கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,100 
 

ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும் எளிமையாக இருப்பாள். நெற்றியில் கருப்பு சாந்து இட்டு, அதன் கீழ் நகமளவு விபூதி இட்டிருப்பாள்.
குளித்து விட்டு, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும் சவுமியாவிடம் இருந்து, நறுமணம் ஒன்று பரவியதை, அவள் அம்மா அம்புஜம் கவனித்தாள். சென்ட் அடித்துக் கொள்ளும் பழக்கமுள்ளவள் தான் சவும்யா; அதெல்லாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை.
இப்போது, திடீரென்று அவளிடமிருந்து மணம் வீசுவது ஆச்சரியமளித்தது. அதுவும் அந்த சென்டின் மணம், மனோரஞ்சிதம் பூ வாசனை போலிருந்தது. மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருப்பவர்கள் தான், இத்தகைய வாசனை திரவியத்தை, தங்கள் உடையின் மீது தெளித்துக் கொண்டிருப்பர்.
சலனம்“அப்படி என்றால்… சவுமியாவின் மனதில் இப்போது மகிழ்ச்சி குடி கொண்டிருக்கிறதா?’ யோசித்தாள் அம்புஜம்.
அவள் அணிந்து கொண்டிருந்த உடையின் நேர்த்தியும், வண்ணமும் இன்று முற்றிலும் மாறிப் போய் அழகாக இருப்பது, அம்புஜத்துக்கு ஆச்சரியத்தை அளித்தது; அதே நேரம், சந்தோஷத்தையும் அளித்தது.
சவுமியாவின் சந்தோஷங்களை எல்லாம், ஒட்டு மொத்தமாக, அவள் கணவன் ரவி தன்னோடு அள்ளிக் கொண்டு போய், வருடம் இரண்டாகப் போகிறது.
கல்யாணமாகி, கணவன் ரவியுடன், சவுமியா வாழ்ந்தது சொற்ப காலம் தான்; ஒரு வருஷத்துக்கும் குறைவாகத் தான் இருக்கும். அதற்குள், அவன், அவளிடம் காட்டிய அன்பும், பரிவும், பாசமும் வார்த்தைகளால் கூற முடியாது. அவளை சந்தோஷப்படுத்துவதைத் தவிர, தனக்கு வேறு வேலை எதுவுமில்லை என்று முடிவு செய்து விட்டவன் போல, அவன் நடந்து கொண்டது, விளக்கு அணையப் போகும் நேரத்தில், அதிக ஒளி வீசுவது போலத் தான் என்று, எவருக்கும் தெரியவில்லை.
“உங்கள் ஆபீசிலேயே எனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துடுங்களேன்…’ என்று சொல்வாள், சவுமியா.
“அதெப்படி முடியும்? ராஜினாமா செய்து, அந்த சீட்டில் உன்னை <உட்கார வைத்து விடுகிறேன்…’
“நீங்கள்… வேற ஆபீசிலா?’
“ஆமாம்!’
“நீங்கள் ஒரு ஆபீசிலும், நான் ஒரு ஆபிசிலும் இருப்பது, நீங்கள் ஆபிஸ் போவதும், அந்த சமயம் நான் வீட்டிலேயே இருப்பது என்று தானே?’ என்பாள் சவுமியா.
“அட! ஆமாம்’ என்ற ரவி, வேணுமானால் என் ஆபீஸ் பக்கமே, நீ வேலை செய்ய ஒரு இடம் பார்க்கட்டுமா? இடைவேளை போது சந்தித்துக் கொள்ளலாம்; ஒன்றாக சாப்பிட போகலாம்; மாலை ஆபிஸ் முடிந்ததும் சேர்ந்தே வீடு திரும்பலாம்…’ என்பான்.
குஷியும், குதூகலமுமாக அவர்கள் வாழ்க்கை, வானில் பறக்கும் ஜோடிக் குருவிகள் போல சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.
அவன் ஆசைப்பட்டது போல, சவுமியாவிற்கு, அவன் வேலை செய்யும் ஆபீசுக்கு அருகிலேயே, ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து விடும் போலிருந்தது. அனேகமாக கிடைத்து விட்ட மாதிரி தான்.
இந்த நல்ல சமாசாரத்தை அவளிடம் போனில் சொல்லாமல், நேரிலேயே சொல்ல வேண்டுமென்ற ஆசையில், ஸ்வீட் பாக்கெட், மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு, ரவி பைக்கில் சற்று வேகமாக வந்த போது, வண்டி ஒரு சிறிய பள்ளத்தில், “தடக்’ கென்று ஏறி இறங்கியது. இதை சற்றும் எதிர் பாராத ரவி, இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட, நடைபாதையிலிருந்த ஒரு கல்லில், அவன் தலை பயங்கரமாக மோதியதில்… ரவி, “போய்’விட்டான்.
ரவியின் ஆபீசில், அவன் வேலை செய்த சீட்டிலேயே, பணி அமர்த்தப்பட்டாள்.
“என் சீட்டையே உனக்கு தருகிறேன்…’ என்று ரவி சொன்னது, நிஜமாகி விட்டது. அவன் வேலை பார்த்த இடத்தை, “காலி’ செய்து, அவளுக்கு கொடுத்து விட்டான்; ஆனால், அவன் தானில்லை.
சந்தோஷமெல்லாம் பொங்கி வழிந்து வடிந்து விட, சவுமியா தனக்கு ஆறுதல் கொடுக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
ஆனால், அவள் அம்மா, அப்பாவுக்கும் எந்த ஆறுதலும் கிடைக்கவில்லை.
வளர்ந்து, பூத்து குலுங்க வேண்டிய ஒரு செடி, பட்டுப் போய் விட்ட கொடுமை, அவர்களை துயரமடையச் செய்தது. கணவனுடன், சவுமியா வாழ்ந்தது சில மாதங்கள் தான். அது, மறக்க முடியாததென்றாலும், “வாழ வேண்டிய காலம் சவுமியாவுக்கு நிறைய இருக்கிறதே… எப்படி வாழப் போகிறாள்? தங்கள் காலத்துக்குப் பிறகு அவள் நிலை என்னவாகும்?’ என்ற கேள்வி, அவர்கள் மனதை துளைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், அவள் மனம் மாறி,” நான் மறுமணம் செய்து கொள்கிறேன்…’ என்று சொல்ல மாட்டாளா என, ஏங்கிக் கொண்டிருந்தனர்.
அவள் மனப்புண் ஆறும் வரை காத்திருக்க வேண்டியதைத் தவிர, வேறு வழியில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது.
இன்று சவுமியாவிடம் ஏற்பட்டள்ள மாறுதல், தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், ஆடை அணிவதிலும் அவள் எடுத்துக் கொண்டுள்ள அக்கறை, அவள் மனம், ஒரு மாறுதலை எதிர் கொள்ளத் தயாராகிவிட்டது போலிருந்தது. அந்த மாறுதல், சவுமியாவின் மறுமணத்தை விட வேறு ஒன்றாக இருக்க முடியாது.
ஓடிச் சென்று, தன் கணவனிடம், நான்கைந்து நாட்களாக சவுமியாவிடம் தென்படத் தொடங்கிய மாற்றங்களை சொன்னாள்.
“”நெஜமாவா! எல்லாம் நல்லபடியா முடியணுமே பகவானே…” என்றார் சுந்தரவதனம்.
இருவரும், சவுமியாவின் அறையில் வேறு ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று பார்க்க நுழைந்தனர். அறையினுள் நுழைந்ததுமே, ஒரு மாற்றம்,”பளிச்’சென்று தெரிந்தது.
சுவற்றில் மாட்டியிருந்த ரவியின் பெரிய போட்டோ அகற்றப்பட்டு, தரையில், சுவரோமாக சார்த்தி வைக்கப்பட்டிருந்தது.
“”நீ சொன்னது நிஜம் தான். நம்ம சவுமியா மனசுல, ஒரு மாற்றம் உண்டாகியிருக்கு. புது வாழ்க்கையை, அவள் மனம் எதிர் கொள்ளத் தயாராகிட்டிருக்கிற மாதிரி தெரியறது…” என்றார், மகிழ்ச்சியாக.
ஆபீசுக்கு போகும் வழியில், பிரமாண்டமாய், “குப்தா’ ஸ்வீட் கடை இருந்தது. தூரவரும் போதே, இனிப்பு வகைகளின் நெய் மணம், நாசியை துளைக்கும். அந்த கடைக்குப் போய் அப்பா, அம்மாவுக்காகவாவது, ஏதாவது ஒரு ஸ்வீட் வாங்க வேண்டுமென்று, சவுமியாவுக்கு, இதுவரை, ஒரு முறை கூடத் தோன்றியதில்லை.
இன்று தோன்றியது. அப்பா, அம்மாவுக்கு ஸ்வீட் வாங்க வேண்டும் என்றல்ல; அரவிந்தனுக்கு வாங்க வேண்டுமென்று தோன்றிற்று. ஸ்வீட் கொடுத்தாலே, அவன், தன் மனதை புரிந்து கொண்டு விடுவானென்று நினைத்தாள் சவுமியா.
அரவிந்தன், ஆபீசில் அவளுடன் வேலை செய்பவன். வேறு ஒரு கிளையிலிருந்து, இங்கு மாற்றலாகி வந்தவன். கலகலப்பாக பேசுவான்; சிரிப்பான்; பழகுவான்; ஜோக் அடிப்பான்; வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
சவுமியா பெற்றதையும், இழந்ததையும் அவன் அறிந்திருந்தான். அதனால், அவளிடம் மரியாதையுடன் நடந்து கொள்வான். “மேடம்… மேடம்…’ என்று கூப்பிட்டு தான், சவுமியாவிடம் பேசுவான். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவையாவது அவளிடம் பேசுவான். அப்போது, அவள் நிலையைக் கண்டு, தான் இரக்கப்படுவது போல லேசாக காட்டிக் கொள்வான்.
சவுமியாவுக்கு வேலை பளு அதிகமாகும் போது, தானே வலியச் சென்று அதை வாங்கி, ஆபீஸ் நேரம் முடிந்த பிறகு செய்து முடித்து, மறுநாள் காலை சவுமியா டேபிளின் மீது தயாராக வைத்திருப்பான்.
“நீங்கள் நேற்று சாயங்காலம் ஆபீஸ் டைம் முடிந்ததும் வீட்டிற்கு போகவில்லையா?’ என்று சவுமியா கேட்டால், “எனக்கு வீடு என்று ஒன்று கிடையாது. பேச்சிலர் லைப்; மேன்ஷனில் ரூம். ஓட்டல் சாப்பாடு…’ என்று சொல்லி சிரிப்பான். அதன் மூலம், தான் திருமணமாகாதவன் என்பதை அவளுக்கு உணர்த்துவது போலிருக்கும், அவன் பேச்சும் சிரிப்பும்.
“எத்தனை நாளைக்கு இப்படியே ஓட்டல் சாப்பாடு, ரூம் வாழ்க்கை என்று இருக்க முடியும்?’ என்பாள் சவுமியா.
“நான் எதிர்பார்கிற பெண் கிடைக்கும் வரை…’
“ரொம்ப அழகாகவா?’
” இல்லை?’
“அன்பாக பழகுபவளாகவா?’
“இல்லை…’
“வேலைக்கு செல்கிறவளாகவா?’
“இல்லை…’
“பின்னே?’
“உங்கள மாதிரி ஒரு பெண் கிடைக்கிற வரை…’
“கல்யாணமாகி கணவன இழந்தா?’
“ஆமாம். இளம் வயதில், கணவனை இழந்து, எதிர்காலம் சூன்யமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு, வாழ்வு கொடுக்க வேண்டுமென்ற என் லட்சியத்துக்கேற்ப ஒரு பெண் கிடைக்கிற வரை…’
திடுக்கிட்டு அவன் கண்களை ஊடுருவதைப் போல பார்த்தாள் சவுமியா. “உண்மையிலேயே இவன் இப்படி ஒரு உயர்ந்த லட்சியக்காரனா அல்லது என்னை அடைவதற்காக தான் ஒரு லட்சியவாதி போல போடுகிற வேஷமா?’
அதற்குப் பிறகு, அவன் அவளை பார்க்கும் போதெல்லாம், “குட்மானிங்… பை…’ என்று சொல்வதோடு மட்டுமே இருந்தானே தவிர, அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்ற முயற்சியில் வலிய வந்து பேசுவதோ, அனாவசியமா சிரிப்பதோ எதுவுமே செய்யவில்லை. இதுவே, சவுமியாவின் மனதில், அரவிந்தனுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டது. தன் மனமும், அவனை கொஞ்சம் கொஞ்சமாக விரும்புவதை உணர்ந்தாள்.
ரவி இறக்கும் தருவாயில், “நான் போய் விட்டால், உன் வாழ்க்கை முடிந்து போய் விட்டதாக முடிவு எடுத்து விடாதே சவுமியா… இன்னும் நெடுங்காலம், நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியவள். உன்னை விரும்புகிறவரை, நீ…’ என்று, அவள் கைகளை பற்றிக் கொண்டு, வேண்டி இருக்கிறான்.
அப்பாவும், அம்மாவும் கூட, அவள் மறுமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று தான் விரும்புகின்றனர்; ஏன், எதிர்பார்க்கவே செய்கின்றனர்.
இப்படி எல்லாமே ஒன்று சேர்ந்து தான், அரவிந்தனை தன்னிடம் சேர்த்துள்ளதோ என்றெண்ணினாள் சவுமியா.
“குப்தா’ ஸ்வீட் கடையில், அரை கிலோ பாதாம் அல்வா வாங்கிக் கொண்டாள் சவுமியா. தான் தான் அவன் எதிர்பார்க்கிறப் பெண் என்ற இனிப்புச் செய்தியையும் சொல்லி, இனிப்பையும் கொடுக்க வேண்டும் என எண்ணினாள்.
ஆபீசினுள் நுழைந்தாள் சவுமியா. அவள் கண்கள் அரவிந்தனைத் தேடின. அவன் இன்னும் ஆபீஸ் வரவில்லை போலும்; அவன் இருக்கை காலியாக இருந்தது.
ஷோபனா வந்திருந்தாள். சவுமியாவை பார்த்ததும் புன்னகையை முகத்தில் தவழ விடுகிறவள் ஷோபனா. இன்று மனதுக்குள்ளேயே அழுவது போலிருந்தது.
அவள் இந்த அலுவலகம் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அதற்கு முன், அரவிந்த் வேலை பார்த்து வந்த கிளையில் தான், வேலை பார்த்து வந்தாள்.
“”என்ன ஷோபனா… என்னவோ மாதிரி இருக்கே; உடம்பு சரியில்லையா?” என்று, அவளருகில் சென்று கேட்டாள் சவுமியா.
“”உடம்பு நல்லாத்தானிருக்கு. மனசு தான்…” என்று இழுத்தாள் ஷோபனா.
“”மனசுக்கென்ன?”
“”இந்த அரவிந்த் இருக்கானே அரவிந்த்…”
“”ஆமாம்…”
“”பழசை எல்லாம் சொல்லி சொல்லி காட்டறான்…”
“”என்ன சொல்லிக் காட்டறான்?”
“”பழைய ஆபீஸ்லே, ஒருத்தருக்கு நான் ஒரு லவ் லெட்டர் எழுதினேன். அதை, இந்த அரவிந்தன் கிட்ட காட்டினேன். அதை ஞாபகம் வைச்சுண்டு, இந்த ஆபீசுக்கு வந்ததும், “இங்கே இன்னும் லவ் லெட்டர் எழுத ஆரம்பிக்கலையா? எழுத ஆள் கிடைக்கலியா? இல்ல… எழுதியும் பதில் வரலியா…’ அப்படி இப்படின்னு, என்னை பார்க்கிறப்போல்லாம் கேட்கிறான். பழசை எல்லாம் கிளறி, மத்தவங்க மனசை புண்படுத்தி, அவுங்களை அழ வைக்கிற அரவிந்தன் ஒரு சாடிஸ்ட்,” என்று சொல்லி, கண்களை துடைத்துக் கொண்டாள்.
“என்ன… அரவிந்தன் ஒருவர் வாழ்க்கையில் நடந்ததைக் கிண்டி, கிளறிப் பார்த்து, அவங்களை அழ வைச்சு பார்க்கிற ஒரு சாடிஸ்டா…’ ஸ்வீட் பாக்சை டேபிள் டிராயருக்குள் தள்ளி மூடினாள் சவுமியா.
“அரவிந்தனை மறுமணம் செய்து கொண்டால், அவன், “ஒருவனைக் கல்யாணம் செய்து, அவனுக்கு மனைவியாக வாழ்ந்தவள் தானே நீ… ஏற்கனவே தாம்பத்ய உறவில் ஈடுபட்டவள் தானே?’ என்றெல்லாம், கிண்டி , கிளறி பேச மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
“அவன், அப்படிப்பட்ட சாடிஸ்ட் தான் என்பதை ஷோபனா விஷயத்தில், இன்றும் காட்டி வருகிறானே… இவனை மறுமணம் செய்தால், விரைவிலேயே, நரகத்தின் கதவுகள் திறந்து விடும். இப்போது இருக்கிற மன நிம்மதியும் போய் விடும். வாழ்நாள் முழுவதும், துக்கமும், துயரமும், கண்ணீரும் தான் மிஞ்சும்…
“மாலை வீட்டிற்குச் சென்றதும், முதல் வேலையாக, காலையில் சுவற்றிலிருந்து கழற்றி கீழே வைத்த ரவியின் போட்டோவை, பழைய இடத்திலேயே மாட்ட வேண்டும்!’ தீர்மானம் செய்தாள் சவுமியா.

-ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *