சுவாமிஜி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 8,350 
 

விஷயம் தெரிந்ததிலிருந்து சதாசிவத்திற்கு கடந்த இரண்டு வாரங்களாக தூக்கம் வரவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனது. மனைவி கமலாவும் செய்வதறியாது திகைத்துப் போனாள்.

ஒரே பெண்ணான நீரஜாவை நன்கு படிக்க வைத்தார். ஒரு பிரபல அயல்நாட்டு வங்கியில் வேலை கிடைத்தது. உடனே அவளுக்கு தன்னுடன் வேலை செய்யும் இப்ராஹிம் மேல் காதலும் வந்துவிட்டது. அவனுடன்தான் தனக்கு திருமணம் என்று இப்போது பிடிவாதம் பிடிக்கிறாள்.

கமலாவுக்கும் சதாசிவத்துக்கும் இதில் துளியும் சம்மதமில்லை.

“இத பாரும்மா….நீ ஏன் காதலிச்சேன்னு நான் கேட்கல. ஆனா போயும் போயும் ஒரு முஸ்லீம் பையனுடனா உனக்கு கல்யாணம் நடக்கணும்? ப்ளீஸ் நீரு…நல்லா யோசி” சதாசிவம் கெஞ்சினார்.

“அப்பா ப்ளீஸ் நீங்கதான் புரிஞ்சுக்கணும்…அவர் எந்த மதத்தை, ஜாதியை சார்ந்தவராக இருந்தா என்ன?

அவர் நல்லா படிச்சிருக்காரு என்னிடம் பண்பா பாசமா பழகறாரு…. எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்கு மேல வேறு என்னப்பா ஒரு கல்யாணத்துக்கு முக்கியம்?”

‘ஒரே பெண்ணை ரொம்ப சுதந்திரம் கொடுத்து வளர்த்தது தவறாகி விட்டதோ’ என்று வெதும்பினார்.

மாம்பலத்தில் இருக்கும் ஒரு சுவாமிஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த சுவாமிஜியை பார்க்க உடனே கிளம்பினார்.

வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து சென்றார். ஒரு வேலையாள் சதாசிவத்தை வரவேற்று உள்ளே கூடத்தில் சோபாவில் அமரச் செய்தார். வீடு அமைதியாக இருந்தது.

கூடம் மிகப் பெரியதாக இருந்தது. நடுவில் ஒரு அழகிய ஊஞ்சல். வலது பக்க சுவற்றில் சேகுவாரா படமும் இன்னொரு வயதான பெண்மணியின் படமும் மாட்டப் பட்டிருந்தது.

பத்து நிமிடத்தில் சுவாமிஜி வந்தார். சதாசிவம் மரியாதை நிமித்தம் எழுந்திருக்க முயன்றபோது சுவாமிஜி அவரை சைகை செய்து அமரச் சொன்னார். தான் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார்.

சுவாமிஜி வித்தியாசமாக இருந்தார்.

நன்றாக ஷேவ் பண்ணி அழகான மீசையுடன் வெள்ளைநிற சட்டையில் பளிச்சென்று இருந்தார். கண்களில் ஒரு தீட்சண்யம் இருந்தது.

சதாசிவம், “சுவாமிஜி என்றால் நீண்ட தலைமுடியும், தாடியுமாக காவி உடையில் இருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றார்.

அவர் சிரித்துக்கொண்டே “நான் சுவாமிஜியுமல்ல ஒரு சுண்டைக்காயுமல்ல…என் பெயர் சுவாமிநாதன். சுவாமி என்றவர்கள் நாளடைவில் மரியாதைக்காக ஜி சேர்த்துக் கொண்டார்கள்…இப்ப சுவாமிஜி. எனக்கு தெரிந்ததை சொல்லி தர்க்கத்தில் ஈடுபடுவேன்…அந்த தர்க்கத்தின் முடிவில் எனக்கோ அல்லது என்னை நாடி வந்தவர்க்கோ ஒரு தெளிவு ஏற்பட்டால் அது ஒரு அலாதியான சுகம்” என்றார்.

“…………..”

“என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?”

“என் பெயர் சதாசிவம், எனக்கு ஒரேபெண். நல்ல வேலையில் இருக்கிறாள். தன்னுடன் வேலை செய்யும் ஒரு முஸ்லீமை கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்….என் நிம்மதியே போச்சு.”

சுவாமிஜி கனிவாக புன்னகைத்தார்.

“இதுல உங்க நிம்மதி எப்படிப் போகும்?”

“அந்தப் பையன் ஒரு முஸ்லீம்….அவன எப்படி என்னோட மாப்பிள்ளையா ஏத்துக்கிறது ?”

“கல்யாணம் அவர்களுக்கு….உங்க பெண்ணை நன்றாகப் படிக்க வைத்ததுடன் உங்க கடமை முடிந்தது…அவள் துளிர்த்துவிட்டாள். இனி அவள் வாழ்க்கை, அவள் சந்தோஷம். உங்களுக்கு அவளின் பாதையில் எதிர்பார்ப்பு இருந்தால் அவளின் தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிடுகிறீர்கள் என்று அர்த்தம். அது அநாகரீகத்தின் உச்சம்.”

சதாசிவம் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“நான் அவள இந்த தோள்ல தூக்கி வளர்த்தேன்…இப்ப எங்களை மீறி…..ச்சே இது கடவுளுக்கே அடுக்காது.”

தன் இடது தோளைத் தட்டிக் காண்பித்து கண்கள் கலங்கினார்.

சுவாமிஜி தன் வலது காலை ஊஞ்சலின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இடது காலால் ஊஞ்சலை உந்திவிட்டு ஆட்டிக் கொண்டார். .

“எப்படி கடவுள் இங்கு வந்தார்? எதற்காக மகளின் விருப்பத்தையும் உங்களின் முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள்?”

“………………”

“நாம் சின்ன வயதாக இருக்கும்போதே மிக இயல்பாக பல முட்டாள்தனமான நம்பிக்கைகளை, செயல்களை அனிச்சையாக வளர்த்துக்கொண்டு விடுகிறோம். அவைகள் ஒவ்வொன்றும் நம் வலது, இடது கால்களில் கயிற்றினால் கட்டப் பட்டுள்ள பாறாங்கற்கள். அவைகளையும் நம்முடன் சேர்த்துக் கொண்டு பயணிக்கிறோம்…. கடவுள், கோவில், மதம், ஜாதி என்று நான்கு பெரிய கற்களை வலது காலிலும் ஜோசியம், ராசிபலன், ஜாதகம், வாஸ்து, சகுனம் என்று பல கற்களை இடது காலிலும்

கட்டிக்கொண்டு சிறிதும் கூச்சமின்றி பெருமையுடன் அலைகிறோம். இவைகளினால் நமக்கு ஒரு பலனும் கிடையாது. நேரமும், பணமும்தான் விரயம்.”

“என்னது கடவுள் இல்லையா?”

“ஒருவேளை இருந்தாலும் இந்த வேகமான உலகிற்கு அவர் தேவையில்லை. இப்ப நம்மில் எத்தனைபேர் போஸ்ட் கார்டையும், இன்லேன்ட் லெட்டரையும் உபயோகப் படுத்துகிறோம்? அவைகளை மறந்துவிட்டு நமக்கு வசதியான மொபைலில் பெசிவிடுகிறோம். அல்லது குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறோம். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் தாத்தா என்னை ரெண்டாம் வாய்ப்பாடிலிருந்து பதினாறாம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்யச் சொன்னார். அது அன்றையத் தேவை.

இன்று நம் பேரன்களிடம் அதை நாம் எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? எல்லா வாய்ப்பாடுகளும் அவன் மொபைலில் இருக்கிறது. எதையும் மனப்பாடம் செய்யவேண்டாம். அது போல்தான் கடவுள்களும் அந்தக் காலத்து அவசியம். இப்ப அவர்கள் நமக்குத் தேவையில்லை.”

சதாசிவத்திற்கு எதோ ஒன்று பிடிபட்டது.

அடுத்த நொடியில் இப்ராஹிம் அவர் மனதை உலுக்க, “எல்லாம் சரி சுவாமிஜி, அதெப்படி ஒரு முஸ்லீமை….?”

“இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன் எல்லாம் நாமே கொழுப்பெடுத்துப்போய் உண்டாக்கிக் கொண்டதுதானே! நம் அனைவரின் தாய்மார்களும் நம்மை பத்து மாதங்கள் சுமந்துதானே பெற்றாள்? எல்லா மதத்தினருக்கும் ரத்தம் சிவப்புத்தானே? சமீபத்தில் நம் ஊரில் வெள்ளம் வந்தபோது முஸ்லீம் அமைப்புத் தொண்டர்கள் எத்தனை குடும்பங்களை பிரதிபலன் எதிர்பாராது காப்பாற்றி அவர்களை மேடான பகுதியின் பள்ளிவாசல்களைத் திறந்துவைத்து தஞ்சம் கொடுத்தார்கள்? அவர்களின் மனிதநேயமும் தொண்டும் எவ்வளவு பாராட்டப்பட்டது? எத்தனை இந்துக் கோவில்களை நாம் திறந்து வைத்து ஏழைகளுக்கு இடம் கொடுத்தோம்?”

“சுவாமிஜி இப்ப நான் என்னதான் செய்யவேண்டும்?”

“ஒன்றும் செய்ய வேண்டாம்…ஒரு சோதனை முயற்சியாக இன்றிலிருந்து ஒரு மூன்று மாதம் நான் சொன்ன அனைத்து பாறாங்கற்களையும் கழற்றி தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக இருந்து பாருங்கள்…

இதனால் எவ்வளவு நேரம், பணம், அலைச்சல் மிச்சப் படுகிறது என்பதை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களிடமும் அன்பையும் பண்பையும் வெளிப்படுத்துங்கள். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் மனசை மிக லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்ராஹிமை வீட்டிற்கு அழைத்து பேசுங்கள். அவரிடம் அன்பு செலுத்துங்கள். உங்களின் ஒரே மகளின் சந்தோஷம்தானே உங்களின் சந்தோஷம்? எல்லாம் நல்லபடியாக நடக்கும்….போய் வாருங்கள்”

சாம்பசிவத்திற்கு எதோ புரிவதுபோல் இருந்தது. மனசு லேசானது.

கிளம்பும்போது “சுவாமிஜி சேகுவாரா பக்கத்துல இருக்கற போட்டோல இருக்கிற அம்மணி யாரு?” என்றார்.

“அவர் பெயர் இலாபட் இப்ப அகமதாபாத்தில் இருக்கிறார். இந்தியாவிலேயே மிகவும் போற்றத்தக்க மரியாதைக்குரிய பெண்மணி. சேவா (SEWA) என்கிற சேவை மையத்தை நடத்தி வருகிறார். அமைதியானவர். அவரைப்பற்றி கூகுளில் படித்து நிறைய தெரிந்து கொள்ளுங்கள். சேகுவாரா எப்படி ஒரு போராளியோ அது மாதிரி நலிந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பாடுபடும் ஒரு போராளி. இவர்கள் இருவரும் என் வணக்கத்துக்குரியவர்கள்.”

அடுத்த மூன்று மாதங்கள் சுவாமிஜி சொன்னதுபோல் மாறித்தான் பார்ப்பது என்ற உறுதியுடன் சதாசிவம் வீடு திரும்பினார்.

அன்று நீரஜா இப்ராஹிமை தன் வீட்டிற்கு கூட்டி வந்தாள். சதாசிவம் கமலா தம்பதியினருக்கு இப்ராஹிமின் அமைதியான பண்பும், நாகரிகமும், குடும்பப் பின்னணியும் சரி என்று பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களுடைய திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டது.

அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. நீரஜா மிக சந்தோஷமடைந்து சற்று பூரித்திருந்தாள்.

திடீரென்று சதாசிவத்திற்கு அன்று சுவாமிஜியின் நினைவு வர அவரை தன் குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்த்து தன்னுடைய உற்சாகமான மாற்றத்திற்கு அவர்தான் காரணம் என நன்றி சொல்ல நினைத்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

இப்ராஹிம் கார் ஓட்டிவர, சதாசிவம் தன் குடும்பத்தினருடன் சுவாமிஜியைப் பார்க்க மாம்பலம் சென்றார். வீட்டின் முன் கார் நின்றது. சதாசிவம் மட்டும் இறங்கி வீட்டினுள் சென்றார்.

அங்கு ஜிப்பா பைஜாமாவுடன் ஒரு பெரியவர் இவரை வரவேற்று ஹிந்தியில் எதோ சொல்ல, சதாசிவத்திற்கு ஹிந்தி தெரியாது என்பதால் காரிலிருந்த இப்ராஹிமை உதவிக்கு அழைத்தார்.

இப்ராஹிம் இறங்கி வந்து அந்த பெரியவருடன் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து ஹிந்தியில் பேசிவிட்டு சதாசிவத்திடம், “இங்கு குடியிருந்த சுவாமிஜி ஒரு மாதம் முன்பு இறந்து விட்டாராம். இந்தப் பெரிய வீட்டை அகமதாபாத்தில் உள்ள சேவா என்கிற அமைப்புக்கு எழுதிக் கொடுத்து விட்டாரம். அவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் இந்த வீட்டை புதுப்பித்த பின் எடுத்துக் கொள்வார்களாம்” என்று சொல்ல சதாசிவம் ஆடிப் போனார்.

அங்கிருந்த சேகுவாரா, இலாபட் படங்கள் அகற்றப்படாமல் அமைதியாக காட்சியளித்தது.

மெல்ல திரும்பி வந்து காரில் ஏறியவுடன் அங்கிருந்த டவலால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதார்.

உடன் இருந்தவர்களுக்கு அவர் அழுவதின் காரணம் புரியவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “சுவாமிஜி

  1. இந்தக் கதையில் வரும் இப்ராஹிம் போன்ற நல்ல புத்தியுடைய முஸ்லிம்கள் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் தீய நோக்கத்துடன் லவ் ஜிஹாட் செய்து, இந்துப் பெண்களை மதம் மாற்றிவிடுகின்றனர். ஆகவே பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *