சாமிநாதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,309 
 

புரபசர் செந்தில்நாதன் வகுப்பை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, செல் போனில் ’டிங்’ என்று ஒரு சத்தம். ’வாட்ஸ் அப்’பில் செய்தி. போனை எடுத்து பாஸ்வேர்ட் டை கோலம் போடுவதுபோல எண்களின் மீது சுட்டுவிரலால இழுத்துவிட்டு, திறந்து, போனின் மேல் பகுதியை புத்தகத் தாள் தள்ளுவது போல தள்ளி, வாட்ஸ் அப் இருக்கும் பகுதிக்கு நகர்ந்தார்.

”வரும் புதன் இரவு இந்தியா வருகிறேன். வியாழன் அன்று உங்களை சந்திக்க விரும்புகிறேன். இயலுமா?

நன்றி.

ராஜன்.ரங்கராஜன்”.

’ஓ! ராஜனா? ஏன் இந்தியா வருகிறார்? பிரச்னை தீரவில்லையோ!’ என்று யோசித்தபடி ராஜனின் புகைப்படத்தை ஆள்காட்டி விரலால் தட்டி, பெரிதுபடுத்திப் பார்த்தார். ’புதிய போட்டோவில் ராஜன் மலர்ச்சசியான முகத்துடன்தான் தெரிந்தார். ‘நம்மைப் பார்க்கவேண்டுமென்று கேட்கிறாரே! ஏன்?’ என்று யோசித்தபடியே காரைக் கிளப்பாமல் அப்படியே செல்போனில் இருந்த கேலண்டர் பக்கத்தைப் புரட்டினார். வரும் வியாழனென்றால்.. பதினைந்தாம் தேதி. வரிசையாக காலை 9 மணி முதல் மாலை ஏழு வரை வேலைகள் குறிக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமையைப் பார்த்தார். மதியம் 2 முதல் 4 வரை அப்பாயிண்ட்மெண்ட் ஏதும் இல்லை. ஃபிரி தான்,

“ஒருநாள் தள்ளி, வெள்ளிக்கிழமை பார்க்கலாமா?” மெசேஜ் அனுப்பினார்

மீண்டும் ஒரு டிங்.

”வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் ஒரு வேலை இருக்கிறது. அதற்காகத்தான் இந்தியா வருகிறேன். வியாழன் இரவு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்சுக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். பகலில் சென்னை வேலைகளை முடிப்பதாக திட்டம். அப்படியே உங்களையும் பார்த்துவிடலாம் என்றுதான் கேட்கிறேன்.”

’நன்கு வளர்த்து மருத்துவம் படிக்கவைத்த ஒரே மகனை, படிப்பை முடிக்கும் முன்பே டைபாய்டு அரக்கனுக்கு பலிகொடுத்தவர். அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளமுடியாமல் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தவர். இந்தியா வருகிறேன், ஸ்ரீரங்கம் போகிறேனென்றெல்லம் எழுதுகிறாரே! என்ன விஷயமாக இருக்கும்!’ யோசித்தபடியே டைப் அடிக்காமல், வாய்ஸ் மேசேஜ் ஆக,

”நாமிருவரும் சந்தித்துப் பேசவேண்டும். அவ்வளவுதானே! தினமும் காலை 6.30 க்கு வாக்கிங் போவேன். வியாழன் அன்று நீங்களும் வருகிறீர்களா? நடந்தபடியே பேசிவிடலாம். ஆறரையில் இருந்து எட்டு வரை. உங்களுக்கு சரிதானா?” என்று பேசி அனுப்பினார். பதிலுக்கு ராஜனிடமிருந்து வாய்ஸ் மேசேஜ்.

“தாராளமாக. வியாழன் காலை 6.30 க்கு எங்கே வரவேண்டும்?”

“பெசன்ட்நகர் பீச். வேளாங்கன்னி சர்ச் முன்னால் சந்திக்கிறோம்”

“நிச்சயமாக”

காரைக் கிளப்பினார். அவர் கண்கள் சாலையில் இருந்தாலும் மனதிற்குள் ராஜன் பற்றிய சின்ன டாக்குமெண்டரி படம் ஓடியது.

முழுப்பெயர் ராஜன்.ரங்கராஜன். வயது நாற்பத்து எட்டு. திருச்சி அந்நாளைய ஆர்.இ.சி யில் படித்தவர். பின்பு கொல்கத்தா ஐ.ஐ.எம். பிரிலியண்ட் என்பது ராஜனைப் பொருத்தவரை சதாரண வார்த்தை. இந்திய சராசரி உயரம். அடர்த்தியான ஆனால் முக்கால்வாசி நரைத்துவிட்ட கோரைபோன்ற தலைமுடி.. குறுகிய தாடையெங்கும் பரவியிருக்கும் பெப்பர் & சால்ட் நிற தாடி. பளபளக்கும் மெல்லிய பிரேம் கண்ணாடி..

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, பிரமாதமாக முன்னேறி, மனைவியையும், ஐந்து வயது மகனையும் அங்கே அழைத்துச் சென்றவர். பின்பு வேலையை விட்டுவிட்டு சொந்த கம்பெனி ஆரம்பித்து வளமாக வாழ்பவர்.

மகன் சாமிநாதன் விரும்பிய மருத்துவப் படிப்பு படிக்க வைத்தார். அப்பாவைவிட உற்சாகமானவன் மகன் சாமிநாதன் . படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் குவிஸ் போன்றவற்றிலும் சூரப்புலி. பல்வேறுநாட்டு நண்பர்கள்.

சென்ற ஆண்டு விடுமுறையில் தனியாக ஒருமுறை திருச்சி வந்துவிட்டு சிங்கப்பூர் போனவனுக்கு காய்ச்சல். மருத்துவம் நான்காம் ஆண்டு என்பதாலும் மருத்துவம் கற்றுத்தரும் பேராசிரியர்களுடன் பழக்கம் என்பதாலுமோ, ஆரம்பத்தில் அசட்டையாக இருந்து, தானே மருந்து சாப்பிட்டிருக்கிறான். பின்பு என்ன காய்ச்சல் என்று தெரியாமல் சில நாட்கள். பிறகு அது டெங்குவா அல்லது மலேரியாவா என்றெல்லாம் சோதனைகள். இறுதியாக அது டைபாயிடு என்று தெரியவந்த போது, கிருமிகள் வலுவாகிவிட்டிருந்திருக்கின்றன..

சிரித்த முகமாக மருத்துவமனையில் படுத்திருக்கும் போது, இப்படிப்பட்ட வியாதிகளை ஒழிக்கவேண்டும் என்றும், எழுந்து வந்து படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே கூட, ’என்ன நோய் என்று கண்டறியும் துறையில்’ செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி அவனது பிளாஃகில் எழுதவும் திட்டமிட்டிருந்தான். சந்திக்க வரும் நண்பர்கள், புரபசர்கள், குடுபத்தாரிடம் இதேதான் பேச்சு.

டைபாயிடில் இரண்டு வகை உண்டாம். அதில் ஒருவகை சற்று கடுமையானதாம். 5% பேருக்குத்தான் வருமாம். அதற்கான வைத்தியம் தாமதமாகிவிட்டால் ஆள் பிழைப்பது அரிதாம். அவனே சொல்லியிருக்கிறான்.

”இவ்வளவு பேசுறியே, உனக்கு எப்படி டைபாயிடு வந்தது சொல்”, என்று அப்பா கேட்டிருக்கிறார்.

”திருச்சி போயிருந்தன்ல்ல, ரோட்டு கையில பிரண்ட்ஸ்சோட பரோட்டா சாப்பிட்டேன். அங்கதான் மாட்டியிருக்கேன்”

“அது எப்படிடா அதான் என்று கரெக்ட்டா சொல்லுற?”

“இன்பெக்ட் ஆகி கரெட்டா 21ம் நாள்தான் அது வேலையை வெளியில் காட்டும். எனக்கு ஜுரம் வந்த தேதியை கணக்குப்பண்ணிப் பார்த்தேன்”

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அவனைப்பார்க்க வந்திருந்த அவன் அப்பா ராஜனிடம் , பெட்டில் படுத்திருந்தபடியே கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவன், திடீரென அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு, ”அப்பா பா!! பயங்கரமாக வலிக்கிறது, நர்சைக் சீக்கிரம் கூப்பிடுங்கள்” என்று கத்தியிருக்கிறான். ஓடி அழைத்துவந்திருக்கிறார். வலியால் துடித்தவனின் போர்வையை நர்ஸ் விலக்கி உடையையும் நகர்த்திப் பார்ப்பதற்குள் அவன் வயிறு அவர்கள் இருவர் முன்பாகவே புசு புசுவென பலூன் போல வீங்கி.. அவன் கண்கள் குத்திட்டு..

”ஸ்பிலீன் வெடித்து.. இரத்தம் வயிற்றுக்குப் பாய்ந்து..”என்று என்ன என்னவோ சொல்லியிருக்கிறார்கள். ராஜன் காதில் எதுவும் விழவில்லை. திக் பிரம்மை பிடித்தவர் போலாகிவிட்டார். கண்ணேதிரே ஒரே ஆசை மகனின் மரணத்தைப் பார்த்தவராயிற்றே! உறைந்து போய்விட்டார்.

இரண்டுமாதங்கள் வீட்டிற்குள்ளாகவே அடைந்துகிடந்திருக்கிறார். வீட்டைப் பார்க்கவில்லை. வியாபாரத்தைப் பார்க்கவில்லை. மகனை மறக்க முடியாமல் ஆள் மெலிந்து, உருக்குலைந்து.. வேறு காரணத்திற்காக சென்னைக்கு வந்தவர், புரபசர் செந்தில்நாதனை தற்செயலாக சந்தித்தார். விபரங்கள் சொல்லி, ”என்னை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். எனக்கும் புரிகிறது. ஆனால் எதை செய்ய ஆரம்பித்தாலும் மகன் சாமிநாதன் இல்லாமல் இதையெல்லாம் செய்து என்ன என்று தோன்றுகிறது. அதோடு விட்டு விடுகிறேன்” என்றார்.

புரபசர் பொறுமையாக அனுசரனையாக விபரங்கள் கேட்டார். ”எதைச் செய்யப்போனாலும் அவன் வயிற்றைப் பிடித்தபடி அப்பா என்று கத்தியதும் அவன் கண்கள் சொருகிகொண்டதும்தான் கண் முன் வருகிறது. அதோடு நான் அப்படியே ஆப் ஆகிவிடுகிறேன்”

புரபசருக்கும் ராஜன் வருத்தம் புரிந்தது. ராஜனை தொடர்ந்து பேசவிட, சிங்கபூருக்கு மனைவியையும், மகன் சாமிநாதனையும் அழைந்துவந்த போது, நிறுவனத்தில் வேலை அதிகம் இருந்ததால் ராஜன் பெரும்பாலான நாட்கள் தாமதமாக வீட்டிற்கு வருந்ததையும், அவரை எதிர்பார்த்து மாலை முழுக்க காத்திருந்த ஆறு வயது சாமிநாதன், அவர் வந்ததும் அவர் முன்னால் கோபமாக சற்று நேரம் நின்றுவிட்டு பின் அவர் ஆசையாய் அழைக்க அழைக்க, அவர் கையில் சிக்காமல் வீடு முழுக்க ஓடுவதையும், பிறகு அதற்கு சமாதனமாக அவர் தோளில் அவன் ஏறி உட்கார்ந்துகொண்டு, வீடு முழுக்க ராஜனை அங்கும் இங்கும் ஓடச் சொல்லி விரட்டிய நிகழ்ச்சிகளையும் சொன்னார். “கமான் கமான் . அங்க போங்க. இதை எடுங்க” என்று என்னை விரட்டுவான். நானும் சிரமப்படுவதுபோல நடித்தபடி சந்தோஷமாக ஓடுவேன்”. இப்படி பல நாட்கள் நடந்திருக்கின்றன. சொல்லிவிட்டு அழுதார். இதைக் கேட்ட புரபசர் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். புரபசருக்கு ஒரு யோசனை வந்தது. அதன்பின் ராஜனிடம் இரண்டுமணி நேரம் பேசினார்.

முயற்சிசெய்து பார்கிறேன் என்று ராஜன் கிளம்பி சிங்கப்பூர் போய்விட்டார். அதன் பிறகு புரபசரைத் தொடர்புகொள்ளவில்லை. இப்போது வருகிறேன், சந்திக்கவேண்டும் என்கிறார். வரட்டும் பாவம் என்று நினைத்துக்கொண்டார் புரபசர்.

ஆறு இருபத்து ஐந்துக்கே, கால் டேக்ஸ்சியில் வந்து இறங்கிய ராஜன்,, புரபசர் கையை தனது இரு கைகளாலும் அழுந்தப்பிடித்து நன்றி சொன்னார். ”நான் பழையபடி ஆகிவிட்டேன் புரபசர் . உங்க சஜஷன் ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆகிகிட்டிருக்கு” என்றார்.

நடந்தபடியே பேசினார்கள்.

”எஸ். உங்க முகத்தில நல்ல தேஜஸ் தெரியுது. தெளிவாகவும் உற்சாகமாகவும் இருக்கீங்க. வெர்ரி குட்”

புரபசர் மனதிற்குள் கொஞ்சம் ஆச்சரியம். என்னதான் செய்தாலும் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு நார்மலாக மாறிவிட்டாரே!

“என்ன செய்தீர்கள் அதைச் சொல்லுங்கள்” என்றார் புரபசர் ஆவலை அடக்கமுடியாமல்.

வேறு ஒன்றுமில்லை. நீங்க சொன்னதை அப்படியே செய்தேன் புரபசர்.

“உம்.ம்ம்…………”

“உங்களிடம் பேசிவிட்டு போனபோது நீங்கள் சொன்னதன் மீது அவ்வளவு நம்பிக்கையில்லை. செய்ய முயற்சிக்கும் மனநிலையுமில்லை. சிங்கப்பூர் போய்விட்டேன். அதற்கு அது இரண்டு நாளில், நண்பர் ஒருவரின் மகள் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். தகவல் கிடைத்து நானும் என் மனைவியுடன் போயிருந்தேன். சோகமாகவும் சோர்வாகவும்தான் இருந்தேன்.

எதனால் அவள் மயங்கியிருக்கிறாள் என்று தெரியவில்லை. பெண்ணின் அம்மா பதறுகிறார்கள். உடன் நின்ற நண்பர்களும் பதறுகிறார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, ”சாலையில் இவர் மயங்கிவிழுந்திருக்கிறார், நீங்கள் போலீஸ்சில் புகார் கொடுத்துவீட்டு வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

“பிறகு..?”

“நண்பனின் மனைவியைப் பார்க்கிறேன். அழுதபடி செய்வதறியாமல் நிற்கிறார். நண்பனின் மகளைப் பார்கிறேன். பேச்சுமூச்சின்றி மயங்கிக்கிடகிறார். பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனாலும் நான் அசையவில்லை. அப்போதுதான் நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது. கொஞ்சம்தான் முயன்றேன். என் மகன் சாமிநாதன் சின்ன வயதில் என் தோளில் அமர்ந்துகொண்டு என்னை வீடெங்கம் ஓடச் சொல்லி விரட்டும் அந்தக் காட்சியை நினைவுப்படுத்திக்கொண்டேன். தொடர்ந்து முயன்று அதை ஆழமாக நினைத்தேன். அவ்வளவுதான். சடாரென அவன் என் தோளில் வந்து அமர்ந்துவிட்டான்!

“என்னப்பா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? போங்கள். போய் அவர்களுக்கு உதவுங்கள். உங்களுக்குத்தான் இந்த புரசீஜர் எல்லாம் நன்றாகத்தெரியுமே!” என்று கத்தினான். ”கமான் அப்பா போங்க.. கமான் கமான்..” என்று விரட்டினான். அவன் சொன்னபிறகு வேறு என்ன?

அதன்பிறகு நடந்தவற்றை என் மனைவியே ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தாள். பழைய ராஜனாக போய் சட்டம் பேசினேன். மருத்துவம் பார்க்கவைத்தேன். நண்பனின் மகள் கண்விழித்தாள்.

அதன் பிறகு எப்போதும் காலையில் மகன் சாமிநாதன் என் தோளில் அமர்ந்துகொண்டுவிடுகிறான். அவனைச் சுமந்தபடியே எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்கிறேன், இதோ இப்போது கூட அவன் சொல்லித்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.

இதோ பாருங்கள் நாம் பேசுவதையே எப்படி கவனித்துக்கொண்டிருக்கிறான் என்று..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *