சாக்கலேட் மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 8,523 
 

‘சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்’

வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.’சொக்கலேட் மாமா’ வயது வந்தவர். அவர்இறந்தது ஒன்றும் பெரிய விடயமில்லைதான் ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சொன்னபோது,பார்வதி என்ற இளம்பெண் என் நினைவில் வந்து போனதை என்னால்த் தடுக்க முடியவில்லை.

சாக்கலேட் மாமாவின் பெயர் சண்முகநாதன்.ஆனால் கொழும்பில் எங்களுக்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த குழந்தைகளுக்கு அவர் எப்போதும் சொக்கலேட் மாமாதான்.

பல வருடங்களுக்கு முன் நாங்கள் கொழும்பில் வாழ்ந்தபோது எங்கள் வீட்டுக்கு முன்னிருந்த வீட்டுக்காரர் மகேசன் மாஸ்டரின் விருந்தாளிதான்; சண்முகநாதன்.

அவருக்கு ‘சாக்கலேட் மாமா’ என்ற பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது.

‘இந்த மனிசன் இஞ்ச வந்து ஓசியில விருந்த சாப்பிட்டுப்போகுது, இந்தச் சின்னப் பிசாசுகள் சாக்கலேட் மாமா என்டு செல்லம் பண்ணுதுகள். அந்த ஆள் வந்து சாப்பிடுறது மட்டுமல்ல, திரும்பிப் போகேக்க பொரியலோட சாப்பாடு கட்டிக் குடுக்கச் சொல்லி இவர் சொல்கிறார். அந்த சண்முகநாதன் மனிசன், புட்டும் பொரியலும், தலைக்குத் தேய்ச்சுக் குளிக்கத் தேசிக்காயையும் என்ர வீட்டில இருந்து கொண்டு போகுது.’

வீட்டுக்கார் மகேசன் மாஸ்டரின் மனைவி சண்முகநாதனைப்பற்றி இப்படித் திட்டிக்கொள்வாள்.

சண்முகநாதன் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாக்கலேட் பெட்டியுடன் அந்த வீட்டுக்கு வந்திருக்கலாம். அதை ஞாபகம் வைத்துக் கொண்ட குழந்தைகள் அவரைச் ‘சாக்கலேட் மாமா’ என்று அழைக்கத் தொடங்கியிருக்கலாம்.

மகேசன் மாஸ்டர் வீட்டு வேலைக்காரப் பெண்தான் பார்வதி.

அவள் அந்த வீட்டுக்கு எப்போது வந்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை.நாங்கள் ஒரு விடுமுறையில் யாழ்ப்பாணம் போய்த்திரும்பியபோது பக்கத்து வீட்டில் பார்வதி வந்து சேர்ந்திருந்தாள்.மகேசன் மாஸ்டரின் மூத்த மகள் காயத்திரியைவிட ஓரிரண்டு வயதுகள் கூட இருக்கலாம்.

மலை நாட்டில் வேலை செய்யும் திருமதி மகேசனின் சொந்தக்காரர் மூலம் பார்வதியைத் தங்கள் வேலைக்காரியாக ஒழுங்கு செய்ததாக பக்கத்து வீட்டிலிருந்து விளக்கம் கிடைத்தது.

ஓரு ஏழைக் குழந்தையைத் தங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக்கும் படித்த வர்க்கத்தில் வந்த கோபம் எனது பாhவையிற் தெரிந்ததோ என்னவோ, ‘என்ன அப்படிப் பார்க்கிறியள்,ஓம்,அவள் ஒரு குழந்தைதான்.ஆனாலும் இஞ்ச நான் அப்பிடி என்ன பெரிய வேலையையா வாங்கி முடிக்கிறன்? ஏதோ ஒரு கையுதவிக்கு இருந்தால் நல்லது என்டுதான் அவள வேலைக்கு வச்சிருக்கம்,நாங்க வச்சிருக்காட்டா அதுகள் தேயிலைத் தோட்டத்தில பட்டினியாக் கிடக்குங்கள’. திருமதி மகேசன் தனது பெருந்தன்மையை எனக்கு விளக்கினார்.

அவர்களின் பக்கத்து வீட்டுக்கு நாங்கள் குடி வந்தபோது அங்கு ஒரு வயது போன சிங்கள மூதாட்டி வேலைக்காரியாகவிருந்தாள். ‘பொடி நோனா’ (சின்னம்மா) என்று பெயர். சமயல் தொடக்கம், வெள்ளவத்தைக்கு மார்க்கட்டுக்குப் போவது,வீடடைச் சுத்திகரிப்பது லாண்டரிக்கு உடுப்புகள் கொண்டு போவது,அவற்றை அயர்ன் பண்ணுவது என்று ஓயாமல் ஏதோ செய்து கொண்டிருப்பாள்.

நான் காலையில் வேலைக்குப் போகும்போது,’ஆயுபோவன் நோனா’ (வணக்கம் அம்மா) என்று புன்முறவலுடன் சொல்வாள். அரச உத்தியோகத்தர்கள் சிங்களம் கட்டாயம் படிக்கவேண்டிய காலமது. நான் சிங்கள ஆசிரியரிடம் படிக்கும் சிலவற்றை அவளிடம் பேசிப் பார்ப்பேன்.

‘கோமத பொடி நோனா (எப்படி பொடி நோனா)’ என்று நான் கேட்டால் ‘ஹொந்தாய் நோனா (நல்லது அம்மா) என்று தனது அத்தனை பற்களும் ( அங்குமிங்குமாக ஏதோ ஒன்றிரண்டு பற்கள்) தெரியப் புன்முறுவல் தருவாள்.

அவளின் ஆதி மூல குடும்ப விபரங்கள் கேட்குமளவுக்கு எனக்குச் சிங்களம் அப்போது தெரியாது. அவள் விடுமுறை என்று தனது வீட்டுக்குப் போனதும் எனக்குத் தெரியாது. சில காலத்தின்பின் அவள் நோய்வாய்ப் பட்டிருப்பது நலியும் அவள் தோற்றத்திலிருந்து புரிந்தது. ஆனாலும் ஏதோ தன்னால் முடிந்ததை அந்தக் குடும்பத்துக்குச்; செய்து கொண்டிருந்தாள்.

ஓரு நாள் அவள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப் பட்டாள், அதன்பின் அவள் திரும்பி வரவில்லை. அவளுக்கு வயதாகி வட்டது வாழ்க்கை முடிந்து விட்டது

அந்த இடம் பார்வதிக்குக ;கொடுக்கப் பட்டது. இரு வேலைக்காரிகளுக்கும் வயதுகள் வித்தியாசம், இன வித்தியாசம். மொழி வித்தியாசம் இறந்துபோன கிpழவி சிங்கள மாது, வந்து சேர்ந்த இளையவள் மலையக ஏழ்மை,இருவருக்கும் வர்க்க பேதம் கிடையாது. அவர்கள் செய்யும் வேலையிலும் பேதமில்லை. அவர்களின் உழைப்பு மாஸ்டரின் குடும்பத்திற்குத்தேவை.

பார்வதி ஒரு அழகிய குறிஞ்சி மலர். பன்னிரண்டு வயதாகவிருக்கலாம்.இன்னும் மொட்டு மலராத பொட்டழகு, தெருவால்ப் போகும் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடியது.

அவளின் கள்ளம் கபடமற்ற அழகிய விழிகளின் வழியாய் அவளின் இருதயத்தையே அளவிடலாம் போன்ற தூய்மையான பார்வை. ஆனாலும் அதில் ஒரு இனம் தெரியாத சோகம். கிட்டத் தட்ட அவளுடைய வயதுடைய,அந்த வீட்டுக்காரக் குழந்தைகள் ஓடிவிளையாடும்போது அந்த சோகம் ஆழமாகவிருக்கும்.

மிக மிக அருமையான சிலவேளைகளில் அவர்களுடன் அவளும் ஓடிப் பிடித்து விளையாடும்போது அந்த சோகம் சீமைக்குப் போய்விடும். அவள் கண்களில் குழந்தைத்தனம் பளிச்சிடும்.உண்மையான பார்வதியின் ஆத்மா தனது குழந்தைத்தனத்தின் சுயமையைப் பிரதி பலிக்கும். சோகத்துக்குச் சொந்தமற்ற முகமாய் மலர்ச்சி துள்ளி விளையாடும்.

மகேசன் வீட்டுக் குழந்தைகளுடன் அவளும் வளர்ந்தாள். ஆனால் அவளின் வளர்ச்சியை அந்த வீட்டில் யாரும் பெரிது படுத்தவில்லை,’சாக்கலேட் மாமாவைத்சூ தவிர.

பார்வதி ஒரு குமரியாக வளர்கிறாள் என்ற எனது சாடைமாடையான பேச்சுக்களை மாஸ்டரின் மனைவி அதிகம் விரும்பவில்லை.

பருவமாற்றக் காலத்தில் ஒரு இளம் பெண்ணின் உடம்பிலும் உள்ளத்திலும் நடக்கும் சிக்கலான மாற்றங்களை பார்வதியும் முகம் கொடுப்பாள் என்பதை யாரும் சட்டை செய்வதாயில்லை. அவள் ‘பெரிய பிள்ளையானதும்’ அவளின் வீட்டுக்குத் திருப்பியனுப்பிடுவதாக திருமதி மகேசன் எதோ ஒரு பேச்சிற் குறிப்பிட்டார்.

பார்வதி ‘பெரிய பிள்ளையாகி’ விட்டாளா என்பதே தெரியவில்லை. இன்னுமொரு வேலைக்காரியை எடுக்கும் வரை பார்வதியை அவர்கள் விடத் தயாரில்லை என்பது சாடையாகத் தெரிந்தது. அக்கால கட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெருவாரியான இலங்கைப் பெண்கள் மத்திய தரைக்கடல்களில் வேலை தேடிச் சென்றதால் இலங்கையில் மத்திய வர்க்கத்துக்கு வேலைக்காரிகள் கிடைப்பது அரிதாக இருந்தது.

மகேசனின் பெரிய மகள் ‘ பெரிய பிள்ளையாகியிருக்கு வேண்டும். புதுப் புது டிசைனில் உடுப்புக்கள் தைக்கப் பட்டன.அதைப் பார்த்துப் பெருமூச்சுவிடும் பார்வதியை ஏன் அவளின் முதலாளியம்மா பொருட் படுத்த வேண்டும?;.

‘சாக்கலேட் மாமா’ வழக்கம்போல் வார விடுமறைகளில் அவர்கள் வீட்டு விருந்தாளியாக வந்து கொண்டிருந்தார். அவரின் மனைவியும் குழந்தைகளும் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். அவர் கொழும்பில் ஒரு அனெக்ஸில் அறை எடுத்துக்கொண்டு சிக்கனமாக வாழ்ந்து கொண்டு ஊருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருப்பதாக அவரைப் பற்றிக் குறை கூறும் நேரங்களில் திருமதி மகேசன் முணுமுணுப்பார்.

அவருக்குக் கிட்டத்தட்ட மகேசன் மாஸ்டரின் வயது. ஓரே கொலிஜ்ஜில் யாழ்ப்பாண்த்தில் படித்தவர்கள். ஓரு விதத்தில் தூரத்துச் சொந்தமுமாகும்;. இருவரும் ஓரே கால கட்டத்தில் திருமணமானவர்கள். சாக்கலேட் மாமாவின் மனைவி யாழ்ப்பாண்த்தில் ரீச்சராக இருக்கிறாள்.அவர் கொழும்பில் ஒரு வங்கியிற் கிளார்க்காக வேலை செய்கிறார்.

கொழும்பு வாழ்க்கைச் செலவுடன் மகேசன் மாஸ்டர் குடும்பம் திணறுப்போது சொக்கலேட் மாமாவுக்கு வாரவிடுமுறையில் விருந்து போடுவதை திருமதி மகேசன் அவ்வளவாக விரும்பவில்லை என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. ஆனாலும் கணவருக்காகப் பொறுத்துக் கொள்கிறாள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது.

‘ ஒவ்வொரு கிழமையும் வந்து திரும்பிப் போகேக்க,பார்சலில் சாப்பாடு மட்டுமல்ல,தலைக்குத் தேச்சுக் குளிக்க தேசிக்காயும் கொண்டு போகுது’ எரிச்சல் தாங்காமல் திருமதி திருப்பித் திருப்பி என்னிடம் முறையிட்டாள்.

அவரின் வருகை அவளுக்குப் பிடிக்கவில்லை,அதற்குக் காரணம் பார்சல்ச் சாப்பாடும் தேசிக்காயும் மட்டும் காரணமல்ல என்று எனக்குத் தெரியும் மனைவியில்லாமல் தனியான வாழும் மனிதனுக்குப் வயிற்றுக்குப் பார்சல் சாப்பாடும் அவரின தலையழுக்கை நீக்கத் தேசிக்காய்களும் மட்டும் திருப்தி தருமா?

அவரின் சிக்கன வாழ்க்கை,மகேசன் வீட்டுத் தேசிக்காய்களுடன் மட்டும் பிணைந்து இருக்கவில்லை என்பதை திருமதி மகேசன் உணர்ந்தாளோ அல்லது உணர முயன்றாளோ என்று எனக்குத் தெரியாது. அவர் ‘வேறு எதையோ’ அந்த வீட்டிலிருந்து கொண்டு போக மாட்டார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

மனைவி பக்கத்தில் இல்லா விட்டால்,பாலியலில் உறவில் வறுமை கண்ட சில விரக்தியான ஆண்கள் பக்கத்தில் போகிறவளுடனும் கற்பனையிற் கலவி செய்யத் தயங்க மாட்டார்கள்; என்ற சைக்கோலஜியைத் திருமதி மகேசனுக்குச் சொல்லும் தைரியம் எனக்கு அப்போதில்லை.

காலம் ஒடிக்கொண்டிருந்தது.பார்வதி வளர்ந்தாள் சாக்கலேட் மாமாவின் பார்வையும் வளர்ந்தது.

நான் அதைச் சொல்ல வெளிக்கிட்டு திருமதியுடன் தகராறு பட்டதுதான் மிச்சம்.

நாங்கள் அப்படித் தகராறு பட்ட சில வாரங்களில் பார்வதியின் தகப்பன் வந்திருந்தார்.

வறுமையான வாழ்க்கை நடத்தும் கிழவன் திருமதி மகேசனின் காலில் விழுந்து கெஞ்சினான்.

பார்வதியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு போய்த் தன்னுடன் வைத்திருந்து உணவும் உடையும் பாதுகாப்பும் கொடுக்க அவனால் முடியாதாம். அந்தக் கிழவன் பார்வதியைத் தன்னுpடன்; கூட்டிக் கொண்டு போகாமற் போய்விட்டான்

குரங்கு கையில் பூமாலையத் தானம் பண்ணும் ஏழ்மை!

அன்று இரவு மாஸ்டர் விட்டுக் குழந்தைகளுடன் நான் வெள்ளவத்தைக் கடற்கரைககுச் சென்றேன்.

மாஸ்டர் வீட்டுக கடைசிக்; குழந்தையைக் கூட்டிக்கொண்டு பார்வதியும் எங்களுடன் வந்திருந்தாள்.

கடற்கரை மணலிற் கால் புதைய நாங்கள் எல்லோரும் ஓடிவிளையாடினோம்.

‘அப்பாவுடன் போயிருக்கலாமே பார்வதி’ நான் மெல்லமாகப் பார்வதியிடம் சொன்னேன். நிலவு வெளிச்சம் அவள் கண்களில் பளிச்சிட்டுச் சிதைந்து பரிணமித்தது.

அவ்வளவு நேரமும் மலர்ந்திருந்த அவள் முகம் சட்டென்று கூம்பியது.

நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதா?

‘அப்பாவுக்கு உழைப்பு இல்லீங்க’ அவள் குரல் நடுங்கியதுபோல் அவள் வழிகளில் பளிச்சிட்ட நிலாவும் தத்தளித்தது.

‘கிழவன் பார்வதிக்கு ஒரு நல்ல பையனைப் பார்க்கிறானாம்,அது சரி வந்ததும் வந்து கூட்டிக்கொண்டு போகிறானாம்’ மாஸ்டரின் மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் பார்வதியின் முகத்தில் நாணத்தில் குளித்து புதுமையான கவர்ச்சி. மல்லிகை மலர் ஒன்று மழையில் நனைந்த குளிர்ச்சி;.

அவளை ஏறிட்டப் பார்த்தேன்,அவள் முகத்தில் ஒரு இனிமையான எதிர்காலத்தைக் கற்பனை செய்யம் புன்சிரிப்பு.

சில நாட்களின் பின் கொழும்பில் வெசாக் விழா அமளி துமளிப்பட்டது. நாங்கள் எல்லோரும் வெசாக் விழா பார்கக்த் திட்டம் போட்டிருந்தோம். பூரணைநிலவில் பவனியில்,அழகாக அலங்கரிக்கப் பட்ட கொழும்பு, கல்யாணத்திற்குத் தயாரான கன்னிப் பெண்போல் கண்ணுக்கு விருந்தளித்தது.

எங்களுடன் பார்வதி வரமுடியவில்லை. ‘ஓன்றிரண்டு நாட்களாகச் சுகமில்லமலிருக்கிறாள்,சரியாகச் சாப்பிடவுமில்ல’ மாஸ்டரின் மனைவி சொன்னாள்.

நாங்கள் காலி ரோட்டில் பஸ்சுக்கு நிறைய நேரம் காத்திருந்தோம்.

அசைய முடியாத நெருக்கத்துடன் மக்கள் வெசாக் விழாவுக்கு முட்டி மோதிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் மாஸ்டரின் குட்டியொன்று,’ அதோ சாக்கலேட் மாமா’ என்று கூவியது. சன நெருக்கத்தில் ‘எங்கோ சாக்கலேட் மாமா’ என்று புரிபடவில்லை. குழந்தை எதிர்த் திசையைக் காட்டியது.நாங்கள் நின்றிருந்த எதிர்த்திசை வீதியில் மாஸ்டரின் வீடிருக்கிறது.

வீpட்டில் பார்வதியைத் தவிர வேறு யாருமில்லை.அத்துடன் அன்றைக்கு வார விடுமறையுமில்லை. அந்த நேரம் அங்கே ஏன் போகிறார்?

ஏதோ ஒரு அருவருப்பான உணர்வு என்னை அரித்தது..

வெசாக் விழா பார்த்து விட்டு,நாங்கள் வீட்டுக்கு வர நடுச்சாமமாகிட்டது.

நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய் ஒரு சில நிமிடங்களில் மாஸ்டரின் மனைவியின் அவசர அழைப்பு மதிலால் பாய்ந்து வந்தது.அவள் குரலிற் தொனித்த பரபரப்பும் பயமும் ஏதோ அபாயத்தைக் காட்டியது.

‘பார்வதி ஏதோ மாதிரியிருக்கிறாள்’ மாஸ்டரின் மனைவியின் குரலிற் பதட்டம் பார்வதியின் கண்களில் சூனியம். அவளின் ஆத்மாவின் சக்தி அவளை விட்டு ஓடிவிட்டதான ஒரு வெறுமை அந்தப் பார்வையில்.

என்ன சொல்வது மாஸ்டரின் மனைவிக்கு?

அவள் வீட்டு மீன் பொரியலை,அன்னிய வீட்டுப் பூனைவந்து புசித்து விட்டுப் (புணர்ந்து விட்டு) போய்விட்டது என்பது தெரிந்தும் தெரியாமல் இந்த வீட்டுத் தலைவி நடிக்கிறாளா?

வெளியில் புனித போதிசத்துவரின் விழாவின் ஒலி காதுகளைச் செவிடாக்குகிறது. இந்த வீட்டில் பஞ்சமா பாதகன் ஒருத்தனின் கன்னி எடுப்பு அதர்மத்தை இவள் புரிய மாட்டாளா?

வெளியில் போதிசத்துவனின் புனித விழாவின் ஒலி,வீட்டில் தன்னையிழந்த ஏழ்மையின் வேதனை தாங்காத விம்மல்.

பார்வதி விம்மி விம்மி ஏதோ சொல்ல வெளிக் கிட்டாள். அவளின் வார்த்தைகள் சரியாக வெளிவரமாட்டெனெ;றது.

‘அவளுக்குக் கொஞ்ச நாட்களாகச் சரியான காய்ச்சலில் நினைவு தவறியிருக்கலாம்’ வீட்டுத்தலைவி தன்னை ஏமாற்றுகிறாளா அல்லது என்னை ஏமாற்றுகிறாளா,

ஓரு சில மாதங்களில் பார்வதியை அழைத்துப் போக வந்திருந்த தகப்பன் கன்னிமை களவாடப்பட்டுத் தாயாய் நிற்கும் தன் பதினான்கு வயது மகளைக் கண்டு பேயடித்தவன்போல் அலறத் தொடங்கி வட்டான்.

வெறித்த பார்வையுடன் தன்னைக் கண்டு ஒதுக்கிப் பதுங்கிய மகளைக் காறித் தப்பினான். அவனின் வேதனை அவளுக்குப் புரியாத அளவுக்கு அவள் மனம் பேதலித்திருக்கிறாள் என்ற உண்மையைக்கூட அந்த ஏழைத் தகப்பனாற் கிரகிக்க முடியவில்லை.

‘பண்பு கெட்டதுகளுக்குப் பசிக்குச் சோறும் பாதுகாப்புக்கு ஒரு இடமும் கொடுத்தால் இப்படி எங்களை அவமானப் படுத்துவதா?’ மாஸ்டரின் மனைவி வெடித்துச் சிதறினாள்.

யார் பண்பு கெட்டவர்கள்? பார்வதியின் நிலைக்கு யாரைக் குற்றம் சாட்டுகிறாள்? தெருவில் மரக்கறி விற்க வரும் கிழவன் அப்புகாமியையையா? அல்லது ‘மாலு மாலு’ என்று கூவிக் கொண்டு காலையில் மீன் கொண்டுவரும் நோஞ்சான் பியசேனாவையா குற்றம் சாட்டுகிறாள்?

ஓரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு யாரோ ஒரு சிங்கள் நாட்டுவைத்தியன் வந்தான். அதைத் தொடாந்து ஒன்றிரண்டு நாட்கள் பார்வதியின் வேதனையான முனகல் எங்களின் இருவீடுகளுக்குமிடையிலுள்ள மதிலைத் தாண்டி வந்து என் இருதயத்தைப் பிளந்தது.

இரண்டு மூன்று வாரங்களின் பின் அவளைக் கண்டபோது, அவளின் ‘அவமானச் சின்னம்’ அகற்றப் பட்டிருந்தது.

சோர்ந்து மெலிந்து தெரிந்தாள் வீட்டு வேலைகளை ஏனோ தானோ என்று செய்கிறாள்.

மனிதர்களுடன் பேசாமல் அந்த வீட்டு நாயுடன் பேசிக் கொள்கிறாள்.

‘நீ ஒரு நன்றி கெட்ட நாய் உண்ட வீடடுக்குத் தெண்டகம் செய்லாமா? உன்னை நல்லவன் என்டு நினைச்சா நீ இப்படிச் செய்யலாமா’ என்று சில வேளை உரத்த குரலிற் கத்துகிறாள். சில வேளைக் கண்டபாட்டுக்கு அந்த நாயை அடிக்கிறாள்.

‘அவளுக்கு மூளை சரியில்லை’ என்று வீட்டுக்காரி சொன்னாள். சிலநாட்களின் பின் அவர்கள் வீட்டு நாய் இறந்து கிடந்தது. பார்வதி நாயைக் கொலை செய்து விட்டதாகச் சொல்லப் பட்டது.

சாக்கலேட் மாமா பக்கத்து வீட்டுக்கு வழக்கம்போல் வந்து போய்க் கொண்டிருந்தார். விருந்து தொடர்ந்தது.

அவர் தலையின் அழுக்குத் தீர்க்கத் தேசிக்காய்களும் போய்க் கொண்டிருந்தன.

பார்வதிக்குச் ‘சுகமில்லாமல்’ சில மாதங்கள் தனக்குத் தானே பேசிக் கொண்டும்; சிரித்தும்கொண்டும் திரிந்தாள் அவளின் தகப்பனை வரச் சொல்லி எத்தனையோதரம் கடிதம் எழுதியும் அவன் பார்வதியைக் கூட்டிக் கொண்டுபோக வரவில்லை என்ற மாஸ்டர் வீட்டிலிருந்து சொல்லப் பட்டது.

அந்த வருடக் கடைசியில், நாங்கள் லண்டனுக்கு வரும் பிரயாண அலுவல்களில் பிசியாக இருந்தோம்.

‘பார்வதியைக் காணவில்லை’ மாஸ்டரின் மனைவி ஒருநாள் பதட்டத்துடன் சொன்னாள்.

சில நாட்களின் பார்வதியின் பிணம் வெள்ளவத்தைக் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்தது. ‘ மன நலமற்ற ஒரு மலையக இளம் பெண் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்’ என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.

அவளின் பிணத்தைக் கொண்டுபோகக்கூட அவளின் தகப்பன் வரவில்லை.

பார்வதி மனநலமற்றவள், தற்கொலை செய்யுமளவுக்கு அவளுக்குச் சிந்திக்க முடியுமா?

நான் பல தடவைகளில் அந்தக் கேள்வியை எனக்குள் கேட்டிருக்கிறேன்.

சில நாட்களில் இன்னுமொரு வேலைக்காரி மாஸ்டர் வீட்டுக்கு வந்தாள்.

நாங்கள் பலபேர் லண்டனுக்கு வந்து விட்டோம்.

மாஸ்டரின் குழந்தைகள், என்னுடன் வேலை செய்த சினேகிதி பிலோமினா என்று பலர் லண்டனுக்கு வந்து விட்டோம்.

சில வருடங்களின் பின் ‘சாக்கலேட் மாமாவின் குடும்பமும் வந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். அவருடன் பெரும்பாலும் ஒன்றாக வாழாத அவர் மனைவி, அவருடன் ஒன்றாக லண்டனுக்கு வந்து சில மாதங்களில் இறந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். மூத்த மகளுக்குத் திருமணமான சில வருடங்களில் விதவையாகி விட்டாளாம். ஐம்பது வயதுக்கு மேலாகிறது. இன்னொரு திருமணம் வரவில்லையாம்.

இரண்டாவது மகள்,தகப்பனுக்குப் பிடிக்காத ஒரு ஆங்கிலேயனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கிறாளாம்.

மூத்த மகன் டாக்டராம், கனடாவுக்குப் போய்விட்டானாம்..

வாழ்க்கையின் பெரும்பகுதியைக் குடும்பத்துடன் வாழாமற் கழித்த ‘சாக்கலேட் மாமா’ தனது கடைசி காலத்தையும் தனியே ஒரு அறையிற் கழித்தாராம்.

அவர் இறந்து விட்ட விதத்தைக் கேள்விப் பட்டபோது பார்வதி ஞாபகம் வந்தாள். பார்வதி, ‘சுகமில்லாமலிருந்தபோது’ நாயுடன் (யாரை நினைத்துக் கொண்டு?) பேசித் திட்டும்போது அவள் போட்ட சாபம் ஞாபகம் வருகிறது.

‘ நீ ஒரு மனிசனா நாயே, சாப்பாடு போட்ட கையைக் கடித்து விட்டாயே. வெறி பிடித்த நாயே நீ ஒரு வெறி பிடித்த முண்டம். புழுவுக்கச் சமம் நீ புழுத்துத்தான் சாவாய்’

பார்வதி நாய்க்குத்தான் சாபம் போட்டாளா?

சாக்கலேட் மாமா தனியறையில் வாழ்ந்ததாகவும், அவர் இறந்து பல நாளாகியும் ஒருத்தருக்கும் தெரியாதாம்.ஏதோ நாற்றம் வருகிறது என்ற பக்கத்து வீட்டார் போலிசுக்குத் தெரிவித்து அவர்கள் வந்தபோது, புழு நெளியும் சாக்கலேட் மாமாவின் அழுகிய உடலைக்கண்டார்களாம்.

இது பார்வதியின் சாபமா?

(‘மனிதன்’ இதழில் 1992ல் வெளியான சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *