கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 8,245 
 

தொலை பேசி தூக்கத்தைக் கலைக்க துடித்துப் ,பதைத்து ,எழுந்த சுபா , ,அருகிலிருந்த தொலைபேசியை ,பாய்ந்து எடுத்தாள் .நேரம் ஆறு மணி. ,இந்த நேரத்தில் வரும் அழைப்பு ,நிச்சயமாய் ஊரிலிருந்து தான் .என்னவோ ,ஏதோ ,என மனம் பதறியது .இப்படி அதிகாலை தொலைபேசி மணி ஒலித்து ,எழுந்தால் ,உடலும் ,மனமும் ,சாதாரண நிலைக்கு வரவே பலமணி நேரமாகும் .முன்னர் எல்லாம் அதிகாலை ,மூன்று ,நான்கு மணிக்கு அடித்த மணி ,இப்போது அவர்களும் ஐரோப்பிய நேரத்திற்கு சற்றுப் பழக்கப் பட்டதால் ,ஆறு மணியாகியிருக்கிறது .ஆனாலும் இங்கு தூக்கக்கலக்கம் தானே ,இன்றும் அப்படியே .எழுந்து “ஹலோ “ என்றேன்.தங்கை தான் பேசினாள் .,என் குரலைக் கேட்டு ,என்ன இன்னும் எழும்பேல்லையோ ?என்றாள் .இல்லை இங்கு இப்போதுதான் மணி ஆறு ஆகப் போகிறது, ,எழும்பப் போகிறேன் ,என்ன ? விஷயம் ஏதாவது பிரச்சனையோ ?என்றேன்

ஒன்றும் இல்லை ,சித்தியின் நிலை இப்போ மோசமாகி விட்டது ,அவரை இனி வீட்டில் வைத்திருக்க வேண்டாம் .எங்காவது வைத்தியசாலையில் சேர்க்கச் சொல்கிறார்கள் ,அதனால் தெல்லிப்பளைக்கு கொண்டு போகப் போகிறோம், அது தான் உங்களுக்கும் சொல்லுவம் என்று தொலைபேசி எடுத்தேன் என்றாள் .அப்படியா ? அங்கு வைத்திருந்தால் ஏதாவது மாற்றம் வருமாமா ?எனக் கேட்டேன் .இல்லை அப்படி இல்லை,:கொஞ்சம் சிரமம் குறையும் என்பதற்காகவே ,அப்படிக் கூறுகிறார்கள் ,வீட்டில் அவர் யார் சொல்லும் கேட்பதில்லை ,உண்பதில்லை ,குளிக்கக்கூட அடம் பிடிக்கிறார் .இதனால் மஞ்சுவுக்கும் ,சரியான வேதனையும் ,பிரச்சனையும் , அங்கு வைத்திருந்தால் ,அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்களாம் .தன்னுடைய வேலைகளையாவது ,உடை மாற்றி குளித்து ,துப்பரவாக ,இருக்கச் செய்யலாம் .நாளடைவில் அதுவே முன்னேற்றத்தையும் கொண்டுவரலாம் ,என்கிறார்கள் ,அதனாலேயே வேறு வழிஇன்றி கொண்டுபோகப் போகிறோம் என்றாள் ,சரி அக்கா இங்கு இப்போது மணி பத்தரை ஆகுது ,நாங்கள் மஞ்சு வீட்டுக்குப் போகப் போகிறோம்” ஒட்டொ “வந்திட்டுது ,நான் வைக்கிறேன் என்றாள் .நானும் சரி எனத் தொலை பேசியை வைத்தேன் .

வீட்டிலிருந்து அதிகாலை அழைப்பு வந்தாலே உடலும் ;மனம்மும் களைத்துவிடும் .ஏதோ அவசரமென இரத்த ஓட்டம் அதிகரித்து ,சுயத்துக்கு வரப் பலமணி நேரமாகும் ,அதிகாலையிலே திடுக்கிட்டு விழித்ததால் ,உடல் அசதியாக இருந்தது. சித்தியை நினைத்து மனம் வருந்தியது.

நாங்கள் தாயகத்தில் ஒன்றாய் இருந்த காலத்தில் சித்தி ,எவ்வளவு சுறுசுறுப்பாக அழகாக இருப்பாள்.எதற்கெடுத்தாலும் பகிடி ,சிரிப்பு,அவர் அருகில் இருப்பவர்கள் யாருமே சோர்ந்து இருக்க மாடடார்கள்.அவர் சுறுசுறுப்பு மற்றவர்களையும் ,தொற்றிக் கொள்ளும் ,சித்தி எங்கள் ஊர் ,கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக இருந்தார் ,எங்கள் படிப்புக்கு உதவி ,அம்மா அப்பாவிடம் காரியம் ,சாதிப்பதற்கு உதவி ,பாட்டு ,கூத்து என சித்தியும் நாங்களும் ,தோழிகள் போலவே இருந்தோம் .சித்தியின் இனிய குணத்தை நாடி ஊர்ப் பிள்ளைகளும் சுற்றிவருவார்கள் .

சித்தியின் மனத்திற்கேற்ற மாதிரியே திருமணமும் அமைந்தது .மூன்று ஆண்களும் ,ஒரு பெண்குழந்தையுடனும் ,வாழ்ந்த போதும் ,சிடுசிடுப்போ ,அதிர்ந்த பேச்சோ ,இன்றி அப்போதும் இனிமையாகவே இருந்தாள் .அவளின் ஆசைப்படியே ,பிள்ளைகளும் நன்றாகப் படித்தார்கள். முத்த மகள் ,மஞ்சு பல்கலைக் கழகத்திலும் ,பையன்கள் பாடசாலையிலும் படித்தார்கள் ,அந்த நாட்களில் தான் நாட்டு,நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருந்தது ,இளைஞர் ,யுவதிகள் உத்வேகமாகப் போரடிக்க கொண்டிருந்த காலம்.பாடசாலை மாணவ,மாணவிகளும் போராட்டத்திற் கென புறப்பட்டகாலம் .வீட்டு முற்றத்திலும் ,மதில் மேலாகவும் ,ராணுவம் புகுந்து கைது செய்த காலம் .உயர்தரம் படித்துக் கொண்டிருந்த மதனும் ,அடுத்தவன் சுதனும் ,மாலை நேரங்களில் ரியூசன்வகுப்பு முடிந்துவீடு வந்து சேரும் வரை எல்லோரும்வாசலிலேயே காத்திருப்போம் .வந்த பின் தான் எல்லோர் இதயமும் நிம்மதியாக துடிக்க ஆரம்பிக்கும் ,

அன்றொருநாள் மதன் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ,வழியில் மறித்த ராணுவத்தினர் ,மதனின் அடையாள அட்டையயும் மிதியுந்தையும் எடுத்துக் கொண்டு ,நடந்து போகும் படியும் நாளை வந்து இரண்டையும் ,பெற்றுக்கொள்ளவும் ,சொன்னார்களாம் .என வீடு வந்து மதன் கூறிய போது ,எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ,

அன்று இரவு யாருமே தூங்கவில்லை .பயம் ,பயம் ,என்ன செய்வது ?என ஒவொருவர் மனமும் சிந்தித்த படியே இரவைக் கழித்தது.அடுத்த நாட் காலை எழுந்து,சித்தியும் ,சித்தப்பாவும் ,மதனுடன் சேர்ந்து போய்,அவற்றை வாங்கக் கேட்டபோது அவற்றை வாங்கி வைத்த அதிகாரி வெளியே போய் விட்டதாயும்,மாலை வரும்படியும் கூறினார்கள்.அவர்களும் வீடு வந்து மாலை மீண்டும் சென்றனர் .அப்போதும் அதே பதில்தான்.அதிகாரி இல்லை, நாளை மீண்டும் வாருங்கள் எனக் கூறினார்கள்.மறுநாள் சென்றபோது ;அதிகாரி ,மதன் போராளிகளை தனது மிதியுந்தில் ஏற்றிச் சென்றதாயும் “அதனால்” மதனை விசாரிக்க வேண்டும் எனவும் கூறி” அவனை மறித்து வைத்தனர் . நாங்களும் வாசலிலேயே காவல் இருந்தோம்.மாலை இரவாகியும் அவனை வெளியே அனுப்பவில்லை .சித்தப்பா என்ன ;இரவாகிவிட்டதே ,எப்போவிடுவீர்கள் எனக் கேட்டபோது,ஒன்றும் பிரச்சனை இல்லை ,விசாரணை முடிய வில்லை முடிந்ததும் காலை வந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார்கள் .எவ்வளவோ கெஞ்சி மன்றாடி,அவன் ஒருமாணவன் அவனுக்கும் எந்த போராளிகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய போதும் ,பயப்படாதீர்கள்விட்டுவிடுவோம்,சும்மா விசாரணை மட்டும்தான் என எங்களை அனுப்பி விட்டார்கள் .

அடுத்த நாள் அதிகாலை எழுந்து ,எல்லோருமாகப் புறப்பட்டோம் .மதனின் பாடசாலை அதிபரும் ,அவன் எந்த விதமான பிரச்சனையும் அற்ற மாணவன் என ஓர் உறுதிக்கு கடிதமும் தந்திருந்தார்.அதையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கையுடன்புறப்படோம் .வெளியே வந்து பார்த்தபோது ,எங்கள் வீடடைச் சுற்றி ராணுவத்தினர்,,பதுங்கிஇருந்தார்கள்.ஏன் அப்படி சுற்றி வளைத்தார்கள் என்பதை நாமறியோம்.எதுவும் பேசாமலே,முகாமை நோக்கிப் போனபோது,அருகிருந்த வீட்டினர் இரவிரவாக ,ஒரே அழுகைச் சத்தம்,அடித்திருப்பார்கள் போலும்.என்றார்கள..நாங்கள் செய்வதறியாது முகாம் வாசலில் ,மதனை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் .ஒரு இராணுவச் சிப்பாய் வந்து மதனை இடம் மாற்றி விட்டதாகவும் ,அங்கு போய்ப் பார்க்கும் படியும் ,முகவரியைத் தந்தான் ,நாங்கள் அழுது குளறிய வண்ணம் ,ஊர்த் தெய்வங்களை வேண்டியபடியே ,அடுத்தமுகாமை நோக்கி ஓடினோம் ,

ஆனால் அங்கும் ஏமாற்றமே மதனைக் காணவுமில்லை ,காட் டவுமில்லை ,இந்தா ,அந்தா ,எனக் கூறி ,பத்துநாட்கள் கடந்த பின்னே மதனை வெளியே விட்டார்கள்.அந்தப் பத்து நாட்களும் எங்களுக்கு பத்து வருடங்களாய்,கழிந்தது ,வீட்டிலே சமையல் சாப்பாடு ,எதுவுமே இல்லை ,எல்லாம் உறவுகள் வற்புறுத்தலிலேயே நடந்தது ,ஏதோ இப்போதாவது உயிருடன் விட்டார்களே எனச் சித்தியும் ,சித்தப்பாவும் அவனை அணைத்துக் கூட்டி வந்தார்கள் .கடவுளே ! இது மதனா ? முகமெல்லாம் கறுத்து, அடிகாயங்களுடன் ,தலையும் மொட்டை அடித்து ,பார்க்கவே பரிதாபக் கோலத்தில் வந்தான் .அவன் கண்களில் பயம் ,உடலில் காரணமற்ற நடுக்கம். வீட்டுக்கு வந்தவனுக்கு ஒத்தடம் கொடுத்து ,டாக்ட்டரிடம் அழைத்துச் சென்று ,அவனைக் கொஞ்சம் பழைய நிலைக்கு வரச் செய்தபின் ,இனியும் இவன் இங்கு இருக்க வேண்டாம் .உறவினர் வீடுகளில் தங்க வைத்துப் படிக்க வைக்கலாம் எனக் குடுபத்தினார் கூடி முடிவெடுத்தோம்.ஆனால் அன்று பாடசாலை சென்ற மதன் விடு திரும்பவில்லை ,நண்பர்கள் ,உறவுகள் ,வீடுகள் எல்லாம் தேடியும் ,அவனைக் காணவில்லை .

ராணுவமே மறுபடியும் கொண்டு சென்றுவிட்டதென,அனைவரும் தேடித் திரிந்தோம் ,அப்போது ஒரு நண்பன் மதன் கொடுத்ததாய் கூறி ஒரு கடிதத்தை கொண்டுவந்து தந்தான் ,அதில் நான் எந்தத் தவறும் செய்யாமலே என்னைத் தண்டித்தார்கள் ,அது செய்தாயா ? இது செய்தயா?எனத் துன்புறுத்தினார்கள்,நான் ஏன் தவறு செய்யாமல்,வேறு இடம் போகவேண்டும் ?எத்தனை நாட்களுக்கு க்கு ஓடி ஒளியலாம் ;என்போன்ற மாணவர்கள் நிம்மதியாக கல்விகற்க, மக்கள் நிம்மதியுடன் உண்ண உறங்க இராணுவத்தை,விரட்டுவதற்காய் போரட்டத்தில் என் போன்ற இளையவர்கள் போராடுகிறார்கள்.அவர்களுடன் இணைந்து நானும் அதற்காய் போராடப் போகிறேன்.அம்மா அப்பா,நான் செய்வது தவறானால் என்னை மன்னித்து விடுங்கள்.மீண்டும் சந்திப்போம் என எழுதியிருந்தான்.

கடிதத்தை பார்த்து,செய்வதறியாது,நின்ற குடும்பம் மதனை அயல்கிராமங்களில் எல்லாம் தேடியும் ,எதுவித பயனும் இல்லை.எங்கள் குடும்பத்தின் மகிழ்வு தொலைந்து,பயம் கலந்த கலவரத்திலேயே நாட்கள் விரைந்தது.அங்கு வெடித்தது ,இங்கு சூடுபடடார்கள் போராளி மரணம் என கேள்விப்படும் பொழுதுகளில்,ஒவ்வொரு முறையும் ;இதயம் நின்று மறுபடி துடிக்கும்.இப்படி இரண்டு வருடம் கழிந்தபின் மதனை அங்கே கண்டோம் இங்கே கண்டோம் ,எனச் சிலர் கூறுவார்கள்.:பின் மதன் கொடுத்ததாய் கடிதங்களும் வந்தது.அதில் தங்கள் வெற்றியை,இழப்பை ,வருத்தங்களை எழுதி,இங்கு என் போன்ற ஆயிரம் இளைஞர்கள் உள்ளார்கள்.என்னைப் பற்றி கவலை படாதீர்கள்,தம்பிகளை நன்றாகப் படிக்க வையுங்கள் ;உறவுகளுக்கு,அன்பைத் தெரிவியுங்கள்,முடிந்தால் மீண்டும் சந்திப்போம் என எழுதியிருந்தான்.அந்தக் கடிதம் வந்து ஒரு சில மாதங்களில் அஞ்சலி சுவரொட்டிகளில் தான் மதனின் உருவத்தைப் பார்த்தோம்.

அதைப்பார்த்து வாய் விட்டு கதறி அழமுடியாமல் ,துன்பத்தை வெளியிட முடியாமல் ,அன்று நாம்இருந்த நிலைமை மீண்டும் யாருக்கும் வரக்கூடாது :தொடர்ந்து ராணுவமும் ,மதன் பெயரைச் சொல்லி மற்றவர்களைத் தாக்கியது ,இளையவர்களையும் அடிக்கடி பணயமாகக் கொண்டு போனார்கள் .இதனால் வெறுப்புற்று ,சுதனும்;வீடடை விட்டு வெளியேறி போராட்டத்தில் இணைந்து விட்டான் .அவனைத்தொடர்ந்து கஜனும் வெளியேறினான்.இப்பொழுது எங்கள் வீடே மயானமானது.

எங்கு எது நடந்தாலும் ஊரிலிருக்கும் ராணுவம் சித்தப்பாவை ,அழைத்துப் போய் ஓர் நாள் வைத்திருந்து அனுப்புவார்கள் .சித்தி இப்போது நிரந்தர நோயாளி ஆகி விட் டாள் .சித்தப்பா ,வேலையில் ஓய்வு பெற்று நோயாளி மனைவியை பராமரிப்பதிலேயே ,காலத்தைக் கழிக்கிறார்.ஒரு சில ஆண்டுகள் யாரைப் பார்த்தாலும் ,மதன் ,சுதன் ,கஜன் என அழைத்தபடி ஒடிச் சென்று கட்டி அணைப்பாள் ,ஓயாமல் அவர்களைப் பற்றியே பேசுவாள் ;இப்படி இருந்தவள், இன்று தன்னையிழந்து ,நிரந்தர மனநோயாளி ஆகிவிட்டாள்.அதனால் மனநோயாளர் விடுதியில் சேர்க்கப் போகிறார்கள்.

மூன்று ஆண்மகவுகளையும் இழந்து ;இன்று தன் கலகலப்பு,உற்சாகம் எல்லாம் தொலைத்த மனநோயாளி,மற்றவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தவள்,சுய நினைவின்றி இன்று சுருண்டு கிடக்கிறாள்.இவளைப் போல் இன்னும் எத்தனை பேரோ ? எங்களை வளர்த்து ஆளாக்கிய சித்தியை இப்படி ஒரு நிலையில்,அருகிருந்து பார்க்காமல் ,தூரதேசம் வந்த நான் பாவியா ? அதிஸ்ட்டசாலியா? நானறியேன்.கடவுளே இனியாகிலும் என் நாட்டிற்கும்,அங்கு வாழ்பவர்களுக்கும்,நிம்மதியைக் கொடு ,என வேண்டியபடி எழுந்து வேலைகளைக் கவனிக்கிறேன்.

– 04-07-2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *