கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 3,075 
 

(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…’

டெலிபோன் மணி ஒலிக்கிறது. ரிஸிவரை கையில் எடுத்தேன்… “ஹலோ…”

“ஹாஜியாரா கதைப்பது?” பெண் குரலொன்று கேட்கிறது…

“ஆமாம்…சொல்லுங்கோ…”

“நான் இப்பொழுது கூறுவது பரம இரகசியமானது…என்னால இதற்கு விடைகாண முடியாது…. பல முறை சிந்தித்தேன்…. யாரிடம் கூறி இதை நிவர்த்தி செய்வேன்…? நேரில் கேட்கவும் முடியாது…. வெட்கம்! சொந்த போனிலும் கதைக்க முடியாது… என் பெயரையோ…ஊரையோ கூற முடியாது… எத்தனையோ உலமாக்கள்…படித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நாட முடியாது…உங்களை நாடுவதென்றால் அதற்கும் காரணம் இருக்கிறது….உங்களைப் பற்றி பலர் கதைப்பதை நான் கேட்டுள்ளேன்…ஆழமான கடலில் அலை மோதுவதில்லை . எனக்கு விடை கூற நீங்கள்தான் சரியான ஆள்…. தயவு செய்து அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள்…”

“பீடிகை வேண்டாம்…நேராக விஷயத்துக்கு வாருங்கள்”

“ஹாஜியார்…நான் ஒரு பெண்…”

“தெரியும்…குரல் சொல்லுகிறது….”

“அதுவல்ல நான் கூறப்போவது…உடல், உள சம்பந்தமானது…”

“சங்கோஜப்படவேண்டாம்.. சொல்வதை விளங்க சொல்லுங்க…”

“ஹாஜியார் நான் கலியாணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாய்; என் கணவர் நல்லவர்…உடலில் எதுவித கோளாறும் இல்லை. ஆணழகர். என்னை உயிராக நேசிக்கிறார்…ஆனால்…அதாவது என் கணவர் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறார். அதில் எந்தக் குறையும் இல்லை; எல்லாம் முடிந்த பின் நிம்மதியாக தூங்கி விடுவார்; என்னால் தூங்க முடிவதில்லை! தூக்கம் வருவதில்லை…பாத்ரூம் சென்று முகத்தை கழுவி தண்ணீர் குடிக்கிறேன்….விடியும் வேளையிலும் எனக்கு அவர் தேவைப்படுகிறார்….என்ன செய்வேன்…? நான் எல்லா வசதிகளும் நிரம்பிய பெரிய இடத்துப் பெண்…சொந்த கார், வேன் வசதிகள் என்னிடம் உண்டு. பெரிய அரண்மனை போன்ற வீடு…கணவரும் என்னை விட பெரிய இடத்தைச் சேர்ந்தவர்…சொத்திலும் என்னை விட குறைந்தவரல்லர்; ஆனால் எனக்கேற்பட்டுள்ள விரகதாபம்…என்னைக் கொல்கிறது…எனக்கு பயமாக இருக்கிறது…அழகிய வாலிபர்களை, வாட்டசாட்டமான ஆண்களைக் கண்டால்….எப்படிச்சொல்வேன்…..?” அவள் நா தழுதழுப்பதை அறிய முடிகிறது…

“அழ வேண்டாம்…. மேற்கொண்டு கூறுங்கள்….” என்றேன்..

“ஹாஜியார், ஆண்களுக்கென்றால் ஒருவரல்ல இருவர் மூவர் என முடித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது….பெண்ணான நான் என் செய்வேன்…? பயமாக இருக்கிறது….நரகத்து விறகுக் கொள்ளி ஆவேனோ! எனக்கு இந்த விரகதாபத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு பெரிய நன்மைகள் செய்வான்…என்னை யார் என அறிய முயற்சிக்க வேண்டாம். நாளை அஸருக்கு பின் உங்களிடம் பேசுகிறேன்…” ரிஸீவரை வைக்கும் சப்தம் கேட்கிறது….

ஆனால் என் கையில், ரிஸீவர் கனக்கிறது…

“என்ன வாப்பா…ரிஸீவரை கையில் வைத்துக்கொண்டு யோசிக்கிறீர்கள்” என் மகன் என்னைத் தொட்டு கேட்கும் வரை நான் மரமாக நிற்பதை உணர்கின்றேன்…..”இல்லை…ஒன்றுமில்லை…” டெலிபோனில் ரிஸீவரை சரியாக வைக்கிறேன்.

என் நினைவலைகள் முகமறியாத அப்பெண்மணி கூறிய வார்த்தைகளில் சுழல்கிறது….வெட்கத்தை விட்டுக் கேட்கிறாள் என்றால்…அப்பெண் எவ்வளவு வேதனைப்படுகிறாளோ….இஸ்லாம் எல்லா அம்சங்களிலும் சம்பூர்ணமான மார்க்கம்….இதற்கும் விடையில்லாமல் இருக்காது… யா அல்லாஹ் உன் திருவிளையாடலில் இதுவும் ஒன்றா….உலகில் ஆயிரத்தில் ஒரு பெண் இப்படி இருப்பாள் என்பதை அறிவேன்…

“அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…”

மஃரியுடைய பாங்கொலி கேட்கிறது….வுளு செய்து கொண்டு பள்ளிவாசல் சென்றேன்….மஃரிபுடைய ஜமாஅத் முடிய கன்னத் ஸலாத்தையும் நிறைவேற்றிய நான் யா அல்லாஹ்…முகமறியா அப்பெண்ணுடைய குறையை நிவர்த்தி செய். இதற்குரிய விடையை எனக்குதா…’ என இறைஞ்சினேன்…. இஷாவுக்குப் பின்பும் அல்லாஹ்விடம் முறையிட்டேன்….. படுக்கையிலும் சாய்ந்து கொண்டு இதையே எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது…அண்ணல் எம் பெருமான் முகம்மது நபி (ஸல்) அவர்கள், உரிய வயது வந்தால் ஆணோ….. பெண்ணோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி, மேலும் திருமணம் செய்துகொள்ள வசதியற்றோர் நோன்பு பிடிக்கும் படியும் கூறியுள்ளவை நினைவுக்கு வந்தன. அந்த நினைவுடன் தூங்கிய நான் சுபஹுக்கு விழித்தேன்…

சுபஹ் தொழுதுவிட்டு வழமையாக ஒரு சில அத்தியாயங்களை மொழிபெயர்ப்புடன் விளக்கமாக ஓதுவேன்…அன்று சூரத்துன் நூர் அத்தியாயத்தை ஓதி பொருளை அவதானித்தேன்….அதில் முப்பத்து மூன்றாம் ஆயத்தின் தொடரில்…

“திருமணம் செய்ய சக்தியற்றோர் அல்லாஹ் தன் அருளைக் கொண்டு பொருளைக் கொடுக்கும் வரைக்கும் அவர்கள் (நோன்பு நோற்று) தங்களுடைய கற்பை காத்துக்கொள்ளவும் என அல்லாஹ் குறிப்பிடு கின்றான்….இந்த ஆயத்தின் தொடரை ஓதிய நான் அவைகளை குறித்துக் கொண்டேன்.

“ட்ரிங் ட்ரிங்….” டெலிபோன் மணி அலறியது. மம்

“ஹலோ ….”

“ஹாஜியார், நான்தான் பேசுகிறேன்…” பெண் குரல் கேட்கிறது…. “சொன்ன நேரத்தில் கதைக்கிறீர்கள்…..” என்றேன். “தேவை எனக்கு…நான் சொன்னவற்றை நினைவு கூர்ந்தீர்களா? ”

“பயப்படாதீர்கள்…பயபக்தி உள்ளோருக்கு படைத்தவன் உதவி புரிவான்.. நான் சொல்வது போல் நீங்கள் நடப்பீர்கள் தானே…?”

“இன்ஷா அல்லாஹ்…அல்லாஹ் சத்தியமாக நடப்பேன்…”

*சரி கேளுங்கள்…முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தை ஒருமைப்படுத்திக் கொள்ளுங்கள்….அல்லாஹ்வை ‘திக்ர்’ செய்யுங்கள்…தஹஜ்ஜுத் நேரத்தில் எழும்பி தொழுது அல்லாஹ்விடம் முறையிடுங்கள்…தொடர்ந்து நோன்பு வையுங்கள்…அத்துடன் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிருங்கள்…சூடான உணவு வகைகளை நாடாதீர்கள்…விசேடமாக முருங்கை, பலயாமீன், இறைச்சி வகைகளை சிறிது காலம் வரை நாடாதீர்கள்…உப்பை குறைத்து சாப்பிடுங்கள்….புளியாணம் செய்து உண்ணுங்கள்…மனதை சலனமடைய விடாமல் குர்ஆனை ஓதுங்கள்.. ஹதீஸ் கிதாபுகளை வாசியுங்கள்….தொடர்ந்து நான் சொன்னது போல் செய்து வாருங்கள்….”

பின்பு, நான் காலையில் ஓதிய குர்ஆன் வசனங்களை எடுத்துக் கூறினேன்…சூரத்துன்னிஸா…சூரத்துல் பகறா போன்ற அத்தியாயங்களை பொருள் உணர்ந்து ஓதச் சொன்னேன்…”இன்ஷா அல்லாஹ் பலன் கிடைக்கும்” என்றேன்.

“இன்ஷா அல்லாஹ் அப்படியே செய்கிறேன்” என்றாள். சில வாரங்களுக்குப் பிறகு… டெலிபோன் மணி அடித்தது, எடுத்தேன்.

“ஹாஜியார். நீங்கள் தானே கதைப்பது…?”

“ஆமாம்…. சொல்லுங்க…”

“முகமறியா உங்கள் சகோதரி கதைக்கிறேன்…”

“அடடா நீங்களா…? எப்படி சுகம்..?”

“நான் நல்ல சுகமாயுள்ளேன். என் பிரச்சினைகள் அல்லாஹ்வின் அருளால் தீர்ந்து விட்டன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இம்மையிலும், மறுமையிலும் நல்ல சுகத்தையும் நல்லருளையும் அல்லாஹுத்தஆலா கொடுக்கட்டும்…”

“மாஷா அல்லாஹ்….வேறு விஷயங்கள்….”

“ஒன்றுமில்லை ஹாஜியார்…முன்பை விட பாரம் குறைந்தவளாகி விட்டேன். என் வேலைகளுடன் என் கணவர், பிள்ளைகளின் வேலைகளையும் நானே செய்கின்றேன்..மனதில் நிம்மதி..எவ்வித சலனமும் இல்லை…” என்றாள்.

“அதிகமாக உடல் பருமனை குறைத்துக் கொள்ளாதீர்கள்…ஒரு செய்தி கூறுகிறேன், விளங்கிக் கொள்ளுங்கள்….நாற்பது நாளைக்கு தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டால் மாட்டுப்புத்தி வரும்…அதேபோல நாற்பது நாளைக்கு மாட்டிறைச்சி உண்ணாமல் இருந்தால் பலவீனம் வரும் என்று ஒரு கதை சொல்வார்கள்…அதனால் அளவோடு உண்ணுங்கள்…அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வான்….”

“சரிதான் ஹாஜியார்…ஜஸாக்கல்லாஹு ஹைரா”

“நன்றி…” ரிஸீவரை வைக்கிறேன். உடம்பெல்லாம் பொங்கிக் கொண்டிருந்த தணல், குளிர்வதை உணர்கின்றேன். “அல்ஹம்துலில்லாஹ்..” நிம்மதிப் பெருகூச்சு என் உள்ளத்திலிருந்து வெளியே வருகின்றது.

– நவமணி – 2007.03.25, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *