சிலர் இப்படியும் காப்பாற்றுவார்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,817 
 

என் பையனை அடிச்சவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாத்தான் போவான்.

அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார் அவள் கணவர்.

பேசாம இரு, அதான் வக்கீல் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாருல்லை, அவங்க இரண்டு பேரும் என்னமா அடிச்சு போட்டிருக்காங்க என் பையனை.அவகிட்ட இவன் போனான்னா இவனுக்கென்ன ரோட்டுல போறவன். அங்க என்ன நடந்தா இவனுக்கென்ன?

எதிரில் உட்கார்ந்திருந்த வக்கீலின் மனசாட்சி தானாக சொல்லிக்கொண்டது

இப்படிப்பட்ட பெத்தவங்க இருந்தா பையன் எப்படி உருப்படுவான்? “உங்க மகன் என்ன நல்ல காரியமா பண்ணிக்கிட்டிருந்தான். அந்த பொண்ணு கிட்ட தகராறு பண்ணீகிட்டு இருந்தான். அந்த பொண்ணு சத்தம் போட,கூட இருந்த ஆள் நல்லா அடிச்சுட்டு போட்டுட்டான்”..

இதை மனதுக்குள்தான் நினைத்துக்கொண்டாரே தவிர வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர்கள் சார்பாக வாதாட அமர்ந்திருக்கும் நாமே நியாயத்தை பேசி விட்டால் அப்புறம் அவர் படித்த சட்டத்துக்கு என்ன வேலை?.

கவலைப்படாதீங்கம்மா, அடுத்த முறையில தீர்ப்பு வந்திடும். அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துடலாம். அதைய முதல்ல செய்யுங்க வக்கீல் சார். மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொல்லிவிட்டு வெளியே எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.

வழக்கு ஓரளவுக்கு வாசகர்களுக்கு புரிந்திருக்கும்.

குற்றம் சாட்டப்பட்ட சாமாஜியை சிறையில் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பெண்.

என்னால்தான் உனக்கு இந்த பிரச்சினை?

வெற்று சிரிப்பு சிரித்தான் சாமாஜி. நீ பேசாம இரு. இந்த மாதிரி நிறைய பாத்திருக்கேன் என்ன இது அடிதடி கேசு, ஒரு ஆறு மாசம் போடுவாங்க.அவ்வளவுதான் என் வாழ்க்கையில நிறைய முறை ஜெயிலுக்கு போனவன்தான்.. நீ ஒழுங்கா மருந்து எடுத்துக்கறியா?

ம்..மெல்ல தலையாட்டிய அந்த பெண், என்ன மருந்து எடுத்து என்ன பண்ண? எவனோ செய்த தப்புக்கு நான் பலிகடா ஆகவேண்டியதாயிடுச்சு.

இங்க பாரு, முதல்ல கவலைப்படறதை நிறுத்து. போய் உன் வேலைய பாரு. இனிமே அடிக்கடி என்னைய பாக்க வராதே !.

அடுத்த வாரம் கோர்ட்டுக்கு என்னைய கூபிடுவாங்க.

வந்தா என்ன நடந்ததுன்னு சொல்லு, மத்தபடி எதுவும் எனக்காக எதுவும் சொல்றேன்னு மாட்டிக்காதே.அப்புறம் கண்டபடி கேள்வி கேட்பாங்க.

சரி..தலை ஆட்டிக்கொண்டே அங்கிருந்த கிளம்பினாள் அந்த பெண்.

நாட்கள் ஓடியிருந்தன. வக்கீல் சார் அவனுக்கு ஆறு மாசம் தண்டனை பத்தாது சார். பத்தாயிரம் அபராதமும் பத்தாது சார்.

இப்ப இந்த தண்டனை அவனுக்கு போதும், மேற்கொண்டு ஏதாவது பிரச்சினை வந்தா அப்புறம் பார்த்துக்கலாம், அவர்களை திருப்தி படுத்த முயன்றார் வக்கீல். .

அந்த பொண்ணை பாத்தீங்களா? பெரிய ………. முக்காடு போட்டுட்டு நின்னதும், பணத்தை கட்டுன்னு சொன்ன உடனே கொண்டு வந்து கட்டிட்டா? இந்த மாதிரி ஆளுங்க இது மாதிரி கேசு நிறைய பாத்திருப்பாங்க போல, அதுதான் உடனே பணத்தை கையோட கொண்டு வந்திருக்கா.

நீங்களும் அந்த பொண்ணை புடி புடின்னு புடிச்சுட்டீங்க. அவ அந்த தொழில் செய்யறவன்னு சாட்சியோட காண்பிச்சு, பாயிண்ட் பாயிண்டா பேசி அங்கேயே அவளை அழ வச்சுட்டீங்க.இவங்க இரண்டு பேரால அங்க என் பையன் ஹாஸ்பிடல்ல இருக்கறான்.நல்லா வேணும் இவங்களுக்கு. சொல்லிக்கொண்டே போன அந்த பெண்ணை வக்கீல் சமாளித்து

விடை கொடுத்து அனுப்பி விட்டார்.

மருத்துவமனையில் உங்கள் மகன் நன்றாகி விட்டான், வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்று அவனை கூட்டி செல்ல வந்திருந்த அந்த தம்பதியினர், அவர்கள் எதிரில் வந்து நின்ற “அந்த பெண்ணை” பார்த்த்தும் திடுக்கிட்டு, நீயா? உன்னைய மாதிரி ஆளுங்க எங்களை பாக்க வர்றதே எங்களுக்கு அவமானம்.முதல்ல இங்கிருந்து கிளம்பு.இல்லேன்னா நாங்க என்ன பண்ணுவோம்னு எங்களுக்கே தெரியாது.

அந்த பெண் அவர்கள் கத்தலை லட்சியமே செய்யவில்லை. மெல்லிய குரலில் அவர்களை உற்று பார்த்து, முதல்ல உங்க பையனை ஒழுங்கா வளர்த்த முயற்சி பண்ணூங்க ! உங்க பையனுக்கு மிஞ்சுனா இருபது வயசு இருக்குமா? சும்மா காலு உடைஞ்சு போனதுக்கே கூப்பாடு போடறீங்களே? அவனை வெறும் காலோட நிறுத்தி உங்கிட்ட முழுசா ஒப்படைச்சு ஜெயிலுக்கு போனானே அவனுக்கு நீங்க நன்றிதான் சொல்லியிருக்கணும்.. அவன் நினைச்சிருந்தா இந்நேரம் உன் பையனுக்கு வேற வியாதிக்கு அஸ்திவாரம் போட்டிருப்பான்.

அவர்கள் எதுவும் புரியாமல் இவளை பார்த்துக்கொண்டிருக்க !

இங்க பாருங்க நான் ஒரு காலத்துல அந்த மாதிரி தொழில் செஞ்சுகிட்டிருந்தவ தான் இல்லேங்கலை.ஆனா எனக்கு எப்ப அந்த “ஆட் கொல்லி வியாதி” வந்திடுச்சுன்னு தெரிஞ்சுதோ

அப்பவே இந்த தொழிலை விட்டுட்டு, பத்து இட்த்துல வீட்டு வேலை செஞ்சு வாழ்ந்து கிட்டிருக்கேன்.

உங்க பையன் அன்னைக்கு இராத்திரி போதையிலே வந்து, பணத்தை வாரி கையில கொடுத்து, எங்கிட்ட தகாத முறையில நடக்க ஆரம்பிச்சப்பத்தான் சொல்லி சொல்லி பாத்து வேற வழியில்லாம, என்னை பத்தி நல்லா தெரிஞ்ச அந்த ஆள் இவன் காலை உடைச்சு அனுப்பி வச்சான். அவன் மட்டும் அப்படி செய்யாம பணத்துக்கு ஆசைப்பட்டு இதுக்கு சம்மதிச்சு இருந்தா இந் நேரம் உன் பையனுக்கு என்ன வியாதி வந்திருக்கும்னு புரியுதா?

சொல்லிவிட்டு விறு விறு வென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவளை, தெய்வத்தை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த தம்பதியினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *