சில நொடியில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 7,385 
 

கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு பேட்டைகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம் இருப்பது அவற்றின் சிறப்புகளில் ஒன்று. தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகில் மஞ்சுளா சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய் படுத்திருந்தாள். காதில் ஒலிப்பானை மாட்டியபடி இனம்புரியாத இசை ஒன்றைத் தனது கைபேசியிலிருந்து ரசித்துப் புன்னகைத்தாள். அவளது உடல் சாய்வு நாற்காலியை முழுதும் ஆக்கிரமித்து இருந்தது.

அவளது 5 வயது குழந்தை சரன் அருகில் கைப்பந்து ஒன்றை வைத்துக்கொண்டு விளையாடியது. விளையாட்டு விளைட்டாக இருப்பத்தில்லை. சில நேரங்களில் துடிக்க வைத்துவிடும். குழந்தைப் பந்தை தண்ணீரில் தள்ளிவிட்டு அதுவும் விழுந்துவிடும் என நீங்கள் கற்பனை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். ஆனால் அதுதான் நடந்தது. மஞ்சுளா பார்க்கவில்லை. பார்க்க மாட்டாள்.

நமது டைகர் பார்த்துவிட்டார், ஒரே பாய்ச்சல் சாய்வு நாற்காலியை ஜம்ப் பண்ணி நீச்சல் குளத்தில் குதித்து, குழந்தையின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கரைச் சேர்த்ததார். மஞ்சுவின் முகத்தில் தெளித்த குளிர்ந்த நீரை துடைத்தபடி “வாட் நான்சென்ஸ்” என வெகுண்டாள்.

டைகர் யார்? என்பதை நான் உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். எலைஜாவின் செல்லம், வளர்ப்பு, குழந்தைமாதிரி, கூடவே இருப்பது இதில் எதை வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். அதன் பாவனைகள், நடத்தைகள், செயல்கள் ஒரு புலியின் சாகசம் போல் இருக்கும். அதே நேரத்தில் விவேகம் தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிக்கும். அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் உயர்ந்தரக வளர்ப்பு நாய். அதற்கு டைகர் என்று பெயர்வைப்பது தானே பொருத்தம்?

எலைஜா ஜெர்மனியின் ஸ்டர்ட்கார்ட் நகரில் பிறந்து அங்கு வளர்ந்தவர். அவரது கணவர் ரிச்சர்ட் அந்தத் தொழில் நகரில் ஒரு நிறுவனத்தில் கணினி பாகங்கள் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றியவர், தற்சமயம் அதன் சிங்கப்பூர் கிளையில் உற்பத்திப் பிரிவின் தலைவராக இருந்து வருகிறார்.

எலைஜாவிற்கு வளர்ப்பு பிரணிகளின் மீது அலாதிப் பிரியம். அதிலும் குறிப்பாக நாய்கள் என்றால் உயிர். ஸ்டர்ட்கார்ட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் நிறைய வளர்ப்பு நாய்கள் இருந்தது. சிங்கப்பூர் வந்தபின் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப டைகர் ஒன்றுதான் வைத்துக்கொள்ள முடிந்தது.

***

வீட்டு வளர்ப்புப் பிராணிகளில் நாய் முக்கிய அங்கமாக இன்றும் திகழ்கிறது இதன் நற்பண்புகளான நல்ல மோப்பசக்தி, விரைந்து செயல்படுவது, குறிதவறாது இலக்கை அடைவது, நீண்டதூரம் பார்க்கும் கண்பார்வை அதன் பயன்பாட்டிற்கு முக்கியமானவை.

பொதுவாக நாய்கள் மூன்று முக்கிய பணிகளை திறமையாகச் செய்யக்கூடியது. நுகரும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு குற்றச் செயல்களில் துப்புதுலக்க பெரிதும் பயன்படுகிறது. ராணுவம், காவல்துறையில் இதன் பங்களிப்பு அளப்பரியது.

வேட்டையாடவும் நீரில் மீன்பிடிக்கக் கூடிய திறமையான நாய்கள் இரண்டாம் வகை.

வீட்டின் பாதுகாப்பு மற்றும் நண்பர்களைப் போல பழகும் நாய்கள் மற்றொரு வகை. முதியவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கண் குறைபாடு உடையவர்களுக்கு இவைகள் ஒரு வரப்பிரசாதம்

எலைஜாவின் டைகர் “லேப்ராடர்” வகையைச் சேர்ந்தது. இவ்வகை நாய்களின் நிறம் பொரும்பாலும் கருப்பு, வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் Fawn நிறங்களில் மட்டுமே இருக்கும். இவ்வகை நாய்கள் “லேப்ஸ்” என்றே சுருக்கமாக அழைக்கப்படுகிறது. நண்பர்களைப்போல் பழகக்கூடியது, வளர்ப்பவர்களின் கட்டளையை நிறைவேற்றும். ஏறத்தாழ 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட லேப்ஸ் உலகம் முழுதும் பயன்பாட்டாளருக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

டைகர் அடர்கருப்பு, அழகென்றால் அப்படி ஒரு அழகு, அதன் கருப்பு நிறம் புதிதாக பார்ப்பவர்களை சற்று அச்சுறுத்தி திகைக்க வைக்கும். வால் பகுதியின் இறுதியில் மட்டும் கோடுகளாக மஞ்சள் நிறம் – மலர் கொத்துகளில் பச்சை நிற இலைபோல பார்க்க அழகாக இருக்கும். டைகரின் நீளம் 3 அடியும் உயரம் 2 அடியும் இருக்கும். கழுத்து புறத்தில் மெல்லிய வெள்ளைக்கோடு அதன் கழுத்தைச் சுற்றி காணப்பட்டது, அது டைகருக்கு மிகவும் அழகாக இருந்தது, எலைஜா தம்பதியினருக்கு டைகர் குழந்தை மாதிரி செல்லம்.

எலைஜாவின் வீடு காமன்வெல்த் பகுதியில் ஒரு நீண்ட நெடிய சாலையை ஒட்டி இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். அந்தச்சாலை நேராகச்சென்று இறுதியில் வளைந்து பிரதான சாலையுடன் இணைகிறது. இங்கு நவீன குடியிருப்பு பகுதியில் இருக்கும் அனைத்து வசதிகளும் உண்டு. கார் நிறுத்தத் தனிப்பகுதி, சிறிய அழகிய நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம். 24 மணி நேர பாதுகாப்பு, மற்றும் அவர்களின் கண்காணிப்பு…இன்னும் பல வசதிகள் உண்டு.

எலைஜாவின் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சுளா. அவரது கணவர் ரகுராமன் தொழில் அதிபர். தொழில்தான் முதல் மனைவி. வீட்டில் சகல வசதியும் உண்டு. வீட்டுவேலைக்கென்று பணிப்பெண். நகைகள் ஏராளம். கணவர் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டிற்கே வரமாட்டார். அப்படியே வந்தாலும் அசதியில் படுத்து தூங்கிவிடுவார். இவர்களுடன் அவரது நேரத்தைச் செலவிட முடியாத நிலை.

ரகுராமன் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை, அது பெரிதாகி இன்று ஒருவித வெறியுடன் அலைவதற்கும் காரணம். அவரது தந்தையை உடன் பிறந்தவர்கள் முறையான சொத்துப் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். தந்தை வறுமையில் காலத்தை கழிக்க நேர்ந்தது. ரகு வளர்ந்தபின் இவை தெரியவந்து நாமும் அவர்களைப்போல் வசதியாக வர வேண்டும் என தொடர் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே உற்சாகத்தில் இன்றும் தொடர்கிறார். இதுவரை சம்பாதித்தது போதும் என திருப்தியடைய இவர் மகான் அல்ல, சராசரி மனிதன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அதே உற்சாகத்தில் தொடர்கிறது.

திடிரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதாவது ஒரு பெரிய நடசத்திர ஓட்டலுக்குச் சாப்பிட வரும்படி மஞ்சுவைக் கணவர் அழைப்பார். கார் வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்லும். அப்புறம் ஒருவாரம் காணாமல் போய்விடுவார். வாழ்க்கையில் ஒருவருக்கு வசதியும் ஆடம்பர வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுப்பத்தில்லை.

மனிதர்கள் உணர்வு சார்ந்தவர்கள். மஞ்சுளா அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்குபவள். உடல் வேட்கைக்கு அல்ல. இது ஒரு பிரச்சனையா? என நாம் நினைக்கலாம். ஒருவாரம், ஒருமாதம், ஒருவருடம் என்றால் சரி. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாவும், இனிவரும் ஆண்டுகளும் இதேபோல் என்றால் எப்படி? இவளது ஏக்கம் காரணமாக குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அன்பும் பாசமும் தடைபட்டுப்போனது. சரன் கொஞ்சம் கொஞ்சமாக இவளது நிலையை அடையப் போகின்றான் என்பது இப்போது மஞ்சுவுக்கு புரிய வாய்ப்பில்லை

இவளது தனிமையின் பாதிப்பு நாளடைவில் எதன் மீதும் அவளுக்குப் பிடிப்பின்றி போனது. இசையை ரசிப்பதில் தனது தனிமையை இரையாக்கி கொண்டாள் சில பழக்கங்கள் ஆரம்பத்தில் குறை போன்று தெரியும், பிறகு அதில் ஒருவித ரசிப்பு ஏற்படும். அதே பழக்கமாகி விடும். அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை அடைந்து நம்மை ஆட்படுத்தும். அந்த நிலையில் தற்போது மஞ்சுவிற்கு எல்லாமே இசைதான். இவள் பரிதாபத்திற்குறியவள்.

குழந்தை விளையாடும், சத்தம்போடும், அதுவா சிரித்துக்கொள்ளும். குழந்தைக்கு முறையான அளவான தேவைப்படும் அன்பு கிடைக்க வில்லை. குழந்தை சரன் மஞ்சுவிடம் இருந்ததைவிட டைகருடனும், எலைஜாவிடம் இருந்ததே அதிக நேரம். இதுதான் மஞ்சுவைச் சுற்றியுள்ள எதார்த்தமான இயல்பு நிலை, அது நிஜம்..

***

அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு வார இறுதி என்றாலே ஒருவித உற்சாகம் காலையில் தாமதமாக எழுந்திருக்கலாம். எதற்கும் அவசரமில்லை. தூக்கத்தில் கனவு காணலாம். கனவிலும் தூங்கலாம். மனிதர்களின் இயந்திர வாழ்க்கைக்கு கிடைக்கும் ஓய்வு, ஒரே சுகம்.

இரவு மழை பெய்ததால் அந்த ஞாயிறுக்கிழமை காலை குளிர்காற்று வீசியது எலைஜா தம்பதியினர் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி டைகருடன் வாக்கிங் வந்து கொண்டிருக்கின்றனர். சாலையோர புற்களில் மழைநீர்த் துளிகளாக, எங்கும் துளிகளாக அந்த பச்சைப் புல்வெளி முழுதும் துளிகளாக இருந்தது. டைகர் அருகில் நடக்கும் போது அந்தப் பகுதியின் துளிகள் சிதறி மறைந்தன.

வழியில் ஒரு இடத்தில் யாரோ தண்ணீர்ப் பாட்டிலை போட்டிருந்தனர். டைகர் அதை லாவகமாகக் கவ்வி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் தாவி வீசியது. மீண்டும் எலைஜா தம்பதியினருடன் தனது நடை பயணத்தைத் தொடங்கியது. அவர்கள் இருவரும் சிங்கப்பூரின் சுத்தமான சூழலையும் இங்குள்ள பூங்காக்களின் அமைப்பு முறையையும் அதைப் பரமாரிக்கப்படும் விதம்பற்றியும் பேசிக்கொண்டே ஆச்சரியப்பட்டனர். சிங்கப்பூரில் இருப்பது நமது நாட்டில் இருப்பதுபோலவே உள்ளது என்றும் கூறியபடி அருகில் இருந்த பூங்காவுக்குள் நுழைந்தனர்.

பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்கள், மிதிவண்டிகளை இங்கும் அங்கும் ஓட்டுபவர்கள், நின்றபடியே வயதானவர்கள் உடற்பயிற்சி என வார இறுதிக் கூட்டம். இந்தோனிசியப் பணிப்பெண் கம்பு ஊன்றியபடி சோர்வுடன் அமர்ந்திருக்கும் சிங்கைப் பெரியவருக்கு கால்களை நீவியபடி இருந்தார். பூங்கா துடிப்பா இருந்தது.

இளம் காதலர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்தபடியே பேசிச் சிரித்தபடி இருந்தனர். சிறிது நேரத்தில் ஒருவரை யொருவர் கைகளை பிணைத்தபடி எழுந்து நடந்தனர். இருவரும் மகிழ்ச்சிகடலில் மிதந்தபடியே சென்றனர். அந்த பெண்ணின் கைப்பையை மறந்து சென்றார், இல்லை, இல்லை அதை ஞாபகபடுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.

டைகர் இதை கவனித்துக் கொண்டிருந்தது போலும். கைப்பையை கவ்வியபடி விரைந்து ஓடி அந்தக் காதலர்களுக்கு முன் நின்றது. வழியில் தடை ஏற்பட்டதை அறிந்து அந்தப்பெண் குனிந்து கீழே பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு கைப்பையின் நினைவு வந்திருக்க வேண்டும். டைகரிடமிருந்து கைப்பையை வாங்கிக்கொண்டு அதன் முதுகில் அவளது மென்மையான விரல்களால் வருடினாள். அந்த சுகத்தில் டைகர் தனது மஞ்சள் நிற வாலை ஆட்டியது.

பூங்காவைச்சுற்றி சிறிய நடைபயிற்சிக்குப்பின் எலைஜா தம்பதியினர் வீடு திரும்பினர். வரும் வழியில் அவர்கள் எதிர்காலத்தில் சிங்கப்பூரிலேயே தங்கி விடலாம், இங்கும் நிறைய ஜெர்மானியினர், நண்பர்கள் இருக்கின்றனர், பல இனத்தவரின் இங்குள்ள மாறுபட்ட உணவகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தனிமையாய் தோன்றவில்லை என எலைஜா கூறிவந்தார். இங்கு வந்து இரண்டு ஆண்டுகளில் பிடித்து விட்டது. பேசிக்கொண்டே வந்ததால் தூரம் கடந்தது தெரியவில்லை, வீட்டினருகே வந்து விட்டனர்.

குடியிருப்பு வளாக நுழைவாயிலில் மஞ்சுளா அவரது தோழியின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். காதில் ஒலிப்பானை மாட்டியபடி அதிலிருந்துவரும் இசையை ரசித்துக் கொண்டிருந்தார். அவளது குழந்தை சிறிய இரண்டு சக்கரங்கள் உள்ள உந்து ஸ்கூட்டரில் அங்கும் இங்கும் ஓட்டிக் கொண்டிருந்தது.

எலைஜா குடியிருப்பு பகுதியின் நுழைவாயிலின் எதிர்புறம் வந்ததும் சாலையை கடக்கும் முன் வாகனங்கள் எதும் வருகிறதா? என்று பார்த்தாள். சாலையை கடக்க முயன்றனர். தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மின்னலென வந்து கொண்டிருந்தது, அதைப்பார்த்ததும் நின்றுவிட்டனர்.

மஞ்சுளாவின் குழந்தை சரன் எலைஜா தம்பதியினரை பார்த்ததும் சிறிய உந்து ஸ்கூட்டரை வேகமாக ஓட்டியபடி முன்வாயிலுக்கு வந்து சாலையை கடக்க முயன்றான். எலைஜா வரவேண்டாம் என அவரை சப்தமிட்டு தடுத்தார், சரன் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. மஞ்சுளா இசையில் மூழ்கியபடியே….. குழந்தையை கவனிக்கவில்லை.

இந்தப் பக்கம் ஒரு இளைஞன் படுவேகமாக ஸ்போர்ட்ஸ் பைக்கில் வருவதையும் குழந்தை ஸ்கூட்டரில் சாலையைக் கடக்க வருவதையும் டைகர் பார்த்து விட்டது. சில நொடிகளில் குழந்தையை நோக்கி விரைந்தது. எலைஜா கர்த்தரே எனது டைகரையும் காப்பாற்று என வேண்டினாள். டைகர் குழந்தையை காப்பாற்றிவிடும் என்பதில் சந்தேகமோ ஐயப்பாடோ அவருக்குத் துளியும் கிடையாது. அதனால் தான் டைகருக்காகவும் கர்த்தரிடம் வேண்டினாள்.

விபத்துக்கள் சில நொடிகளில் நடந்து விடுகிறது. கால்பந்து விளையாட்டில் கோல் அடிப்பது மாதிரி இருக்கிறது. நாம் யூகிக்கும் முன் எல்லாமே நடந்து முடிந்து விடுகிறது. இப்பொழுது அந்த விபத்தும் நடந்து முடிந்து விட்டது.

டைகரின் மஞ்சள்நிற வால்பகுதி துண்டிக்கப்பட்டு மோட்டர் சைக்கிளின் பின் சக்கரத்தில் ஒட்டி இருந்தது. வால்பகுதியில் இருந்து இரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிறிய ஸ்கூட்டர் இரண்டு பகுதிகளாக உடைந்து நொறுங்கி சிதறிக் கிடந்தது. இளைஞனின் வலது கால் ஒடிந்து மோட்டார் சைக்கிள் அவன் மேலே கிடந்தது. அணிந்திருந்த நீலநிற ஜீன்ஸ் பேன்ட் நனைந்து இரத்தம் தரையில் வழிந்தோடியது.

எலைஜாவின் வேண்டுதல் நிறைவேறியது. டைகர் வால்பகுதி காயத்துடன் தப்பித்தது, சரனுக்கு டைகர் வேகமாக வந்து ஸ்கூட்டரை தள்ளி கீழே விழுந்ததில் கை,கால்களில் சிராய்ப்பு, அதில் லேசாக ரத்தம் கசிந்தது, மயக்கமானான். மருத்துவமனைக்கு சரனை தூக்கிச் சென்றனர். டைகரின் வால்பகுதி அடிபட்டு துண்டானதால் வெட்னரி டாக்டரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை அளித்து எலைஜா அழைத்து வந்திருந்தார்.

அடுத்த நாள் மருத்துவமனையை விட்டு திரும்பிய சரன் டைகரைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டு ஓடிவந்து அதை கட்டித் தழுவினான். சிறிது நேரத்திற்குப்பின் மஞ்சுளாவின் வீட்டுப் பணிப்பெண் வந்து சரனைக் கூப்பிட்டாள், அதற்கு சரன் பாட்டே கேட்டுக்கொண்டிருக்கும் மஞ்சுளா எனக்கு வேண்டாம், நேற்று டைகர்தானே என்னைத் தள்ளி காப்பாற்றியது, நான் டைகருடனே எலைஜா வீட்டில் இருக்கின்றேன் என சரன் உறுதியாக மறுத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *