கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 10,952 
 

அதற்கு முன்னரும் பல தடவை நோக்கியா அழைத்தது. சில பல சலனங்களும் முனகலுமாகப் புரண்டு படுத்தபடி கிடந்தான் கதிர். ‘லொள்… லொள்…’ அலறல் கேட்டதும் செம கடுப்போடு எழுந்தான். ஆபீஸ் பி.ஆர்.ஓ-வுக்கு அவன் செட் பண்ணிவைத்த ரிங்டோன் அது. வாட்சைப் பார்த்தான். மணி 11.

ஜன்னலுக்குள் நுழைந்து சூரிய வெளிச்சம் குத்தாட்டம் போட்டுச் சிரித்தது.

பதறி எழுந்தவனாக, ”ஏ… மைதி, இவ்வளவு நேரம் என்ன பண்ணின? எழுப்பிவிட்ருக்கலாம்ல…” எனச் சத்தம் போட்டான். மைதிலி பதில் சொல்லவில்லை. பாத்திரங்களின் தலையில் ‘ணங்’ விழுந்தது. அத்தனையும் அவனுக்கு விழ வேண்டியவை. மப்படித்ததும் மட்டையாகிக் கவிழ்ந்ததும் அப்போதுதான் கதிருக்கு நினைவு வந்தது.

அப்படியே பெட்டில் அமர்ந்துவிட்டான். யாரோ நடு மண்டையில் நச்சென உளி இறக்குவதுபோல் இருந்தது. செல்போனைப் பார்த்தால் 23 மிஸ்டு கால்ஸ். நிச்சயம் அதில் பாதி ரீஜனல் மேனேஜர் அன்புச்செல்வனாகத்தான் இருக்கும். பெயரில்தான் அன்பு… அட்டெண்ட் பண்ணினால், 1,000 அனாசின் போட்டாலும் தீராது தலைவலி. ஆபீஸுக்காகவே நேர்ந்துவிட்ட ஆளைப்போல் கொலையாய்க் கொன்றுவிடுவான்.

‘இந்தக் கருமம் புடிச்ச குடிப் பொழப்பு தேவைதானா? பொண்டாட்டிகிட்ட திட்டு… ஆபீஸ் டார்ச்சர்… தலைவலினு எத்தனை ரோதனை?’ – நினைக்கவே கதிருக்கு வெட்கமாக இருந்தது.

ஒவ்வொரு முறை குடித்துவிட்டு வந்து மறுநாள் காலையில் எழும்போது இப்படித்தான் தோன்றுகிறது. அப்புறம் வழக்கம்போல் ஒன்று கூடி, உற்சாகம் ஏற்றி, வயிற்றைப் புரட்டி, வாந்தி எடுத்து, ‘இந்தச் சனியனை இன்னியோட விட்ரணும்’ சபதம் போட்டு… அடச்சே, திருந்துவது ஆகாத கதை!

”காலையில ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டான். புள்ளையைக் கிளப்பி அனுப்ப முடியலை. அழுதுகிட்டு நடந்தே போயிட்டான். பெத்தவன் இப்பிடிச் செத்தவன் மாதிரி கெடந்தா, புள்ளைக்கு இந்தக் கதிதானே ஆகும்” – மைதிலி சபித்துக்கொட்டினாள்.

”ஸாரிடா சஞ்சுக் குட்டி. சாயங்காலம் சீக்கிரம் வந்து பார்க் அழைச்சுட்டுப் போறேன். வரும்போது சரவணபவன் போயிட்டு வருவோம்” – தகப்பனின் தவிப்பு டெலிபதி கணக்காக சஞ்சுக் குட்டிக்குக் கேட்டால்தான் உண்டு.

தலைவலி கிர்ரென ஏறிக்கொண்டே இருந்தது. அன்புச்செல்வன் மீண்டும் அழைத்தான். மைதிலியிடம் ஒரு காபி கேட்கலாம். கொடுப்பாள். ஆனால், காபியோடு ஆயிரம் வசவுகளும் சூடு பறக்க வரும். அந்த ரேடியோவை ஆன் செய்யாமல் இருப்பதே நலம்.

என்னதான் கணவன்கள் மூச்சு முட்டக் குடித்துவிட்டு வந்தாலும், அடுத்த நாள் காலையில் முகம் மலரச் சிரித்தபடி மனைவிகள் காபி கொடுத்தால் எப்படி இருக்கும்?

நல்ல யோசனையை நினைக்கும்போதே அபசகுனமாக ‘லொள்… லொள்’ சத்தம். தலைவலி தறிகெட்டு எகிறியது. இதுநாள் வரை இந்த அளவுக்கு வலி நீண்டது இல்லை. நேற்றைக்கு அடித்த சரக்குப் பெயரைச் சொல்லி ”சனியன்… சனியன்” எனத் திட்டினான்.

காலிங் பெல் அடித்தது. ”நான் மாலை மாத்தின நேரம் இருக்கே…” துணிகளை வாஷிங் மெஷினுக்குள் திணித்தபடி மீண்டும் சாடலை ஆரம்பித்து இருந்தாள் மைதிலி. மீண்டும் காலிங் பெல். சலவைக்காரரோ, வேலைக்காரியோ வெளியே நின்றால், கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிடலாம் என்கிற அளவுக்குக் கோபம். எரிச்சலோடு கதவைத் திறந்தான். நல்லவேளை அவர்கள் இல்லை. ஆயுள் கெட்டிபோலும். உயரமான ஒருவர் நின்றார்.

”சார், இங்கே கதிர்ங்கிறது…” இழுத்தார்.

”நான்தான்… நீங்க?”

”சார், டி.என். 10. 7192 ஐ டென் கார் உங்களோடதுதானே?”

”யெஸ்… ஏன், என்னாச்சு?” – பதறினான் கதிர்.

நேற்று இரவு 12 மணி வரை தண்ணி பார்ட்டி நீண்டபோதும், ‘கால் டாக்ஸி பிடிச்சுப் போ’ என நண்பர்கள் அட்வைஸித்தபோதும், அவ்வளவு ஸ்டெடியாக, தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தது கதிருக்கு நினைவு வந்தது. வெளியே போர்ட்டிகோவை எட்டிப் பார்த்தான். ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளைபோல் ஐ டென் நின்றது.

”இதை எல்லாம் விசாரிக்க நீங்க யாரு சார்?”

”கிண்டி ஏ.சி. வெற்றிவேல்.”

”சார்…” – இழுத்தான் கதிர்.

”நேத்து நைட் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தீங்க?”

கதிர் சற்றும் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவனுக்கு அது நினைவும் இல்லை. சரியாக 7.30 மணிக்கு பார்ட்டி ஆரம்பமானது மட்டுமே நினைவு இருந்தது.

”ஏன் சார் அதெல்லாம் கேட்குறீங்க?”

”நேத்து நைட் ஒரு மணிக்கு நீங்க வேளச்சேரி வழியாத் தாறுமாறான வேகத்தில் வந்து இருக்கீங்க. வர்ற வழியில் போஸ்டர் ஒட்டுற ஒரு பையனை அடிச்சுப் போட்டுட்டு திரும்பிக்கூடப் பார்க்காம வந்து இருக்கீங்க. அலறல் சத்தம் கேட்டு, நடுநிசியில் நின்ன ஒண்ணு ரெண்டு ஆளுங்கதான், பையனை அடிச்சுட்டுப்போன உங்க கார் நம்பரை நோட் பண்ணி எங்களுக்கு போன் பண்ணினாங்க. இப்போ ரொம்ப சீரியஸான நிலையில் அந்தப் பையன் ஆஸ்பிட்டலில் கிடக்குறான். ஆக்ஸிடென்ட் நடக்கிறது தவிர்க்க முடியா ததுதான். ஆனா, அடிபட்ட பையனைத் திரும்பிக்கூடப் பார்க்காம வந்து இருக்கீங்களே… நீங்க எல்லாம் ஒரு படிச்ச ஆளா?”

”சார், இல்ல… இல்லவே இல்ல. நான் யாரையும் மோதல…” – பதறினான் கதிர். அவனுக்கு உலகமே சுழல்வதுபோல் இருந்தது. எவ்வளவு குடித்தோம்… எத்தனை மணிக்கு முடித்தோம்… எந்த வழியாக வந்தோம் என எதுவுமே அவனுக்கு நினைவு இல்லை. ஆனால், யாரையும் மோதவில்லை என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தான்.

”சார், யாரையும் மோதி இருந்தால் என் கார் டேமேஜ் ஆகி இருக்கும்ல… பாருங்க, காருக்கு எந்த டேமேஜும் இல்ல…” ஐ டென்னை சுற்றிச் சுற்றி வந்தவனாகச் சொன்னான் கதிர்.

”நைட் ஒரு மணிக்கு நீங்க வேளச்சேரி வழியா காரில் வந்தீங்கனு கடவுளா எங்களுக்கு காயின் பாக்ஸில் காசு போட்டுத் தகவல் சொன்னாரு? நீங்க முழிக்கிற முழியைப் பார்த்தாலே, நிலைகொள்ளாத தண்ணியில் வந்து இருக்கீங்கனு தெரியுது. ஆர்.டி.ஓ. ஆபீஸில் அட்ரஸ் வாங்கித்தான் உங்க வீட்டையே கண்டுபிடிச்சோம். வீணா அடம்பிடிக்காம ஸ்டேஷனுக்கு வாங்க மிஸ்டர் கதிர்!” – ஏ.சி. பேசப் பேச… கதிருக்குத் தலை சுற்றியது.

”குடி குடினு அலைஞ்சு, இப்போ கொலை கேஸ் வரைக்கும் வந்துடுச்சே… எல்லாம் என்னோட விதி. போலீஸ் கேஸ்னு சந்தி சிரிக்கப்போகுது. நாளைக்குப் பின்ன நான் யார் முகத்தில் முழிக்க முடியும்?” – கதறத் தொடங்கிவிட்டாள் மைதிலி.

”லேட் பண்ணாதீங்க கதிர்… முதல்ல கிளம்புங்க…” – அவசரம் காட்டினார் ஏ.சி.

பல்கூட விளக்காத நிலையில் பேன்ட்டை மாட்டிக்கொண்டு வந்தான் கதிர்.

”மைதி… எனக்கு ஒண்ணுமே புரியலை. ஸ்டேஷனுக்குப் போய் போலீஸ் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு வந்துடுறேன். நீ வேற யார்கிட்டயும் இதுக்காகப் பேசாத…” – சொல்லும்போதே கதிருக்குக் கண் கலங்கிவிட்டது.

”சார், எந்த ஸ்டேஷனுக்கு வரணும்னு சொல்லுங்க. நானே என் வீட்டுக்காரரை காரில் அழைச்சுக்கிட்டு வர்றேன். போலீஸ் வண்டியில் போனா, பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க சார். ப்ளீஸ் சார்… ஏரியாவில் ரொம்ப கௌரவமா இருக்கோம் சார்” – கையெடுத்துக் கும்பிட்டபடி கெஞ்சினாள் மைதிலி.

”கம்ப்ளெய்ன்ட் ஆகி இருக்கிற அந்த காரை நீங்க வெளியே எடுக்கிறதே தப்பு. இவரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டு, அங்கே இருந்து ஒரு பி.சி-யை அனுப்புறோம். அவர்கிட்ட உங்க காரைக் கொடுத்து அனுப்புங்க. கௌரவமா இருக்கிறது எல்லாம் குடிச்சுட்டு கார் ஓட்டினப்பல்ல தெரிஞ்சிருக்கணும்!”- கதிரை நெட்டித் தள்ளி காரில் ஏற்றினார் வெற்றிவேல்.

காருக்குள் இன்னும் இரண்டு போலீஸ்காரர்கள் யூனிஃபார்மில் அமர்ந்து இருந் தார்கள். நல்லவேளை அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. வந்திருந்தால், கைது, விசாரணை என ஏரியாவே டமாரம் ஆகியிருக்கும்.

கதிருக்குத் தலைவலி நூறு மடங்காகப் பெருகி இருந்தது. காரில் இருந்தபடியே வினித், சண்முகம், பாலாஜி என உயிருக்கு உயிரான நண்பர்களுக்கு போன்

போட்டான். வினித் போனைத் தொடவே இல்லை. ”அவர் குளிச்சிட்டு இருக்கார்…” என்றாள் பாலாஜியின் மனைவி. ”பிஸியா இருக்கேன் மச்சான்” காலை கட் செய்து எஸ்.எம்.எஸ்ஸில் ரிப்ளை பண்ணினான் சண்முகம்.

குடிப்பதற்குக் கூப்பிட்டால் மட்டும் முதல் ரிங்கிலேயே போனை எடுத்துவிடுவார்கள் இந்தப் பொல்லாத நண்பர்கள். செல்போனை உடைத்து எறிய வேண்டும்போல் இருந்தது கதிருக்கு. கால நேரமே புரியாமல், ஆபீஸ் பி.ஆர்.ஓ. போன் செய்தாள். ‘லொள்… லொள்…’ சத்தம் ஒலிக்க, ”என்ன எழவு ரிங் டோன் இது… முதல்ல போனை ஆஃப் பண்ணுங்க” என்றார் பக்கத்தில் இருந்த போலீஸ்காரர்.

ஸ்டேஷன் வாசலில் கார் நின்றதுதான் தாமதம். மொத்தமாகக் குழுமி இருந்த ஆட்கள் காரைச் சுற்றத் தொடங்கிவிட்டார்கள்.

”இந்த நாய்தான் காரை ஓட்டுச்சா… அவனை எங்ககிட்ட ஒப்படைங்க சார்… பச்சப்புள்ளையை அடிச்சிட்டுப் பார்க்காமப் போன நாயை இந்த இடத்திலேயே பொலி போட்டுர்றோம்…”

”ஏய் பரதேசி… கண்ணை என்ன பொடனியிலயா வெச்சுக்கிட்டு வண்டி ஓட்டுன? வெளிய வாடா… வண்டி ஓட்டுன கையை வகுந்துர்றோம்…”

கதிரை வேகமாக ஸ்டேஷனுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள் போலீஸ் காரர்கள்.

”ஏய் பாவி… நீ நல்லா இருப்பியா? ஒன்னோட வீட்டுக் குஞ்சு உருப்படுமா?” – தலைவிரி கோலமாக ஒரு பெண் புலம்பிக்கொண்டு இருந்தாள். அடிபட்ட பையனின் தாய்போலும். கதிருக்குச் சட்டென சஞ்சுக் குட்டியின் நினைவு வந்தது.

‘மன்னிச்சிடுடா சஞ்சு… அப்பா பண்ணின தப்புக்கு உன்னையத் திட்டுறாங்க. அப்பாவை மன்னிச்சுடுடா… அப்பா இனி குடிக்கவே மாட்டேன்டா!’ – சஞ்சுக் குட்டியைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும்போல் இருந்தது.

ஸ்டேஷனில் ஓர் ஓரமாக இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். கதிருக்குக் கை, கால்கள் நடுங்கத் தொடங்கின.

தனியார் சேல்ஸ் கம்பெனியில் ஏழு மாவட்டங்களுக்கு இன்சார்ஜ் ஆக இருப்பவன் கதிர். நல்ல பதவி… நல்ல சம்பளம்… ஜாலியான நண்பர்கள் எனத் திரிந்தவன். இப்படி போலீஸ் ஸ்டேஷனில் உட்காருவோம் எனக் கனவிலும் நினைத்தது இல்லை.

கதிரின் ஆக்டிவ்வான செயல்பாட்டைப் பாராட்டி முதல் நாள் எம்.டி. இன்க்ரிமென்ட் லெட்டர் கொடுத்து இருந்தார். அதற்காகத்தான் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தான் கதிர். சண்முகத்தின் மனைவி சொந்த ஊருக்குப் போய் இருந்ததால், வேளச்சேரியில் உள்ள அவனுடைய வீட்டிலேயே கொண்டாட்டத்தை நடத்தினார்கள்.

”மச்சான், ரொம்ப லேட்டாகிடுச்சு… இங்கேயே படுத்துத் தூங்கிட்டு காலையில போ”- சண்முகம் வற்புறுத்திச் சொன்னது இப்போதுதான் கதிருக்கு நினைவு வந்தது. ”இங்கே படுத்துட்டா காலையில ஆபீஸ் போக லேட்டாகிடும்” எனச் சொல்லி, மிட் நைட்டிலும் ஆபீஸ் அக்கறையில் திரும்பியவன்தான், இப்போது ஸ்டேஷனில் உட்கார்ந்து இருக்கிறான்.

நேரம் ஆக ஆக… ஸ்டேஷனுக்கு வெளியே நின்றவர்களின் கூச்சல் அதிகமானது. ”தெய்வமே! அடிபட்ட அந்தப் பையன் எப்படியாச்சும் பிழைச்சுக்கணும்…” கைகளைக் கட்டி கண்ணீரோடு வேண்டத் தொடங்கிவிட்டான் கதிர். விஷயம் ஆபீஸுக்குத் தெரிந்தால், நிச்சயம் டிஸ்மிஸ் வரை போகும். செல்போனை ஆன் செய்து, ‘ஐ யம் இன் எ க்ரிட்டிகல் சிச்சுவேஷன். ப்ளீஸ் கம் டு கிண்டி போலீஸ் ஸ்டேஷன்’ என வினித், சண்முகம், பாலாஜி மூவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். கூச்சல் போடுபவர்களின் சைகை மிரட்டலையும் தாண்டி, நண்பர்கள் வருகிறார்களா என ஸ்டேஷன் வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆட்டோ ஒன்று வந்து நிற்க, மைதிலி வந்தாள். பின்னாலேயே வக்கீல் ஒருவர்.

”மைதி, நீ ஏன் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம்?” – பதறிப்போய்க் கேட்டான் கதிர்.

”ஏம்ப்பா, இது என்ன சுடுகாடா… இந்த மாதிரி இடம்னு ரொம்ப ஏளனமாப் பேசுறியே… நாங்க எல்லாம் வருஷக்கணக்குல இங்கதான இருக்கோம்” – லேடி எஸ்.ஐ. தேளாகக் கொட்ட… துடித்துப்போனான் கதிர். மனைவி முன்னால் எவ்வளவு பெரிய அவமானம்?

”ஸாரி மைதி…” தேம்பத் தொடங்கினான் கதிர்.

”ஆக வேண்டியதை வக்கீல் பார்த்துக்குவார். சின்னப் புள்ள மாதிரி அழாதீங்க” – தைரியப்படுத்தினாள் மைதிலி. கர்ச்ஃசீப் கொடுத்தாள்.

செல்போனில் தீவிரமாக இருந்த ஏ.சி., ”சார், ஒரு நிமிஷம்…” எனக் கை காட்டி அழைத்தார் கதிரை. ஆக்ஸிடென்ட் கேஸுக்கு அடி உதைகூட விழுமோ? தயங்கியபடியே போனான் கதிர்.

”ஸாரி மிஸ்டர் கதிர். ஒரு தப்பு நடந்துபோச்சு. அடிபட்ட பையன் கண் விழிச்சுட்டான். ‘என்னைய மோதினது கார் இல்ல… ஒரு மினி வேன்தான் மோதிச்சு’னு தெளிவாச் சொல்றானாம். ஆக்ஸிடென்ட் சத்தம் கேட்டு ரோட்டுக்கு பலரும் ஓடி வந்தப்ப, உங்க கார் அந்த ஸ்பாட்டை கிராஸ் பண்ணியிருக்கு. அதனால, உங்க கார் எண்ணைக் குறிச்சு எங்களுக்குப் புகார் கொடுத்துட்டாங்க. ஸாரி கதிர்… உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டோம்!”

நடப்பது கனவா… நனவா என்பதே கதிருக்குப் புரியவில்லை.

”அப்போ, நான் கிளம்பலாமா சார்?” – ஸ்டேஷனைவிட்டு வெளியே போக, கதிரின் கால்கள் பரபரத்தன.

வாசல் வரை வந்து ஸாரி கேட்டார் ஏ.சி. ”அப்போ, அந்தப் பையன் கண் விழிக்கலைன்னா, நான்தானே சார் குற்றவாளியா கோர்ட், கேஸு, அவமானம்னு அலைஞ்சு இருப்பேன். இந்த மாதிரி எத்தனை அப்பாவிகள் குற்றவாளிகளா அலையிறாங்களோ” – வருத்தமாகக் கை குலுக்கிவிட்டு மைதிலியோடு ஆட்டோவில் ஏறினான் கதிர்.

”தேங்க்ஸ் மைதி” – அவள் மடியில் படுத்துக் கதற வேண்டும்போல் இருந்தது கதிருக்கு.

சன்டே நைட்…

”இவ்வளவு பெரிய பிரச்னையில் இருந்து தப்பிச்சிருக்கே… வெறும் ட்ரீட் மட்டும்தானா… ரெண்டு நாளு ஏதாச்சும் டூர் போடக் கூடாதா?” – போனையே எடுக்காத வினித்.

”அந்தப் பையன் பொழைச்சதுக்காகவே இந்த வாரம் முழுக்க நீ ட்ரீட் கொடுக்கணும் மச்சி!” – பொண்டாட்டி கையில் போனைக் கொடுத்துப் பேசச் சொன்ன பாலாஜி.

”உனக்கு அதிர்ஷ்டம்டா மச்சான். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஏ.சி-க்கே க்ளாஸ் எடுத்துட்டு வந்திருக்கியே… இதுக்கே இந்த மாசம் முழுக்க நீ எங்களைக் குளிப்பாட்டணும்டா!” – பிஸி காட்டி போனைக் கட் பண்ணிய சண்முகம்.

”சியர்ஸ்டா…” – இது கதிர்!

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *