கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 8,380 
 

இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். காலி டபராசெட் எதிரிலிருந்தது. ஆனால் வேறு யாரோ காபி குடித்ததுபோன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை. தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்காந்திருப்பது வரை, அனைத்தும் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு.

முன்தினம் பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு வந்தார். பையனை சாப்பிட அனுப்பிவைத்து திண்டில் சாய்ந்து கொண்டார். வெளியில் ஊமைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. வாடிக்கையொன்றும் வரவில்லை. காலையிலிருந்து நடந்த வியாபாரத்தைக் கணக்கு பார்த்தார். இரண்டு பொருட்கள் மீட்கப்பட்டுப் போயிருந்தன. மற்றபடி பெரிய வியாபாரமொன்றும் நடந்திருக்கவில்லை. மாதக் கடைசியை நெருங்க நெருங்கத்தான் சூடுபிடிக்கும். முதல் பத்து தேதிகளில் எல்லார் கையிலும் பணம் புரளும்தானே. செய்ய ஒன்றுமில்லாமல் அசட்டுப் பார்வையுடன் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருந்தது. இதில் பார்க்க என்ன இருக்கிறது?

அப்போதுதான் அவளைப் பார்த்தார். இருந்த படிக்கே சற்று முகத்தை மட்டும் தூக்கிப் பார்த்தார். எதிர்சாரியில் நின்றபடி அவள் தம் கடையைப் பார்ப்பதைக் கவனித்தார். அவள் தெருவைக் கடந்து படிகளில் ஏறினாள். அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. குட்டைப் பாவாடையும் அதற்குள் செருகப்பட்ட சட்டையும் அணிந்திருந்தாள். இரட்டைப் பின்னல் மடித்து மேற்புறம் ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. பள்ளிச் சிறுமிக்கு அடகுக்கடையில்போய் என்ன ஜோலி இருக்கப்போகிறது? மிட்டாய் விற்கிற லாலாகடை எனத் தவறிவந்திருக்கும் என்று நினைத்தார். முகம் மட்டும் உடம்புடன் ஒட்டாமல், பெரிய மனுஷி போல் கம்பீரமாகக் களையுடன் இருந்தது. இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் பேசத் தொடங்கினாள்.

இதை எடுத்துக்கிட்டுப் பணம் குடு – மூடியிருந்த வலது கையை நீட்டிப் பேசினாள்.

வயசுப்பையன்கள் மோதிரம் செயின் என்று அடகு வைக்க வருவார்கள். அவர்களிடம் இல்லாத உருட்டெல்லாம் உருட்டுவார். இது உன்னுடையதுதானா? படிக்கிறாயா? வேலை செய்கிறாயா? பெரியவர்களை ஏன் அழைத்து வரவில்லை? என்று ஊர்ப்பட்ட கேள்விகள் கேட்பார். அதே சமயம் வந்தவனையும் போகவிடமாட்டார். அவனைக் கலவரப்படுத்தியே குறைவான பணமாற்றலில் காரியத்தை முடித்துவிடுவார். இவ்வளவு சிறிய பெண்ணிடம் ஏனோ அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை. சிறுமியின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி பார்க்கிற முகம் போல அவ்வளவு சௌஜன்யமாக இருந்தது. எங்கே எப்போது என்கிற கண்ணிகள் இணையவில்லை.

நான் சீக்கிரம் போகணும்.

அவருடைய பேரன் நச்சரிப்பதை நினைவுறுத்தியது. ஆனால் சிணுங்கல் குழைவு இவையொன்றுமில்லை. எஜமானியின் அவரசம் போல இருந்தது அது.

நிம்பள் என்னா கொண்டாந்திருக்கான்.

பூ.

என்னாது.

பூ. புஷ்பம்.

அவருக்கு தலைகால் புரியவில்லை. வேகமாக குறுக்கு மறுக்காய் தலையசைத்து மறுத்தார். ’- அதெல்லாம் நம்பள் வாங்கறானில்லே’ – நியாயமாய் அவள் சொன்னதைக் கேட்டு சிரித்திருக்க வேண்டும். ஆனால் அதொன்றும் செய்யமுடியவில்லை அவரால்.

தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய விரித்தாள். அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை.

நிஜமாகவே அசந்துபோனார். வேறு வழி. நட்ட நடுப்பகலில் பேத்தி போல ஒரு சிறுமி விலைக்கு வாங்கிக்கொள் என்று வந்து நிற்கிறாள். அதற்கு மேல் கையை விரித்தால் தங்க ரோஜா. ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில். சந்தேகத்திற்கு இடமேயில்லை. அறுபத்து மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது. பிரமிப்பெல்லாம் சொற்ப நேரம்தான். தரைக்கு நடை போட்டது மனம். கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது. கையைப் படக்கென்று மூடிக் கொண்டாள். கண்ணாடிப் பெட்டியின் மீதிருந்தும் கையை எடுத்துக் கொண்டவளாய் பின்னால் நகர்ந்தாள்.

நிம்பள் எவ்ளோ கேக்றான்.

ஆயிரம்.

என்னாது!

ஆ யி ர ம்.

அவ்ளோ அல்லாம் நம்பள்கு கட்டாது.

கட்டாதுனாப் போ, வேற கடைக்குப் போறேன்.

நம்பள் அதைத் தேச்சி பாக்றான்.

பூவை நான்தான் பிடிச்சிப்பேன். கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும்.

இரண்டு மூன்று முறை உரசினார். முந்திய அபிப்ராயத்தை அது கொஞ்சமும் மாற்றிவிடவில்லை. எனினும் இன்னொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம். ஒழுங்காய்க் கழுவிக் கொள்ளக்கூடத் தெரியாத குழந்தையிடம் போய் பதினெட்டு யோசனையா? வலிய வரும் அதிர்ஷ்டத்தை நழுவ விடாதேயென அதட்டியது மூளை.

கை மாறியது.

குள்ளமேசையின் கீழ்டிராயரைத் திறந்து உள்ளே வைத்தார். பணத்தை இரண்டாம் முறையாக அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள். திரும்ப ஒரு தடவை திறந்து பார்த்து மூடினார்.

யார் முகத்தில் விழித்தோம், இப்படியொரு அதிர்ஷ்டம் தேடிவந்து பிடிபிடியெனக் கொட்டிவிட்டுப் போக என்று நினைத்தார். சந்தோஷம் நெஞ்சையடைத்து நெட்டியது. சந்தோஷப்படுவதில் என்ன பிழை? துளியும் வஞ்சகமில்லை. சரியாகச் சொன்னால் யாரும் யாரையும் ஏமாற்றக் கூட இல்லை. தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறோம். காலில் ஏதோ தட்டுகிறது. குனிந்து பார்த்தால் ரூபாய்க் கட்டு. எடுத்துக் கொள்கிறோம். நாமா தேடிப் போனோம். தானே வழியில் வந்தது. வேறு என்ன செய்ய? ஆள் யாரெனத் தெரிந்தால் கொடுத்துவிடப் போகிறோம். ஆனால் அதென்ன அவ்வளவு சுலபமா? பணத்தைப் பார்த்ததும் தரையெல்லாம் சொந்தக்காரர்கள் முளைக்கிற காலமிது. எல்லோரும் தனதென்றுதான் சொல்லுவான். தொலைத்தவன் நிச்சயம் இவர்களில் ஒருத்தனில்லை. தெய்வம் தேடிவந்து கொடுத்த பணத்தை மறுக்க நமக்கென்ன உரிமை?

நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன. அந்தச் சிறுமியிடம் முகவரி வாங்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. சுதாரித்து கடைவாசலுக்குப் போய் கதவைப் பிடித்தபடி தெருவின் இருபுறமும் பார்வையை ஓட்டினார்.

வழக்கம்போல் இருந்தது தெரு. மாவுமெஷின் இரைச்சல். தெருக்கோயில் மரத்தடியில் நிழல்வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும் கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து நடக்கின்ற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத்துணி சுமக்கும் கடைப்பையன். காலகட்டி மலம் கழித்து நகரும் எருமைகள். போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை பஞ்சபாத்திரத்தில் பிடிக்கும் திவசப் புரோகிதர். ரோகம் பீடித்த நகரோரத் தெரு வழக்கம் போல் இருந்தது.

சிறுமியைக் காணவில்லை.

முகவரி இல்லாவிட்டால் என்ன. அதுவும் நல்லதற்குத்தான். யாரையேனும் அழைத்து வந்தாலும் ஒரு ஆதாரமுமில்லை. கனத்தை வைத்துப் பார்த்தால் எட்டுப பத்துப் பவுன் தேறும். ஏழெட்டு கிராமம் செம்பைக் கழித்தாலும் இன்றைய தினத்திற்கு கிராம் 180 ரூபாய்.

உள்ளே வாங்கோம்மா.

கிழவியும் பெண்ணுமாக உள்ளே வந்தனர். அவர் தம்மிடத்தில் வந்து உட்கார்ந்தார்.

உக்காருங்கோம்மா.

உட்கார்ந்தபடி, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை விரித்து காகிதப் பொட்டலத்தை எடுத்தாள். இரண்டு கம்மல், மூக்குத்தி முதலியவற்றைக் கண்ணாடிப் பெட்டியின் மேல் வைத்தாள். அவற்றைப் பரிசோதிக்கத் தொடங்கினார். விசும்பும் சப்தம் கேட்டது. தலையை நிமிர்த்தாமலே பார்த்தார். கும்குமப்பொட்டு தவிர ஆபரணமற்றிருந்த அந்தப் பெண் மூக்கும் கன்னமும் துடிக்க அழுது கொண்டிருந்தாள். கிழவி தேற்றிக்கொண்டு இருந்தாள். தராசில் நிறுத்துப் பார்த்தார். உரசிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பின் கிழவியை நோக்கிக் கேட்டார்.

நிம்பள் எவ்ளோ கேக்றான்.

அறநூறு ரூபா வோணும் சேட்டு.

அல்லாம் டோட்டல் பாஞ்ச் பவுன் ஏளு கிராம். கல்லு செம்பெல்லாம் போனாச்சா பாஞ்ச் பவுன்க்கும் கொறையறான். நம்பள் நானூறு தரான் – என்றபடி நான்கு விரல்களைக் காட்டினார்.

சேட்டு சேட்டு அப்பிடி சொன்னீனா எப்பிடி சேட்டு. மருமவப்புள்ளய ஆஸ்பத்திரில சேத்துக்குது. டாக்டரு செலவு மருந்து செலவெல்லாம் இருக்குது சேட்டு. கம்பெனிலயும் சம்பளமில்லாத லீவுதான் குடுத்துருக்கான். வூடும் நடக்கோணும். பாத்துக்குடு சேட்டு.

நம்பள் என்னாம்மா செய்றான்.

அவதினுட்டுல்ல வந்துருக்கோம். பாத்துக் குடு சேட்டு.

நம்பள் நானூறு தரேன் சொல்றான். உதர் கடையிலே அதும் தரானில்லே இதுகு.

இல்ல சேட்டு பாத்துக் குட்தீன்னா உம் புள்ளகுட்டியில்லாம் நல்லாருக்கும் சேட்டு.

நிம்பள் ஒன்னு செய்ங்கோமா. கம்பல் அடகு வெக்றான். மூக்தி விக்றான். நம்பள் டோட்டல் ஐநூறு தரான். நிம்பள் இஸ்டம் செய்றான்.

பையன் வந்தான். ரசீது போடச் சொல்லி, அவர்களை ஒரு வழியாக அனுப்பி வைத்தார். விளக்கு வைக்கிற நேரமாகிவிட்டது. நெகிழ்ந்திருந்த கச்சத்தை சரிபண்ணிக் கொண்டு இரவு உணவிற்காக மாடிக்குப் போனார்.

கொஞ்சம் ஓய்வெடுத்த பின் கடைக்கு வந்தார். நன்றாக இருட்டி விளக்குகள் போடப்பட்டிருந்தன. அவை இருளை அதிகப்படுத்திக் காட்டின. மகனை அனுப்பிவிட்டுத் திண்டில் சாய்ந்தார். சாய்ந்தபடிக்கே குள்ள மேஜையின் கீழ் டிராயரைத் திறந்தார். ஒரு அழகான ரோஜா மலர் இருந்தது. பரபரப்பாய் மேல் டிராயரை இழுத்தார். சில்லறைக் கிண்ணங்களும் அவற்றினடியில் நோட்டுகளும் இருந்தன. மேஜைக்கடியில் கையைச் செலுத்தி அபத்தமாய் துழாவினார். பதைப்புடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தார். லாண்டரிக் கடைப் பையன் நூறு ரூபாய் தாளை நீட்டி சில்லறை கேட்டான். இரும்புப் பெட்டியை மூடிக் கொண்டு ’நை நை ஜாவ்’ என்று எரிந்து விழுந்தார். அவன் போனபின் திறந்து பார்த்தார். இருக்கிற பொருட்கள் பத்திரமாய் இருந்தன. அதைப் பூட்டிவிட்டு கீழ்டிராயரைத் திறந்தார். துல்லியமாக அந்த ரோஜாமலர் வீற்றிருந்தது.

தரையில் கையூன்றி எழுந்து கடைவாசலுக்குப் போனார். மாடியைப் பார்த்து மகனுக்குக் குரல் கொடுத்தார். வந்தவனிடம் விஷயத்தைக் கூறினார். சாவியை அவரே எடுத்துப் போய்விட்டதாகவும், ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று, கைப்பணத்திலேயே தான் வியாபாரம் செய்ததாகவும் மகன் கூறினான். திரும்பவும் குனிந்து திறந்து பார்த்தார். இன்னும் நூறாயிரம் முறை மூடித் திறந்தாலும் நான் நான்தான் என்றது ரோஜாமலர். பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பு பெல்ட்டை இறுக்கியபடி தெருவில் இறங்கினார்.

சாதாரணமாக தெருவில் அதிகம் நடமாடுபவரல்ல அவர். அப்படியே நடக்க நேர்கையில், பஞ்சகச்சத்தைக் கெண்டைக் காலுக்கு உயர்த்திக் கொண்டு நிதானமாகவும், மாட்டு மனிதச் சாணங்களை மிதித்து விடாமல் ஜாக்கிரதையாகவும் நடப்பார். அதையெல்லாம் கவனிக்கிற நிலையில் அப்போது இல்லை. அவருடைய மனவுலகில் ஒரு சிறுமி. அவள் கையில் ஒரு தங்க மலர். அதை ஆவலுடன் கையில் எடுக்கிறார். மறுகணம் அது வெறும் மலராகி கையைத் தீயாய்ச் சுடுகிறது.

தெருக்கள் விளக்கின்றி இருண்டிருந்தன. ஜன்னல்கள் அற்ப ஒளியைக் கசியவிட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் உட்கார்ந்து பல்வேறு ஸ்தாயிகளில் பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுசுகள் மீதே அவர் பார்வை பட்டு நகர்ந்தபடி இருந்தது. கண்களை இடுக்கிய வண்ணம் தெருக்களைச் சுற்றி வந்தார். புகையும் வயிற்றைக் குமட்டும் நாற்றமும் வரத் தொடங்கியது. கூவம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இந்த இடங்களில் இருக்க நியாயமில்லை என்று ஒரு தெருவில் திரும்பினார். அதுபோய் ஒரு வீட்டில் முட்டிக் கொண்டது. வந்த வழியே திரும்பி வேறு தெரு பார்க்க நடந்தார். பார்வையில் படும் சிறு பெண்களெல்லாம் அசப்பில் மலர் கொண்டு வந்த சிறுமியைப் போலவே தோன்றினார். கடைக்குத் திரும்ப இருந்தவர் எதற்கும் கோயிலை எட்டிப் பார்த்துவிடலாம் என்று குளத்திற்காய் திரும்பினார்.

கோபுரத்து மெர்குரி விளக்கு, இருண்ட வானத்தின் பின்னணியில் ஒற்றைக்கல் மூக்குத்தியென சுடர் விட்டது. நீரற்ற குளம் அமைதி கொண்டிருந்தது. மைய மண்டபத்தில் ஒற்றை நெருப்புப் புள்ளி மங்கி ஒளிர்ந்து ஆளிருப்பதைக் காட்டியது. படிக்கட்டு அனுமார் கோயில் விளக்கு, அணைந்தால் தேவலாம் என்று முணுக்முணுக்கென எரிந்தவண்ணம் இருந்தது. ஏற்கெனவே சில சமயம் இந்தப் பக்கம் நடந்திருந்தாலும், கடக்கவியலா நீளம் கொண்டிருப்பதான பிரமிப்பை அளித்தது குளத்தங்கரை.

பிரதான வாயிலுக்கெதிரில் யானை நின்றிருந்தது. அதைச் சுற்றி ஒரே மொட்டைப் பட்டாளம். யானையிடம் என்ன இருக்கிறதென்று எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். போதாதென்று வெளியூரிலிருந்து வேறு கூட்டம். அவருக்கு எரிச்சலாக வந்தது. கும்பலைச் சுற்றிக் கொண்டு உள்ளே சென்றார். ஒவ்வொரு சந்நிதியாய் நகர்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளே இல்லை. ஏகமாக அலைந்தததில் கால்கள் விண்ணென்று தெரித்தன. பிரசாதக் கடையருகிலிருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்தார். ஒரு மொட்டைக் குடும்பம் கசக்மொசக்கென்று தின்றுகொண்டிருந்தது. தரையெங்கும் இலைகளும் சோற்றுப்பருக்கைகளும் இறைந்து கிடந்தன. சந்நிதிகளை விடவும் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாயிருந்தது.

என்ன சேட்டுவாள் அபூர்வமா இந்தப்பக்கம். என்ன விசேஷம். மைசூர் பாக், தேங்குழல் இருக்கு. என்ன சாப்பட்ரேள் – வியர்வையை சுண்டிவிட்டு, அசுரகதியில் பொட்டலம் கட்டியபடி பேச்சுக் கொடுத்தார் மடப்பள்ளிக்காரர். சுரத்தின்றி ஏதோ சில வார்த்தை பேசிவிட்டுக் கிளம்பினார்.

அவருக்குப் படபடப்பாக வந்தது. என்ன அநியாயம். பெரிய பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதைப் போலிசில் போய் புகார் பண்ண முடியுமா? இல்லை யாரிடமாவது சொல்லி அழத்தான் முடியுமா? எவன் நம்புவான். நிஜமாகத்தான். கனவில்லை. கதையில்லை. ஒரு சின்னப் பெண். ஸ்கூல் போகிற பெண். பாவாடை சட்டை ரெட்டை ஜடை. என்னை ஏமாற்றி விட்டது. கொடுக்கும்போது தங்கம்தான். சந்தேகமேயில்லை. நன்றாக உரசிப் பார்த்துதான் வாங்கினேன். வேறு யாரும் எடுத்து ஏமாற்றியிருக்கலாம் என்கிற பேச்சுக்கும் இடமில்லை. சாவி என்னிடம்தான் இருந்தது. கண்கட்டி வித்தையோ, என்ன மாயமோ. அந்தச் சிறுமியே நிஜமோ பொய்யோ. ஆனால் ஆயிரம் ரூபாய் இருப்பில் குறைவது உண்மை.

அந்தச் சிறுமியின் பிராயத்திலேயே மதராஸ் வந்தாயிற்று. தாத்தாவின் அருகிலிருந்து பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்ட தொழில். வேடிக்கை போல் விளையாட்டைப் போல் கரைந்து கற்றுக் கொண்ட தொழில். ஆரம்ப நாட்களில்கூட இப்படியொன்று நிகழ்ந்ததில்லை. தாத்தா ரொம்ப உற்சாகப்படுத்துவார். பேரனின் சூட்டிகையில் ஏகப் பெருமை. அப்பாதான் சிறிய தவறுக்கும் பயங்கரமாகக் கத்துவார். பெட்டியை பூட்டிய பின்னும், சாவி அதிலேயே தொங்கிக் கொண்டிருந்தால் போயிற்று. நிறைய தடவை விரல் முட்டுகளில் கடைச் சாவியாலேயே அடித்திருக்கிறார். அப்பா அடிக்கடி சொல்லுவார். முகத்தைப் பார்த்ததும் சொல்ல வேண்டும். அவன்தான் தேர்ந்த வியாபாரி. இது எப்படி. திரும்ப வந்து மீட்குமா? இல்லை, இப்போதிருந்தே இது நம்முடையது தானா என்று முடிவு செய்யத் தெரிய வேண்டும். குடிகாரன் சூதாடி போன்றவர் வைக்கிற பொருள் திரும்ப அவன் கைக்குப் போகப் போவதில்லை. அப்படியான ஆட்களிடம் அடிபிடி பேரம் பேசக்கூடாது. இவ்வளவு தான் என்று கறாராக ரெண்டு முறை சொன்னாலே போதும். அவனுக்கு வேண்டியது பணம்; அதுவும் உடனே. அவர்களை சீக்கிரம் முடித்து அனுப்ப வேண்டும். தாமதப்படுத்தினால் வேறு கடை பார்க்கப் போய்விடுவான். இப்படி இப்படியாக தாத்தாவின் ஞானம் அப்பாவின் அறிவு மற்றும் தாமே சுயமாகக் கண்டுகொண்டு அமல்படுத்திவரும் சூட்சுமங்கள் என்று எதற்கும் ஓர் அர்த்தமின்றிப் போய்விட்டது.

அவருக்குக் குளிர்வது போல் இருந்தது. ஒற்றைத் தெருவிளக்கில் பனியிறங்குவது துல்லியமாகத் தெரிந்தது. தேரடியில் பெரும்பாலான கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். மீதப்பட்ட பழங்கள், அழுகல் எனத் தரம் பிரித்து ஜவ்வுத்தாள்களால் தள்ளுவண்டிகளை மூடிக் கொண்டிருந்தனர். மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டிருக்கும் போல் தோன்றியது. அநேகமாக அந்தப் பகுதி முழுக்க அலைந்தாயிற்று. இனிப் பயனில்லை. அசதியும் சோர்வும் அந்தரத்திலிருந்து தோன்றியவை போல அவர் மீது திடீரெனக் கவிந்தன. சிரமமாக இருந்தாலும் சற்று வேகமெடுத்து நடந்தார்.

வேலைக்காரச் சிறுவன் காபி டபராவை எடுததுக் கொண்டு போனான். எண்ணக்கோர்வை அறுபட வெளியில் பார்த்தார். வெயில் சூடேறத் தொடங்குவதை வீசிய காற்றின் வெம்மையிலிருந்து உணர முடிந்தது. எது எப்படியானாலும் கடை திறந்தாக வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை. ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. சோர்வாயிருந்தாலும் அன்றைய தினத்தைத் தொடங்க ஆயத்தமானார்.

கடையைத் திறந்து வைத்திருந்தான் மகன். அவனுடைய பொறுப்புணர்ச்சியை உள்ளூர பாராட்டிக் கொண்டார். எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், காலை ஆகாரம் உண்டானா எனக் கேட்டு அவனை அனுப்பி வைத்தார். திண்டில் சாய்ந்தபடியே இடுப்புச் சாவியை எடுத்தவர் ஒருகணம் நிதானித்தார். சுயரூபத்தை அடைந்திருக்கலாகாதா என்கிற நப்பாசை அவரைப் பீடித்தது. கழுத்தை ஒடித்து திரும்பி அண்ணாந்து தலைக்கு மேல் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த மகாவீரரைப் பார்த்து மனதிற்குள் பிரார்த்தித்தபடி கீழ் டிராயரைத் திறந்தார். அப்போதுதான் கொய்யப்பட்டது போல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது.

இரவு தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன. உடல் வெம்மையடைந்து தலை கனத்தது. மகன் சீக்கிரம் வந்தால் தேவலாமென்று இருந்தது. படுத்துக் கொள்ள வேண்டும்போல் அசதி அவர் உடலையும் மனதையும் வியாபித்தது. அவருடைய கடைசிப் பேரன் கைகளால் படிகளைப் பிடித்து ஏறி கடைக்குள் வந்தான். வேறு சமயமாயிருந்தால் குழந்தையைத் தூக்கி மார்பிலணைத்துக் கொஞ்சியிருப்பார். யோசனையில் அவனையே வெறித்தபடி இருந்தார். குழந்தை குள்ள மேசையில் கையூன்றி ஏறினான். மூடப்படாதிருந்த கீழ் டிராயரில் மலரைப் பார்த்ததும் குதூகலமாய் மழலையில் கூவிக் கொண்டு அதையெடுக்கக் கையை நீட்டினான். எரிச்சலுடன் அவன் கையைத் தட்டிவிட்டு மேலே போகும்படி விரட்டினார். தாங்கவியலாத ஆற்றாமையுடன் மலரை எடுத்துத் தெருவில் வீசினார். அது சாக்கடையோரத்தில் போய் விழுந்தது.

கனத்த பேரேட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினார் அவர்.

– செப்டம்பர் 1984

Print Friendly, PDF & Email

1 thought on “சிறுமி கொண்டுவந்த மலர்

  1. ‘கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது.’ என்கிற நுட்பமான சொல்லாடல் மூலம் இயல்பாய் கதையின் போக்கை திசை திருப்பிய கதாசிரியரின் திறமை போற்றத்தக்கது.
    மனித உளவியல் சார்ந்த சிறந்த சிறுகதை.
    வாழ்த்துக்கள்… பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *