கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 13,252 
 

“”ஏட்டி ஏ கும்பிகுளத்தா, ஒம்மனசுல நீ என்னதாம்டி நெனைச்சுக்கிட்டிருக்கே? ஐநூறு ரூவாயக் கடன் வாங்கிட்டு வந்து எம்புட்டு நாளாச்சு, அயத்துப் போய்ட்டியோ? கடனை வாங்கத்தான் கை நீளுமோ? திரும்பிக் குடுக்கணும்ன்னா நீளாதோ? எடுடி ரூவாய” என்று அதட்டியபடி வந்து நின்றாள் லெட்சுமிப் பாட்டி.

“”எதுக்கு இம்புட்டுச் சத்தம் போடுதிய? கடன் வாங்கின ஓர்மை இல்லாம ஓடியா போய்டப்போறேன்? தாறேன் பாட்டி, எல்லாம் தாறேன்” என்று நயந்த குரலில் சொன்னாள் கும்பிகுளம் ஆவுடை.

சாகவில்லை

நிறையப் பேர் அவளை கும்பிகுளத்தாள் என்று, அவளின் பிறந்த ஊரின் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். சிலருக்கு அவளின் இயற்பெயரே தெரியாது. கும்பிகுளத்தாள் என்றுதான் அடையாளப்படுத்துவார்கள்.

“”நீ ஒண்ணும் ஓடிப் போயிறமாட்டே. ஆனா, எனக்கில்ல அடிவயித்துல பசி. அவசரமாத் தேவைப்படுது இவளே!”

“”கொஞ்சம் பொறுத்துக்க பாட்டி, தந்துர்றேன்”.

“”நீ வாய் வலிக்காமச் சொல்த, சீண்ட்ரப்படுறது நானில்ல, என்னவோ ஒம்பேரன் பம்பாயில போய்ச் சம்பாரிச்சு அள்ளி எடுத்துட்டு வருவான்னு சொல்லில்ல வாங்கிட்டு வந்தே. இப்பதான் ஒம்பேரன் வந்திருக்காம்லா, பொட்டணம் கட்டிக் கொணாந்திருப்பாம்ல்லா, அதுல பிரிச்சு எடுத்துத் தர வேண்டியதானே..”

“”பாட்டீ…..”

“”இந்தக் கொஞ்சல் குழைவெல்லாம் எங்கிட்ட வேணாம். எனக்குப் பணம்தான் வேணும், எடு” என்றவளின் குரல் தாட்சண்ய மற்று ஒலித்தது.

“”பாட்டி, ஒரு சிக்கல் ஏற்பட்டுப் போச்சு. இவங்கூட வேலை பார்க்கிற ஒரு முடிவான சண்டை சல்லியம் போட்டு இவனை இம்சை பண்ணியிருக்கான். அவனோட தொந்தரவைத் தாங்க முடியாம, இந்த மாசம் சம்பளம்கூட வாங்காம ஓடி வந்திருக்கான்”.

“”ஏட்டி கும்பிகுளத்தா, இந்தக் கதையெல்லாம் எனக்கு வேணாம், உன்னோட நாடகத்தை எல்லாம் வேற யார் கிட்டயாவது போய் நடத்து. நான் காது குத்திப் பாம்படம் போட்டு ரொம்ப காலம் ஆயாச்சு. இப்ப வந்து காது குத்த வேணாம்”.

“”பொய் சொல்லல பாட்டி. சித்த பொறுத்துக்க. உன்னை அலைய விடாம, நானே கொணாந்து தந்துர்றேன்”.

“”ஒம் பேரப்பயல் இப்ப வெங்க மொட்டையா வந்து நின்னு ஒம்பாவத்தப் பத்துகான். நீ ஒழைச்சு, அவன் திங்க வேண்டியதிருக்கு, பொற கெப்படிடி என் கடனை அடைக்கப் போறே?”

“”சீக்கிரம் அடைச்சிருவேன் பாட்டி”

“”எனக்கு ஆயிரத்தெட்டு அவசரம் இருக்கு, நாளைக்கி நான் கரண்டுப் பில்லு கட்டணும், ரேசன்ல்ல எண்ணெய், பருப்பு வாங்கணும், இண்ணைக்கி வாங்காட்டா ரேசன் கடை முடிவான மொங்காம் போட்ருவான். அடுத்த வாரம், மூணாம் வாரம்னு சொல்லிச் சொல்லி அலைய விட்ருவான், பழம் போல வாங்கிட்டு வந்தயில்ல, அதைப் போலத் திருப்பியும் தந்துரு, இல்லை, நான் மனுசி மாதிரி பேசவும் மாட்டேன், மனுசி மாதிரி நடக்கவும் மாட்டேன். ஆமா…” என்று கத்திய லெட்சுமிப் பாட்டி, கண்டாங்கிப் புடவையை வேகமாய் ஓர் இறுக்கி இறுக்கிக் கட்டினாள்.

அந்த வேகத்தில் பர்வதம் போன்றிருந்த அவள் உடலும் ஓர் ஆட்டமும் ஆடியது.

காதுகளில் தொங்கிய பாம்படங்களும்,

தண்டட்டி முடிச்சுகளும் அவளின் இரு தோள்பட்டைகளின் மீதும் மோதி, இதமான ஓர் ஒலியை எழுப்பின.

“வீட்டுப் படியேறிக் கடனைக் கேட்கிறாப்ல ஆய்ப் போச்சே!’

பொதுவாக லெட்சுமிப் பாட்டி நல்லவள்தான், அவசரம், ஆத்திரம் என்றால் உதவுகிறாளே!

ஆனால், இப்படித் தயவு தாட்சண்யமே பாராமல் கண்டபடி கத்திவிடுவாள். இதுதான் மற்றவர்களுக்குப் பிடிக்காத அவளின் மோசமான குணம். என்ன செய்வது?

இயலாதவர்கள் சகித்துக்கொண்டுதான் போக வேண்டியதிருக்கிறது. சமய சஞ்சீவி போலக் கை கொடுத்து உதவுகிறவளாயிற்றே.

பேரன் மட்டும் இப்படி ஒரு பிரச்னையோடு வந்திராவிட்டால், ஏதோ கொஞ்சம் கொண்டுதான் வந்திருப்பான். லெட்சுமிப் பாட்டியின் கடனும் அடைபட்டிருக்கும். இப்படி அவளிடம் வசவை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.

போறாத வேளை என்று மனதுள் புலம்பிக் கொண்டாள்.

ஏதோ கொஞ்சம் புன்செய் பயிர் போட்டிருக்கிறாள்.

அதில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானத்தில் இழுபறி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அதிலே மிச்சம் வைத்தெல்லாம் கடன்களை அடைத்துவிட இயலாது.

ஆனாலும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பு இருக்கிறது. ஆனால், இப்போது முடியாது. வழி வகை இல்லை. எப்படியாவது முயற்சி பண்ணிக் கொடுக்கத்தான் போகிறாள்.

அதற்குள் பொறுமை இழந்து லெட்சுமிப் பாட்டி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஆவுடையால் நிமிரவும் இயலவில்லை, சமாதானம் கூறி அனுப்பவும் தெம்பு இல்லை.

பாட்டிதான் படபடவென்று பட்டாசாய்ப் பொரிந்து தள்ளுகிறாளே! எதிர்கொள்ள இயலவில்லை.

வேறு சமாதானம் பண்ணச் சிந்தனையும் ஓடவில்லை.

பரிதாபமான முகத்துடன் லெட்சுமிப் பாட்டியையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“சரி கும்பி குளத்தா, பார்த்துப் பரிவிச்சுத்தா, நான் வாங்கிக்கிடுதேன், பேரன் பண்ணுனதுக்கு நீ என்ன பண்ணுவே? பொறுப்பில்லாத பயல்லா போல்ருக்கு. இல்லேன்னாச் சண்டை சல்லியம் போட்டுக்கிட்டு இப்பிடி வெறுங்கையோட வந்து நிற்பானா?’ என்று, தனக்கு ஆறுதலாக நான்கு வார்த்தை பேசுவாள் என்று எதிர்பார்த்தாள் ஆவுடை.

இல்லை. அப்படி எதுவும் கூறவில்லை. மாறாத கோபத்துடன்தான் நின்றிருந்தாள்.

பேரனுக்காகத்தான் கடனே வாங்கினாள்.

ஊரில் எல்லோரும் புதிய புதிய துணிகளை அணிந்துகொண்டு அம்மன் கோயில் கொடையைப் பார்க்கப் போகிறபோது, தனது பேரன் மட்டும் பழந்துணியோடு போவதா என்கிற ஆதங்கத்தினால்தான், கொடை வரி கொடுக்கக் கடன் வாங்கியபோது அவனுக்குத் துணிமணி வாங்குவதற்காகவும் அதிகப்படியாய்க் கடனை வாங்கினாள்.

இப்போது திருப்பிக் கொடுக்க இயலாமல் திணறுகிறாள்.

என்ன சொல்லிச் சமாதானம் செய்து லெட்சுமிப் பாட்டியைத் திருப்பி அனுப்பலாம் என்கிற யோசனை! ஏற்கெனவே சொல்லியாயிற்று. மறுபடியும் அதையே கூறி அவளிடமிருந்து எரிச்சலை வாங்கப் பயமாக இருந்தது.

“”என்னடி ஒரே முட்டா யோசிச்சுக்கிட்டே நின்னுக்கிட்டிருக்கே! என்ன சொல்லி என்னை விரட்டலாம்னு யோசிக்கியா? அதெல்லாம் நான் போக மாட்டனாக்கும். பணத்தை எண்ணி வை. எடுத்துட்டு போயிடுறேன். குடுத்த கடனை வசூல் பண்ணாம இந்த லெட்சுமி இடத்தைக் காலி பண்ண மாட்டா. ஆமாம்” என்று அழுத்திச் சொன்னாள் லெட்சுமிப் பாட்டி.

பரிதாபப் பார்வையுடன் நின்றாள் ஆவுடை.

“இவ என்ன இப்படிக் குறச் சாதனை பண்றா! சொல்கதக் கேக்கமாட்டா போலுக்கே. இப்ப என்ன செய்யப் போறேன்? இந்த ஊர்லயே கடன் குடுத்து வாங்குற மனுசி இவ ஒருத்திதான். வேற யார் தரப் போறாங்க? என்று குழம்பியபடியே நின்றாள் ஆவுடை.

அப்போது தெருவிலே திடீரென்று ஆரவாரம், பரபரப்பாய் ஓடுவதும், கூடி நின்று பேசுவதுமான ஓர் அசாதாரணமான சூழ்நிலை.

இவர்களின் கவனம் தெருவிற்குப் போயிற்று. இருவருமே பரபரப்போடு வாசற்பக்கமாய் விரைந்து வந்து நின்றனர்.

அப்போது டீக்கடையில் வேலை பார்க்கும் சுயம்புலிங்கம் இவர்களை நோக்கி ஓடோடி வந்தான். அவனைத் தொடர்ந்து சிறு கூட்டமே பின்னால் தொடர்ந்து வந்தது.

“”ஆவுடை அத்தே.. ஆவுடை அத்தே! ஓங்குடி முழுகிப் போச்சுத்தே! என்று அழுது, அரற்றிக் கொண்டே வந்தான் சுயம்புலிங்கம்.

தொடர்ந்து வருபவர்களின் முகங்களும் இயல்பாக இல்லை. சோகம் அப்பிக் கிடந்தது.

“”ஏல… என்னல சொல்த? என் குடி ஏன்டா முழுகணும்? சொல்றதப் புரியாப்ல சொல்லுல” என்றபடி பதறிக்கொண்டே அவனை நோக்கி ஓடினாள் ஆவுடை.

தொடர்ந்து போனாள் லெட்சுமிப் பாட்டியும்.

“”ஓம் பேரனை லாரிக்காரன் அடிச்சுப் போட்டுட்டுப் போய்ட்டான் அத்தே. பஜார்ல ஒரே கூட்டமாக் கெடக்கு. அவன் மூச்சுப் பேச்சில்லாமக் கெடக்கான். மண்டை ஒடைஞ்சு ரத்தம் வந்திருக்கு” என்று வேதனையோடு சொன்னான் சுயம்புலிங்கம்.

“”ஐயோ, எம் பேரனுக்கு என்ன ஆச்சு? எந்தப் படுபாவி அடிச்சுப் போட்டுட்டுப் போனான்? ஐயய்யோ… நான் என்ன பண்ணப் போறேன்?” என்று அழுது புலம்பிக்கொண்டே பஜாரை நோக்கி ஓடலானாள் ஆவுடை.

கூட்டமும் பின்னால் ஓடலானது.

ஓட இயலாத லெட்சுமிப் பாட்டி, மிகவும் சிரமப்பட்டு அவர்களின் பின்னே விரையலானாள்.

குருதிச் சேற்றில் கிடந்தான் ஐயப்பன்.

எல்லாரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, அவனுக்கு முதலுதவி செய்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக முன் வரவில்லை.

கையில் காசில்லாதவன் என்றால், ஒவ்வொருவரும் ஒதுங்கத்தான் செய்வார்கள். வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று, பின்னாடி பின்னாடியேதான் ஒதுங்குவார்கள்.

“”ஐயோ. ஐயப்பா! என்ன செய்யப் போறம்ல நான். ஆயரக்கணக்குல செலவு பண்ணி ஒன்னைக் காப்பாத்த முடியாத வெங்க மொட்டையாப் போனேனே! ஏ… அய்யா! ஏ… ராசா…! ஏ… அய்யப்பா!” என்று உயிர் உருகும் குரலில் கேவிக்கொண்டே இரு கைகளாலும் மார்பில் அடித்து அழுதாள் ஆவுடை.

பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் எவரும் அவளைத் தேற்றவோ, உதவி செய்யவோ முன் வரவே இல்லை.

முன்னால் நின்று செய்தால் கையைக் கடிக்குமே என்று பயந்து ஒதுங்கினார்கள்.

“”எப்பா, கவருமெண்டு ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டு போங்கப்பா. கெழவியாலே செலவழிக்க ஏலாது” என்றான் ஒருவன்.

“”அங்கு பார்க்கவும் மாட்டாங்க, மொதல்ல அங்க கொண்டுட்டு போகணும்ன்னாக் காருக்கு எங்கே போறது?”

“”ஆட்டோவுலே போனாப் பாதி வழியே சோலி முடிஞ்சு போனாலும் போயிரும்”.

“”எப்பா. ரத்தம் ரொம்பப் போயிருச்சுப்பா, ஒடனே போனாத்தான் பொழச்சாலும் பொழைப்பான்”.

இப்படி ஒவ்வொருவரும் அபிப்ராயங்களை உதிர்த்தார்களே தவிர ஐயப்பனை ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்க்க, உருப்படியான காரியம் எதையும் பண்ணவே இல்லே.

ஆவுடையோ கதறிக் கதறி அழுகிறாள்.

அப்போது, திணறித் திணறி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த லெட்சுமிப் பாட்டி, ஐயப்பன் கிடக்கும் கோலத்தைப் பார்த்துப் பதறிப் போய் விட்டாள்.

“”அட பாவி மொட்டப்பயலே, பார்த்து ரோட்டுல வந்தா என்ன. இப்படி நாசக்காடு பண்ணிட்டு ஓடிருக்கானே. சும்மா வேடிக்கை பார்த்துட்டு நிற்காதீங்க. ஒரு காரை அமர்த்துங்க. பயலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டு போலாம்” என்றாள் லெட்சுமிப் பாட்டி.

“”பாட்டி, காருக்கும் ஆயிரம் ஆயிரமாக் கேப்பான். ஆஸ்பத்திரிக்கும் ஆயிரம் ஆயிரமாக் கேப்பானே! ஆவுடையத்தை பொட்டலம் போட்டா வச்சிருக்கா அவுத்துக் குடுக்க” என்றான் சுயம்பு லிங்கம்.

“”மனுச உசிரு சாகக் கெடக்குது. இவன் பணக் கணக்குப் பார்க்கான். ஆயிரம் இல்லலே. லட்சக் கணக்குல ஆனாலும் இந்த லெட்சுமி குடுப்பா. கூப்பிடுல கார்க்காரனை..” என்று அதிகாரம் பறக்கும் குரலில் கூறினாள் லெட்சுமிப் பாட்டி.

சற்று முன்பு, வாங்கிய ஐநூறு ரூபாயைத் தந்தால்தான் போவேன் என்று மல்லுக்கு நின்ற அதே லெட்சுமி பாட்டிதான் இப்போது ஆயிரம் ஆயிரமாய்ச் செலவு பண்ணத் தயார் என்கிறாள்.

மனிதம் சாகவில்லை! உயிர்ப்புடன்தான் இருக்கிறது.

அதோ ஐயப்பனோடு ஆவுடையும், லெட்சுமியும் கூடக் காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். எலும்பு முறிவு ஆஸ்பத்திரியை நோக்கி.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *