சைக்கிள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 8,641 
 

சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம்.

அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்… ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ? அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கை கூடாமலே இழுபட்டுக்கொண்டிருந்தாலும்… அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.

அவன் வேலைக்குப் பஸ்சிலேதான் போவான். எட்டு வருடங்களுக்கு  முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. அப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழவேண்டியிருந்ததால்… ஷஒரு சைக்கிள் வேண்டிவிட்டால்| ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய்விடலாம் என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கிவிடலாம்.

ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.

அவனுக்கு நடந்து திரிவது அலுத்துப்போய்விட்டது என்று சொல்லமுடியாது. நடப்பதில் அவனுக்கு எவ்வித வெறுப்பும் ஏற்பட்டதில்லை. காலையில் எழுந்து பஸ்சுக்காக குடல் தெறிக்க நடப்பது, வீதிகளில் விடுப்புப் பார்த்துக்கொண்டு ஓய்வாக நடப்பது, கடைகளில் நல்ல பிடி பிடித்துவிட்டு வயிற்றைத் தூக்கிக்கொண்டு நடப்பது போன்ற….. இப்படிப் பலவித நடைகளுக்கும் பழக்கப்பட்டுப்போயிருந்தான். நடை அவனுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரிந்ததில்லை. நடப்பதை அவன் விரும்பியுமிருந்தான்.

ஆனாலும் ஷஒரு சைக்கிள் வேண்டினால்| கொஞ்சம் சுகமாகவும் இருக்கும், பஸ் செலவுகளும் மிச்சமாகும், உடலுக்கும் அப்பியாசமாக இருக்கும் என்றெல்லாம் தோன்றியது. சைக்கிள் ஓடுவது நல்ல தேகப்பியாசம் என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தொழிற்சாலைக்கு சைக்கிளிலே போய்வருவது… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்த மாதிரி… காசும் மிச்சமாகும், உடலும் இறகும் என அடிக்கடி நினைத்துக் கொண்டான்.

படிப்பு முடிந்து, வேலை கிடைப்பதற்கு இடையில் மூன்று வருடங்கள் வீட்டில் ஷசும்மா| இருந்தபொழுதும் அவன் சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லாமலேயே இருந்தான். அப்பொழுது கூட ஷஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது| என்றுதான் அவனுக்குத் தோன்றும். சும்மா வீட்டிலே நெடுகலும் அடைந்துகிடக்க முடியுமா, என்ன? நண்பர்களிடம் போனால் அவர்களோடு சைக்கிளில் ஷரவுண்ட்| அடிக்கலாம். அநேகமாக நண்பர்களிடமெல்லாம் ஒவ்வொரு சைக்கிள் இருந்தது. அவர்களில் ஒருவரோடு ஷடபிளில்| போகலாம். அவர்களைச் சைக்கிள் பாரில் இருத்தி அவன் மூச்சு வாங்க உளக்குவான். அப்பொழுதே தினமும் ஷலைபிரரிக்கு|ப் போகும் பழக்கமும் இருந்தது. லைபிரரி வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில் இருந்தது. நண்பர்களுக்கு அவனைப்போல் லைபிரரிக்குப் போகும் பழக்கம் பிடிக்காது. அதனால் அவன் நடந்தே போய் நடந்தே வருவான். சில நாட்களில் அவர்கள் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போவார்கள். பிறகு நடந்து வந்தே சேருவான்.

வீட்டிலே ஷசும்மா| இருந்தபடியால் கடைகளுக்குச் சாமான் வாங்கப்போவது முதற்கொண்டு சகலவிதமான வெளியிலே செய்யவேண்டிய வீட்டு அலுவல்களை அவனே கவனிக்க வேண்டியிருந்தது. நடந்தேபோய் சாமான்களைச் சுமந்தே கொண்டு வரும்போதெல்லாம் ஷஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது| என நினைத்துக்கொள்வான்.

ஒரு நாள் சனிக்கிழமை… அப்பா மத்தியானம் சாப்பிட்ட பிறகு நல்ல உறக்கத்திலிருந்தார். அவர் இனி எங்காவது போவதானாலும் மாலை ஐந்து மணிக்குப் பிறகுதான் கிளம்புவார். இரண்டு மணியைப் போல, சும்மா நிற்கிற சைக்கிளைக் கண்டதும் லைபிரரிக்குப் போனாலென்ன… என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.

‘அப்பா…. எழும்பிறதுக்கிடையிலை வந்திடுவன்… அஞ்சு மணிக்குப் பிறகுதானே போவார்?”

‘சுணங்காமல் வந்திடு ராசா…. பிறகு எப்பனெண்டாலும் அந்த மனிசன் துள்ளியடிக்கும்!” என்று சொல்லி அனுப்பினாள் அம்மா.

அவன் இப்படி வேலைவெட்டி இல்லாமலும், வேலைக்கு விண்ணப்பங்கள் போடுவதற்காகத் தபாற்கந்தோருக்கும் வீட்டு வேலைகளுக்குமாக அலைந்து திரிவதையும் பார்க்க அம்மாவுக்கு மனவருத்தம்தான். ‘பிள்ளை பாவம்…. கவலையிலையாக்கும்…. வயக்கெட்டுப் போகுது” என அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அம்மாவுக்கு இப்படி அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?

அன்றைக்கு அவனது கெட்ட காலமோ என்னவோ… சைக்கிளுக்குக் காற்றுப் போய்விட்டது! அது, அவனுக்கு மூச்சுப் போன மாதிரி இருந்தது. அப்பாவின் சைக்கிள் இருபது வரு~த்துக்கு மேலாக நின்று அவருக்குச் சேவை செய்கிறது. கறல் பிடித்த நிறம். ஆனாலும், உறுதியான சைக்கிள். பின்னே ஒரு பெரிய ஷகரியர்|. அதில் அகலமான பலகையைக் கட்டியிருப்பார். அந்தக் கரியரில் இரு பக்கமுமாக மூன்று, மூன்று வாழைக் குலைகளைக் கொழுவுவார். கரியரின் நடுவில் இரண்டு வாழைக்குலைகளைக் கட்டுவார். முன் ஹான்டிலில் இரண்டு குலைகளைக் கொழுவி, நடுவிலே ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்துப் பன்னிரண்டு வாழைக்குலைகளை அந்தச் சைக்கிளில் கொண்டு போகும் திறமை அப்பாவுக்கு இருந்ததோ… அல்லது அந்தச் சைக்கிளுக்கு இருந்ததோ தெரியாது. எவ்வளவு பாரமேற்றினாலம் அசையாத சைக்கிள். அப்பாவின் பக்குவமான பாவிப்பும் அதற்குக் காரணமாயிருக்கலாம். இலகுவில் ஷபிறேக்| பிடிக்கமாட்டார். பிறேக் பிடித்தால் டயரும் தேய்ந்துபோகும், பிறேக் கட்டையும் தேய்ந்து போகும் என்பதுதான் காரணம். அப்படி ஒரு தேவையாக… அவசரமாக நிறுத்தவேண்டி வந்தால் இருக்கையிலிருந்து ஒரே துள்ளலில் காலை முன்பக்கமாகத் தூக்கிக் குதித்துச் சைக்கிளைக் கைகளினால் இழுத்துப் பிடித்து நிறுத்திவிடுவார். இது ஒரு உதாரணத்துக்குத்தான். இதுபோல வலு கவனமாகவே சைக்கிளை உபயோகிப்பார்.

சைக்கிளை ஓட்டுவதற்கு முதல் ஒரு காலை பெடல் அச்சில் வைத்துத் தெத்தித் தெத்தி கொஞ்சத் தூரம் தள்ளிக்கொண்டு ஓடி… பிறகு முன்பக்கமாக ஒரு காலைச் சடாரென பாரின் மேலாக மறுபக்கம் போட்டு சீற்றில் அமர்ந்து உட்கார்ந்து உளக்கத் தொடங்குவார். இதைப் பார்க்கும்போது சைக்கிள் ஓடுவதற்கு முதல் ஒரு உந்துவிசை கொடுக்க வேண்டியது அவசியம்… இல்லாவிட்டால் அது ஓடாது என்பதுபோல இருக்கும். சீற்றிலே அமர்ந்துகொண்டு சும்மா நிற்கிற சைக்கிளை உளக்கத் தொடங்கினால், செயின் மற்றும் வீல்கள் தேய்வதற்கும் உடைவதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பது அவரது வாதம். இதனால்தானோ என்னவோ அந்தச் சைக்கிள் இருபது வரு~த்திற்கு மேலாக நின்று சேவை செய்கிறது.

ஆனால் அன்றைக்கு என்ன நேர்ந்ததோ அந்தச் சைக்கிளுக்கு… அவன் கொண்டுபோய் லைபிரரியில் விடும்வரை ஒரு தொல்லையுமில்லாமலிருந்தது. நாலு ஐம்பதுபோல வந்து வீட்டுக்குப் போகலாம் என சைக்கிளை எடுத்தால்… காற்றுப் போய்க் கிடக்கிறது!

அவனிடம் காற்று அடிக்கக்கூடக் காசு இல்லை. அப்பாவை நினைத்துப் பார்க்கையில் பயமாக இருந்தது. சைக்கிளுக்குக் காற்றுப்போன சங்கதியே அவருக்குப் பாரதூரமான வி~யமாயிருக்கும். இந்த நிலையில் ரியூப்தான் ஓட்டையாயிருக்கிறதோ, என்னவோ? ஷகடவுளே, அப்படி ஒரு அசம்பாவிதமும் நடந்திருக்கக்கூடாது| என வேண்டிக்கொண்டே சைக்கிளைக் கடைக்கு உருட்டிக்கொண்டு போனான்.

ஷகாற்று அடிக்க பத்து சதம்| என கடைக்காரன் போர்ட் போட்டிருந்தான்! இவனிடம் ஒரு சதத்திற்கும் வழியில்லை. தலையைச் சொறிந்துகொண்டு வெகுநேரம் நின்றான். ஆட்கள் குறைந்தபிறகு கடைக்காரனிடம் வி~யத்தை மெதுவாக அவிட்டான்.

‘சரி, சரி… அடியும்! நாளைக்குக் காசு கொண்டு வந்து தாரும்!” என்றான் கடைக்காரன். ஆனால் அடிக்க, அடிக்கக் காற்றுப் போய்க்கொண்டே இருந்தது. நெஞ்சு ஒரு பக்கம் இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. வால்வைக் கழட்டிப் பார்த்தால் அதிலும் பழுதில்லை… ரியூப்தான் ஓட்டையாகிவிட்டது.

காற்றில்லாத ரயருடன் உருட்டினால் ரியூப் வேறு இடங்களிலும் ஓட்டையாகக்கூடும் என நினைத்து, சைக்கிளைப் பின்பக்கமாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டே வீடுவரை உருட்டினான். வியர்க்க விறுவிறுக்க வீட்டையடைந்தபொழுது அப்பா, எதிர்பார்த்தது போலே சன்னதம் கொண்டு நின்றார்.

அவருக்கு அன்றைக்கு நேரத்தோடு போகவேண்டியிருந்தது. தோட்டங்களில் போய் வாழைக்குலை வேண்டிக் காலையில் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பது அவர் வேலை. அன்றைய பிழைப்புக் கெட்டுப்போய்விட்ட கோபம் ஒரு பக்கம். ஏற்கனவே சுணக்கம்.. அதிலும், சைக்கிள் ஓட்ட முடியாத நிலையிலும் வந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட சைக்கிளுக்கு இந்தக் கதி நேர்ந்ததைத்ததான் அவரால் தாங்கமுடியவில்லை. என்ன மாதிரி வசனங்களை அள்ளி வீசினார்.

‘வேலை வெட்டியில்லாத பரதேசிக்கு… சைக்கிள் தேவைப்படுகுதோ?… காவாலி கடப்புளியளோடை ஊர் சுத்தித் திரியிறதுக்கு என்ர சைக்கிள்தான் தேவையோ?…”

‘நான் விடிஞ்சால் பொழுதறுதியும் மாடுமாதிரி உழைக்கிறன்… ஓரிடத்திலையிருந்து திண்டு திண்டு, இவங்களுக்குக் கொழுப்பு வைச்சிட்டுது… இவங்களுக்குச் சோறு போடுறதே தண்டம்…. ஒரு நாளைக்கெண்டாலும் காய வைச்சால்தான் உழைப்பின்ரை அருமை தெரியும்…”

தண்டம்? தண்டச்சோறு? இதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. ஒரு நாளும் அப்பாவுக்குத் தலை நிமிர்ந்து கதைக்காதவன் அன்றைக்குக் கதைத்துவிட்டான்.

‘தண்டச்சோறு எண்டு மாத்திரம் சொல்லாதையுங்கோ…. நான் என்ன வேணுமெண்டோ சும்மா இருக்கிறன்?”

அப்பாவின் சன்னதம் தலைக்கேறியது…

‘என்னடா?….. வாய் மெத்திப்போச்சுது… கழுதைக்கு எவ்வளவு காசைக் கொட்டிப் படிப்பிச்சன்.. என்ன பிரயோசனம்?… படிக்கிறன், படிக்கிறனெண்டு… எல்லாரையும் பேய்க்காட்டிப் போட்டு… இப்ப சும்மா இருந்து தின்னுறாயோ?….”

‘நீங்களெல்லாம் இருக்கிறதைவிட செத்துத் துலையலாம்…” என்றவாறு வந்து அவனது கன்னம் கன்னமாக விளாசினார்.

அவன் வீம்பு கொண்டவனைப் போலப் பேசினான்.

‘நான் சாகத் தயார்…. நீங்கள்தானே பெத்தனீங்கள்? நஞ்சை வேண்டித் தாங்கோ சாகிறன்.”

‘என்னடா சொன்னனீ… நாயே! உனக்கு இஞ்சை சாப்பாடில்லை… போடா வெளியிலை…”

‘இண்டைக்குத் தொடக்கம் இவனுக்குத் தண்ணி வென்னிகூட குடுக்கக்கூடாது…. குடுத்தால் நான் இஞ்சை இருக்கமாட்டன்.”

அதைக் கேட்டுக்கொண்டு அவன் விறுமகட்டை மாதிரி நின்றான்.

‘போடா!” என அவனது கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். அவன் விறுக்கென வெளியே போனான். அம்மா வாசல்வரை குளறிக்கொண்டு ஓடி வந்தாள்.

அவன் தனது நண்பன் வீட்டுக்குப் போனான். அந்த ஷசும்மா இருந்து தின்னுகிற| வி~யம்தான் அவன் நெஞ்சைக் கடுமையாக வருத்தியது. அவன் ஷஅட்வான்ஸ் லெவல்| படித்தபொழுது, ரியூசன் போன்ற செலவுகளுக்கு அப்பா காசைக் கொட்டியது உண்மைதான். ஆனால் பரீட்சையில் நல்ல ரிசல்ட் கிடைத்தும் ஒரு தரமும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போனது அவன் குற்றமா? தரப்படுத்தல் முறை வந்தபிறகு, தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுப்போன இந்த நிலைமைகள் அப்பாவுக்கத் தெரியாதா, என்ன? திரும்ப வீட்டுக்கே போகக்கூடாது என நினைத்தான். ஆனால் நண்பன் நல்ல புத்தி சொன்னான்.

‘கொப்பர் கோபத்திலை பேசியிருப்பார்…. அவற்றை நிலையில அப்படிக் கதைத்தாலும்… நீ வீட்டை போ! அம்மா எவ்வளவு கவலைப்படுவா?”

அம்மாவை நினைத்ததும் உண்மையிலேயே அவனுக்குத் தாங்கமுடியாமல்தான் இருந்தது. ஷகோபத்தில் யாரும் பொறுப்பில்லாமல் வார்த்தைகளை உதிர்த்துவிடலாம். ஆனால் நாங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது| என நினைத்துக்கொண்டு இரவு திரும்பவும் வீட்டுக்குப் போனான். ஆனால் சாப்பிடவில்லை. நாலு நாளைக்குக் காயந்தால்தான் மனது சரிப்படும் போலிருந்தது. அம்மா அவனைச் சமாதானப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

இரவு வெகுநேரம் கடந்த பிறகுதான் அப்பாவும் வந்தார். அம்மாவுடன் கதைப்பது கேட்டது.

‘தம்பி…. சாப்பிட்டானா?”

அம்மா, அப்பொழுது கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாய் சீறுவதும் கேட்டது.

‘இந்த வெயிலுக்குள்ளாலை… ஒரு நாளைக்கு எத்தனை தரம் பிள்ளை நடந்து திரியுது? இருந்த சைக்கிளையும் கொண்டுபோய் வித்துத் திண்டிட்டியள்…”

‘நீ வா அப்பு சாப்பிடு!”

சைக்கிளை வித்துத் தின்ற கதையை அம்மா சொன்னதும் அவனுக்கும் ஒரு சைக்கிள் சொந்தமாக இருந்தது நினைவில் வந்தது.

பாடசாலையில் படித்த காலத்தில் அவன் நடந்தே போய் வருவான். வீட்டுக் காணியில் அப்பா சிறிதாகச்  செய்த தோட்டத்திற்கு ஒத்தாசை செய்து கொடுத்துவிட்டுப் போக பாடசாலை தொடங்கிவிடும். ஓ-எல்- படித்த அந்தக் காலத்தில், பின்னேரங்களில் ரியூசனுக்குப் போகவேண்டி இருந்தது. அப்பொழுதெல்லாம் ஷஒரு சைக்கிள் இருந்தால் நல்லது| என நினைப்பான். அப்பாவுடன் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது, மனநிலை அவருக்கு நல்லாயிருக்கும் நேரங்களில் கேட்டுப் பார்ப்பான். ஷபிறகு வேண்டலாம்| என அவர் சமாளித்துவிடுவார். ஆனால் ஓ-எல்- படித்து பாஸாகிறவரை அவனுக்கு சைக்கிள் கிடைக்கவில்லை. பரீட்சையில் ஒரே தடவையில் சிறந்த முறையில் பாஸாகியிருந்தான். ஒரு நாள் அப்பா அவனை ஷரௌணுக்கு| போக அழைத்தார். அவரது சைக்கிளின் பின் கரியரில் உட்கார்த்திக்கொண்டு போனார். போகிறபொழுது சொன்னார்…

‘உனக்கு ஒரு சைக்கிள் வேண்டப்போறன்….”

அவனுக்குக் நெஞ்சு விம்மிக் குமுறலெடுத்தது. எவ்வளவு அருமை! சைக்கிள் பழசோ அல்லது புதுசோ தெரியாது. எப்படியிருந்தாலும் அடுத்தநாள் பள்ளிக்கூடம் போகிறபொழுது சக பெடியன்கள் அசந்துவிடுவார்கள்.

ஒரு பெரிய கடைக்குக் கூட்டிச் சென்று சில பத்திரங்களைப் பதிந்து கொடுத்து… சைக்கிளை வேண்டி அவனிடம் கொடுத்தார் அப்பா. புத்தம் புதிய சைக்கிள், கறுத்த நிறம். சில்லுக் கம்பிகளும் றிம்மும் பளிச்சென மினுங்கின.

கட்டுக்காசுக்கு எடுத்த சைக்கிள், முதலில் நூற்று இருபத்தைந்து ரூபா கட்டியது. பிறகு ஆறு மாதங்களுக்கு முப்பது ரூபா வீதம் கட்ட வேண்டும். மடியில் இருந்து காசை எடுத்துக் கொடுத்து ஒரு லைட்டும், பூட்டும் வேண்;டித் தந்தார் அப்பா.

‘இரவில் லைட்டில்லாமல் ஓடக்கூடாது… எப்பவும் சைக்கிளைப் பூட்டித்தான் வைக்கவேணும்”

அப்பாவுக்கு முதலே வீட்டுக்குப் பறந்து வந்தான். தம்பியவர்கள் அதிசயத்துப் போனார்கள்.

அந்தச் சைக்கிளை அவன் பிள்ளையைப் போல் பாவித்தான். ஒவ்வொரு நாளும் துடைத்து மினுக்குவான். இரவல் குடுக்கமாட்டான். ஷடபிள்| ஏற்றமாட்டான். கடைகளுக்குப் போகிற சமயங்களில் அம்மாவிடம் வெட்டுகிற காசில் ஷஹிற்பாய்க், ஸ்டான்ட்| போன்றவற்றைச் சைக்கிளுக்கு எடுத்துப் பூட்டினான். சைக்கிள் எடுப்பாகத் தோற்றமளித்தது.

ஆனால் சைக்கிள் வேண்டி இரண்டு மாதங்கள் முழுசாக முடிய முதலே ஓர் அசம்பாவிதம் நடந்தது. ஒரு நாள் லைபிரரிக்குப் போய் வரும் வழியில்… அவனுக்கு முன்னே நண்பன் சங்கரன் இன்னொரு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். புதிதாகச் சைக்கிள் பழகியவன். கை நடுங்கற்காரன் மாதிரி ஓடினான். ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு தளும்பித் தளும்பி அவன் ஓடுவதைப் பார்க்க ஷவிழுந்து விடுவான் போலிருக்கு| என நினைக்கையிலே படாரென வீதியில் சரிந்தான்.

அவன் மேல் அடிபட்டு இவனும் விழுந்தான். பின்னால் ஏதோ வாகனம் வருவது போன்ற அசுகையில் அவசரமாக உருண்டு கரைக்குப் போனான். பெரிய லொறியொன்று அவனது புதிய சைக்கிளின் மேலாக ஏறி அப்பால் போனது. புத்தம் புதிய சைக்கிளின் கதை முடிந்தது.

‘அருந்தப்பு! சைக்கிளுக்கு மேலை ஏறின மாதிரிக்கு.. லொறி உம்மை அடிச்சிருந்தால் என்ன கெதி…? போய் முனியப்பருக்கு ஒரு தேங்காய் அடிச்சிட்டுப் போம்!”

அவ்வளவு சனங்களுக்கு முன்னிலையிலும் கொஞ்சம் விம்மல் எடுத்து அழுதான். அந்த லொறி அவனையே நெரித்திருந்தாலும் தாங்கியிருக்கலாம். அருமந்த சைக்கிள்! ஒரு ஷரக்சி| பிடித்து அதன் கரியரில் சைக்கிளைப் போட்டுக்கொண்டு வந்து வீடு சேர்ந்தான். பிறகு லொட லொடச் சத்தத்துடன் ஒரு வருடமளவில் தாக்குப்பிடித்தது.

அப்பா ஏதோ மாதச் சீட்டுக் கட்டிக்கொண்டிருந்தவர், ஒரு மாதத் தவணைச் சீட்டுக் காசு கொடுக்கும் வசதியில்லாமற்போக இந்தச் சைக்கிளை விற்றுவிட்டார்.. ‘அது அடிபட்ட சைக்கிள்…. சரியில்லை… பிறகு வேறை சைக்கிள் வேண்டலாம்!”

ஆனால் பள்ளிக்கூடப் படிப்பு முடியும்வரை அப்பா வேறு சைக்கிள் வேண்டாமலே கடத்திவிட்டார்…

வேலை இல்லாமல் இருந்த நாட்களில் ஷஒரு சைக்கிள் தேவையாக| இருந்தும் அவன் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வேலை கிடைத்தபிறகு சைக்கிள் வேண்டலாமென நினைத்துக்கொண்டான். நாலு காசு… தானே உழைத்துத்தான் சைக்கிள் வேண்ட வேண்டும். இனிச் சொந்தமாகச் சைக்கிள் எடுக்கிறவரை இரவல் ஓடுவதில்லை என்றுகூட எண்ணியிருந்தான்.



ஆனால் ஆசை யாரை விட்டது? கூட வேலை செய்யும் நண்பன் சாந்தன் தனது திருமணத்திற்காக நீண்ட நாள் விடுமுறையில் போகும்பொழுது தனது சைக்கிளை அவனிடம் ஒப்படைத்தான். ஷநான் வர்ற வரைக்கும், இதை வைச்சிரு..!| அந்த வார்த்தையைக் கேட்டதும் பல வருடங்களாக இவன் கட்டிக்காத்த ரோ~மெல்லாம் உடைந்து போனது. றேசிங் சைக்கிள். சிவப்பு நிறம். செயின்கவர் இல்லாதது. கேபிள் பிறேக். கொஞ்சம் பழைய சைக்கிள் என்றாலும் ஸ்போர்ட் மொடல் என்றபடியால் ஓடும்பொழுது ஸ்டைலாக இருக்கும்.

அவனுக்கு அது இரவல் சைக்கிள்போலவே தெரியவில்லை. சைக்கிள் தன்னிடம் நின்றது பெருமையாக இருந்தது. இரவில் அறையினுள் சைக்கிளையும் வைத்துப் பூட்டிவிட்டு படுக்கும்பொழுது இன்பமாக இருக்கும். விடிய எழுந்ததும் பஸ்சிற்காக அவசரப்பட்டு ஓடத் தேவையில்லை. அவன், அந்தச் சைக்கிளிலேயே வேலைக்குப் போவான். ஷஇந்த மாத பஸ் காசை…. மிச்சம் பிடிக்கலாம்!|

சாப்பாட்டுக் கடையிலும், மற்ற இடங்களிலும் அறிந்தவர்கள் கேட்டபொழுது தான் அந்தச் சைக்கிளை வேண்டியிருப்பதாகப் புளுகினான்.

‘இது சாந்தன்ரை சைக்கிளல்லோ?” என்று சிலர் சொன்னார்கள்.

‘ஓம்!…. அவனிட்டை இருந்துதான் வேண்டியிருக்கிறன்” என அசடு வழிந்தான்.

சாந்தனிடம் காசைக் கொடுத்து ஷஇந்தச் சைக்கிளை வேண்டியே விட்டாலென்ன| என்ற யோசனையும் தோன்றியது. அந்த யோசனை வந்ததும் இரவு நித்திரை பறிபோனது. சில கனவுகள் தோன்றின. நாற்பது ரூபா செலவு செய்து சைக்கிளைச் சேவிஸ் செய்து எடுத்தான். அதன் பிறகு சைக்கிள் நல்ல ஓட்டம் ஓடியது.

ஒரு நாள் மெய்மறந்து ஓடிக்கொண்டிருக்கையில் அவனது ஷபெல்பொட்டம்| கவரில்லாத செயினுக்குள் மாட்டுப்பட, தலை கரணமாக நிலத்தில் விழுந்தான். சைக்கிள் செயினும் அறுந்துபோனது. வேறு சில திருத்த வேலைகளும் ஏற்பட்டன. இதனால் திரும்பவும் எழுபது ரூபாயளவில் செலவு செய்ய வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் அது தனது சைக்கிள்தானே என நினைத்துக்கொண்டு ஆறுதலடைந்தான். சாந்தன் வந்ததும் எப்படியும் அதைத் தனக்குத் தந்துவிடுமாறு கேட்கவேண்டுமென நினைத்தான். அதுதான் தனக்கு ஏற்ற சைக்கிள் என்று தோன்றியது – புதிய சைக்கிள் வேண்டவும் வக்கில்லை. சாந்தனுக்குக் காசை ஒரேயடியாகக் கொடுக்காமல் தவணை முறையிலும் கொடுக்கலாம். செலவழித்து…. சைக்கிள் முன்னரைவிடக் கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதால், திரும்ப எடுக்கச் சாந்தனுக்கு மனமும் வராது. எனவே கட்டாயமாக ஷசைக்கிள் தனது கைக்கு வந்துவிடும்| என நினைத்தான்.

சைக்கிளுக்குப் பூட்டில்லை. ஒரு நல்ல பூட்டு வேண்டிப் போடவேண்டுமென நினைத்தான்.  இருபது ரூபாயளவில் வரும். ஏற்கனவே கையிலிருந்த காசுகள் திருத்த வேலைகளோடு போயிற்று. இனிச் சம்பளத்தோடுதான் வேண்டலாம்… ஆனால், பூட்டு வேண்ட வேண்டிய அவசியம் விரைவிலேயே இல்லாமற் போய்விட்டது! ஒருநாள் லைபிரரிச் சுவரோடு சாய்த்துவிட்டு உள்ளே புத்தகங்களோடு மூழ்கி… இரண்டு மணித்தியாலங்களின் பின் வந்து பார்க்க, சைக்கிளைக் காணவில்லை! பிறகு என்ன? சாந்தனுக்கு சைக்கிளுக்குரிய தொகையைக் கட்ட வேண்டியதாயிற்று… தவணை முறையில் கட்டுவதாக ஒப்புக்கொண்டான்.

உத்தியோகம் கிடைத்து ஐந்தாறு வருடமாகியும் ஷஒரு சைக்கிள் வேண்டுவதற்கு| சக்தியில்லாமற் போனதுதான், இரவல் சைக்கிள் பாவிப்பதில்லை என்ற தன் வைராக்கியம் உடைந்ததற்கும்… சாந்தனின் சைக்கிளைச் சொந்தம் கொண்டாடவேண்டி வந்ததற்கும் காரணம் என எண்ணித் தன்னையே நொந்துகொண்டான்.

வேலை கிடைத்த முதல் மாதமே சைக்கிள் வேண்ட வேண்டுமென்றுதான் முதலில் நினைத்திருந்தான்.

தொழிற்சாலையில் அவனுக்குக் கிடைத்த வேலைக்கு ஒரு வருடம் பயிற்சி பெறவேண்டும். பயிற்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐந்து ரூபா முப்பத்தைந்து சதம் படி! முதல் மாதம் நூற்றைம்பது சொச்சம் கையில் கிடைத்தது. அது சாப்பாட்டிற்கே போதாது… பஸ் செலவு வேறு. அதைச் சரிக்கட்ட அப்பா வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் அனுப்பிவைத்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஓ.ரி.யும் செய்து கூட உழைக்கக்கூடியதாக இருந்தது. சொந்தமாக உழைத்துச் சாப்பாட்டிற்குச் செலவு செய்கிற பொழுதுதான் பணத்தின் அருமையும் பொறுப்பும் தெரிய வருகின்றன. அப்பா எவ்வளவு க~;டப்பட்டிருப்பார்! ஒரு நாளைக்கு பத்து வாழைக்குலை விற்றாலும் இருபத்தைந்து ரூபா லாபம் கிடைக்குமோ?

அவன் உழைக்கிற பணத்தில் சாப்பாட்டுச் செலவுகள் போக, வீட்டுக்கும் அனுப்பினான். அதனால் சைக்கிள் வேண்டும் எண்ணத்தை ஒரு வருடத்திற்கு ஒத்திப்போட்டான். நிரந்தர வேலை கிடைத்துவிட்டால் சைக்கிள் வாங்குவதற்குக் கடன் கூட எடுக்கலாம். அப்போது சைக்கிள் எடுக்கலாம் என நினைத்துக் கொண்டான்.

மூன்று வருடங்கள் நிரந்தரமாக்காமலே ஐந்து முப்பத்தைந்துடன் இழுத்தடித்தார்கள். ஆனாலும் வீட்டில் சும்மா இருந்த மூன்று வருடங்களை விட இந்த மூன்று வருடங்கள் பரவாயில்லை என்ற தோன்றியது. மற்றவர்களுக்குக் க~;டமாக இருப்பதைவிட, இதில் க~;டங்களை தானே சுமந்து கொள்ளலாம். மற்றவர்களின் க~;டங்களையும் கொஞ்சம் சுமக்கலாம். ஷஉத்தியோகமானதும் தனது சொந்தப் பணத்தில் சைக்கிள் வேண்ட வேண்டும்| என்ற எண்ணம் உள் மனதில் ஆசையாக இருந்தாலும், வெளிப்படையாக அது தன்னைத் தீவிரப்படுத்தியது இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் உணர முடிந்தது. வேலை நிரந்தரமானதும் சம்பளம் எழுநூறாக அதிகரித்தது. மேலதிக நேரமும் உழைத்தால் ஆயிரத்துச் சொச்சம் கையிலெடுக்கலாம். ஷஇனி எப்படியாவது சைக்கிள் எடுத்துவிடலாம்| என்ற நம்பிக்கை பிறந்தது.

ஷவேலை நிரந்தரமாகியது சந்தோ~ம்!| அப்பா கடிதம் போட்டிருந்தார். கூடவே அவரது கடன் சுமைகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இவ்வளவு கடன்களையும் சுமந்துகொண்டுதானா சாதாரணமாக இருந்திருக்கிறார்! அம்மாவுக்குக்கூடத் தெரியாமல் தான் மட்டுமே அந்தப் பளுவைத் தாங்கியிருக்கிறார்! மகனது உத்தியோகம் நிரந்தரமாகவும்வரை அவனுக்குக்கூட அதைத் தெரிவிக்கவில்லை.. அந்தக் கவலை யாரையும் பாதிக்க அவர் விடவில்லை. அந்தக் கடனைத் தீர்க்கத் தன் பிள்ளையால் முடியும் என்ற நிலை வந்தபிறகுதான் அவனுக்குத் தெரிவித்திருக்கிறார்!… ஷஇந்தக் கடனை நினைச்சுத்தான் இரவு பகலா நித்திரையில்லை!|

அப்பாவை நிம்மதியாக இருக்கவிட்டு, சுமையை எல்லாம் இனித் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மானசீகமாக எண்ணினான். அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. சைக்கிள் வேண்டும் யோசனையை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிப்போட வேண்டியதுதான்.

சைக்கிள்….!

குடும்ப இயக்கமே ஒரு சைக்கிளைப் போலத்தான். ஒருவரின் உழைப்பு – பெடலை மிதித்து ஒரு சில்லை இயக்கினால்தான் மற்றதும் இயங்கும். இரண்டும் சேர்ந்து உருளும்போதுதான் சைக்கிளே ஓடுகிறது! அந்தச் சில்லு சும்மா இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதுகூட சைக்கிளுக்கு எவ்வளவு இன்றியமையாதது? ஷஇவ்வளவு காலமும் பெடலை மிதித்தவர் அப்பா. இனி மிதிக்க வேண்டியவன் நான்தான்| என எண்ணிக்கொண்டான். அப்பாவுக்கு ஓய்வு.

வேலை நிரந்தரமாகி மூன்று மாதங்கள் முடிந்ததும் அலுவலகத்திலிருந்து ஷடிஸ்ற்றஸ் லோன், சைக்கிள் கடன்| போன்ற சகலவிதமான கடன்களையும் எடுத்தான். சைக்கிள் லோன் எடுப்பதானால், சைக்கிள் வேண்டியதற்குரிய ரசீது சமர்ப்பிக்க வேண்டும். இருபது ரூபா கொடுத்து ஒரு கடைக்காரனிடம் மாதிரி ரசீது பெற்றுக்கொண்டான். கடன்களை எடுத்து அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான்.

எடுத்த கடன்களுக்குரிய வெட்டுத்தொகை, அவற்றின் வட்டிகளின் வெட்டு ஆகியன சம்பளத்தில் விழுந்தபொழுது மாதத்தில் கையில் வரும் தொகை இன்னும் நியாயமான அளவு குறைந்தது. சாப்பாட்டுச் செலவு, அறை வாடகை, பஸ் செலவுகள்… வீட்டுக்கு வழமையாக அனுப்ப வேண்டிய தொகை, சில வேளைகளில் பஸ்ஸிற்குக்கூட அறை நண்பர்களிடம் தலையைச் சொறிய வேண்டியிருக்கும்.

சைக்கிள்…!

ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென எட்டு வருடங்களுக்கு மேலாக இருந்த ஆசை இப்போது நிறைவேறப்போகிறது! தொழிற்சாலையின் நலன்புரிச்சங்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு சைக்கிள் எடுத்துக் கொடுக்கப் போகிறார்களாம். சம்பளத்தில் முதலில் ஒரு தொகையும், பிறகு தவணை முறையிலும் பணம் வெட்டப்படும். இது நல்ல ஐடியாதான். சைக்கிளுக்குப் பணமாகக் கடனைக் கொடுத்தாலும் அது வேறு தேவைகளுக்குப் பாவிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இப்பொழுது சைக்கிளாகவே கிடைக்கப்போகிறது. சைக்கிளுக்காகத் தனது பெயரையும் பதிந்துகொண்டான்.

சைக்கிள்…!

அவனது மனதில் நிறையக் கனவுகளை விரித்த சைக்கிள் நனவாகப் போகிறது! இனி, அவனது சைக்கிள் கனவு நனவாகப் போகிறது! இனி, அவன் ஒரு சைக்கிளுக்குச் சொந்தக்காரனாகப் போவது சர்வ நிச்சயம்!

மாத விடுமுறையில், அவன் வீட்டுக்குப் போயிருந்தான். ஷசைக்கிள் எடுக்கும் வி~யத்தை| அப்பாவுக்குச் சொல்லவேண்டும் போலிருந்தது. அம்மாவுக்குப் பழைய சம்பவம் கூட நினைவுக்கு வரலாம். அன்று பட்ட வேதனைக்குச் சந்தோ~ப்படுவாள். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்..!

இரவு எல்லோரும் ஆறுதலாக இருக்கிற நேரத்தில் புதிய சைக்கிள் எடுக்கிற வி~யத்தை அவிட்டு விடலாமென பெரிய திட்டமே போட்டிருந்தான்.

இரவு மழை பெய்துகொண்டிருந்தது. எட்டு மணியாகியும் தம்பியைக் காணவில்லை என அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஷஇந்தக் காலத்திலை…. ஆம்பிளைப் பிள்ளையளை வெளியிலை விட்டிட்டு வயித்திலை நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கு…! ஆமிக்காரங்களின்டையிருந்து தப்பி வந்து சேரவேணுமே..|

‘தம்பி எங்கை போனவன்?” என அவன் அம்மாவிடம் விசாரித்தான்.

‘பாவம் பிள்ளைக்கு ஒரே அலைச்சல்…. விடியப்புறத்திலை எழும்பி.. எங்கையோ இங்கிலி~; ரியூசனுக்காம் போறவன். பிறகு வந்து ஆவறி போவறி எண்டு சாப்பிட்டிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். பின்னேரம் வந்து, அந்தக் கையோட பிறகும் ரியூ~னுக்குப் போறது… இஞ்சையிருந்து யாழ்ப்பாணத்துக்கு…. மூண்டு மைல் நடக்கிறதெண்டால் சும்மாவே….? சில நாளையிலை மழையிலை நனைஞ்சு நனைஞ்சுதான் ஓடிவருவான்…. பிள்ளை ஒரு சைக்கிள் இல்லாமல்… எவ்வளவு க~;டப்படுகுது!”

அம்மா பெருமூச்சோடு அவனை நோக்கினாள்.

சைக்கிள்…!

பின்னே உள்ள சில்லு உந்துவிசை கொடுத்தால்தானே முன்னே உள்ளே சில்லு நகரும்? சைக்கிளும் ஓடும்!

‘தம்பிக்காக நான் ஒரு சைக்கிளுக்கு ஓடர் குடுத்திருக்கிறன்…. இன்னும் இரண்டொரு கிழமையிலை வந்திடும்!” என்றான் அவன்.

– சிரித்திரன் சஞ்சிகையில் வெளியானது – 1983

Print Friendly, PDF & Email

1 thought on “சைக்கிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *