சாருமதியின் தீபாவளி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,667 
 

இன்று தீபாவளி!

வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். “எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. எப்போதும் புத்தகமும் கையும்தானா?” அம்மாவின் குரல். “சாரூ… சமையலில் உதவக் கூடாதா? நல்ல நாளுன்னு கிடையாதா, குளிச்சிட்டுப் புதுச் சேலையை எடுத்துக் கட்டும்மா” பாடல் தொடர்ந்தது. தொலைக்காட்சியும் தன் பங்கிற்கு புதுப்படப் பாடல்களை அலறிக்கொண்டிருந்தது!

ஆனாலும் தன்னைச் சுற்றி எதுவுமே நடக்காதது போல, பிரத்யேக உலகில் சந்தோஷமாய் சஞ்சரிக்கும் சாருமதி! மீராவோ, மேத்தாவோ – கவிதைகளில் நுழைந்து விட்டால் அவளுக்கு சுயநினைவே இருக்காது.

“சாரூ” – அழைத்தது அப்பா. ஒரு நிமிடத்துக்குள் அவர் முன் ஆஜராகிவிட்டாள்.

“என்னப்பா?”

“அப்பா குரல் மட்டும் உடனே கேட்குமே” கதவின் வழியே அம்மா முறைத்தாள்.

“மாப்பிள்ளை உன்னிடம் பேச வேண்டுமாம், சாயங்காலம் வர்றாராம்மா…” என்றார்.

“மாப்பிள்ளையா… இவர்தான் மாட்டப் போறார்னு முடிவு பண்ணிட்டீங்களா?” சாருமதி சிரித்தாள்.

“காலையில போன் பண்ணாரும்மா. நேற்று பெண் பார்க்க வந்த போது சொந்தபந்தமெல்லாம் இருந்ததேடா. வெளிநாட்டில் வசிப்பவர். கூச்ச சுபாவம் போலிருக்கு. உன்னோட தனியாகப் பேசணும்னு ஆசைப்படறார்”

“என்ன பேசணுமாம். எல்லா விவரமும்தான் நீங்க சொல்லிட்டீங்களேப்பா”

“அவருக்கு உன்னை பிடிச்சுப் போயிருக்கணும் சாரூ, அதனாலதான் பேச விரும்பறார். உனக்கு ஓகேன்னு தானேம்மா சொன்ன?”

“ஆமாம், உங்களுக்கு எல்லாம் பிடிச்சது, சரின்னு சொன்னேன். இன்னைக்குத் தீபாவளி ஆச்சேப்பா, அவங்க வீட்டில கொண்டாடலியாமா? இங்க வந்து என்ன பண்ணப் போறார்?”

“அதாண்டீ, உன்னோட தலைதீபாவளி ரிஹர்ஸல் பார்க்க வர்றார்.” சூர்யாஅவன் பங்குக்கு வெறுப்பேற்றினான்.

“அவர் வெகேஷன் முடிய இன்னும் கொஞ்ச நாள்தானேடா இருக்கு, அதுக்குள்ள கல்யாண வேலையெல்லாம் பார்க்கணும் இல்ல, அதனாலதான் இன்னைக்கே வர்றார்”

“சரி, வரட்டும்… ஒரு வழி ஆக்கறேன் அந்த அமெரிக்கா ஆல்பெர்ட்டை.” சிரித்துக் கொண்டே மீண்டும் புத்தகத்தோடு போர்டிகோ ஊஞ்சலில் அமர்ந்துகொண்டாள்.

“இவளுக்கு கொஞ்சமாவது பயபக்தி இருக்கா பார்த்தீங்களா? கல்யாணம் என்னமோ விளையாட்டு போலப் பேசறாளே. அதுமட்டுமில்ல, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம், பிடிவாதம், எதிர்ப்பேச்சு. இருபத்தி நாலு வயசாச்சு, இன்னும் குழந்தை புத்தி, ஆண்டவா” என்றழைத்தாள் அம்மா.

“எல்லாம் சரியாயிடுவா சுவாதீ, நல்ல நாளும் அதுவுமா அவளத் திட்டாதே” என்றார் அப்பா.

இவர்கள் உள்ளே பேசிக்கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! “பாலாஜீ…..” பக்கத்து வீட்டு சுகந்தி அக்காவின் குரல். சாருமதி வாசற்கதவைத் திறந்து ஓடினாள். வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்தான் குழந்தை, சுகந்தி அக்கா பலகாரங்கள் செய்து கொண்டிருந்தாள் போல. வீடெங்கும் மாவும், சர்க்கரையும் கொட்டிக்கிடந்தன. “சாவிக் கொத்தைக் கொடு, தண்ணீர் தெளி.” குடித்தனங்களில் இருந்த அனைவரும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னார்கள்.

சாரு நிற்கவில்லை…

“அம்மா… இதோ வந்துடறேன்….” சாவியை மாடத்திலிருந்து பிடுங்கித் தனது வண்டியைக் கிளப்பினாள்.

“அக்கா, குழந்தையை எடுத்துகிட்டுப் பின்னாடி உட்காருங்க. நர்ஸிங் ஹோமுக்குப் போகலாம்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு பறந்து விட்டாள். அதன் பிறகு எல்லோரும் தத்தமது வேலைகளில் மீண்டும் மூழ்கிவிட, நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

“நல்ல நாளும் அதுவுமா இந்தப் பொண்ணு… குளிக்கக் கூட இல்ல. நேற்றுப் போட்ட துணியோட ஒடிட்டா பாருங்க.” அம்மாவுக்குப் புரிய வைக்க முடியாது. ஒரு உயிரைக் காப்பாற்றச் சிறிதும் யோசிக்காமல், உதவ ஓடிய தன் மகளை எண்ணிப் பெருமிதம் கொண்டார் கணேசன். மதியமாயிற்று, சாரு வரவில்லை.

மணி மூன்றாகி விட்டது. “என்னங்க மாப்பிள்ளை வர்றேன்னு சொல்லி இருக்கார். இவளுக்கென்ன பெருதனம், இத்தனை ஜனம் இருக்கே, யாராவது அழைச்சுட்டுப் போக மாட்டாங்களா…ஆட்டோ கிடைக்காதா? நல்ல நாளும் அதுவுமா… சரி, அங்கே இறக்கிவிட்டு வர வேண்டியதுதானே. இன்னும் ஆஸ்பத்திரியில் என்ன வேலை. நேரமாகுதே!” அம்மாவின் இரத்தக் கொதிப்பு அதிகமாகிக் கொண்டு இருந்தது.

“பக்கத்தில் இருக்கும் நர்ஸிங் ஹோமுக்குத்தான் போயிருப்பாள். நான் போய் அழைத்து வருகிறேன்” என்று கணேசன் கிளம்பினார். ஒரு மணி நேரம் கழித்து திரும்பியவர்… “பக்கத்தில இருக்குற பல கிளினிக்குகள் மூடி இருக்கு. எங்கே போனாளோ தெரியலை” என்றார். “ஐய்யோ, இப்ப என்ன செய்றது… மணி நாலரை ஆச்சே! மாப்பிள்ளை எத்தனை மணிக்கு வர்றேன்னார். போன் பண்ணி வரவேண்டாம்னு சொல்லிடலாமா….” அம்மாவுக்குத் தலை சுற்றியது.

“சரி, நீ டென்ஷன் ஆகாதே, நான் போன் பண்ணி மெதுவாகச் சொல்றேன்” என்று கணேசன் சொல்லி முடிக்க, வாசலில் ஆட்டோ வந்து நின்றது. ஜெயந்த் வந்து விட்டார். “வாங்க வாங்க” அம்மாவும் அப்பாவும் முகத்தில் பதட்டம் காட்டாது உள்ளே அழைத்தனர். “உட்காருங்க… சாரு அவ தோழி வீட்டுக்கு போயிருக்கா, இப்ப வந்துடுவா” என்று அம்மா சொல்ல, கணேசனும், சூர்யாவும் விழித்தனர். “சூர்யா, ஜெயந்த் கிட்ட பேசிகிட்டு இரு, நான் காபி கொண்டு வர்றேன்” என்று அம்மா உள்ளே போக, கணேசன் “குடிக்கத் தண்ணி வேண்டுமா” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அம்மாவைத் தொடர்ந்தார்.

“ஏன் அவரிடம் பொய் சொன்னே!”
“பின்னே, முதல் முறை பேச வந்திருக்கார், அபசகுனமா, இவ ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான்னு சொல்லணுமா, மேலும் இவளுக்குதான் உடம்பு கிடம்பு சரியில்லையோன்னு நினைப்பார்” சூர்யா அவனது அமெரிக்கக் கனவை ஜெயந்திடம் விவரித்துக்கொண்டிருந்தான். அத்திம்பேர் ஆகப்போகிறவர். உதவ மாட்டாரா என்ன? மேற்படிப்புக்கு வருமாறு ஜெயந்த்தும் அவனை ஊக்கப்படுத்தினார்.

அவர் வந்து இரண்டு மணி நேரமாகிவிட்டது. சாருவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. “நீங்கள் மாலை வருவதாகச் சொன்னேன், நேரம் சொல்லவில்லை.” என்று அப்பா நெளிந்தார். “என்ன இந்தப் பெண், ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு போன் பண்ணக்கூடாதா….” அம்மா தவித்தாள்.

மணி எட்டைத் தொடப்போனது. தெருவெங்கிலும் பட்டாசுச் சத்தம். ஜெயந்த் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார். முகத்தில் கடுகடுப்போ, கோபமோ சிறிதும் இல்லை (மௌன ராகம் மோகன் போல) ஆனாலும் அம்மாவுக்குப் பயம் விடவில்லை.

“இப்படி ஒரு தீபாவளியா…தெய்வமே!” என்று தலையில் அடித்துக்கொண்டாள். மணி எட்டரை ஆனபோது, வாசலில் மொபெட் சத்தம். சாரு வந்துவிட்டாள்.

வியர்வையில் நனைந்து, முகமெல்லாம் கருத்துப்போய், கலைந்த தலைமுடியை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டு. மிகவும் களைப்பாக இருந்தாள். அம்மா வாசலுக்கு ஓடினாள். ஜெயந்த அவளை இந்த கோலத்தில் பார்த்துவிடக் கூடாதே!

“வா.. பின் பக்கமா வந்து முதலில் குளி. சே… ஆஸ்பத்திரி நெடி. மாப்பிள்ளை வந்தாச்சு! பாவம் நாலு மணி நேரமா காத்திருக்கார். கொழுப்புடீ உனக்கு. நீதான் வைத்தியம் பாத்தியா?” அம்மா கோபத்தைக் கிசுகிசுக் குரலில் படபடத்தாள்.

“அம்மா.. நான் என்ன திருட்டா பண்ணிட்டு வந்திருக்கேன். வழி விடு…” என்று நேராக உள்ளே நடந்தாள் சாரூ. “வாங்க ஜெயந்த்…. மன்னிக்கணும். ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

ஜெயந்த் முகத்தில் புன்னகை! அம்மாவும், அப்பாவும் எதுவும் பேசவில்லை. முகம் அலம்பிக்கொண்டு ஜெயந்த் முன்னால் வந்தமர்ந்தாள். “காலையில பக்கத்து வீட்டு குழந்தைக்குத் திடீர்னு வலிப்பு வந்துருச்சு…. ஜெயந்த். அவனோட அப்பாவும் ஊரில் இல்லை. தீபாவளி என்று மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. பிறகு தி.நகரில் ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டேன். ஐசியூவில் இருக்கிறான். பிரெயின் ஹிமெரேஜாம். மூளைச் சிகிச்சை நிபுணர் வரவேண்டி ஆனது. ஒரே அலைச்சல், வீட்டுக்குத் தொலைபேசியில் பேசக்கூட முடிய¨வில்லை. அழுது கொண்டே இருந்த அவனது அம்மாவைத் தனியாக விட்டு வரவும் மனமில்லை. இப்போது கொஞ்சம் தைரியம் வந்து, நீ வீட்டுக்குப் போம்மா என்று அவங்க சொன்னாங்க. கிளம்பி வந்தேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”

“அச்சச்சோ… நான் தப்பாவே நினைக்கல சாரூ. உங்கள் உதவும் குணத்தைப் பாராட்டுகிறேன். குழந்தை உடல் நிலை சரியாகணும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன். வரும் பதினைந்தாம் தேதி நாம் கிளம்ப வேண்டும். ஏர் டிக்கட் வாங்கணும். உங்கள் விசாவுக்கு வேண்டிய ஆவணங்கள் தயார் செய்யணும், எனது கம்பெனியில் இருந்து ஒப்புதல் கடிதம் வரணும், அது விஷயமா உங்கள் செர்டிபிகேட்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை வாங்கிப்போகலாம் என்று காத்திருந்தேன். மேலும் இந்தக் காகிதங்களில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும்.” ஜெயந்த் தனது வருங்கால மனைவியுடன் ஆகாயத்தில் பறக்கும் திட்டங்களில் மூழ்க…

அம்மாவும் அப்பாவும், நிம்மதியாக உள்ளே சென்றனர்.

“ஆக…அக்காவின் அடுத்த தீபாவளி அமெரிக்காவில்!” சூர்யா சந்தோஷக் களிப்பில் குதித்தான்.

– அக்டோபர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *