சரோஜாதேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 21,267 
 

மழைச் சாரல் வாசலை நனைத்துக் கொண்டிருந்தது. ரவியும் பிரணீதாவும் அலுவலகத்திற்கு கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. எட்டரை மணிக்கு சரோஜக்கா வந்துவிடுவார். அவர் வந்தவுடன் கிளம்பிவிடுவார்கள். இவர்களின் வீட்டுப் பக்கத்தில் குடிசைகள் இருக்கும் ஏரியாவில்தான் சரோஜக்காவும் குடியிருக்கிறார். ரவி திருமணம் முடிந்து பிரணீதாவுடன் இந்த வீட்டிற்கு வந்த புதிதிலிருந்து வீட்டு வேலை செய்வதற்காக சரோஜக்கா வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாத்திரங்கள் கழுவி வீடு சுத்தம் செய்துவிட்டு போய்விடுவார். அதற்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பிறகு பிரணீதா கர்ப்பமானவுடன் சமையல் பொறுப்பையும் சரோஜக்காவே எடுத்துக் கொண்டார். உப்புக்காரம் தூக்கலான அவரது சமையலுக்கு இரண்டு பேருமே அடிமையாகிக் கிடந்தார்கள்.

“தம்பி, இன்னைக்கு வரும் போது எலுமிச்சம் பழம் வாங்கியாந்துடுங்க. பாப்பாவுக்கு வாந்தி நிக்கறதேயில்லை” என்று ரவி அலுவலகம் கிளம்பும்போது சொல்லியனுப்புவார். மாலையில் மறந்துவிட்டு வந்துவிடுவான். இரவு எட்டு மணி ஆகியிருந்தாலும் கூட மெயின்ரோட்டில் இருக்கும் நாடார் கடை வரைக்கும் சென்று சரோஜக்காவே வாங்கிவந்துவிடுவார். “புள்ள பெத்துக்க ஆசப்பட்டா மட்டும் போதுமா கண்ணு” என்று நக்கலடிக்கவும் தவறமாட்டார். வாழ்க்கை வசந்தமாக இருந்தது.

கர்ப்பமாக இருக்கும் மகளை பார்த்துக் கொள்வதற்காக பிரணீதாவின் அம்மா வந்திருந்தார். நம் ஊருக்கு போய்விடலாம் என்று அழைத்துப் பார்த்தார். “இன்னும் ரெண்டு மாசம் வொர்க் ஃபர்ம் ஹோம்ம்மா.. முடிச்சுட்டு போயிட்டா டெலிவரிக்கு அப்புறம் ஆறுமாசம் வரைக்கும் லீவு இருக்கு” என்று பிரணீதா மறுத்துவிட்டாள். பிரணீதாவின் அப்பா ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வார் என்று அவளது அம்மா கவலைப்பட்டார். வீட்டிலிருந்து வேலை செய்வதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்தான். ஆனால் அவர்கள் ஊரில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி நல்லபடியாக இருப்பதில்லை. அரை மணி நேரம் சிக்னல் கிடைக்கும் அப்புறம் கட் ஆகிவிடும். பத்து நிமிடம் போராடினால் திடீரென்று கனெக்ட் ஆகும். அதனால் இங்கேயே இருப்பதுதான் நல்லது என்று பிரணீதா நினைத்தாள். ரவியை வருடக்கணக்கில் பிரிந்து இருக்கவும் அவள் விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம்.

சரோஜக்கா படுபாந்தமாக பிரணீதாவை கவனித்துக் கொண்டார். குளிக்கும் போது முதுகு தேய்த்துவிடுவதிலிருந்து இரவு தூங்கப்போவதற்கு முன்பாக குங்குமப்பூ போட்ட பாலை குடிக்க வைப்பதிலிருந்து அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். “பாப்பாவும் எம்புள்ள மாதிரிதாம்மா நான் பார்த்துக்குறேன் நீங்க ஊருக்கு போய்ட்டு வாங்க” என்று சரோஜக்கா சொன்னபோது பிரணீதாவின் அம்மாவிற்கு கண்ணீர் கசிந்தது. யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார். ஒரு வாரம் வரைக்கும் இருந்துவிட்டு சரோஜக்காவிம் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவரும் ஊருக்கு கிளம்பிவிட்டார்.

அடுத்த இரண்டு மாதங்களில் சரோஜக்கா இவர்களின் இன்னொரு குடும்ப உறுப்பினராக ஆகியிருந்தார். தன்னை விடவும் பிரணீதாவை சரோஜக்காதான் அதிகமாக கவனித்துக் கொள்வதாக ரவிக்குத் தோன்றியது. அந்த மாதத்திலிருந்து சரோஜக்காவுக்கு ஆறாயிரம் ரூபாயாக கொடுக்கத் துவங்கினான். “அக்கா, பிரணீதா பிரசவத்துக்கு போன பின்னாடியும் எனக்கு சாப்பாடு செஞ்சு, வீடு சுத்தம் செஞ்சுட்டு போங்க. பணத்தை பத்தி கவலைப்படாதீங்க” என்றான் ரவி. “ஒருத்தருக்கு சாப்பாடு செஞ்சு போட்டு வீடு சுத்தம் செய்யறதுக்கு ஆறாயிரம் ரூபாய் அதிகம் தம்பி” என்ற போது ரவி மென்மையான முறுவலோடு நகர்ந்துவிட்டான்.

பிரணீதாவுக்கு சிசேரியன் நடந்தது. ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க வேண்டும் என சரோஜக்கா விரும்பியதால் ரவி தனது காரிலேயே அழைத்துச் சென்றான். “பாப்பாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைல்ல தம்பி? அந்தக்காலத்துல ஆபரேஷன் எல்லாம் கெடையாது… ஆனா இப்போ எல்லாம் சகஜம் ஆகிடுச்சு” என்று தானாகவே கேட்டு தானாகவே தேற்றிக் கொண்டிருந்தார். நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு பிரணீதாவை பார்த்த போது சரோஜக்கா உருகிப்போனார். குழந்தையை அதைவிடவும் கொஞ்சினார். ரவியை உரித்து வைத்திருப்பதாக சொன்னபோது அவனுக்கு பெருமையாக இருந்தது. “இவர்கள் இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போய் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று அடக்கமாட்டாமல் சொல்லிவிட்டார். பிரணீதா சிரித்துக் கொண்டே இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவதாகச் சொன்னாள். பிரணீதாவையும் குழந்தையயும் பார்த்துவிட்டு ஊர் திரும்பும் போது சாலைகளின் இரண்டு பக்கமும் வாதநாராயண மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. குரங்குகள் மரங்களின் கீழாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. மழைக்காலம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கிவிடும் போலிருந்தது.

***

ஒரு வருடம் ஆகியிருந்தது. ஆகஸ்ட் மாத மழை அவ்வப்போது நிலத்தை நனைத்து போகிறது. பிரணீதா மூன்று மாதங்களாக வேலைக்கு போகத் தொடங்கியிருக்கிறாள். குழந்தையை சரோஜக்காதான் பார்த்துக் கொள்கிறார். அவரது சம்பளமும் எட்டாயிரத்தை தொட்டிருந்தது. அவர் வேலை செய்து வந்த மற்ற வீடுகளுக்கு இப்பொழுது போவதில்லை. இந்த ஒரு வீட்டு வேலைதான். காலையில் எட்டரை மணி வரைக்கும் வீட்டு வேலைகளைச் செய்வார். அதுவரையும் ரவியும் பிரணீதாவும் ஒருவர் மாற்றி ஒருவ குழந்தையை பார்த்துக் கொள்வார்கள்.

இரண்டு பேரும் அலுவலகம் போய்விட்ட பிறகு திரும்பி வரும் வரைக்கும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய வேலை மட்டும்தான். அவர்கள் திரும்பி வந்த பிறகு மீண்டும் சமையல் வீட்டு வேலை என்று முடிய இரவு ஒன்பதாகிவிடும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான நாட்களில் இவர்கள் வீட்டிலேயே தூங்கிக் கொள்கிறார். கொஞ்ச நேரம் ஹாலில் சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார் அவரையும் அறியாமல் தூங்கிவிடுவார். ரவிதான் டிவியை அணைத்துவிட்டு ஒரு போர்வையை எடுத்து அவர் கால் மீது போர்த்திவிட்டுச் செல்வான்.

இதுவரை உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடந்த சில வாரங்களாக மிகவும் சோர்வாக இருக்கிறது. காலை நேரத்தில் கொஞ்சம் விளையாடுகிறது. ஆனால் மாலையில் எந்த விளையாட்டும் இல்லாமல் இருக்கிறது. ரவியும் பிரவீணாவும் பதறிப்போனார்கள். இது குழந்தைப் பருவத்தில் சாதாரணமானதுதான் என்று சரோஜாக்கா ஆறுதல் சொன்னார். பிரணீதா அவளது அம்மாவிடம் போனில் அழுதாள். போனை பிரணீதாவிடமிருந்து வாங்கி சரோஜக்காதான் “அது ஒண்ணுமில்லம்மா குழந்தைக்கு என்னமோ சோக்க. ரெண்டொரு நாள்ல சரியாப் போய்டும் நா பாத்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க” என்றார்.

ரவி தூங்கிவிட்டான். பிரணீதாதான் புரண்டு புரண்டு படுத்தாள். குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்தது. முகம் கருத்திருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தையின் முகத்தை பார்த்து தன்னையும் அறியாமல் கண்ணீர்விட்டாள். இரவு பூதாகரமானதாக இருந்தது. தூக்கத்தை தராமல் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது. கடவுள்களை உள்ளூர பிரார்த்திக்கொண்டிருந்தாள்.

மறுநாள் அலுவலகம் கிளம்பும் போது குழந்தை ஓரளவுக்கு உற்சாகமாக இருந்தது. இருவரும் கிளம்பிப்போய்விட்டார்கள். ஆனால் அலுவலகத்தில் பிரணீதாவிற்கு மனம் லயிக்கவில்லை. குழந்தையின் நினைப்பாகவே இருந்தது. மேனஜரிடம் விடுப்பு சொல்லிவிட்டு ஆட்டோ ஏறிக்கொண்டாள். தான் வீட்டிற்கு வருவதைச் சொல்லிவிட சரோஜக்காவிற்கு போன் செய்தாள். அவர் எடுக்கவில்லை. ரவிக்கும் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்து சேரும் போது மணி பத்தரை இருக்கும். காலிங்பெல்லை அடித்தாள். டிவி ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரோஜக்கா கதவைத் திறந்தார். யாரோவாக இருக்கக் கூடும் என திறந்திருப்பார் போலிருக்கிறது. பிரணீதாவை பார்த்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தார். பிரணீதா “குழந்தை எப்படியிருக்கிறது” என்றாள். சரோஜக்கா பதில் பேசவில்லை. “குழந்தை எங்கே” என கேட்டாள். அப்பொழுதும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார். பிரணீதா பதட்டமடைந்தாள் “என் குழந்தை எங்கே அக்கா” என்று கேட்டபோது பிரணீதாவின் பதட்டம் கோபமாக மாறியிருந்தது. வீடு முழுவதுமாக குழந்தையை தேடினாள். எங்கும் இல்லை. அப்பொழுதே ரவிக்கு போன் செய்து கதறினாள். “குழந்தையைக் காணங்க…சரோஜா பதிலே சொல்ல மாட்டேங்குறா” என்று முதன்முறையாக சரோஜாவை மரியாதைக் குறைவாக குறிப்பிட்டாள்.

ரவி அவசரகதியில் கிளம்பி வந்தான். போலீஸூக்கும் தகவல் கொடுத்திருந்தான். போலீஸ் அதிகம் தாமதிக்கவில்லை. ஒரு பெண் கான்ஸ்டபிளும் வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சரோஜக்காவை ஓங்கி அறைந்தார் அந்த கான்ஸ்டபிள். சரோஜக்கா நிலை குலைந்தாள். பிரவீணாவை நோக்கி முதன் முறையாக வாய் திறந்தாள். “நான் குழந்தையை கொண்டு வந்துடுறேன். அடிக்க வேண்டாம்ன்னு சொல்லும்மா” என்றாள். போலீஸ் ஜீப்பிலேயே கிளம்பிப் போனார்கள்.

அவர்களது வீட்டிலிருந்து மூன்றாவது சிக்னலில் ஒருவள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். அவளின் கையில் குழந்தை இருந்தது. துணியைக் கொண்டு சுத்தி வைத்திருந்தாள். அசையாமல் இருந்த அந்தக் குழந்தை பிரவீணாவின் குழந்தைதான். போலீஸூடன் சரோஜாக்காவை பார்த்தவுடன் பிச்சைக்காரி ஓட எத்தனித்தாள். ஆனால் தப்பிக்க முடியவில்லை. குழந்தைக்கு ஒரு நாள் வாடகை இருநூறு ரூபாய் என்று தெரியவந்தது. குழந்தைக்கு தூக்க மருந்து போல எதையோ ஒன்றை ஊட்டியிருந்தாள். அது அரை மயக்கத்தில் கிடந்தது. சரோஜக்காவையும் பிச்சைக்காரியையும் ஜீப்பில் ஏற்றினார்கள். எதற்காக சரோஜக்கா இப்படி செய்தாள் என்று பிரவீணாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சரோஜக்காவை பார்த்து “இப்படி செய்துவிட்டீர்களே” என்ற பாவனையில் முகத்தை ஆட்டினாள். சரோஜா கீழே குனிந்து கொண்டாள். “நீங்க அப்புறமா ஸ்டேஷனுக்கு வாங்க சார், ஃபார்மாலிட்டிஸ் இருக்கு” என்றார் கான்ஸ்டபிள். ரவி தலையை ஆட்டினான். பிரவீணா மீண்டும் ஒரு முறை குழந்தையை பார்த்தாள். அது அசைவில்லாமல் படுத்திருந்தது. மழை தூறலிடத் துவங்கியது . இப்பொழுது பிரவீணாவுக்கு கதறியழ வேண்டும் போலிருந்தது.

– ஆகஸ்ட் 18, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *