சிறகு உதிர் காலம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 12,728 
 

வாடிப் போன கத்திரிச் செடியாய் வந்திறங்கிய ஆதித்யாவிற்கு வாசலில் இருந்த புது ஜோடி செருப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. யாராவது விருந்தாளி வந்தார்கள் எனில் விதவிதமான இனிப்புகள், பலகாரங்கள் உண்ணக் கிடைக்குமே… அந்த உற்சாகம். பூஜையறை அலமாரியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த வகை பலகாரங்களை இரண்டு நாட்கள் வைத்திருந்து உண்ணலாம். எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தான்.

தன் அம்மா பக்கத்தில் ஒரு புது ஆன்ட்டி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். ஊதா நிற சுடிதாருக்கு இணையாக ஊதா நிறத்திலான ஹேண்ட் பேக்கை மடியில் கிடத்தியிருந்தாள். இவனைக் கண்டதும் இருவரின் முகமும் பிரகாசமானது.

“”ஹேய் ஆதி… வா வா வா, ஸ்கூல்லருந்து வர்றீங்களா?”

அந்நிய வாடை விசாரிப்பில் கூச்சப்பட்டுப் போன ஆதி நமட்டுச் சிரிப்புடன் “ம்’ என்று மட்டும் தலையாட்டி வைத்து தன் புத்தக மூட்டையை இறக்கி வைக்கும் ஆவலில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“”ஆதித்யா, என்ன இது. ஆன்ட்டி கேக்குறாங்கல்ல… ஒழுங்கா வாய தொறந்து பதில் சொல்ல வராதா?”

“”விடு சபி, சின்ன பையன்தான். ஸ்கூல் விட்டு வந்த களைப்புல இருப்பான்”.

“”என்ன ஸ்கூலோ என்னவோ… அவன் ஸ்கூல்ல ஒழுங்கா சொல்லிக் கொடுக்கறதே இல்லேன்னு நினைக்குறேன்” சித்ரா.

“”என்னடி இவ்வளவு அலட்சியமாச் சொல்ற. நல்லா சொல்லித் தராத ஸ்கூல்ல நீ ஏன் சேத்த? ஆமா… அவன் என்ன சிலபஸ்ல படிக்குறான்?”

“”மெட்ரிகுலேஷன் சிலபஸ்”

“”அதத்தான் இப்ப சமச்சீர்னு மாத்திட்டாங்களே. சரிதான் போ… எம் புள்ளயும் இதே சிலபஸ்ல தான் படிக்குறான், எங்க ஆபிஸ் கேண்டின்ல வேல பாக்குறவங்களோட புள்ளயும் அதே சிலபஸ்ல தான் படிக்குறான். அப்ப உன் புள்ள அவங்களவிட எப்படி ஒரு ஸ்டெப் முன்னாடி இருப்பான்?”

“”சித்ரா, நீ என்ன சொல்ற?”

“”என்ன சபி, நீங்கெல்லாம் இப்படி இருக்கீங்க. சென்னையில் வந்து பாரு. என் பசங்கெல்லாம் எப்படிப்பட்ட சிபிஎஸ்ஈ ஸ்கூல்ல படிக்குறாங்கன்னு. அதோட ஒவ்வொரு பசங்களும் படிப்போட சேர்ந்து டான்ஸ், பாட்டு, பரதம், கராத்தே, ஸ்விம்மிங், அபாகஸ்னு பின்னி எடுக்குறாங்க. ஸ்கூல் முடிஞ்சதும் அததுக்கு தனித்தனி கிளாஸ். உனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லயா… வீட்டு புள்ளைங்க காதலிச்சா கெüரவக் கொலைகள் செய்றா மாதிரி இன்னும் கொஞ்ச நாள்ல பசங்க படிக்காட்டியும் செய்வாங்க போல இந்த காலத்து பேரண்ட்ஸ். அந்த லெவல்ல இருக்காங்க”

“”சித்ரா… ஏதோ இந்த ஊர்ல படிக்க ஒரு நாலு நல்ல ஸ்கூல் இருக்கு. அத நெனச்சே நாங்க சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். இங்கெல்லாம் இத கத்துக் கொடுக்க ஆட்களே கிடையாது. தெரியுமா?”

“”ஆட்கள் இல்லனு சொல்லாத. உனக்கு தெரியலன்னு சொல்லு. கண்டிப்பா இருப்பாங்க. விசாரிச்சு பாரு. இங்க பாரு சபி… ஒரே வொரு புள்ளய வெச்சிருக்க. அப்புறம் ஒண்ணுத்துக்கும் உதவாம போயிடப் போறான்”

அறையின் ஜன்னல் புறம் நின்னு கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு “பக்’கென்றது. விருந்தாளி வந்ததன் பொருட்டு ஏற்பட்ட உற்சாகம் கூட அவனிடமிருந்து விலகிச் சென்றிருந்தது. இன்னும் அரைமணி நேரம் தாண்டியும் அவர்கள் இருவரும் ஆதியின் படிப்பு குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டு மிரண்டு போனவன் அப்படியே படுக்கையின் மேல் தூங்கிப் போனான்.

பலமாக தட்டி எழுப்பப்பட்டான் ஆதி. எதிரே சபிதா புத்தக மூட்டையில் இருந்து அவன் எழுத வேண்டிய அன்றைய வீட்டுப் பாடங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள். தன் அம்மாவின் தோழியைக் கண்களால் துழாவினான். காணவில்லை. சென்றிருக்கக்கூடும் என மனதில் உறுதி செய்து கொண்டான்.

அது எப்படி வீட்டுப் பாடம் முடிக்காம தூக்கம் வரும் என அம்மா அர்ச்சித்துக் கொண்டே இருந்தாள்.

அப்போதைய ஆதியின் மனநிலை, வீட்டுப் பாடம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தவனை தன் பழைய உடைந்த கிரிக்கெட் மட்டையால் அடிக்க வேண்டும் போல் இருந்தது. அவனுடைய ஒரே சந்தோஷம் வருடத்தின் இறுதியில் தற்போது இருந்ததுதான். இன்னும் ஒன்றரை மாதத்தில் வர இருக்கின்ற முழு ஆண்டு விடுமுறையை எண்ணி குதூகலித்தது மனது. அப்போது அவன் ஆறாவதிலிருந்து ஏழாவது சென்றுவிடுவான். அதை நினைத்த வண்ணம் கைகளில் பரபரப்பை கூட்டி எழுதிக் கொண்டிருந்தான்.

சென்னை ஆன்ட்டியின் வரவு அவனுடைய முழு ஆண்டு விடுமுறையை கபளீகரம் செய்துவிடும் என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

சித்ரா சொல்லிவிட்டு போனதை வேதவாக்காக கொண்ட சபிதா தன் ஊரிலிருந்து 15 கிமீ. தொலைவிலிருந்த மற்றொரு பள்ளியில் அடுத்த ஆண்டு சேர்க்கைக்கான அனுமதி சான்றிதழ்களை வாங்கி வந்தாள். அதுமுதல் ஐபிஎல் மேட்ச் பிக்சிங் பூதம் போல் பரபரப்பு வீட்டை தொற்றிக் கொண்டது.

இறுதித் தேர்வு முடிந்த பின்னும் புது பள்ளியில் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுக்காக எந்நேரமும் சபிதாவுடன் அமர வைக்கப்பட்டு படிக்க வைக்கப்பட்டான். ஆதித்யாவுக்கு உள்ளூர ஒரே நடுக்கம். அந்த புது பள்ளியில் சேர்வதற்கே இத்தனை கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமெனில் சேர்ந்துவிட்டால் எப்படியெல்லாம் கசக்கி பிழியப்படுவோம் என்பதை நினைத்து ஜிலீரிட்டான்.

இதையெல்லாம் கூட தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் உடன் படிக்கும் நண்பர்களை பிரியப் போவதைதான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எப்போதாவது வீட்டுப் பாடம் செய்யாமல் சென்றால் கூட காட்டிக் கொடுக்காத அவன் குரூப் லீடர் சில்வியா, அவ்வப்போது பென்சிலையும் பேனாவையும் கொடுத்துதவும் பழனி, வீட்டை அடையும் தறுவாயில் பெய்யும் மழையில் குடைக்குள் தனக்கும் அடைக்கலம் கொடுக்கும் சந்தோஷ், லீவ் லெட்டர் எழுதிக் கொடுக்கும் அஸ்வின், பிராஜெக்ட்டுக்கு இன்முகத்துடன் உதவும் பிரியா என அது ஒரு வசந்த ராக அனுபவம்.

வகுப்பு தோழர்களோடு மட்டுமா? இதோ இந்த நுழைவுத் தேர்வின் பொருட்டு விடுமுறையிலும் சபிதா அவனை வெளியே விடாமல் படிக்க வைப்பது தன் கைகளை நாகப் பாம்பினால் கட்டிப் போட்டது போல் இருந்தது.

வெளியே தன் சக தோழர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் வழியாக அவர்களின் கத்தல், பகிர்வு, மகிழ்ச்சி, கூக்குரல், சண்டை என அனைத்தும் அவன் காதுகளை நிறைத்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சமையலறையில் இருந்தபடியே அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்த தாயிடம் ஓடினான். அவன் எவ்வளவு சொல்லியும் சபிதா ஏற்றுக் கொள்வதாய் இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் எதிர்வரும் தேர்வு குறித்தே அவனை செதுக்கிக் கொண்டிருந்தாள். ஏமாற்றத்துடன் வந்து சோஃபாவில் பொத்தென அமர்ந்தான் ஆதி.

“”ஏய்…. பேட்டுல பட்டுச்சு, பேட்டுல பட்டுச்சு அதெல்லாம் ஒத்துக்க முடியாது” என்ற வெளிப்புற தோஸ்துகளின் சச்சரவுகள் தற்போது அதிகமாகிக் கொண்டே சென்றன. ஆதித்யாவுக்கு வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. தைரியமும் வார்த்தைகளும் பிடுங்கப்பட்ட பின் அவனால் அதைத்தான் செய்ய முடிந்தது.

தேர்வு ஒரு வழியாய் முடிந்து போக நிம்மதி பூப்பூத்தது ஆதியின் கண்களில். அது இரண்டு நாட்கள் கூட நீடிக்காத வண்ணம் அபாகஸ், டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் என வரிசையாக விடுமுறை வகுப்புகளில் சேர்க்கப்பட்டான்.

அவன் ஒவ்வொரு வகுப்பு விட்டு வரும்போதும் அவன் தெரு பிள்ளைகள் புதிது புதிதாக ஏதாவதொரு விளையாட்டில் லயித்திருப்பார்கள். ஐஸ் பாய், கோலி, காத்தாடி, கேரம், ஜோடிப் புறா, சைக்கிள் ரேஸ், பேட்மிட்டன் என அது ஒரு பெரிய பட்டியல். இடைப்பட்ட சிறு சிறு இடைவெளியில் சென்று விளையாடினாலும், “”டேய் என்னடா நீ. பாதியிலே வுட்டுட்டு வுட்டுட்டு ஓடுற. அப்புறம் ஒரு ஆளு கொறயுது. உன்னால சரியா செட்டு சேர முடியலடா. ஆட்டமே சரி வரல” என தோஸ்துகள் குறை கூறினார்கள். ஆதிக்கும் அந்த விளையாட்டுக்கள் அத்துப்படி என்பதால் அவர்கள் சொல்வது சரியென பட்டது. பள்ளி தொடங்கும் முன்பாகவே அவர்களிடத்தே அன்னியப்பட்டு போனான்.

ஊரிலிருந்து போன் பேசிய பாட்டியிடம் கூட, “”அதெல்லாம் அவன அனுப்பமுடியாதும்மா” என்று சபிதா கண்டிஷனாக சொல்லிவிட்டாள். பாட்டி வீடு செல்லாமல் இந்த விடுமுறை அவனுக்கு பாகலாய் கசந்தது. எப்போதும் பத்து நாட்களாவது சென்று விடுவான். அப்படி இல்லாதது அவனை சோர்வுக்குள்ளாக்கியது. பத்து சிறு குத்தூசிகள் உட்காரும் இடத்தில் குத்துவது போல் இருந்தது.

அவனுக்கு புது பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சபிதா எத்தனையோ பிரார்த்தனை செய்திருக்கிறாள் என்பதை வேண்டுதல்கள் நிறைவேறும்போது உடன் செல்கையில்தான் ஆதிக்கே தெரிந்தது.

புது பள்ளியில் காலடி எடுத்து வைத்தான் ஆதி. மலை மீதான தனித்த பயணம் போலிருந்தது அவனுக்கு. சிற்சில மாணவர்களைத் தவிர அனைவரும் அந்நியமாகவே தெரிந்தனர் அவனுக்கு. எல்லோரும் வழுக்கு தரையில் ஸ்கேட்டிங் விளையாடுவது போலவும் தான் மட்டும் ஜல்லிக் கொட்டிய தாழ்வாரத்தில் நொண்டி ஆடுவது போலவும் இருந்தது. அவ்வளவு பின்தங்கிய நிலையில் இருந்தது பெரும் சிரமமாய் இருந்தது. மெல்ல மெல்ல செக்கு மாடு போல சொன்னதை செய்யப் பழகியிருந்தான். பள்ளிக்கு வருவதும் போவதுமாக நிறைய நேரம் பள்ளிப் பேருந்தில் பயணிப்பது அவனுக்கு பிடித்தமானதாக இல்லை. பயணங்களின்போது இயல்பாகவே குமட்டிக் கொண்டு வருமாதலால் சில பல வேளைகளில் வாந்தி எடுத்த வண்ணம் இருந்தான்.

இவனுடைய இப்படிப்பட்ட செய்கையால் பிள்ளைகள் இவனிடம் ஒண்டாமல் விலகியே இருந்தனர். தனி சீட்டில் வெளி வாகனங்களை வெறிப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது அவனுக்கு.

பள்ளி விட்டு செல்லும்போதே எழுத வேண்டிய வீட்டுப் பாடங்களும் போக வேண்டிய அபாகஸ் கிளாசும் அவனை இம்சை செய்தவண்ணம் இருந்தன. இதில் அவ்வப்போது சித்ரா ஆன்ட்டியிடம் அம்மா இவன் படிப்பு விஷயமாக ஆலோசனை கேட்பதும் அதிகரித்திருந்தது. ஆதி கடுப்பாகிப் போகும் நேரங்கள் அவை.

ஒரு சமயம் ஊரிலிருந்து பெரிய தாத்தா பாட்டி வந்திருந்து ஆனந்த் மாமாவின் திருமணத்திற்கு வரும்படி வெற்றிலைப் பாக்கு இனிப்பு வைத்து வரவேற்றார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் பத்திரிகையை எடுத்துப் பார்த்தான் ஆதி. புதன் கிழமை திருமணம் என்றிருந்தது. “அப்பாடி அப்ப ரெண்டு நாளு லீவு கெடைக்கும். நாம எல்லாரையும் பாக்கலாம். புது சட்டை போட்டுக்கலாம்’ என மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டான். ஆனால் எதிர்வந்த செவ்வாய்தான் தெரிந்தது அவனை கழற்றி விட்டுச் செல்லும் வேலையில் அப்பாவும் அம்மாவும் இருந்தனர் என்று.

“”அம்மா, நானும் உங்ககூட கல்யாணத்துக்கு வரேம்மா”

“”இங்க பாரு ஆதி. முன்ன மாதிரி நீ சின்ன புள்ள இல்ல. செவந்த் படிக்கிற. அப்பப்ப அந்த ஸ்கூல்ல லீவு எல்லாம் குடுக்க மாட்டாங்கப்பா”

“”இப்பதானம்மா நாம மொத மொத லீவு கேக்க போறோம். அப்பா நீங்களாவது சொல்லுங்க”

“”உனக்குப் புரியாது ஆதி. கல்யாணம் கும்பகோணத்துல. ரெண்டு நாள் சேந்தாப்புல எப்புடி லீவு எடுக்கறதுன்னு முழிச்சிட்டிருக்கேன். இதுல இவன் வேற” என கோர்த்து வாங்கினான் சேகர்.

“”டேய்… லீவு எடுத்தா, பேரண்ட்ஸ் போய் என்னா ஏதுன்னு காரணத்த விளக்கணும். அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்லடா. அப்புறம் உங்கம்மா வேற உன்னோட ரெண்டு நாள் பாடமெல்லாம் வேஸ்ட்டா போயிடும்னு ஃபீல் பண்றா. என்னா செய்றது… சரி, சரி, இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம தீபிகாவுக்கு கல்யாணம் வருமில்ல. அப்ப உன்ன கூட்டிட்டு போறேன். என்ன?”

“”அப்பா… சுமதி சித்தி பையன் திப்புல்லாம் வருவான்ப்பா. நானும் வரேனே…”

“”டேய், சுமதி சித்தி கூட திப்புவ கூட்டிட்டு வரலைன்னு சொல்லிட்டாங்க. உன்னை விட சின்னப்பையன் அவன் சொல்ற பேச்ச கேக்கல… நீ தான் எப்பப்பாத்தாலும் இங்க போலாம் அங்க போலாம்னு நச்சரிச்சிட்டே இருக்கே. ரெண்டு நாள் லீவு போட்டா… ஸ்கூல்ல முடிச்ச போர்ஷன்ஸ் உம் மண்டயில ஏத்தறதுக்குள்ள எனக்கு ஜன்னியே வந்துடும். உன்ன மாடி மேல இருக்குற நம்ம மாலு ஆன்ட்டி பாத்துக்குவாங்க. ஒழுங்கா ஸ்கூல் போயிட்டு வா… என்ன?” மூச்சு விடாமல் பேசி முடித்தாள் சபிதா.

ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குழந்தையாகவே இருந்திருக்கலாம் போல. அழுதாவது அடம் பிடித்திருக்கலாம். ஆனால் தற்போது வளர்ந்த பையன் என்ற அடைமொழியில் அவ்வாறெல்லாம் செய்ய இயலாமல் போவது குறித்து 1 டன் சரக்கை இதயத்தில் ஏற்றி வைத்தது போல் பாரம், அவனுள்.

அன்றிரவு அவன் தலையணை ஈரமாகியிருந்தது. விடிந்ததும் லேசாக காய்ச்சல் தலைதூக்கியது ஆதிக்கு. மாடி வீட்டு மாலுதான் அவனுக்கு பேராசிட்டாமல் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

கும்பகோணத்திலிருந்து திரும்பியிருந்த தன் அப்பா அம்மாவிடம் சரிவர பேசக்கூட இல்லாமல் தன் புத்தகங்களோடே மூழ்கிப் போனான்.

“இன்னும் ரெண்டு வருஷத்துல டென்த்’, “இன்னும் ரெண்டு வருஷத்துல டென்த்’ என்று சதா பயமுறுத்தும் வார்த்தைகளே எந்நேரமும் வீட்டுக்குள் ஒலிப்பதாய் தோன்றியது ஆதிக்கு. அந்த கடுப்பில் அவன் சரிவர பேசுவதையே குறைத்து விட்டிருந்தான். சிறுவனுக்கே உரிய இயல்பான துறுதுறுப்பு, குறுகுறுப்பு அவனிடமிருந்து காணாமல் போயின.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெயில் வேளையில் சபிதாவுக்கும் சேகருக்கும் முட்டிக் கொண்டு வார்த்தைகள் தடித்தன.

“”எனக்கென்ன பத்து கையா இருக்கு. ஆண்டவன் கொடுத்திருக்குற ரெண்டு கையில என்ன செய்ய முடியுமோ? அததான் செய்வேன்” என சபிதா நறுக்கென தெறித்தாள்.

ஆதிக்கும் இப்படிச் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.

எனக்கும் கடவுள் ஒரு மூளையைத் தான் கொடுத்திருக்கிறார். என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் படிக்க முடியும் என்று சபியின் முகத்துக்கு நேராக பேச வேண்டும் போல் இருந்தது. அம்மாவிடம் கோபப்படவோ பெரிய விவாதங்கள் வைத்துக் கொள்ளவோ துணிச்சல் வரவில்லை அவனுக்கு. பெற்றோர்களிடம் இதுவரை அப்படி பேசியிராதவன் ஆதி.

இந்த நிலையில்தான் சபிதா கர்ப்பமுற்றாள். ஒன்றோடு போதும் என இருந்துவிட்ட நிலையில் இத்தனை வருஷங்களுக்கு பிறகு சபிதாவிற்கு இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள்வது குறித்து சற்றே அசூசையாக இருந்தது.

“”உங்கூட விளையாட தம்பியோ தங்கச்சி பாப்பாவோ வர போதுடா” என்ற அப்பாவின் வார்த்தையில் கொஞ்சம் சந்தோஷித்துதான் போனான் ஆதி. இன்னொரு பாப்பா வரவின் பொருட்டு தன்னை “படி… படி’ என்று கொஞ்சமேனும் அம்மா நெருக்காமலிருப்பாள் இல்லையா.

நாட்கள் ஆக ஆக ஆதி புதியதாய் வர இருக்கும் பாப்பாவுக்காக மனதளவில் அண்ணனாய் தயாராகிக் கொண்டிருந்தான். தன்னுடன் பேச, விளையாட, சண்டையிட, முக்கியமாக உடன் உட்கார்ந்து படிக்கவெல்லாம் துணை வந்துவிடும் என்ற களிப்பில் நெருக்கிப் பிழிந்த பாடங்கள் கூட பெரிதாகப் படவில்லை.

இன்னும் மூன்று மாதங்கள் தான் பாக்கி என்று சொல்லியிருந்த நிலையில் சபிதாவை திடீரென மருத்துவமனையில் சேர்த்தனர்.

“”அப்பா, அம்மாவுக்கு என்னாச்சுப்பா?”

“”ஒன்னுமில்லடா… பாப்பா உள்ளாற அசையவே இல்லையாம். பாப்பம்” என்றான்.

ஆதியின் தலையை வருடியவனுக்கு திடீரென துக்கம் தொண்டையை அடைத்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அறையினுள் அம்மாவின் அழுகை சத்தம் கேட்டது ஆதிக்கு. தம்பி பாப்பாவை கடவுள் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார் என சொல்லிவிட்டு போய்விட்டார். கேட்டதும் அந்த மருத்துவமனை கண்ணாடி அறையினுள் சேகர் உள்ளே போனான்.

ஆதி தாங்க முடியாமல் பாட்டியிடம் இப்படி வினவினான். “”கடவுள் அவனை எங்க கூட்டிட்டு போயிருப்பாரு”.

“”ஆதி கண்ணு, புள்ளய சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போயிருப்பாருடா தங்கம்” வெடித்து அழுதாள் பாட்டி.

“”சொர்க்கத்துல கூட ஸ்கூல், ஹோம் ஒர்க்கெல்லாம் இருக்குமா பாட்டி?”

புரியாமல் ஆதியையே வெறித்த பாட்டி, “”அங்க போனா சாமியோடவே இருக்க வேண்டியதுதான். பள்ளிக்கூடமெல்லாம் போக தேவயில்ல செல்லம். ஏன்டா இதயெல்லாம் கேக்குற இந்நேரம். நீ உந்தாத்தா கூட வீட்டுக்கு போ. நாங்க பின்னாடி வாறோம்”

டிரிப்ஸ் ஏற்றப்பட்டு படுக்கையில் பரிதாபமாய் இருந்தாள் சபிதா.

“”அம்மா என்ன ஆச்சும்மா, வீட்டுக்கு எப்பம்மா வருவீங்க?”

“”2 நாள்ல வந்துடுவேன்டா. நீ ஒழுங்கா ஸ்கூலுக்கு போ. நல்ல வேலடா. நீ டென்த் படிக்கும்போது எனக்கு இப்படியெல்லாம் ஆகல. இன்னும் கொஞ்ச நாள்ல உடம்பு தேறிடும்”.

எல்லாவித திறமைகளையும் புத்தகப் படிப்பை கொண்டு மட்டுமே அளவிடும் பண்பை யார் இவர்களிடம் திணித்தது என்ற கேள்வியோடு சபியிடம் விடைபெற்றான் ஆதி. தனக்கு துணையாக வரவிருந்த தம்பி பாப்பாவிடம் மனதளவில் உரையாடினான் ஆதி.

“”தம்பி செல்லம், நீ இந்த வீட்டுல பொறக்காததே நல்லதுடா. எல்லா கஷ்டத்தையும் வழக்கம்போல நானே பழகிக்குறேன். நீயாவது நிம்மதியா சாமி கூட இரு” என்பதாய்.

மருத்துவமனை களேபரங்கள் ஓய்ந்தது. ஒருநாள் நம்பிக்கையோடும் மறுநாள் அவநம்பிக்கையோடும் எதிர்கொண்ட சபிதாவின் மனதை ஆதியின் பாட்டிதான் சமாதானப்படுத்தினார். சேகரின் ஆசைப்படி மற்றுமொரு குழந்தைக்கு அவளைத் தயார்படுத்தினாள். எதிர்ப்பட்ட மாதங்களில் மற்றொரு மழலைக்கு வாய்ப்பிருப்பதாக ஆதியின் காதுகளுக்குள் போடப்பட்டது. மூளைக்குள் வெளிச்சம் பரவிய நிலை வசப்பட்டது ஆதிக்கு. பாட்டி இம்முறை சபியின் கூடவே இருந்தது ஆதிக்கும் சற்று மன ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில் சித்ரா ஆன்ட்டியின் பிரவேசம் மற்றுமொரு முறை நிகழ்ந்தது.

“”என்ன சபி இது. நீ நல்லா ரெஸ்ட் எடு ஓகே. ஆனா அதுக்கு படிக்குற புள்ளய இப்படியா கண்டுக்காம இருப்ப. இன்னும் ஆறு மாசத்துல அவன் ஒன்பதாவது படிக்கப் போறான். பத்தாவது போர்ஷன்ஸ் ஒன்பதாவதிலேயே நடத்திடுவாங்க. வீட்டு சூழ்நிலை ஒத்துக்காட்டா என்ன… முதல்ல அவன ஒரு நல்ல ஹாஸ்டல்ல சேரு. ஒன்பதாவதுக்கு ஈஸியா அட்மிஷன் கிடச்சிடும்” என்று ஓதிவிட்டுப் போனாள்.

இம்முறையும் பாப்பாவின் வருகையை எதிர்நோக்கியிருந்த தருவாயில்தான் ஆதி நான்கு மணிநேர பயணத்தில் வரக்கூடிய உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

“”இப்ப இருக்குற சூழ்நிலைல உங்கம்மாவால ரெண்டு பசங்கள கவனிச்சுக்க முடியாது ஆதி. அதிலும் வரப்போற குழந்தையால உம் படிப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாதுடா” என்று அவனிடம் காரணங்கள் சொல்லப்பட்டன.

மூட்டை முடிச்சுகளுடன் தயாராக வேண்டிய நிலைமை. அந்த வீடு மெüனங்களால் நிரம்பி இருந்தது. சூழலை சகஜமாக்க சபியும் சேகரும் மாறி மாறி முயற்சித்தார்கள்.

சபிதாவின் வயிற்றை ஏக்கத்துடன் பார்த்தபடி விடைபெற்றான் ஆதி.

“இனி எப்பாவது ரெண்டு நாட்கள் வரும் விடுமுறை தினத்தில் வந்துதான் பாப்பாவ பாக்க வேண்டும் போல’ என்று அவன் உள்மனம் சொல்லியது.

துளிர்க்கும் கண்ணீரை துடைக்க மனமின்றி, யாரிடமும் “போயிட்டு வரேன்’ என்று வாய் திறந்து சொல்லாமலே விடைபெற்றான்.

எதிர்வந்த நாட்களில் காக்கைக்கு காத்திருக்கும் அமாவாசை மதியங்கள் போல் விடுமுறைக்கு காத்திருக்கிறான் ஆதி, தன் தங்கச்சி பாப்பாவுடன் விளையாட.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *