கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 5,726 
 

தங்கம்மாவுக்கு தலைக்குமேல் வேலை கிடந்தது.

அந்தக் காலத்துப் பாணியில் அமைக்கப்பட்ட பெரிய நாச்சார வீடு. பெயின்ரர்கள் தமது வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள்.அவர்கள் அகற்றிவைத்த தளபாடங்களை பழைய இடங்களில் ஒழுங்குபடுத்திவிட்டுத்தான் சென்றார்கள், ஆனால் பெயின்ரு நிலத்தில் ஆங்காங்கே சிந்திக்கிடந்தது. பொருட்களில் தூசு படிந்துகிடந்தது .கழற்றிய திரைச்சீலைகள் கழட்டியபடியே கிடந்தன. பத்தாதற்கு முற்றம் ,கோடி என்பன பலகாலம் சுத்தப்படுத்தப்படாமல் புதர்மண்டிக் கிடந்தன. இத்தனையையும் தங்கம்மாவால் தனித்து சுத்தம் செய்யவது முடியாத காரியம் .அதனால் சரசுவையும் அவள் கணவன் ராசனையும் உதவிக்கு கூப்பிட்டிருந்தா.சரசவும் ராசனும் உடனடியாக ஒன்றும் வந்துவிடவில்லை.அவர்களுக்கோ ஆயிரம் இடத்தில் வேலை. தங்காம்மாவிடம் ஓடி வரவேண்டும் என்று அவசியமில்லைத்தான்.

பலமுறை அழைத்த பின்பு தங்கம்மாவின் நச்சரிப்பைத் தாங்காது ஒருவாறு இருவரும் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் தங்கம்மாவும் சரிக்கு சரி வேலைசெய்தா.

75வயதில் 30 வயது சரசுவுக்கு இணையாக் தங்கம்மாவும் வேலைசெய்ததைப்பார்க்க சரசுவுக்க்கே ஆச்சரியமாக இருந்தது.

அடிக்கடி நோய் எனப் படுத்துவிடும் உடம்புதான் தங்கம்மாவுக்கு, ஆனாலும் மனதின் உற்சாகம் நோய்க்குக் கூட விடுதலைவிட்டுவிட்டதோ ..?

வீட்டைச் ச சுத்தம் செய்தால் மட்டும் போதாதே, வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள்….

தங்கம்மாவிடம் பழைய மொடல் கருப்பு வெள்ளை T.V தான் இருக்கிறது. கலர் T,V வாங்கவேண்டும் ,வீட்டில் இருக்கும் பிறிட்யும் மிகவும் பழசு சரியாக வேலைசெய்யாது . சீலிங் ஃபானும் இரண்டுதான் இருக்கின்றன..

யாழ்ப்பாணத்தில் எலற்றிக் சாமான் கடை வைத்திருக்கும் செல்வத்திடம் சொல்லி குளிர்சாதனப் பெட்டி முதலான பொருட்களை வாங்கி இணைப்பும் செய்தாயிற்று.

செல்விக்கு பிடிக்கும் மிக்சர் ,தட்டைவடையை கடையில் வாங்கி வைத்தாயிற்று . வரதனுக்குப் பிடிக்கும் பயத்தமுருண்டை, வாங்கினால் சரிப்படாது. தங்கம்மாவுக்கு தன்கையால் செய்தால் தான் திருப்தியாக இருக்கும். இரண்டுநாளாக இதே காரியமாக மினக்கட்டதில் 300 வரை உருண்டைகள் செய்தாகிவிட்டது. இவையெல்லாம் செய்தும் கூட தங்கம்மாவுக்கு திருப்தி ஏற்படவில்லை,

இருகுடும்பத்தாரின் பெயரிலும் தனித்தனியே உருத்திராபிசேகம் செய்வதற்கு நல்லூர்க் கோயிலுக்குப் போய் பதிவுசெய்துவிட்டு வந்தா.வீரகாளியம்மனுக்கு பொங்கல் வைப்பதாகவும் வைரவருக்கு படையல் வைப்பதாகவும் மனதுக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டா.

பத்தாண்டுகளுக்கு மேல் தேக்கிவைத்திருந்த ஏக்கம் ..பெருந்தாகம் என்றுகூடச் சொல்லலாம். தனிமையின் கொடுமைக்குள்ளும் வரதனதும் செல்வியினதும் நினைப்பு ஒன்றே உயிரூட்டமாக தங்கம்மாவுக்கு இருந்துவந்திருக்கிறது.

விசாகன் தங்கம்மா கார்த்திகேசர் ஆகியோரின் மூத்த மகன். .அவன் இயக்கத்துக்கு போனதால் தங்கம்மா குடும்பம் 1995 இல் வன்னிக்கு இடம்பெயர நேரிட்டது. தங்கம்மா குடும்பம் இடம்பெயர்ந்து இருந்தபோது விசாகனுக்கு 22 வயது. வரதனுக்கு பதினெட்டுவயது.செல்விக்கு வயது பன்னிரண்டு மட்டுமே. வரதன் தனது பதினாறு வயதிலேயே மாமனின் உதவியால் நோர்வேக்கு போய்விட்டான். அது அந்தக்காலத்தில் தங்கம்மாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது, ஆனால் விசாகன் இயக்கச் சண்டை ஒன்றில் இறந்ததும் அதேஆண்டு கார்த்திகேசர் செல்லுக்கு பலியானதும் தங்காம்மாவுக்கு பேரிடியாக அமைந்தன. தனித்துவிட்ட தங்கம்மா செல்வியுடன் வன்னியில் பட்ட கஸ்டங்கள் சொல்லில் அடங்காதவை. வன்னியில் இருந்து 2002 இல் யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறிய வருடமே செல்வியையும் அரும்பாடுபட்டு நோர்வேக்கு அனுப்பிவைத்தா தங்கம்மா.

2002இல் பிரிந்து சென்ற செல்வியும் 1993ஆம் ஆண்டு பிரிந்துசென்ற வரதனும் 2012 இல் தான் நாடு திரும்புகிறார்கள்.

வரதன் திருமணம் செய்த பின்பு லண்டன் வாசியாகிவிட்டான். அவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். செல்வி .தங்கம்மாவின் அனுமதியின்றியே நோர்வே நாட்டவனை மணம் செய்து கொண்டாள்.அவளுக்கு ஒரு பெண்பிள்ளை மட்டுமே.

செல்வியின் கலியாணத்தை தங்கம்மாவினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…அதற்கு தங்கம்மாவைப் பொறுத்தவரை பல காரணங்கள் இருந்தன.. வெளிநாட்டவர்கள் சிலகாலம் ஒன்றாக வாழ்ந்து விட்டு பிரிந்து விடுவார்களாமே… அதன்பின் செல்வியின் கதி… அவளும் தன் ஜோடியை காலத்துக்கு காலம் மாற்றிக்கொள்வாளா….?

தங்கம்மாவின் தம்பி கணேசின் மகன் சுரேனை செல்வி கட்டவேண்டும் என அக்கா தம்பி இருவரும் விரும்பினார்கள். . அது நடக்காமல் போன ஏமாற்றத்தை தங்கம்மாவல் தாங்கமுடியாதிருந்தது.

இதனால் செல்வியிடம் சில ஆண்டுகள் பேசாதிருந்தா தங்கம்மா. ஆனால் செல்வி தொடர்ந்து ரெலிபோன் எடுக்கவே அவவின் பிடிவாதமும் ஒருகட்டத்தில் உடைந்துதான் போனது. செல்வி தாயை பலதடவைக்குமேல் நோர்வேக்கு வரும்படி கெஞ்சிக் கேட்டுவிட்டாள். நோர்வேயில் நிரந்தரமாகத்தங்காவிட்டாலும் சிலகாலம் இருந்துவிட்டு வரதனிடமும் லண்டனில் சிலகாலம் தங்கிச்செல்லலாம் என்று அவள் கேட்ட போதெல்லாம் செல்வியிமேல் உள்ள கோபத்தால் தங்கம்மா மறுத்துவந்தா.

தங்கம்மாவுக்கும் வரதனிடமும் செல்வியிடமும் போய் வரவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. ஊரில் யாருமற்ற தனிமையில் அந்தப் பெரிய வீட்டில் வசிப்பதுகூட அவவுக்கு மிகுந்த வேதனையாகவே இருந்தது. வரதன் ஒருதடவை கூப்பிட்டால் போதும் லண்டன் போய் நிரந்தரமாகத் தங்கக் கூட தங்கம்மா சம்மதித்திருப்பா. வரதன் தன்னை கூப்பிடவில்லையே என்ற வருத்தம் உள்ளூர தங்கம்மாவை வேதனைப்படுத்தவும் தவறியதில்லை. வரதன் வருசத்துக்கு நாலு ஐந்து தடவைகள் மட்டுமே ரெலிபோன் எடுப்பான் அப்படிப்பட்டவன் தங்கம்மாவைத் தன்னுடன் அழைப்பான் என்று எதிர்பார்ப்பதும் மடத்தனம் தான்.

செல்வியின் ஏற்பாடாக இருக்கலாம், இரண்டு குடும்பங்களும் ஒன்றாக இலங்கை வர இருக்கிறார்கள். தங்கம்மா அடங்கா மனக் கிளர்ச்சியுடன் அவர்களின் வருகைக்காக நாளை எண்ணிக்கொண்டிருந்தா.

அந்த நாளும் வந்தது.வரதன் குடும்பமே முதலில் வந்தது. வரதனின் மனைவி காவியா திருகோணமலையைச் சேர்ந்தவ, அவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் திருகோணமலைக்குத்தான் முதலில் போனார்கள். காவியாவின் தம்பிகள் அவர்களை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள். பத்து நாட்களின் பின் தான் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள். தன்னைத்தேடி முதலில் வராதது தங்கம்மாவுக்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனாலும் அவர்கள் வந்த போது அதையெல்லாம் மறந்து மகிழ்ச்சியில் திளைத்துப்போனா தங்கம்மா.

வரதன் தாயோடு கதைத்தபோதும் அதில் இத்தனைகாலம் பிரிந்திருந்த தவிப்போ அன்பின் தாகமோ இழையோடவில்லை. மூன்றாம் மனிசியோடு கதைப்பதுபோல் கதைத்தது தங்காம்மாவின் வேதனையை மேலும் அதிகரித்தது. அவன் மனைவி காவியா இயல்பாகக் கதைத்ததும் அதில் இருந்த வெள்ளந்தித்தனத்தையும் விளங்கிக் கொள்ள முடிந்தபோது வரதன் மனைவியின் கட்டுப்பாட்டினால் அவ்வாறு நடந்துகொள்கிறான் என மனதுக்குச் சமாதானம் செய்துகொள்ளவும் முடியாமல் தங்கம்மா தவித்துப்போனா. அவனுக்காக ஆசையாகச் செய்துவைத்த பயித்தமுருண்டையை வழங்கிய போதும் அவன் இரண்டைக் கடமைக்காகச் சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டான்.

அவன் பிள்ளைகள் பத்து வயதும் பன்னிரண்டு வயதும் உடையவர்கள். அஸ்பத் ,அட்வித் என்ற வாயில் நுழையாத அவர்களது பெயர்கள் போலவே அவர்களும் அன்னியப்பட்டவர்களாய் தங்கம்மாவுடன் வந்து ஒட்டிக்கொள்ள வில்லை. தமிழ் பேசுவது அவர்களுக்கு புரிந்தாலும் தமிழில் பதில் அளிக்கும் அளவுக்கு தமிழில் பரிட்சயமற்றவர்களாக இருந்தனர். கைபேசியில் முகத்தை புதைத்துக்கொண்டு பொழுதைக் கழித்தார்கள்.தங்கம்மா ஆசை ஆசையாகச் செய்த சமையலை ஓரளவாவது ருசிச்சுச் சாப்பிட்டது காவியாமட்டுமே. பிள்ளைகளுக்கு தங்கம்மாவின் சைவச் சாப்பாடு பிடிக்கவில்லை . வரதன் அவர்களை நகரில் உள்ள ரெஸ்ரோரன்களுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்,. அவனும் அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு வந்தான்.

ஆசார அனுட்டானங்களுடன் அவர்களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற தங்கம்மாவின் ஆசையின் மீதும் மண்விழுந்தது ஏதோ கடமைக்காக நல்லூருக்கு மட்டும் குடும்பமாகப் போய் வந்தார்கள்..

வரதன் குடும்பம் மீண்டும் திருகோணமலைக்குத் திரும்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் தான் செல்வியின் குடும்பம் தங்கம்மாவின் வீட்டுக்கு வந்தது. செல்வியும் ஜோகன் ஸ் ரீனும் அவர்கள் மகள் வெண்பாவும் வந்தவுடனேயே தங்கம்மாவின் வீட்டின் போக்கே மாறிவிட்டது.

அவர்கள் மூவரும் தங்கம்மாவுக்கு புதிது புதிதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

ஜோகன் வீட்டுக்கு வந்தவுடனேயே தங்கம்மாவைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டபடி கொஞ்சும் தமிழில் வணக்கம் சொல்லி,

“எப்டி இருக்கிறீக மாமி” என்ற போது தங்கம்மா கூச்சத்தோடு நெளிந்தா..கண்களில் ஆனந்தம் நீராக வழிந்தது. ஆறு வயது வெண்பா அம்மம்மா அம்மம்மா என்று உருகினாள். மழலைத் தமிழில் அழகாகக் கதைத்தாள். பாசக் கிளர்ச்சியோடு ஒருவகை இன்ப அவஸ்தைக்கு உள்ளானா தங்கம்மா.

சில பொழுதுகளிலேயே வெள்ளைக்காரர்கள் பற்றி தங்கம்மா கொண்டிருந்த படிமங்கள் எல்லாவற்றையும் உடைத்து மிக சகயமாகவும் தாயோடு உறவாடும் நெருக்கத்தோடும் ஜோகன் பழகினான். வரதனும் அவன் பிள்ளைகளும் அந்நியத்தன்மையோடு பழகியதும் ஜோகனும் வெண்பாவும் மிக நெருக்கமானதும் தங்கம்மாவுக்கு காரணம் தெரியாத புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தது,

வெண்பா பொன்னிற சுறுண்ட கூந்தல் கற்றையுடையவளாய் தந்தையின் உடல் நிறத்தினளாய் தாயின் பெரிய கருவிழிகளைக் கொண்டு குட்டித் தேவதையாய் வீட்டைச் சுற்றிவந்தாள் .நாச்சார வீட்டு முற்றத்தை சுற்றி சுற்றி ஓடுவது அவளுக்கு மிக விருப்பமாக இருந்தது..வரதனின் பிள்ளகளையும் தன்னோடு கட்டாயப் படுத்தி இணைத்துக்கொண்டாள். மழை பெய்தபோது நடு முற்றத்தில் வழிந்த நீரை எற்றி குதூகளித்தாள்.

“அம்மம்மா எனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கு” என்று கத்தியபடி தங்கம்மாவைக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஜோகனுக்கும் வெண்பாவுக்கும் தங்கம்மா செய்து கொடுத்த உறைப்பில்லா உணவுகளில் பெரும்பாலன மிகவும் பிடித்துப் போயின .ஜோகன் குசினிக்கு வந்து சமைப்பதற்கு உதவினான். செல்விக்கும் தனக்கும் ஏற்பட்ட பழக்கத்தையும் செல்வியை உருகி உருகித் தான் காதலித்தது பற்றியும் அவளுக்காகக் தான் தமிழ் படித்தது பற்றியும் ஆனாலும் இன்னும் தன்னால் சரளமாக தமிழ் பேசமுடியாத மனக் குறைபற்றியும் சமையலில் ஈடுபட்டபடியே விபரித்தான்.

“மாமி நீங்க பயப்பிடாதுங்கோ.. என்ற அம்மா அப்பா கலியாணம் செய்து ஐம்பது வருசமா ஒண்டாத்தான் வாழுறாங்கள். அதுபோலத்தான் செல்வியும் நானும்” .

தங்கம்மாவின் மனதை ஊடுருவுவது போல அவவை உற்று நோக்கியபடி ஜோகன் சொன்னபோது தங்கம்மாவிடம் இருந்து நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

வெண்பா வீட்டுக்கு அடுத்த வெறும் வளவில் கட்டப்பட்டிருத ஆடுகளோடு விளையாடியபடி தங்கம்மாவை ஊட்டச்சொல்லி சாப்பிட்டதும் படுக்கும் போது அவவின் அருகில் படுத்து தனது அம்மாவின் சிறு பராயக் கதையைச் சொல்லுமாறு கேட்டு இரசித்ததும் அவவின் சீலைத்தலைப்பைப் பிடித்தபடியே கோயிலைச் சுற்றிவந்ததும் தங்கம்மாவின் நினைவடுக்குகளில் இன்பத்தேனாக உறையத்தொடங்கிய நிகழ்வுகள், பலகாலம் அண்டை வீட்டுக்காரரிடம் சொல்லி அசைபோட்டு காலத்தை இன்பமூட்ட போகும் நிகழ்வுத் தேக்கங்கள் அவை,

செல்வி முதல் இரு நாட்களும் தாயோடு செல வழித்ததைவிட அண்ணன் குடும்பத்தோடேயே அதிகம் செலவழித்தால். அவள் என்ன சொன்னாளோ என்னமோ வரதன்கூட தங்கம்மாவுடன் நெருங்கி வந்ததாக அவ உணர்ந்தா..

வரதன் “அம்மா நீங்கள் கொஞ்ச நாள் எங்களோட லண்டனுக்கு வந்து இருங்கோ “ என்று கேட்டதோடு அல்லாமலும் திருகோணமலைப் பயணத்தையும் பிற்போட்டு மேலும் ஏழு நாட்கள் யாழ்ப்பாணயத்தில் தங்கினது வேறு தங்கம்மாவின் மனத்தைக் குளிர வைத்தது . வரதனின் பிள்ளைகள் கூட ரெலிபோனைத் தூர வைத்துவிட்டு வெண்பாவோடு விளையாடினார்கள். அப்பம்மாவுடனும் கொஞ்சம் கொஞ்சம் கதைத்தார்கள். தங்களுக்கு விரும்பிய சில சாப்பாடுகளை மறுக்காது வாங்கிச் சாப்பிட்டார்கள். அப்பம்மாவுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். முகம் சுழிக்காது கோயிலுக்கு சென்று வந்தார்கள்.காவியாவும் செல்வியோடு ஒட்டிக்கொண்டாள்.

ஒருகிழமைக்கு பின் வரதன் குடும்பம் பயணமான பின் செல்வி தாயோடு முழுப்பொழுதையும் கழித்தாள். இருவரும் எத்தனையோ செய்திகளைப் பறிமாறிக்கொண்டனர்.கதையோடு கதையாக “ அடுத்த கிழமை கொழும்புக்கு போய் உங்களுக்கு பாஸ்போட் எடுப்பம் . நான் நோர்வே விசா எடுத்து உங்களை கூட்டிச்செல்லிறது சுகம், நோர்வேக்கு வந்திட்டு அங்கிருந்தும் லண்டனுக்கு போகலாம்.”என்று செல்வி சொன்னபோது மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தா தங்கம்மா.

தங்கம்மா மகிழ்ச்சியில் திளைத்தா..தனது அண்ணன் மகன் சுரேன் கூட ஜோகனைப்போல தன்னோடு இவ்வளவு அன்பாகப் பழகியிருப்பானா என்பது சந்தேகம் தான் என எண்ணம் ஓடியது,பல வருடங்களாக வறண்டிருந்த தங்கம்மாவின் வாழ்வில் அடைமழை பெய்தது போல இருந்தது,

இரண்டு மாதங்களுக்கு உள்ளாக விசாவை ரெடிபண்ணிவிட்டு தங்கம்மாவைக் கூப்பிடுவதாக செல்வி குடும்பம் புறப்படத் தயாரானது. வெண்பா அம்மம்மாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு கண்ணீரோடு விடைபெற்றாள். செல்வி தான் தாயைக் கனகாலம் பிரிந்திருக்கத் தேவையில்லை என்ற திருப்தியுடனும் ஜோகன் புது உறவுகிடைத்த மகிழ்ச்சியுடனும் பிரிந்தார்கள்.

ஒருமாதத்துக்குள்ளாகவே விசாவைத் தாயார்செத்துவிட்ட செல்வி தாயை அழைத்துச்செல்ல தாயகம் வர இருக்கிறாள்.

வெளிநாட்டுக்குச் செல்வதற்குத் தன்னைத்தயார் படுத்தியபடி செல்வியின் வரவுக்காகக் காத்திருக்கிறா தங்கம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *