிக்கணும் முஸே நட்ராஜன்.”

“என்னங்க?.”

“நீங்க பக்கத்தில் உக்காருவது துரை மனைவிக்குப் பிடிக்கல்லே …”

“பிடிக்கல்லியா… எதுக்கு?”

“நான் நினைக்கிறேன் – என்ன இருந்தாலும் நீங்க எங்களுக்குச் சரிசமமா உக்காரலாமா? அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில்….”

மாமாவுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தி ருக்கிறது. அவர் பேசாமல் திரும்பி வந்தார். எங்களோடு ஜமக் காளத்தில் அமர்ந்து கொண்டார். தலையைக் கவிழ்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். அந்த நேரத்திலும் அவருக்கு வேர்த்திருந்ததைக் கவனித்தேன். திடுதிப்பென்று, “சரி…. போலாம் வாங்க…” என்று கிளம்பினார். எந்தக் கேள்வியும் இல்லாமல் நானும், அத்தையும், சுமதியும் கிளம்பினோம்.

திரும்பும்போது மாமா தலை கவிழ்ந்து கொண்டு வந்தார். நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உடன் வந்தேன்.

அடுத்த சனிக்கிழமையும் நான் மாமா வீட்டுக்குப் போனேன். மாமா எண்ணெய் ஸ்நானம் செய்தார். ஆனால் சைக்கிளுக்கு எண்ணெய் போட உட்காரவில்லை.

“மாமா… சைக்கிளுக்கு எண்ணெய் போடலாமா…”

குளியல் அறைக்குள் புகப்போனவர் நின்று என்னைப் பார்த்தார்.

“ம்…, வைத்தி.. உனக்கு இந்தச் சைக்கிள் மேல ரொம்ப ஆசை இல்லியா..”

“ஆ…மா… மாமா….”

“தீயே இதை வச்சுக்கோ…. இன்னிலேந்து அது உனக்குதான் சொந்தம்…”

குளியல் அறைக் கதவு சாத்திக்கொள்ளும் சப்தம் கேட்டது.

– 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *