கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 13,232 
 

உள்ளே கூடம் அமளிப்பட்டது. வனஜாவின் குரல் வழக்கம் போல் உயர்ந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில், டோலுவுக்கு லூட்டியடிக்கும் குழந்தைகள், இந்த வீடு, வனஜாவின் வெட வெட உடலுக்குச் சற்றும் பொருந்தாத சன்னமில்லாத குரல் எல்லாம் பழகியிருக்கும். வருஷங்கள் கழித்து டோலுவைச் சந்திப்பேன் என்று ஒருநாளும் நான் கனவு கண்டதில்லை. போன வெள்ளிக்கிழமை ஆபிசிலிருந்து திரும்பி, வனஜா கொடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த போது வனஜா, “”இன்னிக்கி கல்கத்தாலேர்ந்து போன் வந்தது” என்று சிரித்தாள்.

சிநேகிதம்“”ரொம்ப ஜாலியா இருக்கியே, உங்க அத்தை இங்கே வரேன்னு போன் பண்ணினாளா?”

“”போன் பண்ணது எங்க அத்தை இல்லே. டோலு” என்றாள்.

“”என்னது டோலுவா? டோலு போன் பண்ணினாளா?”

“”ஆமா. நாளைக்கி இங்கே வராளாம். நம்மோடதான் டேராவாம்.”

“”அவளுக்கு எப்படி நம்ப ஆத்து நம்பர் தெரிஞ்சது? நம்ப அட்ரஸ் யார் கொடுத்தா?”

“”இதல்லாம் நீங்க அவ இங்கே வந்தப்புறம் விஜாரணை நடத்தித் தெரிஞ்சிக்க வேண்டியதுதான். ஆத்துக்கு வரேன்னு போன் பண்றவ கிட்டே அவசியம் வாங்கோன்னு சொல்றதை விட்டுட்டு இந்த கேள்வியெல்லாம் கேட்டுண்டு இருக்க முடியுமா? அதுவும் வரப் போறது உங்க பால்ய சிநேகிதி” என்று உள்ளே சென்றாள் வனஜா.

டோலுவைப் பார்த்து பதினைந்து வருஷங்கள் இருக்குமா? அவளுடைய கல்யாணத்தன்றுதான் கடைசியாகப் பார்த்தது. எவ்வளவு அழகாக இருந்தாள்? எப்போதும் அலை பாயும் கூந்தல், கொண்டையாக மாறியிருந்தது. கொண்டையைச் சுற்றி மல்லிகைப் பூ ஆரமாய்ச் சிரித்தது. சிறிய நெற்றியில் இழுத்து விடப்பட்ட கோடு போலப் பொட்டு. பிங்க்கும் மெஜந்தாவும் சேர்ந்த கவர்ச்சியான கலவையில், கண்ணைக் கவரும் புடவை அணிந்திருந்த தோற்றம் இப்போதும் கண்ணில் நின்றது. கல்யாணமாகிப் புருஷனுடன் கல்கத்தா போய் விட்டாள். என் கல்யாணத்துக்குக் கூட அவளால் வரமுடியாமல் போய் விட்டது என்று அவள் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். அவர்களை நமஸ்கரிக்கும் போது, வனஜாவிடம், டோலுவின் அம்மா, “”ஜெயந்திங்கிற அழகான பெயரை டோலுன்னு மாத்தினது இவன்தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவர்கள் நகர்ந்த பின், “”அதென்ன பேர் டோலு?” என்று சிரித்தாள் வனஜா.

அந்தக் கதையைச் சொன்னேன்……..

ஜெயந்தியின் அப்பா, மதுரையில் ஒரு புகழ் பெற்ற மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பனியின் தலைமை அலுவலகம் லண்டனில் இருந்தது. அதனால் தலைமை அலுவலகத்திலிருந்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளைப் பார்க்க அதிகாரிகள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்குவதற்கு உள்ளூரிலேயே கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் வசதியுடன் அமைந்திருந்தன. அப்படி ஒரு தடவை, ஓர் ஆங்கிலேயர் வந்து தங்கி இருந்த போது, ஜெயந்தியின் அப்பாவை அவர் அலுவலக வேலையாகக் கூப்பிட்டிருந்தார்.

அது ஒரு விடுமுறை நாள் என்பதால் ஜெயந்தியையும், என்னையும் அழைத்துக் கொண்டு போனார். நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டில் வசித்துக் கொண்டு ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இணை பிரியாத சிநேகிதமாக இருந்தோம்.

நாங்கள் கெஸ்ட் ஹவுûஸ அடைந்த போது, அங்கிருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில், அந்த ஆங்கிலேயர் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி தோன்ற, என்னையும், ஜெயந்தியையும் இரு கைகளால் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

நான் கையால் கன்னத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டேன்.

அவர் சிரித்தபடி, “” யூ டோன்ட் லைக்கிட்?” என்று கேட்டார்.

அவர் ஜெயந்தியைப் பார்த்து, “”யூ ஆர் எ டால். டோன்ட் யு மை டியர்” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.

மேஜை மீதிருந்த கேக்குகளை எங்களிடம் கொடுத்தார். ஜெயந்தியின் அப்பா எங்களை அங்கிருந்த ஊஞ்சலில் விளையாடுமாறு சொல்லி விட்டு ஆங்கிலேயரிடம் தான் கொண்டு வந்திருந்த ஃ பைல்களைக் கொடுத்தார்.

நாங்கள் வீட்டுக்கு திரும்பி வரும் போது ஜெயந்தியின் அப்பாவிடம், “”அங்கிள், ஜெயந்தியை அவர் என்னன்னு கூப்பிட்டார்?” என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடியே, “” அதுவா அவ பொம்மை மாதிரி இருக்காளாம்.. அதுக்காக டால்னு கூப்பிட்டார்” என்றார்.

வீட்டுக்கு வந்ததும், நான் ஜெயந்தியின் அம்மாவிடம், “” இப்ப இவ ஜெயந்தி இல்லே. டாலு, இல்லே இல்லே டோலு” என்றேன். ஆங்கில உச்சரிப்பை சரியாக ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல்.

அவள் சிரித்தாள். “”டோலு, டோலு, டோலு” என்று சொல்லிப் பார்த்தாள். “” ம், நன்னாத்தான் இருக்கு இந்த பேரும் என் செல்ல குட்டிக்கு” என்று டோலுவை அரவணைத்துக் கொண்டாள்…..

கூடத்தில் இருந்து இப்போது சத்தம் பெரிதாக வந்தது. என் பெண் அப்பா, இங்கே வாயேன். என்று சிரித்துக் கொண்டே கத்தினாள்.

நான் உள்ளே சென்றேன். டோலு வைச் சுற்றி மூவரும் அமர்ந்திருந்தனர். நான்கு பேர் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு.

“” என்ன ஒரே கலாட்டா?”

வனஜா சிரிப்பு மாறாமல், தன் கையிலிருந்த ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை என்னிடம் தந்தாள்.

“”என்னது இது?” என்று பிரித்துப் பார்த்தேன். முதல் பக்கத்தில் என் பெயர். ஐந்து “சி’ என்று வகுப்பு விலாசம்.

“”எங்கேர்ந்து கெடைச்சுது இது?” என்று வனஜாவைக் கேட்டேன்.

“”டோலு ஆண்ட்டி கொண்டு வந்திருக்கா” என்றான் பிள்ளை.

“”உள்ள பிரிச்சுப் பாருப்பா” என்று என் பெண் நோட்டைத் திறந்து ஒரு பக்கத்தைக் காண்பித்தது.

அந்தப் பக்கத்தில் குச்சிக் காலும், குச்சிக் கையுமாய்க் கோட்டோவியம் மீசையை வைத்து பையன் என்றும், பின்னலை வைத்துப் பெண் என்றும் அடையாளம் காண முடிந்த என் படைப்பு.

பையனின் படத்துக்குக் கீழ் என் பெயர் கிறுக்கலான கையெழுத்தில் இருந்தது. பெண் படத்தின் கீழ், டோலு என்று ஆங்கிலத்தில் பெயரும், கடன்கரி, முட்டள் என்று தமிழிலும் அதே கையெழுத்து.

“”ஏம்பா, எல்லாத்திலயும் கால் இல்லாம எழுதினேள்?” என்று வனஜா கேட்டாள் கேலியாக.

“”அப்போலேர்ந்தே அவனுக்கு காலை வாரி விட்டுதான் பழக்கம்னு தெரியலை உனக்கு?” என்று டோலு சிரித்தாள்.

“”அப்பா, படத்தில ஆண்ட்டி குண்டா இருக்கா, நீ ஒல்லியா இருக்கே. ஆனா இப்ப நீ ரொம்ப குண்டா ஆயிட்டியே?” என்றாள் பெண்ணரசி.

“” ஏய் ஜானா, அந்த படத்துல வேணும்னே என்னை குண்டாவும், அவனை ஒல்லியாவும் போட்டிருக்கான். ஆக்சுவலா, நான் அப்பவும் ஒல்லிதான், அவன் அப்பவும் குண்டுதான். இட்லிக் குண்டன்” என்று சிரித்தாள்.

குழந்தைகள் கை கொட்டிச் சிரித்தபடி, “”இந்த பேர் நன்னா இருக்கே. இட்லி குண்டன்” என்று சத்தமிட்டன……

டோலு சொன்னது உண்மைதான். அவள் பாவாடை சட்டை போட்டிருந்த தினத்திலிருந்து, தாவணிக்கு மாறி, பின் புடவை அணியத் தொடங்கியபோதும், ஏன், இப்போதும் கூட உடம்பைக் கச்சிதமாகத்தான் வைத்திருப்பவள்….

நாங்கள் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் அவள் ஸ்கூலுக்கு வரவில்லை. அன்று காலையில் கூட அவளை வீட்டு வாசலில் பார்த்து கணக்குப் புத்தகம் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். என்ன ஆயிற்று அவளுக்கு? திடீரென்று ஏதாவது உடம்புக்கு…

மாலையில் வீட்டுக்கு வந்து அம்மா கொடுத்த பட்சணத்தைத் தின்று விட்டு, காபி குடித்தபின் டோலுவைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றேன்.

டோலுவின் அம்மா என்னை வரவேற்று உட்காரச் சொன்னாள்.

“”ஆண்ட்டி, டோலு ஏன் இன்னிக்கி ஸ்கூலுக்கு வரலே? உடம்பு சரியில்லையா? படுத்திண்டு இருக்காளா? நான் பாக்கறேன்” என்று எழுந்தேன்.

“” இல்லே, நீ உக்காரு. அவளுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லே” என்றவள் சிரித்தபடியே, “”அவ பெரியவளாயிட்டா” என்றாள்.

“”பத்தாம் கிளாஸ் படிக்கிறா, அவ என்ன சின்ன குழந்தையாவா இருப்பா இதுவரைக்கும்?” என்று நானும் சிரித்தேன்.

அதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த டோலுவின் அக்கா, “”அம்மா, நீ சித்தே உள்ளே போ. நான் பேசிக்கிறேன் இவன்கிட்டே” என்று எனக்கு எதிரே உட்கார்ந்தாள். அவள் மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது வருஷம் படித்துக் கொண்டிருந்தாள். பதமாக எனக்கு விஷயத்தை எடுத்துச் சொன்னாள்.

இரண்டு நாள்கள் டோலுவின் முகம் பார்க்கக் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள், அவளை ஸ்கூலில் பார்த்தேன். மாலையில் வீடு திரும்பும் போது என் கூட சேர்ந்து வந்தாள் .

“”டோலு, நீ இன்னிக்கு ரொம்ப அழகாய் இருக்கே” என்றேன்.

“”அதாவது இவ்வளவு நாளா அப்படி இல்லேங்கிறே”

“”இவ்வளவு நாளா அழகாயிருந்தே, இன்னிக்கி ரொம்ப அழகா இருக்கே” என்றேன் மறுபடியும்.

“”அப்பா, ரொம்ப குளிர்றதே” என்று சிரித்தாள்.

“” அப்ப குளிருக்கு அடக்கமா….”

“”அடக்கமா?”

நான் எனது வலது கையினால், அவளது இடது கையை இறுகப் பற்றிக் கொண்டேன். அவள் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்காமல் என் கூடச் சேர்ந்து நடந்தாள்.

டோலூவின் உடம்பிலிருந்து மெல்லிய நறுமணம் எழுந்து வந்தது. புதிதாக அவள் அணிந்திருந்த தாவணி, பாவாடை, ரவிக்கை உடை உடம்பில் “சிக்’ கென்று பதிந்து அவளது எடுப்பான உடல் அழகை எடுத்துக் காட்டியது. இருவரின் நெருக்கம் என் உடலில் உஷ்ணத்தைப் பரப்பிற்று.

வீட்டை நெருங்கும் முன்பு, டோலு என் வலது கரத்தைத் தன் வாயருகே கொண்டு சென்று மென்மையாக முத்தமிட்டாள்.

“” ரொம்ப குளிர் விட்டுப் போச்சு” என்றேன் நான்.

அவள் சிரித்து விட்டு, தன் வீட்டிற்குள் சென்றாள்….

வனஜா டைனிங் டேபிள் மீது சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை வைத்திருந்தாள். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.

“”இன்னும் ஒரு வாரம் இங்கே உட்கர்ந்திண்டு வனஜா சமையலை ஒரு கை பாத்திண்டிருந்தேன்னா,குண்டா ஆயிட வேண்டியதுதான்” என்று சிரித்தாள் டோலு.

“” ஆமா இதெல்லாம் ஒரு பெரிய சமையல்” என்று வனஜா மறுத்தாள்.

“” நீ மேலே என்ன படிக்கப் போறே?” என்று ராஜுவைப் பார்த்து டோலு கேட்டாள்.

“” நீங்க படிச்சதைத் தான் ” என்றான் ராஜு.

“”லிட்ரேச்சரா?”

அவன் தலையை ஆட்டினான்.

“” ஏன், உங்க அப்பா, ரொம்ப சொத்து சேர்த்து வச்சிருக்கானா உனக்கு?” என்றாள் டோலு.

“”நான் படிச்சிட்டு பாங்க்ல போய் கிளார்க்கா உக்கார்ந்தேன்”

“”ஆண்ட்டி இப்பல்லாம் காலம் மாறிப் போச்சு” என்றான் பெரிய மனுஷ தோரணையாக.

” அடி சக்கை… அப்படியா?”

“”நான் “யேல்’ல போய் மேலே படிச்சு அங்கேயே வேலையும் பார்ப்பேன்” என்றான் ராஜு.

“” ஹாட்ஸ் ஆஃ டு யூ” என்று சிரித்தாள் டோலு.

“”டோலு, ஆனா நீ வேலைக்கு சேர்ந்த ஒருவாரத்திலேயே வேலையை விடும்படி ஆயிடுத்துன்னு இவர் சொன்னாரே” என்றாள் வனஜா.

“”என்ன பண்ணறது, எனக்கு அப்படி விதிச்சது” என்றாள் டோலு என்னைப் பார்த்தபடி……

ஆமாம். டோலு வேலைக்குச் சேர்ந்த மறுவாரம் வேலையை விட்டு விட்டாள் . திடீரென்று அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டது. அதைக் கேட்டதும் நான் ஆடிப் போய் விட்டேன்.அன்று மாலை நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் பார்க்கிற்குச் சென்றேன். டோலு வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருந்தாள்.

“” டோலு, வாட்ஸ் திஸ் நான்சென்ஸ்” என்று கோபத்துடன் கேட்டேன்.

“” ஓ, உனக்கு என் கல்யாண விஷயம் நான்சென்ஸô”

“” விளையாடாதே டோலு”

“”நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறே?”

“” நாம் இவ்வளவு நாளா நெருங்கிப் பழகினத்துக்கு எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லேன்னு சொல்றையா?”

“” நான் சொல்லாததை எல்லாம் நீயா நினைச்சிண்டு ஏன் அவஸ்தைப் படறே?”

அவள் குரலில் தென்பட்ட அமைதி என்னைத் தாக்கியது.

“” நீ ஒண்ணும் பதற வேண்டாம். நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சது உண்மைதான். நாம நினைச்சபடி எல்லாம் நடக்கறதா இருந்திருந்தா, என் கல்யாணம் உன்கூடதான் இருந்திருக்கும்”

“”இப்ப அப்படி என்ன திடீர்னு நடந்து விட்டது. நீ வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகலை”

“” இன்னிக்கி மத்தியானம் நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்”

“” என்னது?”

“”ஆமாம். நான் என் அப்பா, அம்மா சொன்ன பேச்சுக்கு மறுப்பு எதுவும் சொல்லாம ஒப்புக் கொண்டதே, ஒரு நன்றியை காமிக்கிற காரியமாத்தான் நினைக்கிறேன். என் இஷ்டத்துக்கு நான் நடக்க ஆசைப் பட்டிருந்தா, அது என் மேல உசிரை வச்சிருக்கிற ரெண்டு உசிர் சின்னாபின்னமா ஆக்கியிருக்கும்னு நான் பயப்படறேன். இது எல்லாம் உனக்கும் உன் குடும்பத்துக்கும் பொருந்தும். நாம ரெண்டு பேரும் இனிமே என் கல்யாணத்தினால விரோதியாகவா ஆகப் போறோம்? நாம உண்மையான அன்பை நமக்குள்ள காமிச்சிண்டு வாழ முடியாதா? என்ன?”

என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் விவேகம் வாழ்க்கையில் எனக்கும் வரவேண்டும் என்று நெஞ்சில் ஒரு எண்ணம் ஓடிற்று…..

டோலு ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டாள். அதிகாலை விமானத்தில் எல்லோரும் போய் ஏற்றி விட்டு வந்தோம் வீடு வெறிச் சென்று இருந்தது.

“”ஆண்ட்டி இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போயிருக்கலாம்பா” என்று குழந்தைகள் இரண்டும் பொருமித் தள்ளின.

ஹாலில் வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தேன்.

“”ஒரு வாரமா அப்படி ஒரு சத்தம், சிரிப்பு, சண்டை, கலாட்டான்னு கல கலன்னு இருந்தது. குழந்தைகள் ரெண்டும் அவளோடு ஒட்டிண்டு என்னை திரும்பிக் கூட பார்க்கலை” என்றாள் வனஜா.

“” அப்படியா?”

“” ஆமாம். நீங்களும்தான்”

நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன். மும்முரமாகக் காய்கறிப் பைகளை ஃ ப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“”நானுமா?”

“”பின்னே ஏன், இன்னிக்கி காலம்பறத்லேர்ந்து, குட்டி போட்ட பூனையா சுத்தி சுத்தி வரேள். ஏதானும் கேட்டா, என்னமோ சம்பந்தமில்லாம பதில் வரது. விட்டா, குழந்தைகள் மாதிரி, நீங்களும் டோலு ஊருக்கு போயிட்டாப்லேன்னு அழுதுடுவேள் போல இருக்கு” என்றாள் வனஜா என்னை நேரடியாகப் பார்த்து.

நான் அவள் கண்களைப் பார்த்தேன். அவள் அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டாள்.

“”அப்படி தெரியற மாதிரியா இருந்தேன்”

“” உங்க பால்ய சிநேகிதி மேல உங்களுக்கு ரொம்ப லவ்தானே?” என்று என் தலையைக் கோதினாள்.

“” உனக்கு எப்படித் தெரியும்?”

“”பால்ய சிநேகிதம் என்றால் ஆண்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டபடி எழுந்து உள்ளே போனாள்.

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *