கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 6,149 
 

அப்போது நான் பாளையங்கோட்டை தூயசவேரியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

மேத்ஸ் பாடம் நடந்து கொண்டிருந்தபோது என்னுடைய வகுப்புத் தோழனும், சிறந்த நண்பனுமாகிய ரத்தினவேலுவின் சித்தப்பா பதட்டத்துடன் வகுப்பறைக்கு வந்து, அவனுடைய அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டதாகச் சொல்லி அவனை கையோடு அழைத்துச் சென்றார்.

அதற்குப் பிறகு ரத்தினவேல் பள்ளிக்கூடம் வரவில்லை. படிப்பு போதும் என்று அவனுடைய வீட்டார் அவனை நிறுத்தி விட்டார்கள். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் குடும்பத் தலைவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் மூத்த பையன் படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு கடையில் வேலைக்குச் சேர்த்து விடுவார்கள்.

நான் குடியிருந்தது திம்மராஜபுரம் கிராமத்தில். திம்மராஜபுரத்திலேயே பெரிய வீடு எங்களுடையது. என் தாத்தா முத்தையா மூப்பனாருக்கு பலசரக்கு கடை; வெல்ல மண்டி; லாரி ட்ரான்ஸ்போர்ட் என ஏகப்பட்ட பிஸினஸ். பணத்தில் கொழித்தார். அதனாலேயே அவருக்கு பணச்செருக்கு ரொம்ப ஜாஸ்தி.

கிராமத்தில் எனக்கு ரொம்பப்பிடித்த சினேகிதன் ரத்தினவேலுதான். பூ மாதிரி மனசு அவனுக்கு. அவனுடைய அப்பாவின் மறைவினால் என் தாத்தாவின் பலசரக்கு கடையில் சாதாரண எடுபிடி வேலைக்காரனாகச் சேர்ந்துவிடும் சூழ்நிலை திடீரென்று அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

இந்த விஷயத்தை முதலில் என்னிடம் சொன்னதே என் தாத்தாதான். “டேய் உன் சிநேகிதன் ரத்தினவேலு நம்ம கடையில் நேத்து சம்பளக்காரனா வந்து சேர்ந்திருக்கான்டோய்” என்று ரொம்ப இளக்காரமாகச் சொல்லி குரூரமாகச் சிரித்தார்.

ரத்தினவேலைப்போல் பூ மாதிரி மனசுகொண்டவன் என் தாத்தாவின் கடையில் மனசு காயப்படாமல் வேலை பார்ப்பது முடியாத காரியம் என்பதால், ‘போயும் போயும் இந்த ஆள் கடையிலா?’ என்று நினைத்துக்கொண்டேன்.

கடைக்குப்போய் அந்த சூழ்நிலையில் ரத்தினவேலு எப்படி இருக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது, ஆனால் அப்படி போய்ப் பார்க்க லஜ்ஜையாகவும் இருந்தது.

அடுத்த வாரத்தில் சுதந்திரதினம் வந்தது. அப்போது தாத்தாவின் பேரப்பிள்ளைகள் அனைவரும் அவருடைய பலசரக்கு கடைக்கு கிளம்பினோம்.

விடுமுறை நாட்களில் திடீரென்று கடைக்கு கிளம்பிப்போய் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வருவது எங்களுக்கு வழக்கம். அப்போது எங்கள் கண்களில் ‘இது எங்க தாத்தாவின் கடை’ என்ற செருக்கு மின்னிக் கொண்டிருக்கும். கடையில் வேலை பார்ப்பவர்கள் எங்களிடம் மிகவும் தணிந்த குரலில் பயத்துடன் பேசுவார்கள்.

கடையில் நாங்கள் கூச்சல் போட்டு லூட்டி அடித்தாலும், தாத்தா எரிச்சல் படாமல், பெரிய இலவம் பஞ்சுத் திண்டில் சாயந்தபடி, பேரப்பிள்ளைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

அன்று நானும் நண்பன் ரத்தினவேலுவைப் பார்க்கலாமே என்று தாத்தா கடைக்குப் போனேன். ரத்தினவேலு கடையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்ததை நுழையும்போதே பார்த்துவிட்டேன். இதுகாறும் அரைக்கால்சட்டை அணிந்து வந்தவன், நாலுமுழ வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு பவ்யம்.

ரத்தினவேலுவைப் பார்க்க பார்க்க மனசே ஆறவில்லை எனக்கு. தெருவில் நின்று விளையாட அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி விடலாம் போல இருந்தது.

யாருக்கும் தெரியாமல் என்னைப் பார்த்து சோகமாகச் சிரித்தான். இதைப் பார்த்துவிட்ட என் தாத்தா அவருடைய சொரூபத்தைக் காட்டினார். “டேய் பாத்தியா உன் சினேகிதனை…உன் கிட்டயே வேலைக்குச் சேர்ந்துவிட்டான் பாரு” என்று நக்கலாகச் சொன்னார்.

சாயங்காலம் ஆனதும், “டேய் பசங்களா… ஆட்டம் போட்டதெல்லாம் போதும்டா; திங்கறதைத் தின்னுட்டு வீட்டுக்கு ஓடுங்க” என்று எங்களை அவசரப் படுத்தினார். தாத்தா வேண்டுமென்றே ரத்தினவேலுவை ஒரு பெரிய பையுடன், நாங்கள் தின்று தீர்க்க உடுப்பி ஹோட்டலுக்குச் சென்று கேசரி; மைசூர் போண்டாக்களும்; பஜ்ஜிகளும்; வடைகளும் சூடாக வாங்கிவரச் சொல்லி விரட்டினார். எல்லாவற்றையும் நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். எனினும் ரத்தினவேலுவை தவிர்த்துவிட்டு அவைகளை நான் சாப்பிட்டது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது. என் சூழ்நிலை அப்படி…

நாங்கள் சாப்பிட்டதும், ஐஸ்க்ரீம் வாங்கிவர ரத்தினவேலுவை தாத்தா மறுபடியும் கடைத்தெருவுக்கு அனுப்பினார். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடிந்ததும் தாததாவின் பியூக் காரில் நாங்கள் வீடு திரும்பினோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் ரத்தினவேலுவும் எங்கள் தெருவில் ஆசை ஆசையாக அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். எப்போதும்போல கள்ளன்-போலீஸ்; கிட்டி; சடுகுடு; நொண்டி; கோலி என்று நிறைய விளையாடினோம்.

ரத்தினவேலு கடை வேலையைப்பற்றி என்னிடம் எதையும் பேசமாட்டான். அதே நட்புடனும், வாஞ்சையுடனும் இருந்தான். சில சமயங்களில் மட்டும், அவன் இழந்துவிட்ட பள்ளிக்கூட வாழ்க்கையைப்பற்றி என்னிடம் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

இப்படியாக எனக்கும் அவனுக்கும் இருந்த சினேகிதம் எந்தவிதத்திலும் சேதப்பட்டு விடாமல் நீடித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் ஊரின் மற்றொரு பணக்காரரான கருப்பையா மூப்பனாரின் மகளுக்கு கல்யாணம் வந்தது. தாத்தாவை மிகுந்த மரியாதையுடன் அந்தக் கல்யாணத்திற்கு மூப்பனார் அழைத்தார். ரத்தினவேலு குடும்பத்தையும் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார்.

கல்யாணத்திற்கு முந்தின நாள் மாலை ஏழுமணிக்கு பரிசம் போடுவதாக இருந்தார்கள். நான் சாயங்காலம் ஐந்தரை மணிக்கே என் அப்பா அம்மாவோடு மண்டபத்திற்கு போய்விட்டேன். கால்சட்டை அணியாமல், புது பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்திருந்தேன்.

தவிர, பெரிய இடத்துக் கல்யாணம் என்பதால், என்னுடைய அம்மா என் கையில் தங்க வாட்ச்; சட்டையில் தங்கப் பித்தான்கள்; காதுகளுக்கு தங்கக் கடுக்கன்கள்; கழுத்தில் டாலர் வைத்த பெரிய தங்கச் சங்கிலி எல்லாம் போட்டு விட்டிருந்தாள். எனக்கு ஏற்பட்ட பெரிய சந்தோஷம் ரத்தினவேலுவும் தன் அம்மாவுடன் ஏற்கனவே அங்கு வந்திருந்ததுதான்.

அவனும் என்னைப் போலவே டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்தான். கொஞ்சம் பழசாகிப் போன பட்டு வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்செயின் போட்டு, அவனுடைய அப்பாவின் தங்கப் பித்தான்களையும், பழைய வாட்ச் ஒன்றையும் கட்டியிருந்தான்.

நானும் அவனும் குதூகலமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு கல்யாண மண்டபத்தை சுற்றி சுற்றி வந்தோம். நுழைவாசலை ஒட்டி வாசலை எதிர்நோக்கிப் போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது பந்தலுக்கு வெளியில் எங்கள்வீட்டு பியூக் கார்வந்து நின்றது. கருப்பையா மூப்பனார் பரபரப்புடன் ஓடிச்சென்று கார்க் கதவை திறந்துவிட்டார். தாத்தா கம்பீரமாக இறங்கினார். பட்டு வேட்டியில் கட்டிய பஞ்சகச்சத்தோடும், ஜரிகைபோட்ட பெரிய அங்கவஸ்திரத்தோடும், தங்கப்பூண் வைத்த வாக்கிங் ஸ்டிக்கை அலட்சியமாகச் சுழற்றியபடி நான்குபேர் சூழ வந்தார். அவருக்கு மரியாதையுடன் சந்தனம் கொடுத்து, பன்னீர் தெளிக்கப்பட்டது.

அதிர்வேட்டுச் சிரிப்புடன் தாத்தா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். நுழைவாசலில் அமர்ந்திருந்த என்னையும் ரத்தினவேலுவையும் தாண்டித்தான் அவர் உள்ளே போயாகவேண்டும்.

வேறு வழியில்லாமல் எரிச்சலோடு நானும், பயத்தோடு ரத்தினவேலுவும் பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நின்றோம். தாத்தா ஒருநிமிடம் நின்றார். ரத்தினவேலுவையும் என்னையும் மாறி மாறி மேலும் கீழுமாகப் பார்த்தார். அவரின் முகபாவனையில் ஒரு அசிங்கமான அதிருப்தி தோன்றியது. வாக்கிங் ஸ்டிக்கால் ரத்தினவேலுவை சுட்டிக்காட்டியபடி, “மொதலாளி வீட்டுப் பயலுக்கும், சம்பளக்காரப் பயலுக்கும் வித்தியாசமே தெரியல…” என்று கருப்பையா மூப்பனாரிடம் எகத்தாளமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

இந்தச் சம்பவமும், தாத்தாவின் குரூரமான இந்த வார்த்தைகள் ஒலித்தும் நாற்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டாலும், என்னால் அந்தக் கொடிய சம்பவத்தை மறக்கவும்; அமில வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்தை ஆற்றிக் கொள்ளவும் முடியவில்லை. பச்சை ரணமாக அந்தக் காயம் ரத்தம் ஊறிப்போயிருக்கிறது.

ரத்தினவேலு அப்படியே தலையைத் தொங்கபோட்டபடி நின்றான். சில நிமிடங்கள் கழித்து என்னிடம் “நீ இரு; நான் எங்க வீட்டுக்குப் போயிட்டு அஞ்சு நிமிஷத்துல வரேன்” – வேகமாக வெளியேறினான்.

பழசான நாலுமுழ வேட்டியும், துவைத்த சட்டையும் அணிந்து ‘ஒரு சம்பளக்கார பயலுக்கான’ தோற்றத்தில் திரும்பி வந்தான் அவமானம் தாங்காமல் என்னுடைய உணர்வுகள் கூனிக்குறுகின.

அடுத்த ஐந்து மாதங்களில் வீட்டைக்காலி செய்துகொண்டு அம்மாவோடும், தம்பி தங்கச்சிகளோடும் சென்னை சென்றுவிட்டான். அங்கு துறைமுகத்தில் கப்பல் கம்பெனி ஒன்றில் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான்.

அதன்பிறகு காலச்சக்கரம் அவனுக்காக வேகமாக சுழன்றது; காலப்புயல் சாதகமான பலத்தில் அவனுக்காக வீசியது.

பதினாறே வருடங்களில், ரத்தினவேலு சென்னை ஹார்பரில் பார்வேர்டிங் அண்ட் கிளியரிங் ஏஜென்ஸி ஆரம்பித்து லட்சம் லட்சமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். அப்புறம் சிகரெட், சென்ட், சோப், ஷாம்பூ போன்றவற்றின் ஏஜென்ஸி எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து அப்போதைய சென்னையின் முதல் நூறு பணக்காரர்களில் அவனும் ஒருவனாகிவிட்டான்.

அதே காலப்புயல் என் தாத்தாவை படுகுழியில் தள்ளி தெருவுக்கு கொண்டுவந்து விட்டது. பிஸினஸ் நொடித்துப்போய் இன்சால்வென்ஸி கொடுத்து பாப்பர் ஆனார்.

அந்த நிலையில் தாத்தாவுக்கு எங்கள் பெரியவீட்டை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாத்தாவுக்கு உதவ எண்ணி, அந்தவீட்டை மார்க்கெட் விலையை விட ஐந்து லட்சங்கள் அதிகம் கொடுத்து ‘சம்பளக்காரப்பயல்’ ரத்தினவேலு வாங்கினான்.

அந்த வீட்டை தன் அம்மாவின் பெயரில் ரிஜிஸ்டர் செய்தான்.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ரத்தினவேலுவை அவமதித்த தாத்தாவின் ஈவு இரக்கமற்ற அயோக்கியத்தனத்தை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.

இப்பவும் ரத்தினவேலு அதே பாசத்துடன்தான் என்னிடம் இருக்கிறான். “உனக்கு ஏன் என் தாத்தாமீது ஆத்திரமோ, கோபமோ வரலை?” என்று கேட்டேன்.

புன்முறுவலோடு நிதானமாக, “உன் தாத்தா என்னைக் கேவலப்படுத்தினார்… அந்தக் கேவலத்தினால் நான் முற்றிலும் மரணமடைந்து, முற்றிலும் புதியவனாய்ப் பிறந்துவிட்டேன். அன்று அவர் என்னை நான்குபேர் முன்னிலையில் அசிங்கப் படுத்தியிருக்காவிடில், நான் வீறுகொண்டு எழுந்திருந்திருக்க மாட்டேன். அதனால் அவர்மேல் எனக்கு கோபம் கிடையாது.” என்றான்.

என் உடம்பு ஒருமுறை சிலிர்த்தது. என்னை ரத்தினவேலு நட்புடன் அணைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

1 thought on “சுழற்சி

  1. கதை அருமை vaazhvil பணமோ உறவோ நிசசயம் இல்லை நட்பு ஒன்று தான் எதையும் எதிர் பார்க்காது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *