சேர்ந்தும் சேராமலும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 8,150 
 

“ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?”

“ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?”

ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், மனைவி அமுதன் மற்றும் காயத்ரியின் உரையாடல்தான் இது.

இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார்கள். இருவரும் தத்தம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான தனி நபர்களுக்கோ (அவர் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் பட்சத்தில்) அல்லது பெரும்பாலும் நிறுவனங்களுக்கோ சென்று ஆடிட்டிங் பார்ப்பார்கள்.

இருவரின் பெற்றோர்களும் ஆசைஆசையாகப் பார்த்து செய்துவைத்த திருமணம் இவர்களது. வெகு விமரிசையாக நடந்தது. வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாகவே சென்றது. சில மாதங்களில் அமுதனின் வேலை இரவுக்காட்சி ஆனது. அது ஒரு முக்கியமான நிறுவனத்தின் ஆடிட்டிங் பார்க்கவேண்டிய வேலை, அமுதனின் அனுபவம் தேவைப்பட்டது.

அப்போதிலிருந்துதான் அசெளகிர்யம் ஆரம்பித்தது. அமுதன் மாலை வேலைக்குக் கிளம்பும்போது காயத்ரி அலுவலகத்தில் இருந்து வந்திருக்கமாட்டாள், அவன் காலையில் வீடு திரும்பும்போது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். அதேபோல், அவள் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் அவன் உறங்கிக்கொண்டிருப்பான். அவள் வீட்டுக்கு வரும்போது அவன் இருக்கமாட்டான்.

வாரவிடுமுறையாவது ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடலாம் என்றால், அதற்கும் சோதனை வரும் — வேலைப்பளுவினால் அவனோ அவளோ அல்லது இருவருக்குமோ சனி, ஞாயிறு இரு நாட்களும் அலுவலகம் செல்லவேண்டியிருக்கும். இல்லையென்றால் யாராவது உறவினர்கள் வந்து தொலைப்பார்கள். ஆக மொத்தம் இருவரும் பார்த்துக்கொள்வதே பெரும்பாடானது.

ஏதாவது முடிவுசெய்து நிலைமையைச் சரிசெய்யலாம் என நினைத்தாலும் அதற்கு நேரமே அமையவில்லை. அவனைவிட அவள்தான் ரொம்பவும் வருத்தப்பட்டாள், கணவனுடன் சேர்ந்து இருக்க முடியவில்லையே என. அவன் வேலைப்பளுவினால் இதைப்பற்றி நினைக்கவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான்.

சில தோழிகளிடமும், தன் பெரியப்பா பெண்ணிடமும் கலந்தாலோசித்தாள். வேலையை விடுவதைத் தவிர வேறு உருப்படியான யோசனை எதுவும் யாரும் கொடுக்கவில்லை. ‘இவர்களைக் கேட்டு உபயோகம் இல்லை, இனி தானே யோசித்து முடிவெடுக்கலாம்’ என நினைத்துக்கொண்டாள்.

பலமான யோசனைக்குப் பிறகு தானும் இரவுப்பணிக்குச் செல்வதென முடிவெடுத்தாள் (இப்போதைக்கு அமுதனால் பகல்நேரப்பணிக்கு மாறமுடியாததால்). தன் மேலாளரிடம் பேசி பகலில் இருந்து இரவுக்கு தன் பணியை மாற்றிக்கொண்டாள். இரவுப்பணி தேவைப்படும் வாடிக்கையாளர் நிறுவனத்தின் ஆடிட்டிங் வேலையை கேட்டு வாங்கிச் செய்ய ஆரம்பித்தாள். சில வாடிக்கையாளர்கள் நிறுவனங்களில் ஆடிட்டிங் செய்யவேண்டியவை அதிகமாகும்போது ஆடிட்டிங் நிறுவனங்கள் பகல், இரவு எனத் தொடர்ந்து வேலை செய்து முடிக்கும். அவ்வாறு இரவுப்பணியை தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.

தனக்காக காயத்ரி உடல் வருத்திக்கொண்டு இரவில் வேலை செய்வதைக்கண்டு அமுதன் மனம் வருந்தினான், அவள்தான் அவனைச் சமாதானப்படுத்தினாள்.

ஒரே ஒரு வாரம் கூட நிம்மதியாக இருந்திருக்கமாட்டார்கள், அதற்குள் அந்த விஷயம் நடந்தது. அமுதன் வேலைபார்த்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர் நிறுவனம் தொழிற்சங்கப் பிரச்சனையால் தற்காலிகமாக மூடிவிட்டார்கள். அதனால் அமுதன் வேறொரு வாடிக்கையாளர் நிறுவனத்தின் கணக்கு வழக்கைப் பார்க்க பணிக்கப்பட்டான். பிரச்சனை என்னவென்றால், இந்தப்புது வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவனுக்கு பகல்நேரப்பணி. காயத்ரி மீண்டும் துயரப்பட ஆரம்பித்தாள். இப்போதுதான் அவள் இந்நிறுவன ஆடிட்டிங் வேலையைப் பார்க்க ஆரம்பித்ததால் அவளால் உடனே பழையபடி பகல்நேரப்பணிக்கு மாறமுடியவில்லை. அமுதன் வேலையில் சீனியர் என்பதால் சில வாடிக்கையாளர்கள் நிறுவனங்களின் ஆடிட்டிங்கைத்தான் பார்க்கமுடியும். மேலும் இன்னும் சில மாதங்களில் அவன் பதவியுயர்வை எதிர்பார்ப்பதால் காயத்ரியின் நிறுவனத்துக்கோ இல்லை வேறு நிறுவனத்திற்கோ தற்போது தாவ விரும்பவில்லை. காயத்ரி கொஞ்சம் ஜுனியர் என்பதால் இவன் நிறுவனத்தில் தற்போதைக்கு அவள் நிலையில் உள்ளவர்களின் பணியிடத்தில் வேலை எதுவும் காலியில்லை.

பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு வருடம் ஓட்டினார்கள். காயத்ரியால் சுத்தமாக முடியவில்லை. வேலையை விட்டுவிடுவதாகச் சொன்னால் அமுதன் சம்மதிக்கவில்லை, ‘எப்படியும் கர்ப்பமானால் வேலையை விடவேண்டும், அப்போது மொத்தமாக விட்டுவிடலாம்’ என அவளை சமாதானப்படுத்தினான். அவர்களின் நேரம், என்ன முயற்சித்தும் அவள் கர்ப்பமாகவில்லை.

‘இனியும் பொறுக்க முடியாது, இவனைக் கேட்டாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்’ என முடிவெடுத்து அவனைக் கேட்காமலே வேலையை விட்டுவிட்டாள். தன்னிச்சையாக அவள் முடிவெடுத்தது அவனை முதலில் கோபப்படுத்தினாலும், பிறகு பல விஷயங்களால் சமாதானமானான். அவள் கர்மசிரத்தையாக அவனுக்கு முன்பே எழுந்து, குளித்து, அவனுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் தயார்செய்து தந்தாள். மாலை அவன் வீட்டில் நுழைகையிலேயே இன்முறுவலுடன் வரவேற்பாள். இரவில் இருவரும் சந்தோஷமாக இருந்தனர். சில வாரங்களிலேயே இருவரது மனநிலையிலும் ஒரு நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அவனால் அலுவலக வேலைகளில் முன்பைவிட இன்னும் அதிக கவனத்துடன் வேலைபார்க்க முடிந்தது, அவன் எதிர்பார்த்த பதவி உயர்வு சீக்கிரமே வந்தது. அவளது மனமும் ரொம்பவே சாந்தமானது, எப்போதும் அவனைப் பற்றியும் வீட்டைப் பற்றியுமே நினைத்துக்கொண்டிருந்தாள்.

இவையெல்லாம் சேர்ந்து அவர்கள் ஆசைப்பட்டபடியே அவள் கர்ப்பமானாள். அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது, விமலன் எனப்பெயரிட்டார்கள். அவனை நல்ல பிள்ளையாக வளர்த்தார்கள். யாரும் சொல்லாமலே அவன் தானும் பெற்றோர் போலவே ஆடிட்டர் ஆகவேண்டும் என்று விருப்பப்பட்டான். அவனை அவனாகவே இருக்க அனுமதித்தார்கள்.

அவன் நன்றாகப் படித்து முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் பிரபல ஆடிட்டரின் உதவியாளனாகச் சேர்ந்தான். சில வருடங்களில் அமுதன் விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டான். விமலனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். சிலபல தேடலுக்குப்பின் ஒரு பெண்ணை மூவருக்கும் பிடித்தது. திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

எல்லாம் நன்றாகவே சென்றது, சில மாதங்களில் விமலனின் வேலை இரவுப்பணிக்கு மாறியது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “சேர்ந்தும் சேராமலும்

  1. அருமை….அவனும் ஓடினான் அவன் பிள்ளையும் ஓடினான்……வாழ்க்கை சக்கரம் சுழன்றது….

    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *