செல்ஃபோன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 8,408 
 

“என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி 12 ஆகுது. வந்தனா அறையில் விளக்கு எரிகிறது. வாங்க போய்ப் பார்க்கலாம்” என்றாள்.

வந்தனா அவர்களின் ஒரே மகள். கல்லூரியில் பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள்.

“என்னம்மா இதுக்குப்போய் தூக்கத்துல எழுப்பறே? பரீட்ஷைக்குப் படித்துக்கொண்டிருப்பாள்.” என்றார்.

“ இல்லைங்க, நீங்க ஒரு நிமிஷம் வந்து பாருங்க அப்பதான் உங்களுக்குப் புரியும்” என்றாள்.

இருவரும் வந்தனா அறைக்குச் சென்றார்கள். அங்கு அவள் அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். ரகுநாதன், “வந்தனா, என்னம்மா பண்ணிண்டிருக்கே?” என்று கேட்டார்.

வந்தனா கொஞ்சமும் பதட்டமில்லாமல் “அப்பா ஃப்ரெண்டோட பேசிண்டிருக்கேன்ப்பா” என்றாள்.

“இந்த நேரத்தில எதுக்கும்மா? காலையில பேசிக்கோம்மா. போய்ப் படுத்துக்கோ” என்றார். “சரிப்பா” என்று விளக்கை அணைத்துவிட்டு படுக்கப்போனாள்.

நிர்மலாவும் ரகுவும் கவலையுடன் தங்கள் அறைக்குத் திரும்பினார்கள். நிர்மலா, “ஏங்க, நம்பப் பொண்ணுமட்டும் இப்படி இருக்கா? நேத்து சாயந்திரம் அவள் தோழி சாந்தி வந்திருந்தா. என்னிடம்,” ஆண்டி, வந்தனா பாதிராத்திரியெல்லாம் ஃபோன் பண்றதால் எங்க வீட்டில கோவிச்சுக்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லி வைங்க.” என்று சொல்லிட்டுப் போனாள்.”

“ நேற்று எங்க ஆஃபீசுக்கு ஒரு டாக்டர் ஏதோ அலுவல் விஷயமாக வந்திருந்தார். அவரிடம் நான் வந்தனா விஷயம் கேட்டேன். அதற்கு அவர், சிலபேருக்கு. செல்ஃபோன் உபயோகிக்கறது ஒரு போதையாக மாறி விடறது. அதில் எப்போழுதும் ஏதாவது செய்துகொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அதில் ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். மெஸேஜ் பார்ப்பது, அனுப்புவது, பேசுவது என்று தொடங்கி செல்ஃபோன் சும்மா இருக்கும்போதே அவர்களுக்கு அது அடிப்பதுபோல், யாரோ மெஸேஜ் அனுப்பியிருப்பதுபோல் தோன்ற ஆரம்பிக்கும். இதுவும் ஒருமாதிரி அடிமைத்தனம்தான். அதிலிருந்து விடுபடணும் என்றால் அவர்களது கவனம் வேறு நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தணும். ஓவியம் வரைவது, செல்ஃபோனை கையில் எடுத்துக்கொள்ளாமல் வெளியில் சென்று வேறு செயல்களில் ஈடுபடுவது என்று மாறணும். என்றார். இது ஒன்றும் ரொம்ப கவலைப்படவேண்டிய விஷயமில்லைன்னார்.”

“வர வெள்ளிக்கிழமை நம்ம வந்தனாவை பொண்ணு பார்க்க வராங்களே. கல்யாணம் முடிவானால் எல்லாம் தன்னால் சரியாகிவிடும். நீ கவலைப்படாமல் தூங்கு” என்றார்.
அவர்கள் ஆசைப்பட்டபடியே வந்தனாவுக்கு மாப்பிள்ளை அரவிந்துடன் கல்யாணம் முடிந்து புகுந்தவீடும் வந்துவிட்டாள். பெண்ணுக்குக் கல்யாணம் செய்து அனுப்பும்போதே பெற்றவர்களும், இனிமேல் ரொம்ப ஃபோனில் பேசிக்கொண்டிராமல் கணவனுடன் சந்தோஷமாக இருக்கச் சொல்லி புத்தி சொல்லி அனுப்பினார்கள்.
அழகிய அடுக்குமாடி குடியிருப்பு. இவர்களின் இருப்பிடம் மூன்றாவது தளத்தில் இருந்தது. தனிக்குடித்தனம்.

வந்த கொஞ்சநாளில் வீட்டிற்கு வருவோர், போவோர், விருந்துக்குப் போவது என்று. பொழுது இன்பமாக கணவருடன் கழிந்தது. பிறகு அரவிந்த், அலுவலகம் போக ஆரம்பித்ததும் மறுபடியும் vவேதாளம் முருங்கமரம் ஏறியது. அரவிந்த் வீட்டில் இருக்கும்போதும் அவனுடன் நேரம் செலவழிக்காமல் செல்ஃபோனுடனேயே கழித்தாள். அரவிந்த்தும் பொறுமை இழந்துகொண்டிருந்தான்.

அன்று மாலை அரவிந்த் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்திருந்தான். மனைவியுடன் வெளியில் போகும் ஆசையில் வந்தவன் வந்தனாவைக்கூப்பிட்டு தயாராகச் சொன்னான். தானும் முகம் கழுவி தயாராகிவிட்டு அவளை அழைத்தான். பதில் வராமல் போகவே தேடிச்சென்றவன் அவள் பால்கனியில் ஃபோனில் யாருடனோ சிரித்துப்பேசுவதைப் பார்த்துக் கோபமானான்.

அவள் அருகில் நெருங்கி ஃபோனைப் பிடுங்கி வெளியில் எறிந்தான். அதிர்ச்சியடைந்த வந்தனா கீழே விழும் ஃபோனைப் பிடிக்க எம்பியவள் கால் தடுமாறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாள். செல்ஃபோன் மட்டும் இரண்டாவது மாடி பால்கனியில் விழுந்து கண்சிமிட்டிக்கொண்டிருந்தது!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *